emv23b

emv23b

எனை மீட்க வருவாயா! – 23B

 

பருவத் தேர்வு நெருங்குவதை ஒட்டி, வளாகத் தேர்வுகளின் வாயிலாக பணிகளுக்கான ஆள் எடுக்கும் நிகழ்வுகள் பல்வேறு கல்லூரிகளிலும் நடத்தப்பட்டன.

பல கல்லூரிகளில் அவர்களின் மாணவர்களுக்கு மட்டுமே அதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டது. 

சில நிறுவனங்கள் இணைந்து நடத்திய பொதுவான வளாகத் தேர்வில், பல கல்லூரிகளில் இருந்தும் மாணாக்கர்கள் மொத்தமாகக் கலந்து கொண்டனர்.

திவ்யா மற்றும் அவளுடன் பயிலும் சில தோழியரும் அதில் கலந்து கொண்டு அவர்களுக்கு ஏற்ற பணி வாய்ப்பினை பெற முயற்சித்தனர்.

அப்படிச் சென்றபோது, எதிர்பாராமல் மீண்டும் அங்கு கிருபாவைச் சந்திக்கும்படி நேர்ந்தது.

‘இவன் எதுக்கு இங்க வந்திருக்கான்.  மலேசியாவோ சிங்கப்பூரோ சொன்னானே… அங்க இருக்கற சொந்தக்காரன் கம்பெனியிலபோயி செவனேனு ஜாயின்ட் பண்ணாம, இங்க என்ன வேலை இவனுக்கு’ என நினைத்தவள், அவனிடமிருந்து விலக எண்ணி, அவன் வரும்பாதையில் செல்வதை, அவன் இருக்குமிடத்தில் இருப்பதை நேர்த்தியாக தவிர்த்து விலகினாள்.

அவன் மீது இருந்த வெறுப்பின் உச்சம் அவளை, அவ்வாறு நிராகரிக்கச் செய்திருந்தது.

பேசும் வாய்ப்பு கிட்டினால், நிச்சயம் வார்த்தைகள் தடிக்கும் என்பதும், அவளின் தவிர்த்தலுக்கு முக்கிய காரணம்.

உடன் வந்த தோழியரிடம், “ச்சேய்.. இந்த கேம்பஸ் இண்டர்வியூக்கு வராமயே இருந்திருக்கலாம்போல” என தனது வெறுமையை வார்த்தைகளில் வெளிப்படுத்த

“ஏய், நல்ல பெர்சன்டேஜ் வச்சிட்டு, நாலு இண்டர்வியூல செலக்ட் ஆன உனக்கே ஹோப் இல்லைனா, நாங்கல்லாம் இங்க வரணும்னு நினைச்சதே தப்புங்கற மாதிரியில்ல இருக்கு” தோழி ஒருத்தி

“பங்சுவாலிட்டி கீப் அப் பண்ணாம, ஹாஃப் எ டே வேஸ்ட் பண்ணிட்டாங்க.  இவங்க பண்ற இண்டர்வியூவே இந்த லட்சணத்துல இருந்தா, வேலைக்கு போற இடம் மட்டும் எப்டி இருக்கும்.  அதனால சொன்னேன்டீ” திவ்யா

“அதான பாத்தேன்.  நம்ம திவ்யாவுக்கே டஃபு குடுக்கற இடத்தில, நமக்கு என்ன வேலை கிடைச்சிறப் போவுதுண்ணு ஒரு நிமிசம் ஷாக் ஆயிட்டேன்னா பாத்துக்குவேன்” என வடிவேலு பண்பேற்றத்தில் கூறினாள் மற்றொருத்தி.

நான்கு வெவ்வேறு நிறுவனங்கள் நடத்திய தேர்வு மற்றும் நேர்காணலில் பங்கெடுத்து, நான்கிலும் திவ்யா தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வெளியாகியிருக்க, அதற்கே சலித்துக் கொண்டிருந்தாள்.

இதுபோன்ற பேச்சுகளுக்கு மத்தியில், பசி வயிற்றைக் கிள்ள, மதியம் மூன்று மணி என்பதைக் கண்ணுற்றவள், “எனக்கு என்னவோ இது கண்துடைப்பு மாதிரித் தெரியுது.  இன்னும் மற்ற கம்பெனிஸ்ல கூப்பிட, எவ்வளவு நேரமாகும்னு கன்ஃபார்மா சொல்ல முடியாதுபோல.  இந்த நேரத்தில் பசியில காதெல்லாம் அடைக்குது.  அதனால, கேண்டீன் போயிட்டு வரலாமா?” ஓய்ந்துபோய் தோழிகளிடம் கேட்க

“யாராவது ஒரு ஆளு மட்டும் இங்க இருக்கட்டும்டீ.  மத்தவங்க போயி சாப்பிடுவோம்.  யாரு சாப்பிட்டு முடிச்சாலும், அவ வந்து மாத்திட்டு, இங்க இருக்கறவங்களை சாப்ட போகச் சொல்லிரலாம்” என அந்நேரத்திற்கு தகுந்தாற்போல முடிவெடுக்க, அதனை அனைவரும் ஆமோதித்தனர்.

“யாருக்கெல்லாம் ரொம்பப் பசியோ, அவங்க எல்லாம் முதல்ல போகலாம்” என அவர்களுக்குள்ளாகவே பேசி முடிவெடுத்து, சுபத்ரா என்பவளை மட்டும் அங்கு நிறுத்திவிட்டு, மற்றவர்கள் கேண்டீன் நோக்கிச் சென்றனர்.

பந்திக்கு பிந்தியவர்களுக்கு, மிச்சமாக இருந்த உணவுப் பொருள்கள் மட்டுமே வரவேற்க, பசியில் வேறு எதையும் யோசிக்க முடியாமல், கிடைத்த உணவை வாங்கிக் கொண்டு ஆளுக்கொரு இடத்தில் அமர்ந்தனர்.

முதலில் ஒருத்தி உண்டு முடிக்க, அவள் சுபத்ராவை வரக் கூறிவிட்டு, அவள் சென்று சுபத்ராவின் பணியை மேற்கொண்டாள்.

சரியான துணை உணவு இல்லாததால், திவ்யாவிற்கு உணவு இறங்கமாட்டேன் என்றது. பெரும்பாலும் வந்தவர்கள் உண்டு கிளம்பியிருக்க, அளவளாவிக் கொண்டே அமர்ந்திருந்தவளுடன், இறுதியாக உண்ண வந்த சுபத்ரா மட்டுமே திவ்யாவுடன் தேங்கியிருந்தாள்.

அதேநேரம் அருகே நெருக்கமாய் கேட்ட அரவத்தில் திரும்ப, அங்கு நின்றிருந்த கிருபா, அவளிடம் எந்த அனுமதியும் கேளாமலேயே, திவ்யாவின் எதிரே சிரித்தபடியே வந்தமர்ந்தான்.

“ஹாய்.. டீடீ!”

“…”

“எத்தனை இண்டர்வியூல செலக்ட் ஆன? ஃபாரின் கம்பெனிலாம் ட்ரை பண்ணலையா?”

ஏற்கனவே அவள் எதிர்பார்த்து வந்திருந்த நிறுவனத்தில் அலைக்கழித்த கோபத்தில் இருந்தவள், “எங்கேயும் வேலை கிடைக்கலைனா, உன்னோட சிங்கப்பூர் கம்பெனியில எனக்கு வேலை போட்டுத் தரப்போறீயா?” வெடுக்கெனக் கேட்டாள்.

“ம்முன்னு ஒரு வார்த்தை சொல்லு,  அந்தக் கம்பெனியில இண்டர்வியூவே இல்லாம ஸ்பெஷல் அப்பாயிண்ட்மென்ட் தரச் சொல்றேன் உனக்கு” எனச் சிரித்தான்.

“அப்ப, உங்கம்பெனிக்கு ஆளுப் புடிக்கத்தான் வந்திருக்கியா!” நக்கலாய் கேட்டாள்.

“ஏய்! ஆடு மாடு கணக்கா சொல்ற! யாரு காதுலயாவது விழுந்து வச்சு வம்பாப் போயிரப் போவுது டீடீ!” என சுற்றிலும் பார்வையை விட்டவன்,  அவளிடம் திரும்பி, “ஒரு வகையில நீ சொல்றதும் சரிதான். ஆனா… உண்மையிலேயே எங்க ரிலேட்டிவ் கம்பெனிக்கு ஆளு எடுக்கறதோட, என்னோட ஆளப் பாக்கவும் வந்ததா வச்சிக்கலாம்!” என மெல்லிய குரலில் சிரித்தபடியே கூறினான். அருகில் இருந்த சுபத்ரா இருவரின் உரையாடலைக் கேட்டுக்கொண்டே உண்டு முடித்திருக்க, சைகையில் திவ்யாவிடம் தான் இருக்கவா, செல்லவா எனக் கேட்க, நீ போ, நான் பின்னே வருகிறேன் என்பதாக திவ்யா கூறவும் அங்கிருந்து அகன்றிருந்தாள் சுபத்ரா.

அன்று காலை வந்தது முதலே, கிருபாவுடன் ஒட்டி, உரசியபடியே தெரிந்த பெண்ணைக் கண்டிருந்தாள் திவ்யா. அதைக் கண்டவளுக்கு, ‘இப்டி அவளும் நம்மைப்போல ஒன்னுந் தெரியாதவளா, இவனை நம்பிட்டு அவங்கூட ஒட்டிட்டு இருக்காளோ என்னவோ’ எனத் தோன்றினாலும், அதைக் கண்டும் காணாததுபோலக் கடந்திருந்தாள்.

மற்றபடி அப்பெண் மீது பொறாமை உணர்வு எதுவும் தோன்றவில்லை.

அதேநேரம், ‘காலேஜ்கு ஒருத்திய கரெக்ட் பண்ணிட்டு தெரியுது நாயி’ என அவள் மனதில் தோன்றாமல் இல்லை.

தற்போது கிருபாவின் பேச்சைக் கேட்டதும், அதை மனதில் கொணர்ந்தவள், சட்டென மூண்ட கோபத்தில், “காலேஜ்கு ஒரு ஆளப் புடிக்கறதையே முக்கிய வேலையா வச்சிருக்க போல!” மனதில் இருந்ததை அப்படியே ஏளனமாய் கேட்டாள்.

“ஏய்..! நீ தப்பா புரிஞ்சிட்டு, வேற மீனிங்ல பேசுற மாதிரித் தெரியுது.  நான் உண்மையிலேயே எங்க கம்பெனிக்கு ஆள் எடுக்கற விசயமாத்தான் வந்தேன் டீடீ”

“நம்பிட்டேன்!”

அப்போதுதான் தன்னுடன் தங்களின் கம்பெனி சார்பாக கலந்தாய்வு டீமில் வந்திருந்த, சௌமியாவுடன் தான் சென்றதைப் பெண் அவ்வாறு கூறுகிறாளோ என எண்ணியவன், அவள் கேளாமலேயே “அது சௌமியா, டீடீ.  அந்தக் கம்பெனி சார்பா இண்டர்வியூ பண்ண வந்திருக்காங்க.  அவங்களுக்கு இங்க புதுசு.  அதான் அவங்களுக்கு ஹெல்ப் பண்ண கூடவே இருந்தேன்”

“ஆளைத் தேத்திட்டன்னா கிளம்ப வேண்டியதுதான!” நக்கலாய் கூறினாள்.

திவ்யாவின் பேச்சைக் கேட்டவனுக்கு, அருகே யாருமில்லாத துணிச்சலில், அவளிடம் மேலும் பேச்சை வளர்க்கத் தோன்றிட, “இன்னும் ஆள் வேண்டியிருக்கு.  பேசாம அந்தக் கம்பெனிக்கே நீயும் வேலைக்கு வந்திரேன்” எனக் கேட்க

“நீ இருக்கற பக்கமே இனி தலைவச்சிப் படுக்கற ஐடியாகூட இல்லை எனக்கு!” சட்டெனக் கூறினாள்.

“ஏன் டீடீ!  அந்தளவுக்கு உனக்கு நான் என்ன அநியாயம் பண்ணேன்.  இனி நாம நல்ல ஃபிரண்ட்ஸ்ஸாகூட இருக்கலாம்ல!”

“சாரி!”

“அங்க போயிட்டா இன்னும் நல்ல ஸ்கோப் இருக்கும் டீடீ, உனக்கு!”

“வேணாம்” கையெடுத்து கும்பிட்டாள்.

“ஏன், என்னை அவாய்ட் பண்ற டீடீ! அப்டி என்ன பண்ணேன் உனக்கு! இப்பவும் உன்னோட நல்லதுக்குத்தான சொல்றேன்!”

“என்ன பண்ணலை!  நல்லா யோசிச்சுத்தான் பேசுறியா?  எதுவுமே தெரியாத மாதிரி எப்டிடா உன்னால இப்டி வந்து பேச முடியுது.  இனி நல்ல ஃபிரண்டா என்ன, ஒரு மனுசனாக்கூட உன்னை மதிச்சோ, நினைச்சோ உங்கூட என்னால பேச முடியாது!”

சற்றுப் பொறுத்து, “அதுவும் உங்கூட?” தலையை மறுத்தசைத்து, “நிச்சயமா இனி அதுக்கு வாய்ப்பே இல்லை!” தீர்க்கமாய் உரைத்தாள்.

“எம்மேல என்ன தப்பு டீடீ! ஒரு ஃபிரண்டா இருக்கற தகுதிகூட எனக்கில்லையா!”

“எல்லாம் என் மேலதான் தப்பு.  உன்னை நம்புனது, அப்புறம் உன்னைத்தான் ஃபியூச்சர்னு நினைச்சு நீ சொன்ன எல்லாத்துக்கும் தலையாட்டுனது. உன்னோட பியூச்சர் பிளான்ஸ் எல்லாம் நமக்கானதுன்னு, உண்மைனு நினைச்சு உன்னோட கனவு கண்டது, கடைசியில உன்னையே நம்பி, எல்லாத்தையும் எடுத்துட்டு வந்து, உன் காலுல விழுகாத குறையாக் கெஞ்சுனது.  இப்டி எல்லாமே என் தப்புதான்.  நீ தெளிவாதான் இருந்திருக்க.  நாந்தான் உன்னைத் தப்பா புரிஞ்சுகிட்டேன்!”

“நாந்தான் என்னோட நிலைமைய, அப்பவே சொன்னேனே டீடீ!  ட்டூ இயர்ஸ் வயிட் பண்ணா, கண்டிப்பா நாம சேரலாம்னு” சனி அவன் வாயில் வந்து தேவையில்லாததை பேசச் செய்திருந்தது.

“எங்கிட்ட மட்டும்தான் அப்டிச் சொன்ன!  ஆனா நம்ம காலேஜ் ஃபிரண்ட்ஸ்கிட்ட எல்லாம் அப்டிச் சொல்லலையே நீ!”

“… யாரோ உன்னைக் குழப்பி விட்ருக்காங்க டீடீ!  இப்பவும் நான் உன்னைத் தவிர வேற எந்த யோசனையும் இல்லாமத்தான் இருக்கேன்.  நீ வருவங்கற ஒரே காரணத்துக்காகத்தான் இங்க வந்தேன்!”

“இதை என்னை நம்பச் சொல்றியா.  அதுக்கு வேற ஆளைப் பாரு!”

“உண்மை அதுதான் டீடீ!  ஆனா என்னைப்பத்தி யாரோ உங்கிட்ட தப்புத் தப்பாப் பேசி, உன்னைக் குழப்பியிருக்காங்க!”

“யாரும் குழப்பல!  இப்ப ஒரு நிமிசம் பொறு! யாரு யாரைக் குழப்பனதுன்னு தெரிஞ்சிரும்” என்றவள், “உன்னோட நம்பர் அதுதானா.  இல்லை மாத்திட்டீயா?” என அவனிடம் தோரணையோடு கேட்க, அவனோ “அதேதான்!” என்றதும் முதலில் அவனுக்கு அழைப்பு வர, ஒன்றும் புரியாமல் அவளின் முகத்தைப் பார்க்க, எடு என சைகையில் கூறிவிட்டு, “லைன்லயே இரு.  இடையில பேசக்கூடாது” என்றுவிட்டு, அடுத்தடுத்து, இரண்டு மூன்று அழைப்புகளை தொடர்ச்சியாக விடுத்தாள்.

அழைப்பை சிலர் ஏற்றனர், சிலர் ஏற்கவில்லை. ஏற்ற அனைவரிடமும் சற்று பொறுக்குமாறு கூறியவள், அனைவரும் கான்ஃபெரன்ஸ் அழைப்பில் இருக்க, “ஹாய், நான் திவ்யதர்ஷினி.  எல்லாரும் நல்லா இருக்கீங்களா?” என அனைவரிடமும் முகமன் விசாரித்தவள், கிருபாவும் உடன் இருப்பதைக் கூறாமல், இலகுவான ஒன்றிரண்டு பேச்சிற்குப் பிறகு, நேரடியாக விசயத்திற்கு வந்தாள்.

“இப்போ இந்த கேள்வி எதுக்குன்னு நான் அப்புறமா சொல்றேன் ஃபிரண்ட்ஸ். பட் நான் கேட்டதுக்கு ஒழிவு மறைவு இல்லாம, ஒவ்வொருத்தவங்களும் எனக்கு உண்மையான பதிலைச் சொல்லுங்க!” பீடிகையோடு துவங்கினாள்.

“நான் கிருபாவை லவ் பண்ணிட்டு, வேறொருத்தங்களை மேரேஜ் பண்ணிட்டது உங்க எல்லாருக்கும் தெரியும்”

அனைவரும் அதை ஆமோதித்தாலும், ‘இவ்வளவு நாளுக்கப்புறம் இப்ப எதுக்கு இவ இந்தப் பேச்சு எடுக்கறா’ என அனைவர் மனதிலும் ஓட, ஒருவன் மனம் மட்டும் குதிரைப் பந்தயத்தில் பணங்கட்டிக் காத்திருப்பவனின் மனநிலையில் இருந்தான்.

“என்னோட மேரேஜப்ப, கிருபா என்னைப்பத்தி உங்ககிட்ட எல்லாம் என்ன சொன்னான் அப்டினு இப்ப இங்க சொல்ல முடியுமா ஃப்ரண்ட்ஸ்? கயல் நீ மட்டும் வயிட் பண்ணு” என்று கேட்டதும், அனைவருமே மௌனம் சாதித்தனர்.

கயல் மட்டும், “இப்ப, இவ்ளோ நாளுக்குப் பின்ன… எதுக்குடீ இந்தத் தேவையில்லாத பேச்சு!”

“நீ கேட்டதுக்கு நான் அப்புறமா பதில் சொல்றேன் கயல்.  ஆனா மத்தவங்க சொல்லட்டும், வினோத் நீ சொல்லு முதல்ல” என

முதலில் தயங்கியவன், “நீ அவனை லவ் பண்ணி ஏமாத்திட்டு, வேற ஒருத்தரை மேரேஜ் பண்ணிட்டுப் போயிட்டதா சொன்னான்.  இப்ப எதுக்கு இந்தக் கேள்வி திவ்யா?”

“சொல்றேன் வினோத்.  பிரபாகர் நீ அடுத்துச் சொல்லு”

“எங்க எல்லார்கிட்டயும் கிருபா அப்டித்தான் சொன்னாப்புல!”

“எப்டினு, விளக்கமாச் சொல்லு பிரபா!”

“நீ அவனை நம்ப வச்சி, ஏமாத்திட்டு, வேற ஒருத்தவங்களை மேரேஜ் பண்ணிட்டுப் போயிட்டதா!  எதுக்கு திவ்யா இப்ப அது!”

“சொல்றேன் பிரபா.  அடுத்து சுதாகர் கால் வருது.  கயல் உன்னைக் கட் பண்ணிறேன்.  அவனோட பேசிட்டு, அப்புறம் வரேன்” என்றவள்,

“ஹாய் சுதாகர்” எனத் துவங்கி அவனிடமும் அதே கேள்வியை முன்வைக்க, அவனும் அதையே கூறினான்.

சற்று நேரம் அதுசார்ந்த வினாக்களை, அவர்களின் முன் வைத்தவள், அவர்கள் அனைவருமே ஒரேபோல அவர்களுக்குத் தெரிந்ததைக் கூறியதைக் கேட்டுக் கொண்டவள், “ஓகே ஃபிரண்ட்ஸ்.  ரொம்பத் தேங்க்ஸ்.  லைன்ல நம்ம கிருபாவும் இருக்கான்.  நீங்க சொன்ன உண்மையான ரிப்ளைஸ்கு ரொம்ப தேங்க்ஸ்”, என்றவள், “யாராவது ஒருத்தங்க மட்டும் லெஃப்ட் ஆகுங்க ஃபிரண்ட்ஸ்” என்றவள் கயலுக்கு இணைப்பைத் தந்து, “கயல், லாஸ்ட் எக்சாம் அன்னிக்கு என்ன நடந்ததுன்னு சொல்லுவேன்.  அதாவது எக்சாம் முடிஞ்சி நானும் கிருபாவும் மீட் பண்ணதை, நான் அவங்கிட்ட என்ன பேசினேன்.  அவன் என்ன பதில் சொன்னான்னு உனக்குத் தெரிஞ்சதைக் கொஞ்சம் சொல்லேன்” என… கயல் அன்று நடந்ததை ஒன்றுவிடாமல் கூற, அனைவரின் மனதிலும் “என்னாது… ஓடிப் போற ஐடியால திவ்யா வந்து கூப்பிட்டும், கிருபா வரலைன்னு சொன்னானா!” என அதிர்ச்சி வாங்கியிருந்தது. 

அதைக்காட்டிலும் சிலர் மனதில், கிருபாவும் லைன்ல இருந்தானா என அதிர்ச்சி ஆகியிருந்தனர்.

திவ்யா, “ஃபிரண்ட்ஸ் இதுதான் உண்மையில அன்னைக்கு நடந்தது.  உங்ககிட்ட கிருபா சொன்னது உண்மையா, இல்லையாங்கறதை நான், நீங்க ரெண்டு சைடும் தெளிவு பண்ணிக்க நினைச்சுத்தான் இந்தக் கால்.  உங்களுக்கு கஷ்டத்தைக் குடுத்ததுக்கு சாரி” என்றவள், கிருபாவிடம் திரும்பி, “இப்ப சொல்லு கிருபா.  நீ சொல்லலைன்னா இவங்க எல்லாம் ஒன்னுபோல எப்டிச் சொல்லுவாங்க” என கிருபாவோடு, எதிர் முனையில் இருந்தவர்களும் தர்மசங்கடத்துடன் அமைதியாக இருந்தார்கள்.

“ஒரு ஹாய் சொல்லு ஃபிரண்ட்ஸ்கு” என கிருபாவிடம் திவ்யா கூற

“…” வாயைத் திறவாமல் அப்டியே அமர்ந்திருந்தான்.

“சொல்லமாட்டியா கிருபா” அதற்கும் எந்த பதிலும் அவனிடம் இல்லை.

“பதில் பேசாம இருந்து, நீ இங்க இல்லைங்கறதை அவங்களுக்குப் ப்ரூவ் பண்ண நினைக்கிற அப்டித்தான!” என்றவள், நண்பர்களிடம் கூறிக்கொண்டு சட்டென  அழைப்பைத் துண்டித்துவிட்டு, வீடியோ கால் செய்தாள்.

‘தெரிஞ்சா, யாரும் வந்து என் தலையவா வாங்கப் போறாங்க.’ என்பதாய் இறுமாப்போடு, கிருபாவும் அங்கிருந்து அசையாமல் இருந்தான்.

அதற்குள் திவ்யாவின் அழைப்பை ஏற்றிருந்தவர்களுக்கு, அருகில் இருந்தவனைக் காண்பித்தபடியே “சார் கொஞ்சம் அதிகமா நெர்வஸ்ஸா இருக்காரு” என காட்டியபின், பேசாமல் அமர்ந்திருந்தவனைப் பார்த்து அனைவரும் ஹாய் கூற, ஆனால் அவனோ எந்த பிரதிபலிப்பும் இன்றி அப்படியே இருந்தான்.

திவ்யா, “ஈவினிங் உங்களை கூப்பிட்டுப் பேசறேன். பை பிரண்ட்ஸ்” என அனைவரிடமும் இன்முகமாய் விடைபெற்றவள், அனைவரது அழைப்பையும் துண்டித்துவிட்டுத் திரும்ப, வெளுத்த முகமாய் அமர்ந்திருந்தான் கிருபா.

சட்டென அங்கிருந்து அகல முடியாத நிலையில், ‘இனி சாண் போனால் என்ன முழம் போனால் என்ன’ என அமர்ந்திருந்தான் கிருபா.

அவனிடம் திரும்பியவள், “ஆரம்பத்திலேயே வீடியோகால் பண்ணியிருந்தா, உன்னோட பிரண்ட்ஸ் எல்லாம் உனக்காக நீ பேசுனதையே ஆனாலும் எங்கிட்ட சொல்ல, யோசிச்சு கொஞ்சம் தயங்கி இருப்பாங்க.  அதான் நார்மல் கால் போட்டேன்.  இப்போ சொல்லு கிருபா.  நீ என்ன சொன்னேனு ப்ரூவ் பண்ணிட்டேன்.  இப்ப என்ன சொல்லப் போற?”

“…”

“நான் உங்கிட்ட வந்து காலுல விழாத குறையாக் கெஞ்சினதுக்கு, நீ சொன்ன அந்த இரண்டு வருசம் சும்மா ஒப்புக்குன்னு அப்போத் தெரியல.  ஆனா உனக்குத் தெரிஞ்சிருச்சு, இவளால இந்தக் கல்யாணத்தை நிறுத்த முடியாதுன்னு. அந்தத் தைரியத்துலதான் நீ அப்ப சொன்னேனு எனக்குத் தெரியலை.  உனக்கு நான் முக்கியம்னா, என்னை நீ விட்ருக்க மாட்டனு, லேட்டாத்தான் புரிஞ்சது எனக்கு. அப்டி முக்கியம்னா நிச்சயமா ஒரு அடியாது என்னை நோக்கி எடுத்து வச்சிருப்ப நீ.  ஆனா எங்க அம்மாவைப் பாக்கப் போகுமுன்ன இருந்த கிருபா வேற, அதுக்கு அப்புறம் நீ டோட்டலா மாறிட்ட.  எதை வச்சு சொல்றேன்னா, நான் கால் பண்ணப்போவும், மெசேஜ் பண்ணப்பவும் நீ எடுக்கலை.  மிஸ்டு கால் பாத்திட்டு மெசேஜ் பண்ணுவன்னு நான் எத்தனை நாளு வயிட் பண்ணேன் தெரியுமா? ஆனா நீ கண்டுக்கவே இல்லை. கல்யாணத்துக்கு முந்தின நாளு, எங்க அண்ணன் உனக்குப் பேசுனப்ப, திவ்யாங்கற பேருல யாரையும் தெரியாதுன்னுதான அவங்கிட்ட சொன்ன?”

“அப்டி யாரும் எங்கிட்ட பேசலை டீடீ.  இன்னொன்னு யாரோ உன்னை சரியா ஏமாத்தியிருக்காங்க!” அதிர்ச்சியை மறைத்தபடியே பேசினான் கிருபா.

“எங்க அண்ணன் என் முன்னாடிதான் உங்கிட்ட பேசினான்.  உன்னோட இந்த நம்பரை நாந்தான் அவங்கிட்ட கொடுத்தேன்.  அப்பவும் உம்மேல சின்ன நம்பிக்கை இருந்தது.  நீ வந்து எனக்காக அப்ப சரின்னு சொல்லியிருந்தா, எப்பாடுபட்டாவது கல்யாணத்தை நிறுத்தியிருப்பான் எங்கண்ணன்.  ரெண்டு வருசங் கழிச்சி நீ என்னை கண்டிப்பா மேரேஜ் பண்ணிக்கறதா சொன்னதை, நான் நம்பி சொன்னதாலதான், அப்போ எங்கண்ணன் உங்கிட்ட பேசுனான்.  எங்கம்மா போனுல இருந்து ட்ரை பண்ணப்போ நீ எடுக்கவே இல்லை.  அப்புறம் அவனோட நம்பர்ல இருந்து பேசுனப்போ, உடனே எடுத்த. ராகேஷ் திவ்யாவோட பிரதர்னு சொல்லி எங்கண்ணன் உங்கிட்ட பேசுனான்” என கிருபாவையே பார்த்திருந்தாள்.

“…”

“அப்ப நீ, திவ்யானா யாருனே எனக்குத் தெரியாதுன்னு சொன்னதை, என் இந்த ரெண்டு காதாலயும் கேட்டேன்” அந்த நாளின் வலியோடு, இன்று கூறினாள்.

“..” எதிர்பாராமல் வந்து வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டவன், அமைதியாக இருந்தான்.

“இப்ப சொல்லு!”

“சாரி திவ்யா.  என்னோட குடும்ப சூழல், அப்டி தள்ளி நிக்க வச்சிருச்சு!” என தயக்கமாய் உரைக்க

“அப்ப, அப்டித்தான எங்கிட்டயும், மத்தவங்ககிட்டயும் நீ சொல்லியிருக்கணும்.  அதைவிட்டுட்டு நான் மட்டும் உன்னை ஏமாத்தி விட்டுட்டுப் போனாதா ஏன் புரளியக் கிளப்பின!”

“அது… அக்கா…”  என கிருபா துவங்க

“நீ புரபோஸ் பண்ணப்பவும், உனக்கு கல்யாணம் ஆகாத ரெண்டு அக்கா இருந்தாங்கதான.  அப்ப உனக்கு உங்க அக்காங்க இருக்கறது கண்ணுக்குத் தெரியலையா?  இல்ல, நம்ம கல்யாணம்னு பேசனதுக்குப் பின்னதான் அவங்க ஞாபகம் உனக்கு வந்துச்சா? இல்லை அதுக்குப் பின்னதான் அவங்க ரெண்டு பேரும் உங்கூடப் பிறந்தாங்களா?”

“…”

“எதுவா இருந்தாலும் நீ முன்னயே யோசிக்காம என்னை அப்ரோச் பண்ணியிருக்கக் கூடாதுல்ல கிருபா!”

“…”

“நான் பாத்தேன். இல்லைனு சொல்லல.  ஏதோ புதுப்பையன் நல்ல ஹேண்ட்சம்மா இருக்கானேனு நேருல பாக்கற தைரியமில்லாம, தெரியாம ஓரக்கண்ணால பாத்தேன்.  அது தப்பில்லையே.  நம்ம கிளாஸ்ல யாரு உன்னைப் பாக்கலை.  எல்லாருமே பாத்தாங்க. சரி, வேற எதாவது பண்ணேனா.  இல்லைல.  அப்போ உனக்கு ஒத்து வரலைனா, நீயும் பேசாம, பாத்தோம் ரசிச்சோம், சாதாரணமாப் பேசுனோம்னு ஒதுங்கிப் போயிருக்கணும்ல.  அதைவிட்டுட்டு சலனமே இல்லாம இருந்த மனசுல, காதல், கல்யாணம்னு அடுத்தடுத்து கல்லை எரிஞ்சு சலனப்படுத்தி, என்னை உம்மேல பைத்தியமாக்கி, அம்போனு விட்டுட்டுப் போறதுக்குப் பேருதான், உங்க ஊருல லவ்வா!”

“…”

“லவ்வுன்னா… ரெண்டு பக்கம் எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும், ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுக்காம, தோள் குடுக்கணும்ல. ஆனா, என்ன பண்ண நீயி!” என்றவள், அவளாகவே பழையதை நினைவு கூர்ந்து, “ஒரு சமயத்துல விலகிப் போன உங்கூட வந்து திரும்பப் பேசினது நாந்தானே.  சோ எல்லாமே என்னோட தப்புதான்”

“…”

“ஆனா அதுக்கு என்னை நீ வச்சி செஞ்சுட்ட.  ஓடிப் போயி யாருக்கோ வந்த கஷ்டம்னு எனக்கென்னானு ஒளிஞ்சிக்கறது.  அப்புறம் ஆளுக்கு ஏத்த மாதிரி எதையாவது வாயிக்கு வந்ததை மத்தவங்கட்ட மாத்தி மாத்திச் சொல்லுறதுன்னு…”

“…”

“இதுல இன்னும் உன்னோட ஃபிரண்ட்ஷிப் மெயின்டெயின் பண்ணனும்னு சொன்னதுதான் பெரிய காமெடி! கடைசி அன்னைக்குக்கூட நீ எங்கிட்ட உண்மையச் சொல்லியிருக்கலாம்.  சாரி திவ்யா.  உன்னை மாதிரி நான் நினைக்கலைனு… ஆனா அப்போவும் எனக்கு ஏன் புவர் ஹோப் குடுத்த?”

“…”

“இன்னும் எதாவது இருக்கு!”

“சாரி டீடீ!”

“சாரி சொன்னா, நீ செஞ்ச நம்பிக்கை துரோகம் இல்லைனு ஆகிறாது கிருபா.  இனி எங்கேயும், எப்போதும், தெரிஞ்சவன் அப்டிங்கற முறையிலகூட, உங்கூடப் பேச எனக்கு இஷ்டமில்லை!”

“அதுக்காக மொத்தமா அவாய்ட் பண்ணாத டீடீ!”

“உங்கிட்ட இவ்ளோ நேரம் பேசினதே தப்பு.  இதுல இனி அவாய்ட் பண்ணாதன்னு நீ சொல்றதை நான் எப்டிக் கேக்க முடியும் சொல்லு!”

“என்னை சந்தேகப்படறியா டீடீ!”

“இவ்ளோ சொல்லிட்டேன் நீ பண்ணதை.  அப்புறம் சந்தேகப்படாம, உன்னை நினைச்சு எப்டி சந்தோசப்பட முடியும்னு சொல்லு.  ராஜநாகத்தை இடுப்புல கட்டிட்டு தெரிய முடியுமா? அப்டித்தான்டா நீ!”

“…”

“உங்கிட்ட பழைய விசயம்னு இல்ல, வேற எதைப்பத்தியும் எப்பவும் பேச எனக்கு இஷ்டமில்லை” என எழுந்தவள், காய்ந்துபோன கையை நீண்ட நேரம் மெனக்கெட்டு தேய்த்துக் கழுவிக் கொண்டு, அந்த இடத்தை விட்டு அகன்றாள்.  நீண்ட நேரம் கிருபா அதே இடத்தில் அமர்ந்திருந்தான்.

அவள் தன்மீது கொண்டிருந்த பித்து நினைவில் இருக்க, கெத்தாக எண்ணியே தனது அடுத்தகட்ட எதிர்பார்ப்பைச் சாதித்துக் கொள்ளும் எண்ணத்தில் இன்று அவளிடம் பேச வந்திருந்தான்.

அவள் அறிவாளி என்பதால் அவளுடைய பணி தனக்கு மிகுந்த பொருள் பெருக்கம் கொடுக்கும் என லாப நோக்கில் எண்ணி, பணத்தாசையோ, தன் மீதான நேசமோ இரண்டையும் பகடையாக்கியே, தவிர்த்தவளைத் தேடி வந்து இன்று பேசியிருந்தான் கிருபா.

ஆனால் அவள் உண்மையில் அறிவாளி என்பதால், அவளறியாமல் நடந்தையும் அவனிடமே எதிர்பாரா நேரத்தில் வெளிச்சம்போட்டுக் காட்டியதோடு, இவனது முகத்திரையைக் கிழித்து அவனது எதிர்கால ஏமாற்று வேலைகளுக்கு ஒட்டுமொத்தமாய் முற்றுப்புள்ளி வைத்துச் சென்றிருந்தாள் திவ்யா.

‘பம்பர் லாட்டரி மொத்தமும் அந்தப் பட்டிக்காட்டானுக்குத்தான்போல’ என கைவிட்டுப் போனதை எண்ணிய வருத்தத்தை மறைத்தபடியே, அவனது பணியைக் கவனிக்க ஓய்ந்த மனதோடு எழுந்து சென்றான் கிருபா.

…………………………………………

Leave a Reply

error: Content is protected !!