உடையாத(தே) வெண்ணிலவே 8
உடையாத(தே) வெண்ணிலவே 8
மான்யா சொன்ன அந்த ரேப்பிஸ்ட் என்ற வார்த்தையைக் கேட்டு அவனிடம் அப்பட்டமான ஸ்தம்பிப்பு. ஆனால் அவன் அப்படி நின்றது ஓரிரு விநாடிகள் மட்டுமே.
வேகமாக தன்னிலை அடைந்தவன் மான்யாவைப் பார்த்து, “இன்னும் இரண்டு நிமிஷத்துலே நீ ஓ.டிக்குள்ளே இருக்கனும். கோ அன்ட் கெட் ரெடி” என்றான் கட்டளையாக.
அவளிடம் துளி கூட அசைவு இல்லை.
அதைக் கண்ட ஷ்யாமின் நெற்றியில் கோப வளைவுகள்.
“ஹே இன்டெர்ன், நீ என் பொறுமையை ரொம்ப சோதிக்கிற. யாரா இருந்தாலும் ட்ரீட்மென்ட்க்கு வந்தா பேஷ்ன்ட்டா மட்டுமே பார்க்கணும். இது தான் டாக்டர்ஸ் ஃபார்முலா. சோ ஒழுங்கா உள்ளே வந்து சேரு” அவன் குரல் கொஞ்சம் கொஞ்சமாக பொறுமையை இழந்து கொண்டிருக்க அதை மொத்தமாய் சிதைக்கும் வண்ணம் மான்யாவின் குரல் ஒலித்தது.
“சாரி, ஒரு ரேப்பிஸ்டை என்னாலே காப்பாத்த முடியாது. இவன் வாழுறதுக்கே தகுதி இல்லாதவன்” நெருப்பில் காய்ச்சப்பட்ட வாளாய் வந்தது அவள் வார்த்தைகள்.
“இப்போ மட்டும் நீ உள்ளே வரலை. இந்த ஷ்யாமை வேற மாதிரி பார்ப்ப. ஒரு சீனியரோட ஆர்டரை ஃபாலோ பண்ண வேண்டியது இன்டெர்னோட கடமை. இரண்டு நிமிஷத்துக்குள்ளே நீ உள்ளே இருக்கணும்” என்று சொல்ல மான்யாவிடம் மௌன வெறிப்பு மட்டும்.
அதைக் கண்டு அவன் கோபமாக திட்ட வாயெடுத்த நேரம் அந்த பேஷன்டின் உடல்நிலையில் வேகமாக பின்னடைவு.
அதை கவனித்த அகில் வேகமாக ஷ்யாமின் பக்கம் திரும்பினான்.
“பேஷன்டோட வைட்டல்ஸ் ஸ்டேபிளா இல்லை. பிபி வேகமா குறையுது” என்று சொல்ல அடுத்த நொடி ஷ்யாமின் கவனம் அந்த பேஷன்ட்டின் மீது குவிந்தது.
“அகில் இவருக்கு எஃபெரிடின் இன்ஜெக்ட் பண்ணுங்க. அன்ட் சர்ஜரி இன்னும் அஞ்சு நிமிஷத்துக்குள்ளே ஸ்டார்ட் பண்ணனும்” என்றவனது பார்வை மான்யாவின் மீது கூர்மையாய்.
“ஒரு உயிரை கொன்னு கொலைகாரியாகலாம்னு முடிவு பண்ணிட்டியா மான்யா? டெல் மீ ஆர் யூ சர்ஜன் ஆர் மர்டரர்?” அவன் கேள்வி சாட்டையாய் சுழல, மான்யாவின் கடின வேர்கள் மெல்ல அசைந்தது.
“ஐ யம் சர்ஜன்” என்றாள் உதடுகள் தந்தியடித்தபடி.
“தென் கோ அன்ட் கெட் ரெடி” என்றவனின் கட்டளைக்கிணங்க இரண்டு நிமிடத்திலேயே தயாராகி வந்து நின்றாள்.
அவள் கண்களை உற்றுப் பார்த்துக் கொண்டே “அகில் ஸ்டார்ட் பண்ணலாமா?” என ஷ்யாம் கேட்க,
“யெஸ் வைட்ல்ஸ் நார்மலா இருக்கு. நாம ஆரம்பிக்கலாம்” என ஆமோதித்தான் அகில்.
அகிலின் பதிலைக் கேட்டதும் இருவரும் வேகமாக திரும்பி, “ஸ்கேல்பல்” (சர்ஜரி செய்யும் கத்தி)” என்றனர் ஒரே குரலில் ஒரே தொனியில்.
கையில் கத்தியை வாங்கிய ஷ்யாம், சர்ஜரி துவங்குவதற்கு முன்பு மான்யாவை பார்த்தான்.
“ஒரு சர்ஜனா, கையிலே கத்தியை எடுத்த அப்புறம் எல்லாரும் உனக்கு பேஷன்டா தான் தெரியனும். எந்த பர்சனல் ஃபீலிங்கையும் பேஷன்ட் மேலே காமிக்கக்கூடாது. ஏதாவது தப்பு பண்ணி இந்த பேஷன்டோட உயிர் போச்சு உன் கை இருக்காது ஜாக்கிரதை” என்று எச்சரித்த ஷ்யாம் வேகமாக ஸ்கேல்பல் கொண்டு வயிற்றை கீறினான்.
மெல்ல ரத்தம் ஊற்றெடுக்க துவங்கியது.
மான்யா “காஸ்” என்று கேட்டு நிமிர, அங்கே எப்பாதோ ஷ்யாம் காஸ்ஸை கையிலெடுத்து ரத்தம் வரும் பகுதியை அடைக்க துவங்கியிருந்தான்.
“செக்ஷன், ஹீமோஸ்டாட், ரிட்ராக்டர், ஸ்யூச்சர்” என வேக வேகமாக அடுத்தடுத்த கட்டளைகளைப் புயல் போல பிறப்பித்துவனைக் கண்டு கண்களை விரித்தாள் அவள்.
அவன் கையில் அத்தனை சர்ஜரி கருவிகளும் விளையாட, அவன் செயலோ அத்தனை நேர்த்தியாக.
இருபது நிமிடத்தில் செய்ய வேண்டிய வேலையை பத்து நிமிடத்திலும், பத்து நிமிடத்தில் செய்ய வேண்டியதை ஐந்து நிமிடத்திலும் செய்து முடித்தவனின் அசுர வேகத்திற்கு மான்யாவால் ஈடு கொடுக்க முடியவில்லை.
அவள் முகம் முழுக்க திணறல், பதற்றம்.
அடுத்து என்ன என்று யோசித்து முடிக்கும் முன்பே அவன் செய்து முடித்தால், இவள் செய்வதற்கு மீதம் என்ன இருக்கும்?
பார்வையாளனாக மாறி வெறுமனே அங்கு நடப்பதை வெறித்துக் கொண்டிருந்தாள்.
அவளது மௌனத்தைக் கண்டவன், “ஹே இன்டெர்ன் நான் ஸ்டிட்சஸ் போட்டு முடிச்சதும். நீ அப்டோமனை க்ளோஸ் பண்ணிடு” என்று சொல்லியபடி நர்ஸிடம் திரும்பினான்.
“நம்பர் த்ரீ சர்ஜிகல் ஸ்ட்ரிங் கொடுங்க” என்றவன் வேக வேகமாக தையல் போட துவங்கியவனின் அசாத்திய வேகம் கண்டவளின் மனதினில் விஸ்தாரமெடுத்து நின்றது அந்த கேள்வி.
‘இவன் சர்ஜனா? இல்லை வித்தைக்காரனா?’
“ஹே சர்ஜரி நடக்கும் போது கவனம் இங்கே இருக்கணும். எத்தனை தடவை கட் பண்ண சொல்றது. இப்போ மட்டும் நீ ஸ்ட்ரிங்கை கட் பண்ணல. நான் உன் விரலை கட் பண்ணிடுவேன்” என்றவனை முறைத்தபடியே அந்த நூலை, அவன் தையல் போட போட வெட்டினாள்.
இருவரும் ஒன்றாக சேர்ந்து அந்த சர்ஜரியை முடிக்கும் போது மாலை மஞ்சள் வெளிச்சம் வானில் பரவத் துவங்கியிருந்தது.
மான்யா சோர்வுடன் வெளியே வந்து தனது பச்சை உடைகளை கழற்றி அந்த கூடையில் போட்டாள்.
அதே நேரம் இன்னொரு பச்சை உடையும் அந்த கூடையில் விழ நிமிர்ந்துப் பார்த்தாள், எதிரே ஷ்யாம்.
அவன் உதடுகளில் கேலிப் புன்னகை.
அந்த புன்னகை மான்யாவை கீறியது, கிழித்தது.
“ஹே இன்டெர்ன். உனக்கு கொஞ்சம் கூட ஸ்கில்ஸ் இல்லைன்றதை கண் கூடா பார்த்து கன்ஃபார்ம் பண்ணிட்டேன். பெட்டி படுக்கையை எல்லாம் எடுத்து ரெடியா வெச்சுக்கோ. அப்போ தான் அடுத்த மாசம் கிளம்ப வசதியா இருக்கும்” இளப்பமாக சிரித்தவனை எதிர்த்து அவளால் எதுவும் பேச முடியவில்லை.
இதற்கு முன்பு வரை நேருக்கு நேர் நின்று அவனை எதிர்த்து கேள்வி கேட்டிருக்கிறாள். ஆனால் இன்று எதிர்த்து பேச முடியவில்லை.
அவனது திறமையை கண்கூடாக பார்த்தவளின் இதழ்களில் அழிக்க முடியாத மௌனகோடு.
அவளது அமைதியைப் பார்த்து ஒருமாதிரியாக சிரித்தவன், “என்ன இன்டெர்ன் உன் தோல்வியை ஒத்துக்கிட்டியா? இவ்வளவு சீக்கிரம் நான் எதிர்பார்க்கலை” என்ற வார்த்தைகள் அவளை மீண்டும் நிமிர வைத்தது.
“இன்னும் இருபத்தொன்பது நாள் இருக்கு ஷ்யாம். அவ்வளவு சீக்கிரம் என்னை தோற்கடிக்க முடியாது. ஒத்துக்கிறேன் நீங்க க்ரேட் சர்ஜன், உங்க சர்ஜரி ஸ்கில்ஸை பார்த்து நான் ஸ்தம்பிச்சு நின்னேன் தான். பட் இதே மாதிரி உங்களையும் ஒரு நாள் என் ஸ்கில்ஸாலே ஸ்தம்பிச்சு நிற்க வைப்பேன்” என்றாள் சொற்களில் நிமிர்வுடன்.
“நான் உன்னை நல்ல சர்ஜன்னு ஏத்துப்பேனு இன்னுமா நம்புற மான்யா? நீ உயர பறக்கணும்னு நினைக்கிற, பட் உன் சிறகுகளுக்கு அதுக்கான வலிமையில்லை”
“எனக்கு இது நாள் வரை பறக்குற ஆசையே கிடையாது ஷ்யாம். ஆனால் எப்போ நீங்க என்னை சிறையிலே அடைச்சு வைக்க ட்ரை பண்ணிங்களோ அப்போ தான் உயரத்துலே பறக்கனும்ன்ற ஆசையே வந்துச்சு. இனி நான் மேலே மேலே பறக்க போறேன். அதைப் பார்க்க தான் போறீங்க” என்று சொல்லிவிட்டு சென்றவளையே இமை தட்டமால் பார்த்தான்.
அந்த வார்த்தைகள் ஷ்யாமை ஏதோ செய்திருக்க வேண்டும்.
இல்லையென்றால் அதுவரை அவன் இதழ்களில் இருந்த கேலி வளைவுகள் ஆச்சர்ய வளைவுகளாக மாறி இருக்குமா?
மான்யா சென்ற திசையையே வெறித்து நின்று கொண்டிருந்த ஷ்யாமின் மேல் விழுந்தது விஷ்வக்கின் கரங்கள்.
“என்னடா, ஷிப்ட் முடிஞ்சு கிளம்ப ரெடியாகிட்டியா?” என்ற ஷ்யாமின் கேள்விக்கு ஆமோதித்து தலையாட்டினான் விஷ்வக்.
“எப்படி மான்யாவோட சர்ஜிகல் ஸ்கில்ஸ்?” எனக் கேட்க “நாட் பேட்” என்று சொல்லியபடி கை கழுவும் அறையை நோக்கி நடந்தான்.
“அம்மா இப்போ எப்படி இருக்காங்க?” என ஷ்யாம் நீர் குழாயாய் திறந்தபடி கேட்க,
“நல்லா இருக்காங்கடா. இப்போ தூங்குறாங்க. இன்னும் டென் மினிட்ஸ்லே ட்ரிப்ஸ் சேன்ஜ் பண்ணனும்” என்ற விஷ்வக்கின் பேச்சு மீண்டும் மான்யாவின் புள்ளியில் வந்து நின்றது.
“மான்யா, மத்த இன்டெர்ன்ஸ் மாதிரி இல்லை ஷ்யாம். நீ எவ்வளவு ஸ்ட்ரெஸ் பண்ணாலும் மத்தவங்களை மாதிரி அலறியடிச்சுட்டு ஓடாம இவள் எதிர்த்து நிற்கிறா. ஷீ இஸ் டேலன்டட் அன்ட் பெக்கூலியர்” என சொல்ல ஷ்யாமின் இதழ்களில் மொழி பெயர்க்க முடியாத புன்னகை.
“இதுவரை தாக்குபிடிச்சுட்டா விஷ்வக், ஆனால் இதுக்கு மேலே தாக்குபிடிக்கிறாளானு பார்க்கலாம்” என்றான் கழுவிய கைகளைத் துடைத்தபடி.
சர்ஜரி முடித்துவிட்டு வந்தவள் தன் லாக்கரை திறந்து வெள்ளை கோட்டை எடுக்க முனைந்தவளின் விழிகள் அங்கே வைத்திருந்த தன் அன்னையின் புகைப்படத்தின் மீது விழுந்தது.
அந்த முகத்தைக் கண்டதும் மான்யாவின் கண்களில் தானாய் நீர் கோர்த்துக் கொள்ள “அம்மா, நான் இந்த ஹாஸ்பிட்டலிலே எப்படியாவது ஒரு மாசம் தாக்குப் பிடிக்கணும். அந்த சைக்கோ டாக்டரை ஜெயிக்கணும். அதுக்கான மனவலிமையை எனக்கு தா மா” என மனமுருக வேண்டிவிட்டு தன் லாக்கரை மூடிவிட்டு ரிசப்ஷனிற்கு வந்தாள்.
அங்கே அந்த காக்கிசட்டைக்காரர் அருகே கண்ணீருடன் ஒரு பெண்மணியும் ரெளத்திரத்துடன் ஒரு ஆணும் நின்று கொண்டிருந்தனர்.
அவர்களின் கண்களில் அந்த பிஞ்சு குழந்தையை இழந்த வலி அப்பட்டமாக பிரதிபலித்தது.
“ஐயோ என் பத்து வயசு குழந்தையை கொன்ன அந்த பரதேசியை சாகடிக்காம, இப்படி ஒரு பெரிய ஹாஸ்பிட்டலிலே வெச்சு ட்ரீட்மென்ட் கொடுத்துட்டு இருக்காங்களே” என்று அந்த தாய் கதறிக் கொண்டிருக்க மான்யா தன் உள்ளங்கையைப் பார்த்தாள்.
இந்த கைகளால் தானே அந்த கொடூரனை காப்பாற்றினாள்!
“அந்த படுபாவிக்கு எவ்வளவு நேரம் ட்ரீட்மென்ட் தருவீங்க. அவனை வெளியே கொண்டு வாங்க” என்று கோபத்தில் கத்திக் கொண்டிருந்தவரின் முன்பு ஷ்யாம் வந்து நின்றான்.
இன்ஸ்பெக்டரை சமீபித்தவன், “அந்த பேஷன்டுக்கு சர்ஜரி முடிஞ்சாச்சு. பட் அவர் ஹாஸ்பிட்டெல் பில்ஸை பே பண்ணியிருக்கிறதாலே, இப்போ அவரை டிஸ்சார்ஜ் பண்ணி ஜி.எச்க்கு ஷிப்ட் பண்றதுலே ப்ராப்ளம். சோ ஒருத்தர் இங்கே மஃப்டியிலே பேஷன்ட்டை கஸ்டெடி எடுத்தா பெட்டர்” என சொன்னவன் மான்யாவிடம் திரும்பினான்.
“அம்மாவோட ட்ரிப்ஸ் இன்னும் இரண்டு நிமிஷத்துலே மாத்தணும். நீ பார்த்துக்கோ. இதோ வந்துடுறேன்” என்றவன் இன்ஸ்பெக்டரை தனியாய் அழைத்துக் கொண்டு போய் அந்த பேஷன்டின் உடல்நிலையையும் அடுத்து செய்ய வேண்டிய சட்ட நடவடிக்கைகளையும் பேச சென்றுவிட்டான்.
அவனை வெறுப்பாக பார்த்தபடியே வெள்ளை கோட்டுடன் கோபமாய் அந்த ஐ.சி.யூவிற்குள் நுழைந்தாள்.
அங்கே நிர்மலமாய் உறங்கிக் கொண்டிருந்த மீனாட்சியம்மாளின் பல்ஸை சரிபார்த்தபடியே அவரருகில் அமர்ந்தாள்.
அதுவரை கோபத்தில் அடங்காமல் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த மான்யாவின் உள்ளம் மெல்ல அடங்கியது.
அவர் முகத்திலிருக்கும் ஏதோ ஒரு வசீகரம் மான்யாவை அவரின் பால் ஈர்த்தது.
அவள் அன்னை மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இதோ இதே மீனாட்சியம்மாளைப் போல தான் இருந்திருப்பார்.
ஆனால் விதி அவர் உயிரை இப்படி விரைவில் வாங்கிவிட்டதே என பெருமூச்சுவிட்ட நேரம் ஷ்யாம், ஆரனாஷியைத் தூக்கி கொண்டு உள்ளே நுழைந்தான்.
“ஆஷிமா, பாட்டி நல்லா தான் இருக்காங்க. லயா ஆன்டி கிட்டே இனி கூட்டிட்டு வர சொல்லி அடம்பிடிக்கக் கூடாது. டெய்லி ஒன்டைம் தான் இங்கே வரணும் ஓகே வா?” என ஷ்யாம் கேட்படி ஆரனாஷியை இறக்கிவிட்டான்.
சம்மதமாய் தலையாட்டிவிட்டு மீனாட்சியம்மாளை உற்றுப் பார்த்தாள். அவர் கண்களில் முன்பு போல கண்ணீர் கசிவு இல்லை.
அதைக் கண்டு நிம்மதி பெருமூச்சுவிட்ட ஆரனாஷி, எதிரிலிருந்த மான்யாவை விழி சுருக்கி ஒரு பார்வை பார்த்தாள். அந்த பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்ட மான்யாவும் பதிலுக்கு ஒரு பார்வை பார்த்தாள்.
அவர்கள் இருவரின் விழி பரிமாற்றத்தையும் ஷ்யாம் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த நேரம் மீனாட்சியாம்மாள் தன் கண்களைத் திறந்தார்.
எப்போதும் நிர்மலமாய் வெறிக்கும் அவரது விழிகள் மான்யாவின் வெள்ளைக் கோட்டின் மீது ஒரு வித வெறுப்பாய் படிந்தது.
அவரது பார்வையைப் பார்த்த மான்யா ஒரு கணம் புரியாமல் நின்றுவிட, ஷ்யாமோ பதற்றமாய் “மான்யா வெள்ளை கோட்டை கழட்டு” என்றான்.
மான்யா சுதாகரித்து அந்த கோட்டை கழற்றும் முன்பே மீனாட்சியம்மாள்,
வேகமாக அருகிலிருந்த கத்தியை எடுத்து மான்யாவின் மீது வீசினார்.
நொடிப் பொழுதில் நடக்கப் போகும் விபரீதத்தை உணர்ந்த ஷ்யாம் வேகமாக மான்யாவின் இடையைப் பற்றி நகர முயன்றான். அவன் தீண்டலில் அவள் திகைத்து திரும்பிய நேரம் ஷ்யாமின் தோள்பட்டையில் ஆழமாய் குத்தி நின்றது அந்த கத்தி.
“அப்பா” என ஆரனாஷி பதறிப் போய் ஓடி வர, “ஷ்யாம்” என திகைத்து கத்தினாள் மான்யா.
“அப்பாவுக்கு ஒன்னுமில்லைடா. பயப்பாடதே ஆஷிமா” என்ற ஷ்யாமின் வார்த்தைகள் மெல்ல காற்றில் கரைய பிடிமானமின்றி கீழே நழுவினான் ஷ்யாம் சித்தார்த்.