மனதோடு மனதாக – 8

மனதோடு மனதாக – 8
8
ஆர்யன்—வெண்ணிலாவின் திருமண வரவேற்பு சிறப்பாகத் தொடங்கியது.. அன்று ஞாயிற்றுக்கிழமை ஆதலால், ஆர்யனின் அலுவலக நண்பர்கள், அவனுடன் தொடர்பில் இருந்த கல்லூரி நண்பர்கள் என்று அனைவருமே வருகைத் தந்திருந்தனர்..
இளமைப் பட்டாளத்தின் சலசலப்பும் சிரிப்புச் சத்தமும் அந்த இடத்தை நிறைத்தது.. அந்த இடத்தை மேலும் ரம்மியமாக்க, திலீபன் பதிவு செய்துக் கொடுத்திருந்த பல்வேறு பாடல்களின் பின்னனி இசை மென்மையாக ஒலிக்க, சுவையான பழசாறுடன் அந்த இசையை ரசித்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தனர்..
அதே போலவே திலீப்பனின் நண்பர்கள் சிலரும் வரவேற்பிற்கு வந்திருந்தனர். ஒரு நண்பனுக்கு ஏற்கனவே மெசேஜ் செய்து, பெண் மாறிய செய்தியை திலீபன் மேலோட்டமாக சொல்லி இருக்க, அவர்களும் எந்த வித அதிர்ச்சியையும் காட்டிக் கொள்ளாமல், தங்கள் பங்கிற்கு அந்த இடத்தை சிரிப்பால் நிறைத்தனர். காலையில் இருந்து சூழ்ந்த அந்த அழுத்தமான மனநிலை மாறி, அனைவரின் முகத்திலும் புன்னகை எட்டிப் பார்த்தது.
பார்த்திபனின் அக்கம் பக்கத்தினர், நண்பர்கள் அனைவருமே வந்திருந்தாலும், பார்த்திபனை பரிதாபமாகப் பார்த்தனரே தவிர, அந்த இடத்தில் நிறைத்த சிரிப்புச் சத்தத்தில், அந்த மனநிலையைக் கெடுக்காமல், அவரிடம் எதையும் கேட்காமல் விட்டனர்.. அதுவே நிம்மதியாக வந்தவர்களை வரவேற்று பார்த்திபன் சுற்றிக் கொண்டிருந்தார்..
ரிசப்ஷனுக்காக தான் எடுத்திருந்த சூட்டை அணிந்துக் கொண்ட ஆர்யன், கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொள்ள, “செமையா இருக்கடா ஆரி.. நான் போய் வெண்ணிலா ரெடியான்னு பார்க்கறேன்.. இந்தா இவனை வச்சிக்கோ.. வெளிய கும்பல் அதிகமா இருக்கு.. எங்கயாவது ஓடிடப் போறான்..” என்ற விஷ்ணுப்ரியா, கவினை அவனிடம் விட்டுச் செல்ல, அவனது கன்னத்தைத் தட்டி, அவனைத் தூக்கிப் போட்டு பிடித்தவன்,
“மாமா எப்படிடா இருக்கேன்?” ஆர்யன் கேட்க,
“மாமா சூப்பர்.. நானு.. உன்னை மாதிரியே டிரஸ்..” அவன் கேட்கவும், அவனது கன்னத்தில் முத்தமிட்டு,
“நீ சூப்பர்டா என் தங்கம்..” என்றவனின் கையைப் பிடித்துக் கொண்டவன்,
“போர் அடிக்குது மாமா.. கேம் விளையாடலாமா?” கவின் கேட்கவும், சிரித்த ஆர்யன்,
“இதை உங்க அம்மா கேட்கணும்.. என்னை மாதிரியே கெடுத்து வச்சிருக்கேன்னு என்னை பிச்சு போட்டுடுவா.. நாம வீட்டுக்கு போன உடனே கேம் விளையாடலாம்.. இப்போ சமத்தா உட்காரு..” என்றவன், தனது மொபைலில் வந்திருந்த வாழ்த்துச் செய்திகளைப் பார்த்து, பதில் சொல்லிக் கொண்டிருந்தான்..
சேகர் தயாராகி வந்ததும், கண்கள் கலங்க உணர்ச்சி வசத்துடன் உள்ளே வந்த விஷ்ணுப்ரியா, “ஆரி.. அது எப்படிடா உன்னோட சூட்டும் வெண்ணிலாவோட லெஹங்கா கலரும் ஒரே மாதிரி இருக்கு?” ஆச்சரியமும் திகைப்புமாக அவள் கேட்க,
“என்னக்கா சொல்ற? ஒரே கலரா? எனக்கு எப்படித் தெரியும்? நீங்க எல்லாம் கல்யாண புடவை எடுக்கப் போகும்போது நான் தான் ஆன்சைட் போயிருந்தேனே.. அப்போ நீ இந்த டிரஸ் எடுத்ததைப் பார்க்கலையா?” ஆர்யன் கேட்கவும், ப்ரியா யோசனையுடன் அவளைப் பார்க்க,
“அது தான் அன்னிக்கு.. நீங்க அவளுக்கு புடவை எடுக்க போன போது, நீங்க எல்லாம் நல்லா இருக்குன்னு செலெக்ட் செய்து காட்டின புடவைக்கு, ஒழுங்கா கூட பார்க்காம, எடுத்திருங்கன்னு சொல்லிட்டு அவசரமான வேலை இருக்குன்னு அவ உடனே கிளம்பிட்டான்னு புலம்பிட்டு இருந்தியே..” ஆர்யன் நினைவுப்படுத்தவும், அவள் ஏதோ யோசனைக்குத் தாவ,
“ரிசப்ஷன்கு சூட் எடுன்னு நீங்க படுத்தினதுனால தானே, இந்த சூட்டை அங்க இருந்து வரும்போதே கல்யாணத்துக்காக எடுத்துட்டு வந்தேன். ஏன் நீங்க போன போது வெண்ணிலாவுக்கு டிரஸ் எடுக்கலையா?” ஆர்யன் கேட்க,
“இல்லடா.. அப்போ நாங்க முஹுர்த்தப் புடவை தானே எடுத்தோம்.. ஜீவிதாவுக்கு அவங்க முன்னாலேயே எல்லாம் எடுத்துட்டோம்ன்னு சொன்னாங்க. அப்போ வெண்ணிலாவுக்கும் எடுத்திருப்பாங்களா இருக்கும்?” யோசனையுடன் பதில் சொல்ல, ஆர்யனின் மனதினில் ஒரு சின்னக் குறுகுறுப்பு.
“இதே ப்ளூ கலரா?” சந்தேகமாகக் கேட்க, அவனது மனதோ அவளை அப்பொழுதே பார்க்கத் துடித்தது..
“ஆமாடா ஆரி.. இதே ப்ளூ கலர் லெஹங்கால சில்வர் கலர் துப்பட்டா டா.. உன்னோட ஷர்ட் லைட் க்ரே.. அவளது சில்வர்.. ரெண்டும் கிட்டத்தட்ட ஒண்ணு தானே..” என்று சொல்லிக் கொண்டே வந்தவள்,
“ஆரி.. எனக்கு இப்போ நியாபகம் வந்திருச்சு.. இந்தக் கல்யாண புடவையை ஜீவிதா ஓகே சொல்லிட்டு வேலை இருக்குன்னு கிளம்பிப் போயிட்டா.. மேல வச்சுக் கூட பார்க்கல.. அன்னிக்கு அவ எங்கயோ வெளிய போறதுனால அவங்க பெரியம்மாவுக்கு துணையா வெண்ணிலா தான் வந்திருந்தா.. சரி.. அவ கலருக்கு புடவை சரியா இருக்குமான்னு பார்க்க, வெண்ணிலாவுக்குத் தான் புடவையை வச்சுப் பார்த்தோம்..
ரெண்டு பேரும் ஒரே கலர் தானே. அதே மாதிரி காலையில அவ ரெடியான்னு பார்க்கப் போனா.. அந்த முஹுர்த்தப் புடவையோட ப்ளவுசை போட்டு இருந்தா.. எப்படின்னு கேட்டதுக்கு தவறுதலா இவளோட அளவுக்கு டைலர் அந்த ப்ளவுசை தைச்சு தந்திருக்காங்கன்னு சொன்னாங்க.. காலையில புடவைக்கு தேடும் போது பார்த்து தான் அவங்களுக்குமே விஷயம் தெரியும் போல.. எல்லாருக்குமே அவ்வளவு ஷாக்கா இருந்தது..” சொல்லச் சொல்ல விஷ்ணுப்ரியாவின் குரலில் ஒரு நடுக்கம்..
“இது கடவுள் உனக்கு அவ தான்னு ஏற்கனவே முடிச்சு போட்டு வச்சிருந்ததுனாலையா? தெரியல ஆரி.. எனக்கு முஹுர்த்த புடவையைப் பத்திக் கேட்கவுமே உடம்பு சிலிர்த்துப் போச்சு.. விதி அன்னைக்கே அவ மேல போட்டு பார்த்து அந்தப் புடவையை எடுக்க வச்சிருக்குப் பாரு.. இது எல்லாமே தானா நடக்கறதைப் பார்த்தா எனக்கு ஒரு மாதிரி உள்ளுக்குள்ள என்னவோ பண்ணுது.. ரிசப்ஷன் டிரஸ்ல ரொம்ப அழகா இருக்காடா.. அவளை கண் கலங்காம சந்தோஷமா வைச்சிக்கோ.. அவ கிட்ட சாதாரணமா பேசப் பாரு.. இப்போ அவகிட்ட எல்லாரையும் இன்ட்ரோ கொடுக்கறது போல சகஜமா பேசு, அதன் மூலமா தான் மெல்ல பழக முடியும்..” படபடவென்று சொன்ன விஷ்ணுப்ரியா, ஆர்யன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே,
“நான் வந்தவங்களை போய் பார்க்கறேன்டா.. அவ ரெடி ஆனதும் திலீப் வந்து கூப்பிடறேன்னு சொன்னாங்க..” என்றவள், அதே உணர்ச்சிப் பெருக்குடன் வெளியில் செல்ல, தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்ட ஆர்யன்,
“ஏன் மாமா.. பொண்ணு பார்க்க அவங்க வீட்டுக்கு போன பொழுது வெண்ணிலா அங்க இல்லையா? அவளை எனக்கு அப்போ பார்த்தா மாதிரியே இல்லையே..” என்று கேட்க,
“ஏன் அப்போவே பார்த்திருந்தா சினிமால எல்லாம் வரா மாதிரி எனக்கு ஜீவிதாவ பிடிக்கல வெண்ணிலாவைத் தான் பிடிச்சு இருக்குன்னு சொல்லி இருப்பியோ?” சேகர் நக்கலடிக்கவும், ஆர்யன் அவனை கேலியாகப் பார்த்து,
“இருக்கலாம்.. மே பி..” என்றவன், அதைக் கற்பனை செய்துப் பார்த்து சிரிக்க, சேகர் அவனது முதுகில் ஒன்று வைத்தான்.
“மாமா.. இப்படி பேசிப் பேசியே என்னை வெளிய மாட்டி விடாதீங்க.. புரியுதா? மீ பாவம்..” ஆர்யன் அவனை மிரட்ட,
பயந்தது போல நடித்தவன், ஆர்யனின் முறைப்பில் சிரித்து, “இல்லடா.. நாம போன அன்னைக்கு அவளுக்கு எக்ஸாம்னால காலேஜ்க்கு போயிட்டாளாம்.. அவங்க பெரியம்மா ப்ரியாகிட்ட அவ இல்லாத அப்போ நம்மள ‘ஏன் வரச் சொன்னீங்க.. நான் எப்போ மாமாவைப் பார்க்கறது’ன்னு கேட்டு கோபமா கிளம்பிப் போயிருக்கான்னு சொல்லி இருக்காங்க.. ப்ரியா என்கிட்டே சொன்னா.. அப்பறம் நிச்சயத் தட்டு மாத்தற அன்னிக்கு நீ தான் ஊர்லயே இல்லையே. ஆஸ்திரேலியால இருந்து ஆன்லைன்ல தானே பார்த்த? அப்போ அவளைப் பார்க்கல?” சேகர் விவரம் சொல்லவும்,
“ஓ.. அது நான் ஆன் செய்து வச்சிட்டு என் வேலையை பார்த்துட்டு இருந்தேன்..” என்றவனை சேகர் முறைக்க, அந்த நேரம் திலீபன் வந்தான்..
“மாமா ரெடியா? நீங்க ரெடின்னா அப்பா உங்களை மேடைக்கு கூட்டிட்டு வரச் சொன்னார்.. வெண்ணிலா ரெடியா இருக்கா..” அவன் அழைக்கவும், ஆர்யன் எழுந்து நிற்க, அவனைப் பார்த்தவன் கண்களை விரித்தான்..
“மாமா இது நீங்க எப்போ எடுத்த சூட்?” திகைப்பாக அவன் கேட்ட கேள்வியில்,
“இது நான் ஆஸ்திரேலியால இருந்து எடுத்துட்டு வந்தேன் திலீப்..” ஆர்யனின் பதிலில், ஆர்யனின் கையைப் பிடித்துக் கொண்டான்.. திருமணம் முடிந்து, தனது அன்னை அறையில் கூறிய அனைத்தும் அவனது மனதினில் வளம் வர,
“மாமா.. ஒரே வார்த்தையில சொல்லணும்ன்னா யூ ஆர் மேட் ஃபார் ஈச் அதர்.. இது கடவுள் போட்ட முடிச்சு.. அவ்வளவு தான்..” என்ற திலீபன், ஆர்யன் அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே,
“வாங்க மாமா போகலாம்.. வெண்ணிலா வெயிட் பண்ணிட்டு இருக்கா..” எனவும்,
“போகலாம் திலீப்..” என்ற ஆர்யனை அழைத்துக் கொண்டு மேடைக்கு அருகில் செல்ல, விஷ்ணுப்ரியா வெண்ணிலாவை அழைத்துக் கொண்டு வந்தாள்.. இருவரின் உடைப் பொருத்தத்தையும் பார்த்த சுபத்ரா, பார்த்திபன், பூரணி அனைவருக்குமே உள்ளுக்குள் அதிர்ச்சி..
“இது எப்படி?” பார்த்திபன் திகைப்புடன் சுபத்ராவைக் கேட்க,
“நான் சொன்னேன் இல்ல.. அதுல இதுவும் சேருது பாருங்க.. நாம வெண்ணிலாவுக்கு தனியா தான் எடுத்தோம்.. எடுத்து அப்படியே நேரா பூரணி டைலர் கிட்ட கொடுத்துட்டா..” கண்ணீருடன் சுபத்ரா சொல்லி,
“ஒருத்தரோட பொண்டாட்டிய இன்னொருத்தர் கட்ட முடியாதுன்னு இப்படி நிறைய விஷயங்கள் இன்னைக்கு எனக்கு உணர்த்திடுச்சு..” என்று சொல்லவும், பார்த்திபன் அவரது கையை தட்டிக் கொடுத்தார்..
அவளைப் பார்த்த ஆர்யனின் கண்களில் மின்னல்.. தலைகுனிந்து அவனது அருகில் நின்றுக் கொண்டிருந்த வெண்ணிலாவின் முகத்தை ஆர்யன் பார்த்துக் கொண்டிருக்க, அவர்களைப் பார்த்துவிட்டு, அருகில் வந்த பார்த்திபன், “ரெண்டு பேரும் கையைப் பிடிச்சுக்கிட்டு மேடை ஏறுங்க..” என்று சொல்லவும்,
அவரைப் பார்த்து தலையசைத்து விட்டு, அவளைப் பார்த்த ஆர்யன், “போகலாமா?” என்று கேட்டபடி தனது கையை நீட்ட, அவனது கை மீது தயக்கத்துடன் தனது கையை அவள் மெல்ல வைக்கவும், அதைப் பிடித்துக் கொண்டவன், மென்மையாக அழுத்திவிட்டு, அவளை அழைத்துக் கொண்டு மேடை ஏறினான்..
அவனது பின்னோடு ஏறிய திலீபன், அங்கு வைத்திருந்த மாலையை எடுத்து இருவரின் கைகளிலும் தர, “ஆரி.. இதை வெண்ணிலாவுக்கு போடு.. வெண்ணிலாம்மா.. நீ அவனுக்கு போடு..” சேகர் சொல்லவும், வெண்ணிலா ஆர்யனைப் பார்க்க, அவனோ மாலையுடன் அவளை நெருங்கினான்..
அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டே, மாலையிட்ட பொழுது, அவனது விரல் அவளது கழுத்தினில் உரச, அவளது உடல் கூச்சத்தில் சிலிர்த்தது.. அந்த சிலிர்ப்பில், அவள் கழுத்தைச் சுருக்க, அவளது முகத்தைப் பார்த்த ஆர்யனுக்கு புன்னகை அரும்ப, அதை அடக்கிக் கொண்டு அவளைப் பார்த்தான்.
“வெண்ணிலா.. நீ அவனுக்குப் போடும்மா..” சேகர் சொல்லவும், வெண்ணிலா மாலையை கைகளில் ஏந்தியபடி ஆர்யனை நிமிர்ந்துப் பார்த்தாள்..
முந்தின நாள், ஆரத்தி எடுத்த பொழுது, அவனது உயரத்திற்கு எம்பி நெற்றியில் பொட்டிட்டது அவளது நினைவிற்கு வரவும், அவளது இதழ்களிலும் மெல்லிய புன்னகை.. இப்பொழுது எப்படி எம்புவது என்று அவள் யோசித்துக் கொண்டு நிற்க, “பூனை குட்டி.. நான் உன்னை தூக்கவா?” திலீபன் கிண்டலாகக் கேட்க, ‘போ’ என்று முகத்தை சுருக்கியவள், மீண்டும் ஆர்யனைப் பார்த்தாள்.
“என்ன?” ஆர்யன் கேட்கவும், அவளது விழிகள் மாலையை நோக்கிச் செல்லவும்,
“தலையை குனிஞ்சு காட்டணுமா?” ஆர்யன் கேட்கவும், ‘ஆம்’ என்பது போல அவள் தலையை மேலும் கீழும் அசைக்க,
“அதை வாயைத் திறந்து கேட்கறது..” என்றவன், புன்னகையுடன் தலையைக் குனிந்துக் காட்டவும், அவனது கழுத்தில் மாலையை அணிவித்தவள், திலீப்பைத் திரும்பி நக்கலாகப் பார்க்க,
“போதும் உங்க பெருமை..” நாக்கைத் துருத்தி பழிப்புக் காட்டியவன், அவளுக்குத் துணையாக அவர்களது அருகில் நின்றுக் கொண்டான்.. சுபத்ராவும் பார்த்திபனும் ஒதுங்கியே நிற்க, தனது மகளை பூரணி அறையில் இருந்தே ரசித்துக் கொண்டிருந்தார்..
“மாமா.. ஃபிரெஷா இருக்கும்போதே ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம். அப்பறம் ரெண்டு பேரும் டயர்ட் ஆகிடுவீங்க..” திலீப் சொல்லிவிட்டு தனது செல்லை எடுக்க, ஆர்யன் தன்னுடைய மொபைலையும் எடுத்து அவனிடம் நீட்டி,
“இதுலயும் எடு திலீப்.. ஸ்டேட்ஸ் போடணும் இல்ல..” என்று சொல்லவும், தனது மொபைலை மேலே தூக்கி கேமராவின் வழியாகப் பார்த்து விட்டு,
“மாமா.. என்ன க்ரூப் போட்டோக்கா போஸ் கொடுக்கறீங்க? அவ தோள்ள கை வச்சிக்கோங்க..” திலீப் சொல்லவும், அதைக் கேட்ட வெண்ணிலா திகைத்து,
“அண்ணா..” என்று தயங்க, அவனோ சிறிதும் அசைந்துக் கொடுக்காமல்,
“நிலா..” என்று அழுத்தம் கொடுத்து அவளைப் பார்த்துவிட்டு,
“மாமா.. நீங்க வைங்க..” எனவும், ஆர்யன் தனது கையை எடுத்து அவளது தோளில் வைக்க, மெல்ல வெண்ணிலாவை அவனருகில் தள்ளி நிறுத்தி, தனது மொபைலில் அவர்களைப் பதித்துக் கொண்டான்.. அதே போலவே ஆர்யனின் மொபைலிலும் புகைப்படம் எடுத்தான்.
“மாமா அப்படியே நில்லுங்க.. அவளை விட்டுடாதீங்க..” என்றவன், வேகமாக போட்டோகிராபர்களின் அருகே சென்று, இருவரையும் புகைப்படம் எடுக்கத் துவங்க, போட்டோகிராபர்களுக்கும் உற்சாகம் தொற்றிக் கொண்டது..
அதுவரை அங்கு பெண் மாறியதில் இருந்து நடந்த குழப்பத்தில் மணமக்கள் இருவரையும் எந்த வித போஸையும் கேட்காமல், அமைதியாகவே அவர்கள் சடங்குகளை புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்க, இப்பொழுது திலீபனே மணமக்களை செல்லில் படம் பிடிக்கவும், தங்களது குவியத்தின் வழியாக தெரிந்த மணமக்களின் ஜோடிப் பொருத்தத்தைப் பார்த்து, அதுவரைத் தங்களை அடக்கிக் கொண்டிருந்தவர்கள், அந்த நிகழ்வை தவற விடக் கூடாது என்ற எண்ணத்தில்,
‘சார் இப்படி கொஞ்சம் நில்லுங்க.. அவங்க ஷோல்டர்ல கை வச்சிக்கோங்க.. ரெண்டு பேருமே மாலையை பிடிச்சிக்கிட்டு இங்க பாருங்க. ரெண்டு பேரும் சைடா இப்படி ஒட்டி நில்லுங்க.. வெண்ணிலா நீ அவருக்கு முன்னால நில்லும்மா.. இப்படி அவர் மேல சாஞ்சு நில்லுங்க..’ என்று இருவரையும் விதம்விதமாக புகைப்படம் எடுக்கத் துவங்க, முதலில் அவர்கள் அப்படிச் சொன்னதும், வெண்ணிலாவின் மனநிலை கருதி ஆர்யனும் தயங்க, வெண்ணிலாவும் ஆர்யனின் முகத்தைப் பாவமாகப் பார்க்க, திலீபன் அவர்களது உதவிக்கு வந்தான்..
ஆர்யனின் காதின் அருகில் நெருங்கி, “மாமா.. சியரப்.. நீங்க அவங்க சொல்ற போல போஸ் கொடுங்க.. லைஃப்ல ஒன் டைம் ஈவென்ட் இது.. அப்பறம் நாம இப்படியா படம் பிடிக்கப் போறோம்? நீங்க அவளைப் பிடிச்சிக்கோங்க. அவ ஒண்ணும் சொல்ல மாட்டா.. அவளுக்கு திடீர்ன்னு எல்லாம் நடக்கவும் பயமா இருக்கு.. அவ்வளவு தான்.. ப்ளீஸ் நீங்க தான் நார்மலா பேசி அவளை சரி பண்ணனும்.. இப்படி நீங்களே தயங்கினா அவ என்ன செய்வா?” என்று கேட்கவும், அவனைப் பார்த்தவன்,
“அவளுக்கு காலையில இருந்து திடீர்ன்னு நடந்தது எல்லாமே கொஞ்சம் ஸ்ட்ரெசா இருக்கும் இல்ல.. போஸ்ங்கற பேர்ல அவளுக்கு மேல ப்ரெஷர் கொடுத்து, எங்கயாவது அழுதிறப் போறான்னு பயமா இருக்கு.. இது போல போட்டோ எல்லாம் எப்போ வேணா எடுத்துக்கலாம்.. என்ன மாலை எல்லாம் இருக்காது.. எனக்கு அவளோட மனநிலை தான் இப்போ முக்கியமா படுது.. அது தான் கொஞ்சம் தயக்கமா இருக்கு.. மத்தப்படி எனக்கு ஒண்ணும் இல்ல..” ஆர்யனின் பதிலில், திலீபின் மனதினில் ஆர்யனின் மீது பெருமதிப்பு உண்டானது..
“அதெல்லாம் அழ மாட்டா மாமா.. அவளுக்கு எல்லாம் சொல்லி இருக்கு..” என்று உறுதி கூறியவன், மீண்டும் போட்டோக்ராபர்களிடம் சென்று நிற்க, ஆர்யன் அவளைத் தன்புறம் மெல்ல இழுத்துக் கொண்டு, அவளது காதின் அருகே தலை முடியை சரி செய்வது போலக் குனிந்து,
“வெண்ணிலா.. முகத்தை கொஞ்சம் சிரிச்சா மாதிரி வைக்கலாமே.. இல்ல நாளைக்கு போட்டோ பார்க்கும் போது நான் மட்டும் தான் அழகா இருப்பேன்.. நீ சீரியஸா உராங்கோட்டான் போல இருப்ப.. அப்போ போட்டோ பார்த்து ஃபீல் பண்ணி நோ யூஸ்.. ஒண்ணும் செய்ய முடியாது..” என்று வம்பு வளர்க்க, அவன் சொன்னதைக் கேட்டவள், ‘ஹான்..’ என்று அவனைப் பார்க்க, புருவத்தை உயர்த்தி அவன் என்ன என்று கேட்கவும், மறுப்பாக தலையசைத்தவளின் இதழ்களில் மெல்லிய புன்னகை வந்து அமர்ந்தது..
ஒருவழியாக புகைப்படக்காரங்களின் கைப்பாவைகளாக இருவரும் போஸ் செய்து முடிக்கவும், “உப்ஸ்..” என்று வெண்ணிலா பெருமூச்சு விட, ஆர்யனுக்கு அவளது படபடப்பு புரிந்து, சிறிது இடைவேளைத் தர எண்ணி,
“ஜூஸ் குடிக்கறியா?” என்று கேட்கவும்,
“ஆமா.. கண்டிப்பா வேணும் மாமா.. தொண்டை வறண்டு போச்சு..” அவள் சொல்லவும், அருகில் இருந்த சேகரிடம் ஆர்யன் ஜூஸ் கேட்க, இருவருக்கும் சேகர் கூல் ட்ரிங்க்சைக் கொண்டு கொடுத்தான்.
“தேங்க்ஸ் சித்தப்பா.. தொண்டை வறண்டு போச்சு..” என்று அவனிடம் இருந்து வாங்கிக் கொள்ளவும், சேகர் அவளைப் பார்த்து புன்னகைத்தான்..
குளிர்பானம் குடித்து முடித்து, அழகாக போடப்பட்டிருந்த மயில் போன்ற இருக்கையில் அவர்கள் அமரவும், அதிலேயே அமர்ந்தபடி மீண்டும் சில புகைப்படங்கள் எடுத்து முடிக்க, ஆர்யனின் கல்லூரி நண்பர்கள் மேடையில் ஏறினர். அவர்களைப் பார்த்ததும் எழுந்து நின்ற ஆர்யனின் முகத்தினில் புன்னகை அரும்பியது..
“ஹே..” என்ற கூச்சலுடன் அவர்கள் அருகில் வருவதற்குள், வெண்ணிலாவின் பக்கம் சாய்ந்தவன்,
“வெண்ணிலா.. இவங்க என்னோட ப்ரெண்ட்ஸ்.. காலேஜ் படிக்கும்போது இருந்தே ஒரே கேங்.. நாங்க அஞ்சு பேர் தான் இப்போ வரை கான்டாக்ட்ல இருக்கோம்.. காலேஜ் கட் அடிச்சிட்டு பிரின்சிபல் கிட்ட மாட்டறதுல இருந்து எல்லா கூத்தும் சேர்ந்தே செய்வோம்..” என்று சொல்லவும், வெண்ணிலா அவனை ஆச்சரியமாகப் பார்க்க, அருகில் வந்த நண்பர்களின் கிண்டல்கள் தொடர்ந்தது..
“ஆர்யா ஃபைனலா மாட்டிக்கிட்டயா? ஆனாலும் கெத்தா சுத்திட்டு இருந்த உன்னை இப்படி மாலையும் கழுத்துமா பார்க்க சிப்பு சிப்பா வருது.. கொஞ்சம் பலி ஆடு ஃபீல் வருது. சிஸ்டர் தான் பார்த்திபன்.. நீ வடிவேலு போல..” கேலியாக சிரித்தபடி ஆர்யனைப் பார்க்க, அந்த காமடியை நினைத்து வெண்ணிலா சிரித்து விட, அவளது புன்னகையை ரசித்தவன்,
“ஏண்டா மானத்தை வாங்கறீங்க?” என்று புன்னகையுடன் கேட்கவும்,
“சிஸ்டர்.. இவன் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு கெத்தா சுத்திட்டு இருந்தான்.. இப்போ நல்லா உங்க கிட்ட மாட்டிட்டு இருக்கான்.. சரியான வாலு வேற.. அவனை விடாதீங்க.. நல்லா கவனிங்க..” மற்றொருவன் வெண்ணிலாவிடமே கேலி செய்யவும்,
“போதும்டா.. என் புகழ் பாடறதை நிறுத்துங்க.. அவ இப்படியே பயந்து ஓடிடப் போறா.. நான் பாவம்.. இப்போ போட்டோக்கு நிக்கச் சொல்றாங்க பாரு..” என்று ஆர்யன் சொல்லவும், அவர்கள் போட்டோவிற்கு வரிசையாக நிற்க, போட்டோ எடுத்தப் பிறகு, அவர்களுடன் செஃல்பி எடுத்துக் கொண்டு, பரிசுகள் தருவதற்காக பெரிய வரிசை நிற்பதைப் பார்த்தவர்கள்,
“பெரிய க்யூ நிக்குது.. இன்னும் இங்க அரட்டை அடிச்சோம்ன்னா அவங்க கொலை காண்டாகிடுவாங்க.. அப்பறம் ஒரு நாள் மீட் பண்ணலாம்டா.. சிஸ்டரைக் கூட்டிட்டு வா.. சிஸ்டர் ஒரு நாள் சண்டே லஞ்ச்க்கு மீட் பண்ணலாம். அவனை நல்ல ஹோட்டலா புக் பண்ணச் சொல்லுங்க..” எனவும், வெண்ணிலா தலையசைக்க,
“பைடா..” என்றபடி அவர்கள் இறங்கிச் செல்லவும், அடுத்து பார்த்திபனின் நண்பர்கள் வர, வெண்ணிலாவிற்கு தெரிந்த முக்கியப்பட்டவர்களை அவள் ஆர்யனிற்கு அறிமுகப்படுத்த, மெல்ல இருவருக்கும் இடையில் பேச்சு வார்த்தைத் துவங்கியது..
அடுத்து ஆர்யனின் அலுவலக நண்பர்கள் வரவும், “டேய் ஆர்யா.. என்னை விட்டுட்டு இப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டு ரிசப்ஷன்ல நிக்கறியேடா.. இதெல்லாம் நியாயமா?” ஒரு பெண் கேட்கவும், வெண்ணிலா திகைப்புடன் அவனை நிமிர்ந்துப் பார்க்க, சிரித்துக் கொண்டே தலையில் அடித்துக் கொண்டவன்,
“ஸ்ருதி.. இந்த வேலை எல்லாம் என் வைஃப் கிட்ட வேண்டாம்.. அவங்க அதை நம்ப மாட்டாங்க..” என்ற ஆர்யன்,
“அப்படி தானே வெண்ணிலா..” என்று வெண்ணிலாவிடம் கேட்கவும், வெண்ணிலா முழிக்க,
“சிஸ்டர்.. இந்த சின்சியர் சிகாமணி எல்லாரையுமே சிஸ்டர் இல்ல ஃபிரென்ட் மட்டும் தான்னு தெளிவா சொல்லிடுவான்.. ஒரு பொண்ணு இவனை சும்மா கூட பார்க்க முடியாது.. ஆபீஸ்ல உர்ர்ர்னு முகத்தை வச்சிருப்பான்..” ஒருவன் கேலி செய்ய, வெண்ணிலா அவர்களைப் பார்த்து புன்னகைத்தாள்..
“மாமா ஆபிஸ்ல ரொம்ப ஸ்ட்ரிக்ட்டோ?” முதல்முறையாக வெண்ணிலா அந்த பெண்ணிடம் கேட்கவும்,
“ஸ்ட்ரிக்ட்ன்னு இல்ல.. ஆனா கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் தான்.. உன் மாமா ரெ…ம்..ப நல்லவன்..” அந்தப் பெண் சொல்லவும், வெண்ணிலா விழி உயர்த்தி ஆர்யனைப் பார்த்துவிட்டு, அந்தப் பெண்ணைப் பார்த்து புன்னகைக்க, அடுத்து அவர்கள் புகைப்படத்திற்காக நிற்கவும், ஆர்யன் அவளது கையை மென்மையாகப் பிடித்துக் கொண்டான்..
ஒருவாறாக வரவேற்பு முடிந்து, அவர்கள் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்த பொழுது, வெண்ணிலா ஆர்யனை நிமிர்ந்துப் பார்த்தாள்..
“ரொம்ப டயர்டா இருக்கா?” ஆர்யன் கேட்க,
“இல்ல.. கால் வலிக்குது..” அவளது பதிலில், அவளது கையை மெல்ல அழுத்தி விடுவித்தவன்,
“கொஞ்ச நேரம் தான்.. அப்பறம் வீட்டுக்கு போயிட்டு ரெஸ்ட் எடுத்துக்கலாம்.. என்ன?” ஆறுதலாக அவன் கேட்க, அவள் தலையசைக்கும் நேரம், சேகர் அங்கு வரவும் எழுந்து நின்றான்..
“மாப்பிள.. வெண்ணிலா.. வாங்க. நாம சாப்பிட போகலாம்.. நேரமாகுது.. நல்ல நேரத்துக்குள்ள நாம வீட்டுக்கு போகணும்..” சேகர் வந்து அழைக்க, ஆர்யன் கோட்டை கழட்டிக் கொண்டே மேடையை விட்டு இறங்கவும், அவளது அருகில் வந்த பூரணியை பார்த்த வெண்ணிலா,
“அம்மா..” என்று தொண்டையடைக்க அழைத்து அவரது கையைப் பிடித்துக் கொண்டு நின்றாள்..
பூரணி தயக்கத்துடன் ஆர்யனைப் பார்க்க, “அத்தை.. நீங்க சாப்பிட்டீங்களா? என்று விசாரிக்க,
“சாப்பிட்டேன் தம்பி.. ஒரு ரெண்டு நிமிஷம் நான் அவ கூட பேசிட்டு அனுப்ப வா?” பதில் சொல்லிவிட்டு அவனிடம் அனுமதி கேட்க,
“சரிங்க அத்தை.” என்று அவருக்கு பதில் சொல்லியவன்,
“நான் ரூம்ல இருக்கேன் வெண்ணிலா.. அத்தைக்கிட்ட பேசிட்டு கூப்பிடு.. நாம சாப்பிட போகலாம்..” என்றவன், தனது அறைக்குள் நுழைய, பூரணி அவனை நிறைவாய் பார்த்துக் கொண்டிருந்தார்..
“ம்மா..” வெண்ணிலா தயக்கத்துடன் அழைக்கவும், அவளைத் தனது தோளில் சாய்த்துக் கொண்டவர்,
“நிலாக் குட்டி. உன்னை மாப்பிள்ளை வீட்டுல கொண்டு விட பெரியப்பாவும் பெரியம்மாவும் வருவாங்க.. நான் வீட்டுக்கு போய்ட்டு உனக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கிட்டு நேரா அங்க வந்துடறேன்.. என்ன?” அவளது கன்னத்தை வருடியபடி சொல்லவும்,
“ஏன்ம்மா நான் நம்ம வீட்டுக்கு வரக் கூடாதா? நேரா அங்க தான் போகனுமா? இப்படி திடீர்ன்னு போகச் சொன்னா நான் என்ன செய்வேன்? நீயும் என் கூட வாயேன்மா..” வெண்ணிலா கண்கள் கலங்கக் கேட்கவும்,
“என்னடா செய்யறது? இப்படி தான் உன் கல்யாணம் நடக்கணும்ன்னு இருக்கு போல.. இப்போ பெரியப்பா பெரியம்மா இருக்கற மனநிலையில உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு போனா அவங்க மனசு ரொம்ப கஷ்டப்படும்ல.. அது தான் ஒரு ரெண்டு நாள் அவங்க கொஞ்சம் சமாதானம் ஆகவும் உங்களை வீட்டுக்கு கூட்டிட்டு வரேன்னு உங்க அத்தை சொன்னாங்க..” காரண காரியத்துடன் அவளிடம் விளக்கியவர்,
“மாப்பிள்ளை வீட்டுல உன்னை நல்லா பார்த்துப்பாங்க.. அழக் கூடாது என்ன? இப்போ அங்க நான் உன் கூட வந்துட்டா பெரியம்மா பெரியப்பாவை யாரு பார்த்துக்கறது? உனக்காக தான் அவங்க தங்களோட எல்லா கஷ்டத்தையும் தள்ளி வச்சிட்டு எல்லாம் செய்யறாங்க.. புரியுதா? இப்போ நீ அவங்க கூட போ.. நான் வீட்டுக்கு போயிட்டு உனக்குத் தேவையானது எல்லாம் எடுத்துட்டு வரேன் என்ன?” அவளை சமாதானப்படுத்தி, நெற்றியில் இதழ் ஒற்றி, அவளது தலையை வருடியவர், விஷ்ணுப்ரியா எட்டிப் பார்க்கவும்,
“நேரமாச்சு.. போ.. மாப்பிள்ளை உனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பார்.. அவரோட சாப்பிட போ.. நான் இங்க பெரியம்மாவுக்கு மண்டபம் காலி பண்ண உதவி செய்யறேன்..” அவளது தலையை வருடிய படிச் சொல்லவும், வெண்ணிலா நீர் திரையிட்ட விழிகளால் அவரைப் பார்க்க, அவளை அணைத்துக் கொண்டவர்,
“போ.. போய் மாப்பிள்ளையைக் கூட்டிக்கிட்டு சாப்பிட்டு போ.. நேரமாகுது..” என்ற பூரணி, அவளை அழைத்துக் கொண்டு ஆர்யனின் அறை வாசலுக்குச் செல்ல, ஆர்யன் சேகருடன் தனது பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்தான்..
“ஆரி.. எல்லாமே எடுத்து வச்சிட்ட தானே.. இதை வண்டியில ஏத்திடலாம்ல..” விஷ்ணுப்ரியா கேட்டுக் கொண்டிருக்க,
“வச்சிடலாம் ப்ரியா.. அதோட இந்த பேக்கையும் வச்சிடு.. அவ்வளவு தான் எனக்கு வேற எதுவும் இல்ல.. வெண்ணிலாவோட திங்க்ஸ் ஏதாவது இருந்தா அவங்கக்கிட்ட கேட்டு கார்ல வச்சிடு.. இல்ல நாளைக்கு காலையில கூட போய் எடுத்துக்கலாம்.. எப்படியும் அவ காலேஜ் புக்ஸ் எல்லாம் போய் எடுத்துட்டு வரணும்..” ஆர்யன் சொல்லிவிட்டு, தனது கைகளை உயர்த்தி நெட்டி முறிக்க, அவன் சொன்னதைக் கேட்டுக் கொண்டே பூரணியுடன் அந்த அறை வாயிலில் நின்றிருந்தவள்,
“மாமா.. நிஜமாவா சொல்றீங்க? நான் எப்பவும் போல காலேஜ் போகலாமா?” சந்தோஷமாக கேட்டுக் கொண்டே அவனது அருகில் சென்று நிற்கவும், அவளது குரலைக் கேட்டு பட்டென்று திரும்பிப் பார்த்தவன், அவளது முகத்தைப் பார்த்து சிரித்து,
“பின்ன? வேற என்ன ஐடியால இருக்க வெண்ணிலா? காலேஜ் போகாம ஜாலியா சுத்தலாம்ன்னா? என்ன அப்படியே எஸ்கேப் ஆகிடலாம்ன்னு பார்க்கறியோ? ஏன் கிளாஸ்ல நீ லாஸ்ட்டா? மக்குப் பிள்ளையா?” கேலியாக ஆர்யன் கேட்கவும்,
“என்னது? நானா? நான் தான் கிளாஸ்ல பர்ஸ்ட் மார்க் தெரியுமா?” ரோஷமாக அவள் சொல்லவும், சிரித்தவன்,
“அப்பறம் என்ன? நாம அப்பறம் போய் உன்னோட புக்ஸ் எல்லாம் எடுத்துட்டு வரலாம்.. என்ன?” மீண்டும் கேட்கவும், சந்தோஷத்தில் அவனது கையைப் பிடித்துக் கொண்டவள்,
“தேங்க்ஸ் மாமா.. ரொம்ப தேங்க்ஸ்.. யு ஆர் சோ ஸ்வீட்..” முகம் நிறைந்த புன்னகையுடன் சொல்ல, ஆர்யானோ வயிற்றைப் பிடித்துக் கொண்டான்..
“இப்படி நீ ஸ்வீட்ன்னு சொல்லி எனக்கு பசியை அதிகம் பண்ணிட்டியே.. சாப்பிட போகலாமா? காலையில கூட நான் ஒழுங்கா சாப்பிடல..” ஆர்யன் பாவமாகக் கேட்க,
“எனக்கும் பசிக்குது.. நானும் தான் சரியா சாப்பிடல.. வாங்க போகலாம்..” என்றவளைப் பார்த்து சிரித்த சேகர்,
“வாங்க போகலாம்.. எங்களுக்கும் கடமை பாக்கி இருக்கு..” என்று சொல்லவும், ஆர்யன் சேகரைப் புரியாமல் பார்க்க,
“அதெல்லாம் கல்யாணத்துல இல்லனா என்ன கல்யாணம்?” என்றவன், இருவரையும் அழைத்துக் கொண்டு, உணவு அறைக்குச் செல்ல, இலை போட்டு பரிமாறப்பாடவும்,
“சரி.. சரி.. மாமா.. நிலாக்கு ஸ்வீட்ன்னா பிடிக்கும்.. அப்படியே அந்த லட்டுவை எடுத்து அவளுக்கு ஊட்டி விடுங்க..” திலீபன் சொல்லவும், வெண்ணிலாவைப் பார்த்து விட்டு, அவனைப் பார்த்த ஆர்யன்,
“ஸ்வீட் தானே கொடுத்துட்டா போச்சு.. வெண்ணிலா.. வாயைத் திற..” என்றபடி அவளது வாயின் அருகில் எடுத்துச் செல்ல, முதல்முறையாக வெண்ணிலாவின் முகத்தில் நாணம் வந்து குடிக் கொண்டது..
உதட்டைக் கடித்துக் கொண்டு அவள் தலை குனிய, அவளது காதின் அருகே சாய்ந்தவன், “ஆ காட்டு வெண்ணிலா..” என்று சொல்லவும், அவனது மூச்சுக்காற்று பட்டு உடல் கூச, மெல்ல அவளது செப்பு வாயைத் திறந்து அவன் கொடுத்த இனிப்பை வாங்கிக் கொள்ள, திலீபன் அவர்களைப் படம் பிடித்துக் கொண்டான்..
“நிலா குட்டி நீயும் மாமாவுக்கு கொடு..” திலீபன் சொல்லவும், அவளது இலையில் இருந்த ஸ்வீட்டை அவள் எடுத்துக் கொடுக்க, அவளது கையைப் பிடித்துக் கொண்டவன், அதை அப்படியே வாயில் வாங்கிக் கொள்ளவும், ‘ஹே..’ என்று சேகரும் திலீபனும் கைத் தட்டினர்..
அந்த கேலியில் வெண்ணிலா தலையைக் குனிந்துக் கொள்ள, “இதோ பாருடா.. என்னோட மாப்பிள்ளை ஸ்வீட் எல்லாம் சாப்பிடறான்.. கொடுக்கறவங்க கொடுத்தா எல்லாம் சாப்பிடுவான் போல..” சேகர் கேலி செய்ய,
“பாருங்க மாமா.. ரொம்ப கேலி செய்யறாங்க..” ஆர்யனிடம் சிணுங்கியவள், அவனும் சேர்ந்துச் சிரிக்கவும், முகம் சிவக்க தலையை குனிந்துக் கொண்டு உணவை உண்ணத் துவங்க, கேலி கிண்டல்களுடன் உணவை முடித்துக் கொண்டவர்கள், மணமக்களுடன் வீட்டிற்கு புறப்பட்டனர்..