aanandha bhairavi – 15
aanandha bhairavi – 15
ஆனந்த பைரவி 15
பைரவி அப்படியே உறைந்து போனாள். தான் காண்பது கனவா? தன் எதிரில் இருப்பது ஆனந்த் தானா? ஒன்றும் புரியவில்லை. பார்த்த விழி பார்த்த படி உணர்ச்சியற்று நின்றிருந்தாள்.
லியம் அவளது தோளை உலுக்க, மெதுவாக அவன் புறம் திரும்பினாள். ‘பேசு‘ என்பதாய் அவன் ஜாடை காட்ட, அவள் பேசும் நிலையில் இருந்ததால் தானே பேசுவதற்கு. அதற்குள் எழுந்த ஆனந்தன்,
“லியம், கார் இங்கேயே பார்க்கிங்கில் இருக்கட்டும். ட்ரெயின் டிக்கட்டை கேன்சல் பண்ணிட்டு வீட்டுக்கு தகவல் சொல்லச் சொல்லுங்க” உன்னோடு எனக்கு எந்த பேச்சுவார்த்தையும் இல்லை, சொல்வதைச் செய் என்பதாய் இருந்தது அவன் நடவடிக்கை.
சொல்லிவிட்டு அவன் வேகமாக கார் பார்க்கிங்கை நோக்கி நடக்க, அவனோடு லியமும் இணைந்து கொண்டான். அண்டர்க்ரௌன்டில் இருக்கும் கார் பார்க்கிங்கிற்கு வந்து சேர்ந்தனர் மூவரும். லியம் தனது காரை பைரவியின் காருக்கு பக்கத்திலேயே நிறுத்தி இருந்தான்.
ராஜா வீட்டுக் கன்னுக்குட்டியாய், புது மெருகோடு நின்றிருந்தது அந்த Black Audi. பார்த்துப் பார்த்து தெரிவு செய்திருந்தாள் பைரவி. 2018 மாடல். அட்டகாசமாக இருந்தது. விசேடமாக விண்ணப்பித்து தனக்கு பிடித்த மாதிரி ரெஜிஸ்ட்ரேஷன் பண்ணி இருந்தாள். ‘AN18 AND’. நம்பர் பிளேட் ஆனந்தனைப் பார்த்துச் சிரித்தது. உன்னை விட இப்போது நான் தான் அவளுக்கு நெருக்கம் என்பதைப்போல.
காரைப் பார்க் பண்ணும் போதே லியம் காட்டி இருந்தான், இதுதான் பைரவியின் கார் என்று. பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தது ஆனந்தனுக்கு, இந்தப் பெண் தன்மீது எத்தனை பித்தாகி இருக்கிறாள் என்று. இப்படி அன்பை வைத்துக்கொண்டு எதற்கு தானும் கஷ்டப்பட்டு என்னையும் கஷ்டப்படுத்துகிறாள்? அவளைத் திரும்பி உஷ்ணமாக அவன் பார்த்த பார்வையில் தானாக குனிந்தது பைரவியின் தலை.
கார் லியமின் ஃப்ளாட்டை நோக்கி போய்க்கொண்டிருந்தது. ஆனந்தனும், லியமும் அரசியல், பொருளாதாரம் என வள வளத்துக்கொண்டு வர பைரவி பின் சீட்டில் மௌனமாக அமர்ந்திருந்தாள். ஆனந்தைப் பார்த்த மாத்திரத்தில் மனதில் சந்தோஷம் குப்பெனப் பொங்கியதென்னவோ உண்மைதான். ஆனால் அதை முழுதாக அனுபவிக்க முடியாமல் ஆர்த்தியின் முகம் வந்து போனது.
லியம் வீட்டிற்கு முன்னர் ஒரு முறை அவன் உடம்புக்கு முடியாமல் இருந்த போது பைரவி வந்திருக்கிறாள். ஒற்றைப் படுக்கை அறை, கிச்சன், லிவிங் ஏரியா என கச்சிதமாக இருக்கும். லியம் வீட்டைத் திறக்க பைரவி மெதுவாக கிச்சனில் புகுந்து கொண்டாள். மூன்று பேருக்கும் அவசரமாக காஃபியைத் தயாரித்தவள் அதைக் கொண்டு போய்க் கொடுக்க, அதை வாங்கவில்லை ஆனந்தன். பைரவி லியமின் முகத்தைப் பார்க்க, அவன் சட்டென்று அவளிடமிருந்த ட்ரேயை வாங்கி ஆனந்தனிடம் நீட்டினான். அப்போது அவன் அதை எடுத்துக் கொள்ளவே பைரவிக்கு அவன் கோபத்தின் அளவு புரிந்தது.
“ஆனந்தன், எனக்கு கொஞ்சம் திங்ஸ் வாங்கனும். ஒரு டூ அவர்ஸ்ல வந்திடுவேன். நீங்க
பேசிக்கிட்டு இருங்க.”
அவன் பதிலை எதிர்பார்க்காமல் பைரவியிடம் ‘பேசு‘ என்று சைகை காட்டிவிட்டு கதவைப் பூட்டிக்கொண்டு சென்றுவிட்டான்.
இதற்கு மேலும் மௌனம் சாதிப்பது நல்லதில்லை எனப்புரிய,
“ஆனந்த்” என்று அவனை நோக்கி ஒரு எட்டு எடுத்து வைத்தாள் பைரவி. சுட்டு விரலை அவளை நோக்கி நீட்டி எச்சரித்தவன்,
“எது பேசுறதா இருந்தாலும் அங்க இருந்து பேசு. கிட்ட வந்தா கொன்னுடுவேன்“
“நீங்க ரொம்ப கோபமா இருக்கீங்க ஆனந்த்“
“அட, அப்படீங்களா மேடம். கண்டுபிடிச்சிட்டீங்களே! நீங்க பண்ணின வேலைக்கு கோபப்படாம உங்களை கொஞ்சுவாங்கன்னா நினைச்சீங்க?” அவன் பதில் ஏளனமாக வர, பைரவிக்கு முகம் சிவந்து போனது. ஒரு கணம் அவன் முகத்தில் கனிவு போல ஏதோ ஒன்று வந்து காணாமல் போனது. உணர்ச்சிகளை துடைத்து விட்டது போல இருந்த அந்த முகத்தைப் பார்த்த போது பைரவிக்கு பேச்சு வரவில்லை.
“ஆனந்த்…”
“…….”
“அன்னைக்கு…”
“……….”
“ஆர்த்தி… வீட்டுக்கு… வந்திருந்தா…”
“மேலே சொல்லு” அதிகாரமாக வந்தது அவன் குரல்.
“அவ… அவளுக்கு… உங்களை… உங்களை…”
“என்னை…?” அவன் எடுத்துக் கொடுக்க, முகத்தை வேறு புறம் திருப்பியவள்,
” உங்களை அவ ரொம்ப நேசிக்கிறாளாம்” சொல்லி முடித்து விட்டாள் பைரவி.
“அதுக்கு என்னை என்ன பண்ணட்டாம்?” இதற்கு என்னவென்று பதில் சொல்வது?
“என்ன ஆனந்த்? இப்படி இரக்கமில்லாம பேசுறீங்க? அவளைப் பார்த்து இளக்காரமாக ஒரு சிரிப்பு சிரித்தவன்,
“இரக்கத்தைப் பத்தி நீங்க பேசுறீங்க! சிவனேன்னு இருந்தவனை காதலிக்கிறேன்னு சொல்லி பின்னால சுத்தி இழுத்து விட்டுட்டு சொல்லாமக் கொள்ளாம ஓடி வந்த நீங்க, இரக்கத்தைப் பத்தி பேசுறீங்க? பேசுங்க, பேசுங்க” அவன் ஆதங்கத்தில் மனம் கனத்தவள்,
“என்னோட இடத்தில இருந்து யோசிச்சு பாருங்க ஆனந்த். ஆர்த்தி என்னோட ஃப்ரெண்ட். மூணாம் மனுஷி கிடையாது. அவ எங்கிட்ட சண்டை போட்டிருந்தா என்னால எதிர்த்து நிற்க முடியும். கண்கலங்கி ‘எனக்கு ஆனந்தன் வேணும்‘ னு சொல்லும்போது நான் என்ன பண்ண முடியும்?”
இதை அவள் சொல்லி முடித்த போது அவனுக்கு வந்ததே ஒரு கோபம். சட்டென்று அவள் அருகில் வந்தவன், தன் ஒற்றைக் கையால் அவள் கழுத்தைப் பிடித்து,
“அவ வந்து அழுதா நீ உடனேயே என்னைத் தூக்கிக் குடுத்திருவியா? என்னடி நினைச்சுக்கிட்டு இருக்கே உன் மனசுல. நான் என்ன உன் வீட்டு நாய்க்குட்டியா?” கழுத்து லேசாக வலிக்க, அவன் கையைப் பிடித்தவள்…
“வலிக்குது ஆனந்த்“
“எனக்கு வலிச்சுதே! நீ பாட்டுக்கு தூக்கிப் போட்டுட்டு வந்தப்போ எனக்கு இதை விட அதிகமா வலிச்சுதே“
“நான் மட்டும் சந்தோஷமாகவா கிளம்பி வந்தேன்?”
“உன்னை யாரு கிளம்பச சொன்னா?”
“வேறை என்ன பண்ணச் சொல்லுறீங்க ஆனந்த்? இதே நிலமையில ஒரு மூணு வருஷத்துக்கு முன்னாடி நான் இருந்திருக்கேன். இந்த வலி எனக்குத் தெரியும் ஆனந்த். அதே வலியை இன்னொரு பொண்ணுக்கு என்னைக் குடுக்கச் சொல்லுறீங்களா?” கண்களில் நீர் கோர்க்க அவள் கேட்ட போது,
“அதுக்காக நீ என்னை தூக்கிக் குடுப்பியா? உனக்கு யாரு அந்த அதிகாரத்தை கொடுத்தது? சொல்லு, சொல்லு?” அவளை அவன் உலுக்கி எடுக்க…
“சந்தோஷமா தூக்கிக் குடுக்கலை ஆனந்த். செத்துப் போய்ட்டேன். அதுக்கப்புறம் தான் தூக்கிக் கொடுத்தேன் ஆனந்த்.” அவள் வாய்விட்டு கதறி அழ, அனைத்தையும் மறந்தவன்… அவள் கண்ணீரைக் காணப் பொறுக்காமல்,
“ஏய் பைரவி, எதுக்கு இப்ப அழுற?” அவன் சொல்லச் சொல்ல அவள் கதறல் தீரவில்லை. அவளைத் தன் நெஞ்சோடு இழுத்து அணைத்தவன்…
“சொன்னாக் கேக்கணும். அழுறதை நிறுத்து, எனக்குக் கஷ்டமா இருக்குடா, ப்ளீஸ்“
“அவ கெஞ்சிக் கேட்டப்போ நான் என்ன பண்ண முடியும் ஆன்ந்த்? ஒரு பொண்ணோட கண்ணீர்ல நம்ம வாழ்க்கைய நாம தொடங்கலாமா?” ஏதோ அவனுக்குத் தான் அனைத்திற்கும் விடை தெரியும் என்பதைப் போல் அவள் கேட்க…
தன் கைவளைவில் நின்று கொண்டு, அண்ணார்ந்து தன் முகம் பார்த்து நியாயம் பேசும் இவளுக்கு தான் என்ன சொல்லிப் புரிய வைப்பது?
“அப்போ என்ன பண்ணலாம் பைரவி? இந்தப் பிரிவுதான் உன்னோட முடிவா?” அவன் கேட்ட மாத்திரத்தில் கண்கள் குளமாக, உதடு துடிக்க ஒரு கேவல் வெடித்தது அவளுக்கு. அவளையே பார்த்திருந்தவன், அதற்கு மேலும் அவள் பரிதவிப்பை பொறுக்க முடியாமல் அவளை இறுக்கி, துடிக்கும் அந்த இதழ்களை தனதாக்கிக் கொண்டான்.
முத்தம்… முதல் முத்தம்!
பைரவிக்கு முதலில் நடந்தது என்னவென்று புரியவில்லை. புரிந்த போது… தன் கைகளில் தானாய் வந்து விழுந்த சொர்க்கத்தை நழுவவிட மனமின்றி அசையாமல் நின்றிருந்தாள்.
பைரவிக்கு மட்டுமல்ல, ஆனந்துக்கும் அதுதான் முதல் முத்தம்!
தான் இத்தனை வருடங்களாக கட்டிக்காத்த கண்ணியம் காற்றில் பறக்க… அந்த ராஜ போதையில் திளைத்திருந்தான். மெதுவாக அவளை விடுவித்தவன், அவள் மூக்கில் தன் மூக்கை உரசியபடி, “ஃபர்ஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ் பைரவி, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ, அடுத்த வாட்டி இன்னும் இம்ப்ரூவ் பண்ணிக்கலாம் என்ன” சரசமாக சிரித்தபடி அவன் சொல்ல, அவன் கழுத்து வளைவில் முகம் புதைத்தாள் பைரவி. அவள் இடையை வளைத்தவன்,
“என்ன ட்ரெஸ் இது? நமக்கு இது சரிப்பட்டு வராது. சில, பல தேவைகளுக்கு புடவைதான் வசதி பைரவி. நாளைக்கு வரும்போது ஒரிஜினல் திருச்சி பொண்ணு மாதிரி புடவை கட்டிக்கிட்டு வரணும், சரியா?” அவன் ஆழ்ந்த குரலில் போதையாகப் பேசிக்கொண்டிருக்க, பைரவிக்கு ‘திருச்சி‘ என்ற வார்த்தை அவள் சொர்க்கத்தைத் தட்டிப் பறிக்க போதுமானதாக இருந்தது. சட்டென்று அவனிலிருந்து விடுபட்டவள் விலக, புருவங்கள் நெளிய அவளை ஆழ்ந்து பார்த்தான் ஆனந்தன். அவன் முகம் பார்க்க மறுத்து, இரண்டெட்டு வைத்து நடந்தவள் கை பிடித்து தடுத்தவன்,
“பைரவி, என்னாச்சு?” என்றான். அவள் அமைதி காக்க, அவன் பொறுமை கரைந்து கொண்டிருந்தது.
“பைரவி! என்னாச்சுன்னு கேட்டேன்” அவன் குரலில் சுருதி ஏறியது. அவள் மனதின் தவிப்பையெல்லாம் முகத்தில் காட்டியவள்,
“ஆனந்த், என்னால முடியல.”
“ஏன்? ஏன் முடியலை? இவ்வளவு நேரமும் நல்லாத்தானே இருந்தது? இப்போ திடீர்னு என்ன ஆச்சு?”
“ஆனந்த் ப்ளீஸ், புரிஞ்சுக்கோங்க.”
“எதைப் புரிஞ்சுக்கனும் பைரவி? யாரோ எதையோ வந்து உளறினா அதைப் பிடிச்சிக்கிட்டு நீ இங்க வந்து ஈசியா உக்காந்துட்ட. அங்க தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, சாதனான்னு அத்தனை பேரும் என் உயிரை எடுக்கிறாங்க. அவங்களுக்கெல்லாம் நான் என்ன பதில் சொல்றது. யோசிச்சுப் பாத்தியா? நீ பாட்டுக்கு கிளம்பி வந்துட்டே. நான் ரிசோர்ட்டை பாப்பனா? உன்னைப் பத்தி யோசிப்பனா? இல்லை இவங்க கேக்குற கேள்விக்கு பதில் சொல்வேனா? சரி விடு, இப்போ உன் பிரச்சினை என்ன அதைச் சொல்லு முதல்ல.”
அவன் சட்டமாக நிற்க திணறிப் போனாள் பைரவி.
“நீ இப்படி மௌனமா நிக்கறது எதுக்கும் முடிவில்லை பைரவி. உன் மனசுல என்ன இருக்கு. அதை தெளிவா சொல்லிடு. இன்னைக்கு இதைப் பத்தி பேசி நாம ஒரு முடிவுக்கு வரனும்.” அவள் முகத்தில் கலவரம் மட்டுமே இருந்தது. பரிதவித்துப் போன அந்த முகத்தைப் பார்த்தவன்…
“சரி, நீ எதுவும் பேசுறதா இல்லை. நான் கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இங்க ஒரு விஷயம் நடந்துச்சுதே…” அவன் சற்றே நிறுத்தி அவளை ஆழமாகப் பார்க்க, அதுவரை அவனையே பார்த்திருந்தவள் உதடு கடித்து தலை குனிந்தாள். முயன்று தன்னைக் கட்டுப்படுத்தியவன்,
“உன் இடத்தில இன்னொருத்தியை உன்னால கற்பனை பண்ண முடியுதா?” கண்களை இறுக மூடி தன் மறுப்பை அவள் தெரிவிக்க…
“என் இடத்துல இன்னொருத்…” முழுதாக அவன் முடிப்பதற்கு முன் பைரவியின் குரல் சீறிப்பாய்ந்து வந்தது.
“ஆனந்த்! என்ன பேசுறீங்கன்னு புரிஞ்சுதான் பேசுறீங்களா?”
“நான் என்ன தப்பா சொல்லிட்டேன். என்னை தாரை வார்த்து ஆர்த்திக்கு குடுத்துட்டே. உன் வீட்டுல உன்னை இப்படியே விட்டிருவாங்களா? இல்லையே. அதனால்தான் சொன்னேன்.”
“நீங்க இப்போ சொன்னது என்னைக்குமே நடக்காது“
“அப்போ என்ன பண்ணப்போறே? காருக்கு ஆனந்துன்னு பெயர் வெச்சு அதுக்கூட குடும்பம் நடத்தப்போறயா?”
அவள் தலை குனிந்து மௌனமாக இருக்க, அவள் அருகே வந்தவன்,
“இந்த ஜென்மத்தில உனக்கும் எனக்கும்தான் முடிச்சு போட்டிருக்கு. அதை யாராலையும் மாத்த முடியாது. மாத்தவும் விடமாட்டேன்.” அவள் ஷேர்ட் கொலரை விலக்கியவன், வாசுகி ஏற்கனவே போட்டிருந்த அந்த சங்கிலியை வெளியே தன் சுட்டு விரலால் இழுத்து…
“சரடு ஏற்கெனவே அம்மா போட்டுட்டாங்க. இதுல கூடிய சீக்கிரம் தாலியை நான் கோர்ப்பேன். அதுக்கு நீ சம்மதிச்சாலும் சரி, சம்மதிக்கலைன்னாலும் சரி. எனக்கு அதைப் பத்திக் கவலையே இல்லை. எனக்கு ஒன்னு வேணும்னா அதை எப்படி நடத்திக்கணும்னு எனக்குத் தெரியும் பைரவி.” அவள் விழி விரித்து அவனைப் பார்த்திருக்க… அவன் விரலிலிருந்த அந்த சங்கிலியை மேலும் இழுத்து அவளை தன்னருகே கொண்டு வந்தவன், அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
திகைத்துப் பார்த்தவளிடம் கண்ணடித்து விட்டு…
“உன்கிட்ட ஒன்னு சொல்லட்டுமா பைரவி?” என்னவென்று அவள் பார்க்க…
“ஐ லவ் யூ பைரவி!” தன் காதல் சொன்னான் ஆனந்தன்.
பைரவியின் ஆனந்த்!