aanandha bhairavi 24

aanandha bhairavi 24

ஆனந்த பைரவி 24

அந்த ஹாஸ்பிடல் வளாகத்திற்குள் நுழைந்தார்கள் அருந்ததியும், பைரவியும். கமலாக்கா சொன்ன தகவலில் திகிலடைந்த பைரவி பேச்சு மூச்சற்று நிற்க, அவளைப் பிடித்து உலுக்கினார் அருந்ததி

பைரவிபைரவி! என்னாச்சு? இங்கப்பாரு, அம்மாவைப் பாரு.”

மெதுவாக சுயநினைவை அடைந்தவளைப் பார்க்க அருந்ததிக்குப் பாவமாக இருந்தது. தன் நெருங்கிய தோழிக்கு இப்படி ஆனதில் மகள் நொருங்கிப் போயிருக்கிறாள் என்றுதான் அவர் நினைத்தார்.

கமலாவிற்கும் அதன் பிறகுதான் சூழ்நிலையின் வீரியம் புரிந்தது. தான் அவசரப்பட்டு அருந்ததி அக்கா முன்னிலையில் இதைச் சொல்லி இருக்கக் கூடாதோ என்று காலந் தாழ்ந்து யோசித்தார். ‘பாப்பாவை தனியாக அழைத்துச் சென்று சொல்லியிருக்க வேண்டுமோ!’, பலவாறு சிந்தனை ஓடியது.

இது எதையும் சிந்திக்கும் நிலையில் பைரவி இல்லை. அவள் எண்ணமெல்லாம் ஹாஸ்பிடலில் சீரியசாக இருக்கும் ஆர்த்தியிடமே இருந்தது. அவளுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று மனம் இடைவிடாது பிரார்த்திக்க ஆரம்பித்தது.

சட்டென்று அவள் முடிவெடுத்து ஹாஸ்பிடல் கிளம்ப, அருந்ததியும் துணைக்கு வருவதாக கூடச் சென்றார்.

ஹாஸ்பிடல் ரிசப்ஷனில் விசாரித்தபோது மூன்றாம் மாடியில் இருக்கும் ஸி யூ வைக் கை காட்டினார்கள். லிஃப்ட்டைப் பிடித்து அங்கே போக, அரவிந்தன் தலையெல்லாம் கலைந்து பார்க்கப் பரிதாபமாக நின்றிருந்தான். அதுவரை தைரியமாக வந்திருந்த பைரவிக்கு அதற்கு மேல் கால்கள் பின்னிக் கொண்டன.

இந்தக் குழப்பம் எதுவும் அருந்ததிக்கு இருக்கவில்லை. ஆர்த்தியின் குடும்பத்தினரை பெரிதாக அறிமுகம் இல்லாவிட்டாலும், இன்னார், இன்னார் என்று இனங்காணும் அளவிற்கு ஆட்களைத் தெரிந்திருந்தது.

நேராக அரவிந்தனிடம் சென்ற அருந்ததி

அரவிந்தன், என்னப்பா ஆச்சு? ஏன் ஆர்த்தி இப்படிப் பண்ணிக்கிட்டா? சேதி கேள்விப்பட்ட உடனே ஒரு கணம் ஆடிப் போயிருச்சுப்பா.” அவர் தன் பாட்டில் பேசிக் கொண்டு போக, என்ன பதில் சொல்வதென்று அரவிந்தனுக்குப் புரியவில்லை.

டாக்டர் என்னப்பா சொல்றாங்க?”

எல்லாத்தையும் வாஷ் பண்ணிட்டாங்கம்மா, சரியான நேரத்துக்கு கொண்டு வந்துட்டோம். இல்லைன்னா பிரச்சினை ஆகியிருக்கும்.”

கடவுள் புண்ணியத்துல எந்தப் பிரச்சினையும் இல்லாம போயிடுச்சு. நல்லா பாத்துக்கப்பா.” இவர்கள் இத்தனையும் பேசிக் கொண்டிருக்க, பைரவி வாயே திறக்கவில்லை. அரவிந்தன் அவளைத் திருப்பிப் பார்க்க, அதனைக் கவனித்த அருந்ததி,

இந்த விஷயத்தை கேள்விப் பட்டதிலிருந்து இப்படித்தான் பேயறைஞ்ச மாதிரி இருக்கா. நீ கொஞ்சம் சொல்லுப்பா, ஆர்த்திக்கு ஒன்னும் இல்லைன்னு.” அருந்ததி சொல்ல, பைரவியின் அருகில் வந்தவன்,

எதுக்கு பைரவி இங்க வந்த? சீக்கிரம் இங்க இருந்து கிளம்பு. நல்லவேளை, அம்மா இப்போதான் கான்டீனுக்கு போனாங்க. இந்தப் பொண்ணு பண்ணின முட்டாள்த்தனத்துக்கு உன் மேல கோபமா இருக்காங்க. நீ அவங்க கண்ணுல படாம சீக்கிரம் கிளம்புஅருந்ததிக்குக் கேட்காமல் அரவிந்தன் பைரவியை அங்கிருந்து கிளப்புவதிலேயே குறியாய் இருந்தான்.

ஆர்த்தி ஆபத்தான கட்டத்தை தாண்டும் வரை, ஒரு ருத்ர தாண்டவமே ஆடியிருந்தார் ஆர்த்தியின் அம்மா. ஆனந்தனுக்கும், ஆர்த்தியின் இந்த முடிவிற்கும் ஏதோ சம்பந்தம் இருப்பது அவருக்கு எப்படியோ பிடிபட்டு விட்டது. ஆடித் தீர்த்து விட்டார். அரவிந்தன் எவ்வளவு சொல்லியும் அவர் காது கொடுத்துக் கேட்கவில்லை.

தன் பெண் என்ற மட்டிலேயே அவர் நிற்க, அதற்கு மேல் அரவிந்தனும் விவாதம் பண்ணவில்லை. நிலமை இப்படி இருக்க இந்தப் பெண் எதற்கு இங்கு வந்திருக்கிறாள். தலை வேதனையாக இருந்தது அரவிந்தனுக்கு

அவன் அவ்வளவு முயற்சி எடுத்தும், கடவுள் கருணை வைக்கவில்லை. காளி போல முறைத்துக் கொண்டு வந்தார் ஆர்த்தியின் அம்மா!

**–**–**–**–**–**–**

நிலைமை கைமீறிப் போவது போல தோணவே கொஞ்சம் பயந்து போனார் கமலா. பாட்டியும் இன்னும் ரூமை விட்டு வெளியே வராததால், அவரைத் தொந்தரவு செய்ய மனமின்றி அவரே ஆனந்தனை அழைத்தார்.

ஆனந்தனும், சந்திரனும் போன வேலை நிறைவு பெறவே, வீட்டிற்கு கிளம்ப காரில் ஏறும் போது கமலாவின் அழைப்பு வந்தது. ஃபோனைப் பார்த்தவன் ஆச்சரியத்துடன் அழைப்பை ஏற்றான்.

சொல்லுங்கம்மா.”

தம்பி, இந்த ஆர்த்திப் பொண்ணு லூசு மாதிரி தற்கொலை செஞ்சுக்கிட்டாளாம்.”

என்னம்மா சொல்லுறீங்க?”

அவ கிடக்கிறா தம்பி, ஹாஸ்பிடல்ல சேத்திருக்காங்களாம். நம்ம பாப்பா இப்போ அங்க கிளம்பி போயிருக்கு தம்பி.”

என்னம்மா சொல்லுறீங்க? பைரவி எதுக்கு அங்கே போனா?”

அதாவது பரவாயில்லை தம்பி. கூடவே அருந்ததி அக்காவும் போயிருக்காங்க. எனக்கு என்னமோ நல்லதா படலை. நீங்க சீக்கிரம் அங்க போங்க தம்பி.” ஹாஸ்பிடல் பெயரை அவர் சொல்ல, சந்திரனுக்கும் நிலைமையை விபரித்தவன், காரை ஹாஸ்பிடல் நோக்கித் திருப்பினான்.

அந்த black Audi ஹாஸ்பிடலுக்குள் நுழைவதற்கும், அருந்தியும், பைரவியும் வெளியே வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது. அவர்கள் முகத்தைப் பார்த்த போதே தெரிந்தது, உள்ளே விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்திருக்கின்றன என்று. காரைப் பார்த்தவுடன் இருவரும் வந்து ஏறிக்கொள்ள, மௌனமாகவே வீடு வந்து சேர்ந்தார்கள்.

தாத்தாவும், பாட்டியும் சோஃபாவில் அமர்ந்திருக்க, வாசுகியும், ராஜகோபாலும் வீடு திரும்பி இருந்தார்கள். கமலா எல்லோருக்கும் விஷயத்தை சொல்லி இருந்தார். யாருக்கும் பேசும் தைரியம் இருக்கவில்லை. அமைதியாகவே இருந்தார்கள்

இவர்கள் நால்வரும் காரை பார்க் பண்ணிவிட்டு உள்ளே நுழைந்ததும், தன்னருகில் பைரவியை இழுத்த அருந்ததி, அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார். அந்த இடமே ஸ்தம்பித்துப் போனது!

அருந்ததி!” சந்திரனின் குரல் கர்ச்சித்தது. இந்த மனிதனுக்கு இத்தனை சத்தமாக பேசத் தெரியுமா? என்று எல்லோரும் வாய் பிளந்து பார்த்திருந்தார்கள்.

இத்தனை வயசுக்கு மேல அம்மா வீட்டுக்கு, வாழாவெட்டி என்ற பேரோடு போகும் ஆசை இருந்தால் எம் பொண்ணு மேல இன்னொரு தடவை கை வை.” 

அருந்ததி விட்ட அறையில் பக்கத்தில் இருந்த சோஃபாவில் விழுந்த பைரவி, கன்னத்தைப் பிடித்தபடி நிலை குலைந்திருக்க, ஆனந்தன் கை முஷ்டிகளை இறுக்கி தன்னைக் கட்டுப் பாட்டிற்குள் வைத்திருந்தான். யாரும் எதுவும் பேசவில்லை. சிந்திய வார்த்தைகளை அள்ள முடியாது என்று மௌனமாக இருந்தார்கள்.

உங்க பொண்ணு என்ன பண்ணி இருக்கா தெரியுமா?”

என்ன பண்ணினா? தன் மனசுக்கு பிடிச்சவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா. அது தப்பா?”

அப்போ உங்களுக்கு எல்லாம் தெரியுமா?”

ஆமா, எல்லாம் தெரியும்.”

அப்ப, நான் தான் கேணச்சியா?”

ஒரு அப்பாவா நான் குடுத்த தோழமையை, ஒரு அம்மாவா நீ குடுக்கலை. எங்கிட்ட ஈசியா எல்லாத்தையும் பகிர்ந்துக்க முடிஞ்ச எம் பொண்ணாலே, உங்கிட்ட அதை பகிர்ந்துக்க முடியலைன்னா அது உன்னோட தப்பு.”

ஆமாங்க, எல்லாம் என்னோட தப்புத்தான். வயசுக்கு வந்த பொண்ணு பிடிவாதமா ஒரு கிராமத்துல போய் இருக்கப் போறேன்னு சொன்னப்போ, இப்போ விட்ட அறையை அப்போ விட்டிருந்தா எல்லாம் சரியா இருந்திருக்கும். என்னோட தப்புத்தாங்க, என்னோட தப்புத்தான்.” அவர் குரல் கலங்க, என்ன பேசுவதென்று யாருக்கும் புரியவில்லை.

அத்தை, பைரவி மேல எந்தத் தப்பும் இல்லை. தப்பெல்லாம் என் மேலதான்ஆனந்தன் சொல்ல,

மாப்பிள்ளை, நான் உங்களை தப்பாச் சொல்லலை மாப்பிள்ளை. என் நிலைமையிலிருந்து யோசிச்சுப் பாருங்க. ஒன்னே ஒன்னுன்னு நான் பொத்திப் பொத்தி வளத்தது, இன்னைக்கு எனக்குத் தெரியாம எவ்வளவு வேலை பண்ணி இருக்கு!”

உங்கிட்ட சொல்லாதது தப்புத்தான். ஒத்துக்கிறேன் அருந்ததி. சொல்லி இருந்தா என்ன பண்ணியிருப்பே? சம்மதிச்சிருப்பயா?” சந்திரன் கேட்க, அடுத்த நிமிடம் அமிலமாக வந்தது, அருந்ததியின் பதில்.

நிச்சயமா மாட்டேன். இந்தக் கல்யாணத்தை நடக்க விட்டிருக்கவே மாட்டேன்.” ஆனந்தன் விழிகளை இறுக மூடி அந்த வார்த்தைகளை ஜீரணம் பண்ணினான். அங்கிருந்த அத்தனை பேரின் முகமும் கசங்கிப் போனது.

அருந்ததி, என்ன நடந்ததுன்னு உனக்குத் தெரியாது. தப்பெல்லாம் அந்த ஆர்த்தி மேல தாம்மா.” பாட்டி இடையில் குறுக்கிட,

அவங்க அப்படிச் சொல்லல்லையே பெரியம்மா. அவங்க பொண்ணு வாழ்க்கையை எம்பொண்ணு தட்டிப் பறிச்சுக்கிட்டான்னுதானே சொன்னாங்க

அடிங்என் வாய்ல நல்லா வந்திரும். அப்படி வேற சொல்லுறாளா அந்த ராங்கிக்காரி. ஆனந்தா! எடுடா காரை, இந்தப் பூஞ்சோலைக்காரி யாருன்னு அவளுக்கு நான் காட்டுறேன்பாட்டி ஆத்திரத்தில் ஆர்ப்பரிக்க

எதுக்கு பெரியம்மா? அவ எம் பொண்ணுக்கு இன்னும் நாலு சாபம் விடுறதுக்கா?”

என்ன? என்ன சொல்லுற அருந்ததி நீ? சாபம் விட்டாளா?” பாட்டி கேட்டதுதான் தாமதம், அருந்ததி கதறி அழ ஆரம்பித்து விட்டார்.

எம் பொண்ணு கழுத்துல இருக்கிற தாலியோட மஞ்சள் கூட இன்னும் காயல்லை. அந்தத் தாலி நிலைக்கா…” அதற்கு மேல் அருந்ததியும் சொல்லவில்லை. அங்கே இருந்த யாரும் அவரைச் சொல்ல விடவும் இல்லை. பதறிப் போனார்கள்

சொல்லும் போதே உங்களுக்குப் பதறுதே, பெத்த எனக்கு எப்படி இருக்கும் பெரியம்மா? இதுக்குத் தான் எம் பொண்ணுக்கு நான் ஆசை, ஆசையா கல்யாணம் பண்ணிக் குடுத்தனா?” வாசுகி ஓடி வந்து அருந்ததியை அணைத்துக் கொண்டார்.

அண்ணி! எம் பொண்ணோட வாழ்க்கை அண்ணி. அவளுக்கு ஒன்னுன்னா நாங்க ரெண்டு பேரும் வாழுறதுல அர்த்தமே இல்லை அண்ணி.” அருந்ததி தன் மன ஆற்றாமையை அழுது தீர்க்க, அவரை எப்படி சமாதானப் படுத்துவது என்று யாருக்கும் புரியவில்லை.

இத்தனை குழப்பமும் நடந்து கொண்டிருக்க, பைரவி எதுவும் பேசாமல் அப்படியே உட்கார்ந்திருந்தாள். பாட்டி அவளை ஜாடையாக ஆனந்தனிடம் காட்ட, அவள் அருகே வந்தவன், அவள் கை பிடித்து எழுப்பி தங்கள் ரூமிற்கு அழைத்துச் சென்றான்.

**–**–**–**–**–**

பைரவிபைரவி…!” அவள் முகத்தில் மென்மையாக அவன் தட்ட, எந்த பதிலும் இல்லை. அப்படியே உறைந்தபடி அமர்ந்திருந்தாள் பைரவி. அவள் முகத்தை கைகளில் ஏந்தியவன்,

பைரவி, இங்கப்பாரு பட்டு, ஏதாவது பேசுடி.” அவளிடமிருந்து எந்த ரியக்ஷனும் இல்லை. அவள் தோள்களைப் பிடித்து அவன் உலுக்க, அப்போது அசைந்தவள் அவன் முகத்தைப் பார்த்தாள்.

எதுக்கு பட்டு நீ அங்கெல்லாம் போனே. அட்லீஸ்ட் நான் வரும் வரைக்குமாவது வெயிட் பண்ணி இருக்கலாமே.”அவன் கேள்வி அவள் மூளையை சென்றடைந்த மாதிரி தெரியவில்லை.

ஆனந்த், ஆர்த்தியோட அம்மா என்னைப் பாத்து அப்படி சத்தம் போட்டாங்க. போறவங்க, வர்றவங்க எல்லாரும் திரும்பிப் பாத்தாங்கஅவள் சொல்ல, அவன் முகத்தில் அத்தனை வேதனை தெரிந்தது. ஆர்த்தியின் அம்மாவை நொறுக்கி விடலாம் போல் ஆத்திரம் வந்தது.

அவங்க சத்தம் போட்டது கூடப் பரவாயில்லை. என்னைப் பாத்து, நீ தாலி கட்டிக்கிட்டு சந்தோஷமா வாழுறதை காட்டிட்டுப் போக வந்தியா? அந்தத்தாலிஉனக்குநிநிலைக்காதுடி சொன்னாங்க ஆனந்த்.” கண்கள் குளமாக அவள் வார்த்தைக்கு தவித்த போது, அவளை இழுத்தணைத்தவன்,

அதெல்லாம் ஒன்னும் இல்லைடா. அவங்க சொன்னா நீ அதை அப்படியே நம்பிடுவியா? விட்டுத் தள்ளு பட்டு.”

ஆனந்த், அவங்க என் பக்கத்துல வந்து என் தாலியை பிடிச்சு இழுத்தாங்க…” உதடு பிதுங்க அவள் வெடித்தழுத போது, செய்வதறியாது மலைத்து நின்றான் ஆனந்தன். தன் மகள் மரணத்தைத் தொட்டு மீண்டிருப்பது அந்தப் பெண்ணை பித்துப் பிடிக்க வைத்திருப்பது ஆனந்தனுக்குப் புரிந்தது.

அம்மா அப்படியே மலைச்சுப் போய் நின்னுட்டாங்க. அரவிந்த் அண்ணாதான் அந்தம்மாவை பிடிச்சு தள்ளிவிட்டாங்க.” அவள் அழுதபடி கூறி முடிக்க, அவளை அணைத்து தலையில் முத்தம் வைத்தவன்,

அவங்க என்ன வேணும்னாலும் சொல்லட்டும் பட்டு. நீ எதையும் கண்டுக்காத என்ன. அவங்க பொண்ணு முட்டாள் மாதிரி பண்ணின காரியத்தினாலே, என்ன பண்ணுறோம்னு தெரியாம பண்ணி இருக்காங்க. புரியுதாடா.” 

அவள் மௌனமாக இருக்க, கதவு தட்டும் ஓசை கேட்டது. ஆனந்தன் போய்த் திறக்க, பாட்டி கையில் ப்ளேட்டோடு நின்றிருந்தார்

ஆனந்தா, பைரவியை சாப்பிடச் சொல்லு. சூடா இட்லி வெச்சிருக்கேன். நீயும் சாப்பிட்டுட்டு தூங்கு. காலையில பேசிக்கலாம்.” பாட்டி சொல்லிவிட்டுப் போக, பைரவியின் கையில் ப்ளேட்டைக் கொடுத்தான். அவளுக்கு உண்ணும் எண்ணம் இருப்பது போல் தோன்றவில்லை ஆனந்தனுக்கு

அவன் கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டிவிட, உண்டு முடித்தவள், அவன் மடியிலேயே தலை வைத்து உறங்கிப் போனாள். அவள் தலையை தடவிக் கொடுத்தபடி, தான் உண்ண மறந்து அவளையே பார்த்திருந்தான் ஆனந்தன்.

பைரவியின் ஆனந்த்!

 

 

 

error: Content is protected !!