Aanandha Bhairavi 7

Aanandha Bhairavi 7

ஆனந்த பைரவி

அத்தியாயம் 7

கொஞ்சம் தாமதமாகத்தான் எழுந்தாள் பைரவி!

பக்கத்து வீட்டில் ஒரு திருமணமாம். மாப்பிள்ளையின் அக்கா கமலாக்காக்கு அத்தனை வேண்டியவராம். போக வேண்டும் பாப்பா என்று சொல்லியிருந்தார்.

விடுமுறை நாள்… வீட்டில் இருக்கலாம் என்று பார்த்தால்… ஆனாலும் கமலாக்காவுக்காக போக வேண்டி இருந்தது. அவருக்கும் பைரவியோடு ஊர் சுற்றுவதில் கொள்ளைப் பிரியம்.

இரவு தூங்கும் போது வெகு நேரம் ஆகிவிட்டிருந்தது. தூக்கம் வராமல் புரண்டு படுத்தவளை எழுப்பியது ஃபோன். எடுத்துப் பார்த்த போது ‘லியம் அழைக்கிறான்’ என்றது. அழைப்பை ஏற்றவள்…

“ஹாய் லியம்” என்றாள்.

“ஹாய் மை ஏஞ்சல், ஹௌ ஆர் யூ?” சரளமான ஆங்கிலத்தில் தொடர்ந்தது உரையாடல்.

“நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கே?”

“ம்… நான் நல்லா இருக்கேன். என்ன வாய்ஸ் டல்லடிக்குது?”

“ஒன்னுமில்லையே… ஏன் கேக்குற?”

“ஸ்வீட் ஹார்ட்! நான் உன் கூட கொஞ்ச நாள் தான் பழகி இருக்கேன். இருந்தாலும் எனக்கு உன்னை ரொம்ப நல்லா தெரியும். என்னாச்சு சொல்லு.”

சற்று நெகிழ்ந்தவள்…

“ஆனந்துக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சு!”

“ஓ கே. அதுக்கு ஏன் வொரி பண்ற? எப்போ இருந்தாலும் தெரிய வேண்டியது தானே. என்ன சொல்லுறாரு உன்னோட ஹீரோ, என்னோட வில்லன்?”

“ஷ்… லியம். இப்படிப் பேசாதேன்னு ரொம்ப தடவை உங்கிட்ட சொல்லி இருக்கேன்.”

“சரி, விஷயத்துக்கு வா. என்ன சொன்னார் ஆனந்த்?”

“ரொம்ப கோபப்பட்டாங்க” சொல்லும் போதே குரல் தடுமாறியது பைரவிக்கு.

“வாட்! கிறுக்கனா அவன். பைரவியை ரிஜக்ட் பண்ணுறதுக்கு!”

“லியம்!” ஒற்றை வார்த்தையிலேயே அவனைக் கண்டித்தவள்…

ஆர்த்தியோடான நிச்சயதார்த்தம் பிற்பாடு நடந்தது என அனைத்தையும் சொல்லி முடித்தாள்.

அமைதியாக கேட்டிருந்தவன்…

“ஓ..! இவ்வளவு நடந்திருக்கா? அதால தான் இப்ப உன்னை வேண்டாங்கிறாரா?”

“ம்…”

“சரி விடு, என்னன்னு பாக்கலாம். ஆமா என்ன பண்ணுறாரு ஆனந்த்? ஐ மீன் ஃபோர் லிவிங்.”

“குற்றாலத்துல ரிசோர்ட் இருக்குதாம், பாட்டி சொன்னாங்க.”

“ஓஹ்..! நீ பாத்திருக்கயா?”

“ம்ஹூம்..” இடம் வலமாக தலை ஆட்டினாள்.

“என்ன பொண்ணு நீ! இந்நேரத்துக்கு சில பல ரொமான்ஸ் பண்ணி ஆனந்தை கைக்குள்ள போடாம. என் ஃபிரண்ட் அப்படீன்னு வெளியே சொல்லிராதே.”

“ச்சீ போடா..”

“ஓ கே டார்லிங். டோன்ட் வொரி, நல்லா தூங்கு. ஆனந்தை ஒரு கை பாத்துடலாம். ஓ கே பேபி, குட் நைட், ஸ்வீட் ட்ரீம்ஸ்” சொல்லி முடித்தான்.

**–**–**–**–**–**–**–**–**–**

அனைத்தையும் அசை போட்டபடி எழுந்தவள் காலைக் கடன்களை முடித்தாள்.

“பாப்பா, அம்மா இன்னைக்கு எண்ணெய் தேச்சு குளிக்க சொன்னாங்க.” கமலாக்கா ஞாபகப்படுத்த, சிரித்துக் கொண்டாள் பைரவி. இந்த அம்மாக்கு இன்னும் நான் பேபிதான்.

குளித்து முடித்து ஃபங்ஷனுக்கு போக ரெடியானாள்.

“மத்தியானம் விருந்துக்கு வரச் சொல்லி இருக்காங்க. அதனால இன்னைக்கு சமையல் வேலை இல்லை பாப்பா.”

“ம்.. சரிக்கா”

கப்போர்ட்டை ஆராய்ந்படி பதில் சொன்னவள்… பாசிப்பச்சை நிற பட்டுப் புடவையை எடுத்தாள். மெல்லிய ஜரிகை போடர். உடுத்திக் கொண்டவள்…

காதில் குடை ஜிமிக்கி! கைகளில் கொஞ்சம் தங்க வளையல்கள்… கழுத்தில் மெல்லியதாய் ஒரு அட்டிகை. தலை முடி கொஞ்சம் நீண்டிருந்தது. பின்னல் போட்டவள் கண்களுக்கு லேசாக மை தீட்டிக் கொண்டாள்.

“கமலாக்கா, பூ எங்க?”

“இதோ இருக்கு பாப்பா.” மலர்ந்தும் மலராத குண்டு மல்லிப் பூக்களை நெருக்கமாக கட்டியிருந்தார் கமலா.

“வெச்சு விடுங்கக்கா” கமலா பூவை வைத்துவிட, கண்ணாடியில் சரி பார்த்தவள்…

“நீங்க குளிச்சுட்டு ரெடி ஆகுங்க, நான் கொஞ்ச நேரம் நம்ம மல்லிகை பந்தல்கிட்ட உட்காந்திருக்கேன்”

“ம்… சரி பாப்பா” கமலா நகர… புத்தகம் ஒன்றை எடுத்தவள் அதில் ஆழ்ந்து போனாள்.

**–**–**–**–**–**–**–**–**

புத்தகத்தில் ஆழ்ந்திருந்த பைரவியைக் கலைத்தது கார்ச் சத்தம். நிமிர்ந்து பார்க்க…

கண்ணம்மா பாட்டி! மகிழ்ச்சி குப்பெனப் பொங்க,

“வாங்க பாட்டி, வாங்க வாங்க.” கூடவே… வாசுகி, சாதனா, ஐஷ்வர்யா.

குரல் அப்படியே தேய மௌனமானவள் அது நாகரிகம் இல்லை என்றுணர்ந்து ,

“வாங்க!” என்றாள் பொதுப்படையாக.

“என்னம்மா பைரவி! லீவு நாள் வீட்ல இருப்பேன்னு நாங்க வந்தா எங்க கிளம்பிட்ட?”

“எல்லாரும் உள்ள வாங்க பாட்டி, பக்கத்து வீட்ல ஒரு கல்யாணம் பாட்டி. அதான் போகலாம்னு..”

“ஓ! அப்படியா… எங்க கமலாவைக் காணோம்?”

“இப்பதான் குளிக்கப் போனாங்க பாட்டி.”

“சரி… நீ வந்து உட்காரும்மா”

“இருங்க பாட்டி ஜூஸ் கொண்டு வரேன்”

“அதெல்லாம் ஒன்னும் வேணாம். கமலா பாத்துப்பா. நீ வந்து உட்காரு” அமைதியாக உட்கார்ந்தாள் பைரவி.

மனதுக்குள் ஆயிரம் எண்ணங்கள். எதற்கு வந்திருக்கிறார்கள்? இந்தப் பெண் ஐஷ்வர்யா வேறு வந்திருக்கிறது!

“அப்புறம் பைரவி, என் மருமகளை உனக்கு முன்னாடியே தெரியும் இல்லையா? இவங்க என் பேத்திங்க. இது சாதனா, ஆனந்தனோட தங்கை” அழகாய்ப் புன்னகைத்தாள் அந்தப் பெண். அதுவே பைரவியிடமும் எதிரொலித்தது.

“இது ஐஷ்வர்யா, என் பொண்ணோட பொண்ணு”

அந்தப் பெண் வேண்டுமென்றே முகத்தை உர்ரென்று வைத்திருக்க…!

கொல்லென்று சிரித்தனர் எல்லோரும். பைரவி பேந்தப் பேந்த முழிக்க… சட்டென்று அவள் அருகில் வந்தமர்ந்தாள் சாதனா.

“அண்ணி! இந்த ஐஷூ உங்களைக் கலாய்க்கிறா. நீங்க கண்டுக்காதீங்க”

பைரவிக்கு ஒரு கணம் உலகம் தட்டாமாலை சுற்றியது!

என்ன?! என்ன சொல்கிறாள் இந்தப் பெண்!

என்னையா அண்ணி என்கிறாள்?!

அந்தப் பெண் நேற்றுத் தானே நான் ஆனந்தனை கட்டிக் கொள்ளப் போகிறேன் என்று சொன்னது. என்ன நடக்கிறது இங்கே? பைரவி முழிக்க…

“பைரவிம்மா! அவ ஏதோ தமாஷூக்கு அப்படி சொல்லி இருக்காடா, அப்படி எல்லாம் ஒன்னுமே இல்லை.”

பாட்டி விளக்கம் கொடுக்க, அதுவரை எல்லாவற்றையும் புன்னகையோடு மௌனமாகப் பார்த்திருந்த வாசுகி எழுந்து வந்து பைரவியின் மறு பக்கம் அமர்ந்து கொண்டார்.

அவள் கைகளை தன் கைகளில் எடுத்துக் கொண்டவர்…

“ஆனந்தனோட அம்மா நான் இப்போ சொல்றேன், என் வீட்டு மருமக நீதாம்மா. இனி அதை அந்த ஆனந்தனாலேயே மாத்த முடியாது.”

கண்களில் உறுதியோடு ஒவ்வொரு வார்த்தையாக அவர் அழுத்திச் சொல்ல பைரவியின் விழிகள் கார்கால மேகமாய் பொழிந்தது.

தன் கழுத்தில் இருந்த அந்தக் கனமான நீண்ட சங்கிலியைக் கழட்டியவர் அதை பைரவியின் கழுத்தில் போட்டு விட்டு…

“சரடு நான் போட்டுட்டேன், கூடிய சீக்கிரம் அதுல என் பையன் தாலியை கோர்ப்பான்.”

உணர்ச்சி பொங்கக் கூறியவர் பைரவியின் கண்களைத் துடைத்து விட்டு அவளை கட்டி அணைத்துக் கொண்டார்.

பார்த்திருந்த அனைவருக்குமே நெஞ்சு நெகிழ… பாட்டி தன் சேலைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

“அச்சச்சோ! கண் மை எல்லாம் கலங்குது பாருங்க.”

அக்கறையாய் ஐஷூ சொல்ல தன்னிலை மீண்ட பைரவி அவளைப் பார்த்து புன்னகைத்தாள் அழுகையினூடே.

“ம்… பாத்தீங்களா அத்தை, உங்க மருமக இப்போதான் என்னைப் பார்த்து சிரிக்கிறாங்க. நேத்து என்னை வெட்டவா இல்லை குத்தவான்னு பார்த்தாங்க.” ஐஷூ அங்கலாய்க்க…

“நீ பேசுன பேச்சுக்கு என் மருமகள் அதோட உன்னை விட்டாளேன்னு சந்தோஷப்படு.” இது வாசுகி.

“போச்சுடா! குடும்பம் ஒன்னு சேந்துட்டாங்கப்பா… ஒன்னு சேந்துட்டாங்க! ஐஷூ புலம்ப…

அங்கே மீண்டும் சிரிப்புச் சத்தம்…!

**–**–**–**–**–**–**–**–**

மண்டபத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பைரவிக்கு யாரையும் தெரியாத போதும் கமலாக்காவுக்கு முக்கால்வாசி பேரைத் தெரிந்திருந்தது.

ஆச்சர்யப்பட்டுப் போனாள் பைரவி!

“என்னக்கா, ஊர்ல இருக்கிற அத்தனை பேரையும் தெரியுது உங்களுக்கு. மாப்பிள்ளை வீடு பொண்ணு வீடுன்னு வெளுத்து வாங்குறீங்க”

“வேற என்ன பண்ண பாப்பா, வாழுறதுன்னு வந்துட்டோம். நாலு மனுஷங்களை தெரிய வேணாமா? எனக்கும் பொழுது போகனுமே பாப்பா”

” ம்… ம்…! நடத்துங்க நடத்துங்க.”

சிரித்துக் கொண்டே போன கமலா கல்யாண வீட்டாரோடு அவரும் ஒருவராகிப் போனார்.

எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் பைரவி.

மண்டபத்தில் திடீரென சலசலப்பு தோன்ற… திரும்பிப் பார்த்தாள் பைரவி.

ஆனந்த்…!

பட்டு வேட்டி சட்டையில் அத்தனை கம்பீரமாக நடந்து வந்து கொண்டிருந்தான். அந்த உடை அத்தனை பாந்தமாக பொருந்தி இருந்தது அவனுக்கு. மாப்பிள்ளை சடங்குகளூடே வணக்கம் வைக்க, சிரித்தபடியே பதில் வணக்கம் வைத்தவனை முன் வரிசையில் அமர வைத்தார்கள்.

பைரவி அமர்ந்திருந்த இடத்தில் இருந்து அவனைப் பார்க்க முடிந்தது.

எத்தனை கம்பீரம்! தறிகெட்ட மனதை அடக்க முடியாமல் அவனையே பார்த்திருந்தாள் பைரவி.

இது வரை பார்த்த பார்வையில் இல்லாத சொந்தம் இப்போது பார்த்த பார்வையில் இருந்தது.

வாசுகியின் வார்த்தைகள் காதில் ஒலித்தது பைரவிக்கு,

‘இனி ஆனந்தனே நினைத்தாலும் இதை மாற்ற முடியாது’

 

error: Content is protected !!