Aathiye anthamai – 27

Aathiye anthamai – 27

பீனிக்ஸ் பறவை

சரவணனுக்கு தன் மாமவின் குணம் நன்றாக தெரிந்தும் கூட ஆதியின் முகத்திற்கு நேராய் அவர் சொன்ன வார்த்தை அவனுக்குமே எரிச்சலை ஏற்படுத்தியது.

எல்லோரும் வாயடைத்து  அதிர்ச்சியில் உறைந்து நிற்க கனகவல்லி தன் கணவனை நோக்கி,

“மனிஷனாயா நீ… என்ன பேசனும்னு கொஞ்சமாச்சும் விவஸ்த்தை வேண்டாம்… செஞ்ச பாவத்துக்கெல்லாம் நம்ம இரண்டு பிள்ளைங்கல இழந்துட்டு நிக்கிறோமே… பத்தலயா… இன்னும் வேற பாவத்தை சேத்துக்கிட்டே போறியே” என்று கோபமாய் கடிந்து கொண்டார்.

“போடி அந்தாட… எல்லாம் இவங்க அம்மா… அந்த செல்வி எப்போ இந்த வீட்டில காலடி எடுத்து வைச்சாலோ… அப்போ பிடிச்சது சனி… இன்னும் நம்மல விடாம துரத்தது… இதுல இவ வேற” என்றவர் ஆதியை முறைத்து,

“என் கண் முன்னாடி நிக்காதே… வெளிய போயிடு” அக்ரோஷமாய் கத்தினார்.

இத்தனை நேரம் மௌனமாய் வேதனையில் ஆழ்ந்திருந்த ஆதி மெல்ல தன் உணர்வுகளை தேற்றி கொண்டவள், “முடியாது பெரியப்பா…
இது எங்க அப்பா வாழ்ந்த வீடு… நான் இங்கதான் இருப்பேன்” என்றாள் தீர்க்கமாக!

“என் தம்பி உனக்கு அப்பனே இல்லங்கிறேன்… இதுல என்னைய வேற பெரியப்பான்னு உறவு கொண்டாடிறீகளோ” என்றவர் முறைக்க,

“எங்க அப்பா சிவசங்கரன் இல்லன்னு நீங்க சொன்னா அது உண்மையாயிடுமா… நான் அவரோட மகதான்னு உங்ககிட்ட  நிருபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை… நல்லா கேட்டுக்கோங்க… திரும்பியும் என் பிறப்பை பத்தியும் எங்க அம்மாவை பத்தியும் தப்பா பேசாதீங்க” என்று கோபம் கலந்த தொனியில் எச்சரித்தாள்.

“அப்படிதான் சொல்லுவேன்… என்னடி பண்ணுவ?” எகத்தாளமாய் வேல்முருகன் கேட்க ஆதி முறுவலித்துவிட்டு,

“ரொம்ப சிம்பிள்… அந்த பேஃக்டிரி கட்டப் போற இடம் இல்ல… அதுஎன் குடும்ப சொத்து… என் அனுமதி இல்லாம நீங்க அந்த இடத்தை வித்திருக்கீங்கன்னு… கோர்ட்டில கேஸ் போட்டு பேஃக்டிரி கட்ட முடியாம ஸ்டே ஆர்டர் வாங்குவேன்… அப்புறம் அந்த பேஃக்டிரியோட  ஓனருக்கு நீங்கதான் பதில் சொல்லனும்… அவன் கேட்கிற கம்பன்ஸேஷனை நீங்க கொடுத்தாகனும்… அப்போ நான் யாரு… யாரோட மகன்னு சொல்லாமலே உங்களுக்கு புரியும்… என்ன பெரியப்பா… செய்யுட்டுமா?”என்று   அழுத்தமாய் அவள் கேட்டவிதத்தில் வேல்முருகன் அசந்து போனார்.

அடுத்த வார்த்தை பேசாமல் அவர் அந்த நொடியே சரவணனை கண்ணசைத்து அழைத்துவிட்டு விறுவிறுவென வெளியே சென்றார்.

சரவணன் அப்போது ஆதியை அழைத்து வரும் போது நடந்தவை எல்லாம் விரிவாக எடுத்துரைக்க வேல்முருகனும் அதிர்ச்சியானார்.

அவரால் கேட்டவற்றையும் எதையும் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

சரவணனை குழப்பமாய் பார்த்தவர்,

“ஏதோ பொம்பள புள்ளன்னு தப்பா எடை போட்டுட்டேன்… ஒண்ணு விடாம எல்லா விஷயத்தையும் விவரமா தெரிஞ்சிட்டுதான் வந்திருக்கா…அவளை சும்மா விட்டோம்… நம்ம கதை காலி… இப்போதைக்கு அவ இங்கேயே இருந்து தொலைக்கட்டும்… அதுக்குள்ள ஏதாச்சும் திட்டம் போட்டு அவ கதைய முடிச்சிடிறா சரவணா” என்று சொல்ல சரவணன் தடுமாறினான்.

பதில் எதுவும் சொல்ல முடியாமல் சரவணன் தயங்கி நிற்க,

“என்னடா… முழிக்கிற… எனக்கப்புறம் இந்த சொத்தை எல்லாம் நீயும் உங்க அண்ணனும் தானே ஆளப்போறீங்க… இந்த மாமனுக்காக நீ இதை செஞ்சுதான் தீரனும்… உன்னதான்டா நான் மலைப் போல நம்பிருக்கேன்” என்று வேல்முருகன் அழுத்தம் திருத்தமாய் சொல்லிவிட்டு வெளியேற சரவணன் முகத்தை துடைத்து கொண்டான்.

அவன் மனம் இதை ஏனோ ஏற்க மறுத்தது. ஆதி மீது அவனை அறியாமல் ஏற்பட்ட ஈர்ப்பு அவளை கொன்றுவிடும் தன் மாமனின் திட்டத்திற்கு  தயங்கியது.

அதே நேரம் வீட்டில் ஆதி வேல்முருகனிடம் பேசிய விதத்தையும் அதில் வெளிப்பட்ட தைரியத்தையும், அறிவையும் பார்த்து எல்லோருமே வியந்தனர்.

கனகவல்லி ஆதியை நோக்கி,

“நீ அப்படியே அம்மா சாயலா இருக்கலாம்… ஆனா உன் பேச்சும் தைரியமும் அப்படியே சிவசங்கரன் தம்பியை பார்த்த மாதிரி இருந்துச்சு” என்றார்.

“நிஜமாவா பெரியம்மா” என்று ஆச்சரியப்பட்ட ஆதியின் முகத்தில் தந்தையை பார்க்காத ஏக்கம் தெளிவாய் வெளிப்பட்டது.

ஆதி எல்லோரிடமும் ரொம்பவும் இயல்பாய் பேசி பழகினாள். உறவுகளோடு வாழ்ந்த அனுபவமே இல்லாத அவளுக்கு அந்த உணர்வு  புதுவிதமாய் இருந்தது. பிடித்தமாகவும் இருந்தது.

மனோரஞ்சிதத்திடம் தன் அப்பா அம்மாவின் கல்யாண போட்டோவை ஆசையுடன் வேண்டிப் பெற்றுக் கொண்டவள் அவளுக்கென்று கனகவல்லி ஒதுக்கி தந்த அறையில் தனிமையில் அந்த படத்தை பார்த்தபடி வெகுநேரம் கண்ணீர் வடித்தாள்.

வேல்முருகனின் வார்த்தைகள் அவள் மனதை அந்தளவுக்கு காயப்படுத்தியிருந்தது. தந்தையின் படத்தை ஏக்கமாய் தொட்டு தடவியவள்,

“நீங்க மட்டும் இப்போ இருந்திருந்தா இந்த மாதிரியான அவமானம் எனக்கு ஏற்பட்டிருக்குமா ப்பா?”என்று கேட்டு அந்த படத்தை மேலும் கண்ணீரால் நனைத்தாள்.

இதுவரையில் நாம் பார்த்த ஆதியின் துணிவு நம்மை வியக்க வைத்திருக்கிறது. ஆனால் அவள் இப்படி தளர்ந்து போவது வாசகர்களையும் சேர்த்து கலக்கமுறச் செய்யும் என்பதை யாம் அறிவோம்.

ஆனால் அவள் நெருப்பில் எரிந்து சாம்பலாகி மீண்டும் அந்த சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை.

இந்த கண்ணீரும், வேதனையும், அவமானங்களும் அவளை எரித்தாலும் அவள் பன்மடங்கு நம்பிக்கையோடு மீண்டும் உயிர்த்தெழுவாள் என்பதில் ஐயமில்லை.

வேல்முருகன் எதற்கும் ஆதியிடம் வம்பு வளர்க்காமல்  ஒதுங்கியே இருந்தார்.

வசந்தாவின் கணவன் மணிமாறனும்… மாமன் மீதுள்ள விசுவாசத்தால் ஆதியிடம் பேச தயங்கினான். சரவணன் மட்டும் மாமன் முன்னிலையில் ஒருமாதிரியும் அவர் சென்ற பிறகு வேறுமாதிரியும் நடந்து கொண்டான்.

மனோரஞ்சிதமோ தன் தம்பி மகளை ஒரு நொடியும் பிரியாமல் அவளை கண்ணுக்கு நிகராய் கவனித்து கொண்டார்.

அதோடு அந்த இருபத்தைந்து வருட கதையை முழுவதுமாய் ஆதியிடம் சொல்லி முடித்தார்.

செல்வி ஊரை விட்டு போனபிறகு அவளின் மீதான தவறான வதந்திகள் அதிகமாய் பரவியது. சங்கரனின் தந்தை சண்முகவேலன் சுயமாய் எந்த வேலையையும் செய்ய முடியாமல் ‘ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறோம்’ என்று வருந்தி வருந்தி காலத்தை கடத்தினார்.

மரணத்தை எதிர்பார்த்து வாழும் பெரும் கொடுமையான தண்டனையை அவர் அனுபவித்தார் என்றே சொல்ல வேண்டும்.

இதற்கிடையில் கனகவல்லியின் முதல் மகனோ காதல் தோல்வியில் விஷத்தை  குடித்து இறந்துவிட்டான். கடைசி மகனோ சரியான மூளைவளர்ச்சி இல்லாமல் ரொம்ப நாட்கள் பைத்தியமாக இருந்து போன வருடம் கிணற்றில் தவறி விழுந்து அவனும் இறந்துவிட்ட நிலையில் கனகவல்லி அப்போதுதான் செல்விக்கும், பரமுவுக்கும் தான் செய்த பாவங்களுக்கான தண்டனை இவை என்பதை  புரிந்து கொண்டிருந்தார்.

இவற்றை எல்லாம் போதாது என்று திருமணமாகி மூன்று வருடமாகியும் வசந்தாவிற்கு குழந்தை பாக்கியம் இல்லை. செல்விக்கு குழந்தை இல்லாமல் போய்விட வேண்டும் என மூற்காலத்தில்  தான் கொடுத்த சாபம்தான் தன் மகளுக்கே திரும்பி விட்டதென அவர் வருந்தி அழாதே நாளே இல்லை.

ஆனால் இது பற்றி எல்லாம் வேல்முருகன் கவலை கொள்வில்லை. அவர் தன் தவற்றை இம்மி அளவுக்கூட  உணரவில்லை. அவரை பதவி, பணத்தாசை பேய் போல ஆட்டிவித்து கொண்டிருந்தது.

இதையெல்லாம் கேட்டு தெரிந்து கொண்ட ஆதிக்கு பெரிய கேள்வி குறியாய் நின்றது அவள் தந்தையின்  மரணம். ஏதோ அவிழ்க்கபடாத முடிச்சி ஒன்று அவள் கண்ணுக்கு தெரியாமல் மறைந்திருக்கிறது என்று வரை அவள் மனம் கணித்து கொண்டது.

இந்நிலையில் விஷ்வா அன்று மாலையே பேருந்தில் ஆதித்தபுரத்து ஊர் எல்லையில் வந்து இறங்கினான்.

யாருமே தெரியாத ஊரில் தான் ஆதியை எங்கனம் தேடுவது என்று அவன் குழம்பியபடியே அந்த ஊர் எல்லைக்குள் பிரவேசித்தான்.

கருணாகரன் தன் மகனிடம் ஜேம்ஸ் மூலமாக சில விவரங்களை மட்டும் கேட்டறிந்து அனுப்பினார். இந்த சில விவரங்களோடு தன் தோளில் பேகை சுமந்து கொண்டு அவன் நடந்து வந்து கொண்டிருந்தான்.

அந்த நேரம் பார்த்து சங்கரி விஷ்வாவின் எதிரே நடந்து வந்து கொண்டிருக்க,

விஷ்வா அவளை வழிமறித்து,

“எக்ஸ் யூஸ் மீ… இங்க மிஸ்டர் வேல்முருகன் வீடு எங்க இருக்கு?” என்று கேட்டான்.

அவள் பதறியபடி,

“அச்சோ… வேல்முருகன் ஐயா இந்த ஊர்தலைவர்… கொஞ்சம் மரியாதையோட பேசுங்க” என்று உரைத்தாள்.

“நானும் மிஸ்டர்.வேல்முருகன்தானே சொன்னேன்”

“அதெல்லாம் இந்த ஊர்காரங்களுக்கு புரியாது… அதனால ஊர்தலைவருன்னு சொல்லுங்க” என்க, அவன் கடுப்பானான்.

“சரி… அவரோட வீடு”

“நேரா நடந்து போயிட்டே இருங்க… இருக்கிறதிலேயே பெரிய வீடு”என்றாள்.

“தேங்க்ஸ்” என்றவன் சொல்லிவிட்டு செல்ல பார்க்க சரவணன் அப்போது அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதை பார்த்துவிட்டு பைக்கை சங்கரி அருகாமையில் நிறுத்தினான்.

“என்ன சங்கரி ? யாரு இது ? ரோட்டில நின்னு பேசிற அளவுக்கு ரொம்ப தெரிஞ்சவங்களோ?!” என்று எகத்தாளமாய் வினவ,

“மன்னாங்கட்டி… உங்க வீட்டுக்கு வழி கேட்டாரு… நான் வழி சொன்னேன் அவ்வளவுதான்”என்று வெறுப்பாக சொல்லிவிட்டு அவனை திரும்பி கூட பார்க்காமல் முன்னேறி சென்றாள்.

சரவணன் அப்போது விஷ்வாவை ஏற இறங்க பார்த்து,

“வழி கேட்க… பொம்பள புள்ளதான் கிடைச்சுதோ?” என்று முறைக்க,

“எதிரே வந்தாங்க.. நான் வழி கேட்டேன்.. இது ஒரு தப்பா”என்று யதார்த்தமாய் பதிலளித்தான்.

“அது சரி… எங்க வீட்டில யாரை பார்க்க வந்தீங்க?”

“அங்க ஆதிபரமேஸ்வரின்னு” கொஞ்சம் தயங்கியடி விஷ்வா சொல்ல சரவணனின் முகம் கடுகடுவென மாறியது.

விஷ்வாவின் உயரமான தோற்றம், கட்டுடலான தேகம் மேற்கத்திய பாணியில் உடை மொழுமொழுவென்ற முகம் என இவையெல்லாவற்றையும் கூர்ந்து கவனித்தவனுக்கு பொறாமை தீ பரவியது.

அதோடு அவன் ஆதிக்கு எந்த வகையில் தெரிந்தவனோ என்ற சந்தேகத்தை மனதில் மறைத்து கொண்டவன்,

“அப்படி எல்லாம் யாரும் இல்ல”என்று பட்டென உரைத்தான்

“இல்ல..இங்கதான் வந்திருக்கனும்” என்று விஷ்வா தெளிவில்லாமல் உரைக்க,

“அப்படி யாராவது ஊருக்குள்ள வந்திருந்தா எனக்கு கண்டிப்பா தெரியாம இருக்காது… நீங்க தேடறது வீண்… வந்த வழியே கிளம்புங்க” என்று சரவணன் ஓரேயடியாய் மறுத்துட்டு பைக்கில் சென்று மறைந்தான்.

விஷ்வாவிற்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அப்படியே தயங்கி நின்றான்.

ஒரு பக்கம் சோர்வு, இன்னொரு பக்கம் குழப்பம் அவனை வாட்டி வதைத்தது. திரும்பி போய்விடலாமா என்று அவன் சிந்தித்த நொடியில் கோவிலின் மணியோசை ஒலிக்க அந்த சத்தம் ஏனோ அவனை போக வேண்டாமென தடுத்து நிறுத்தியது.

கோவிலில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு செல்லலாம் என்ற எண்ணம் வர மணியோசை வந்த திசைநோக்கி நடந்தான்.

அந்த கோபுரத்தின் மேல்புறத்தில் ஆதிபரமேஸ்வரி ஆலயம் என்று எழுதி இருக்க விஷ்வா அதனை பார்த்து திகைத்து,

“இந்த ஆதிபரமேஸ்வரிக்காச்சும் அந்த ஆதிபரமேஸ்வரி எங்கன்னு தெரிஞ்சிருக்குமா?”என்று கேள்வியோடு ஆலயத்திற்குள் நுழைந்தவன் களைப்பாய் தூணில் சாய்ந்தபடி அமர்ந்து கொண்டான்.

உடல் சோர்வை விட மனச்சோர்வு அதிகமாய் இருக்க தலையை சாய்த்தபடி கண்களை மூடி கொண்டான்.

அப்போது வசந்தா கோவில் குருக்களிடம், “அர்ச்சனை பண்ணுங்க”என்று பூஜை கூடையை நீட்டினாள்.

“யாரு பேருக்கு?”

“சாமி பேருக்கு பண்ணாலும் என் தங்கச்சி பேருக்கு பண்ணாலும் ஒன்னுதான்”என்றாள்.

“யாரு உம்ம தங்கச்சி?”

“இத்தனை வருஷம் கழிச்சு எங்க  சித்தப்பா மக ஆதிபரமேஸ்வரி  வந்திருக்காளே” என்று சந்தோஷமாய் உரைத்து கொண்டிருக்க,

விஷ்வாவிற்கும் அவள் சொன்ன வார்த்தைகள் காதில் விழுந்தது. அவன் முகம் பிரகாசமாக அந்த நொடியே எழுந்தவன் வசந்தாவின் அருகில் சென்று நின்றான்.

“ஆதியை உங்களுக்கு தெரியுமா?” என்றவன் ஆவல் ததும்ப கேட்க,

“ஆதியா?”என்று குழப்பமாய் கேட்டாள் வசந்தா.

“அதான் ஆதிபரமேஸ்வரி”

“ஆமா… அவ என் தங்கச்சிதான்… நீங்க ஏன் அவளை பத்தி கேட்கிறீங்க?”

“ஐ நோ ஹெர் வெரி வெல்”என்று அவன் வேகமாய் ஆங்கிலத்தில் உரைக்க வசந்தா புரியாமல் திகைத்தாள்.

உடனே விஷ்வா தன் தவறை உணர்ந்தவனாய்,

“சாரி… சின்ன வயசில் இருந்தே ஆதி… அதான் ஆதிபரமேஸ்வரியை நல்லா தெரியும்.. அவளை தேடிதான் நான் வந்திருக்கேன்” என்று விஷ்வா சொல்ல வசந்தா,

“அப்படியா… அவ வாசலில்தான் நிக்கிறா” என்று சொன்ன மறுகணமே விஷ்வா ஆலயத்தின் வாசலிற்கு விரைந்தான்.

வசந்தாவும் அவன் பின்னோடு நடந்து வந்து ஆதி நின்றிருந்த திசையை காண்பித்தாள்.

ஆதி மும்முரமாய் ஈஸ்வரனிடம் ஏதோ பேசி கொண்டிருக்க,

விஷ்வாவின் முகம் மீண்டும் சோர்வானது.

திரும்பி நின்றிருந்தவளோ சேலையில் இருந்தாளே. அதெப்படி ஆதியாய் இருக்க முடியும்.

நிச்சயமாக இது ஆதி இல்லை என்று எண்ணி கொண்டவனுக்கு ஏமாற்றமே மிச்சமானது.

error: Content is protected !!