Aathiye anthamai – 43

ஆதிபரமேஸ்வரி

செல்லம்மாவை பற்றி ஊருக்குள் பரவி இருந்த வதந்தி எல்லாம் முற்றிலும் மாறி இருந்தது. அவரின் துணிச்சலும் அவர் தன்னந்தனியாய் கடந்து வந்த பாதையும் ஆதித்தபுரம் மக்களை வியக்கச் செய்தது. துர்பாக்கியசாலி  மற்றும் பல அவப்பெயர்கள் செல்லம்மாவிற்கு அந்த ஊரில் இத்தனை வருடமாய் வலம் வந்த நிலையில்,

ஆதி தன் தாயின் மீதான அவப்பெயரை மாற்றி அந்த ஊரில் உள்ள  எல்லோருக்கும் செல்லம்மாவை ஒரு உதாரண பெண்மணியாய்  நிலைநிறுத்தியிருந்தாள்.

ஆதித்தபுரம் ஊரே செல்லம்மாவை பற்றியும் ஆதியை பற்றியும் பெருமையாய் பேசி கொண்டன.

******
ஆதிபரமேஸ்வரி கோவில் வாயில்.

மக்கள் எல்லோரும் தீவிரமான வாக்குவாதத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.

குடமுழக்கு திருவிழாவை நடத்துவது சாத்தியமா என்பதே எல்லோருடைய குழப்பமும் கவலையுமாக இருக்க,.ஆதி நடப்பதையெல்லாம் மௌனமாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்.

சிறிது நேரம் கழித்து கோவிலில் பூஜைகளும் அபிஷேகங்களும் வெகுவிமர்சையாய் நடைபெற, அப்போது மேளத் தாளங்களெல்லாம் காதினை செவிடாக்கும் அளவுக்கு முழங்க தொடங்கின.

கும்பாபிஷேகத்தை நடத்த ஆதிபரமேஸ்வரியே பிரதிஷ்டையாகி சம்மதம் தரவே எல்லோரும் அத்தனை ஆவலாய் காத்திருந்தனர்.

அங்கிருந்த மக்கள் எல்லோரின் முகத்தில் பெருத்த எதிர்பார்ப்பும் தவிப்பும் குடிகொண்டிருக்க,

கற்பூர தீபாரதனையை கருவறையில் காண்பித்தபடியே ஆதிபரமேஸ்வரியை குருக்கள் அழைக்க அவளே ஒரு கன்னிப்பெண்ணின் மீது வந்து குறி சொல்வாள் என்பது ஆதித்தபுரமக்களின் பல வருட ஆழமான நம்பிக்கை.

இந்த சடங்கு ரொம்பவும் முக்கியத்துவம் வாய்ந்த நேரங்களிலேயே நடக்கும்.  அதே நேரம் அத்தனை சுலபமாய் எல்லா நேரங்களிலும் எதிர்பார்த்தபடி  ஆதிபரமேஸ்வரி பிரசங்கம் ஆகவிடவும்மாட்டாள். 

அன்றும் எல்லோரின் காத்திருப்பும் நீண்டு கொண்டே போனது. எல்லோரும் ஏமாற்றத்தின் உச்சிக்கே சென்றுவிட்டனர். ஆதிபரமேஸ்வரி வருவாளா வரமாட்டாளா என்ற விவாதங்கள் போய் இனி வரமாட்டாள் என்று எல்லோரும் அவநம்பிக்கை கொள்ள,

அப்போது சங்கரி பயங்கர ஒலி எழுப்பி சத்தமிட சங்கரியின் தாய் வடிவு இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர் அப்படியே மிரண்டு நிற்க மக்கள் அனைவரும் சங்கரியை நோக்கி பார்வையை திருப்பினர்.

ஆதிபரமேஸ்வரியே அழைப்பை ஏற்று சங்கரியின் ரூபமாய் நிற்பதாய் எண்ணி எல்லோருமே ஆவேசமாய், “ஆத்தா…அம்மா” என்று வணங்கி,

அந்த ஊரே பக்திமயமாய் கையெடுத்து கும்பிட்டபடி நின்றது.

  எல்லோரின் மனநிலையையும் கவனித்தபடி ஆதி மெல்ல அந்த கூட்டத்திலிருந்து விலகி வர,

அப்போது  அன்னம்மாவும் அதிசியத்தபடி தன் கொம்பை ஊன்றி எழுந்து நின்று வணங்கி கொண்டிருந்தார். 

அதேநேரம் அன்னம்மாஆதியின் புறம் திரும்பி தன் கை அசைவால் ரொம்ப வருடத்திற்கு பிறகு இப்படி ஒரு அதிசயம் நிகழ்கிறது என்று தெரிவிக்க,

“ஓ… அப்படியா?!” என்று ஆச்சர்யமாய் ஒரு ‘ஓ’ போட்டாள் ஆதி.

ஆதியின் இந்த ஆச்சர்யமான பாவனைக்கு பிண்ணனியில் ஓர் சூட்சமம் ஒளிந்திருந்தது. அதை யார் கண்டறிய கூடும்?

சங்கரி தன் பாட்டுக்கு ஆக்ரோஷமாய் ஆடி கொண்டிருக்க அந்த இடத்தில் தாரை தப்பட்டை ஒலி ஓங்காரமாய் ஓலித்து அந்த ஊர்மக்களை பக்திபரவசத்தில் ஆழ்த்தியது.

சங்கரி வெகுநேரம் பேசாமல் எல்லோரையும் மிரட்டியபடி குரல் கொடுக்க,

அப்போது கோவில் குருக்கள் முன்னே வந்து தீபராதனையெல்லாம் காட்டி,

“நீதான் ஒரூ நல்ல வாக்கு சொல்லி இந்த ஊர்மக்களோட மனகுழப்பத்தை தீர்த்து வைக்கனும் தாயி” என்றார்.

“என்ன மனகுழப்பம்? சொல்லு” ஆங்காரமாய் அவள் மிரட்ட

“ஆத்தா! கோவில் கும்பாபிஷேகத்தை எப்போ நடத்தலாம்… சொல்லும்மா?!” என்று கேட்க சங்கரி தன் கண்களை உருட்டியபடி,

“நடத்தவே கூடாது… நடத்த விடமாட்டேன்” என்றாள்.

மக்கள் எல்லோரும் அதிர்ச்சியோடு நிற்க குருக்கள், “ஏன் ஆத்தா?” என்று கேட்க…

“முதல்ல நான் இருக்கிற இடத்தில கோவிலை கட்டி கும்பாபிஷேகம் நடத்துங்கடா” என்றாள்.

எல்லோருமே புரியாமல் நிற்க மீண்டும் அடுத்த கேள்வி எழுந்தது.

“என்ன ஆத்தா சொல்ற… எங்க இருக்க நீ…எங்க கோவில் கட்டனும்?” என்றார் குருக்கள்.

“நான் எங்க இருக்கன்னு அதுவே  தானே தெரியவரும்…  அந்த இடத்தில கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திற அதே நாள்ல இந்த கோவில்லயும் நடத்துங்கடா” என்று புரிந்தும் புரியாமலும் அவள் சொல்ல,

“என்ன ஆத்தா சொல்ற?” என்று குருக்கள் கேள்வி எழுப்ப சங்கரி பயங்கரமாய் ஒலி எழுப்பிவிட்டு  மயங்கினாள்.

மக்கள் எல்லோருமே ஒன்றும் விளங்காமல் குழம்பி கொண்டிருக்க,

சரவணன் நடந்தவற்றை எல்லாம் குழப்பமாய் பார்த்துவிட்டு ஆதியை சந்தேகத்தோடு பார்த்து கொண்டே நெருங்கி வந்தான்.

அப்போது ஊர்மக்கள் நடந்தேறிய நிகழ்வை பற்றி சலசலத்து கொண்டிருக்க,

ஊர்க்காரன் ஒருவன் கோவிலை நோக்கி ஓடி வந்து எல்லோரையும் பிரமிக்க வைக்கும் அந்த அதிசியத்தை உரைத்தான்.

“பேஃக்டிரிக்கு அஸ்திவாரம் தோண்டும் போது சாமி சிலை கிடைச்சிருக்காம்” என்று மூச்சி வாங்கியபடி சொல்ல மக்கள் எல்லோரும் வியப்பின் உச்சிக்கே சென்றனர். ஊர்மக்கள் அதிவிரைவாய் பேஃக்டிரி கட்டுமான நடக்கும் இடத்திற்கு விரைய,

அப்போது அன்னம்மா ஆதியிடம் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று கேட்க பதிலுரைக்காமல் அவளுமே ஸ்தம்பித்து போயிருந்தாள்.

திட்டம் தீட்டியது அவள்தான். ஆனால் இம்முறை அது இத்தனை சரியாய் எப்படி செயல்பட்டது என ஆதிக்கே புரியவில்லை!

மயங்கி விழுந்த சங்கரியும் அவள் அம்மாவும் மட்டும் அங்கே இருக்க அனைவரும் தொழிற்சாலை கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்த இடத்தை சூழ்ந்தனர்.

ஆச்சர்யம் ! அதிசயம் ! பிரமிப்பு!

இப்படி சொல்லி கொண்டே போகலாம்.

அந்த காட்சியை பார்த்து கொண்டிருந்த அனைவரும் அப்படியே சிலாகிக்க…

அப்படி என்னதான் இருந்தது அங்கே?

ஆதிபரமேஸ்வரி சிலை!

ஆம்! ஆதிபரமேஸ்வரிதான்.

ஒற்றை காலை மடித்தபடி மணல்கள் ஒட்டிய வண்ணம் ஆதிபரமேஸ்வரியின் சிலை அங்கே கிடைக்கபெற்றிருந்தது.

மக்கள் எல்லோரும் பக்தியின் மிகுதியால்,

“ஆதிபரமேஸ்வரி தாயே!” என்று தொடர்ந்து கோஷமிட அந்த இடமே அதிர்ந்து போனது. சிலிர்த்து போனது.

சொல்லிலடங்கா பக்திகடலில் மூழ்கி போனது.

காண கண்கள்கோடி வேண்டும் என்பார்களே! அந்த வாக்கியத்தை இங்கே சொன்னால் வெகுபொருத்தமாய் இருக்கும்.

அழகின் ரூபமாய் அதீத கம்பீரமாய் தீட்சண்யமாய் இருந்த ஆதிபரமேஸ்வேரி சிலையை காண நிச்சயம் கண்கள் கோடி வேண்டும் என்று தோன்றியது.

இந்த செய்தி மெல்ல அருகாமையில் உள்ள கிராமங்களில் பரவ அங்கே மக்களின் கூட்டம் பெருகி கொண்டே வர,

அந்த கணம் தொழிற்சாலை கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டது.

மக்கள் எல்லோரும் சங்கரியின் வாக்கு உண்மையிலேயே அருள் வாக்குதான் என்று நம்ப ஆரம்பித்தனர்.

அந்த இடத்தில்தான் கோவில்கட்ட வேண்டும் என்று மக்கள் எல்லாம் கூடி முடிவுக்கு வர, அந்த தொழிற்சாலை தலைமை பொறுப்பாளர்கள் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்தனர்.

நடப்பது இறைவனின் செயல் என்று எல்லோரும் நம்பிக்கொண்டிருக்க, ஆதிக்கும் அன்னம்மாவிற்கும் மட்டுமே நடந்த நிகழ்வின் சூட்சமம் தெரியும்.

அன்று ஆதித்தியவர்மன் நிறுவிய ஆதிபரமேஸ்வரி சிலை ஒர் அதிசய பஞ்சலோக கலவை!

அதாவது தங்கம், வெள்ளி, செம்பு, துத்தம், ஈயத்தின் கலவையால் செய்யப்படுவது. அதன் சரியான கலவையும் செய்முறையும் ஆதித்தியவர்மனின் பெரும் சூட்சமம்.

நம் கோவில்கள் பலவற்றில் பஞ்சலோக சிலைகள் நிர்மானிக்கப்பட்டுள்ளன.  ஆனால் இந்த சிலை ஆயிரம் வருட பழமையான அரிய பொக்கிஷம்!

அத்தனை பெரிய அழகிய நுணுக்கமான பஞ்சலோக சிலையின் மதிப்பை அந்த ஊர்மக்கள் அறிந்திருக்கவில்லை.

அது ஒரு சிறிய ஆலயம் என்பதால் யாருமே ஆதிபரமேஸ்வரி சிலையில் அத்தனை சிறப்பிருக்கும் என்று இதுவரை எண்ணியதில்லை.

அதுவும் அல்லாது ஆதித்தியவர்மன் படைத்த ஆதிபரமேஸ்வேரி சிலை பார்க்க கற்சிலை போலவே தோற்றமளிக்கும். அதுவும் அச்சிலையின் மற்றொரு சிறப்பம்சம்!

அத்தகைய பஞ்சலோக சிலைகளை நாம் வழிப்படுவதே,

அதாவது தரிசிப்பதே நமக்கு ஆக்கபூர்வமான சக்தியை அளிக்கவல்லது.

அங்கே நிற்கிறான் தமிழனும் அவன் அறிவியல் அறிவும்!

மற்றுமொரு சிறப்பு அத்தகைய பஞ்சலோக உலோகத்தை அணிவது கூட சிறப்பு மிகுந்த சக்தியை நமக்கு அளிக்கும் என்பதுதான்.

அன்று செல்வி அணிந்திருந்த அந்த டாலரும் அத்தகைய பஞ்சலோக கலவை. அதுதான் அவளின் மனோபலத்திற்கும் காரணகர்த்தா!

மனோகரன் அந்த ஆயிரம்  கால பழமையான பஞ்சலோக சிலையின் மதிப்பை அறிந்து கொண்டதுமே, அவன் அதை நம் நாட்டின் பொக்கிஷம் என்று பாராமல் அந்த சிலையை வியாபார நோக்கத்தோடு பார்த்திருக்கிறான்.

பல கோடி மதிப்பிலான அந்த சிலையை தன் சுயநலத்திற்காக வெளிநாட்டிற்கு கடத்த வேண்டும் என்று குரூரமாய் திட்டம் தீட்டினான். அதற்காக வேண்டி ஓர் போலி சிலையை உருவாக்கி கோவிலில் வைத்துவிட்டு உண்மையான ஆதிபரமேஸ்வேரி சிலையை கடத்தியிருக்கிறான்.

அதனை மக்கள் நடமாட்டம் இல்லாத தோப்பில் வெள்ளையப்பன் உதவியோடு  அவன் புதைத்திருக்க,

இந்த விஷயத்தை எப்படியோ அறிந்து கொண்ட அன்னம்மா இதை பற்றி சிவசங்கரனிடம் தெரிவித்திருக்கிறார்.

அன்று சிவசங்கரன் அவர்களின் சதியை கண்டறிய தோப்பிற்குள்  மனோகரனையும் வெள்ளையப்பனையும் பின்தொடர்ந்து செல்ல, அவர்கள் அதற்கு முன்னரே அந்த சிலையை புதைத்துவிட்டனர்.

ஆதிபரமேஸ்வரி சிலையை ஊரைவிட்டு வெளியே எடுத்து செல்லும் அவர்கள் எண்ணத்தை சிவசங்கரன் முறியடிக்க  முயற்சி செய்ய, மேலே நடந்தவை எல்லாம் நம் வாசகர்களுக்கு தெரிந்ததே !

இந்த விவரத்தை எல்லாம் அன்னம்மாவின் மூலமாக அறிந்து கொண்ட ஆதி,

தொல்பொருள்ஆய்வாளர் தமிழ்வேந்தனை வரவழைத்து கோவிலில் தற்போதுள்ள சிலை போலியானது என்பதை உறுதிபடுத்திக்கொண்டாள்.

உடனடியாய் அன்று இரவே அந்த சிலை எங்கே புதைப்பட்டிருக்கும் என்ற  கண்டறியும் ஆவலில் அவள் தோப்பிற்குள் சென்ற போதுதான் விஷ்வாவிற்கு அத்தகைய அசாம்பாவிதம் நேர்ந்தது.

ஊர்மக்களிடம் இதை சொல்லி தோப்பிற்குள் அந்த சிலையை தேட வைப்பதும் நம்ப வைப்பதும் அத்தனை சாத்தியமயான விஷயம் இல்லை. அதனால் பெரும் குழப்பங்கள் விளையலாம்.

அங்கே வேலை செய்தது ஆதியின் புத்திகூர்மை!

அவளை பொறுத்தவரை அந்த சிலை நிச்சயம் தொழிற்சாலை கட்டுமான வேலை நடக்கும் போது கிடைத்துவிடும்.

ஆதலால் அந்த தோப்பில் சிலை இருப்பதை மறைமுகமாக சங்கரி மூலமாய் தெரியப்படுத்தி, அங்கே கோவில் கட்ட வேண்டும் என்ற எண்ணத்தை ஊர்மக்கள் மனதில் விதைத்தாள்.

அப்போது தானாக அந்த பேஃக்டிரி கட்டுமானத்திற்கு மக்களிடையே எதிர்ப்பு வலுக்கும் என்ற அவளின் யோசனை சரியாகவே செயல்பட்டது.

ஆதி இது எல்லாவற்றையும் சிலை கிடைத்துவிடும் என்ற  குருட்டுநம்பிக்கையிலேயே செய்திருக்க,
அவளுக்கே ஆச்சர்யம் என்னவெனில்!

 சங்கரி அருள்வாக்கு சொன்ன மறுகணம்  கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த இடத்தில் ஆதிபரமேஸ்வரி பிரசங்கமானதுதான்.

யாருக்கு தெரியும்?

இதில் ஆதியின் கழுத்தில் தொங்கி கொண்டிருக்கும் டாலருக்கும் கூட பங்கு இருக்கிறதோ என்னவோ ?! அது அவளுக்கே தெரியாத ரகசியம்.

அவள் நினைத்தது எப்படி அப்படியே அரங்கேறியது என்று!

சில நாட்கள் கழித்து…

ஆதித்தபுர மக்கள் எல்லோரும் அந்த தோப்பில் ரசாயன தொழிற்சாலை வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க,

சரவணன் அந்த தொழிற்சாலை நிறுவனரிடம் அந்த நிலங்களை தங்களுக்கே கொடுத்துவிட வேண்டினான். அதற்காக தரப்பட்ட பணத்தையும் நஷ்டத்தையும் அளிப்பதாகவும் உரைத்தான். ஆனால் அந்த நிறுவனர் அதற்கு சம்மதிக்க மறுத்தார்.

இதற்கு பிறகு நடந்தவை மீண்டும் ஆதியின் கைவசம்!

அவள் தன் புத்திகூர்மையோடு தன் பேனா கூர்மையையும் சேர்த்து கொண்டாள். 

பழமை வாய்ந்த ஆதிபரமேஸ்வரி சிலை ஆதித்தபுரத்தில் கிடைத்திருப்பதாக அவள் எழுதிய கட்டுரை மக்கள் மத்தியில் பிரபாலமானது.

எல்லோரையும் மெய்சிலர்க்கும்படி செய்தது.

அதே நேரம் தமிழகரசும்  தொல்பொருள்ஆராய்ச்சியாளர்கள் மூலமாக அந்த சிலையினை பற்றிய ஆய்வை வெளியிட்டது.

அதாவது அந்த சிலை ஆயிரம் காலம் பழமை வாய்ந்தது என்று அறிவிக்க, அந்த சிலையை காண தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் இருந்து மக்கள் ஆதித்தபுரத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர்.

இந்த நிகழ்வு பரபரப்பான செய்தியாய்  தமிழக எல்லையை தாண்டியும் பரவிக் கொண்டிருக்க,

இத்தனைக்கு பிறகும் அங்கே  தொழிற்சாலை கட்ட முடியுமா என்ன?

கடைசியில் சரவணன் சொன்னதை போல பணத்தை பெற்று கொண்டு அந்த நிலத்தை ஆதித்தபுரத்திற்கே திருப்பி கொடுத்தனர்.

ஆதித்தபுரமும் ஆதிபரமேஸ்வரி சிலையும் எங்கும் பிரபலமாகிவிட அங்கே கோவில் எழுப்புவதற்கான செலவை பல செல்வந்தர்கள் தாமே  முன்வந்து வழங்கினர்.

அன்று ஆதித்தியவர்மன் ஆதிபரமேஸ்வரிக்கு கம்பீரமான கோவில் ஒன்றை நிர்மானிக்க  வேண்டுமென அவன் கண்ட கனவு அயிரம் காலத்திற்கு பின் இன்று நிறைவேறப் போகிறது.

அன்று சங்கரி சொன்ன அருள்வாக்கு அந்த அம்மன் ஆதிபரமேஸ்வரியே சொன்ன வாக்கு என்று  மக்கள் இன்னும் பேசி பேசி வியக்கின்றனர்.

ஆம்! அது ஆதிபரமேஸ்வரியின் வாக்குதான்!

ஆதி என்னும் ஆதிபரமேஸ்வரியின் வாக்கு!

error: Content is protected !!