aathiye anthamai – 6
aathiye anthamai – 6
பாவத்தின் நிழல்
ஆதியை பார்த்தபடியே சரவணன் ஸ்தம்பித்து நிற்க, அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் எல்லோருமே ஆச்சரியப்பட்டு போயினர்.
சற்று முன்பு பெரும் களேபரமே செய்து கொண்டிருந்தவனா இப்படி ஆதியை பார்த்து அமைதியே ரூபமாக நிற்கிறானென்று.
அமுதா ஆதியிடம், “என்ன ஆதி ? அவன் உன்னை எப்படி வைச்சுக்கண்ணு வாங்காம பார்க்கிறான்” என்று சொல்லி எள்ளிநகைக்க,
அவள் கோபம் பொங்க, “ஹெலோ மிஸ்டர்” என்று அவன் முகத்தின் முன் தன் விரல்களால் சொடுக்கினாள்.
அவன் தன்னிலை உணர்ந்து தலையை கோதியபடி, “உங்க பேரா ஆதி ?” என்று குழப்பமுற கேட்க,
கொஞ்ச நேரம் முன்பு மரியாதையில்லாமல் பேசிவிட்டு இப்போது இவன் எப்படி மொத்தமாய்
ஆதியை பார்த்து தலைகீழாய் மாறிவிட்டானே என ஹரீஷும் அமுதாவும் ஒருவரைப் பார்த்து ஒருவர் வியந்து கொண்டனர்.
ஆதி இறுக்கமான பார்வையோடு,
“ஆமாம்… உங்களுக்கு என்ன வேணும் ?… ஏன் இந்த மாதிரி தேவையில்லாத சீன் க்ரீயேட் பண்ணிட்டு இருக்கீங்க ?” என்றவள் அவனை நோக்கி வினவ,
அவள் கேட்பவற்றிற்கு பதில் தராமல் , “ஆமாம்… உங்க சொந்த ஊர் எது ?” என்று கேட்டான்.
அவன் எதற்கு இப்படிக் கேட்கிறான் என்று புரியாமல் ஆதி புருவத்தை சுருக்கியபடி,
” நீங்க முதல யாரு ?” என்று கேள்வி எழுப்பினாள்.
அவன் அவளைப் பார்த்து புன்னகையித்தபடி,
“நான் சரவணன்… என் சொந்த ஊர் ஆதித்தபுரம்” என்று சொல்லியவன் அவனின் இந்தப் பதிலுக்கு அவளின் முகத்தில் ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்று உற்று நோக்கினான்.
அவளோ ரொம்பவும் இயல்பாக,
“ஓ… அந்த கெம்மிக்கல் பாஃக்டிரி விஷயமா ?!” என்று கேட்டாள்.
அவன் அப்போதைக்கு அதைப் பற்றி கவலை கொள்ளாமல்,
“நான் உன் கிட்ட கொஞ்சம் தனியா பேசனும்” என்றான் அவளை ரொம்பவும் தெரிந்தவன் போல.
ஆதி திகைத்து நிற்க, அந்தச் சமயம் பார்த்து உள்ளே நுழைந்த கருணாகரன் நடந்த களேபரங்களை பார்வையிலேயே கணித்து விட்டார்.
அவர் உடனடியாய், “எல்லோரும் அவங்க அவங்க வேலையை போய் பாருங்க” என்க, அடுத்த நொடியே எல்லோரும் அங்கிருந்த அகன்றனர்.
ஆதி யோசனையோடு அங்கேயே நிற்க, சரவணனோ அவளை விழுங்கிவிடுவது போல் அத்தனை கூர்மையாய் பார்த்து கொண்டிருந்தான்.
கருணாகரனோ அப்போது ஆதியை நோக்கி, “உனக்கு மட்டும் ஸ்பெஷலா சொல்லனுமா ? நீயும் உன் கேபினுக்கு போ” என்றார் அதிகார தொனியில்!
“இல்ல அங்கிள் இவர் என்கிட்ட பேசனும்னு” என்றவள் தயங்கி சொல்லும் போதே,
சரவணன் இடைபுகுந்து, “ஆமாம் பேசனும்” என்றான் அழுத்தமாக!
கருணாகரன் அவனை பார்த்து, “உங்களுக்கு என்ன பேசனும்னாலும் என் கிட்ட பேசுங்க தம்பி… நான்தான் இந்த பத்திரிக்கையோட எடிட்டர்”என்றவர் சமிஞ்சையாலயே ஆதியை செல்ல சொல்ல, அவள் குழுப்பத்தோடு அங்கிருந்து அகன்றாள்.
சரவணம் ஆதியின் மீது பதித்த பார்வையைக் கண நேரம் கூட அகற்றாமல் பார்க்க,
கருணாகரன் அவன் தோளை தட்டி தன் அறைக்கு அவனை அழைத்துச் சென்றார்.
ஆதி தன் அறைக்குள் நுழைந்து இருக்கையில் அமர்ந்தபடி அந்த இளைஞனை பற்றி யோசிக்கத் தொடங்கினாள். அவனின் பேச்சும் தன்னை அவன் பார்த்த பார்வையிலும் ஏதோ காரணம் இருப்பது போல் தோன்றிற்று அவளுக்கு.
ஆனால் இந்த யோசனை சில நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. பின்னர் அவற்றை மறந்து அவள் தன் வேலைகளில் ஆழ்ந்துவிட, அப்போது கருணாகரன் அவளை அறைக்கு வரச் சொன்னதாக தகவல் வந்தது.
ஆதியும் சென்று கருணாகரனை பார்க்க, அவர் முகத்தில் கோபம் தெறித்துக் கொண்டு இருந்தது.
அந்த வார பாரதி இதழைத் தூக்கி டேபிள் மீது போட்டவர், “என்ன பண்ணி வைச்சிருக்க ஆதி?” என்று கேட்டு கனலாய் பார்த்தார்.
“என்னாச்சு அங்கிள்?” என்றவள் புரியாமல் கேட்க,
“இவ்வளவு பெரிய முடிவு எடுக்கிறதுக்கு முன்னாடி என்னை கேட்டிருக்க வேணாமா?” என்று சினத்தோடு கேட்கவும் அவள் அதிர்ச்சியோடு மௌன நிலையில் நின்றாள்.
ஆனால் அவர் தொடர்ந்து,
“இந்த மேட்டரை இந்த வாரமே பப்ளீஷ் பண்ண வேண்டிய அவசியம் என்ன ?” என்று வினவ அவள் அமைதியான பார்வையோடு,
“நான் உங்ககிட்ட இதை பத்தி சொல்ல வந்தேன்… ஆனா நீங்கதான் கேட்கிற நிலைமையில் இல்ல… அதுவுமில்லாம எனக்கு இந்த விஷயம் ரொம்ப முக்கியமா பட்டுச்சு… அதான்” என்று தெளிவுப்படுத்த, அவர் கோபம் குறைந்தபாடில்லை.
“எது முக்கியம் முக்கியம் இல்லன்றதை நான் டிசைட் பண்ணனும்… அப்புறம் எதுக்கு நான் இங்க இருக்கேன் ?”
ஆதியால் எதுவும் பேச முடியவில்லை. கருணாகரனின் இந்த கோபம் அவளுக்கு புதிதாய் இருந்தது. எப்போதுமே அவள் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததே இல்லை. அப்படி இருக்கும் போது ஏன் இந்த விஷயத்தில் இத்தனை கோபம் என அவள் யோசித்திருக்க,
கருணாகரன் மீண்டும், “இனிமே எந்த காரணத்தை கொண்டும் நீ இந்த கெமிக்கல் பாஃக்டிரி விஷயத்தில தலையிட கூடாது” என்றார் அழுத்தம் திருத்தமாக !
“ஏன்?” அதிர்ச்சியோடு அவள் கேட்க,
“கேள்வி எல்லாம் கேட்காதே… தலையிட கூடாதுன்னா தலையிட கூடாது… என் வார்த்தைக்கு நீ மதிப்பு கொடுக்கிறவளா இருந்தா இந்த விஷயத்தை பத்தி இனிமே நீ பேசவே கூடாது… புரிஞ்சிதா ?” என்றவர் கட்டளையாய் உரைக்க அவள் மறுக்க முடியாமல், “ஒகே அங்கிள்” என்றாள்.
“சரி… நீ போய் வேலையை பாரு”என்றவர் சொல்ல, அதற்கு மேல் அவளும் எதுவும் பேசாமல் அவர் அறையை விட்டு வெளியேறினாள்.
ஆனால் அவள் மனம் அமைதியடையாமல் அது குறித்தே சிந்திக்கத் தொடங்கியது.
வேறெந்த வேலையிலும் அவள் மனம் ஈடுபட மறுக்க, கருணாகரனின் கோபத்திற்கும் சரவணன் தன்னை பார்த்த பார்வைக்கும் பின்னணியில் ஏதோ அழுத்தமான காரணமிருக்கிறது என்ற சந்தேகம் உண்டாகியிருந்தது.
இங்கே இவளின் மனநிலை இப்படி இருக்க, செல்லாம்மவின் மனநிலை மொத்தமாய் தன் அமைதியை இழந்திருந்தது.
கருணாகரன் ஆதி வெளியே போன பிறகு செல்லம்மாவிற்கு தன் பேசியிலிருந்து அழைக்கவும்,
அவர் அதற்காகக் காத்துக்கொண்டிருந்தவர் போல,
“சொல்லுங்கண்ணே பிரச்சனை எதுவுமில்லையே ?!” என்று வினவ,
“அதை ஏன் கேட்கிற… இங்கே ஒரே பிரச்சனை” என்றார்.
” என்னாச்சு ண்ணே?!” என்றவர் கேட்கும் போதே பதற்றமடைய,
“ஒருத்தன் ஆபிஸில் நுழைஞ்சி பயங்கர கலாட்டா பண்ணிட்டான்… அவனை சமாளிச்சு அனுப்பிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு… அதுவும் அவன் ஆதிகிட்ட பேசியே ஆகனும்னு ஓத்துக் கால்ல நின்னான்” என்று அவர் சொன்னதை கேட்க கேட்க செல்லம்மாவின் இதயதுடிப்பு அதிகரித்து கொண்டே போனது.
அவர் மௌனமாய் இருக்க,
“செல்லம்மா” என்றழைத்தார் கருணாகரன்.
அவர் தவிப்போடு, “ஏன் ண்ணே ? அவன் ஆதியை பத்தி தெரிஞ்சா பார்க்கனும்னு சொன்னான்” என்றதும்
“எனக்கு அப்படிதான் தோணுது செல்லம்மா… அவன் ஆதியை பார்த்த பார்வை இருக்கு இல்ல… அவன் நிச்சயம் தெரிஞ்சுக்கிட்டான்” என்றவர் சொல்லி முடிக்க, அவர் குழப்பமானார்.
“ஆதித்தபுரத்தில யாருக்குமே ஆதியை தெரிஞ்சிருக்க வாய்ப்பே இல்லையே” என்று சந்தேத்தை எழுப்ப,
“என்ன செல்லம்மா நீ ?… ஆதி அப்படியே உன் சாயல் ஆச்சே… உன்னை தெரிஞ்சவங்களுக்கு நிச்சயம் ஆதியை அடையாளம் கண்டுபிடிக்க முடியும்… ஆனா வந்தவனுக்கு ஒரு முப்பது வயசுக்குள்ளேதான் இருக்கும்…அதான் கொஞ்சம் குழப்பமா இருக்கு ?!” என்றார்
“அவன் பெயர் ஏதாவது சொன்னானா ?!”
“சரவணன்னு சொன்ன மாதிரி ஞாபகம்”
அவன் சிவசங்கரனின் அக்கா மனோரஞ்சிதத்தின் இரண்டாவது மகனாய் இருக்க கூடும் என்று மனதளவில் எண்ணிக் கொண்டு அமைதியாயிருக்க,
“என்ன செல்லம்மா ?…அமைதியாகிட்ட”
“யாருடைய சாயல் எல்லாம் என் பொண்ணு மேல படக்கூடாதுன்னு நான் நினைச்சேனோ அதெல்லாம் நடந்திடுமோன்னு பயமா இருக்குண்ணா”
“நடக்கனும்னு விதி இருந்தா அதையெல்லாம் நம்மால தடுக்க முடியாது… அதனால நீ தேவையில்லாம மனசை போட்டு குழப்பிக்காதே… இப்போதைக்கு நீ ஆதி கிட்ட இது விஷயமா எதுவும் பேசாதே” என்க,
அவரும் பெருமூச்செறிந்தபடி “ஹ்ம்ம்ம்” என்றார்.
“சரி நான் அப்புறம் பேசிறேன் மா” என்று கருணாகரன் அழைப்பைத் துண்டிக்க,
செல்லம்மாவின் மனதிற்குள் சொல்ல முடியாத கவலை அழுத்திக் கொண்டிருந்தது.
அதே சமயம் ஆதியின் மூளை ஆதித்திபுரத்தை பற்றியே சிந்தித்து கொண்டிருந்தது.
யார் நினைத்தாலும் இனி ஆதிக்கும் ஆதித்தபுரத்திற்கான உறவை அத்தனை சீக்கிரத்தில் முறித்துவிட முடியாது.
ஒரு வாரம் கழிந்து போக அந்தப் பிரச்சனையின் தாக்கம் குறைந்திருந்தது.
******
ஆனால் வேறொரு பிரச்சனை கருணாகரன் வீட்டில் அவதரித்திருந்தது.
விஷ்வா கோபமும் சோகமும் கலந்த முகபாவத்தோடே வீட்டை வளைய வந்து கொண்டிருந்தான்.
சாரதா அவனின் நடவடிக்கைகளை பார்த்து வருத்தம் கொண்டவளாய் அவனிடம் பேச அவன் அறைக்குள் சென்றாள்.
” விஷ்வா” என்று அழைக்கக் கொஞ்சம் வேண்டா வெறுப்பாய் அவளைப் பார்த்தான்.
“அம்மா மேல கோபமா” என்று கேட்டாள் சாரதா
“எனக்கு யாரு மேலயும் கோபம் இல்ல”
“அப்புறம் ஏன் இப்படி இருக்க ?”
” ஏன் ?… உங்களுக்கு தெரியுதா ?”
“மாலதி வீட்டில சம்மதிக்கலன்னா நாங்க என்னடா பண்ண முடியும்”
விஷ்வா தன் தாயின் முகத்தை பார்க்காமல் திரும்பி நின்று கொண்டான்.
“விஷ்வா… நீ இப்படி இருந்தா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா”
“என் கஷ்டத்துக்கு எல்லாம் நீங்கதான் காரணம்”
“என்னடா சொல் வர்ற ?” அவர் அதிர்ச்சியாக,
விஷ்வா தன் ஆதங்கத்தை வார்த்தைகளாகக் கொட்ட ஆரம்பித்தான்.
“பின்ன… ஜாதிகள் இல்லையடி பாப்பான்னு பாட்டு வேணா பாடலாம்… ஆனா நடைமுறை வாழ்கைகக்கு அதெல்லாம் உதவாது… என்ன ஜாதி என்ன மதம்னு கேட்டா சொல்ல வேண்டியதுதானே… அதுல என்ன கொள்கை வேண்டியிருக்கு… ஸ்கூல் காலேஜில் எல்லால் ஜாதியை எழுத வேண்டாம்னு சொன்ன போது அதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல… ஆனா இப்ப அது என் காதலுக்கு பிரச்சனையா வந்துருச்சு… அவரோட கொள்கையினால அவரு அப்படி என்ன சாதிச்சிட்டாரு ? கொஞ்சம் எனக்காக விட்டு கொடுத்து போயிருக்கலாமே”
“என்ன பேசிறன்னு புரிஞ்சுதான் பேசிறியா விஷ்வா… உங்க அப்பாவோட நேர்மை, பெயர், புகழ் இதெல்லாம் அவங்களுக்கு முக்கியமில்ல… உன் திறமை, படிப்பு, கண்ணியம் இதெல்லாம் அவங்களுக்கு முக்கியமா படல… அவங்க இதை எல்லாம் விட்டுட்டு ஜாதியை சொன்னாதான் பொண்ணு கொடுப்பேன்னா எப்படிறா ?!”
“அப்பாவுக்கு ஒரு கொள்கை மாதிரி அவங்களுக்கு ஒரு கொள்கை”
“அப்படின்னா அவங்க செஞ்சது சரின்னு சொல்ல வர்றியா விஷ்வா”
“யார் செஞ்சது சரி தப்புன்னு நான் சொல்ல வரல… நானும் மாலதியும் சேரக் கூடாதுன்னு விதி இருக்கும் போது யார சொல்லி என்ன ஆகப் போகுது”
“ஏன்டா இப்படி விரக்தியா பேசிற… இன்னொரு தடவை வேணா மாலதி வீட்டில” என்று சொல்லி முடிக்கும் முன்னர் விஷ்வா அவன் அம்மாவை பார்த்து கையெடுத்துக் கும்பிட்டேன்.
“இதுவரைக்கும் நீங்க எனக்கு செஞ்சதே போதும்… இனி ப்ளீஸ் நீங்க எதுவும் செய்ய வேண்டாம்” என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறினான்.
சாரதாவோ மகனின் வார்த்தைகளில் நிலைகுலைந்து போனார்.
*******
வாரங்கள் கடந்து செல்ல செல்லம்மாவின் மனம் லேசாய் அந்தப் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு நிம்மதி அடைந்திருந்தது.
ஆனால் அதைக் குலைக்கும் விதமாய் சரவணன் மனோரஞ்சிதத்துடன் அவள் வீடு தேடி வந்து நின்றான்.
இத்தனை வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அந்தப் பாவத்தின் நிழல் அவளை நாடி வந்தது.