Kattangal – 9

Kattangal – 9

 

 

கட்டங்கள் – 9

          மணி இரவு 11:30

               புது இடம்..  நித்யாவிற்கு தூக்கம் வரவில்லை.  மெத்தையில் புரண்டு படுத்தாள்.  சேலையிலிருந்து நைட் பண்ட ஷர்ட்டுக்கு  மாறி இருந்தாள் நித்யா.  மதுசூதனன் பால்கனியில் ஊஞ்சலில் அமர்ந்திருந்தான்.  “அவனிடம் பேசலமா? ” , என்று யோசித்தாள் நித்யா.  வேண்டாமென்று முடிவு எடுத்தவளாக  தூங்க முயற்சித்தாள்.  தன்னால் தான் வெளியே அமர்ந்திருக்கிறானோ என்ற குற்ற உணர்ச்சி அவளை தூங்கவிடாமல் தடுப்பதாக எண்ணினாள். 

          எழுந்து பால்கனிக்கு சென்றாள் நித்யா.  கண்மூடி தலையை அசைத்தவாறு அமர்ந்திருந்தான் மதுசூதனன். இந்த செய்கை , அவன் உறங்கவில்லை என்று அவளுக்கு உணர்த்தியது. ” தூங்கலியா…? ” , என்று படுக்கை அறையிலிருந்து பால்கனிக்கு  சென்று மெதுவாக கேட்டாள்  நித்யா.

           ” தூக்கத்தை கெடுப்பதற்கு தான் உன்னை என் தலையிலே கட்டிருக்காங்களே..” , என்று ஊஞ்சலில் சாய்ந்து கொண்டு கண் மூடிய படியே பதில் கூறினான் மதுசூதனன்.  

         “நித்யா  உனக்கு இதெல்லாம் தேவையா?” , என்று தனக்கு தானே மனதிற்குள் கேட்டுக்கொண்டு , ” பேசாம என்னை டிவோர்ஸ் பண்ணிருங்க.. நிம்மதியா தூங்கலாம் ” , என்று இலவச  ஆலோசனை   வழங்கினாள்  நித்யா.

           நித்யாவை  முறைத்துப் பார்த்தான் மதுசூதனன். ” ஏதோ ஆசை மனைவியை விவாகரத்து செய்ய சொல்வது போல் இவன் ஏன் கோபப்படுகிறான்?” , என்று  மனதில் நினைத்து கொண்டு  அவனை  கூர்ந்து பார்த்தாள் நித்யா.

 

       “பேசாம இங்கிருந்து போ…. என்னை கடுப்பேத்தாம படு…  ”  , என்று வார்த்தைகளை கடித்து துப்பிவிட்டு  ஊஞ்சலில் சாய்ந்து கொண்டான் மதுசூதனன்.

   தோளைக்  குலுக்கி கொண்டு அங்கிருந்து நகன்றாள் நித்யா.

       அவளின் செய்கை அவனுக்கு ஆத்திரம் அளித்தது. “நான் எவ்வளவு கோபப்பட்டாலும் , இவள் எப்படி  சிறிதும்  பயம் இல்லமால் , அழாமல் எந்தவித ஆர்ப்பாட்டமின்றி நடந்து கொள்கிறாள் ?”  , என்று சிந்தித்தான்  மதுசூதனன்.

 அழுத்தமாக  பேசும்  நித்யா செய்யும் சேட்டைகள் அவளுக்கு மட்டும் தானே தெரியும்!!!!!

“ஏய்… கொஞ்சம் நில்லு… ” , என்று மதுசூதனன் அவளை முறைத்து பார்த்த படி தோரணையாக  கூற,  “மரியாதை குடுத்தா  மரியாதை கிடைக்கும்…  இல்லைனா பின்னாடி வருத்தப்படுவீங்க… ” , என்று பதிலளித்து விட்டு வேகமாக நடந்து சென்று மெத்தையில் படுத்து கண்களை இறுக  மூடிக் கொண்டாள்.

“என்ன திமிர்..” , என்று முணுமுணுத்தான் மதுசூதனன்.

“ஓங்கின கையை இறக்கி இருக்க கூடாது.. ரெண்டு குடுத்திருக்கணும்.   திரும்ப அடிப்பாளாம்… அவ திரும்ப அடிக்கிற வரைக்கும் என் கை  என்ன லேப்டாப்ல  ப்ரோக்ராம் பண்ணிட்டு  இருக்குமா..?  நான் அடிச்சா  இவள் தாங்குவாளா..  மரியாதை  குடுத்து தன்மையா இருந்தா இவளுக்கு நக்கல்….”, என்று இருட்டில் புலம்பிக் கொண்டிருந்தான் மதுசூதனன்.

      எத்தனை சோகம் வந்தாலும் உணவும் தூக்கமும் இல்லாமல் நம்மால் எத்தனை நாள் வாழ முடியும்..?

     இதற்கு மதுசூதனன் மட்டும் என்ன விதிவிலக்கா?

தூக்கம் கண்களை வட்டமிட,  அறைக்குள் நுழைந்தான் மதுசூதனன்.

 

            நித்யாவின் மூச்சு சீராக  வெளி வர, “அடிப்பாவி எவ்வளவு பிரச்சனை இருக்கு.. பிடிக்காத மாப்பிள்ளை… புது இடம்.. நாளை என்ன ஆகுமுன்னு தெரியாது… எப்படி இப்படி நிம்மதியா தூங்கறா..” , என்று மதுசூதன் சிந்தித்தான்.

         மதுசூதனனும் கண்மூடி தூங்க முயற்சித்தான்.

தூங்குபவர்களை தொந்திரவு செய்யாமல் வெண்பாவை பார்க்க செல்வோம்.

மணி 12: 15

         வெண்பா அமர்ந்திருந்த முறையில் எந்த மாற்றமும்  இல்லை. முரளியின் அறையில்  சேலை  முந்தானையை சுருட்டியபடி கட்டிலின்   மீது  அமர்ந்திருந்தாள்.  அவளுக்கு சோர்வாக இருந்தது.

                  வீட்டில் அனைவரும் இருந்த மனநிலையில், யாரும் சமைக்கவில்லை உண்ணவும் இல்லை.  ஒருவாராக புலம்பலை தற்காலிகமாக நிறுத்தி விட்டு அவர்கள் அறையை நோக்கி சென்றனர் முரளியின் தாயும், தந்தையும். 

          முரளிக்கு தலை விண்விண்ணென்று வலித்தது. தான் செய்தது தவறு என்று  தெரிந்தாலும், “சூழ்நிலை  அவனுக்கு எதிராக இருந்ததால்  வேறு வழி இல்லை” , என்று தனக்கு தானே  சமாதானம் செய்து கொண்டான்.

                 தன் அறைக்குள் செல்ல, கட்டிலின் மீது  அமைதியாக  அமர்ந்திருந்த வெண்பாவை பார்த்தான்.  அவனுக்கு எங்கோ இடறியது. “இவளுக்கு என்ன ஆயிற்று..? இது வரை நான் இவளை இத்தனை அமைதியாகவும் சோகமாகவும் பார்த்ததே இல்லையே..!! ” என்று யோசித்தான் முரளி.

              முரளி அவள் அருகே செல்ல, வெண்பா தலை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. “வெண்பா கோபமா ? ” , என்று முரளி அமைதியாக வினவ,

வெண்பாவிடம் எந்த பதிலும் இல்லை. அவள் எதிரே அமர்ந்து கொண்டு ,  வெண்பாவின் முகத்தை  தன்  கையால் முரளி உயர்த்த அவன் கைகளில் இரண்டு சொட்டு கண்ணீர்.

              “வெண்பா அழறியா?” , என்று அமைதியாக அழுத்தமாக  கேட்டான் முரளி.  அந்த அழுத்தத்தில் , தன் மூச்சை உள் இழுத்து அழுகையை கட்டுப்படுத்த முயற்சித்தாள்  வெண்பா.

             “எதுக்கு இந்த அழுகை..? இந்த வீட்டுக்கு வந்த முதல் நாளே, நீ கண்ணீர் விடுற அளவுக்கு நான் மோசமா நடந்துக்கிட்டேனா ?”, என்று கோபமாக கேட்டான் முரளி.

               அவனை நிமிர்ந்து பார்க்க முயற்சித்தாள் வெண்பா. கண்ணீர் வழிந்த முகத்தை அவனிடம் காட்ட விரும்பாமல் முகத்தை வேறு பக்கம் திருப்பி கொண்டாள். அவளை ஆழமாக பார்த்தான் முரளி.

           இங்கு உன்னை தவிர எனக்கு வேறு ஆறுதல் இல்லை என்பதை உணர்த்தும் விதமாக, அவன் மார்பில் சரண் புகுந்தாள் வெண்பா. கண்ணீர் தாரை தாரையாக  வழிந்தது.  அவளுக்கு சற்று அவகாசம் கொடுத்து, சிறிது நேரம் கழித்து, அவள் தலையை ஆதரவாக தடவி, “என் வெண்பா அழ மாட்டா…”, என்று கூறினான் முரளி. அந்த குரலில் அன்பை  விட , கட்டளை இருப்பது போல் வெண்பாவிற்கு தோன்றியது.

              தன்னை நிதானப்படுத்திக் கொண்டு , அவனை  நிமிர்ந்து பார்த்தாள்  வெண்பா.

“நான் உன்னை ரொம்ப கஷ்டப்டுத்திறேனா முரளி..? “, என்று வெண்பா வினவ, “நான் அப்படி சொன்னேனா?” , என்று முரளி கேட்டான்.

          “இல்லை.. வீட்ல உன்னை அடிச்சிட்டாங்களே…  எல்லாரும் திட்டறாங்களே… “, என்று வெண்பா கூற, “வீட்ல இருந்து வெளிய அனுப்பலையே.. ” , என்று சிரித்த முகமாக முரளி கூறினான். ஆனால்  அந்த சிரிப்பு அவன் கண்களை எட்டவில்லை என்று வெண்பாவிற்கு புரியாமலில்லை.

              அவனை பார்த்துக் கொண்டே தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்த வெண்பாவின் முன் சுடக்கு போட்டு, ” ரொம்ப யோசிக்க வேண்டாம். இதெல்லாம் எதிர் பார்த்தது தானே….  அசோக் கொஞ்சம் விளையாட்டு பிள்ளை. வேலை கிடைச்சா பொறுப்பாகிருவான்…  சித்ரா  படிப்பு முடிச்சிட்டு வீட்ல தான் இருக்கா.. ரெண்டு பேருமே ரொம்ப பாசமா இருப்பாங்க.  அம்மா, அப்பாக்கு இன்னக்கி நாம் செய்த காரியத்துல அதிர்ச்சி.  ஆனால்  ரொம்ப நல்லவங்க.. நம்மளை ஏத்துப்பாங்க …” , என்று முரளி ஆதரவாக கூறினான்.

சில விஷயங்கள் வெண்பாவிற்கு தெரிந்தது என்றாலும் மீண்டும் சொன்னான் முரளி.

       “நீ ஏன் நம்ம காதலை வீட்ல சொல்லவே இல்லை..? ” , என்று வெண்பா கட்டிலில் சாய்ந்தபடி கேட்டாள்.

    “தம்பிக்கு வேலை கிடைக்கலை.., தங்கைக்கு இன்னும் கல்யாணம் ஆகலை…. அதுக்குள்ள நான் எப்படி சொல்ல முடியும்..?” , என்று முரளி நியாயம் கேட்டான்.

      “அப்புறம் ஏன் என்னை கல்யாணம் செய்துக்கிட்ட?” , என்று முகத்தை சுருக்கி கொண்டே வெண்பா வினவ, அவள் முகத்தின் மாற்றத்தை கவனிக்காமல், தன் பேச்சை தொடர்ந்தான் முரளி.

             “நீ தான் பிரச்சனைன்னு சொன்ன..  வேற கல்யாணம் ஏற்பாடு பன்றாங்க.. இன்னைக்கே கல்யாணம் செய்துக்கணும் இல்லைனா உயிரை விட்ருவன்னு சொன்ன… அது தான் யாரை பற்றியும் யோசிக்காமல் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..” , என்று முரளி தீவிரமாக பதில் அளிக்க , “அப்ப , என்னை விரும்பி , ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணிக்கலை? ” , என்று வெண்பா கண்களை சுருக்கி கொண்டு அவனை நேராக பார்த்து கேட்டாள்.

       “அட.. இது என் வெண்பா..  வெண்பா செம  form க்கு வந்தாச்சு போல..” , என்று சிரித்தபடி முரளி கேட்க , ஒரு கையை  இடுப்பில் வைத்து கொண்டு, “கேட்ட கேள்விக்கு பதில்..” , என்று தன் ஆள்காட்டி விரலை ஆட்டிக் கொண்டு அவன் பதிலுக்காக காத்திருந்தாள்.

        “பதில் தானே.. சொல்லிட்டா போச்சு.. ” , என்று முரளி நக்கலாக சிரிக்க, “ஏய் ஏன்டா சிரிக்கிற ?” , என்று வினவிய வெண்பாவின் முகம் வெட்கத்தில் சிவந்தது.

         அப்பொழுது கதவு தட்டும் ஓசை கேட்க, வெட்கத்தால் சிவந்திருந்த  வெண்பாவின் முகம் பயத்தால் சிறுத்தது.

        முரளி கதவை திறக்க, சித்ரா வெளியே நின்று கொண்டிருந்தாள்.

 

               “உள்ள வா சித்ரா.. ” , என்று கதவை பிடித்த படி முரளி கூற, “அண்ணா..  இந்தா வாழைப்பழம் , பிரட், பால் , பிஸ்கேட்ஸ்…  அண்ணிக்கு என்ன பிடிக்குமுன்னு தெரியல..  அவங்க ஒண்ணுமே சாப்பிடல..பசியோடு இருப்பாங்க.. எதாவது குடு… ” ,என்று கூறிவிட்டு  சித்ரா திரும்புகையில், “தேங்க்ஸ் சித்ரா..  நீங்க யாருமே சாப்பிடலியே.. ?” ,என்று அக்கறையாக கேட்டாள் வெண்பா.

               அவளை திரும்பி பார்த்து புன்னகைத்த சித்ரா, “நீங்க ரெஸ்ட் எடுங்க அண்ணி..  நான் பார்த்துகிறேன்.. குட் நைட்.. ” , என்று கூறிவிட்டு வெளியே சென்றாள் சித்ரா.

         கதவை தாளிட்டு வந்த முரளியிடம் , “சித்ரா என்னை விட சின்ன பொண்ணு… எவ்வளவு பொறுப்பா இருக்கா..? ” , என்று முரளிடம் ஆச்சரியமாக  கூற, முரளி புன்னகைத்து கொண்டான்.

         “எனக்கு சித்ராவை பிடிச்சிருக்கு.. “, என்று வெண்பா வெளிப்படையாக கூறினாள்.   இந்த சொல் முரளிக்கு நிம்மதியை கொடுத்தது.

        வெண்பா மேலும் ஏதேதோ பேசிக்கொண்டிருக்க , முரளி அவளை ஆழமாக பார்த்துக் கொண்டிருந்தான். முரளியிடம் பதில் இல்லாமல் போக,  அவனை நிமிர்ந்து பார்த்தாள் வெண்பா.

              முரளியின் பார்வை பல செய்தி  கூற, “முரளி, ஏன் அப்படி பாக்கிற ? ” , என்று முனங்களாக வெண்பா கேட்க , “ம்ம்….. ” , என்று கிறக்கமாக பதில் அளித்தான் முரளி… 

                இவர்களுக்கு தனிமை கொடுத்து நாம் மதுசூதனன் இல்லத்திற்கு பயணிப்போம்.

 

       விடிந்தும் விடியாத காலை பொழுது. மணி 5:30

                 மதுசூதனின் பால்கனியில்   ஏதோ ஒரு உருவம் தெரிகிறது.   அருகே சென்று பார்த்தால் நித்யா பண்ட் ஷர்ட்டோடு   யோகா செய்து கொண்டிருக்கிறாள்.

       இத்தனை கலவரத்திலும் யோகா செய்யும் நித்யாவை பார்த்து நமக்கு ஆச்சரியம் மேலோங்குகிறது.

                     மதுசூதனின் அருகே சென்றால், அவன் உறங்குவது போல் படுத்திருப்பது நமக்கு தெரிகிறது.  அவன் முகத்திலும் அதே எண்ணம் தான்.

           நித்யா  யோகா, தியானம்  முடித்து  விட்டு  ஊஞ்சலில் அமர்ந்து, “என் வாழ்க்கை எதை நோக்கி பயணிக்கிறது…? ”  , என்று தீவிரமாக சிந்தனையில் ஆழ்ந்தாள்

மணி 6:30

     எவ்வளவு நேரம் தான் தூங்காவது போல் பாசாங்கு செய்வது? எழுந்து பால்கனி சுவர் ஓரமாக சாய்ந்து நித்யாவை கவனித்தான். பல பெண்களை பார்த்திருந்தாலும் இவள் வித்யாசமானவள் என்று மதுசூதனனிற்கு  தோன்றியது.

    “எந்த கோட்டையை பிடிக்க இவ்வளவு தீவிர சிந்தனை ?” , என்ற மதுசூதனனின் குரல் நித்யாவை நிகழ் காலத்திற்கு அழைத்து வந்தது.

       ” கோட்டையை பிடிக்க இல்லை.. இந்த கோட்டையிலிருந்து தப்பிக்க வழி இருக்கான்னு பார்த்திட்டு இருக்கேன்..” , என்று நிதானமாக கூறினாள்  நித்யா.

       “என்ன கல்யாணம் , டிவோர்ஸ் இதெல்லாம் விளையாட்டா இருக்கா?    ஏற்கனவே நான் ஒரு மிடில் கிளாஸ் பொண்ண கல்யாணம் பண்ணிருக்கேன்ன்னு ஒரு அவமானம்… இதுல உன்னை வெளிய அனுப்பிச்சிட்டா என் கல்யாண வாழ்க்கை தோல்வின்னு  ஒரு அவமானம்

வேறயா….  எனக்கு தோல்விங்கறதே கிடையாது…. அதனால் உனக்கு பிடிச்சிருக்கோ பிடிக்கலையோ.., நீ இங்க தான் இருக்கனும்… ” , என்று மதுசூதனன் கறாராக கூறிவிட்டு குளிக்க சென்றான்.

        “அம்மா.., அப்பாவுக்கு விஷயம் தெரிய வராது… ” , என்று எண்ணம் நித்யாவிற்கு தோன்றினாலும் , “இது என்ன வாழ்க்கை…?” , என்று வெறுப்பாக இருந்தது.

           ” ஹாய்… அண்ணி…. ” , என்று குரலில் திரும்பி பார்த்தாள் நித்யா.

கீழே நின்று கொண்டிருந்தான் முகிலன்.

    “நீங்களும் சீக்கிரம் எழுந்திருச்சாச்சா..?” , என்று இன்முகமாக நித்யா வினவ,  “ஆமாம் அண்ணி … நம்ம 9:00 மணிக்கு மறுவீட்டுக்கு மண்டபம்  போகணும்…”, என்று கூறினான் முகிலன்.

           “சரி” , என்று தலை அசைத்து , அவள் அறைக்குள் உள்ளே செல்ல திரும்புகையில் , “அண்ணி… ” , என்றழைத்தான் முகிலன்.

      நித்யா என்ன என்பதை போல் பார்க்க, “அங்க இருக்கிற ரெட் கார் என்னோடது..  வெள்ளை கார் ப்ரோ கார்..  ” , என்று புன்னகையோடு கூறினான் முகிலன்.

      “இதை ஏன் என்னிடம் கூறுகிறான் ” , என்று நித்யா சிந்திக்க, “நான் எதுவும் வம்பு பண்ண மாட்டேன்…   ஒருவேளை  ப்ரோ எதாவது பிரச்சனை பண்ணா  நீங்க ஸ்டிக்கர் ஒட்டும் பொழுது மாத்தி ஒட்டிரக் கூடாதுனு சொன்னேன்.. ப்ரோ கார் பத்தி எனக்கு கவலை இல்லை.. அது உங்க பிரச்சனை… ” , என்று முகிலன் இவளுக்கு மட்டும்  கேட்கும் விதமாக கூறினான்..

         “அன்று இவன் தான் நம்மை கடந்து சென்றவனா ? “, என்ற சிந்தனை ஒரு நொடி தோன்றினாலும், சிறிதும்  தயக்கமின்றி…, “சொல்லிடீங்கள்ள தேங்க்ஸ்..   நான் பாத்துக்கிறேன்.. ” , என்று கண் சிமிட்டி சிரித்தாள் நித்யா. ” எனக்கு பிரெண்டாகிட்டா வண்டில ஸ்டிக்கர் ஒட்ட மாட்டேன்.” ,  என்று நித்யா கூடுதல் தகவல் கொடுக்க, “அப்படினா பிரெண்ட்ஸ்…. “, என்று கட்டை விரலை உயர்த்தி காட்டினான் முகிலன்.

 அவளும் கட்டை விரலை உயர்த்தி காட்டிவிட்டு தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.       

        சிறிதும்  தயக்கமின்றி பேசிய அண்ணியை அவனக்கு பிடித்திருந்தது.

       முகிலனின் குரல் கேட்டு, அவன் விழித்து விட்டான் என்றறிந்து, குளியலை முடித்து  விட்டு அவனிடம் சென்றான் மதுசூதனன்.

     “ஏண்டா இப்படி பண்ண..? ” , என்று முகிலனிடம் கோபமகா கேட்டான் மதுசூதனன்.
   ” நாம் பல செய்தோம்.., அதில்  இவன் எதை கேட்கிறான்… ” , என்று நினைத்து திருதிருவென்று முழித்தான் மதுசூதனன்.

 

                               கட்டங்கள் நீளும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!