AKD10

AKD10

அத்தியாயம் – 10
ஐநூறு வருடங்களுக்கு முன்:  
                    அந்த இரவு பொழுதில், இளவரசி தன்னை எல்லாவற்றிற்கும் தயார் செய்து இருந்தாலும், இனி தாய், தந்தையரை காண இயலுமா, இல்லை இங்கு என் நாட்டிற்கு திரும்ப முடியுமா என்ற கவலையில் சிறிது ஆழ்ந்து விட்டாள். அப்பொழுது சில பல மந்திரங்கள் அடங்கிய ஏடை, எடுத்துக் கொண்டு அங்கே வந்தார் துறவி.
                   துறவியிடம் தான் கேட்க நினைக்கும் கேள்வியை, இப்பொழுது கேட்க தொடங்கினாள் இளவரசி.
               “தங்களிடம் ஒன்று கேட்க வேண்டும், திரும்பவும் நான் இங்கே வர இயலுமா?” என்று கேட்டாள் இளவரசி.
                 “மன்னிக்க வேண்டும் இளவரசி! தாங்கள் வர வேண்டும் என்று விரும்பினால், கால சக்கரத்தை பற்றி அங்கே தெரிந்த ஒருவரால் மட்டுமே மீண்டும் உங்களை இங்கு அழைத்து வர முடியும்” என்று துறவி கூறவும் அவள் கண்களில் நீர் வழிந்தது.
                 “இப்பொழுது, தாங்கள் தைரியமாக இருக்க வேண்டிய கால கட்டம் இளவரசி. தங்களால் மட்டும் தான் இப்பொழுது, இந்த இக்கட்டில் இருந்து எல்லோரையும் காப்பாற்ற முடியும்” என்று துறவி இளவரசியிடம், சூழ்நிலையை எடுத்து உரைத்தார்.
                  தனக்கு இப்பொழுது இருக்கும் பொறுப்பை உணர்ந்து, அவள் தன்னை தயார்படுத்திக் கொண்டாள். அவள் தயார் நிலையில் இருப்பதை அறிந்து கொண்டு, துறவி அடுத்து செய்ய வேண்டியதை எல்லாம் செய்ய தொடங்கினார்.
                   அவளை மலர்களுக்கு இடையில் அமர வைத்துவிட்டு, அவளை சுற்றி மந்திர ஏடுகளை அடுக்கி வைத்தார். அதன் பின் அவளை மூச்சு பயிற்சி செய்ய வைத்து, அதன் பின் சஹாசனா செய்ய கூறினார்.
                 இளவரசி சஹாசனாவில் இருக்கும் பொழுது, துறவி மந்திரங்களை உச்சரிக்க தொடங்கினார். இறுதி மந்திரத்தை அவர் உச்சரித்து முடிக்கவும், இளவரசி அங்கு இல்லை. எல்லாம் முடித்து விட்டு, துறவி அந்த இடத்தில் இருந்து எழும் பொழுது அதிகாலை ஐந்து மணியானது.
                அந்த இடத்தில் அப்பொழுது, குதிரை ஒன்று வேகமாக வரும் சத்தம் கேட்கவும் துறவி சுதாரித்து எல்லாவற்றையும் எடுக்கும் முன்னர், அங்கே அந்த கருப்பு நிற குதிரையில் இருந்து ஆக்ரோஷத்துடன் இறங்கினான் சபாஹ் பாசில்.
              “என்ன துறவியாரே! இளவரசியை எங்கு ஒளித்து வைத்து இருக்குறீர்? என்னிடம் உண்மையை மறைக்காமல் கூறும், இல்லையேல் உம் தலை துண்டிக்கப்படும் இக்கணமே” என்று எச்சரிக்கை செய்தான் பாசில்.
             துறவிக்கு, அவனை பற்றி நன்றாக தெரியும். சபாஹ் என்றால், கொடூரமானவன், கொலை செய்ய கூட அஞ்சாதவன் என்று அர்த்தம். அதிலும் நினைத்ததை, அவன் அடையவில்லை என்றால் அவனை போல் ஒரு கோபகாரனை பார்த்து இருக்க மாட்டார்கள் யாரும்.
              இப்பொழுது, இளவரசி இருக்கும் இடத்தை பற்றி இவனிடம் சொல்லுவது அவ்வளவு உசிதம் அல்ல என்பதை அவர் அறிவார். ஆகையால், அவர் மனதிற்குள் ஒரு திட்டத்தை தீட்டி விட்டார். அதன் படி, அவனை ஒரு இக்கட்டில் மாட்டி விடுவது என்று முடிவு எடுத்து அதை செயலாற்ற விரும்பினார்.
            “நான் உண்மையை கூறி விடுகிறேன், இளவரசி கால சக்கரத்திற்குள் நுழைந்து அங்கு பத்திரமாக இருக்கிறார்” என்று துறவி கூறியதை கேட்டு, அவன் அதிர்ச்சி அடைந்தான்.
               அவன் முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள், கால சக்கர மந்திரம் தெரிந்தால் எங்கேயும் செல்லலாம், நாம் நினைக்கும் நேரத்தில், நினைக்கும் இடத்திற்கு என்று. இப்பொழுது இளவரசியை கால சக்கரத்திற்குள் சென்று தேடுவது, சரியா தவறா என்று தெரியவில்லை அவனுக்கு.
              ஏனெனில், எங்கேனும் மாட்டிக் கொள்ள கூட வாய்ப்பு இருக்கிறது என்பதையும் அவன் அறிவான். இப்பொழுது நாம் அங்கு செல்வதை விட, துறவியை அங்கு செல்ல வைக்க வேண்டும், அவரை அனுப்பி அழைத்து வர செய்ய வேண்டும் என்று தீர்மானித்தான்.
                  அவனின் எண்ணத்தை புரிந்து கொண்ட துறவியோ, மனதிற்குள் சிரித்துக் கொண்டார். அவனை சிக்க வைப்பது என்பதையும், அவர் முடிவு செய்து கொண்டார்.
                “நான் சொல்வதை கவனமாக கேளும், இளவரசியை தாங்களே சென்று போய் அழைத்து வாருங்கள் என்னிடம், இது என் கட்டளை” என்று மிடுக்காக கூறினான்.
                “மன்னிக்க வேண்டும்! என்னால் மந்திரத்தை உச்சரித்து ஒருவரை அனுப்ப முடியுமே தவிர, என்னால் அதில் செல்ல இயலாது. தங்களுக்கு இது தெரிந்து இருக்கும், தங்கள் முன்னோர்களிடம் இதை பற்றி வேணுமானால் தெரிந்து கொள்ளுங்கள்” என்று அவர் கூறவும் சற்று நிதானித்தான் பாசில்.
                  அவன் மாமா கூறியது போல், இப்பொழுது அவனால் ராஜ்யத்தை கை பற்ற முடியும். அது இப்பொழுது, எளிதும் கூட அவனுக்கு. ஆனால், ராஜ்ஜியம் அடைந்த பிறகு தன் பக்கத்தில் பட்டத்து ராணியாக இளவரசி மதியழகி இருந்தால் அல்லவா, அவனுக்கு பெருமை.
                  யோசித்து பார்த்தவன், இப்பொழுது கால சக்கரத்திற்குள் சென்று இளவரசியை கையோடு கூட்டி வருவது தான் சால சிறந்தது என்று முடிவுக்கு வந்து விட்டான். பின்னர் ஒரு ஓலையில், அவனின் மாமனுக்கு செய்தி சுருக்கமாக எழுதி, அதை அவன் குதிரை லாடத்தில் கட்டி, அதை அவன் கோட்டைக்கு செல்லுமாறு கட்டளையிட்டான்.
                 எஜமானனின் பேச்சை கேட்டு, அதுவும் விரைவாக ஓட தொடங்கியது. இங்கே பாசில், துறவி கூறிய இடத்தில் அமர்ந்து மூச்சு பயிற்சி செய்து முடித்து, சஹாசனாவில் படுத்து விட்டான். துறவி மந்திரத்தை உச்சரிக்க தொடங்கினார், அவர் உச்சரித்த மந்திரத்தை, ஆழ்மனதில் அவன் உள்வாங்கிக் கொண்டு தான் இருந்தான்.
                  சஹாசனாவில் இருக்கும் பொழுது ஆழ்மனதில் பேச்சுகளை உள்வாங்கிக் கொள்ள, சிறந்த பயிற்சி இருந்தால் மட்டுமே முடியும். தூக்கத்தில் கூட, விழிப்புடன் இருப்பவன் பாசில். ஆகையால் அவனுக்கு இது சாத்தியம், அதனால் எல்லா மந்திரமும் அவன் ஆழ்மனதில் ரகசியமாக பதிவாகிக் கொண்டு இருந்தது.
                 அதை துறவியும் அறிந்து இருந்ததால், என்ன மந்திரம் உச்சரிக்க வேண்டுமோ அதை தான் உச்சரித்தார். சில மணி நேரங்கள் கடந்து, அவன் அவ்விடத்தில் இல்லை. துறவி புன்னகைத்துக் கொண்டார், இனி ஆண்டவன் செயல் என்று எண்ணி அவர் அடுத்த வேலையை பார்க்க சென்றார்.
                மிடார நாட்டு அரண்மனையில், அரசருக்கு வைத்தியம் அளித்து அவர் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தார். அவரை காண யாரையும் உள்ளே அனுப்பவில்லை, குமாரிதேவி. அரசி மங்கை மட்டுமே, அவர் அருகில் இருக்கும் படி பார்த்துக் கொண்டார்.
               கூடவே, இரு பணி பெண்களும், வெளியே காவலுக்கு நான்கு வீரர்களும், அறையை சுற்றி யாரும் உள்ளே நுழையாதவாறு, மேலும் சில வீரர்களையும் நியமித்து இருந்தார். இப்பொழுது அரசர் சார்பில், அவர் தான் பொறுப்பேற்று இருந்தார்.
               அப்பொழுது அங்கே வந்த பாசிலின் மாமா அலிகானை, அவர் எதிர்பார்க்கவில்லை. அவரை பற்றி தெரியும், சூழ்ச்சி செய்யும் வித்தகர் என்ற பெயர் உண்டு அவருக்கு. அவர் இப்பொழுது இங்கே வந்து இருக்கிறார் என்றால், தன் கணவர் கூறியது போல் இவரது மருமகன் தான் பிரச்சனை என்று புரிந்தது.
                       இப்பொழுது மகளை பற்றியும் கண்டிப்பாக இவருக்கு தெரிந்து இருக்கும், அவரே அவரறியாமல் கூற வேண்டும் இப்பொழுது. என்ன செய்வது? என்று யோசிக்க தொடங்கினார்.
              “வணங்குகிறேன் அரசி குமாரிதேவி! தாங்கள் நலமா! அரசருக்கு உடம்பு முடியவில்லை, என்று நான் கேள்விபட்டேன். இப்பொழுது எப்படி இருக்கிறார்?” என்று நலம் விசாரித்தார் அலிகான்.
             எல்லாம் தெரிந்து வந்து இருக்கிறார் எனவும், அவருக்கு உறுதியாகி விட்டது. நிச்சயம் மகளின் விஷயம் தெரிந்து இருக்கும் என்று, ஆகையால் மெதுவாக பேச்சு வாக்கில் தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார் குமாரிதேவி.
              “வணங்குகிறேன்! அரசருக்கு, இப்பொழுது பரவாயில்லை. வைத்தியரின் அறிவுரைப்படி, அவர் ஓய்வில் இருக்கிறார்.இப்பொழுது அவரை காண இயலாது, மன்னிக்கவும்” என்று கூறினார்.
                “புரிகிறது அரசி! மகள் இப்படி என் மருமகனுடன், ஓடி போய் திருமணம் செய்து கொண்டால் எந்த தந்தைக்கும் வருத்தம் வருவது இயல்பு தான்” என்று அவர் குண்டை தூக்கி போடவும், அதிர்ந்து விட்டார் குமாரிதேவி.
              அலிகானோ, மருமகன் பாசில் ஓலையில் எழுதி இருந்தது போல், இங்கே முதல் கட்ட வேலையை தொடங்கி விட்ட திருப்தியில், அவர் செய்தி கூறிவிட்டு சென்று விட்டார்.
இன்று:
          விமானத்தில் பறந்து கொண்டு இருந்தாள் மதியழகி, அவளால் இப்பொழுதும் நம்ப முடியவில்லை. பிரகதி, அப்படியே அவளின் பாட்டியை போல் இருந்தாள். அவரின் பெயர் கூட, பிரகதீஸ்வரி தான்.
              ஒரு முறை அவர் சொல்லி இருக்கிறார், எப்பொழுதும் அவளுக்கு துணையாக இருப்பதாக. இப்பொழுது ஆதியின் அன்னை காமாட்சி, இவளுக்கு துணையாக பிரகதியை அவளோடு அனுப்பவும், அவளுக்கு அவளின் பாட்டியின் நினைவு தான் முதலில் வந்தது.
              சட்டென்று, அப்பொழுது அவள் பாட்டி கூறிய நான் துணையாக இருப்பேன் என்று கூறியது எல்லாம் நினைவிற்கு வரவும், அப்படியே அதன் பாரம் தாங்காமல் மயங்கி விழுந்து இருந்தாள்.
                 “அழகி! அழகி! எழுந்துரு” என்று ஆதி தான் அவள் கீழே விழாமல், தாங்கி பிடித்துக் கொண்டு அவள் கன்னத்தை தட்டி எழுப்பிக் கொண்டு இருந்தான்.
                 “ஏன் மா பிரகதி, நீ அம்புட்டு டெரர் எல்லாம் கிடையாதே, அப்புறம் எப்படி தங்கச்சி இப்படி மயங்கி விழுந்திடுச்சு?” என்று அதி முக்கிய சந்தேகத்தை, விஷ்வா அவளிடம் கேட்டுக் கொண்டு இருந்தான்.
                    அவன் கேட்ட விதத்தில், அருகே நின்று இருந்த ஆதியின் தந்தைக்கு சிரிப்பு வந்தது. இருந்தாலும், இப்பொழுது சிரித்தால், அவரின் தர்ம பத்தினி கண்களால் எரித்து விடும் அபாயம் இருப்பதால், முகத்தை மதியின் புறம் திருப்பிக் கொண்டார்.
                 “உன் வாய்க்கு ஊசி போடுறதுக்கு தான், இந்த மெடிக்கல் கிட் எடுத்துட்டு வந்தேன். ஒழுங்கா அடக்கி வாசி, என்னை சீண்டின அப்புறம் பார்த்துக்க ஊசி தான்” என்று பிரகதி அவனை அடக்கிவிட்டு, மதியை பரிசோதித்தாள்.
               அதிர்ச்சியில் வந்த மயக்கம் என்பதால், தண்ணீரை பலமாக முகத்தில் அடித்து அவளின் மயக்கத்தை தெளிய வைத்தாள். மயக்கம் தெளிந்து, அவள் கண்களை திறந்து முதலில் பார்த்தது, தன்னை தாங்கி இருக்கும் அவளின் வர்மாவை தான்.
                    கண்கள் இரண்டும் சாசர் போல் விரிந்து, அவனை ஆவென்று வாயை பிளந்து கொண்டு பார்த்துக் கொண்டு இருந்தாள். அவனோ, அந்த கண்களுக்குள் சிறைபட்டுக் கொண்டு அதில் இருந்து வெளி வர முடியாமல் தவித்து தான் போனான்.
                       இவர்களின் இந்த கண்ணும் கண்ணும் நோக்கியாவை பார்த்து, பொறாமை கொண்ட விஷ்வா ஆதியின் முதுகில் ஓங்கி ஒன்று போட்டான். அதன் பின் தான் ஆதி, சற்று தெளிந்து அவளை நேராக நிற்க வைத்து தானும் எழுந்து கொண்டான்.
               மதிக்கோ, இப்படி எல்லோரும் பார்க்க நாம் இப்படி இருந்து இருக்கிறோமே என்று வெட்கத்தில் அவளின் கன்னங்கள் செம்மை பூசிக் கொண்டது. அதை பார்த்த ஆதிக்கு, அவளை கட்டி பிடித்து முத்தம் கொடுக்க வேண்டும் என்ற பேராவல் எழுந்தது.
            சூழ்நிலை கருதியும், அவளை பற்றி முழுதாக தனக்கு தெரிந்த பிறகு தான் அவளை முழு மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று, தான் எடுத்து இருந்த சபதத்தாலும் அவன் தன்னை அடக்கிக் கொண்டான்.
           “டேய் ஆதி! இப்படி சின்ன பிள்ளைகளை வச்சிட்டு, நீங்க ரெண்டு பேரும் இப்படி ரொமான்ஸ் பண்ணுறது நல்லா இல்லை சொல்லிட்டேன்” என்று விஷ்வா அவனை மிரட்டினான்.
           “டேய்! யார் டா சின்ன பிள்ளை இங்க?” என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு கேட்டான்.
            “வேற யாரு டா? நானும் பிரகதியும் தான். உங்களை பார்த்து, நாங்க கெட்டு போயிட மாட்டோம்” என்று விஷ்வா கூறவும், பிரகதி முறைத்தாள்.
            “நீ எதுக்கு என்னை கூட்டு சேர்க்குற? நானும் வந்ததில் இருந்து பார்கிறேன், என்னை நீ வம்பு பண்ணிகிட்டே இருக்க. இரு பாரிஸ் போறதுக்கு முன்னாடி, உனக்கு வாய் ல ஊசி போட்டு விட்டுடுறேன்” என்று பதிலுக்கு அவனிடம் சண்டையிட்டாள்.
               “ஹையோ! போதும் நிறுத்துங்க ரெண்டு பேரும், நேராமாச்சு ஏர்போர்ட் கிளம்புங்க. பிரகதி! விஷ்வா உன்னை விட வயசுல பெரியவன், உனக்கு அத்தான் முறை வேணும், ஒழுங்கா மரியாதை கொடுத்து பேச பழகு”.
                “விஸ்வா! வம்பு பேச்சு பேசாம போயிட்டு வரணும், அப்புறம் அவ ஊசி போட்டா அதுக்கு நன் பொறுப்பு இல்லை. மதி மா, எதுனாலும் தயங்காம பிரகதி கிட்ட கேளு, இல்லை ஆதி, விஷ்வா கிட்ட கேளு. உனக்கு என்ன தேவையோ, அது எல்லாம் செய்து கொடுப்பாங்க”.
                  “மறக்காம, வாரம் ஒரு தடவை, எனக்கு போன் போட்டு பேசு சரியா. ஆதி, பத்திரமா போயிட்டு வாங்க” என்று கூறி எல்லோரையும் அனுப்பி வைத்தார் காமாட்சி.
               காரில் இருந்து ஏர்போர்ட் வரையிலும், விஸ்வா மற்றும் பிரகதி வழக்கம் போல் வம்பு சண்டை போட்டுக் கொண்டு இருந்தனர். அதன் பிறகு ஏர்போர்ட்டில், சில சோதனைகள் எல்லாம் முடித்து ப்ளேன் ஏற ஒரு மணி நேரத்துக்கும் மேலானது.
                   மதியை இப்பொழுது வெளிநாடு அனுப்ப வேண்டாம், என்று ரமணன் கூறி இருந்தான். அவள் யார் என்று தெரியாமல், பாஸ்போர்ட் எடுப்பதில் உள்ள சிக்கலை எடுத்து கூறினான். காமாட்சி தான் விடாபிடியாக, அவளுக்கு பிறப்பு சான்றிதழ் ஒன்றை, அவளின் தாய் தந்தையின் உண்மையான பெயர் கொண்டு உடனே வாங்க ஏற்பாடு செய்து, அதன் பின் பாஸ்போர்ட் எடுத்து அவளை இப்பொழுது பாரிஸ் அனுப்பி வைத்து விட்டார்.
                  “சித்தி! ஏன் நீங்க இவ்வளவு ரிஸ்க் எல்லாம் எடுத்து, அவளை அனுப்பி வைக்குறீங்க? நானே ஐஜி கிட்ட பெர்மிஷன் வாங்கி, மத்த கேஸ் விட்டுட்டு இவ யார் என்ன ஏதுன்னு விசாரிச்சிட்டு இருக்கேன். நீங்க இப்போ பார்த்து, இவளை அங்க அனுப்பி வச்சா என்ன அர்த்தம்?” என்று அவரிடம் கேட்டுக் கொண்டு இருந்தான் ரமணன்.
              “ரமணா! எல்லாம் காரணமா தான் அனுப்பி வச்சு இருக்கேன். ஏற்கனவே ஒரு பத்திரிக்கைகாரன், இவ யார் என்னனு தெரிஞ்சிக்க வீட்டை சுத்தி வந்துகிட்டே இருந்தான். இன்னும் இவனை மாதிரி, எத்தனை பேர் வருவாங்கன்னு தெரியாது”.
                “அத்தனை பேரையும் விரட்ட முடியுமா? நீயே சொல்லு, உண்மையாவே இவ ஐநூறு வருடம் கடந்து வந்து இருந்தா, இதை நியூஸ் ஆக்கி காசு பார்க்க எத்தனை கூட்டம் அலையும். அதை விடு, நான் தான் உன் அப்பான்னு சொல்லிட்டு அவளை கூட்டிட்டு போக பார்க்க எத்தனை பேர் வருவாங்கன்னு தான் சொல்ல முடியுமா?”.
                “இது எல்லாத்துக்கும் மேல, அன்னைக்கு வீட்டை விட்டு வெளியே போய், நான் தான் இளவரசி மதியழகின்னு இவளே வாக்குமூலம் கொடுத்துட்டு வந்து இருக்கா. அவங்க அப்போ பைத்தியம்ன்னு சொல்லி விட்டுடாங்க, இனியும் அப்படி ஒவ்வொரு தடவையும் அவளை எப்போவும் காப்பாத்திகிட்டே இருக்க முடியுமா?”
               “அதுக்கு தான் நான் பிரகதியை விட்டு, முதல பாஷையை மாத்த சொல்லி இருக்கேன். அப்புறம் இப்போ இருக்கிற எல்லா கரண்ட் அப்பைர்ஸ், அவளுக்கு தெரிஞ்சு இருக்கணும்”.
               “நானும், இனி ஒரு மாசம் இங்க இருக்க போறது இல்லை. அவளை பத்தி தெரியனும்ன்னா, அவ வாழ்ந்ததா சொல்லுற இடத்துக்கு போனா தான் தெரியும். சோ நான் நாளைக்கு தஞ்சாவூர் கிளம்ப போறேன் , உங்க சித்தப்பாவை கூட்டிகிட்டு” என்று அவர் கூறி முடிக்கவும், ரமணன் அசந்து விட்டான்.
                ஆதியின் அழுத்தமும், அவனின் செயல்பாடுகளும் எங்கு இருந்து வந்தது என்று இப்பொழுது புரிந்தது ரமணனிற்கு. நிச்சயம் இந்த முறை, எல்லாம் தெரிந்து விடும் என்ற திருப்தியுடன் கிளம்பினான். ஆனால், காமாட்சி அங்கு சென்று வந்த பிறகு தான், மதிக்கும் ஆதிக்கும்  அடுத்த கட்ட சோதனை இருக்கிறது என்பதை அறியாமல் போயினர்.
தொடரும்…
                                      
                

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!