Akila Kannan’s Thaagam 18

Akila Kannan’s Thaagam 18

தாகம் – 18

 

காலை மணி 10:00

               அனைவரும் coffee shop ல் சந்தித்தனர்..

 

              நந்தன் அந்த செய்தித்தாள்களை அவர்களிடம் கொடுத்தான்.

அதை மனோஜும் , நவீனும் ஆர்வமாய் பார்க்க , திவ்யா பதட்டத்துடன் பார்த்து கொண்டிருக்க,  ஸ்வாதி நந்தனை பாராட்டினாள்.

 

நந்தனுடன் பேசிக் கொண்டிருந்த ஸ்வாதி, “எவ்வளவு  நேரம் அதை படிக்கிறீங்க..? அப்படி என்ன தான் எழுதிருக்காங்க…?”, என்று அவர்கள் அனைவரின் முகத்தையும் கூர்மையாக பார்த்தபடி கேட்டாள்.

 

திவ்யா அமைதியாக இருக்க, மனோஜ் செய்தித்தாளை ஸ்வாதியிடம் கொடுத்தான்.

     அதை வாசித்த  ஸ்வாதி, புரிந்து கொண்ட  விஷயம் இதோ:

 

“இண்டஸ்ட்ரீஸ் கழிவு நீரை சரியான முறையில் வெளியேற்றாமல் கூவம் நதிக்கரையில் கலந்தால் கூவம் நதிக்கரை மக்கள்  ஒரு சொட்டு தண்ணீருக்காக  குடத்தோடு தெரு தெருவாக அலையும் காலம் வரும்.

இதே நிலை மீண்டும் நீடித்தால், முழு சென்னை மாநகரும் தண்ணீருக்காக ஏங்கும். தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் நிலை வரும். கட்டப்படும் கட்டிடங்களும், வெட்டப்படும் மரங்களும் மொத்த தமிழகத்தையும்  வறட்சி மாநிலமாக மாற்றி விடும். விவசாயிகள் தண்ணீருக்காக போராடும் நிலை உருவாகும்.”

 

“இப்ப நடக்கற, விஷயங்களை எவ்வளவு  சரியா கணிச்சி சொல்லிருக்காங்க?” , என்று ஸ்வாதி ஆச்சர்யப் பட்டாள்.

திவ்யா பெருமையாக உணர்ந்தாள். 

 

“இந்த பேட்டியை எடுத்த நிருபரின் மரணம் இயற்கையானதா இல்லை கொலையா?”,  என்று மனோஜ் வினவ, “நாம தண்ணி பிரச்சனைய தானே பார்க்க வந்தோம்.. அதைப் பற்றி யோசிப்போம் ” , என்று நவீன் கூறினான்.

 

“அந்த நிருபரின் குடும்பத்துக்கு எதாவது விஷயம் தெரிஞ்சிருக்குமா? ” , என்று மனோஜ் வினவ , “தெரிய வாய்ப்பில்லை…” , என்று திவ்யா உறுதியாக கூறினாள்.

 

“எப்படி சொல்ற..?” , என்று நவீன் கேட்க, “அவர் எங்க அப்பா… ” , என்று திவ்யா கூறினாள். 

 

அனைவரும்  அதிர்ச்சியாக திவ்யாவை பார்த்தனர்.

 

அந்த செய்திதாளில் அவர்களுக்கு பெரிதாக ஒன்றும் கிடைத்தது போல தெரியவில்லை. அந்த வருடம் தொடங்கப்பட்ட தொழில்சாலைகளின் பெயர்களும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

” இங்க இருக்கிற இண்டஸ்ட்ரீஸ் பத்தி ஒரு  ரிசெர்ச் பண்ணுவோம்.. ஒரு ஆர்டிகிள் ரெடி பண்ணுவோம்” , என்று திவ்யா கூற அனைவரும் தலை அசைத்து அதை ஆமோதித்தனர்.

 

“இதில் ஆபத்து வரும்னு தெரிந்தே இதை நீங்க செய்தே ஆகணுமா? “, என்று நந்தன் வினவ, “அதெல்லாம் ஒரு பிரச்சனையும் வராது” என்று அழுத்தமாக கூறினாள் திவ்யா.

 

“இதை கண்டுபிடித்தே தீர வேண்டும் “, என்ற எண்ணம் திவ்யாவின் மனதில் ஆணித்தரமாக  பதிந்திருந்தது.

 

” 1 வீக் அப்புறம் மீட் பண்ணுவோம்..  எதாவது உதவி வேணுமுன்னா கேக்கறோம்..” , என்று கூறி, நன்றி தெரிவிக்கும் விதமாக நந்தனிடம் கை  குலுக்கி விடை பெற்றனர்.

 

 

அனைவரும் அங்கிருந்து கிளம்ப, திவ்யாவின் வண்டியில் நாம் பயணிப்போம்.

 

                 திவ்யாவின் வண்டி விக்ரம் ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரீஸ் வழியாக சென்றது.

     திவ்யாவின் எண்ண  ஓட்டம் மிக வேகமாகவும் தீவிரமாகவும் இருப்பதால் அவள் விக்ரம் இண்டஸ்டிரியை கவனிக்கவில்லை.

 

திவ்யாவின் வேலைக்கு இடையூறு செய்யாமல், நாம் விக்ரம் இண்டஸ்ட்ரியில்  இறங்கி கொள்வோம்.

 

                              பாக்கியம் இடத்தை சுத்தம் செய்து கொண்டிருக்கிறாள்.  நாம் ரமேஷ் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று பார்ப்போம்.

               இண்டஸ்ட்ரிக்குள் நடந்து சென்றால்  அங்கு   பலர்     மும்முரமாக வேலை செய்வதையும், ஒரு சிலர் ஆங்காங்கு நின்று பேசி கொண்டிருப்பதையும் நம்மால் பார்க்க முடிகிறது. படியேறினால் அங்கு தெரிகிறது ரமேஷின் அறை. கதவை திறந்து உள்ளே சென்றால், ரமேஷ் அங்கு இல்லை.

 

             நாம் விக்ரமின் அறைக்கு செல்வோம்.

அட..!! ரமேஷ் , விக்ரம் இருவரும் லேப்டாப்பை பார்த்த படி பேசிக் கொண்டிருந்தனர்.

    அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று நாமும் கேட்போம்.

 

“நேத்து , G.R இண்டஸ்ட்ரிஸோட  டீல்  எப்படி போச்சு ?” , என்று நாற்காலியில் சாய்ந்த படி கேட்டான் ரமேஷ்.

 

கால் மேல் கால் போட்டு அமர்ந்து பேனாவை சுழட்டியபடி, பேச ஆரம்பித்தான் விக்ரம் ,  “டீல்  ஒகே தான்.. அவங்க கம்பெனி மேனேஜர் சித்ரா வந்திருந்தாங்க.  கோதண்டராமன் சார் இன்னக்கி வரமுடியலைனு போன் பண்ணார். காண்ட்ராக்ட் கையெழுத்து போட்டு அனுப்பிச்சிருந்தார். ஜஸ்ட் பேப்பர் ஒர்க்ஸ் மட்டும் தான். எல்லா வேலையும் முடிஞ்சிருச்சு. நானும் ஓகே பண்ணிட்டேன்.. “.

 

“குட்.. கிரேட் நியூஸ்..” , என்று கூறினான் ரமேஷ் புன்னகைத்த படியே..

 

“இந்த வீக் எண்ட் ,இண்டஸ்ட்ரி technical team மெம்பெர்ஸ்க்கு பேமிலி  அவுட்டிங்  பிளான் பண்ணுவோம்.  நம்ம “HR” டீம் கிட்ட பேசி “FUNDS”  ஒதுக்கணும் ரமேஷ்… “, என்று விக்ரம் கூற, “ஓகே..” , என்று கூறிவிட்டு ரமேஷ்  அவன்  அறைக்கு சென்றான்.

 

             அனைவரும் அவர்களது வேலையில் மும்முரமாக இருக்க நாட்களும் நகர்ந்தோடியது.

 

சனிக்கிழமை காலை 8 மணி:

 

” திவ்யா!!  சனிக்கிழமை அதுவுமா எங்க கிளம்பிட்ட?” , என்று கையில் தோசை கரண்டியுடன்  வினவினார் புஷ்பா.

 

“கேளுங்க அத்தை.. நியாமான கேள்வி…” , என்று தன் தலையை துவட்டிய படியே திவ்யாவை பார்த்தவாறு கூறினான் ரமேஷ்.

 

“உன்னோட தான் வரேன்…” , என்று கண் அடித்து கூறினாள் திவ்யா.

 

” ஹலோ .. நான் எங்க ஆபீஸ் டீம் அவுட்டிங் போறேன்… நீ எங்க கிளம்பற.?” , என்று ரமேஷ் கண்களை சுருக்கி கொண்டு கேட்க, “அது உங்க டீமோட பேமிலி அவுட்டிங்…எல்லா விஷயமும் எங்களுக்கு தெரியும்.. நேத்து நீ மொபைல்ல பேசும் போது கேட்டுட்டேன்  “, என்று தோள்களை  அசைத்தவாறே கூறினாள் திவ்யா.

 

“ஒட்டுக் கேட்டியா? ” , என்று ரமேஷ் கேள்வியாய் நோக்க.., “எனக்கு வீட்ல போர் அடிக்குது..  நானும் உன் கூட வரேன்.. ”  , என்று தீர்க்கமாக கூறினாள் திவ்யா.

 

“நீ எதுக்கு.. அதெல்லாம் போக வேண்டாம்” , என்று திவ்யாவின் அம்மா கூற, ” பாவம் குழந்தை போயிட்டு வரட்டும்.. ரமேஷ் அவளை பத்திரமா கூட்டிட்டு போயிட்டு வா டா… ” , என்று ஷண்முகம் கூறினார்.

 

“இவ அங்க என்ன  ஏழரைய இழுப்பாளோ ?” , என்று மனதுக்குள் நொந்து கொண்டு , “சரி” என்று தலை அசைத்தான் ரமேஷ்.

 

“ரிசார்ட் பீச் போவோமா…? ” , என்று திவ்யா ஆர்வமாக வினவ , ரமேஷ் அவளை  முறைத்து பார்த்தான்.

 

ரமேஷின் பைக் “ECR” ரோடை நோக்கி பயணித்தது.  சாலையில் கவனமாக வண்டி ஓட்டிக் கொண்டிருந்த ரமேஷ் எதுவும் பேசவில்லை. திவ்யா தொடர்ந்து பேசிக் கொண்டே வந்தாள்.

 

          வண்டி பீச் ரிசார்டுக்குள் நுழைந்தது. அனைவரும் அவர்கள் குடும்பத்தினருடன் வந்திருக்க அங்கு கேலியும் கிண்டலும் குறைவில்லாமல் நிகழ்ந்தது.

 

                     விக்ரம் அவன் தாயோடு  வந்திருந்தான்.

           ரமேஷோடு திவ்யா வருவதை  பார்த்த விக்ரம் முகத்தில் ஒரு நொடி மின்னல் வந்து போனது.

 

              ரமேஷ் விக்ரமின் தாயிடம்  பேச, திவ்யா அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். விக்ரம் திவ்யாவை யாரும் அறியா வண்ணம் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

ரிசார்ட்டில் ஆண்கள் கிரிக்கெட் விளையாட, பெண்கள் டென்னிஸ், த்ரோ பால், வாலி பால் விளையாடி கொண்டிருந்தனர்.

   இடைப்பட்ட நேரத்தில் அனைவருக்கும் பழங்கள்  வர, திவ்யா தனக்கென்று துண்டுகளாய் வெட்டப்பட்ட தர்பூசணியை  எடுத்துக் கொண்டு   அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.   விக்ரமின் தாயார், திவ்யாவை அருகில் அழைத்து பேசிக் கொண்டிருந்தார்.

 

                    ரமேஷ் விக்ரமின் தாய் அருகில் சென்று, ” ஆண்ட்டி,  

பழங்கள் சாப்டீங்களா ?” , என்று வினவினான் ” சாப்பிட்டேன்  ரமேஷ்… திவ்யா குடுத்தா… ” , என்று புன்னகைத்தவாறே கூறினார்.

“அதற்குள் விக்ரமின் அம்மாவிடம் பேசி பழகி விட்டாள் போலும்..!! ” , என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான்  ரமேஷ்.

    இவர்கள் அருகில் நாற்காலியை இழுத்து போட்டு கொண்டு அமர்ந்தான் விக்ரம்.

       திவ்யா  காரியமே கண்ணாக தர்பூசணி சாப்பிட்டுக் கொண்டிருக்க, அவளை பார்த்து கொண்டிருந்த விக்ரமிற்கு அவள்  அன்று சொன்ன விடுகதை நினைவில் வந்தது.

“.சிவப்பு நிறத்தை பார்த்தால் ஓடுவதும், பச்சை நிறத்தை பார்த்தால் நிற்பதும் யார்? எப்பொழுது?”

 

அட…!!  திவ்யாவை பார்க்கும் பொழுது, அவனுக்கு பதிலும் தெரிந்துவிட விக்ரம் திவ்யாவைப் பார்த்து சிரித்தான்.

 

          திவ்யாவின் பற்கள் தர்பூசணியில் உள்ள சிவப்பு நிறத்தை பார்த்து ஓடுவதும்.., சிறிது நேரத்தில் கீழ் பாகமான பச்சை நிறத்தை பார்த்த உடன் நின்றதும்.. விக்ரமின் கண்களில் பட விக்ரமின் கண்கள் சிரித்தது.

 

அவன் விடையை கண்டு பிடித்து விட்டான் என்பதை அவன் கண்களில் இருந்து கண்டு கொண்டாள் திவ்யா.

 

முகத்தில் தோன்றிய புன்னகையை  அடக்கிய படி  தலையை குனிந்து கொண்டு யோசித்தாள் திவ்யா.

“திவ்யா, விக்ரம் நல்லவனா இல்லை கெட்டவனா என்று உனக்கு தெரியாது… அப்படி இருக்க..,  உனக்கு  இந்த விடுகதை  விளையாட்டெல்லாம் தேவையா ?” , என்று அவள் மனம் இடித்துரைத்தது.

 

இந்த சிந்தனை  அவள் முகத்தை மாற்றியது.

                 இந்த மாற்றத்தை பார்த்த விக்ரமின் கண்கள் சுருங்கியது.

 

” HR  கேம்ஸ் பிளான் பண்ணிருக்காங்க. “, என்று ரமேஷ் கூற,  “அம்மா.. நீங்களும் வாங்க” , என்று விக்ரம் கூறினான். “வயசான காலத்துல நான்  எப்படி டா…??” , என்று அவர்  தயங்க.., “ஆண்ட்டி.. நீங்க எங்களைவிட சூப்பரா விளையாடுவீங்க.. “, என்று சிரித்த முகமாக கூறினாள் திவ்யா.

 

“சார்… உங்களுக்கு ஓகேனா .. நான் கொஞ்சம் போட்டோஸ் எடுத்துகிறேன் எங்க சேனலுக்கு …” , என்று பளிச்சென்று கேட்டாள் திவ்யா.

 

“நினச்சேன்.. “, என்று ரமேஷ் கூற , திவ்யா  ரமேஷை முறைத்து  பார்த்தாள். “அதெல்லாம் வேண்டாம்…” , என்று ரமேஷ் கூற,  சிரித்துக் கொண்டே., “அவங்க ஆசையை ஏன் கெடுக்கணும்? போட்டோஸ் எடுத்துக்கோங்க…” , என்று கூறினான் விக்ரம்.

 

பலூன் ஊதும் விளையாட்டு, கண்ணை கட்டிக் கொண்டு படம் வரையும் விளையாட்டு ,  மியூசிக்கல் பால் , கை படாமல் திராட்சை உண்ணும் விளையாட்டு என பல விளையாட்டுக்கள் அரங்கேறியது.  அனைவரும் ஆர்வமாய் பங்கேற்றனர். ஆண்களை விட பெண்கள் மிக ஆர்வமாக விளையாடினர். திவ்யா பல போட்டிகளில் சூட்டிகையாக விளையாடி வெற்றி பெற்றாள். 

                        அவளை பல கோணங்களில் மனதுக்குள் படம் பிடித்துக் கொண்டான் விக்ரம்.  ஆனால் அவளிடம் என்ன பேசுவது? எப்படி பேசுவது என்று தெரியவில்லை.

 

                     விக்ரமின் தயக்கம் திவ்யாவுக்கு புரிந்தது போல் தெரியவில்லை.

 

          அனைவரும் விளையாண்டு  முடித்து இடத்தை சுத்தம் செய்ய விக்ரம் தனியாக நின்று கொண்டிருந்தான்.  இதை கவனித்த திவ்யா

” ஒரு விடுகதைக்கு பதில் கண்டு பிடிக்க இவ்வளவு நாளா? ” , என்று நக்கலாக கேட்டாள் திவ்யா.

 

“நான் உடனே கண்டுபிடிச்சிட்டேன் .. நீங்க தான் அவசரமா கிளம்பிடீங்க..  அதுக்கு அப்புறமும் நீங்க தான் கண்ல படவே  இல்லையே …” , என்று  சோகமாக கூறினான் விக்ரம்.

 

“நம்பறேன்.. ” , என்று தலை அசைத்தபடியே சிரித்தாள்.

 

“என் மேல இருக்கிற சந்தேகம் எல்லாம் போன மாதிரி தெரியுதே…. ” , என்று கூறி அவளை நோட்டம் பார்த்தான் விக்ரம்.

 

“உங்க அம்மா கிட்ட பேசினதுல, அவங்க வளர்ப்புல தப்பு இருக்குமுன்னு தோணல..”, என்று எங்கோ பார்த்தபடி கூறினாள்.

அவளை ஆழமாக பார்த்தான் விக்ரம்.

 

“என் முகத்தில் என்ன தெரியுது?”, என்று திவ்யா கேட்க,  “இன்னக்கி நீங்க சண்டை போட வேண்டாம்னு முடிவு பண்ணிருக்கீங்கனு தெரியுது… ” , என்றான் விக்ரம் அமைதியாக.

 

“கரெக்ட்.. ரமேஷ் என்னை அமைதியா இருக்க சொல்லிருக்கான்…” , என்று திவ்யா கூற, “ரமேஷ் என்ன சொன்னாலும் கேட்பீங்களா..? ” , என்று விக்ரம் கேட்டான்.

 

“எஸ்.. ரமேஷ் என்ன சொன்னாலும் கேட்பேன்.. ” , என்று திவ்யா  கூற ரமேஷ் வரவும் சரியாக இருந்தது.

 

“இதை மைக் போட்டு ஊரெல்லாம் சொல்லு.. யாராவது ஒருத்தன் நம்பறானான்னு பார்க்கலாம் “, என்று ரமேஷ் கூற,

 

“ஏன்?  ரெண்டு பேரும்  அந்த சின்ன பொண்ணை கிண்டல் பண்ணறீங்க..?” , என்று அவர்கள் பேசிக் கொண்டிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார் விக்ரமின் தாயார்.

 

“அப்படி சொல்லுங்க ஆண்ட்டி…” , என்று தன் கட்சிக்கு ஆள் சேர்த்தாள் திவ்யா.

திவ்யாவின் குடும்பத்தை பற்றி தெரிந்து கொள்ளும் எண்ணத்தில், “அப்பா என்ன பண்றாங்க? ” , என்று திவ்யாவிடம் கேட்டார் விக்ரமின் அம்மா.

 

“அப்பா ரிப்போர்ட்டர்…  இப்ப இல்லை… ஒரு விபத்துல தவறிட்டாங்க.. ” , என்று மெதுவாக கூறினாள்  திவ்யா.

 

அனைவரும் அமைதியாக இருக்க,  அந்த அமைதியை விரும்பாதவளாக  திவ்யா மேலும் தொடர்ந்தாள்.

 

“நானும், அம்மாவும்  மாமா வீட்ல இருக்கோம்..  மாமா, அத்தை , ரமேஷ் தான் எங்களுக்கு எல்லாம்….” , என்று சிரித்த முகமாகவே கூறினாள்.

 

“ஏன் அப்பா உன்னை கையோட நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாங்கனு சொல்லு திவ்யா ” , என்று திவ்யாவின் மனதை  திசை திருப்பும் விதமாக  ரமேஷ் கூற அவனை கோபமாக முறைத்துப்  பார்த்தாள் திவ்யா.

 

ரமேஷை திவ்யா தன் ஒற்றை விரலால் சொல்லாத என்று மிரட்ட,        “பரவால்லை சொல்லுப்பா ” , என்று ரமேஷின் விளையாட்டை புரிந்து கொண்டு கூறினார் விக்ரமின் தாயார்..

 

ரமேஷ் நினைத்தது நடந்து விட, திவ்யாவிடம்  சொல்லியே தீருவேன் என்று மல்லுக்கு நின்றான்.  திவ்யா ரமேஷை துரத்தினாள்.

 

விக்ரமின் கண்கள் திவ்யாவை மட்டுமே வட்டம் அடிக்க, நான் ஏன் இப்படி மாறிப்போனேன்  என்று சுய ஆராய்ச்சியில் இறங்கினான் விக்ரம்.

          “திவ்யாவுக்கு என் மேல் நல்ல எண்ணம் இருக்கிறதா..? இதை ரமேஷ் எப்படி ஏற்றுக் கொள்வான் ..? அம்மாவிடம் எப்படி சொல்வது..?

திவ்யா என்ன சொல்லுவாள்..? எப்பொழுதும் என்னை திட்டிக்கொண்டிருக்கும் திவ்யாவை எனக்கு ஏன் பிடித்திருக்கிறது..?  “ , தி கிரேட் இண்டஸ்ட்ரியலிஸ்ட் விக்ரமிற்கு இப்படியாப்பட்ட கேள்விகள் எழுந்தன..

 

“… சொன்னேனா பாரு உன்னை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது….” , என்று திவ்யா ரமேஷிடம் மூச்சு வாங்கி கொண்டே கூற,

 சொல்லியே தீருவேன்  என்று வைராக்கியத்தோடு விக்ரமின் அம்மா பக்கத்தில் நின்றான் ரமேஷ்.

 

             ரமேஷ் என்ன சொல்ல போகிறான்? திவ்யா எதை மறைக்க முயற்சிக்கிறாள் ?

 

                                                 தாகம் தொடரும்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!