Akila Kannan’s Thaagam 6
Akila Kannan’s Thaagam 6
தாகம் பகுதி – 6
அழகான மாலை பொழுது, சூரியன் மேற்கே மறைந்து கொண்டிருந்தான்.
வானம் செக்க சிவந்திருந்தது.
” ஹாய் திவு…. ” என்று கை அசைத்தார்கள் அங்கிருந்த மூன்று பெண்கள்.
இது தான் திவ்யாவை அவர்கள் அழைக்கும் விதம்..
“ஹாய்…”, என்று கூறி கொண்டே வந்தமர்ந்தாள் திவ்யா..
காலையில் அணிந்திருந்த அதே உடை ப்ளூ ஜீன், வெள்ளை டாப்ஸில் தான் இருந்தாள்.. காலையை விட முடி இன்னும் அதிகமாக பறந்து கொண்டிருந்தது.
“அந்த முடிக்கு கிளிப் போட்டா தா என்ன?” , என்று கேட்டாள் லாங் ஸ்கர்ட் அணிந்து அழகான ஒப்பனையுடன் இருந்த திவ்யாவின் தோழி.
” போதும் போதும் ஸ்வீட்டி…. நாம எப்படி இருந்தாலும் அழகா இருப்போம் “, என்று சத்தமாக சிரித்தாள் திவ்யா.
“ஸ்வீட்டி”, அவளின் செல்ல பெயர் போலும்..!!!
“இவள் நாம் சொல்வதை கேட்க மாட்டாள் ..” , என்று விமர்சித்தாள் இன்னொரு தோழி..
அந்த பர்கர் கடை சாலை ஓரத்தில் அமைந்திருந்து. சாலை பக்கமாக வெளியில் சில நாற்காலி போட்டிருந்தார்கள் . திவ்யா அவள் தோழிகளுடன் அங்கு தான் அமர்ந்திருந்தாள் .
அங்கு ஓடிக்கொண்டிருந்த வண்டியின் சத்தத்தை விட இவர்கள் சிரிப்பு சத்தம் மேலோங்கி இருந்தது.
பர்கர், பிரெஞ்சு பிரைஸ் , பெப்சி ….. ஆளுக்கு ஒன்றாக பேசியவாரே சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அதை சாப்பிட்டு முடித்துக் கொண்டு பர்கர் சுற்றி வைத்த பேப்பரை தூக்கி எறிய முற்படுகையில் ,” அம்மா அந்த பேப்பரை என்கிட்டே தரீங்களா ?”, என்று கேட்டாள் ஒரு நடுத்தர வயது பெண்மணி.
அதோடு, சற்று பணமும் திவ்யா குடுக்க.., அதை வாங்க மறுத்துவிட்டாள் அந்த பெண்மணி.
“உழைச்சு சாப்பிடுவோம்…” , என்று கூறி கொண்டே தன் நடையை கட்டினாள் அந்த நடுத்தர வயது பெண்மணி.
“இதை வைத்து என்ன செய்வார்கள் ?”, என்று திவ்யா சத்தமாக சிந்திக்க.. அவளுடைய மற்ற தோழிகள் தோளைக்குலுக்கினர்.
“ஷாப்பிங் போயிட்டு வீட்டுக்கு போவோம்”, என்று திவ்யா கூற அனைவரும் ஷாப்பிங் சென்றனர்.
ஷாப்பிங் செய்பவர்களை தொந்திரவு செய்யாமல்.., நாம் பள்ளிக்கு சென்ற தீபாவும் பாண்டியனும் வீட்டுக்கு வந்து விட்டார்களா என்று பார்ப்போம்.
அந்த எட்டுக்கு எட்டு அடி வீட்டு வாசலில் அந்த செல்ல பிராணி அமர்ந்திருந்தது.
கரண்ட் வந்து விட்டதால், லைட் எரிந்து கொண்டிருந்தது. தீபா கணக்கு பாடம் எழுதிக்கொண்டிருந்தாள்.
அங்கு வாசலில் பாண்டியன் பம்பரம் விட்டுக் கொண்டிருந்தான்.
அந்த பம்பரம் பாண்டி சொல்வது போல் சுற்றிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் பம்பரம் விடும் பொழுது தன் தாய் பர்கர் கொண்டு வருகிறாளா?, என்று ஆசையோடு பார்த்தான் பாண்டி.
” பாண்டி நாளைக்கு உனக்கும் பரிட்சை தானே , வந்து படி..”, என்று வீட்டுக்குள்ளிருந்து சத்தம் கொடுத்தாள் தீபா. தீபாவின் சத்தம் பாண்டியனின் காதில் விழவில்லை. ஆனால் சற்று தள்ளி ஒரு பெண்மணியிடம் பேசிக்கொண்டிருந்த பாக்கியத்தின் குரல் பாண்டியனின் காதில் விழுந்தது. பாக்கியம் வருவதை உணர்ந்து, அவளிடம் ஓடிச்சென்று “அம்மா பர்கர் இருக்கா”? , என்று ஆசையாக கேட்டான் பாண்டி.
“நீ அலமேலு ஆயா கிட்ட ஒரு தக்காளி இருந்தா வாங்கிட்டு வா” , என்று பாண்டியை அனுப்பினாள் பாக்கியம்.
ஒரு தக்காளியோடு திரும்பி வந்த பாண்டியிடம், “நீ போய் வாட்டர் மணி கிட்ட நாளைக்கி தண்ணி லாரி வருமான்னு கேட்டுட்டு வா “, என்று அனுப்பினாள் பாக்கியம்.
“அம்மா நீ பர்கர் தருவியா மாட்டியா ? ” , என்று கடுப்பானான் பாண்டி.
“தரேன் டா…” , என்று செல்லம் கொஞ்சினாள் பாக்கியம்
வேறு வழி இன்றி பாண்டி தண்ணி லாரி பற்றி கேட்க சென்றான் பாண்டி.
பாண்டி திரும்பி வரும் பொழுது அவனுக்காக பேப்பரில் சுற்றி வைக்கப்பட்ட பர்கர் காத்திருந்தது..
பாண்டியால் அவனுக்கு ஏற்பட்ட சந்தோஷத்தை வாயால் சொல்ல முடியவில்லை.
தன் தாயை கட்டி அணைத்து முத்தமிட்டான்.
தீபாவின் கன்னத்திலும் முத்தமிட்டான்.
இருவரும் பர்கர் உண்டனர்….
பாண்டி பர்கர் விளம்பரத்தில் வரும் குழந்தையாகவே மாறிப்போனான். அவன் பர்கரை ரசித்து ருசித்து உண்பதை பார்த்த பாக்கியம் மகிழ்ச்சி அடைந்த்தாள்.
அவர்கள் பர்கர் சாப்பிட்டு முடித்த உடன் வாசலில் விளையாட சென்று விட்டான் பாண்டி. தன் படிப்பை தொடர்ந்தாள் திவ்யா.
தன் வியாபாரத்தை முடித்துக் கொண்டு , தள்ளு வண்டியோடு வீட்டுக்கு வந்தார் ராமசாமி.
விளையாட்டுக்கு இடையிலும் தன் தாயை ஒரு முறை கட்டி முத்தம் கொடுத்து விட்டு செல்லும் பாண்டியை பார்த்துக் கொண்டிருந்த ராமசாமிக்கு ஆச்சர்யம் தாங்க வில்லை.
“என்னடி ரொம்ப கொஞ்சரான்?” , என்று கேட்டார் ராமசாமி.
“அப்பா, இன்னக்கி அம்மா ரெண்டு பேருக்கும் பர்கர் வாங்கி குடுத்தா ….”, என்று கூறினாள் தீபா.
“பர்கர் வாங்க ஏது துட்டு? “, என்று அதிகாரத் தோரணையில் குடும்ப தலைவராக வினவினார் ராமசாமி .
“தீபா , கொஞ்ச நேரம் வெளிய போய் விளையாடு..”, என்று கூறினாள் பாக்கியம்.
“என்கிட்ட இருபது ரூபாய் இருந்துச்சுல..?” , என்று கூறினாள் பாக்கியம்.
“இருபது ரூபாய்ல ரெண்டு பர்கர்..? இது எந்த ஊர்ல..? “, என்று கேட்டான் ராமசாமி..
இன்னக்கி பர்கர் கடைல பொண்ணுங்க பர்கர் சாப்பிட்டுட்டு தூக்கி போடுற பேப்பர எடுத்துட்டு வந்தேன்…
” காய்ச்சலுக்கு குடுக்கிற பன், ரோடோர டீக்கடைல வடையும் வாங்கிட்டு வர வழியில தெருவோரமா இருக்கிற முருங்கை இலையை பறிச்சிட்டு வந்தேன். பக்கத்தது வீடு அலமேலு ஆயா ஒரு தக்காளி குடுத்தா..
ஒரு பன், வதக்கின முருங்கை கீரை, துண்டு துண்டா வெட்டுன தக்காளி , ஒரு வடை கீரை தக்காளி மேல ஒரு பன் இப்படி அடுக்கி நான் கொண்டு வந்த பேப்பர்ல சுருட்டி கொடுத்துட்டேன்.”, என்று பெருமையாக கூறினாள் பாக்கியம்.
” அட..!! உன்கிட்ட அழகு மட்டும் தா இருக்குனு நினச்சேன்.. அறிவும் இருக்குனு இத்தனை வருசமா தெரியாம போச்சே..!! “, என்று கூறினான் ராசாமி.
“எனக்கு அறிவு இருக்குனு கண்டுபிடிக்கவே இத்தனை வருஷமாகிருக்குனா உனக்கு அறிவு கம்மிதான் யா..”, என்று இடைக்காக கூறினாள் பாக்கியம்.
“யாருக்கு அறிவு கம்மி..?”, என்று அவளை நெருங்கினான் ராமசாமி.
அந்த எட்டுக்கு எட்டு அடி வீட்டில் ஓரமாக பாக்கியம் ஒதுங்க .. அவளிடம் இன்னும் நெருங்கினான் ராமசாமி.
பாக்கியத்திற்கு வெட்கத்தில் முகம் சிவந்தது.
“ஏய் தள்ளு யா..”, என்று பாக்கியம் சிணுங்க,
“எத்தனை வருடமானாலும் நீ வெட்கப்படும் அழகு தனி தாண்டி ” , என்று கிறக்கமாக கூறினான் ராமசாமி.
“புள்ளைங்க வந்திற போறாங்க ” , என்று முனங்கினாள் பாக்கியம்.
“வரட்டும்..”, என்றான் ராமசாமி..
“நீ தான் எனக்கு அறிவு கம்மினு சொன்னியே..”, என்று வம்பிழுத்தான் ராமசாமி.
அவனது பார்வையில் ஏதோ உணர ” இப்ப நான் என்ன சொல்லணும்”, என்று கறாராக கேட்டாள் பாக்கியம்..
“அப்படி வா வழிக்கு…”, என்று சத்தமாக சிரித்தான் ராமசாமி.
“நான் புத்திசாலின்னு சொல்லு”, என்று வாயால் மிரட்ட ராமசாமியின்
கண்களோ சிரித்தது .
“முடியாது…”, என்று பாக்கியம் தலை அசைத்தாள்.
வீட்டின் வெளியே , தீபா அவளை ஒத்த வயதோடு இருந்த பெண்களோடு நொண்டி விளையாடி கொண்டிருந்தாள்… அவர்கள் விளையாடுவதை அலமேலு பாட்டி பார்த்துக்கொண்டிருந்தார்.
அந்த குறுக்குச்சந்து க்குள், ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்து க் கொண்டே ஓடி ஒளிந்து விளையாடி கொண்டிருந்தான் பாண்டி..
அவன் முகத்தில் அத்தனை சந்தோசம்,
“ஏன்டா பாண்டி , இங்க வா..” , என்று அவனை அழைத்தார் அலமேலு பாட்டி .
“என்ன ஆயா ?” , என்று தோரணையாக கேட்டான் பாண்டி..
“என்ன டா பாட்டு அது? பாடு .., ” , என்று ஆர்வமாக கேட்டார் அலமேலு பாட்டி.
பாண்டி சத்தமாக பாட ஆரம்பித்தான்.
“நாம் அட நேற்று வரை
பசித்தால் தான் உண்போமடா
யார் இன்று மாற்றி வைத்தார்
ருசிக்காய் நாம் அலைந்தோமடா
யாரோ யாரோ யாரோ யாரோ” , என்று ராகத்தோடு பாடினான் பாண்டி.
“நல்லா இருக்கே… என்ன படம் ?”, என்று வினவினார் பாட்டி.
“அதெல்லாம் தெரியாது.. அந்த டீக்கடையில் கேட்டிருக்கேன் “, என்று கூறிவிட்டு விளையாட பறந்தோடினான்.
சூரியன் மறையும் நேரத்தில்,
“அம்மாஆஆஆஆ “, என்று அலறினான் பாண்டி.
“என்ன ஆச்சு ?, என்று ஓடினாள் பாக்கியம்.
தன் கால்களை நொண்டியவாரே நடந்து வந்த பாண்டியை, வீட்டிற்கு அழைத்து வந்து வெளிச்சத்தில் பார்த்தாள் அவனுடைய தாய். நீளமான முள் ஒன்று ஆழமாக குத்தி இருந்தது..
எச்சியை கையில் துப்பி முள் குத்திய இடத்தை துடைத்தாள்.
பாண்டியனின் கால் பளிச்சென்று சுத்தமானது. கூர்மையான ஊசியால் அந்த முள்ளை வெளியே எடுக்க முயற்சித்தாள் பாக்கியம்.
பாண்டியன், ” ஆ , ஊ ” , என அலறினான்.
“ஏய் கம்முனு இருடா. காலை அசைக்காமல் இரு.. “, என்று ஊசியால் குத்தி
முள்ளை வெளியே எடுத்து விட்டார் பாக்கியம். இன்னும் கத்திக் கொண்டிருந்தான் பாண்டி.
“ஏய் முள் வெளியே வந்திருச்சு.. சும்மா கத்துக்கிட்டு இருக்காத… ஒழுங்கா வீட்ல உட்காந்து படிச்சிருந்தா இப்படி முள்ளு குத்திருக்குமா.? “, என்று வியாக்கியானம் பேசினாள் தீபா.
“சரி .. சரி எல்லாரும் சாப்பிட்டுட்டு படுங்க..”, என்று கஞ்சியை ஊற்றினார்..
விளக்கை அனைத்து விட்டு அனைவரும் அந்த சின்ன வீட்டுக்குள் படுத்தனர்.
“அம்மா..”, என்றழைத்தாள் தீபா.
“ம்ம்.. “, என்றாள் அசதியான குரலில்.
“அம்மா நாளைக்கி காலைல தண்ணி வந்திருமா.? நாளைக்கி எனக்கு பரிட்சை. எட்டரை மணிக்கெல்லாம் போகணும் “, என்று தவிப்புடன் தன் கால்களை ஆட்டியபடியே கேட்டாள் தீபா .
” தண்ணி வரலனாலும் , அரை குடம் தண்ணி இருக்கு.. அத வச்சி உன் வேலையை முடிக்கிறேன்.. நீ பேசாம தூங்கு..”, என்று கூறி விட்டு கண்ணை மூடி உறங்க ஆரம்பித்தார் பாக்கியம்.
அங்கிருந்த கொசுக்களை அடிப்பதும் கண்ணை மூடுவதாகவும் இருந்தான் பாண்டியன்.
தீபா நாளை தண்ணி வந்துவிடும் என்ற நம்பிக்கையில் உறங்கினாள்.
அவர்கள் உறங்க அமைதி கொடுத்து நாம் வெளியே வருவோம்.
நேற்று போல் இன்று இருட்டாக இல்லை.
கரண்ட் உள்ளதால், சற்று வெளிச்சமாகவே இருந்தது.
அப்படியே நடந்து சாலை பக்கம் வந்தோமென்றால், அங்கு வாட்டர் மணி யாரோடோ சண்டை போட்டுக்கொண்டிருக்கிறான்.
“வாட்டர் மணிக்கும் , லாரி டிரைவருக்கும் ஏதோ சண்டை.. இவர்கள் சண்டை முடிந்து நாளைக்காவது தண்ணி வருமா..? ” , என்று புலம்பல் சத்தம் நம் காதில் கேட்டது.
இந்த விஷயம் எதுவும் அறியாமல் தீபா நிம்மதியாக உறங்கி கொண்டிருந்தாள்.
அட..!! மணி ஒன்பது .. இப்பொழுது தான் திவ்யா அவள் தோழியுடன் வண்டியில் சென்று கொண்டிருக்கிறாள்.. நாம் திவ்யாவை தொடர்வோம்.
இருவரும் இரு சக்கர வாகனத்தில் இரவு நேர காற்றை அனுபவித்த படி சென்று கொண்டிருந்தார்கள். ட்ராபிக்கில் வண்டி வளைந்து வளைந்து சென்றது.
திவ்யாவின் வீட்டுக்கு முன் சத்தமில்லாமல் வண்டியை நிறுத்தினாள் ஸ்வீட்டி .
பை!!! என்று கை அசைத்து விட்டு உள்ளே சென்றாள் திவ்யா.
வாசலை விட்டுவிட்டு சுவர் ஓரமாக நடந்தாள் திவ்யா.
இருட்டாகத்தான் இருந்தது.. திவ்யாவிற்கு இருட்டு பயம் கிடையாது போலும்..!!!
மொபைலை எடுத்து பார்த்தாள். அதில் நிறைய மிஸ்ட் கால் இருந்தது . அதை ஒதுக்கி தள்ளி விட்டு மொபைலில் டார்ச் ஆன் செய்து , அந்த வெளிச்சத்தில் நடந்தாள்.
அவள் ஒரு கதவில் கை வைக்க அது தானாக திறந்தது.
கதவு பக்கத்தில் உள்ள ரமேஷின் அறைக்குள் நுழைத்தாள்.
அங்கு படுத்து கொண்டிருந்த ரமேஷ் விழித்துக் கொண்டான்.
“இவ்வளவு நேரமா..?”, என்று ரமேஷ் கோபிக்க
“எனக்கு பசிக்குது ” , என்று கூறினாள் திவ்யா.
” சாப்பிட தானே போன?”, என்று ரமேஷ் முறைக்க,
கட்டிலில் அமர்ந்தவாரே , “அது நாலு மணிக்கு இப்போ மணி ஒன்பதரை ” என்று கூறினாள்.
“நீ போய் உனக்கு பசிக்குதுனு நாலு இட்லி.., இல்லை ஐந்து இட்லி கொண்டு வா..”, என்று முகம் கழுவச் சென்றாள்.
மீண்டும் மூக்கால் நுகர்ந்து , வெங்காய சட்னிக்கு நல்லெண்ணையும் கொண்டு வா”, என்று சேர்த்து கூறினாள்.
“ஆமாம் , கண்டிப்பாக வேணும் . கொழுப்பு கம்மியா இருக்குல்ல..” என்று கூறிக் கொண்டே அறையை விட்டு வெளியே சென்றான்.
உணவை அவளிடம் கொடுத்து விட்டு ரமேஷ் மொட்டை மாடிக்கு ச் சென்றான்.
திவ்யாவிற்கு உண்ணும் பொழுது விக்கல் வர, தண்ணீரை தேடினாள். ஒரு கரம் அவளுக்காக தண்ணீர் கொடுத்தது.
அந்த முகத்தை பார்த்த அதிர்ச்சியில் தண்ணீர் குடிக்கும் முன்னே திவ்யாவின் விக்கல் நின்றது.
திவ்யாவிற்கு தண்ணீர் கொடுத்தது யார்..?
தீபாவின் நாளைய பொழுது சுமுகமாக அமையுமா.?
காத்திருப்போம்…….