Akila Kannan’s Thaagam 8
Akila Kannan’s Thaagam 8
தாகம் – 8
தாகம் – 8
வான நிறத்தில் ஒரு ப்ளூ சட்டை, அதற்கு ஏற்றார் போல் பண்ட் பொருத்தமான ஷூ கம்பீரமாக அமர்ந்து பைக்கை வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தான் ரமேஷ். அவனது தலை முடி, சிலு சிலவென காற்றில் அசைந்து கொண்டிருந்தது. பல பெண்களையும் திரும்பி பார்க்க வைக்கும் கம்பீரதோடு இருந்தான்.
அவனோடு பைக்கில் பிங்க் ஸ்கிர்ட் , ரோஜா பூ எம்பிராய்டரி போட்ட கருப்பு நிற டாப்ஸ் அணிந்து கொண்டு அமர்ந்திருந்தாள் திவ்யா. அவளுடைய முடி அவர்கள் செல்லும் வேகத்தில் காற்றில் பறந்து கொண்டிருந்தது.
பக்கத்தில் ஒரு கார் இவர்களை நெருக்கி பின் விலகியது.
“திமிர் பிடிச்சவன்… கார்ல போற திமிரு “, என்று அவனை திட்டினாள் திவ்யா.
“ரோட்ல யாரையும் திட்டி வம்பை விலைக்கு வாங்காத..”, என்று அவளை எச்சரித்தான் ரமேஷ்.
“தோடா… என்னை யாரு என்ன பண்ண முடியும்.? நம்ம கிட்ட பிரச்சனை பண்ணா தெரியும் .”, என்று சவால் விட்டாள்.
“இதையெல்லாம் கேட்கணுமுன்னு என் தலை எழுத்து.. “, என்று தன் மனதிற்குள் நொந்து கொண்டான் ரமேஷ்.
“என்ன சத்தத்தையே காணும் “, என்று திவ்யா கேட்க ஒன்றுமில்லை என்று தலை அசைத்தான் ரமேஷ்.
“எனக்கு ஒரு சந்தேகம் ” , என்று யோசனையோடு ராகம் பாடினாள் திவ்யா.
“உனக்கு சந்தேகமா ? உனக்கு தான் எல்லாம் தெரியுமே..” , என்று நக்கலடித்தான் ரமேஷ்.
“அது என்னவோ கரெக்ட் தான்.. ஆனால் உன் விக்ரம் சார் பற்றி தான் சரியா தெர்ல… “, என்று திவ்யா பேசிக் கொண்டிருக்கும் பொழுதே வேகமாக பிரேக் போட்டான் ரமேஷ்
“ஏன் வண்டிய நிறுத்திட்ட..? ஓட்டு..” , என்று சைகை காட்டினாள் திவ்யா.
வண்டியை தொடர்ந்து ஓட்டினான் ரமேஷ்.
” நான் ஒன்னு கேட்டா நீ பதில் சொல்லுவியா..?”, என்று வினவினாள் திவ்யா.
“கேளு..” , என சொல்லிக்கொண்டே இவள் என்ன கேட்பாளோ என்று யோசித்தான்.
“அன்னக்கி எப்படி கரண்ட் வந்தது..? “, என்று கேட்டாள் திவ்யா.
” இது உனக்கு ரொம்ப அவசியமா?”, என்று கேட்டான் ரமேஷ்.
“உனக்கு பதில் தெரியுமா ? தெரியாதா..? சொல்ல முடியுமா..? சொல்ல முடியாதா? “, என்று வரிசையாக கேட்டாள் திவ்யா.
“தெரியாது” , என்று ஒற்றை வார்த்தையாக பதில் கூறினான் ரமேஷ்.
“நீ பொய் சொல்ற ….” , என்று கூறினாள் திவ்யா.
ரமேஷ் பதில் ஏதும் பேசவில்லை.
சிறிது நேரம் கழித்து, “நீ அன்னக்கி விக்ரம் சார் கிட்டயே இந்த கேள்வியை கேட்ருவியோனு நினச்சேன்”., என்று மெதுவாக சொன்னான் ரமேஷ்.
“கேக்கணும்..” என்றாள் யோசனையுடன்.
“இன்னக்கி கூட்டிட்டு போறியா? விக்ரம் கிட்ட ஒரு இன்டெர்வியு பண்ணலாம்?”, என்றாள் ஆர்வமாக..
“உன்னைய இங்கயே இறக்கி விட்டுட்டு , நான் போய்கிட்டே இருப்பேன் ..”, என்று கூறினான் ரமேஷ்.
“சரி சரி.. நான் எதுவும் கேட்கல… “, என்று சமர்த்தாக கூறினாள் திவ்யா.
“உனக்கு நேரம் போகலான, எங்க ஆபீஸ்க்கு வந்து இன்டெர்வியூ எடுப்பியா..? ” , என்று வினவினான் ரமேஷ்.
“சரி.. சரி.. பயப்படாத….. நான் வரலை”, என்றாள் திவ்யா ஆறுதலாக..
“உன் வண்டி எப்ப வரும்? நான் டெய்லி உன்னைய பிக்கப் ட்ராப் பண்ண முடியாது.” , என்று பேசியபடியே வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான் ரமேஷ்.
திவ்யாவின் கவனம் ரமேஷின் பேச்சிலிருந்து வேறு எங்கோ திரும்பியது.
“அங்க பாரேன் ஏதோ கூட்டம்” , என்று கூறினாள்.
அங்கு அதிகமான டிராபிக் இருந்ததால், அவர்கள் பைக் மெதுவாக நகர்ந்தது.
“அங்கு என்ன கூட்டம்?”, என்று பார்ப்பதற்காக திவ்யா இறங்க முயற்சித்தாள்.
“திவ்யா எனக்கு நேரம் ஆச்சு.. உன்னைய உங்க ஆபீஸ்ல விட்டுட்டு நான் வேற வேலைக்கு போகணும்” , என்று சிடுசிடுத்தான் ரமேஷ்.
“சரி”, என்று தலையை சிலுப்பிக்கொண்டு சண்டைக்கோழியாய் அமர்ந்திருந்தாள் திவ்யா.
திவ்யாவிற்கு தானே கட்டுப்பாடு .., நமக்கு இல்லையே..!!!!
கூட்டத்துக்கு ஊடே புகுந்து , அங்கு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
தீபா மயங்கிய நிலையில் இருந்தாள்.
அவளை “சீ போ.. “, என்று விரட்டிய கடைக்காரர் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார். அந்த கடையில் வேலை பார்க்கும் பெண் ஒருத்தி தீபாவின் முகத்தில் தண்ணீர் தெளித்து கொண்டிருந்தாள். தீபா கண்களை திறந்த பாடில்லை.அவள் கண்கள் மேலே சொறுவியது. அந்த பெண் தீபாவின் வாயில் தண்ணீரை புகட்ட, தீபா சுய உணர்வு பெற்றவளாய் சிரமப்பட்டு கண்களை திறந்தாள்.
“தான் அந்த சின்ன பெண்ணை விரட்டிவிட்ட செயலால் தான் அவள் மயங்கிவிட்டாளோ!!“ என்ற குற்ற உண்ச்சியோ??? அல்லது “அவர் கடை முன்னே மயங்கி கிடந்தால் அவர் வியாபாரம் கெட்டுவிடும்!!!“ என்ற எண்ணத்தாலோ அல்லது “உண்மையான மனிதாபிமானமா??? ‘ தெரியவில்லை கடைக்காரரின் முகத்தில் பதற்றம் தெரிந்தது.
அவர்கள் அவள் முகத்தில் தெளித்து, புகட்டியது போக கால் பாட்டில் தண்ணீர் மீதம் இருந்தது. அதை அவளிடம் கொடுத்து குடிக்க சொன்னாள் கடையில் வேலை பார்க்கும் பெண்மணி.
அந்த பாட்டிலை கையில் வாங்கி தண்ணீரை வாயில் ஊற்ற நிமிர்ந்த பொழுது, அவள் கண்ணில் கடைகாரர் தென்பட்டார்.
“என்னிடம் , இரண்டு ரூபாய் தான் உள்ளது”, என்று கூறிக் கொண்டே பரிதாபமாக பார்த்தாள் தீபா.
“பரவால்ல குடி” என்று கூறினார் அந்த கடைக்காரர்.
பலர் தீபாவை சுற்றி நின்றதால் அவள் மனதுள் பயம் சூழ்ந்தது. தீபாவின் கைகள் பயத்தாலும், பலவீனத்தாலும் நடுங்கியது. கை நடுக்கத்துடன் தண்ணீரைச் சொட்டு சொட்டாக வாயில் ஊற்றினாள் தீபா. அந்த தண்ணீர் அவளுக்கு தேவாமிர்தமாய் இனித்தது. அந்த கால் பாட்டில் தண்ணீர் “அவள் நாக்கை தான் நனைத்தது. தொண்டைக்கு கூட செல்லவில்லை” என்று அவள் நினைக்கும் பொழுது, அன்று பாண்டியும் இப்படி தானே சொன்னான். “அவனுக்கும் இப்படி தான் அன்று தாகமாய் இருந்திருக்குமோ..?” என்று யோசித்தாள். அவள் சிந்தனையை கலைக்கும் விதமாக ஒரு பெரியவரின் குரல் கேட்டது.
“அது தான் அந்த பொண்ணு எந்திருச்சுருச்சுல.. எல்லாரும் கிளம்புங்க .. கிளம்புங்க…” , என்று சத்தமாக கூறினார்.
தீபா தன்னை சுதாரித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.
தீபா நடக்க ஆரம்பித்த உடன் அங்கிருந்த கூட்டமும் கலைந்தது.
சாலையை அடைத்துக் கொண்டிருந்த கூட்டம் கலைந்ததால், டிராபிக் குறைந்து அனைத்து வாகனங்களும் வேகமாக நகர ஆரம்பித்தது.
தண்ணீர் குடித்ததால் வந்த தெம்பில் அவள் கால்கள் வேகமாய் நடந்தது. தீபாவின் சிந்தனை அதை விட வேகமாக ஓடியது.
காலையிலிருந்து நடந்த சம்பவங்கள் அவள் மனதை பாதித்திருந்தது.
நடந்த சம்பவங்களை அசை போட்ட படியே நடந்தாள் தீபா.
ரமேஷ், திவ்யாவின் பைக்கை கடந்து நடந்து சென்றாள் தீபா.
“பாரு , எப்படி போகுதுனு.. அவங்க கவனம் இல்லாம போயிட்டு நாம இடிச்சிட்டோமுன்னு சொல்லுவாங்க “, என்று எரிச்சல் பட்டான் ரமேஷ்.
“ரமேஷ் சொல்வது சரியோ ?? “ என்று திவ்யாவின் அறிவு சிந்திக்க, ஆனால் அவள் மனமோ “ பாவம் அந்த பெண்ணிற்கு என்ன கஷ்டமோ ?” , என்று அந்த ஏழைப் பெண்ணிற்காக பரிதாபப் பட்டது.
“திவ்யா அமைதியாக இருப்பதே பெரிய விஷயம்“, என கருதி எதுவும் பேசாமல் வண்டியை ஓட்டினான் ரமேஷ்.
திவ்யாவை இறக்கி விட வேண்டிய இடத்தில் , இறக்கி விட்டு விட்டு , “எங்கயும் ஊர் சுத்தாமா வீடு வந்து சேரு…” , என்று எச்சரிக்கை செய்த பின் கிளம்பினான் ரமேஷ்.
ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தாள் தீபா.
“ஏண்டி சோர்வா இருக்க… காலைல இருந்தே ஒண்ணுமே சாப்பிடலனா இப்படி தா இருக்கும்… இந்தா சோறு..சாப்பிடு …”, என்று ஒரு தட்டை கொடுத்தாள் பாக்கியம்.
பசி வயிற்றை கிள்ளியது. நடந்த சம்பவங்கள் அவள் மனதை குத்திக் கொண்டிருந்தது. சிந்தனை எங்கோ இருக்க , உணவை அள்ளி அள்ளி வாயில் போட்டுக் கொண்டிருந்தாள் தீபா. தட்டில் சோறு இல்லாததைக் கண்டு தான் அவள் உண்டு முடித்ததை உணர்ந்தாள்.
தீபா சாப்பிட்டு முடித்த பின், அவள் குடிப்பதற்கு பாக்கியம் தண்ணீர் கொடுத்தாள்.
தண்ணீர் பழுப்பு நிறத்தில் தான் இருந்தது. தீபாவிற்கு , அவள் கொஞ்சமாக குடித்த தெளிவான பாட்டில் தண்ணீரின் நினைவு வந்தது. அப்படியே ஒரு ஆசையும் வந்தது.
” எவ்வளவு சுத்தமான தண்ணீர்..” , என்று நினைத்தாள் தீபா.
இந்த நினைவு வர, அவசர அவசரமாக கையை கழுவிக் கொண்டு காலையில் அடிப்பட்ட வலியையும் பொருட் படுத்தாமல் ஓடினாள் தீபா.
அவளுக்கு பழக்கமான தெருவோர டீக்கடைக்கு முன் தான் அவள் கால்கள் நின்றது.
அந்த தெருவோர டீக் கடையில் பல பிளாஸ்டிக் பாட்டில் சுத்தமான தண்ணீரோடு அடுக்கி வைக்கப் பட்டிருந்தது.
“அண்ணா , அந்த தண்ணீர் எவ்வளவு “? , என்று கேட்டாள் தீபா.
“இருபத்தொரு ரூபாய் “, என்று கூறி கொண்டே தன் வியாபாரத்தை நடத்திக் கொண்டிருந்தார் அந்த டீக்கடைக்காரர்.
அந்த நேரம் தீபாவுக்குள் ஒரு எண்ணம் தோன்றியது.
எந்த வேகத்தில் தீபா கடைக்கு வந்தாளோ!! அதே வேகத்துடன் வீட்டுக்குள் ஓடினாள். கால்கள் வேகமாக ஓட அவளுடைய எண்ணமும் திட்டமும் அதை விட வேகமாக ஓடியது..
மொத்த வீட்டையும் புரட்டி பார்த்தாள் தீபா.
தீபா தேடினாள், தேடினாள், தேடினாள்…
“ஏண்டி..!! என்ன தேடுற..?” , என்று கேட்டாள் பாக்கியம்.
தீபா பதில் ஏதும் பேசவில்லை.
சிறு தேடலுக்கு பின், “அம்மா நான் இங்க வச்சிருந்த பை எங்கே..? ” , என்று அந்த சிறிய டேபிளை காட்டிக்கொண்டே எதிர் கேள்வி கேட்டாள் தீபா..
“எந்த பை..? “, அந்தப் பையிலிருந்து தனக்கு எதாவது கிடைக்குமோ என்ற எண்ணத்தில் ஆர்வமாக கேட்டான் பாண்டி.
“நான் கொஞ்சம் காசு போட்டு வைத்திருப்பேனே. அந்த பை”, என்று கூறிக் கொண்டே அந்த பையை அவசர அவசரமாக தேடினாள் தீபா.
அப்பொழுது, பாண்டி இடுப்பு வரை தொங்கி கொண்டிருந்த தீபாவின் முடியை இழுத்து விளையாடினான். பாண்டியை சுள்ளென்று அடித்தாள் தீபா.
“அக்கா, நான் விளையாட்டாகத் தான் இழுத்தேன் “, என்று பரிதாபமாக கூறினான் பாண்டி.
அவனை முறைத்து பார்த்தாள் தீபா.
“ஏன் அக்கா ? நான் எப்பொழுதும் போல தானே இழுத்தேன் “, என்று அழுதபடியே கூறினான் பாண்டி.
தீபா பதில் எதுவும் பேசாமல் அந்த பையை தேடினாள்.
“எந்த பை.. ? அது எப்படி இருக்கும் ?”, என்று வினவினார் பாக்கியம்.
“அம்மா சிவப்பு பை, மஞ்சள் பூ போட்டு இருக்குமே.. நான் காசு சேர்த்து வைப்பேனே..”, என்று மீண்டும் தெளிவாக கூறினாள்…
“அக்கா அன்னைக்கி எனக்கு ஒரு ரூபா, எடுத்து குடுத்தா..” , என்று சிணுங்கி கொண்டே கூறினான் பாண்டி.
“அந்த சிவப்பு பையா..? அப்பப்ப துட்டு குடுப்பியே.. அதுவா…?”, என்று கேட்டாள் பாக்கியம்.
“ஆமா..”, என்று தலை அசைத்தாள் தீபா.
அவர்கள் வீட்டு செல்ல பிராணி அந்த பையை வாயால் கவ்விக் கொண்டு அவளிடம் கொடுத்தது.
வழக்கமாக அன்பாக நடந்து கொள்ளும் தீபா இன்று முரட்டுத்தனமாக நடந்து கொண்டாள்.
படக்கென்று அந்த பையை பிடுங்கினாள் தீபா.
அந்த நாய் அவளைப் பாவமாக பார்த்தது.
இது அவளது குணம் அல்லவே..!!!
பையை திறந்து, அதை அப்படியே கீழே சரி த்தாள் தீபா.
நாணயங்கள் உருண்டு ஓடின.
ஒவ்வொரு துட்டையும் எண்ணினாள் தீபா.
ஒரு ஐந்து ரூபாய் நாணயம்
ஒரு ரூபாய் நாணயம்
இரண்டு ரூபாய் நாணயம்
ஐம்பது பைசா நாணயம்
ஐம்பது பைசா நாணயம்
ஐம்பது பைசா நாணயம்
ஆக மொத்தம் ஒன்பது ரூபாய் ஐம்பது காசு இருந்தது..
அவள் கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது .
“எதற்காக அழுகிறாள்” என்று புரியாமல் பார்த்தாள் பாக்கியம்.
பாண்டியனும், அந்த செல்ல பிராணியும் அவளைப் பாவமாக பார்த்தனர்.
தீபாவின் மனதிலும், அறிவிலும் எதுவும் தோன்ற வில்லை..
கண்ணில் வடியும் கண்ணீரை துடைத்துக் கொண்டாள். தீவிர சிந்தனையில் ஆழ்ந்த்தாள். அந்த நொடியில் அவளுக்கு ஒன்று தோன்றியது. எதற்கும் ஆசை படாமல் , எதார்த்தத்தை புரிந்து கொண்டு வாழும் தீபாவின் இந்த ஆசை புதிது.
தானே காசு சேர்த்து, ஒரு வாட்டர் பாட்டில் வாங்கி தெளிந்த தண்ணீர் குடிக்க வேண்டுமென்ற ஆசை அவள் மனதில் வித்திட்டது
“காசு சேர்க்க வேண்டும் .. தண்ணீர் குடிக்க வேண்டும்.”, என்ற சொல் மீண்டும் மீண்டும் ஒலித்தது.
காசு பணம் துட்டு மணி மணி
தண்ணி தண்ணி தண்ணி
காசு பணம் துட்டு மணி மணி
தண்ணி தண்ணி தண்ணி
என்ற வரிகள் அவளுக்கு பாடலாய் ஒலித்தது.
“நான் என்ன பங்களா , கார் என்றா ஆசைப் பட்டேன்? ஒரு பாட்டில் தண்ணீர் தானே?” , என்று தீபாவின் மனது அவள் அறிவிடம் வாதிட்டது.
இருபத்தொரு ரூபாய், ஒரு சராசரி மனிதனுக்கு சாதாரண விஷயம்.
ஆனால் , தீபாவிற்கு..???
தீபவின் ஆசை தவறா?
அவளின் இந்த ஆசை பேராசையா?
தாகம் தொடரும்…