VNE42(1)

VNE42(1)

42
மஹாவின் வீடு அல்லோலகல்லோல பட்டுக் கொண்டிருந்தது. திருமணத்திற்கு புடவை எடுக்கும் வைபவத்திற்காக ஷ்யாமின் பெற்றோர்கள் வந்திருந்தனர். திருமணம் வெகு சமீபத்தில் இருப்பதால் அத்தனை வேலைகள் குவிந்து கிடந்தது. இலக்கின பத்திரிக்கை எழுதி மூன்றாம் நாளே, நல்ல நாள் என்று கூறிவிட, ஷ்யாமின் பெற்றோரும்  கிளம்பி வந்து விட, அவன் பிறகு ஜாயின் செய்து கொள்வதாக கூறியிருந்தான் ஷ்யாம்.
வெளிவட்டாரத்தை பொறுத்தவரை அந்த டிவிட்டர் லீக்ஸ் பெரிய அதிர்வை கிளப்பியிருந்தது. ஷ்யாம் ஹைதராபாத்தில் இருந்ததால் அவன் அறியவில்லை. ஏதோ பிரச்சனை என்று மட்டும் சிலர் தெரிவித்து இருந்தனர். ஆனால் என்னவென அவன் கேட்டுக் கொள்ளவில்லை. அவனுக்கு அங்கு நிற்க நேரமில்லாமல் ஓட வேண்டியிருந்தது.
தென்னகத்தின் மிகப்பெரிய நடிகை, இளைஞர்களின் கனவுக் கன்னி, அவளது அந்தரங்க புகைப்படத்தை அதிலும் இவ்வளவு தெளிவாக பார்த்த சமூகம், சோஷியல் மீடியாவில் தீயை பற்ற வைத்திருந்தது.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கோணங்கள். சிலர் கொதித்தனர். சிலர் குளிர் காய்ந்தனர். சிலர் அந்தரங்கமாக சிலிர்த்துக் கொண்டனர். சிலர் உண்மையிலேயே வருந்தினர்.
எத்தனையோ விதமான வெடிப்புகள்.
அந்தரங்க படங்களை வெளியிடுவது குற்றம், என்ன இருந்தாலும் அது இன்னொருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை என்று நியாயவாதிகள் இருந்தாலும், தமிழனாய் இருந்தால் ஷேர் செய் சமூகம் இதையும் ஷேர் செய்து பேரின்பம் கண்டது.
படத்தில் இருப்பது யார் என்பதை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்பது வரையிலான விவாதங்கள் நடந்து கொண்டிருந்தன. ஒவ்வொருவரும் யார் யாரையோ கூறிக் கொண்டிருக்க, ஒரு சிலர் ஷ்யாம் பேரை முணுமுணுத்தாலும் அதை வெளிப்படையாக கூறும் தைரியம் இல்லை.
அந்த படங்களை பார்ப்பதற்காக அந்த அக்கௌன்ட்டை பின் தொடர்ந்தவர்களை காட்டிலும், டிவிட்டரில் அதற்காகவே இணைந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.
இங்கு பேசப்படும் பொருள் சௌஜன்யா!
தென் இந்தியாவின் நம்பர் ஒன் நடிகை!
அவளது பார்வை வீச்சுக்காக காத்திருப்பவர்கள் ஏராளம் என்பதுதான் அடிப்படை. அதனால் தான் விஜய் சௌஜன்யாவை தேர்ந்தெடுத்ததும்!
உளவியல் ரீதியாக ஷ்யாமை மொத்தமாக வீழ்த்த வேண்டும் என்றால் அந்த அளவு வலுவான, பிரபலமான, முக்கியமாக அவன் மேல் மோகம் கொண்ட ஒரு பெண் தேவை!
அது சௌஜன்யா என்பது அவன் எப்போதோ போட்டு வைத்த கணக்கு.
எத்தனுக்கு எத்தனான ஷ்யாமிடமே, அவன் அறியாமல் பணத்தில் கை வைத்திருந்தவன் எத்தகைய புத்திசாலியாக இருக்க வேண்டும்? நேர்மையாக இருப்பவர்கள் பெரும்பாலும் எச்சரிக்கையாக இருக்க மாட்டார்கள். ஆனால் தவறு செய்பவர்களுக்கு எந்நேரமும் மனம் விழிப்பாக இருக்கும். அந்த தவறுகளிலிருந்து எப்படி தப்பித்துக் கொள்வது என்று அது யோசித்துக் கொண்டே இருக்கும்.
அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் தான், ஒரு வேளை தான் சிக்கினால் அவனிடமிருந்து தப்பிக்க சில கணக்குகளை தன்னிடம் வைத்துக் கொண்டவன், அவனை மிரட்ட அவனது பெண் தொடர்புகளை உபயோகித்துக் கொள்ள நினைத்தான்.
விஜியும் யோக்கியனில்லை. ஷ்யாமும் யோக்கினில்லை. எப்போதுமே முந்தியவன் கையில் மந்திரவாள்! ஆனால் எந்த காலத்திலும் யாரையும் மிரட்டக் கூட இப்படிப்பட்ட கேவலமான உத்திகளை பயன்படுத்த ஷ்யாம் நினைத்ததில்லை. அவனது செயல்கள் அத்தனையும் முகத்துக்கு நேராக மட்டுமே.
அடிக்க வேண்டும் என்றால் நெஞ்சில் மட்டுமே! முதுகில் அல்ல!
நேர்மை அவனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று! இது போன்ற தொழில்களில் மிகவும் தேவைப்படும் ஒன்றும் கூட!
மிரட்டுவான், மீறினால் அடிப்பான், துப்பாக்கியை காட்டியதும் கூட நடந்திருக்கிறது. பவுன்சர்களை வைத்து மிரட்டியது நடந்திருக்கிறது. கஸ்டடி, சொல்லவே தேவையில்லை. ஆனால் என்றுமே இப்படிப்பட்ட உத்திகள் மேல் அவனுக்கு பிடித்தமில்லை. எப்படிப்பட்ட எதிரியாக இருந்தாலும் நேருக்கு நேராக மட்டுமே பார்ப்பவன், அந்தரங்கத்தை மதிப்பவன், உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுப்பவன்.
ஆனால் விஜய் அவனோடு இருந்த போதும் அதை பற்றியெல்லாம் கவலைப்பட்டதில்லை. எந்த நிலைக்கும் சென்றுதான் ஷ்யாம் குறித்தான பயத்தை இன்னும் இறுக்கமாக்கினான். எந்த வழியையும் உபயோகிப்பான். அதிலும் இது போன்ற படங்களை எடுக்க இப்போதெல்லாம் மெனக்கெடவே தேவையில்லை ஆயிற்றே!
அறையிலிருக்கும் டூம் லைட்டாகட்டும், ஏசி யூனிட், பிளக், ஷவர் ஹெட் என்று எங்கு வேண்டுமானாலும் ஃபிக்ஸ் செய்ய மிளகளவு நேனோ ஸ்பை கேமராக்கள் மார்க்கெட்டில் குவிந்து கிடக்கிறதே!
இவையெல்லாம் ஃபிக்ஸ் செய்து தான் படங்களை எடுக்க முடியும் ஆனால் தொழில்நுட்ப அறிவு இருக்கும் ஒருவன், சம்பந்தப்பட்டவர்களின் செல்பேசியையோ லாப்டாப்பையோ எங்கிருந்து வேண்டுமானாலும் ஆக்டிவேட் செய்து எப்படி வேண்டுமானாலும் படமெடுக்க முடியும், உங்களது செல்பேசியை எப்போதாவது அது போன்ற யாரிடமாவது கொடுத்து வைத்திருக்கும் பட்சத்தில்.
ஒரு குட்டி சாப்ட்வேர்… நம்மையும் அறியாமல் அவர்களால் இன்ஸ்டால் செய்து விடவும் முடியும், அதை எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்கவும் முடியும். செல்பேசி ஆப் செய்து வைக்கப்பட்டு இருந்தாலும் அதை ஒரு ஸ்பையாக மாற்றிவிட முடியும். நமக்கு வரும் கால்ஸ், மெசேஜ், வாட்ஸ்அப் மெசேஜ் என்று அனைத்தையும் படிப்பதோடு, மைக்கை ஆன் செய்து அங்கு இருப்பவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது வரை கவனிக்க முடியும்.
இது தொழில்நுட்ப முன்னேற்றமா? அல்லது மனிதர்களின் மேல் தொழில்நுட்பம் தொடுத்துள்ள போரா?
எப்படிப்பட்டவர்களுக்கும் அவர்களது அந்தரங்கத்தை பாதுகாக்க உரிமை உள்ளது எனும் போது, அதை வெளிப்படுத்தி பார்ப்பது எவ்வளவு கேவலமான உத்தி?
காதலிக்கும் போது இருவருக்கிடையில் நடந்த அந்தரங்கமான பேச்சுவார்த்தையை காதலன் வெளியிட்டு விட, அதை கேட்க இந்த சமூகம் அங்கேயே குவிகிறது. இன்னொரு சம்பவத்தில், காதலித்த இருவர் நெருக்கமாக இருந்த சமயத்தில் தேவையில்லாமல் எடுத்த, அவர்கள் அழித்தும் விட்ட புகைப்படத்தை செல்பேசி ரிப்பேர் செய்பவன் ரிக்கவரி சாப்ட்வேர் போட்டு எடுத்து வெளியிடுகிறான்.
இவர்கள் மனநிலை பாதித்தவர்களா? அன்றாட வாழ்க்கையில் நாம் தினமும் சந்திக்கும் மனிதர்கள் தான். ஆனால் உள்ளுக்குள் இது போன்ற மிருகங்கள் உறங்குவதை அலங்காரம் செய்து மறைத்துக் கொள்பவர்கள்.
மற்றவர்களின் அந்தரங்கத்தை எட்டி பார்க்கும் மனநிலை பிறழ்ந்தவர்கள் இப்போது அதிகமாகி விட்டார்களோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.
எது இந்த சமூகத்துக்கு சிலிர்ப்பை தருகிறது? இன்னொருவரின் அந்தரங்கம்!
காவிரி பிரச்சனை? ‘எங்களுக்கு தொடர்பில்ல’ குடிக்க தண்ணி கேக்க மாட்டல்ல?
விவசாயிகள் தற்கொலை? ‘யோவ் நாங்க ஐடி!’ ‘நாங்க வியாபாரி’ ‘நாங்க இது… நாங்க அது… எங்களுக்கும் விவசாயத்துக்கும் என்ன தொடர்பு?’ அப்புறம் மூணு வேளையும் உள்ள போகுதே… அது எப்படி ராசா வருது? நெட்ல இருந்து டவுன்லோட் பண்றியா?
ஹைட்ரோகார்பன் பிரச்சனை? ‘இதெல்லாம் நமக்கு தேவையா?’ தேவைதான், ஃப்ராக்கிங்(fracking) டெக்னாலஜியே நிலத்தோட புவியியல் அமைப்பையே மாற்ற கூடிய ஒன்று. மண்ணை மலடாக்க மட்டும் இல்லாம சுற்றியுள்ள இடங்களையும் மலடாக்கும் ஒன்று. அந்த சர்ச்சைக்குரிய தொழில்நுட்பத்தை முன்னேறிய நாடுகள் தவிர்க்கும் போது நெற்களஞ்சியமா இருக்க தஞ்சைய குறி வெச்சு செயல்படுத்தியே தீருவேன்னு இருக்கறது எத்தகைய கோரமான கொள்கை முடிவு. ஒரு இனத்தை அழித்தே தீரனும்ன்னுங்கற முடிவா? அதற்கும் காவிரியில் நீர் திறந்து விடாமல் டெல்ட்டாவை பாலைவனமாக்குவதற்கும் தொடர்பு உள்ளதா என்ன? கான்ஸ்பைரசி தியரிகள் உண்மையா அல்லது எதேச்சையா?
ஸ்டெர்லைட்? ‘ம்ஹூம் எங்கேயோ இருக்க தூத்துக்குடில எவனுக்கு புற்றுநோய் வந்தா எங்களுக்கு என்ன? அப்புறம் என்ன டேஷுக்கு தெருவுக்கு ரெண்டு புற்றுநோய் மருத்துவமனையை பெருக்கறோம்? அவங்களும் காசு பார்க்க வேண்டாமா?’ ஏல நீ பெத்ததுக்கும் உன்னை பெத்ததுக்கும் வந்தா கூட இப்படித்தேன் சொல்லுவியா? நாலு தடவை மூடின பேக்டரிய்யா அது!
அணுஉலை விவகாரம்? ‘கரண்ட் இல்லாம என்னத்தைய்யா புடுங்குவீங்க?’ அதுக்குத்தான் சூரிய மின்சாரம் இருக்கே? ‘ங்கே!’ ஃபுகுஷிமோ சம்பவத்துக்கு பின் அரசாங்கம் அந்த இடத்தில் அணு உலையை அமைக்க நடவடிக்கை எடுக்கும் போது மக்களுக்கு என்ன தைரியத்தை கொடுத்துவிட்டது? கடலில் கலந்த எண்ணையை பக்கெட்டில் அள்ள சொன்ன அரசாங்கம், அணு உலை வெடித்தால் அதை தீபாவளி என்று கதை விடுமா?
நியுட்ரினோ ப்ராஜக்ட்? ‘அறிவியல் முன்னேற்றத்தை தடுக்கறீங்க, வேலைவாய்ப்பு குவிய போகுது, ஊரே சொர்க்கமா மாற போகுது’ அப்புறம் ஏன்யா கேஜிஎஃப் (கோலார் தங்க வயல்)  நியுட்ரினோ ப்ராஜ்கட்ட மூடினாங்க?
ஊர்ல இருக்க குப்பையெல்லாம் தமிழ்நாட்டுல கொண்டு வந்து கொட்ட இதென்ன குப்பைத்தொட்டியா?
இத்தனை வெடிப்புகளையும் பிரச்சனைகளையும் நீர்த்து போக செய்ய யாரோ ஒரு பிரபலத்தின் அந்தரங்க புகைப்படம் ஒன்று போதும். புரட்சி பேசும் சமூகம் அதை அப்படியே கைவிட்டு, ‘ஹெச்டி பிரிண்ட் இருக்கா மச்சி?’ என்று கேட்கும்.
ஒருசில நேரங்களில் அரசாங்கமே திட்டமிட்டு கட்டமைக்கிறதோ என்று கூட தோன்றுகிறது. ஆனாலும் இன்னொருவனின் அந்தரங்கத்தை அறிய, தெரிந்து கொள்ள இந்த சமூகம் பாடாய் படுவது என்னவோ உண்மை!
இந்த உளவியல் உண்மையைத்தான் விஜி உபயோகித்தான். மகாவை தாக்குமொன்று ஷ்யாமையும் தாக்கும். மகாவை காயப்படுத்தினால் ஷ்யாமுக்கு வலிக்கும். அவனது அப்போதைய குறிக்கோள் அது ஒன்றே.
ஷ்யாம் அவனிடம் வம்படியாக சொத்துக்களை கைப்பற்றியதோடு, மகாவையும் கைப்பற்றியிருகிறானே! அந்த எரிச்சலை எப்படி ஆற்றிக் கொள்வது?
அவனிடமிருந்த புகைப்படங்களை மஹாவுக்கு அனுப்பியதோடு, டிவிட்டரிலும் லீக் செய்து தன் மனதை ஆற்றிக் கொண்டான்.
அவள் எந்த காலத்திலும் ஷ்யாமை திருமணம் செய்து கொண்டு விடக் கூடாது.
மஹா அன்று அத்தனை கெஞ்சியும் அவன் அந்த படத்தை நீக்கவில்லை.
“கல்யாணத்தை நிறுத்து மஹா… நான் பிக்ஸ டெலீட் பண்றேன்…” என்றவனிடம் என்ன சொல்வது?
அவள் என்ன செய்வது என்றும் கூட அறியாமல் பித்து பிடித்ததை போல அமர்ந்திருந்தாள். தேடி வந்த பிருந்தா அவளிடம் ஏதேதோ பேசியபடி இருந்தாலும், என்ன நடக்கிறது என்று புரியாமல் அமர்ந்திருந்தாள்.
அதற்கு பின் எப்படி வீடு வந்து சேர்ந்தாள் என்று கூட அவள் அறியாத நிலையில் மேலும் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு அந்த லிங்க்கையும் இவளுக்கு அனுப்பி விட,
இவள், “ஐ வில் ஸ்டாப் தி மேரேஜ்…”
அனுப்பி விட்டு வெடித்து அழுதாள்!
விஜய் கட்டாயப்படுத்தியதால் அவள் அதை கூறவில்லை.
அவளால் ஷ்யாமுடனான உறவை இனியும் ஏற்க முடியாது என்று முடிவாக தோன்றியிருந்தது.
ஏற்கவே முடியாது!
*****
“என்னடி இன்னும் கிளம்பாம உட்கார்ந்து இருக்க?” டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த மஹாவை பார்த்து பைரவி கேட்க, அவள் ஏதும் பதில் கூறாமல் எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.
மூஹூர்த்த புடவை எடுப்பதை ஒரு தனி வைபவமாக கொண்டாடுவது அவர்களது குடும்பங்களில் உள்ள வழக்கம். நெருங்கிய சொந்தங்களை அழைத்துக் கொண்டு போவது நடைமுறை என்றாலும் இரண்டு குடும்பத்தோடு பிருந்தா மட்டும் போதும் என்று முடித்து விட்டிருந்தான் ஷ்யாம்.
அவன் சொல்வதை மீறி மற்றவர்களை அழைக்க முருகானந்தம் தயங்கினார்.
அவரது சிறிய தங்கை, “அண்ணா… பெரிய இடத்து சம்பந்தம்ன்னு எங்களை ஒதுக்கற…” என்று குறைபட,
“அதெல்லாம் இல்லம்மா… மாப்பிள்ளைக்கு தோதான டைம்ல வர்றாரு… சட்டுன்னு முடிச்சுட்டு கிளம்பனும்ன்னு நினைக்கராரு… நாமளும் இப்ப கொஞ்சம் அனுசரிச்சுட்டு போய்ட்டா நாளைக்கு நம்ம கைல வந்துடுவார்… உனக்கும் அப்படித்தானே ம்மா… அவங்க சொல்றதை கேட்டுக்கிட்டோம்ல…” என்று முடித்து விட, அந்த பதிலெல்லாம் அவருக்கு திருப்தியாக இல்லை.
“ரொம்ப தகைஞ்சு போறீங்கண்ணா… இது நல்லாவும் இல்ல…”
“அப்படியெல்லாம் இல்ல ஆத்தா… அவங்களும் அதே அளவுக்கு நம்ம கூட அனுசரணையா இருக்காங்க…” என்றாலும் அவரது தங்கைக்கு மகாவை தன் மகனுக்கு என நினைத்திருந்தார். 
ஆனால் முன்னர் கன்னாபின்னாவென செய்தி பரவிய போது, “அவன் ரொம்ப மோசமாமே. இனிமே யாருன்னா புள்ளைய கட்டுவா?” என்று வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரிய தங்கையோ, “அண்ணா… எந்த விஷயத்துக்கும் எங்ககிட்ட கலந்துக்கவே இல்ல… எப்படிண்ணா இவங்க முறைக்கு வருவாங்க? அதுவுமில்லாம நமக்கும் வசதி இருக்குன்னாலும் அவங்க ரொம்ப மீறின வசதிக்காரங்க… இந்த சம்பந்தமே எனக்கு பிடிக்கல…” என்று நேரடியாக எதிர்ப்பை தெரிவிக்க,
“இரண்டு பேருக்கும் இஷ்டமாகிடுச்சு பெரியவளே… அப்புறம் நாம என்ன சொல்றது? நம்ம மச்சான் தானே? என்ன பெரிய வசதி? அவங்க அப்படியெல்லாம் நினைக்கல ஆத்தா…” என்றாலும் அவர் சமாதானமாகவில்லை.
“எப்படியோ மகாவை வெளியக் கொடுத்து சொந்தமே வேண்டாம்ன்னு சொல்லிட்டீங்க…” என்று முடித்துவிட, இதற்கும் மேல் பேசுவதில் பயனில்லை என்று முடித்திருந்தார்.
இத்தனைக்கும் இதுவரை பொங்கலுக்கும் தீபாவளிக்கும் இரண்டு தங்கைகளுக்கும் குறையாமல் சீர் செய்து கொண்டிருப்பவர் இவர். எந்த பிரச்சனையாக இருந்தாலும் தமையனாக முன் நின்றவர். ஆனால் தன்னுடைய மகளுக்காக இவர்கள் நிற்காதது மனதுக்குள் முள்ளை தைத்த உணர்வு.
இவர்களது எண்ணம் இவ்வளவுதான் என்று எண்ணிக்கொண்டு, இவர்களுக்காகவேனும் மகாவின் திருமணத்தை மிகச் சிறப்பாக நடத்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.
அதை பைரவியிடம் கூறவும் செய்திருந்தார்.
இலக்கின பத்திரிக்கை எழுதும் போதே பெண்ணின் அழகையும் ஷ்யாமோடு அவளுக்கிருந்த பொருத்தத்தையும் விழி நிறைய பார்த்து தனக்குள் வெகுவாக நிரப்பிக் கொண்டிருந்தார்.
நிற்காமல் ஓடிகொண்டிருந்த மனைவியை தன்னருகே நிறுத்தி, ஷ்யாம் மகாவுக்கு மோதிரத்தை அணிவிப்பதை காட்டி,
“என்ன பொருத்தம் பாரேன் பைரவி? நாம தேடிப் பிடிச்சாலும் இப்படியொரு மாப்பிள்ளை வாச்சு இருக்குமா? நம்ம மகா ரொம்ப குடுத்து வெச்சவ…” என்று ஆசையாக பார்த்துக் கூற, பைரவி சிரித்துக் கொண்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!