Alaikadal 1

Alaikadal 1

அலைகடல் – 1

உலகிலேயே மிகப்பெரிய நீர்நிலைகள் வரிசையில் மூன்றாம் இடம் பெற்றிருக்கும் அகன்று விரிந்த கடற்பரப்பே நமது இந்தியப் பெருங்கடல். அத்தகைய இந்து மகாசமுத்திரத்தின் உள்ளிருந்து எழுவது போல் அந்த அதிகாலை வேளையில் சூரியபகவான் சாந்தமாய் எழ அக்காட்சி என்றும் காண்போரைக் கொள்ளை அடிக்காமல் விட்டதில்லை.

அதனை காண்பதற்கே அதிகாலை வேளையில் காத்திருப்போர் எத்தனையோ பேர். கரையில் இருந்து பார்ப்பதற்கே இப்படியென்றால் சுற்றிலும் ஆழி சூழ்ந்திருக்க நடுக்கடலில் இருந்து பார்ப்போருக்குப் பார்க்கப் பார்க்கத் தெவிட்டாது என்று நீங்கள் நினைத்தால் அது தவறுதான்.

ராட்சத இயந்திரத் திமிங்கலம் என்று எண்ணும்படியாக நடுக்கடலில் இந்தியக் கப்பற்படையின் போர்க்கப்பல் விக்ரமாதித்யா மெதுவே நகர்ந்துக் கொண்டிருக்க உள்ளிருக்கும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் மும்முரமாய் தத்தமது காலைக் கடன்களை முடிக்கச் சிறிதும் சோம்பல் இன்றி தங்களுக்கே உரிய பாணியில் மிடுக்குடன் சென்றுக்கொண்டிருந்தனர்.

அக்கப்பலில் உள்ள சிறு அறையில் தனது வழக்கமான கருப்பு நிற டீசர்ட் மற்றும் அதே நிற டிராக் பான்ட்டில் தன் இரண்டரை அடி கூந்தலை இறுக கொண்டையிட்டு முடித்து அவள் திரும்ப அறையில் இருந்த மற்ற இருவரும் அவளைப்போலவே தயாராய் இருந்தனர்.

அதில் வழக்கத்திற்கு மாறாக சோர்வாக இருந்த ஒருத்தியை யோசனையோடு பார்த்து புருவம் சுருக்கியவள், “ஜான்சி வாட் ஹாப்பன் டூ யூ?” என்று தனக்கே உரிய பாணியில் கணீரென்று விசாரிக்க அந்த ஜான்சியாகப் பட்டவள் திடுக்கிட்டு நிமிர்ந்து “ந.. நத்திங் மேம்” என்றாள் சற்றுத் தடுமாற்றத்தோடு.

பின்னே வந்தே ஒரு வாரம் மட்டுமே ஆகியிருக்க, அந்த கப்பலில் அனைவரையும் பத்தோடு பதினொன்று போல் யவரையும் கண்டுகொள்ளாமல் தேவையான பொழுதில் மட்டுமே சரியாக பேசிய ஜீவன் திடீரென்று அவளைக் கேள்வி கேட்டால் தடுமாறத்தானே செய்யும்.

ஜான்சியின் பதிலை நம்பாமல் கைகளைக் குறுக்கே கட்டிக்கொண்டு அவள் உற்று நோக்க ஜான்சிக்கு பதிலாக அருகில் இருந்தவள் பதில் சொன்னாள். (பின் வரும் உரையாடல்கள் ஆங்கிலத்தில் என்றாலும் நம் வசதிக்காக தமிழில்)

“மேம் அவளுக்கு காலையில் இருந்து…” என்று நான்கு வார்த்தைகள் தொடங்கியிருப்பாள்.

“பவிகா ஸ்டாப் இட். இதென்ன ஸ்கூல்லா அவளுக்கு பதில் நீ பேச? வீ ஆர் ஆர்மி உமன். எப்போதும் எதுக்கும் கலங்கவோ பயப்படவோ கூடாது. அப்படி இருந்தா இங்க இருக்கவே கூடாது” என்றாள் நிறுத்தி நிதானமாக. பவிகாவிடம் பதில் கூறினாலும் பார்வை ஜான்சியைக் குறிவைத்திருந்தது.

அக்குரலே ஜான்சிக்கு ஒருவித தெம்பைக் கொடுக்க இழந்த கம்பீரத்தை மீட்டவள், “மேம் எனக்கு டுடே பீரியட்ஸ். ட்ரைனிங் டைம் மாத்திரை எடுத்து தள்ளிப்போட்டதால வயிறு வலியோட காலையில வாமிட்டும் சேர்ந்திருச்சி. என்னால உடற்பயிற்சி செய்ய முடியுமா என்று தெரியலை. இப்போ நான் என்ன பண்ணனும்?” என்று வினவ
முகத்தில் எந்த பாவமும் காட்டாமல்,

“இங்க பெண்களுக்கு என்று எந்த சலுகையும் கிடைக்காது எல்லாரும் ஒன்னுதான். பெட்டர் மெடிக்கல் டிபார்ட்மெண்ட் போய் மருந்து வாங்கி போட்டுக்கோங்க. இந்த மாதிரி நேரத்துல கண்காணிப்புப் பகுதி, கண்ட்ரோல் ரூம் என்று லைட் டூட்டி பாருங்க” என்று கூற
கேட்டுகொண்டிருந்த ஜான்சிக்கு லேசாக மயக்கம் வரும் போல் இருந்தது. ‘பேசாம எப்போதும் போல் மாத்திரை போட்டு தடுத்திருக்கலாமோ?’ என்று யோசிக்க
அவள் முகத்தில் இருந்து அவளின் எண்ணவோட்டத்தை கண்டுக்கொண்டாளோ?

சிறிது இளகி, “புதுசா வந்தவங்களுக்கு ஒரு வாரம் வரைக்கும் ஸீ சிக்னஸ் (கடற்பயணம் ஒத்துக்கொள்ளாமை) இருக்கா என்று பார்த்து இருந்தா கொஞ்ச நேரம் அவங்க ரெஸ்ட் எடுக்கலாம். இதை நான் சொல்லக்கூடாதுதான் இருந்தாலும் முதல் தடவை அப்படிங்குறதால சொல்றேன் அடுத்தமுறை சமாளிச்சிக்கணும்” என்றாள் அவள்.

“மேம் அடுத்தமுறை மறக்காம மாத்திரை போட்டுக்குறேன்” என்று அவசரகுடுக்கையாக ஜான்சி கூற இத்தனை நேரத்திற்குள் ஜான்சியின் அருகில் இருந்து மேம் என்றழைக்கப்பட்டவள் பின்னே சென்றிருந்த பவிகா நோகாமல் தலையில் அடித்தாள்.

ஏன் என்றே புரியாமல் அதனைப் பார்த்து ஜான்சி முழிக்க பதில் மேம் என்றழைக்கப்பட்டவளிடம் இருந்து சற்றுக் கோபமாக வந்தது, “இங்க வருசக்கணக்கா இருக்க வேண்டியிருக்கும் இதெல்லாம் அப்படி எத்தன வருஷம் தள்ளிப்போட முடியும்? தள்ளி போடுறது நமக்குதான கெடுதல்… அதுகூட சமாளிக்க முடியல என்றால் நீயெல்லாம் எப்படி எதிரிய சமாளிக்கப் போற” என்று கடித்துத் துப்பிவிட்டு பின்னால் இருந்த பவிகாவை ஒரு பார்வை பார்த்து வெளியேறினாள். அதற்கு அர்த்தம் நீ என்னுடன் வா என்பது என்றதை இந்த இரு வருடங்களில் புரிந்து வைத்திருந்தவள் அவள் பின்னே வேகமாகச் சென்றாள்.

ஆண்கள் பலர் ஆங்காங்கே ஓடிக்கொண்டும் உடற்பயிற்சி செய்துக்கொண்டும் இருக்க பெண்கள் இருவரும் அக்கூட்டத்தில் கலந்தனர். இடையிடையே அந்த அவளின் குரல் சிறு குழுவாக இருப்போரிடம் பயிற்சி கொடுக்கையில் மட்டும் தனியாக கேட்டுக்கொண்டிருந்தது.

சரியாக ஏழு முப்பதுக்கு வியர்த்து ஒழுக அனைவரும் அன்றைய பயிற்சியை முடித்துவிட்டு கலைந்தனர். அங்கு குறிப்பிட்ட நேரத்தில் ஒவ்வொன்றையும் செய்யவேண்டும் என்ற எழுதப்பட்ட விதிகள் இருப்பதால் எட்டு மணிக்கெல்லாம் உணவுக்கூடம் வருவதற்காகத் தயாராகச் சென்றனர்.

தூய வெண்ணிறத்தில் சட்டையும் ஃபேண்ட்டும் கொண்ட சீருடையை அணிந்து கூந்தலை முன்போல் இறுக்கமாக கொண்டையிட்டு கப்பற்படைக்கே உரிய சின்னம் தாங்கிய தொப்பியை அணிந்தவள் அங்கிருந்த கண்ணாடியில் தன்னைப் பார்க்க எல்லாம் சரியாக இருந்தது.

அங்கிருப்போர் அனைவருக்கும் சிறு சிறு அலமாரி கொடுத்திருந்ததால் தனது அலமாரியைத் திறந்து சிறு பெட்டியில் இருந்த அவளின் அடையாளக்குறியை எடுத்தாள்.

ஒரு நொடி அதனைத் தடவியவள் பின்னர் தன் நெஞ்சத்தில் குத்திக்கொள்ள எதிரில் இருந்த நிலைக்கண்ணாடியில் பளிச்சிட்டது ‘பூங்குழலி சப் கமாண்டர்’ என்ற அவளின் பெயரும் அவள் வகிக்கும் பதவியும்.

அந்த உணவு கூடத்தில் நூற்றுக்கணக்கானனோர் ஒன்றாய் அமர்ந்து பேசிக்கொண்டே வேகமாய் உண்டுக்கொண்டும் இருக்க பெண்கள் மூவரும் ஓரிடத்தில் அமர்ந்திருந்தனர். முதல் வரிசையிலே வாயிலை ஒட்டி இருக்கும் ஓரத்தில் பூங்குழலி தன் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்க நடுவில் ஜான்சி பழச்சாறு மட்டும் வைத்து அமர்ந்திருந்தாள்.

அவளிற்கு மறுபுறம் பவிகா இட்லியை சாம்பாரில் தொட்டு ஜான்சியிடம் வேண்டுமா என்பது போல் காண்பித்து கேட்க அவள் வேண்டாம் என்று தலையை அசைத்ததும் தோளைக்குலுக்கி தன் வயிற்றைக் கவனித்தாள்.

ஜான்சியை தவிர மற்ற இருவரும் சீருடையில் இருந்தனர். மருத்துவத்துறை பகுதி அவசரத் தேவைக்கு எப்போதும் தயாராக இருந்தாலும் அதன் வேலைநேரம் காலை உணவு முடிந்த பின் மற்றும் இரவு உணவு முன்பு வரை மட்டுமே என்பதால் மேலதிகாரியான கமாண்டரிடம் அதற்கான அனுமதி வாங்கி இங்கு வந்துவிட்டாள்.

அனைத்து இடமும் நிறைந்து விட்டதால் இவர்கள் முன் காலியாய் இருந்த மூன்று எதிர் இருக்கையில் மூவர் தத்தமது தட்டோடு அமர்ந்தனர். அதில் ஒருவன் பூங்குழலியை சற்றுக் கடுப்போடு முறைத்துக்கொண்டே பவிகாவின் எதிரில் அமர மற்ற இருவரும் இயல்பாக இருந்தனர்.

ஜான்சி காலியான கோப்பையை சாப்பிடும் மேசை மேல் வைக்க பூங்குழலிக்கு நன்றாகத் தெரிந்தது அது பத்தாது என்று. அங்கு உணவு எவ்வளவு என்றாலும் இருக்கும் ஆனால் பழச்சாறு, இரவில் வைக்கும் இனிப்பு போன்ற வகைகள் எல்லாம் தலைக்கு ஒன்று எனச் சரியாகவே இருக்கும்.

தன்னிடம் இருந்த பழச்சாற்றை ஒன்றுமே கூறாமல் எடுத்து அவளிடத்தில் வைத்தவள் சாப்பிடுவதைத் தொடர ஜான்சிக்கு ஒருநொடி பூங்குழலியின் இந்தச் செயலில் அதிர்ச்சிதான். ஆனால் சட்டென்று அவளின் மௌன பாசத்தில் இதயம் தாயின் கதகதப்பை உணர கண்கள் தானாகக் கலங்கியது.

இமையைச் சிமிட்டி அதனை உள்ளிழுத்தவள் மெதுமெதுவே பூங்குழலி தந்ததை ரசித்துப் பருக அப்பழச்சாறு முன்பைவிட இனிப்பாக உள்ளே இறங்கி உடல் மற்றும் மனச்சோர்வை தற்காலிகமாகப் பின்னே தள்ளியது.

பூங்குழலி தட்டை எடுத்துக்கொண்டு நகர உணவை முடித்த மற்ற இருபெண்களும் கிளம்பினர்.

அவர்கள் கிளம்பியது தெரிந்ததும் முதலில் பூங்குழலியை முறைத்துக்கொண்டே அமர்ந்தவன் வாய்த்திறந்தான்.

“பார்த்தீங்களா அந்த நியூ ஜாயினியை வந்து ஒரு வாரம் ஆகலை அதுக்குள்ள கமாண்டர்கிட்ட பெர்மிசன் கேட்டாச்சு இவங்களாம் நாட்டுக்கு சேவை செய்யலன்னு யார் அழுதா?” என்று குமுற
நடுவில் இருந்தவன், “எப்படி சார் சொல்றீங்க? நீங்க பார்த்தீங்களா?” என

“யாஹ்… நான் ஒரு வேலையா கமாண்டரை பார்க்க போயிருந்தேன் அப்போதான் தெரிஞ்சது” என்று அலட்சியமாக உரைக்க

“சோ சாட்… அப்போ இவங்களாம் வீட்டுலயே இருந்து புள்ளகுட்டிய கவனிக்கலாம்ல அப்படி முடியாம ஏன் இங்க வரணும்” என்றவாறு மேல் அதிகாரியை ஒத்து பேசுகிறேன் என நடுவில் இருப்பவன் சொல்லிச்சிரிக்க

“டங்க்” என்ற ஒலியோடு அவர்களின் முன் சத்தம் கேட்க கேட்டது. நிமிர்ந்து பார்த்த மூவர் விழியிலும் மனதிலும் ஒவ்வொரு பாவனை.

பேசாமல் இருந்த மூன்றாமவன் இவர்களுக்கு வேணும்தான் என்றெண்ணி தலைக்குனிந்தான் என்றால் நடுவில் இருப்பவனின் நெஞ்சம்தான் பாவம் ராக்கெட் வேகத்தில் துடிதுடித்து உரமேறிய மார்பைத் துளைத்து வெளியேறப் பார்த்தது.

முதலில் ஆரம்பித்தவன் லேசாக அதிர்ந்தாலும் சமாளித்து அலட்சியமாய் நோக்க எதிரே பூங்குழலி மனதில் ஏற்பட்ட தகிப்பை விழிகளில் தாங்கியவாறு இருவரையும் எரித்துக்கொண்டே நாற்காலியில் அமர்ந்தாள்.

எப்போதும் சாப்பிட்டதும் வெளியேறிவிடுபவள் இன்று பழச்சாறு அருந்தாததால் முதன்முதலாக கூடுதலாக வாங்கி வர, இத்தகைய முறையில்லாப் பேச்சு காதில் விழுந்து மனதைக் கொதிக்கச் செய்தது. அவள் அறியாதது அவளைத்தேடி மீண்டும் உள்ளே வரப்பார்த்த ஜான்சியையும் வாசலோடு நிற்கச் செய்ததுதான்.

சிறிதுநேரம் முன்பு நெகிழ்ச்சியில் கலங்கிய விழிகள் தற்போது இயலாமை கலந்த அவமானத்தில் கலங்கியது. நாட்டுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற தந்தையின் நிறைவேறாத ஆசைக்காக அவள் உடலளவில் எல்லா தேர்வையும் வென்று உள்ளே நுழைந்திருந்தாலும் இது போல் பேச்சுகள் இதற்கு முன் சந்திக்காததால் மனதளவில் பெண்ணாக உணர்ச்சிவசப்பட்டிருந்தாள்.

பெண்ணின் வயிற்றிலே உருவாகி அவளின் உதிரத்திலேயே வளர்ந்து பெண்ணினத்தையே தங்களுக்குக் கீழாக நினைக்கும் இவர்களைப்போல் ஆண்வர்க்கம் இருக்கும் வரை பெண்களுக்கு விடிவோ நிம்மதியோ எக்காலத்திலும் வரவே வராது.

கண்ணைமூடித் தன்னை நிதானத்திற்கு கொண்டு வந்த பூங்குழலி முதலாமவனை நேருக்கு நேர் பார்த்து, “அபிஷேக்… உங்களுக்கு என்ன பிரச்சனை என்று நான் தெரிஞ்சிக்கலாமா?” புயலை உள்ளடக்கிய குரல். தவறு செய்தவர்களை சற்றுத் துணுக்குற செய்தாலும் காட்டிகொள்ளாமல்,

“என்ன பிரச்சனை? எனக்கொன்னும் இல்லையே போய் உடம்பு சரி இல்லைன்னு தெம்பா வந்து சொல்ற உங்க ஜூனியர் கிட்ட கேளுங்க என்ன பிரச்சனைன்னு” என்றான் திமிராக.

“ஒஹ்… அவங்க உடம்பு நல்லாருக்குன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்? நீங்க என்ன பார்த்தாலே கண்டுபிடிக்குற புதுவகை டாக்டரா?” அவனின் திமிருக்கு குறையாத நக்கலில் கேட்கும்போதே பக்கவாட்டு வாசலில் அசைவை உணர்ந்து கவனிக்க ஜான்சி கண்ணைத்துடைப்பதைப் பார்த்துவிட்டாள். அதுவும் சேர்ந்து எரிச்சலைக் கிளப்பியது பூங்குழலிக்கு.

“அப்போ உடம்பு சரியில்லைதானா? நீங்க சொன்னா சரிங்க மேடம். நீங்க மெத்த படிச்ச டாக்டரு… சரியாத்தான் சொல்லுவீங்க” அவளின் வார்த்தையை கொண்டே பதிலடி கொடுத்ததாக நினைக்க

“ப்ரூப் பண்ணவா?” என்று தலையை பின்னால் சரித்து கால்மீது கால் போட்டு வசதியாக அமர

“ப்ரூப்…” என்று மெதுவாக தனக்குள் சொல்லி புருவம் சுருக்கினான் அபிஷேக்.

“எஸ் ப்ரூப் தான். வன் மினிட்… ஜான்சி கொஞ்சம் உள்ளே வரீங்களா?” என்று வாயிலில் மறைந்து நிற்பவளை அழைத்தாள்.

தயக்கத்தில் நடை தயங்க அவள் உள்ளே வர…??? (என்னாகும்?)

பாசத்தை மௌனமாகவும் கோபத்தைத் திமிராகவும் வெளிப்படுத்தும் உன்னிடம் அலைகடலும் அடங்குமடி!
அலைகடல் ஆர்ப்பரிக்கும்…

error: Content is protected !!