MA – 2

MA – 2

அத்தியாயம் – 2

அதன் திரையில் ஒளிர்ந்த எண்ணைப் பார்த்து அவளுக்கு கோபம் வரவே போனை ஸ்விச் ஆப் செய்து கட்டிலில் எறிந்துவிட்டு ஜன்னலின் அருகே சென்று நின்றவள் வெளியே வேடிக்கைப் பார்த்தாள்.

“என்னடி பண்ணிட்டு இருக்கிற..” என்ற கேள்வியுடன் அறைக்குள் நுழைந்த கீதாவை நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் சிவந்திருப்பது கண்டு துணுக்குற்றாள். கீதா அவளின் ரூம்மேட்.

மேகா பற்றிய அனைத்து விவரமும் அறிந்தவள். அவளுக்குத் தெரியாத விஷயம் என்று எதுவும் இல்லை. இருவரும் நல்ல தோழிகள்!

“என்ன மேகா கண்ணு கலங்கி இருக்கு..” என்று அவளின் அருகே நெருங்கியவளின் கையைத் தடுத்த மேகாவோ முகத்தைத் திருப்பிக்கொண்டு,

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல. காலையில் கண்ணில் தூசி விழுந்துடுச்சு. அது உறுத்திகிட்டே இருக்கு..” வாய் கூசாமல் பொய் சொன்ன மேகாவை ஆழ்ந்து நோக்கினாள் கீதா.

அவளுக்குத் தெரியும் மேகா பொய் பேசமாட்டாள் என்று. அவள் பொய் பேசினால் கூட அவளின் குரலே அதை மற்றவர்களுக்குக் காட்டிக் கொடுத்துவிடும்.

அவள் ஏதோவொரு துயரத்தில் இருக்கிறாள் என்று கணித்த கீதா, “நீ இப்படி உட்காரு..” என்று அவளைப் படுக்கையில் அமரவைத்து அவளின் முகத்தைத் தன்பக்கம் திருப்பினாள்.

“என்ன நடந்துச்சு ராகவ் என்ன சொன்னாரு..” என்று அவளின் தலையை வருடிய கீதாவை அணைத்துக்கொண்டு ஒரே மூச்சாக அழுதாள் மேகா.

மேகாவை அணைத்து அவளின் முதுகை ஆதவராக அணைத்துக்கொண்டு அவளின் முதுகை வருடிய கீதாவின் அணுகுமுறையில் அங்கே நடந்த அனைத்தையும் அவளிடம் சொன்னாள் மேகா.

“ராகவ் காதலுக்கு விலை பேசிட்டார் கீத்து. மனசு வலிக்குது தெரியுமா. இந்த உலகம் முழுக்க முழுக்க சுயநலமாக யோசிக்கிறாங்க கீத்து. எனக்கென்று யாருமே இல்ல..” என்றவளின் கண்களில் கண்ணீர் மீண்டும் அருவியாகப் பெருகியது.

காலையில் கிளம்பும்போது சிட்டுக்குருவி போல சிறகடித்துச் சென்ற மேகாவே இப்பொழுது சிறகுடைந்த பறவையாகத் திரும்பி வந்திருக்கும் நிலையைக் கண்டு அவளுக்கு மனம் வலித்தது.

அவள் சொன்னதைக்கேட்டு கீதாவின் மனம் அதிர்ந்தாலும் கூட, ‘என்ன மனுஷங்க இவங்கெல்லாம்?’ என்று மனதிற்குள் நினைத்தவள் அவளைத் தன்னிடமிருந்து பிரித்து அவளின் விழிகளில் ஊடுருவிப் பார்த்த கீத்துவின் பார்வை புரியாமல் நிமிர்ந்தவளின் கண்ணீர் கன்னத்தில் வழிந்தது..

“மேகா இது நீயில்ல. அவளுக்குத் தைரியம், தன்னம்பிக்கை இரண்டுமே ஜாஸ்தி. ஒருத்தன் வேண்டான்னு சொல்லியதற்கு கலங்கி நிற்கும் பெண் அவள் அல்ல..” என்று கீதா மேகாவிற்கு புரியவைக்க முயன்று அதில் வெற்றியும் கண்டாள்.

அவள் சொன்ன வார்த்தைகளில் தன்னை தேடி மீட்டெடுத்த மேகா கண்களில் பெருகிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, “வேண்டான்னு உதறியவனை நினைத்து நான் ஏன் அழுகணும்? என்னை இழந்ததுக்கு அவன் தான் வருத்தப்படணும்..” என்றவள் தோழியை நிமிர்ந்து பார்த்தாள்.

அதுவரை குழப்பத்துடன் இருந்த அவளின் முகம் இப்பொழுது தெளிந்திருப்பது கண்டு மனதிற்குள் நிம்மதியடைந்த கீத்து, “இதுதான் என்னோட மேகா..” என்றவள் அவளின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

“தேங்க்ஸ் கீத்து. நீ புரிய வைக்காமல் இருந்தா நான் இன்னும் குழப்பத்தில் இருந்திருப்பேன்..” என்றவளின் மனதை திசைதிருப்ப நினைத்தவள் “வா நம்ம போய்ச் சாப்பிட்டுவிட்டு வரலாம்..” என்று அவளை இழுத்துச் சென்று சாப்பிட வைத்தாள்.

இருவரும் ஹாஸ்டல் கேண்டினிலிருந்து வெளியே வரும்போது, “மேகா அடுத்து என்ன பண்ண போற..” என்று கேட்டு அவளின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்தாள் கீதா.

“அண்ணி ஊருக்கு வரச் சொல்லிட்டு இருக்காங்க கீத்து..” என்றாள் அவளோடு இணைந்து நடந்தவண்ணம்.

“இப்போ எதுக்கு வரச் சொல்றாங்க..” என்று புரியாமல் கேட்டவளிடம் அவளும் என்னதான் சொல்ல முடியும்?

தன்னுடைய அண்ணி தனக்கு வரன் பார்த்து வைத்திருக்கிறார் என்று சொல்ல முடியாமல் மெளனமாக வந்த மேகாவிடம் அதன்பிறகு கீதா அவளிடம் எதுவும் கேட்கவில்லை.

அவள் அறைக்குள் நுழைந்ததும் பேக்கிங் செய்ய அதை நோட்டம்விட்ட கீதா, “என்ன மேகா ஊருக்குக் கிளம்பிற போல..” என்று சந்தேகமாகவே இழுத்தாள்.

“ம்ஹும் ஆமா நாளைக்கு கோயம்புத்தூர் கிளம்பணும்..” என்றவள் துணிகளை எடுத்து வைக்கவே அவளுக்கு உதவி செய்தாள் கீதா.

அதன் பிறகு வேலைகளை முடித்துவிட்டு இருவரும் படுக்கையில் விழுந்தனர். காலையில் கிழக்கே உதயமான சூரியனின் வெளிச்சம் ஜன்னல் வழியாக அறைக்குள் பரவியது.

அந்த வெளிச்சம் கண்டு மெல்ல கண்விழித்த கீதா அருகே மேகாவைக் காணாவில்லை என்றதும் அவளின் மனம் திக்கென்றது.

“மேகா..” என்று பதட்டத்துடன் அழைத்தாள் கீதா.

“ஏய் நான் குளிச்சிட்டு இருக்கேன்டி. எதுக்கு இப்படி கத்தறே..” என்ற மேகாவின் குரல் பாத்ரூமின் உள்ளிருந்து கேட்டது.

“கொஞ்ச நேரத்தில் உயிர் போய் உயிர் வந்துச்சு..” என்று கூறியவள் படுக்கையைவிட்டு எழுந்து அவற்றை எடுத்து வைத்துவிட்டு திரும்ப ஊருக்கு செல்லத் தயாராகி நின்றவளைப் பார்த்து,

“ஏய் எருமை என்ன நீ இவ்வளவு வேகமாகக் கிளம்பற. என்னால உனக்கு ஈடு கொடுக்க முடியல பக்கி..” என்றவளை வம்பிற்கு இழுக்க,

“புயல் வேகத்தில் கிளம்பி போனாத்தான்..” என்றவள் முடிக்கும் முன்னே இடையில் புகுந்த கீதா.

“பூந்தென்றலோடு கைக்கோர்க்க முடியுமா..” என்று கேலியாகக் கேட்டவளை முறைத்த மேகா அவளின் மீது  தலையணைத் தூக்கி எறிந்துவிட்டு நகர்ந்தாள்.

“நானே என்ன பண்றதுன்னு தெரியாமல் ஊருக்குப் போறேன். இதில் நீ என்னை வம்பிற்கு இழுக்கிற..” என்றவளின் குரலில் வருத்தம் தென்படவே,

“இதுக்கெல்லாம் கலங்கினால் எப்படி மேகா. இன்னும் வாழ்க்கை இருக்கு..” என்று உணர்ந்து கூறியவளோ,

“இன்னும் நீ வீட்டுக்குப் போக எழுபத்திரண்டு மணிநேரம் இருக்கு. நல்லா யோசி தெளிவு கிடைக்கும்..” என்ற கீதாவும் சீக்கிரம் கிளம்பவே, அடுத்த சிலமணி நேரத்தில் இருவரும் ஹைதராபாத் ரயில் நிலையத்தை அடைந்தனர்.

வழக்கம் போலவே அங்கே கூட்டமாக மக்கள் கூட்டமாக நின்றிருக்கவே ரயில் வந்து நிற்பதும் அதிலிருந்து சிலர் இறங்குவதும் பலர் ஏறுவதுமாக அந்த இடமே பரபரப்புடன் காணப்பட்டது.

ஏற்கனவே மேகா ரயில் டிக்கேட் புக் செய்த காரணத்தால் கொஞ்சம் நிதானமாக நின்றிருந்தவளின் கரம் பிடித்த கீதாவின் விரல் வழியாக உணர்வு பெற்ற மேகா நிமிர்ந்து அவளின் முகம் பார்த்தாள்.

“இனிமேல் தான் உன்னோட வாழ்க்கையில் பல சோதனை வரும் மேகா. அதெல்லாம் கண்டு கலங்கி நிற்காமல் கடந்து செல்ல முயற்சி பண்ணு. காதலிச்சவன் வேண்டான்னு சொல்லிட்ட அத்தோட நம்ம வாழ்க்கை முடிய போறது இல்ல..” என்று அவளுக்குப் புரியும்படி கூறிய கீதா நிறுத்திவிட்டு நிமிர்ந்து அவளின் முகம் பார்த்தாள்.

அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரிந்துகொண்ட மேகாவின் பார்வையில் துணிவு வழக்கத்தைவிட அதிகமாக இருப்பது போல உணர்ந்தாள் கீதா.

அவளின் கையில் அழுத்தம் கொடுக்கவே, “என்னைப் பற்றி நீ கவலைபடாத கீத்து நான் நீர் மாதிரி. எந்த இடத்திற்கு தகுந்த மாதிரி எப்படி மாறனும் என்று என்னை நானானே மாற்றிக்கிறேன்..” என்று புன்னகைத்த தோழியின் கன்னத்தைத் தட்டிவிட்டு சிரித்தாள் கீதா.

“இல்லன்னா பெண்கள் இந்தச் சமூகத்தில் வாழ முடியாது மேகா. பெண்கள் எல்லோரும் முதுகெலும்பு இல்லாத பூச்சி மாதிரி தானே நினைக்கிறாங்க..” என்ற கீதாவின் பேச்சில் நியாயம் இருப்பது அவளுக்கும் புரிந்தது.

அதற்குள் ரயில் வந்துவிடவே, “சரி கீத்து நான் கிளம்பறேன். டைம் கிடைத்தால் எனக்குப் போன் பண்ணு” என்று சொல்லிவிட்டு அவள் ரயிலில் ஏறி சீட்டில் அமர்வதற்குள் வண்டி கிளம்பியது.

ரயிலின் ஜன்னலின் அருகே அமர்ந்த தோழிக்குக் கையசைத்த கீதா, “நான் சொன்னது எல்லாம் நினைவு வெச்சுக்கோ..” அவள் மீண்டும் ஞாபகப்படுத்த சரியெனத் தலையசைத்தாள் மேகா.

ரயில் மெல்ல வேகமெடுத்துச் செல்ல தோழியின் முகம் சிறுபுள்ளியாக மின்னி மறைவதைக் கண்டு, தன்னுடைய சீட்டில் சாய்ந்து விழி மூடினாள். சிறகுவிரித்து வானவீதியில் சுதந்திரமாக வானில் பறந்தவள் இன்று காதலின் சூழ்ச்சியில் சிறகு உடைந்த பறவையாக ஊர் திரும்புகின்றாள்.

அவளின் மனதிலிருந்த ஆசைகளையும், கனவுகளையும் அடியோடு மறந்துவிட்டு கோவை மண்ணில் கால் பதித்தாள். அவள் வீடு வந்து சேரும்போது மாலை நேரம் ஆகியிருக்க சூரியன் மேற்கே மறைந்து கொண்டிருந்தது.

அவள் ஆட்டோவில் சென்று இறங்க அதன் சத்தம் கேட்ட மறுநொடியே வீட்டின் உள்ளிருந்து இரண்டு வாண்டுகளும் வாசலுக்கு ஓடிவந்தது, “அத்தை” என்ற அழைப்புடன்.

தன்னுடைய பெட்டியை எடுத்துகொண்டு வண்டிக்குப் பணம் கொடுத்து அனுப்பிவிட்டு அவர்களின் பக்கம் திரும்பியவள், “டேய் பசங்களா ஸ்கூல் எப்படிடா போகுது..” என்று கேட்டாள்.

“ம்ம் நல்லா போகுதே. எனக்கு இரண்டு பிரெண்ட்ஸ் கிடைச்சாங்க..” என்றான் பெரியவன் அருண்.

அவனின் கையில் பிஸ்கெட் பாக்கெட் ஒன்றைக் கொடுத்த மேகா, “உனக்கு பிரெண்ட்ஸ் கிடைக்கல..” என்று அவள் சின்னவனிடம் கேட்டாள்.

“எனக்கும் ஒரு பிரெண்டு கிடைத்தான் அக்கா..” என்று மூன்று விரல்களை அவளின் முன்னே நீட்டியவனைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தாள் மேகா.

“என்ன அத்த சிரிக்கிறீங்க..” என்று சிணுங்கிய தருணின் தலையைக் கலைத்துவிட்டு கலகலவென்று சிரித்தவளுடன் இணைந்து சிரித்தான் அருண்.

“ஒரு பிரெண்ட் என்று சொல்லிட்டு மூன்று விரலைக் கட்டுற.. அப்புறம் நான் சிரிக்காமல் என்ன பண்றது?” என்றவளின் குரல் கிச்சன் வரை கேட்டுவிட, ‘மேகா வந்துட்டாளா?’ என்ற சந்தேகத்துடன் கிச்சனிலிருந்து எட்டிப்பார்த்தாள் நீலாம்பரி.

நீலாம்பரிக்கு அவளைக் கண்டாளே பிரிக்காது. அது ஏனோ தெரியவில்லை. சேதுராமனை அவள் காதலித்து கல்யாணம் பண்ணிய போதும் அவன் தங்கை தங்கை என்று உருகும்போது அவளையும் அறியாமல் மேகாவின் மீது வெறுப்பு உண்டானது..

“வா மேகா.. இப்போதான் வருகிறாயா?” என்று கேட்டுகொண்டே மாவு கையைத் துடைத்துவிட்டு அவளை நோக்கி வந்தாள்.

“அருண், தருண் இருவரும் போய்ப் படிங்க..” என்று பசங்களை விரட்டிவிட்டு அவளின் அருகே வந்தார்.

“என்னடா நேற்று போன் பண்ணேன் நீ போனை எடுக்கவே இல்ல..” கரிசனமாகக் கேட்டவளின் கண்களில் இருந்த கரிசனம் உண்மையா பொய்யா? என்ற சிந்தனையுடன் நின்றிருந்தவளின் முன்னே கையசைத்து அவளின் கவனத்தைக் கலைத்தார் நீலாம்பரி.

அவள் திகைப்புடன் அவரைப் பார்க்கவே, “என்ன யோசிக்கிற பதில் சொல்லு..” என்றவளின் குரலில் இருந்த பாசம் எதற்கென்று அவளுக்கா புரியாது? அவள் கை ஓங்கி இருப்பதால் தானே அவளுக்கு இந்த வீட்டில் ஒரு இடம் இருக்கிறது.

தன்னுடைய சம்பள பணத்தின் கவரை அவரின் கையில் கொடுத்துவிட்டு, “சாரி அண்ணி. நேற்று போன் கீழே விழுந்துவிட்டது. அப்போ இருந்து போன் வந்தால் தெரியமாட்டேங்குது..” என்றவள் வேகமாக மாடியேறிச் சென்றுவிட அவளைச் சிந்தனையுடன் நோக்கிய நீலாம்பரியின் புருவங்கள் கேள்வியாகச் சுருங்கியது.

நீலாம்பரியை சேதுராமன் திருமணம் செய்யும்போது அவருக்கும் மேகாவை பிடித்திருந்தது உண்மையே. நாட்கள் மெல்ல நகர மேகாவைக் கண்டாளே நீலாம்பரிக்கு பிடிக்காமல் போனது. அவளிடமிருந்து விலகி நின்ற தங்கையின் மனம் உணர்ந்து இந்த வீட்டை வாடகைக்கு எடுத்தான் சேதுராமன்.

அவளுக்கு மட்டும் மேலே அனைத்து வசதியையும் செய்து கொடுத்துவிட்டு கீழே தன் குடுப்பத்துடன் அவளுக்குப் பாதுகாப்பாக இருக்கிறான்.  நீலாம்பரியிடம் பேசி ஜெய்க்க யாராலும் முடியாது.

எதற்கு எடுத்தாலும் விதட்டாவாதம் செய்பவளிடம் எப்படி சொல்லிப் புரிய வைப்பது என்று தெரியாமல், “என் தங்கச்சியை நான் பார்த்துக்கிறேன். நீ உன்னோட குழந்தைகளை மட்டும் பாரு..” என்று சொல்லி விட்டான்.

அவளுக்கும், மனைவிக்கும் ஒத்துவராது என்று முடிவானதுமே தங்கையை வேலைக்கு ஹைதராபாத் அனுப்பினான். ஏதோ அவனின் சக்திக்குத் தகுந்த அளவுக்குத் தங்கைக்கு அனைத்தையும் செய்தான். இதில் மட்டும் நீலாம்பரி விதிவிலக்கு.

அண்ணன் தங்கைக்கு இடையே அவளும் தலையிடுவதில்லை. அதேபோல அண்ணனுக்கும் – அண்ணிக்கும் இடையே இவளும் மூக்கை நுழைப்பதில்லை. அதனால் அவர்களின் வாழ்க்கை பயணமும் சீராகவே சென்றது.

இரவு உணவை முடித்துவிட்டு வந்து அமர்ந்த சேதுராமன், “மேகா பயணம் எல்லாம் எப்படி இருந்துச்சு..” என்று சம்பிரதாயத்திற்கு விசாரிக்க, “ம்ம் பரவல்ல அண்ணா..” என்றாள்.

அதற்குள் கணவனின் அருகே வந்த நீலாம்பரி, “என்னங்க நாளைக்கு மாப்பிள்ளை வீட்டிலிருந்து வராங்க. மாப்பிள்ளை இவருதான். போட்டோவை அவளிடம் கொடுங்க..” என்று சொல்லிட்டு நகர்ந்த அண்ணியின் மனதில் இருப்பதென்ன என்று புரியாமல் குழம்பினாள் மேகா.

தங்கையின் பார்வையில் இருந்த எரிச்சலைக் கண்டுகொண்ட சேதுராமன், “அவளைக் கண்டுக்காமல் விடு..” என்றான் தங்கையின் கையில் அழுத்தம் கொடுத்து.

“இந்த இதில் மாப்பிள்ளை போட்டோ இருக்கு. கார்முகிலன் மாப்பிள்ளை பேரு. மாப்பிள்ளை பெரிய பிஸ்னஸ்மேன். பணம், வீடு, காரு எல்லாம் இருக்கும்மா..” என்றவன் கர்வமாக மீசையை முறுக்கிவிட்டு கொண்டான்.

உனக்கு நான் எப்படியொரு மாப்பிள்ளை பார்த்திருக்கிறேன் பார் என்ற கர்வம் அவனின் செயலில் வெளிப்படவே, “அண்ணா பவுன் சீர்வரிசை எல்லாம்..” என்று தொடங்கிய தங்கையை நிமிர்ந்து பார்த்தார்.

“ஒரு பத்து பவுன் அதிகமாகக் கேட்கிறாங்க. உனக்குத்தானே போட்டுட்டா போச்சு..” என்று பெருமையாகக் கூறியவன் எழுந்து அறைக்குச் செல்ல, ‘யாருக்கோ கொடுக்கும் பவுனை எனக்குக் கொடுத்தா என்ன?’ ராகவனின் குரல் அவளின் காதோரம் ஒலித்தது.

அவனின் நினைவை உதறிவிட்டு அந்தக் கவரோடு தன்னறைக்குள் சென்ற மேகாவிற்கு தூக்கம் வர மறுத்தது. அவள் கல்யாணம் வேண்டாம் என்று சொன்னால் சேதுவும் அவளின் பேச்சைக் கேட்பான் என்ற போதும் அண்ணியிடம் காரியம் சாதிக்க முடியாது என்று உணர்ந்தவளின் மனதில் பாரம் அதிகரித்தது.

அதன் விளைவோ இரவு முழுவதும் தூக்கத்தை தோலைத்துவிட்டு விடியும் வரை விழித்திருந்தாள்.

மறுநாள் காலைப்பொழுது அழகாக விடிந்தது!

error: Content is protected !!