Alaikadal 16 (1)

அலைகடல் – 16

சென்னை வந்திறங்கிய பூங்குழலி ஆழ்ந்த மூச்சின் மூலம் படபடத்த இதயத்தை சற்று சமன்படுத்தினாள். கண்கள், இந்த ஏழு வருடத்தில் அதிகம் இல்லையென்றாலும் ஓரளவு மாறியிருந்த ஊரினை அலசியது. பூவேந்தனுக்கு அன்று கடைசி பரிட்சை. இன்னமும் அவன் பள்ளியிலிருந்து வெளிவர கிட்டதட்ட இரண்டு மணி நேரம் இருக்க பள்ளியருகே இருக்கும் பார்க்கில் அமர்ந்திருந்தாள்.

கப்பற்படையில் ஓய்வாக இருக்கையில் போடும் அதே முக்கால் கை கருப்பு நிற டீசர்ட் மற்றும் அதேநிற ஃபேண்ட்தான் அணிந்திருந்தாள். அது அவளின் உடலோடு கச்சிதமாய் பொருந்தி நிறத்தை கூட்டிக் காண்பித்தது.

வாட்சை தவிர வேறு ஆபரணம் இல்லை. பார்த்து பார்த்து அலங்கரித்து சிங்காரிக்கும் கட்டத்தையெல்லாம் தாண்டிவிட்டதால் இதைத்தவிர வேறு வகையான ஆடையோ ஆபரணமோ அவளிடம் இல்லை.

அவளிடம் இருப்பதெல்லாம் இதே ரகம்தான். ஏழு செட் வைத்திருப்பாள் நாளிற்கு ஒன்று என அணிய, அது போக இரவு இலகுவகை ஆடைகள் ஒரு நாலு செட் இருக்கும். அத்தனையும் ஒரே பையில் அடங்கிவிட்டதால் தூக்கி செல்லவும் சிரமமாய் இல்லை.

பார்க்கில் அவள் மட்டுமின்றி வேறு சிலரும் தங்களின் பிள்ளைகளுக்காக வீட்டிற்கு செல்லாமல் அங்கு அமர்ந்து அளவளாவிக் கொண்டிருந்தனர்.

மனதில் ஏதேதோ யோசனைகள். தங்கள் வீடு இப்போது எப்படி இருக்கும்? அதே போல் இருக்குமா? அல்ல, ஆளில்லா பாழடைந்த கட்டிடமாகியிருக்குமா? எங்கே தங்குவது? குட்டா தன்னைப் பார்த்ததும் ஆனந்தத்தில் துள்ளி குதிப்பான்தான் ஆனால், தன்னுடனே கேள்வியின்றி வருவானா? இல்லை ஆரவ்விடம் சொல்லிவிட்டு செல்லவேண்டும் என்று அடம் பிடிப்பானா? என்றெல்லாம் வரிசையாகத் தோன்றியது.

ஆம் இங்கிருந்து அப்படியே தன்னுடன் அழைத்துச்செல்வதுதான் அவளின் திட்டமே. நியாயப்படி அவனை இத்தனை நாள் வளர்த்த வீட்டிற்கு சென்று நன்றி கூறி அங்கிருந்து கிளம்புவதுதான் முறை. ஆனால் அது ஆரவ்வின் வீடு என்ற ஒன்றே பூங்குழலியை அங்கு செல்லக்கூடாது என்று ஸ்திரமாக முடிவெடுக்க வைத்தது. ஆரவ் விசயத்தில் எங்கும் எதிலும் நியாயதர்மம் பார்க்கும் நிலையில் அவள் இல்லை என்று கூறுவதுதான் சரியாக இருக்கும்.

பன்னிரண்டு ஆக பத்து நிமிஷம் இருக்கையில் எல்லாம் பள்ளியின் வாசலுக்கு வந்துவிட்டாள். சிறிது நேரத்தில் பள்ளியின் மணியடிக்கும் ஓசை கேட்க மாணவகூட்டங்கள் முகத்தில் கொண்டாட்டத்துடன் வெளிவந்தனர்.

வாசலை தாண்டியதுதான் தாமதம் சிலர் பெற்றோரை தேடிச்செல்ல, சிலர் வினாத்தாள் பேப்பரை கிழித்து மேல்நோக்கி வீசி அதன் கீழே குதித்து குதூகலிக்க, பூங்குழலியின் தேடுதல் ஓரிடத்தில் முற்றுபெற்றது.

அங்கு பூவேந்தனோ டையை கழுத்தில் இருந்து எடுத்து தலைக்கு கட்டியவாறு சுற்றிலும் நண்பர்கள் சூழ்ந்திருக்க நடுவில் மூன்று பேருடன் குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தான்.
பார்த்தவளுக்கு சிரிப்புதான் வந்தது. முன்பும் அப்படிதான் முழு பரிட்சை முடிந்ததும் பள்ளியில் குத்தாட்டம் போடுவது பத்தாதென்று வீட்டிற்கு வந்தும் வாசலில் இருக்கும் பைப்பை திறந்து தண்ணீரில் நனைந்து தமக்கை மேலும் ஊற்றி அதகளம் செய்வான்.

விட்டால் அன்று முழுவதும் ஆடிக்கொண்டே இருப்பான் என்று தோன்றக் கூட்டத்தை விலக்கி ஆடிக்கொண்டிருந்தவனை நெருங்கி தோளைத்தட்டினாள் அவள். ஆட்டத்தில் கவனமாய் இருந்தவன் பக்கவாட்டில் தட்டியதும் நிமிர்ந்து பார்க்க, காண்பதை நம்ப இயலாமல் கண்ணை சிமிட்டி கசக்கி பார்த்தான் பூவேந்தன்.

“இப்போவாவது கிளம்பலாமா சார்” என்று கிண்டலுடன் வினவ,

“ஹேய் பூமா… எப்போ வந்த சொல்லவேயில்லை நம்பவும்முடியல” என்றவாறு அவளை தோளோடு அணைத்தவன் புதிதாக வந்தவளை வேடிக்கை பார்த்தவர்களிடம், “இதான் என் அக்கா… நான் சொன்னேன்ல ஹெலிகாப்டர்லாம் ஓட்டுவான்னு” என்று அறிமுகப்படுத்த அவர்களிடம் சிக்கி மீண்டு வருவதற்குள் காலையில் இருந்து பசிக்காத வயிறு பசிக்க ஆரம்பித்தது.

கடைசியாக பூவேந்தனின் நண்பன் ஒருவன், “அக்கா நாங்க இன்னக்கி ஊர் சுத்தி பார்க்கலாம்ன்னு பிளான் பண்ணினோம்…” என முடிக்கும்முன்

“டேய் நான் வரலடா சாரி சாரி… ரொம்ப வருசம் கழிச்சு அக்கா வந்திருக்கா… நாங்க எங்க வீட்டுக்கு போறோம். இன்னொரு நாள் பாத்துக்கலாம்” என்று கழண்டுக்கொண்டான் இளையவன்.

வீடு என்றதிலேயே திக் என்று அதிர்ந்தாள் பூங்குழலி. உரிமையாக சண்டை போட்ட நண்பர்களை சமாளித்து, தமக்கையை இழுத்து ரோட்டிற்கு சென்றான் அவன்.

மெதுவே நடந்தவளிடம், “என்னக்கா பாக் வெயிட்டா இருக்கா குடு நான் பிடிச்சிக்குறேன்” என்றவனிடம்

“இல்லை அதெல்லாம் இருக்கட்டும் நம்ம வீடு…” என்று இழுத்தவளிடம்

“பூமா நம்ம வீடு அப்படியேதான் இருக்கு சாவி கூட என் ரூம்ல இருக்கு. எனக்கு தோணும்போது அங்க போவேன் சம் டைம்ஸ் ஆரவ் அண்ணாவும் என்கூட வருவாங்க”

“வாட் அவன் எதுக்கு நம்ம வீட்டுக்கு வரணும்?” என முகம் சுளிக்க,

“ஏன் நான் தான் கூப்பிட்டேன். அவங்க வீட்டுல நான் இருக்கும்போது நம்ம வீட்டுக்கு அவங்க வரக்கூடாதா?” என்ற நியாயத்தில் என்ன சொல்வதென்று ஒரு நிமிடம் யோசித்தவள் பின், இப்போதே பேசிவிடலாம் என்றெண்ணி,

“இதுவரை எப்படியோ இனி வரக்கூடாது குட்டா. எனக்கு அவனை பிடிக்கலை”

அதைத்தூக்கி கிடப்பில் போட்டவன், “ஆமா, என்ன நீ நானும் பார்த்துட்டே இருக்கேன் அண்ணாவ மரியாதை இல்லாம பேசிட்டு இருக்க? நம்மள விட வயசுல பெரியவங்கதானே கூடவே சிஎம் வேற… பார்த்து பேசுக்கா யாராச்சும் கேட்டு உன்னை போட்டு தள்ளிற போறாங்க” என

“டேய் நீ என்னடா அவனுக்கே சப்போர்ட் பண்ணிட்டு இருக்க? அவனால நான் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்லை. ப்ளீஸ், அவனை பத்தி என்னைக்கும் என்கிட்ட பேசாத அண்ட் இனி அவனிருக்குற பக்கமே தலைவச்சிக்கூடப் படுக்கக்கூடாது புரியுதா?” இதுவரை இருந்த பொறுமை பறந்து எரிச்சலாக வந்தது குரல்.

“பச்… பூமா இன்னக்கிதான் வந்திருக்குற முதல்நாளே ஏன் கோவம்? எனக்கு கொஞ்சம் என்ன நடந்ததுன்னு தெரியும். ஆனா, முழுசா அண்ணா சொல்லல உனக்கு அது தேவையில்லாததுன்னு சொல்லிட்டாங்க. ஆனா நீ போய் பேசி பாரேன் அண்ணாகிட்ட கண்டிப்பா நியாயம் இருக்கும்” என

“இருந்துட்டு போகட்டும்… ஆனா அதை கேட்டு தெரிஞ்சா இந்த ஏழு வருஷம் மறைஞ்சிருமா? இல்லை நம்ம அம்மாவதான் ஒரே ஒரு தடவை பார்க்க முடியுமா? சொல்லு இதுல எது முடிஞ்சாலும் நான் போய் நியாயம் கேட்குறேன்” தமக்கையின் பதிலில் தலைகுனிந்தான் பூவேந்தன்.

அதில் தன் மனபாரத்தை ஒதுக்கியவள், “குட்டா விடுடா எனக்குதான் பிடிக்கலைன்னு சொன்னேன், உனக்கு பிடிச்சிருந்தா அது உன்னோட அதுக்கு ஏன் மூஞ்ச தொங்க போடுற ஹான்” என்று அவனை நிமிர்த்தியவள், “பட் அதான் நான் வந்துட்டேன்ல இனி அங்க இருக்கவேண்டாம். அடுத்தவங்க வீட்டுல இருந்து அவங்களை தொந்தரவு பண்ணவும் வேண்டாம் சரியா?” பூங்குழலி என்னமோ நொடியில் ஆரவ்வை அடுத்தவன் ஆக்கிவிட்டாள்தான் ஆனால் பூவேந்தனுக்கும் அவ்வாறு தோன்ற வேண்டுமே, ‘அண்ணாவ நான் அடுத்தவங்களா பார்க்கலைக்கா’ என்று வாய்வரை வந்ததை தொண்டைக்கு தள்ளி முழுங்கினான்.

நிதர்சனம் அதுதானே என்னதான் அடுத்தவன் இல்லையென்றாலும் சொந்தமும் இல்லையே. சொந்தம் பந்தமெல்லாம் தன்முன் நிற்கும் பூங்குழலியிடம் தானே! தமக்கையின் பால் உள்ள அளவிட முடியா பாசத்தில் அவள்புறம் சரிந்த உள்ளத்தில் திடுமென, ‘பார்த்தியா… உன்னோட பூமா வந்த அடுத்தநொடி என்னை தள்ளிவிட்டுட்ட’ என்ற ஆரவ்வின் குரல் ஒலித்து அவனை வலிக்கச் செய்தது.

இருவரும் அவனின் பாசத்திற்குரியவர்களே! தாய்ப் பாசத்தை தமக்கையிடம் கண்டவன் அதற்கு சமமான தந்தையின் பாசத்தை தமையனிடம் கண்டிருந்தான். ஒன்று கிடைத்தால் இன்னொன்று பறிக்கப்படும் என்றுதான் தனக்கு விதித்த விதிபோலும் என்றெண்ணியவன் பெருமூச்சுடன் தமக்கையின் பின்னே செல்ல முடிவெடுத்தான்.

“சரிக்கா எனக்கு பசிக்குது… இப்போ நாம நம்ம வீட்டுக்கு போகணும் என்றாலும் ஆரவ் அண்ணா வீட்டுக்குதான் போகணும். என்னோட ரூம்லதான் வீட்டு சாவி, என்னோட ட்ரெஸ், போன், நான் டான்ஸ் போட்டியில் வாங்குன ப்ரைஸ் எல்லாமே இருக்கு அங்க போய் அதெல்லாம் எடுத்துட்டு போவோமா? இன்னும் நாலு மணி நேரத்துல அண்ணா வந்துருவாங்க சொல்லிட்டு…” அவன் பேச்சை முடிக்கும் முன் குறுக்கிட்டவள்,

“இல்லை நான் வரலை. சாவி அப்புறம் பரிசு மட்டும் எடுத்துட்டு வா மத்ததெல்லாம் நாமளே வாங்கிப்போம்”

அவளின் கூற்றில் அதிர்ந்தாலும் சமாளித்து, “பூமா அப்போ அதுவரைக்கும் எங்க இருப்ப?” என

“நீ உள்ளே போ நான் வெளிய வெயிட் பண்றேன். எவ்ளோ தூரம் போகணும்”

“ஒரு முக்கால்மணி நேரம் ஆகும் க்கா… ஈசிஆர்ல தான் நம்ம வீட்டுல இருந்து அரைமணி நேரம்தான்”

“ஸ்கூல்ல இருந்து தினம் வீட்டுக்கு எப்படி போவ நீ?”

“கார் வரும்க்கா இன்னைக்குதான் கடைசிநாள்ன்னு வெளிய போற பிளான்ல நானே வந்துருறேன்னு சொல்லிட்டேன்”

“பசிக்குதுன்னு சொன்னியே எனக்கும்தான் சோ சாப்ட்டு கிளம்பலாம்” என்றவள் அருகில் இருந்த நல்ல உணவகத்தில் மதிய உணவை முடித்தனர்.

“கார் புக் பண்ணு குட்டா… இந்தா” என்று செல்பேசியை அவனிடம் நீட்ட அடுத்த ஒருமணி நேரத்தில் எல்லாம் ஆரவ்வின் குட்டி பங்களா முன் இறங்கினர்.

வாசலில் நின்றும் அழைத்துப்பார்த்தான் பூவேந்தன், “பூமா வாயேன் அண்ணா வந்த அடுத்த நிமிசம் சொல்லிட்டு கிளம்பலாம். என்னமோ எனக்கு திருட்டுத்தனம் பண்ற மாதிரி இருக்கு” என்றவனிடம்

“அவன் பண்ணுனதைதான் நான் திருப்பி பண்றேன் என்கிட்ட சொல்லிட்டு எதுவும் பண்ணலை குட்டா. உன்னை கடத்திட்டுதான் போனான், என்னை மிரட்டுனான் பச்… என்னை பேச வைக்காத நீ. வேணும்ன்னா இருந்து சொல்லிட்டுவா நான் கிளம்புறேன்” சொல்லும்போதே கண்கள் கலங்கிவிட அதனைக் காண்பிக்காமல் வேறுபுறம் திரும்பினாள் அவள்.

வேந்தனுக்கோ இது புதுசெய்தி, தன்னை கடத்தியது தெரியும் ஏன் என்றும் தெரியும். ஆனால், அதை கேட்கும் நிலையில் தமக்கை இல்லை என்பதால் பொறுமையாக சொல்லலாம் என்று நினைத்தான். ஆனால், மிரட்டியது தெரியாது. புரிந்தும் புரியாமல் இருவருக்கும் இடையில் சிக்கித் திணறினான் அவன்.

இருந்தும் பூங்குழலியின் கலங்கிய கண்களை கண்ட பின்பும் சும்மா இருப்பானா என்ன?

“பூமா வெயிட் பண்ணு பத்தே நிமிசத்துல வரேன்” என்றவன் வாயிலுக்கு செல்ல செக்யூரிட்டியோ இவனை பார்த்ததும் உள்ளேவிட்டார்.

உள்ளே சென்றவன் அவசரமாக ஐந்தே நிமிடத்தில் தேவையானதை ஒரு பையில் அள்ளிப்போட்டு கீழே வந்து தனக்கான உபயோகத்திற்கு என்று ஆரவ் வாங்கிக் கொடுத்திருந்த செல்பேசி மூலம் அவனை தொடர்புக் கொண்டான்.

அது மாதத்தின் முதல் வாரம் என்பதால் எப்போதும் போல் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், தொழிற்சங்கங்கள், காவல்துறை என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மீட்டிங், ஆலோசனை என நேரம் ரெக்கை கட்டி பறக்க பிசியாகவே இருந்தான் ஆரவ்.

செல்பேசியையும் சைலண்டில் போட்டிருந்ததால் அதனை கவனிக்கவில்லை. “அண்ணா பிக் அப்… பிக் அப் தி கால்!” என்று காலில் சுடுநீர் கொட்டியதுபோல் துள்ளியவன் ஆரவ் எடுக்கவில்லை என்றதும், “மீட்டிங்ல இருப்பாங்களோ ஷிட்” என்றுவிட்டு வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்ப ஆரம்பித்தான்.

“அண்ணா பூமா இங்க வந்துட்டா… ஸ்கூல்க்கே. நாங்க ரெண்டு பேரும் இப்போ வீட்டுக்கு போறோம். உங்ககிட்ட சொல்லாம போறதுக்கு சாரி தப்பா எடுத்துக்காதீங்க… அவ உங்க மேல செம கோவத்துல இருக்கா அவளை நீங்க மிரட்டுனீங்கன்னு சொல்றா… இதை என்கிட்ட சொல்லவே இல்லையே. ஏன் ண்ணா இப்படி பண்ணுனீங்க? ஒன்னும் தெரியாம அவளை சமாதானம் படுத்தவும் முடியல. பச்… இத்தனை வருசம் உங்ககிட்ட ஒரு அப்பாவையும் அண்ணாவையும் சேர்த்து பார்த்திருக்கேன். அதுக்கு தேங்க்ஸ் சொன்னாலாம் சத்தியமா பத்தாது… லவ் யூ ண்ணா அண்ட் மிஸ் யூ சோ மச்” அழுத்தமான முத்தத்துடன் அதை நிறைவு செய்து பேச பேச வெளியேறிய கண்ணீரை அவசரமாய் துடைத்து வெளியேறினான் பூவேந்தன்.

இருவரும் அவர்களின் வீட்டை அடைந்து உள்ளே நுழைய அதுவரை பள்ளியிலிருந்து இத்தனை நேரம்வரை இவர்களை பின்தொடர்ந்து எடுத்த போட்டோக்களோடு இதனையும் இணைத்து ஆரவ்விற்கு அனுப்பினர் காரில் வராமல் தனியாக வருவதால் பூவேந்தனின் பாதுகாப்பிற்காக அவனறியாமல் ஆரவ் ஏற்பாடு செய்திருந்த ஆட்கள்.

வீட்டினுள் நுழைந்து பழகிய இடத்தையும் தாய் தந்தையின் புகைப்படம் கூடவே இவர்கள் இருவரின் சந்தோஷ முகம் பார்த்தவளுக்கு மூச்சடைத்தது. அன்று அலங்கோலமாய் போட்டுச் சென்ற வீடு இன்று தூய்மை படுத்தப்பட்டு நேர்த்தியாய்.

சுத்தி சுத்தி பார்த்தவள் இவர்களின் படுக்கை அறையினுள் நுழைய அங்கிருந்த கட்டிலில் விழுந்தான் பூவேந்தன். “என்னக்கா அப்படியே இருக்குல? உன் பொருள் எதுவுமே எடுக்கலை எல்லாமே அதே இடத்துலதான் இருக்கு. வாரம் ஒருத்தர் வந்து என்கிட்ட சாவி வாங்கிட்டு சுத்தம் பண்ணி குடுத்துட்டு போவாங்க எல்லாம் அண்ணாவோட ஏற்பாடு”

உன்கிட்ட கேட்டேனா என்பதுபோல் முறைத்தவளிடம், “ம்கும் அப்படி பண்ணலைன்னா இங்க வந்து இருக்க முடியுமா? உன்னால ஒரு வருசமா ரெண்டு வருசமா கிட்டதட்ட ஏழு வருசம் சலிக்காம அந்த மனுஷன் செஞ்சதுக்கு ஒரு நன்றி…” என்கையில்,

“குட்ட்ட்டா” என்று எச்சரித்தாள் தமக்கை.

“பின்ன என்னக்கா இதெல்லாம் செய்யணும்ன்னு அவருக்கென்ன தலையெழுத்தா?”

வளர்த்த பாசம் அவனை பேசவைக்கிறது என்று புரிந்தவள், ‘நீ பாட்டுக்கு பேசு எனக்கென்ன’ என்ற பார்வையோடு அதற்கு மேல் அவனின் பேச்சை கேட்காமல் தண்ணீர் குடிப்பதற்காக கிட்சன் செல்ல அது இருந்த லட்சணத்தில் மானசீகமாக தலையில் கைவைத்தாள் பூங்குழலி