Alaikadal 16(2)

அங்கே அடுப்பறையிலோ ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லை. ஏன் சமையலுக்கு தேவையான பாத்திரங்கள் டப்பாக்கள் அனைத்தும் இருந்தும் அதில் ஒத்தை அரிசி, பருப்பு கூட இல்லை.

இதை எப்படி மறந்தேன் இத்தனை நாள் சாப்டுற இடத்துக்கு போய் சாப்டே அந்த பழக்கம் இங்கேயும் வந்துடுச்சி போல தன் போக்கில் யோசித்தவாறு நின்றிருந்தவளிடம்,

“பூமா என்னாச்சு?” என்றான் பின்னோடே வந்தவன்.

“தண்ணி குடிக்கலாம்ன்னு வந்தேன். கிட்சன்ல ஒண்ணுமே இல்லை. எல்லாத்தையும் வாங்கணுமா? எனக்கு வேற சமையல் லேசா மறந்து போன மாதிரி இருக்கேடா” நெற்றியை நீவியவாறு சொல்ல,

“என்னாது? சமையல் மறந்துபோச்சா அப்போ எதுக்கு பொருள் எல்லாம் வாங்கணும்? ஹோட்டல்ல ஆர்டர் பண்ணியே சாப்பிடலாம். என்னால ரிஸ்க் எடுக்க முடியாது தாயே! தண்ணி தானே” அவளை சற்று முன்னால் நகர்த்தி சென்றவன் சின்க் அருகே சுவரோடு ஒட்டியிருந்த அந்த சுத்தகரிப்பு மெசினின் ஸ்விட்சை போட்டுவிட்டு, “இதோ பத்தே நிமிசத்துல வரும்” என,

‘பரவால்லையே’ என்று மனதில் நினைத்தாலும் வாயைத்திறந்து கூறிடவில்லை. ‘எதுக்கு வம்பு? திரும்பவும் ஆரவ் அண்ணா வச்சாங்கன்னு பாட்டு பாடுவான்’ என்ற எண்ணம்தான்.

தண்ணீரைப் பருகியதும், “சரி வா… அப்படியே அப்படியே நடந்து போய் எல்லாத்தையும் வாங்கிட்டு வருவோம் பக்கத்துல புதுசா கடை பார்த்தேன்னே”

“பூமா… என்ன விளையாடுறியா? சமைக்க தெரியாம என்னத்த வாங்கி என்ன பிரியோசனம்?”

“டச் விட்டுபோச்சுன்னு சொன்னேன்டா… சுத்தமா மறந்துச்சுன்னு சொன்னேன்னா? ஒரு ப்ளூ கலர் நோட்ல எல்லாத்தையும் எழுதி வச்சிருந்தேனே இங்கதான் எங்கயாச்சும் இருக்கும் அதை பார்த்து திரும்ப சமைச்சா வராமையா போயிரும், கம் கம் அப்புறம் ட்ரெஸ் வேற வாங்கணும்ல உனக்கு வேற என்ன வேணும்?” ஷாப்பிங் கிளம்புவதற்கான அறிகுறியுடன் பூங்குழலி கேட்க,

“எனக்கும் கடைக்கு போய் டச் விட்டுபோச்சு பூமா. உன்கூடயும் அம்மாகூடயும் மளிகைகடை துணிக்கடைன்னு கடை கடையா ஏறினதுதான் அப்புறம் எல்லாமே அண்ணாவே பார்த்துக்கிட்டாங்க” சிறிதுநேரம் கடும்அமைதியை தத்தெடுத்தது அவ்விடம்.

அதனை முதலில் கலைத்தது பூவேந்தன்தான் ஆரவ் பற்றி பேசினால் பூங்குழலி அமைதியாவதை அறிந்திருந்தான். ஆனால் தாயைப் பற்றி பேசியதில் எங்கே தமக்கை மீண்டும் கலங்கிவிடுவாளோ என்றெண்ணி, “எல்லாத்தையும் ஒரே நாள்ல வாங்க வேண்டாம் இங்க வந்தா போடுறதுக்கு எப்போதும் ரெண்டு டிரஸ் இருக்கும். நான் போய் குளிச்சிட்டு அதே போட்டுக்குறேன். உன்கிட்ட டிரஸ் இருக்கா இதென்ன ஒரு டிசைன்னும் இல்லாம கரு கருன்னு கொள்ளைக்காரி மாதிரி டிரஸ்” தம்பியின் கிண்டலில் தெளிந்தவள்,

“ஒரு இந்தியன் நேவி சப் கமாண்டரை பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்ட நீ” கையில் சிக்கிய கரண்டியை வைத்து வலிக்காமல் அடிக்க அந்த கலகலப்போடு வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க வெளியே சென்றனர் உடன்பிறப்புகள்.

மீண்டும் வீட்டிற்கு வருகையில் மாலை ஆறு மணியைத் தாண்டியிருந்தது.

“நைட் என்ன செய்யலாம் சொல்லு… ஸ்வீட் கேசரி செய்ய போறேன் டின்னர் நீயே சொல்லு. அதுக்கு முன்னாடி குளிச்சிட்டு வந்துடறேன் சோப் எடு” வாங்கி குமிந்திருந்த பொருட்களில் சோப்பைக் கண்டுபிடித்து குளியலறை சென்றாள் பூங்குழலி. அவள் சென்றதும் சிறிது யோசித்தவன் தயக்கத்துடன் பூங்குழலியின் போனை எடுத்து ஆரவ்விற்கு கால் செய்தான் பூவேந்தன்.

ஒரு வார்த்தை அவனிடம் சொல்லி அவன் சரி என்றுவிட்டால் இந்த தவிப்பு கொஞ்சமேனும் நீங்கியிருக்கும். அதை ஆரவ் மீது இருந்த மிதமிஞ்சிய வெறுப்பில் செய்யத்தவறி தன்னையறியாமலே தம்பியை தவிப்பிற்குள்ளாக்கியிருந்தால் பூங்குழலி.

அன்றுபார்த்து ஆரவ்வின் வேலை இன்னமும் ஆபிசில் இழுக்க அமைச்சர்களுக்குள் விவாதம் முற்றியிருந்தது. ஒரு வழியாய் அவர்களின் குற்றம் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யும் வழியை ஆராய்ந்து விவாதம், விதண்டாவாதம் ஆகாமல் தடுக்கும் மும்முரத்தில் வேறெதையும் கவனிக்கவில்லை அவன்.

குளியலறை கதவு திறக்கும் சத்தம் கேட்க அவசரமாய் கால் ஹிஸ்ட்ரியை அழித்துப் போனை எடுத்த இடத்தில் வைத்துவிட்டான். முதல்முறை ஒரு விசயத்தை மறைத்து செய்வதால் மனது வேறு ‘லபோ டுபோ’ என்று அலறியது.

“என்னடா செய்யலாம்?” என்றவாறு வந்தவளிடம்

“க்கா… வந்து” சட்டென்று யோசிக்கமுடியாமல் திணற அதன் பின்பே அவளின் கையால் சமைத்து, எப்போதோ ஊட்டி விட்ட சாம்பார் சாப்பாடின் சுவை வேறெதிலும் கிடைக்காததை உணர்ந்து,

“சாம்பார் சாப்பாடு செய்வியே வித் பொட்டேடோ சிப்ஸ் அது வேணும்” என

“பொட்டேடோ சிப்ஸ் இருக்கு கடைல வாங்கிட்டேன், வா வந்து எல்லா டப்பாலயும் சாமானை கொட்டு நான் சமைக்குறேன் நோட் கிடைச்சிருச்சி பாரு” கையில் இருப்பதை ஆட்டிக் காண்பித்தவள் அதில் சாம்பார் சாப்பாடை தேட

“நானும் சாம்பார் சாப்பாடுன்னு சொல்லி சாப்ட்டு பார்த்தேன்க்கா அந்த டேஸ்ட் வரலை தெரியுமா வேற மாதிரிதான் இருந்துச்சு” எனவும் சிரித்துவிட்டாள் பூங்குழலி.

“நான் செஞ்சது நமக்குதான் சாம்பார் சாப்பாடு. ஆனா அதோட பேர் வெளியே வேற பிஸிபேளாபாத். எனக்கே வேலைக்கு போன பிறகுதான் தெரிஞ்சது” என்றதும்

“அடிப்பாவி பச்ச புள்ளைய ஏமாத்தியிருக்க” என்று இளையவன் நெஞ்சை பிடித்தான்.

“ஹாஹா ரெண்டும் ஒன்னு தான் குட்டா கொஞ்சம்தான் இப்படி அப்படி மாறும்போல யாருக்கு தெரியும் செஞ்சி பார்ப்போம்”

அப்போதுதான் அவளின் உடையை கவனித்த பூவேந்தன், “ஏய் பூமா என்ன வேற துணியே மாத்தாம அதையே போட்டுட்டு வந்துட்ட” என்றான் அவளின் கரு கரு உடையை மேல் இருந்து கீழ் நோக்கியவாறு.

“ஒஹ் என்கிட்ட எல்லாமே இப்படிதாண்டா இருக்கும் ஷிப்ல இருக்குற நியாபகத்துல ஷர்ட் போட்டுட்டேன் இரு நைட் டிரஸ் மாத்திட்டு வரேன்” என்று உள்ள நுழைய, அவளிடம் உள்ள உடைகளை பார்த்த பூவேந்தனோ தமக்கையை கேவலமாய் ஒரு பார்வை பார்த்தான்.

“ஹே என்னடா இப்படி பாக்குற எதுவுமே நல்லலையோ சரி விடு நாளக்கி வாங்கிக்கலாம்” என்றவாறு அதில் ஒன்றை எடுக்க,

“ஒன்னும் வேணாம் நான்தானே வளர்ந்துட்டேன் நீ அப்படியே தானே இருக்க! போ அந்த பீரோலதான் உன் பழைய துணி எல்லாமே இருக்கு போய் எதையாச்சும் போட்டுட்டு வா” என்று ஏவி அவள் கையில் எடுத்த உடையைப் பிடுங்கி பெட்டியில் நுழைத்தவன் அதைத்தூக்கிக்கொண்டு எங்கோ சென்றான்.

பீரோவை திறந்தவுடன் கண்ணில் பட்டது அன்று தூக்குபோட போன தாயின் சேலைதான். தன் முட்டாள்தனத்தின் உச்சம் இன்று புரிய அதற்கு கீழே தன் பிறந்தநாளுக்காக தாய் வாங்கிய அடர் ஊதா நிற பட்டு பாவாடையும் தங்க நிற சட்டையும் இருப்பதை கண்டாள். அது தாவணியாகவும் போடலாம். அதற்கு துணி தனியாக இருந்தது. ஒரே பாவாடை இருவேறு உடைகள் போல் இருக்கும் அந்த உடை. அன்று ஆசை ஆசையாக மகளுக்கு வாங்கியிருந்தார் சாந்தா.

ஆனால் மகள் அதனை அணிந்து பார்க்கவும் இல்லை அதற்கு பின் அணியவும் இல்லை. புது ஆடையின் மினுமினுப்பு சற்று குறைந்திருந்ததை தவிர வேறு மாற்றம் இல்லை. அதை இப்போது அணிந்துக்கொண்டு பீரோவில் ஓட்டியிருந்த கண்ணாடியிலே தன்னுருவத்தை பார்த்தாள் பூங்குழலி.

வழக்கமாய் தெரியும் கம்பீரம் குறைந்து சிறுபிள்ளை போல் இருந்தது அவள் உருவம். கனமாய் இருக்கும் மனதிலும் சந்தோசம் வருமா, இதோ வருகிறதே மனது பாரமாய் இருந்தாலும் உதடு புன்னகை ஏந்தியிருந்தது.

வெளியே வந்தவளிடம், “சூப்பர் சூப்பர்க்கா. இது நாம கடைசியா வாங்குன டிரஸ் தானே? எனக்கும் இதே கலர் சட்டை வாங்குனோம்ல? அதையெல்லாம் நான் போட்டு போட்டே கிழிச்சிடேன் நாளக்கி திரும்ப வாங்கித்தா” வளவளத்தவன் அது போதாதென்று, “இந்த கொண்டை என்ன கிழவி கொண்டை மாதிரி இருக்கு” என்று அதையும் கலைத்து விட்டான்.

“டேய் குட்டா வேணாம் இப்போ தலைய சீவி எங்க போக போறோம் வா வா எல்லாத்தையும் கொண்டு கிட்சன்ல தள்ளுவோம்” என்று வேலையை நினைவுபடுத்தி மீண்டும் கொண்டை போட்டு தம்பியை அடுப்பறைக்கு இழுத்துச்சென்றாள்.

அதேநேரம் தன் வீட்டின் போர்ட்டிகோவில் காரை நிறுத்தி உள்ளே நுழைந்த ஆரவ் உடல், மனச்சோர்வை போக்கும் வகையில் ரிலாக்சாக சோபாவில் சாய்ந்தமர்ந்து, ‘என்ன இன்னும் ஆளை காணோம்?’ என்று பூவேந்தனை சுற்றும்முற்றும் தேடியபடி பாக்கெட்டில் இருந்து எடுத்த செல்பேசியில் கவனத்தை திருப்ப படபடவென விழுந்த அத்தனை மிஸ்டு கால் மற்றும் வாட்ஸ் அப்பில் அவனின் சோர்வு சற்று பின்னே போனது.

புருவம் சுருக்கி வேந்தனின் வாய்ஸ் மற்றும் அவர்கள் இருவரின் புகைப்படங்களை பார்த்தவன் பூங்குழலியை இன்றே இப்படி திடுப்பென்று எதிர்பார்க்காததால் திகைத்துப்போனான்.

வெகுசில நொடிகளில் தன்னுணர்வுக்கு வந்தவன் ‘எவ்ளோ நெஞ்சழுத்தம் இருந்தா சொல்லாம கொள்ளாம வேந்தனை கூட்டிட்டுப் போவா?’ என்று பூங்குழலியை கன்னாபின்னாவென மனதினுள் தாளிக்க சட்டென்று இதேபோல் ஏன் இதைவிட மோசமாகவே தான் வேந்தனை அவளிடம் இருந்து பிரித்ததை எண்ணி ஆத்திரத்தை கட்டுப்படுத்தினான்.

பூவேந்தனின் போன் தன் முன்னே இருக்க பூங்குழலியின் நம்பரில் இருந்தும் கால் வந்ததை கண்டவன் அது வேந்தனாகதான் இருக்கும் என்று சரியாகவே ஊகித்தான்.

பதிலுக்கு கால் செய்வோமா? வேண்டாமா? என்று தனக்குள்ளே பட்டிமன்றம் நடத்தி இப்போது வேண்டாம் என்று தானே தீர்ப்புக் கூறி மாடியேறி தனதறைக்கு சென்றுவிட்டான். தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு யோசனையோடே டைனிங் டேபிளில் உணவுண்ண அமர்ந்தவனுக்கு பல வருடங்களுக்கு பின் மீண்டும் பளேரென்று முகத்தில் அறைந்தது தனிமையுணர்வு.

‘எக்ஸாம் முடிந்தவுடன் இதை சாப்பிடணும் இந்த படம் பார்க்கணும் இந்த புக் படிக்கணும் இங்க போகணும்’ என்ற பூவேந்தனின் பட்டியல் நினைவுவர அதற்கு மேல் சாப்பிடமுடியாமல் கால் செய்தேவிட்டான் பூங்குழலி செல்பேசிக்கு.

அரிசி மூட்டையை பெரிய பாத்திரத்தில் கொட்டிக்கொண்டிருந்தவனிடம், “போதும் குட்டா மீதிய நாளைக்கு பாக்கலாம். சோறும் குழம்பும் ஒன்றாய் கலந்தால் வேலை முடிந்தது” என்ற பூங்குழலியின் பேச்சு அலைபேசியின் ஓசையால் தடைபட,

ஹால் டீபாவில் இருந்த செல்பேசி அன்னோன் நம்பரில் அழைக்கவும் யோசனையோடு எடுத்து, “ஹலோ” என்றாள்.

அவளுடன் மல்லுகட்ட விருப்பமில்லாத ஆரவ்வோ நேரடியாய், “பூவேந்தன்கிட்ட போனைக் குடு” என்றான் எரிச்சலாய்.

அதே எரிச்சல் இவளிடமும் பிரதிபலிக்க, “அதான் மொத்தமா வந்தாச்சுல இன்னும் என்ன வேணும்?” பதிலுக்கு அதே குரலில் ஆனால் சத்தமின்றி இயம்ப,

“அக்கா யாருக்கா?” ஒருவேளை அண்ணா தானோ என்ற உள்ளுணர்வில் கேட்க,

“ஹான்… எனக்கு யாருடா கால் பண்ணுவா எல்லாம் தேவையில்லாத கொசுத் தொல்லைதான்” வேண்டுமென்றே அவனுக்கு கேட்குமாறு கூறிவிட்டு கட் செய்தவளின் நெஞ்சம் கொஞ்சமாக பழிவாங்கியதில் திருப்தி பட்டுக்கொண்டது.

அவனின் பதவி என்ன? அதிகாரம் என்ன? பணபலம் என்ன? என எதைப்பற்றியும் சிந்திக்கவில்லை அவள். கொலை அளவுக்கு கொடூரமாக இறங்க மாட்டான் என்று ஆழ்மனதிற்கு கிடைத்த தைரியமோ என்னவோ!

இப்போது கேபிள் கனெக்ஷன் இல்லாவிட்டாலும் அனைத்தையும் வழக்கமாக டிவி பார்த்து உண்ணும் இடமான ஹாலில் பரப்பி வைத்து தட்டில் சாதத்தைப் பரிமாற,

“நீயே ஊட்டிவிடுக்கா…” என்றான் இளையவன்.

அதில் லேசாக பூங்குழலிக்கு கண்கள் கலங்க, இமை சிமிட்டி அதனை உள்ளிழுத்தவள் ஒரு வாய் எடுத்து தம்பிக்கு ஊட்டிவிடச்செல்ல, அதை வாங்கப்போகையில் வாசல் கதவு தடாலெனத் திறந்தது.

வெளியிலிருந்து முட்டிவரை உள்ள ஜிப்பா அணிந்து தலையில் தொப்பி, கண்களுக்கு கருப்பு கண்ணாடி, முகத்தில் நீண்ட நாள் தாடியுடன் உள்ளே வந்த உருவம் கதவைச் சற்றே காலால் எட்டி உதைக்க, பூவேந்தனுக்கு யாரென்று தெரிய முகம் தானாக மலர்ந்ததென்றால் முதல் கட்ட அதிர்ச்சியில் இருந்து வெளிவந்த பூங்குழலியை யோசிக்கவிடாமல் அவ்வுருவம் செய்த செயலில் அடுத்தடுத்த அதிர்ச்சி தாக்கியது.

தொப்பி, கண்ணாடி, தாடி அனைத்தும் ஒவ்வொன்றாய் எடுத்த பின் தன் கையை மேல்நோக்கி முறுக்கியவாறு தன்னுடைய முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றான் ஆரவ்.

நீங்காமல் தானே நிழல் போல நானே
வருவேன் உன் பின்னோடு எந்நாளும் தான்…
பூப்போன்ற மனதை பொல்லாத மனதாய்
தவறாக எடைப்போட்டு சென்றாலும்தான்…
பாலைப்போல கள்ளும் கூட வெண்மையானது
பருகிடாது விளங்கிடாது உண்மையானது…
நீயும் காணக்கூடும் இங்கு ஓர் தினம்… இந்த பால் மனம்.

அலைகடல் ஆர்ப்பரிக்கும்…