Alaikadal 17
Alaikadal 17
அலைகடல் – 17
‘எவ்ளோ தைரியம் இருந்தா கொசுத்தொல்லைன்னு சொல்லி ஃபோனை வச்சிருப்பா?’ அவளின் குரல் மீண்டும் மீண்டும் மூளைக்குள் குடைந்து உலகமகா எரிச்சலைக் கிளப்ப மாறுவேசத்தில் காரை தவிர்த்து பைக்கை எடுத்துக்கொண்டு வந்துவிட்டான்.
வீட்டின் கதவு திறந்தேயிருக்க நிச்சியம் அவன் இருக்கும் கோபத்திற்கு உள்ளே நுழைந்து கழுத்தை பிடித்திருப்பான். ஆனால் கீழே அமர்ந்து தம்பிக்கு ஊட்டிவிடும் உருவத்தை கண்டதும் ஒருகாலத்தில் தனக்கு இதேபோல் ஊட்டிவிட்ட தாயின் நினைவு தந்த சுகத்தில் மொத்த கோபமும் வடிய மாறுவேசத்தைக் கலைத்து அவளையே வெறித்திருந்தான் ஆரவ்.
வீட்டிற்கே வந்து நிற்பான் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை பூங்குழலி. என்றைக்கு இவன் விசயத்தில் எதிர்பார்ப்பது நடந்திருக்கிறது இன்று நடப்பதற்கு. கதவை பூட்டாமல் விட்ட தன் மடத்தனத்தை நொந்துக்கொண்டிருக்கும் போதே,
“அண்ணா வாங்க வாங்க சாப்டீங்களா இல்ல இங்க சாப்பிடறீங்களா?” பூவேந்தனின் ஆரவாரமான வரவேற்பு இருவரின் பார்வையையும் நேருக்கு நேர் சந்திக்க வைத்தது.
‘என் சாப்பாட்டை சாப்ட்ருவியோ?’ என மிரட்டலாய் அவள் முறைக்க பதிலுக்கு, ‘சாப்பிட்டா என்னடி பண்ணுவ?’ என தெனாவட்டாய் இவனும் நின்றிருந்தான்.
அதை கண்டுக்கொள்ளாமல் தட்டை எடுத்து சாதம் சிப்ஸ் வைத்து ஆரவ்விடம் நீட்டினான் வேந்தன். உள்ளே நமநமத்தாலும் கொடுக்காதே என்று பூங்குழலியும் சொல்லவில்லை அவளிற்கே அது அதிகப்படி என தோன்றிருக்குமோ என்னமோ!
சாப்பிட விருப்பம் இல்லாவிட்டாலும் பூங்குழலிக்கு பிடிக்கவில்லை என்பதால் அவளிற்கு பிடிக்காததை செய்ய விருப்பம் வர, அதை வாங்கி டீபாவில் வைத்து வாஷ்பேஸின் சென்று கைகழுவியவனின் காதில் அக்கா தம்பியின் சன்னமான வாக்குவாதம் விழுந்தது.
என்னவென்று தெளிவாக விழவில்லை என்றாலும் தன்னைப்பற்றிதான் என்று தெரியாதா என்ன?
“டேய் உன்னை யாருடா சோறு தர சொன்னது? கேட்டானா அவன் கேட்டானா” என பூங்குழலி பொங்க
“ஷ்… பூமா மெதுவா பேசு… கேட்டா தான் தரணுமா? வீட்டுக்கு வந்தவங்களை வான்னு ஒரு வார்த்தை கூப்பிடல”
“எனக்கு பிடிக்கலை… நான் கூப்பிட மாட்டேன். வெளிய போன்னு சொல்லாம விட்டேனேன்னு சந்தோஷப்படு” தமக்கை எகிறினாள்.
“சரி சரி கத்தாத. இப்போவாச்சும் அன்னைக்கு என்ன நடந்ததுன்னு கேளேன்” வேந்தனுக்கு தெரிஞ்சே ஆகவேண்டும் போல் இருந்தது.
“இதுக்கு பதில் முன்னாடியே சொல்லிட்டேன். திரும்ப திரும்ப சொல்ல வைக்காத குட்டா போ… ஏன் அவனே சொல்ல மாட்டானா தப்பு செஞ்ச அவனுக்கே அவ்ளோ திமிரு இருந்தா பாதிக்கப்பட்ட எனக்கு எவ்ளோ இருக்கும்” கடி கடி என கடித்தாள்.
ஆரவ் வரும் அரவம் கேட்க கப் சிப் என்றாகினர் இருவரும்.
“சாப்பிடுங்க சாப்பிட்டு தெம்பா சண்டை போடலாம்” நக்கலாய் கூறி சோபாவில் அமர்ந்தவனின் பார்வை பூவேந்தனிடம் இருக்க செய்தியோ பூங்குழலிக்கு.
“ஆமா இவன் கூட சண்டை போடத்தான் ஏங்கிட்டு இருக்காங்க இங்க” என முனுமுனுத்து கஷ்டப்பட்டு உண்ண முயற்சி செய்ய, கையை சுரண்டி ஆஆ என்று வாய் திறந்த பூவேந்தனிடம், “அவனுக்கு குடுத்துட்டு இங்க என்ன ஆஆ… போடா” என்று கையைத் தட்டிவிட
“அப்போ போ நான் அண்ணாகிட்டயே ஊட்டிவிட சொல்றேன்” என்று எழுவதுபோல் பாசாங்கு செய்தான் வேந்தன்.
“கொன்னுருவேன் உக்காரு…” அப்போதும் அமராமல் போக்கு காட்டியவனிடம் “உக்காருடா…” என்று அதட்டி வாயில் சோறை திணிக்க சத்தமின்றி சண்டையிட்டாலும் கவனித்துக்கொண்டிருந்த ஆரவ்விற்கு அது புரிந்து சிரிப்பு வரவா என்று கேட்டு உதடு துடித்தது.
பூவேந்தனுக்கும் சிரிப்புதான் வந்தது. இதற்கு முன் ஆரவ் ஊட்டி விட்டதில்லை. சும்மா கிளப்பிவிட்டான். எதிர்பார்த்தபடி அக்காவின் கோபம் போய் பொறாமை மேல வந்து ஒருபுறம் சிரிப்பு மூட்டியது என்றால் எப்படி இனிவரும் காலங்களில் இருவரிடமும் சமாளிக்கப் போகிறோம் என்றெண்ணி இன்னொரு புறம் பயமாகவும் இருந்தது.
அனைவருக்குமே பசி என்பதால் அதற்குமேல் உணவு தீரும்வரை அங்கு சிப்ஸ் நொறுங்கும் சத்தத்தை தவிர வேறு சத்தம் கேட்கவில்லை.
பாத்திரத்தை எடுத்துவைக்க எழுந்து சென்றவளை இப்போதுதான் முழுதாக பார்த்தான் ஆரவ். கப்பலில் இருந்த கம்பீரம் சிறிதுமின்றி பாவாடை சட்டையில் பத்து வயது குறைந்தாற்போல் இருந்தவள் முதல்முறையாய் கண்ணை கவர்ந்தாள்.
ஒரேமாதிரி உடையில் ஒருவரை பார்த்து திடீரென அவர்கள் வேறுமாடல் உடை அணிந்தால் நம்மை மீறி பார்ப்போமே அது தான் ஆரவ்விற்கும் நடந்தது.
கண்ணில் முறைப்பு மட்டும் இல்லாமல் முகத்தை சிரித்தமாதிரி வைத்திருந்தால் இன்னமும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்ற ‘ஆரவ் என்ன பண்ற? பேசவேண்டியதை பேசிட்டு கிளம்பு’ என்று எச்சரித்தது ஒரு குரல்.
அதில் மனதை செலுத்தியவன் அருகில் இருந்தவனிடம், “போய் உங்க அக்காவ கூட்டீட்டு வா” என
“அண்ணா அவ கோவத்துல ஏதாச்சும் சொன்னா கோபப்படாதீங்க. மெதுவா எடுத்து சொல்லுங்க” மனம் கிடுகிடுவென நடுங்கியது ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவதுபோல்.
அமைதியாக இருந்தவனிடம், “நீங்க பூமாவ மிரட்டுனது உண்மையா?” தயங்கி தயங்கி என்றாலும் கேட்டுவிட்டான் காலையில் இருந்து மனதை அரித்த கேள்வியை.
“ஹ்ம்ம்… உண்மைதான்” தயக்கமின்றி ஒத்துக்கொண்டான் ஆரவ்.
“அண்ணா…” வேந்தன் வார்தையின்றி திக்க
பெருமூச்சோடு, “உங்க அக்காக்கு சொல்லி புரியவைக்க முடியும்ன்னு தோணல அதான்… கூடவே எனக்கும் அவசரம் அன்னைக்கு” முகம் இறுகியது.
அதற்கு மேல் உள்ளே இருக்க பூங்குழலிக்கு பொறுமை இல்லையோ என்னவோ. அடுப்பறையிலிருந்து அவன் போவான் போவான் என்று நின்று பார்த்தவள் கிளம்புவதுபோல் தெரியவில்லை என்றதும் ஹாலிற்கு வந்துவிட்டாள்.
“வந்த வேலை முடிஞ்சதா?” எடுத்ததும் கேட்டது இதைதான்.
முன்னே பின்னே இப்படி அவமானப்படாதவனுக்கு சுள்ளென்று வந்தது, ‘என்னை சோத்துக்காக வந்தேன்னு சொல்றாளா என்னன்னு நினைச்சா என்னைப்பத்தி அமைதியா இருந்தா என்னவேணும் என்றாலும் பேசுவாளா’ மனதிற்குள் முட்டி மோத
“உனக்கு பேசிக் மேனர்ஸ் தெரியுமா தெரியாதா?” என்றான் அடிக்குரலில் முகமெல்லாம் ஜீவுஜீவு என்று சிவந்திருந்தது. ஆனாலும் அசரவில்லை பூங்குழலி,
“அச்சோ தெரியாதே… தெரிஞ்சிருந்தா கடத்தி கொலை பண்றவங்களை எல்லாம் வீட்டுக்குள்ள விட்டு சாப்பாடும் சாப்பிட விடுவேனா” என
“சும்மா கடத்துனேன் கடத்துனேன்னு சொல்ற அன்னைக்கு கடத்தலை என்றால் இன்னைக்கு இவன் இல்லை அது தெரியுமா உனக்கு” பொங்கிய கோபத்தில் ஆரவ் சத்தமிட யாரேனும் வந்துவிடுவார்களோ என பூவேந்தன் ஓடிப்போய் கதவை சாற்றினான்.
“இப்படி சொன்னா உடனே தப்பா புரிஞ்சிட்டேன்… தப்பு செஞ்சிட்டேன் என்னை மன்னிச்சிருங்கன்னு கேட்பேனா? சரி காப்பாத்துன தெய்வம் நீங்க… என்னை எதுக்கு மிரட்டுனீங்க? அதுவும் ரெண்டு வாட்டி போன் பண்ணி… அதுக்கு என்ன சொல்ல போறீங்க?” குரலில் உள்ள நக்கல் நையாண்டியின் உள்ளத்தில் எரியும் கோபத்தை மறைத்தது.
“பொறுமையா சொல்லிருந்தா நீ அன்னைக்கு என் சொல்படி கேட்டிருப்பியா? பத்திரிக்கைக்கு பேட்டி குடுக்குறேன்னு வீராவேசமா கிளம்பிருக்க மாட்ட? அதுவும் அர்ஜுன் அந்த டாக்டரை கைக்குள்ள போட்டுட்டு உங்க அம்மாவை கொல்லப் பார்த்தான்… ஜஸ்ட்மிஸ். அவன் கொன்னதுக்கு என்மேல பழியும் போட்டிருப்ப… இதையெல்லாம் நான் கைகட்டி பார்த்துகிட்டு இருக்கணுமா?” ஏழு வருட புழுக்கம் யாரிடமும் சொல்லாத சொல்ல முடியாத புழுக்கம் அவனை மீறி வெளிவந்துக்கொண்டிருந்தது.
அந்த பொறுக்கி பெயர் அர்ஜுன் என்றே இப்போதுதான் தெரிந்தது பூங்குழலிக்கு. அவன் எதுக்கு கொலை பண்ணனும் என்று யோசித்து மூளை குழம்ப, “இல்லை நீ… நீ பொய் சொல்ற டாக்டரை அடிச்சி…” எனும்போதே அவளின் குரல் தேய்ந்தது.
“லுக்… நான் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல. உங்க அம்மாவோட ஆக்சிஜன் மாஸ்க் எடுத்து அவங்க மூச்சு திணறும் போதுதான் என் ஆளுங்க சரியான நேரத்துல அந்த டாக்டரை அடிச்சி தள்ளுனது. என் ஆளுங்கல டாக்டரும் இருந்ததால பாதுகாப்பாதான் ரெண்டு பேரையும் கொண்டு வந்தாங்க. நான் உண்மைதான் பேசுவேன். நம்பலைன்னா எனக்கோன்னு நஷ்டமில்லை” முழு திமிரில் வந்து விழுந்தது வார்த்தைகள்.
அது பூங்குழலிக்கு எப்படியோ வேந்தனுக்கு ஒருமாதிரி இருந்தது தமக்கையிடம் இப்படி பேசுறாரே என… அதனால் குறுக்கிட்டான்
“அண்ணா என்னண்ணா உண்மைய சொல்லிருக்கலாம்ன்னு தானே கேக்குறாங்க… அக்கா பாவம்தானே” கெஞ்சலோடு கெஞ்சியவனிடம் கோபத்தை காட்டாமல்
“இதெல்லாம் சொல்லி உங்க அக்காக்கு புரியவைக்குறதுக்குள்ள அன்னைக்கு ஹாஸ்பிடல் வந்துரும் அதான் மிரட்டினேன். மறுபடியும் கால் பண்ணி பேச வந்தா சொல்ல வரதை கேட்காம கத்தினால் நானா பிணை? நானும் பயங்கர டென்ஷன்ல இருந்ததால கோவத்துல கத்திட்டு வச்சிட்டேன். போதுமா”
மனம் இதுவரை யாரிடமும் விளக்கம் சொல்லாததால் தடுமாறினாலும் தன்னால் தெரிந்தோ தெரியாமலோ காயப்பட்ட இருவருக்கும் விளக்கம் சொல்ல வேண்டியது கடமை என்றெண்ணியே பொறுமையாக போனான்.
இவ்வளவு நேரம் இருந்த பேச்சுக்குரலை விட்டு கனமான அமைதியை தத்தெடுத்து அவ்விடம். ஆரவ்தான் அமைதியை குலைத்து மீண்டும் பேசினான்.
“இதெல்லாம் உங்க அக்கா வந்து கேட்டா சொல்லனும்ன்னு நினைச்சிருந்தேன். இப்போ வரை அவளுக்கு என்னை குற்றம் சொல்லவே நேரம் சரியா இருக்கு. ஏழு வருசம் ஆகியும் பெரிய பதவில இருந்தும் தீர விசாரிக்க தோணல. அன்னைக்கு நடந்தது என்னன்னு தெரிஞ்சிக்கவே விருப்பமில்ல” பூங்குழலியை நீ விளக்கம் கேட்கவில்லை என்பதுபோல் குற்றம் சாற்றினான்.
“கேட்டா மட்டும்… கேட்டா மட்டும் போன ஏழு வருசம் திரும்ப வர போகுதா? வராதுல அதான் கேட்கலை. உங்க விளக்கம் தேவையும் இல்ல” மீண்டும் அதே ஏளனம்.
“உனக்கே தேவையில்லைன்னா நான் ஏன் சொல்லப் போறேன் ஆனா எனக்கு விளக்கம் வேணும். எதுக்கு சொல்லாம கொள்ளாம காணாம போன. உன்னை தேடுறதுக்கே தண்டமா செலவு பண்ணுனேன்ல அப்போ நான் கேட்பேன். அப்படியே போன்னு விட்ருந்தா இப்போ இந்த வாய் பேசிட்டு என் முன்னால இருக்கமாட்ட” கடுப்பாகியது அவனுக்கு என்ன பெண் இவள் கொஞ்சம் கூட நன்றியில்லாமல் என.
அதுக்கான நன்றியை எதிர்பார்க்கவில்லைதான் என்றாலும் இந்த நக்கல் நையாண்டி எல்லாம் ‘இவளைப் போய் வேந்தனுக்கு வேண்டி தேடிக் கண்டுபிடிச்சோமே… தேவையா எனக்கு’ என்ற எண்ணத்தை உண்டாக்கியது.
“ஆமா ஒருத்தன் வந்து கையைப் பிடிப்பான்… இன்னொருத்தன் வந்து கடத்தப் பார்ப்பான். நான் வாசலை திறந்து வச்சிட்டு அடுத்து யாராது இருக்கீங்களா… வாங்க வாங்கன்னு வெத்தலை பாக்கு வச்சி கூப்பிடனுமா” எவ்வளவு நேரம்தான் கோபத்தை மறைப்பது நேரடியாகவே குரல் உயர்த்தி கேட்டிருந்தாள் பூங்குழலி.
“பூமா…” மிரட்டலுக்கே மிரண்டவன் இப்போது பூங்குழலி சொன்ன விசயங்களில் நடுநடுங்கிப்போனான்.
“ஒன்னு மறந்துட்ட பூங்குழலி. அர்ஜுன்கிட்ட இருந்து நீ தப்பிச்சதும் நான் அனுப்புன ஆளுங்கனாலதான். ஒரு தீமை தெரியாம செஞ்சாலும் பல நன்மைகள் செஞ்சிருக்கேன். செஞ்ச நல்லதை நான் சொல்லிகாட்டுனதே இல்லை இதுவரைக்கும். அதையும் பண்ண வச்சிட்ட” என்றான் ஆரவ்.
அந்த உண்மையில் விலுக்கென நிமிர்ந்தவள் ஒத்துக்கொள்ள மனமின்றி, “கடைசி வரைக்கும் அம்மா முகத்தை நான் பார்க்கல அதெல்லாம் உங்களால திருப்பி தர முடியுமா” உள்ளத்தில் புதைந்து கிடந்த அழுத்தம் வெடித்துக்கொண்டு வந்தது அவளுக்கு.
“நீ ஓடாம வீட்டுல இருந்தா மூணு மாசம் உங்கம்மாவோட இருந்திருக்கலாம். அது உனக்கு தெரியலையா இல்ல தெரியாத மாதிரி நடிக்குறியா… நானா உன்னை காணாம போகச் சொன்னேன். சும்மா சொல்லக்கூடாது அவ்ளோ புத்திசாலித்தனம் இருக்குற உனக்கு ஒருத்தன் போன் பன்றானே, கடத்துவேன்னு சொல்லிட்டு கடத்தாம சும்மா விட்டுட்டு போறானே, ஏன்னு யோசிக்க வேண்டாம். வந்துட்டா குற்றம் சொல்ல…”
“ஆமா எல்லாத்தப்பும் என்மேலதான் நீ ஒரு குற்றமும் செய்யாத அப்பாவி உத்தமன்தான். அப்படித்தானே? சரி அப்படியே வச்சிப்போம். ஆக்சிடெண்ட் நீ தானே பண்ணுன? அப்போ எதுக்கு நீ பண்ணுன ஆக்சிடெண்ட்ட வெளிய சொல்லவிடல. அரசியல் வாழ்க்கை அஸ்தமாகிரும்ன்னு போலீஸ கைக்குள்ள போட்ட ஆளுதானே நீ? எங்கே இல்லைன்னு சொல்லு பார்ப்போம்” என
மீண்டும் தொடக்கப்புள்ளிக்கே வந்த உணர்வு வந்தது ஆரவ்விற்கு ஆனால் அவள் கூறியது உண்மை என்பதால்
“யெஸ்… எத்தனை வருச காத்திருப்பு அது. எங்கேயும் நான் வேணும்னே தப்பு பண்ணலை பிரேக் கட் போராடியும் தவிர்க்க முடியல… அதுக்காக அத்தனை கஷ்டப்பட்டு அடையப்போற வெற்றியை இழக்கவும் நான் விரும்பலை. வெளியே தெரிஞ்சா அதை பெரிய பிரச்சனை ஆக்கி என்னை தூக்கி மூலைல போட்ருவாங்க. அதுக்காகதான் காத்திருந்தாங்க நிறைய பேர். எதுக்கு வீணா அவங்களுக்கு வெற்றியை கொடுக்கணும் அதான் மறைச்சேன்
நான் செஞ்சதெல்லாம் தெரிஞ்சிதான் செஞ்சேன். அது என்னை பொறுத்தவரைக்கும் சரிதான். இடையில நீ பாதிக்கப்பட்டன்னு அது தப்பாகிறாது. கூடவே என்னால மட்டும் நீ கஷ்டப்படலயே… அந்த அர்ஜுனாலயும்தான் கஷ்டப்பட்ட ஏன் வீட்டைவிட்டு போன உன்னாலயும்தான் நீ கஷ்டப்பட்ட” தெளிவாக இருபக்க தவறையும் முன்வைத்தான் ஆரவ்.
அவனின் நியாயம் அவளிற்கு அநியாயமாய் தோன்ற, “என்னை பொறுத்தவரைக்கும் என் கஷ்டத்தோட தொடக்கம் உங்ககிட்ட இருந்துதான்” ஆத்திரத்தில் கடித்துதுப்பினாள் பூங்குழலி.
“இருந்துட்டுபோகட்டும். அதுக்காகலாம் எனக்கும் வேந்தனுக்கும் இடையில நுழையுற உரிமை உனக்கில்லை. எப்போவேணும்னாலும் அவனை நான் பார்ப்பேன் பேசுவேன். அதைத் தடுத்த…” ஒற்றை விரல் நீட்டி எச்சரித்தவாறு பாக்கெட்டில் இருந்த பூவேந்தனின் போனை எடுத்து அவனிடம் நீட்ட
“குட்டா நீ உள்ள போ” என்றாள் பூங்குழலி அவனை வாங்கவிடாமல் தடுக்கும் நோக்கில்.
அத்துணை நேரம் நடந்த வாக்குவாதத்தில் தலைசுற்றிப்போய் நின்றிருந்தவனோ சுரனை வந்து இருவரையும் கலக்கத்துடன் பார்த்தான்.
இருவர் மேலும் தவறு இருக்கிறது ஆனால் இல்லை என்ற தெளிவான குழப்பம்தான் அந்த சின்ன மூளைக்குள். அதெல்லாம் ஒருபுறம் தள்ளிவைத்து இருவரும் சமாதானம் ஆகினாலே போதும் என்றிருக்க, இன்னமும் முடியாத சண்டையில் அவர்களைக் காட்டிலும் சோர்ந்து போனது என்னவோ அவன்தான்.
அன்று பரீட்சை முடிந்து பிரீ ஆகிய மூளை இனி யாரின் சொல் கேட்பது என்று யோசிப்பதிலேயே பிய்ந்துவிடுமோ என்று அஞ்சினான். வினாத்தாள் கூட இவ்வளவு கடினமில்லையே!
“ஹ்ம்ம்… வாங்கிக்கோ” என்றவாறு அவன் கையில் வைத்ததுதான் தாமதம்
“உள்ள போன்னு சொன்னேன் போகாம இங்கேயே நின்னுட்டு இருக்க… அந்த போன் வேணுமா இல்ல நான் வேணுமா” என்று கத்திவிட்டாள் பூங்குழலி.
ஆரவ் மேல் உள்ள கோபம் அப்படியே தம்பியிடம் பாய்ந்திருந்தது. ஏன் இப்படி செய்கிறாள், செய்வது சரியா தப்பா ஒன்றையும் யோசிக்க முடியவில்லை அவளால்.
ஏற்கனவே சோர்ந்திருந்த வேந்தன் தமக்கை தன்னிடம் கத்தியதில் சட்டென கண்கலங்க அழுகையை அடக்கி போனை ஆரவ்விடமே திருப்பிக்கொடுத்து வேகமாய் தன் அறைக்குள் ஓடிவிட்டான்.
“அறிவிருக்கா உனக்கு… அவன் என்ன நீ எட்டு வயசுல விட்டுட்டுபோன வேந்தனா? அதே மாதிரி ட்ரீட் பண்ற. இடையில ஏழு வருசம் என்கிட்ட இருந்திருக்கான். நான் ரொம்ப சுதந்திரமா வளர்த்திருக்கேன் அவனை” வேகமாய் சொல்லிக்கொண்டே வந்தவன்
சுதந்திரம் என்பதும் கலக்கத்துடன் பார்த்தவளிடம், “அதுக்காக ஓவரா கற்பனை பண்ணாத எல்லாமே எல்லைக்குள்ளதான். ஆனா நீ பண்றது சரியில்லை பூங்குழலி. இப்படியே அடக்குனா மூச்சு முட்டிரும் அவனுக்கு ச்சை” கையில் இருந்த போனை சோபாவில் வீசியவன் கொண்டு வந்த தொப்பி, தாடி மற்றும் கண்ணாடியை எடுத்துக்கொண்டு வெளியேறினான்.
அவன் சென்றதும் வெகுநேரம் யோசித்தவள் தான் இப்போது செய்தது அதிகப்படி… அவனின் மேல் உள்ள கோபத்தை இவனிடம் காட்டிவிட்டோம் என்று புரிய பூவேந்தனை காண அறைக்குள் சென்றாள்.
தலையணையை இறுக்கி குப்புற படுத்திருந்தான் அவன். மூச்சு சீராக வர தூங்கிவிட்டான் என்றறிந்து அருகில் நெருங்கி செல்ல, முகமே கலங்கி அழுதிருக்கிறான் என்று கூறியது. அதற்கு சாட்சியாக இருந்த நனைந்த தலையணையையும் காய்ந்த கண்ணீரையும் கண்டு துடித்துவிட்டாள் பூங்குழலி.
“சாரி சாரிடா முதல் நாளே உன்னை அழவச்சிட்டேன்” சத்தமில்லாமல் அழுதவள் பக்கவாட்டு நெற்றியில் புரண்டிருந்த கூந்தலை ஒதுக்கி லேசாய் முத்தமிட்டாள்.