Alaikadal-18

அலைகடல் – 18

சென்னையில் லேண்ட் மார்க் என்னும் பிரபலமான ஐந்து நட்சத்திர ஹோட்டலின் பெரிய கேட்டைத் தாண்டி உள்ளே நுழைந்தது கார்.

சீரான புல்வெளிகளும் அலங்காரச் செடிகளும் இருபுறமும் அணிவகுக்க ஹோட்டலின் வாசலருகே சென்று நின்றதும் அதிலிருந்து இறங்கிய பூங்குழலியோ, “சாப்பிடவாடா சப்ரைஸ்ன்னு சொன்ன? இங்க ரோட்டோர காபியை ரெண்டாயிரத்துக்கு கைல கொடுப்பான் ஏன்டா?” என்று சலித்தாள்.  

பூமாஇன்னக்கி என் பொறந்த நாளுல்லஎன்ன பண்ணுனாலும் திட்டக்கூடாது சரியா. சேர்த்துவச்சி நாளைக்கு திட்டிக்கோஅவசரமாய் முன்கூட்டியே மொழிந்தான் இளையவன்.

உள்ளே செல்லவும் டிப் டாப்பாய் உடையணிந்து வந்த ஒருவர், வெல்கம் டூ அவர் ஹோட்டல் லேண்ட் மார்க் சார், வெல்கம் மேம். கான்ஃபரன்ஸ் ஹால் இஸ் ஆன் தி செகண்ட் ப்ளோர் ரைட் சைட் என்று வழிகாட்ட

கான்ஃபரன்ஸ் ஹால்க்கு போகணுமா? என்னவா இருக்கும்?’ செல்லும் வழியாவும் இருவருக்கும் ஒரே கேள்விதான் மனதினுள்.

கான்ஃபரன்ஸ் ஹாலின் வெளியே நின்றிருந்த ஆரவ்வின் தனிப்பட்ட இரண்டு பாதுகாவலர்கள் வேந்தனைக் கண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கூறி வழிவிட, இவனும் பதிலுக்கு நன்றி கூறி புன்னகைத்தான்.

கதவைத் திறந்து உள்ளே சென்றதும் முதலில் வரவேற்றது ஜில்லென்ற ஏசி காற்றுதான்.

ஐம்பத்திற்கும் மேற்பட்டோர் அங்காங்கே குழுமியிருக்க, இவர்கள் வந்ததும் பாதி பேரின் கவனம் இவர்களை நோக்கி திரும்பியது. அங்கிருந்த மீடியாவும் தங்களின் ஆஸ்தான வேலையாய் வெளிச்சத்தைப் பாய்ச்சி காட்சியைத் தன்னுள் இழுக்க, எதையும் கவனிக்காமல் என்ன சப்ரைஸ்?’ என்று தேடிய பூவேந்தன், பக்கவாட்டு சுவரில் ஒட்டியிருந்த போஸ்டரை பார்த்து உறைந்து போய் நின்றான்.

பூங்குழலியோ வந்ததும் கண்ணில்பட்டு நடுநாயமாய் நின்றிருந்த ஆரவ்வைப் பார்த்தே தம்பிக்கு மேல் உறைந்திருந்தாள்.

பூவேந்தன் அதிர்ச்சி அடையக் காரணமான போஸ்டரின் ஒருபக்கம் தொப்பியை வைத்து கீழே குனிந்தவாறு ஸ்டைலாய் சமீபத்தில் எடுத்த அவனின் டான்ஸ் போட்டோ இருக்க அதேபோல் மறுபக்கம் போஸ் கொடுத்திருந்தான் ஆரவ்.

ஆம். திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடிக்கப்போகின்றனர் என்ற செய்தியை தாங்கியிருந்தது அது. படத்தின் பெயராகஆடலரசன்என்று இருவருக்கும் நடுவே இருக்கும் இடைவெளியில் எழுதியிருந்தது.

ஆரவ்வின் அடுத்த படமான ஆடலரசன் திரைப்படத்தின் படபூஜை ஏற்பாடுதான் அங்கே நடந்துக்கொண்டிருந்தது.

நம்பமுடியால் தனது வாயை இரு கைகளால் மூடிய வேந்தன் பின், “வாவ்… ஐ கான்ட் பிலிவ் திஸ்” என்று கத்தி மகிழ்ச்சியை உற்சாகமாய் வெளிப்படுத்த, என்னவென்று பக்கவாட்டில் பார்த்த பெண்ணவளின் முகமோ அவனிற்கு நேர்மாறாய் இறுகியது.

வந்ததில் இருந்து அவர்களைதான் கவனித்துக்கொண்டிருந்தான் ஆரவ். இருவரின் ரியாக்ஷனும் இதுதான் என முன்பே ஊகித்திருந்தான்.

ஆனால் அவன் எதிர்பாராத ஒன்று உண்டென்றால் அது பூங்குழலியின் பேரழகு. மீட்டிங் செல்லும் அவசரத்திலும் வேந்தன் கேட்டான் என்று இரு நிமிடத்தில் செல்பேசியின் மூலமாக இது அழகாய் இருக்கும் என்று எடுத்துக்கொடுத்திருந்தான்.

நினைத்ததை விடவும் பேரழகாய் உருமாறி பூங்குழலிக்கு என்றே நெய்ததைப் போல் பொருந்தியிருந்தது.

இதற்கும் அவன் அருகில் இருக்கும் ஹீரோயின் மெழுகு பொம்மையை தோற்கடிக்கும் வனப்புடன் புடவையில் ஒயிலாகதான் நடந்துவந்து நின்றிருந்தாள். ஆனால் அதெல்லாம் கண்ணில் பட்டதோடு சரி. அழகாய் இருக்கிறது என்று தோன்றக்கூட இல்லை.

ஆனால் ஒயிலான நடையெல்லாம் அறியாமல் அவளுக்கே உரிய வேக எட்டுக்கள் புடவை கட்டியதில் சற்று குறைந்தும் கம்பீரம் குறையாமல் வந்த பூங்குழலி கண்ணில் பட்டு மனதை ஏதோ செய்தாள்.

குத்துவிளக்கை அப்படத்தில் நடிக்கும் மெழுகு பொம்மை ஹீரோயின் மெழுகுவர்த்தியின் துணைக்கொண்டு ஏற்றி பூஜையைத் தொடங்கி வைக்க, மற்றவர்கள் ஐயர் கூறியதை அச்சுப்பிசகாமல் செய்துக்கொண்டிருந்தனர்.

மனதில் எரிமலையின் சீற்றத்தை அடக்கி ஓரமாய் ஒதுங்கியிருந்தாள் பூங்குழலி. சுத்தமாக அங்கிருக்க முடியவில்லை அவளால்.

அதுவும் அவனை கண்டபடி பேசிவிட்டு அவன் இடத்திற்கே அலங்காரம் செய்து வந்ததை நினைத்து அவமானம் பிக்கிப்பிடுங்க, அப்படியே அங்கிருந்து வெளியேறி வீட்டிற்குச் செல்லவேண்டு போல் இருந்தது.

சபை நாகரிகமும் வகிக்கும் பதவியும் இல்லையென்றால் எப்போதோ சென்றிருப்பாள். அவளை அவ்வாறு செய்யவிடாமல் நாகரிகம் தடுக்க, யாரின் கவனத்தையும் கவராமல் ஒதுங்கிவிட்டாள்.

ஆனால் அப்படி விடுபவனா வேந்தன்? “வாக்கா வா என்று அழைத்து வந்து முன்னால் நிற்கவைத்துவிட்டான். கொஞ்சமும் தன்னைப்பற்றி யோசிக்காமல் இஷ்டத்திற்கு செய்துக்கொண்டிருக்கும் தம்பியின் மேல் கொலைவெறி ஏறியது தமக்கைக்கு.

 நடுவில் வேந்தன் இருக்க அவனின் இருபுறமும் பூங்குழலியும் ஆரவ்வும் நின்றிருந்தனர். அதையும் விடாமல் கேமரா தனக்குள் உள்வாங்கியது.

இதற்கிடையில் தனது டான்ஸ் மாஸ்டர் பின்னால் இருப்பதை பார்த்த வேந்தன் பொதுவாக இருவரிடமும், “ஒரு நிமிஷத்துல வந்துடறேன்என்று கூறி செல்ல, ஆரவ் அருகில் இருக்க விருப்பமின்றி நகர்ந்தாள் பூங்குழலி.

இவள் இப்படி ஒதுங்கி ஒதுங்கி சென்றால் முழுமனதாய் வேந்தன் பூஜையில் கலந்துக்கொள்ள மாட்டான் என்று தோன்ற அவளின் கையைப் பற்றிய ஆரவ், “இங்க வாங்க இடம் இருக்கு என்றான் சத்தமாய். மற்றவர்கள் அவள் இடத்திற்காக தான் நகர்ந்தாள் என்று எண்ண வேண்டுமாம்.

டோன்ட் டச் மீ கைப்பற்றி இருந்தவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் அழுத்தமாய் சொன்னாள் பூங்குழலி. அதில் முதல் சந்திப்பு இருவருக்கும் தானாக நினைவு வர, முயன்று ஒதுக்கினர் இருவரும்.

ஆரவ், “சாமிய கும்பிடுபடம் நல்லபடியா முடியனும்ன்னு

கண்டிப்பா கும்பிடுவேன். படம் எடுக்கவே கூடாதுன்னு முடிக்கவே கூடாதுன்னு என்றாள் வன்மமாய்.

அதுவரை இருந்த நல்ல மூட் அந்த பதிலில் மாற, “ஹ்ம்ம்… ஆல் தி பெஸ்ட். நினைத்தது நடக்காம போக வாழ்த்துகள்என்றான் இவனும்.

வெளியே இருந்து பார்த்தால் இருவரும் சாதாரணமாய் பேசுவது போல்தான் தெரியும். ஆனால் வேந்தனுக்குத் தெரியாதா எப்படி பேசுவார்கள் என்று. மாஸ்டரை கழட்டிவிட்டு வேகவேகமாய் இடையில் வந்து நின்றுக்கொண்டான்.

ஐயர் பூஜை முடித்து படத்தில் நடிப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் மாலை அணிவிக்க, பழங்கள் பட்டுதுணியுடன் படத்தின் கிளப்பர்போர்டு சகிதம் இருந்த தாம்பாளத்தை டைரக்டர் தன் கையால் கதாநாயகன், கதாநாயகிக்கு வழங்கினார். படம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்குவதாக முடிவு செய்யப்பட்டது.

பின் லன்ச் ஹாலில் விருந்து நடைபெறுவதாகவும் அனைவரும் உணவருந்தி செல்லும்படியும் தகவல் சொல்லப்பட, வேந்தன் தமக்கையை விடாமல் அங்கு இழுத்துச் சென்று அவளுக்கு பிடித்ததை தட்டில் எடுத்து வந்துக் கொடுத்தான்.

அமைதியாக வாங்கினாலும் அதிலிருந்த ஒரு பருக்கையைக் கூட தொடவில்லை பூங்குழலி. தனக்காக எடுக்க வேந்தன் சென்றதும் மொத்தமாய்க் கொண்டு போய் குப்பைத் தொட்டியில் கொட்டியவள், கையில் இருந்த பீங்கான் தட்டை அதற்குரிய இடத்தில் வைத்து வந்துவிட்டாள்.

உடனே வந்திருந்தால் வேந்தன் கண்டுபிடித்திருப்பான். ஆனால் தனக்கு எடுத்து வருவதற்குள் இடையில் ஆரவ்வுடன் பேசிக்கொண்டிருந்த டைரக்டர் அவனைப் பிடித்துக்கொள்ள, தமக்கையைச் சற்று நேரம் மறந்துதான் போனான்.

அனைத்தும் முடிந்து ஆபிஸ் கிளம்பும் முன் வேந்தனுக்கு மீண்டும் நேரில் வாழ்த்து சொன்ன ஆரவ், “எப்படி என் சப்ரைஸ்?” என்று வினவ

செம செமண்ணாநினைச்சுக்கூட பார்க்கலை. ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்க போறோமா? என்ன கதை?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டான்.

டான்சர் தான் ஹீரோ. கதை நடிக்கும்போது கேட்டுக்கோ அண்ட் நாம சேர்ந்து நடிக்கலை நான் தான் நீநீ தான் நான் என்றான் ஆரவ்.

புரிந்தும் புரியாமல் முழித்தவனிடம், “என் கேரக்டரோட சின்ன வயசு சீன்தான் நீ நடிக்கப் போறஅப்போ எப்படி நாம சேர்ந்து நடிக்கமுடியும்?” என்று புரியும்படி கூறி சிரிப்புடன் வினவ

வாவ் இது அதைவிட சூப்பரா இருக்கு ண்ணாசோ ரெண்டு பேரும் ஒரே படம் பட் ஒண்ணா நடிக்கலை. ஏன்னா நாம ரெண்டு பேரும் ஒரே ஆள் கரெக்ட்டாகுரலில் குதூகலம் பொங்கியது.

யெஸ் மை பாய்… ஹாப்பியா இரு. நான் போயிட்டு வரேன். மதியம் மீட்டிங் இருக்கு பை

இந்த உரையாடல்களில் கலந்துக்கொள்ளாமல் எப்போதோ வாசலுக்கு சென்றிருந்தாள் பூங்குழலி.

ஆரவ் விடைபெற்றபின் உடன்பிறப்பு இருவரும் கிளம்ப, அப்போதுதான் தமக்கையின் மௌனம் மனதிற்குள் மணியடித்தது.

ஹோட்டலில் இறங்கியதும் பேசியதோடு சரி. இப்போதுவரை பூவேந்தனிடம் மௌனத்தை கடைபிடித்துக்கொண்டிருந்தாள் அவள்.

மதியம் போல் வீட்டிற்குள் நுழைந்ததும் விறுவிறுவென உடையை கலைந்து இலகுவான ஆடையை மாற்றியவள் படுக்கை அறைக்கு சென்று படுத்துவிட்டாள்.

மிகவும் கோபமாய் இருப்பாள் அதனால் பின்னர் சமாதானப்படுத்திக் கொள்ளலாம் என்றெண்ணி தம்பியும் அமைதியாய் வலம் வந்தான்.

உண்மையில் அவனிற்கு இந்த அமைதி பயமாய் இருந்தது. அதுதான் உண்மை. தான் அமைதியாய் இருந்தும் ஏன் என்று கேட்காமல் தம்பி தன்பாட்டில் இருப்பதை கண்களை மூடியிருந்தாலும் உணர்ந்து கொண்டேதான் இருந்தாள் குழலி.

என்னமோ தெரியவில்லை தனக்கென யாருமில்லை என்ற எண்ணம் மீண்டும் முன்பைக் காட்டிலும் அசுரவேகத்தில் வியாபித்தது.

முன்பாவது பரவாயில்லை வலி இருந்தாலும் எப்படியோ சமாளித்து வாழ்ந்திருப்பாள். இப்போது தம்பி என்று ஒருவன் இருந்து அவனும் அவளைவிட்டு விலகுவதுபோல் தோன்ற பலவீனமடைந்த மனம் முன்னைக்காட்டிலும் பயங்கரமாய் வலித்தது.

அந்த வலியில் அழுகை வர, உடலும் குலுங்கவில்லை சத்தமும் வரவில்லை ஆனால் சூடான கண்ணீர் மட்டும் அமைதியாய் கண்களிலிருந்து வெளியேறியது.

வானில் பிறைநிலா பவனி வந்துக்கொண்டிருக்க இன்னமும் படுக்கையை விட்டு எழவில்லை அவள். சாப்பாடு மட்டும் வெளியே ஆர்டர் செய்து வரவழைத்து விட்டாள்.

பூமா சாப்பிட வா…” சாப்பாட்டை வாங்கி வைத்த வேந்தன் அவளையும் அழைக்க

“….” இன்னும் அமைதியாய் இருந்தாள்.

கோபத்தை தள்ளி வச்சிட்டு சாப்பிடு வா பூமாஎன்னால தனியா சாப்பிட முடியாது” என்று கெஞ்சியவனுக்காக எழுந்து வந்து உணவை தட்டில் வைத்து அளந்துக்கொண்டிருந்தாள்.

அதை பசியில் கவனிக்காமல் அவன் சாப்பிட்டு முடிக்கவும், “எனக்கு பசிக்கலஅப்புறம் சாப்பிடுறேன்” என்றதோடு உணவை மூடிவைக்க

பூமா நான்…” என்று பேச வந்தவனின் பேச்சை

குட்டா ப்ளீஸ்என்னைக் கொஞ்சம் தனியா விடு. நாளைக்கு பேசிக்கலாம் என்று கத்தரித்தவள் மீண்டும் அறைக்குள் சென்று தன்னைப் பூட்டிக்கொண்டாள்.

அடுத்த நாளும் எந்தவித முன்னேற்றமுமின்றி மந்தகதியில் செல்ல மெதுவாக மூத்தவளிடம் சமாதானப்புறாவை தூதுவிட்டான் இளையவன்.

உறங்கி எழுந்துவிட்டாலும் கட்டிலில் இருந்து இறங்காமல் அங்கேயே அமர்ந்து கால் நீட்டி கண்மூடி சாய்ந்திருந்தவளிடம், “பூமாசாரிஎன்று போய் நின்றான் இவன்.

அதில் எந்தவித அசைவுமின்றி, “எதுக்கு?” என்றாள் பூங்குழலி.

நேத்து பூஜைக்கு கூட்டிட்டு போனதுக்கு தானே கோபமா இருக்க?”

அதுவும்தான் ஆனா அது மட்டுமில்லை…” 

படத்துல நடிக்கப்போறதும் பிடிக்கலையா?” குரல் இறங்கிக் கேட்க

பதிலின்றி தமக்கை அமைதியாய் இருக்கவும், “எனக்கே தெரியாதுக்கா படத்துல நடிக்க போறேன்னு என்றதுதான் தாமதம்.

கண்ணைத் திறந்து அவனை உறுத்து விழித்தவள், “தெரிஞ்சிருந்தாதெரிஞ்சிருந்தா கூட்டிட்டு போயிருக்க மாட்டியா? சொல்லுடா. அவன் கூட பழகாதேன்னு சொன்னேன்அழுத. மனசு கேக்காம சரி பேசத்தானேன்னு விட்டுட்டு என் வேலையை பார்த்தா, அவன் இருக்குற இடத்துக்கு என்னை கூட்டிட்டுப் போவியா நீ? எப்படிஎப்படிடா அவனைப் பத்தி சொன்னப் பிறகும் இவ்ளோ நம்புற? இப்படிதான் ஹோட்டல்ல ரூம்…இது தம்பியிடம் பேசும் விசயம் இல்லையெனத் தோன்ற வார்த்தைகளைச் சிதறவிடாமல் உதட்டை இறுக மூடி கடினப்பட்டு நிறுத்தினாள்.

பின், “எனக்கு பிடிக்காதுங்கறது ஒரு பக்கம் இருக்கட்டும். கொச்சி ஸ்கூல்ல சேர்க்க போறேன்னு ஏற்கனவே உனக்கு தெரியும்ல? நேத்தே அவங்ககிட்ட என்னால முடியாதுன்னு சொல்ல வேண்டியது தானே அடக்கி வைக்க முயன்றும் முடியாமல் பொரிந்து தள்ள,

கலக்கத்தில் இருந்தவனோ தமக்கை முன்பு கூற நிறுத்தியதை கவனிக்காமல், நான் அதை சுத்தமா மறந்துட்டேன்க்காசாரி. இப்போ நான் என்ன பண்ணட்டும் என்றான் பாவமாய்.

ஒன்னும் பண்ண வேண்டாம் விட்டுரு…” விரக்தியில் வந்தது வார்த்தைகள். எத்தனைதான் சொல்லிச் சொல்லி புரியவைக்க என்பதில் உண்டான விரக்திதான் அது.

இப்படி பேசாத பூமாநான் சினிமால நடிக்கக்கூடாது அவ்ளோதானே? சரி நடிக்கலை. நானும் உன் கூட கொச்சி வரேன். இப்போ ஓகேவா மனது முரண்டு பிடித்தாலும் தமக்கையின் வாடிய முகத்தின் முன் அதெல்லாம் தூசுதானே! அவளது உதட்டில் ஒற்றை புன்னகை வந்தால் போதும் என்றிருக்க அவளுக்கு பிடித்தவிதமாய் இறங்கி வந்தான்.

ஆனால் பூங்குழலி ஏற்கனவே முடிவெடுத்தபடி, வேணாம். உனக்கு பிடிச்ச மாதிரி நீ இருஇத்தனை வருசம் எங்க இருந்தியோ அங்கேயே இருந்துக்கோ. நானும் போறேன் இன்னும் ஒரு மாசத்துலஅலட்சியமாய் கூற எண்ணினாலும் குரல் தழுதழுத்து துரோகம் செய்தது.

பூமாப்ளீஸ் இதுக்கு மேல நான் என்ன பண்ணனும்ன்னு எனக்கு தெரியல. என்னை திரும்ப தனியா விட்டுட்டுப் போகாத ப்ளீஸ். நீ எனக்கு அம்மா மாதிரிதானே சொல்லப் போனா அம்மாவேதானதப்பு செஞ்சா கோவத்துல விட்டுட்டு போயிருவியா? என்னை மன்னிக்கவே மாட்டியா?” அழுதுக்கொண்டே கட்டிலில் அமர்ந்து  அவளின் மடியில் முகம் புதைக்க, உடைந்துவிட்டாள் பூங்குழலி.

எனக்கும் என்ன பண்றதுன்னு தெரியலடா… நான் ஏன் இப்படி ஆகிட்டேன்னும் தெரியல. மத்தபடி உன் மேல கோவப்பட்டு நான் எங்க போக போறேன். இப்போக்கூட உனக்கு பிடிச்சிருக்கேன்னுதான் விட்டுட்டு போக நினைச்சேன். இங்கேயே சேர்த்திருப்பேன் ஆனா உன்னை ஆரவ் கூட பழகவிட எனக்கு பயமா இருக்குஏன்னு தெரியலை. என்னமோ எனக்கு அவன் மேல நம்பிக்கையே வரமாட்டிங்குதுபிடிக்கல” மனதில் அழுத்திய பாரம் அழுகையோடு வெளிவந்தது.

தன்னைவிட சிறியவனிடம் அழுது புலம்புகிறோம் என்பதெல்லாம் அவள் கருத்திலேயே பதியவில்லை. அவளிற்கும் இந்த பரந்த உலகத்தில் மனதில் இருப்பதை கொட்ட, பாரத்தை இறக்கி வைக்க, அவனைவிட்டால் யார் இருக்கா?

எழுந்து அவளின் கண்ணீரை துடைத்தவனோ, விடு பூமாஅழாத. எனக்குப் புரியுது. எனக்கு நீ மட்டும் போதும். உனக்கு பிடிக்காததை நான் இனிமே செய்யல. அண்ணாக்கூட நான் பேசக்கூட மாட்டேன். என்கிட்ட முன்ன மாதிரி பேசுவியா?” ஸ்திரமாய் முடிவெடுத்த பாவனையில் கேட்க, அதில் நிம்மதி அடைந்தவளோ கீற்றாய் புன்னகைத்தது தம்பியிடம் தலையாட்டினாள்.

ஈசியாக தமக்கையிடம் சொல்லிவிட்டான். ஆனால் அதை நேரில் சொல்ல முடியாது என்றறிந்து செல்பேசியில் சொல்ல வேண்டியதை வார்த்தையாக்கி ஆரவ்விடம் சொன்னதும் இதயம் குத்திக்கிழித்தது என்னவோ உண்மைதான். மறுபுறத்தில் இருந்த  ஆரவ்விற்கு அதைக் கிரகிக்கவே சிறிது நேரம் பிடித்தது.

வாட்… என்ன சொன்ன?” என்று அதிர்ந்தவன் அவனைப் பேசவே விடாமல், “இதுக்கு பின்னாடி யார் இருக்காங்கன்னு எனக்கு தெரியும். சோ ஸ்டாப் யுவர் பிளடி நான்சென்ஸ் வேந்தா அதற்கு மேல் பேசினால் இன்னமும் மோசமாக திட்டிவிடுவோம் என்றெண்ணி தொடர்பைத் துண்டிக்க, அந்த இருவரிகளிலே ஆரவ்வின் ஒட்டுமொத்த கோபத்தின் அளவும் பூவேந்தனுக்குத் துல்லியமாய் புரிந்தது.

அன்று மாலையே ஆரவ் மூலம் விசயம் கேள்விப்பட்ட பூவேந்தனின் டான்ஸ் மாஸ்டர், தெரிந்த விசயத்தைக் காட்டிக்கொள்ளாமல் அவனை நேரில் வரச்சொல்ல, பூமாவிடம் டான்ஸ் கிளாஸ் சென்று வருவதாகக் கூறி வெளியேறினான் வேந்தன்.

அவன் தலை மறையவும் இம்முறையும் அதே வேசத்தில் காரில் வந்திறங்கினான் ஆரவ்.

காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்க, இப்போதானே வெளிய போனான்?’ என்றெண்ணிக்கொண்டே கதவைத் திறந்தவள் அங்கு நிற்பவனைப் பார்த்து மீண்டும் சாற்றப்போகையில் வலுக்கட்டாயமாய் உள்ளே நுழைந்தான் ஆரவ்.

அச்செயல் அன்றொரு நாள் இதேபோல் வந்த அர்ஜுனை நினைவுபடுத்தியது. ஆனால் அந்த பூங்குழலி இல்லையே இவள்.

பல தற்காப்புக் கலைகள் கைவசம் வைத்திருந்ததால்,என்னமோ பெரிய யோக்கியன் மாதிரி பேசுனஇதான் நீ இல்லையா?” என்றாள் வெறுப்புடன்.

அடச்சீ நிறுத்து. உனக்கு அவ்ளோ சீன் இல்ல… வேந்தன்கிட்ட என்ன சொன்ன?” பயங்கர கோபத்தில் இருப்பதை அந்த அடிக்குரல் சீறலில் உணர்ந்தாலும்,

என்ன சொன்னேன்னா எவ்ளவோ சொன்னேன் எதை கேக்குற?என்றாள் இவள். அவனின் கோபம் இவளுக்கு சற்று மகிழ்ச்சி ஏற்படுத்த இன்னும் சீண்டினாள்.

நான் பெண்கள் மேல கை நீட்டுனதில்லை பூங்குழலி. வீணா என்கிட்ட அடிவாங்காதநடிக்கக்கூடாதுன்னு சொல்லி கொச்சி கூட்டிட்டு போறியா?” அதிகாரமாய் கேள்வி கேட்க,

அடிப்பியா எங்கே அடி பார்ப்போம்என்கூடத்தானே அவன் வரணும். இங்க யாரு இருக்கா அவனுக்கு?” எகிறினாள் பூங்குழலி.

“அவன் இங்கதான் இருப்பான். நான் இருக்கேன். நீ போய் கடலை தாங்குவ அவன் தனியா கொச்சில தங்கனுமா?” உன்னால் அவன் கூட இருக்க முடியாது என்று மறைமுகமாய் தாக்க

“அதுக்கு உன் கிட்ட விட்டுட்டு போ சொல்றியா?” சிறிது சிறிதாய் குரல் உயர்ந்துக்கொண்டே வந்தது.

விட்டா என்ன தப்பு?” விடாக்கொண்டனாய் ஆரவ் வினவ

“விடமாட்டேன்… அவன் என் கூடப்பிறந்தவன்என்று உரிமைக்கொடியைத் தூக்கினாள்.

“இருக்கட்டுமே அதுக்கு எதுக்கு அவனை எங்கேயோ கொண்டு போய் தள்ளுற? இங்க இருந்தா சீனி பீல்ட்ல பெரிய ஆளா வருவான்” என்று ஆரவ் முடிக்கும்முன்

பெரிய ஆளா ஆகி இன்னொரு குடும்பத்துல குழப்பம் பண்றதைவிட ஒழுங்கா வளர்ந்து நல்லாபடியா வாழ்ந்தாலே போதும். அவன் நடிக்க மாட்டான்…” என்று முடித்தாள்.

“அதை நீ சொல்லாத… அவனுக்குன்னு ஒரு மனசு இருக்கு. அதுல விருப்பமும் இருக்கு. அப்படிலாம் தப்பான வழில நான் விட்டுறமாட்டேன்… நீ என்ன சொன்னாலும் சரி இந்த முடிவுல மாற்றமில்ல என்றவனிடம்

ஹலோஅவன் என் ரத்தம். அவனோட முடிவை அவன் மேஜர் ஆகுற வரைக்கும் நான்தான் எடுப்பேன். அது அவனுக்கு பிடிச்சாலும் சரி பிடிக்காவிட்டாலும் சரி” இருவரும் விட்டுக்கொடுப்பதாக இல்லை.

வாரேஹ் வா... என்ன ஒரு சுயநலம் உனக்கு? எனக்கும் வேந்தனுக்கும் இடையில வரக்கூடாதுன்னு ஏற்கனவே உன்கிட்ட சொல்லிருக்கேனா இல்லையா? அதையும் மீறி திரும்ப திரும்ப அதையே பண்ணுனா அப்புறம் நான் வேற மாதிரி முடிவெடுக்கவேண்டி வரும் பூங்குழலிபழைய ஆரவ் மிரட்டலாய் வெளிவந்தான்.

அதற்கெல்லாம் அசருபவளா அவள்? “அப்படிதான் வருவேன். அவன் என் தம்பி. உனக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம் முதல நீ யாரு அவனுக்கு?” எடுத்தெறிந்தாள் அவனையும் கேள்வியையும்.

அந்த கேள்வியில் உள்ளுக்குள் ரௌத்திரம் அடைந்தவனோ பெரும்பாடுபட்டு அதனை அடக்கி, “ஏழு வருஷம் அவனை நான் வளர்த்திருக்கேன்” என

“அதுக்காக அவன் உன் தம்பி ஆகிற மாட்டான். அவன் என்ன செய்யணும் செய்யக்கூடாதுன்னு நீ சொல்லவும் முடியாது” என்றாள் அழுத்தம் திருத்தமாய்.

“அப்போ இரத்த சொந்தம் தவிர மத்தவங்களாம் தலையிடாம விலகி போகனும்ன்னு சொல்றியா? என்பதற்கு,

“ஆமா… ஆமா… ஆமா…” என்று பெண்ணவள் உச்சஸ்தாயியில் வெடிக்க

அவளிற்கு மேல் வெடித்து, “அப்போ விலக வேண்டியது நானில்லைடி நீதான்… ஏன்னா வேந்தன் உன் ரத்தம் இல்லை என் ரத்தம்” இருக்குமிடம் அதிர சிங்கமென கர்ஜித்தான் ஆரவ்.

அலைகடல் ஆர்ப்பரிக்கும்