Poda podi 2

 

போடா..! போடி..! – 2

மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன ஹேதுனா
கண்டே பத்னாமி சுபாகே
த்வம் சஞ்சீவ சரத சதம்

என்ற ஐயர் குரலினை தொடர்ந்து, கெட்டி மேளச் சத்தம் காதினை பிளக்க, அமிர்தா கழுத்தினில் ஆனந்த் இரண்டு முடிச்சுகளைப் போட, மூன்றாம் முடியினை போட்டாள் அபிராமி.

அம்மையப்பன், அன்னலட்சுமி தம்பதியர் கலங்கிய கண்ணினை துடைத்தவாறே அட்சதை மஞ்சள் அரிசி, பூவினை மணமக்கள் மீது தூவினர். அவர்களின் முகத்தில் இப்போதுதான் முழு சந்தோசம் வந்தது.

தாமரை, அவளது வீட்டில் கணக்குபிள்ளையாக இருக்கும் மகாலிங்கத்தின் மகன், தனபாலுடன் ஊரை விட்டு சென்று விட்டாள் என்ற தகவல் அறிந்ததும் அமைதியானவன்தான் ஆனந்த் யாரிடமும் பேசவில்லை.

அசோக், “கொஞ்சமா சந்தேகமாக தெரிந்திருந்தால் கூட உன் மனச உடைய விட்டுருக்க மாட்டேன் மாப்பிள்ள, அவளும் சொல்லாம இப்படி பேர கெடுத்துட்டாளே” என்று அவன் தோளில் சாய்ந்து புலம்பியவனை, சிறிதும் சட்டை செய்யாது அமைதியாக எழுந்து சென்று விட்டான். அதன்பின், அசோக்கினைத் தவிர்த்துவிட்டான் ஆனந்த்.

அலுவலக விசயத்தைக்கூட, பியூன் மூலமே நடத்திக் கொண்டான். அமைதி! அமைதி! அமைதி! மட்டுமே ஆனந்திடம் பெற்றோரிடம் கூட தேவைக்கு மீறி பேசவில்லை.

தாமரையின் செயலினை அறிந்து, ஊர் வந்த அபிராமி, “ப்பா… இப்படியே விட்டா, இவன் கல்யாணமே வேணாம்னு சொல்லிருவான். நாமளும் இனிதான நாள் குறிச்சு, கல்யாண வேளைய ஆரம்பிக்குறதா இருந்தோம். என்ன, இப்ப வேற பொண்ணு பாக்கனும் அம்புட்டுதானே! என் சின்ன மாமியார் மகள ஏற்கனவே ஆனந்துக்கு கேக்கலாம்னு நினைச்சாங்க, ஆனா நாம அதுக்கு முன்னவே தாமரைய பேசிட்டோம்னு விட்டுடாங்க… இப்ப கேட்டு பாக்கலாம் ப்பா..”

அம்மையப்பன், “எப்படிமா! நாம இந்த பொண்ணு இல்லனு அந்த பொண்ண கேட்க வந்தோம்னு, தப்ப எடுத்துக்க மாட்டாகளா? இதனால உன்ன எதுவும் சொல்ல கூடாது. என்னதான் மச்சான் குடும்பம்னாலும் மனுஷங்க வேற தான”

அன்னலட்சுமி, “தயங்காதீங்க… அந்த மதினியும் அண்ணாச்சியும் நல்ல மாதிரிதான் கேட்டுபார்போம். ஏற்கனவே விருப்பம் வச்சவக தானே, கேட்டுதான் பார்போமே! இவன ஆறுதலா விட்டா, அப்புறம் பிடி கொடுக்க மாட்டான் ஆரம்பத்துலயே சுணக்கமா பேச வேணாம்ங்க”

அவ்ளோதான் உடனே காரியங்கள் துரிதப்பட பிரபாகரனிடம் பேசி, அவனது பெற்றோருடன் சென்று அவனது சித்தி, சித்தாப்பாவிடம் பேசினர். அவர்களும் நடந்ததை பெரிதுபடுத்தாமல் சம்மதம் தெரிவிக்க, இதோ அடுத்த மூன்று மாதத்தில் கல்யாணமும் முடிந்தது.

*****

முருகேசன், “ஏன்யா, அசோக் நம்மள கல்யாணத்துக் கூப்பிடலனா என்ன? நாம போவோம் வாரீயா? ஒண்ணுக்குள்ள ஒண்ணாப் பழகிட்டு இருந்த குடும்பத்த இப்படி சிதைச்சுட்டு போய்ட்டாளே! அவளோட விருப்பத்த சொல்லிருந்தா, ஜாதி, தகுதி, தராதரத்தையா பாக்கபோறோம். புள்ள விருப்பத்ததான பார்ப்போம்! நம்மள புரிஞ்சுகலயே” என்று புலம்பிய தந்தையை பார்த்தவன்,

“விடுங்கப்பா! அவள பத்தி இனி பேச வேணாம். அப்பவே ஆனந்த் சொன்னான், ஏதோ சரியில்ல மச்சான்னு நாங்களும் படிக்குற புள்ளய தப்பா பேசி குழப்ப வேணாம்னு காலம் தாழ்த்திட்டோம். ஹீம்… ஆனா நா எதிர்பார்க்காதது ஆனந்த்தோட ஒதுக்கத்ததான். இப்ப டிரான்ஸ்பருக்கும் அப்பிளை பண்ணிருகான் ப்பா, அடுத்த மாசம் டெல்லி போயிருவான்.” என்று கூறியவாரு கலங்கிய கண்ணை துடைத்தவன், எழுந்து அறைக்குள் சென்று விட்டான்.
*****
தாமரையும் மகனும் ஊர் விட்டு சென்ற அன்றே வந்த மகாலிங்கம், “முதலாளி, இந்த பய இப்படி பண்ணுவானு நினைக்கல முதலாளி. ஒரே பையன், அம்மாகாரியும் இல்லனு கண்டிப்பு இல்லாம, கஷ்ட, நஷ்டம் தெரியாம வளர்த்தேன். இப்படி உண்ட வீட்டுக்கு துரோகம் பண்ணுவானு நினைக்கலையா, உங்க தயவுலதான் படிச்சு, அரசாங்க உத்தியோகமும் வாங்கினான் இப்படி பண்ணிடானே இனி அவனுக்கும் எனக்கும் எந்த ஒட்டு உறவும் கிடையாதுய்யா! நா எப்போதும் போலவே வேலைக்கு வர நீங்க தான் அனுமதி தரனும்” என்றவாரு காலில் விழ வந்தவரை தடுத்த முருகேசன்,

“என்ன கணக்குபிள்ளை உங்க பையன் மேல மட்டுமா தப்பு, நா பெத்தும்தான தப்பு பண்ணிருக்கு. என்ன அவுக ஆசைய சொல்லிருக்கலாம், நம்பி கழுத்தறுத்துருக்க வேணாம்” என்று விட்டார்.

சில நாட்கள் கழித்து மகாலிங்கத்துக்கு மகனிடம் இருந்து வந்த கடிதத்தையும் படிக்கமாலே கிழித்து விட்டார். இவர்கள் யாருமே தாமரை, தனபால் பற்றிய எந்த தகவலையும் அறிய முற்படவில்லை.

*****

அடுத்து வந்த மாதத்தில் ஆனந்த் தனது மனைவியுடன் டெல்லி சென்றுவிட்டான்.

அன்று காலை அலுவகத்திற்கு செல்ல பரப்பரப்புடன் கிளம்பிக் கொண்டிருந்த அசோக் முன் வந்து நின்ற சுந்தரவல்லி, “அய்யா அசோக், பொண்ணு வீட்டுல இருந்து ஆள் அனுப்பிருகாக!”

“என்னம்மா, எதுக்கு?”

முருகேஷன், “என்னலே, எதுக்குனு கேக்குறவ நாள் குறிக்கதான்”

“ஓ! ஆனா, ம்மா… இன்னும் 6மாசம் போகட்டுமே… ஆனந்த் எப்படியும் திருவிழாக்கு வருவான். அவன் பேசிட்டா திருப்தியா இருக்கும். அவன் கல்யாணம் நா இல்லாம நடந்திருக்கலாம். ஆனா, என் கல்யாணம் அவன் இல்லாம நடக்க கூடாது.” இறஞ்சிய குரலில் கூறிய மகனின் முகத்தை வாஞ்சையாக தடவிய சுந்தரவல்லி,

“யய்யா… நம்ம சூழ்நிலை தெரிஞ்சு அவங்களும் ஆறு மாசமா அமைதியா இருந்துடாக! இனியும் எப்படியா நிக்க சொல்லுறது, அவகளுக்கு பொம்புள்ள காரியம்லாயா!”

முருகேசன் நிதானமாக, ” ஒருவேளை ஆனந்த் இந்த திருவிழாக்கு வரலனா! என்ன பண்ணுவ, அடுத்த திருவிழாக்கு காத்திருப்பியோ?” என்றவரை முறைத்த அசோக்,

“என்னப்பா இப்படி கேட்க்குறீங்க? கல்யாணம் ஆகிட்டா, பரிவட்டம் அவனுக்குதான அப்ப அவன் வரனும்லப்பா” என்று குரலுயர்த்தியவனை அடக்கியவர்,

“அதெல்லாம் எதிர்பார்க்காத தம்பி, ஆனந்த் அமைதியா போனது உன் மேல உள்ள கோவத்துல கிடையாது, வருத்தத்தில வார்த்தை தடிச்சிர கூடாதுனுதான். கல்யாணத்துக்கு கூப்பிடாதது நம்ம சங்கடமா இருக்க கூடாதுனுதான். அதனால, நம்ம வீட்டு காரியத்தை பார்ப்போம். அப்பதான் நாம இயல்பா இருக்கோம்னு தெரிஞ்சு அவங்களும் ஆறுதலாவாங்க! நா, சொல்லி உனக்கு தெரிய வேண்டியது இல்ல தை மாசம் நாள் குறிக்க போறேன். இந்த வருஷம் திருவிழாக்கு உனக்கும் பட்டம் கட்டியே ஆகனும். சரியா குழப்பிக்காம ஆக வேண்டிய காரியத்தை பார்ப்போம்” என்று பொறுமையாகவும் கண்டிப்பாகவும் தந்தை கூறியதை மீற முடியவில்லை அசோகனால்.

அடுத்து வந்த தை மாத முதல் மூகூர்த்தில் அசோகனுக்கும் அருந்ததிக்கும் திருமணம் முடிந்தது.

*****

நாட்கள் அதன் போக்கில் செல்ல, அந்த வருட திருவிழாவும் வந்தது. வழக்கம்போல கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மையப்பனும் முருகேசனும் தங்களது பதவியை அதற்கு முன்பே ராஜினாமா செய்து இருந்தனர். இந்த வருட விழா கமிட்டியர் பதினோராம் நாள் பூஜைக்கு கேட்ட போது மட்டும் இரு குடும்பமும் இணைந்தே செய்வதாகவே கூறியது.

ஆனால் அசோக் எதிர்பார்த்த மாதிரி ஆனந்த் கொடைக்கு வரவில்லை. அதனால் தனக்கும் பரிவட்டம் வேண்டாம் என்றவன் தனது தந்தைக்கே கட்ட சொல்லி விட்டான்.

திருவிழா முடிந்ததும் மனைவி தந்தை தாயுடன் திருநெல்வேலிக்கு சென்று விட்டான். நிலத்தை மட்டும் ஆட்கள் ஏற்பாடு செய்து விட்டு அப்ப அப்ப முருகேசன் மட்டும் வந்து சென்றார்

*****

வருடந்தோரும் கொடைவிழா நடந்தாலும் ஆனந்த வரவேயில்லை, எனவே அடுத்த அடுத்த கொடையில் அசோக்கும் கலந்துக் கொள்ளவில்லை.

வருடங்கள் உருண்டோட அடுத்த தலைமுறையினரும் பிறந்தனர்.

ஆனந்த், அமிர்தாவிற்கு முதல் வாரிசாக மகன் பிறந்தான். அவன் அசோக் குமார் (ஹீரோ நம்பர் – 2)

அடுத்த சில வருட இடைவெளியில் ஆனந்த் குமார் – அமிர்தா, அசோகன் – அருந்ததி, அபிராமி – பிரபாகரன், மூன்று தம்பதியருக்கும் ஓரே நாளில் பெண் குழந்தைகள் பிறந்தது. காவ்யா (ஹீரோயின் நம்பர் – 1), அஞ்சலி (ஹீரோயின் நம்பர் – 2), அனன்யா ( ஹீரோயின் நம்பர் – 3).

சில பல மாற்றங்களுடன் வருடங்கள் உருண்டோடினாலும் இவர்களின் நட்பிலும் உறவிலும் மாற்றம் இல்லாமல் சென்றுவிட்டது.

அடுத்த முறையிலாது மாற்றம் வருமா?

தொடரும்…