alaikadal-21.1

அலைகடல் – 21.1

அடுத்தநாள் அமைதியாக விடிந்தாலும் அவ்விடியல் பல்வேறு பரபரப்பிற்கு பஞ்சமில்லாத விடியலாய்தான் விடிந்திருந்தது.

மருத்துவமனையில் கூட்டம்கூட தடைவிதித்திருந்ததால் ஆரவ் வீட்டின் முன் காலை ஆறு மணிவாக்கிலெல்லாம் குமிந்திருந்தனர் பத்திரிக்கை நிருபர்களும் அவர்களை கட்டுப்படுத்தக் காவல்துறையும்.

தலைப்பு செய்தியாக, ‘திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கும் முதல்வர்?, முடிவுக்கு வரப்போகிறதா இத்தனை வருட தனிமை வாழ்வு?, காதலியுடன் மருத்துவமனை வாசம்… காரணம் என்ன?, யார் அந்த அதிர்ஷ்டப்(!) பெண்?’ என்று பதில் தெரியாததால் கேள்விகளாய்க் கேட்டுத்தள்ள, அதையே வெவ்வேறு வார்த்தைகளில் கேட்டு ஆரவ் வீட்டின் முன் மைக்கை பிடித்து கத்தியவாறே அவரவர் சேனலின் டிஆர்பி யை ஏற்றிக்கொண்டிருந்தனர் பலர்.

சுப்ரபாதம் பாடும் வீடுகளில் அதற்கு விடுமுறை அளித்துவிட்டு செய்திகள் பாட, அதைக்கேட்டு அனைத்து வீடுகளிலும் காலை வேலைகள் தாமதமாகிக்கொண்டிருந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக தீயென பரவிய செய்தி அரைமணி நேரத்தில் எல்லாம் பிரதமரை எட்டியது. இதற்குமுன் இவ்வாறு நடந்திருக்காததால் அனைவரும் ஒரு பார்வையை இங்கு வைத்துக்கொண்டே இருந்தனர்.  

இங்கு வேந்தனுக்கோ வீட்டின் வெளியே கூட்டமாய் குழுமி கத்திக்கொண்டிருப்பதை கவனித்து தலை சுற்றியது. அந்த அதிர்ஷ்டப் பெண் தன் தமக்கைதான் என்று திண்ணமாய்த் தெரிந்தாலும் இவர்கள் கட்டும் கதைகள் அவன் வயிற்றில் புளியைக் கரைத்தது. 

‘இது எப்படி சாத்தியம்? அண்ணனுக்கும் அக்காவுக்கும் இதெல்லாம் தெரியுமா? தெரிந்தால் என்னாகுமோ’ என்று நிலைமை புரியாமல் கவலைப்பட்டுக்கொண்டிருந்தான்.

ராஜா மருத்துவமனை.

இரவு வெகுநேரம் கடந்தபின்பு அங்கிருந்த குஷனில் படுத்து தூங்கினாலும் வழக்கமான ஐந்தரை மணிகெல்லாம் எழுந்துவிட்டான் ஆரவ். எழுந்ததும் பூங்குழலியை பார்க்க, அவள் எங்கிருக்கிறோம் என்றறியாமல் தூக்ககலக்கத்தில் அசைந்து இவன்புறம் திரும்பிப்படுத்தாள்.

அதில் சிறுவர் கதையில் வரும் உறங்கும் அழகியை ஆரவ்விற்கு நினைவுபடுத்தினாள் பூங்குழலி. ‘உறக்கம் இருக்கும் வரைதான் உறங்கும் அழகி எழுந்த பிறகு உக்கிர அழகியா மாறிருவா’ என்ற எண்ணம் தோன்ற சிறுசிரிப்புடன் வெளியே சென்று டிஸ்சார்ஜ் சம்பந்தமான வேலையை முடிக்க ஆள் அனுப்பியவன் பின் அறையை ஓட்டியிருந்த குளியலறையில் காலைகடன்களை முடித்து வெளிவந்தான். 

மனதினுள் செய்யவேண்டியவற்றை வரிசைப்படுத்தி வியூகம் அமைத்து முடிக்கவும் டிஸ்சார்ஜ் கோப்பு, மாத்திரை முதலானவை வரவும் சரியாயிருக்க அதனை வாங்கி சரிபார்த்து உள்ளே நுழைந்தவன் கண்டது சுருங்கிய புருவத்துடன் அமர்ந்திருந்த பூங்குழலியைத்தான்.

சத்தம்கேட்டு நிமிர்ந்து பார்த்தவளுக்கு கடகடவென்று அனைத்தும் நினைவுவர, நீண்ட நேரம் உறங்கியதால் வலித்த தலையை தேய்த்துவிட்டவாறு கீழே இறங்கினாள்.

மரத்துப்போன கால்களை தட்டுத்தடுமாறி உதறி சரிப்படுத்தியவள் அதன் நடுக்கத்தை குறைக்க மீண்டும் படுக்கையில் அமர்ந்தாள்.

அருகில் சென்று அணைத்துப்பிடிக்க, ஏன் நடக்கவே விடாமல் தாங்கிப்பிடித்து வந்ததுபோல் தூக்கிச்செல்ல என்று மனம் விரும்பினாலும் முகத்தில் எதையும் காண்பிக்காமல் வந்து கையில் இருப்பதை அவளருகே தூக்கிப்போட்டான் ஆரவ்.

அதில் தெரிந்த அலட்சியத்தில் கோபமுற்று முறைத்தவளை கண்டுக்கொள்ளாமல் அவளருகே நாற்காலியை இழுத்து போட்டு பேசுவதற்கு வாகாய் அமர்ந்தான் இவன்.

அதில் அவன் கால்களுக்கு இடையில் சிக்கியது இவள் கால்கள். எழுந்தால் அவன் கால்களை உரசாமல் நகர முடியாது. அதைக்கண்டவளோ, ‘இப்படி இருந்தா போகமுடியாதா’ என்ற பார்வை பார்த்து படுக்கையில் கால்களை தூக்கி பின்னால் நகர்ந்தவாறு மறுபுறம் இறங்கினாள்.

வந்த சிரிப்பை தொண்டையில் அடக்கிய ஆரவ், “இங்கிருந்து நான் இல்லாமல் வெளியே போகமுடியாது பூங்குழலி என்றான் அமர்த்தலாய்.

ஏற்கனவே தலைபாரமாக கனக்க, உடம்பில் வேறு சோர்வு படுத்தியெடுத்தது. இதில் ஆரவ் தொல்லை வேறு பெருந்தொல்லையாக இருக்க அமைதியாய் அவனுடன் பேச விருப்பமின்றி அவனை வெறித்தாள் பூங்குழலி.

“குட்… இப்படியே நான் சொல்றதையும் அமைதியா ஏத்துக்கிட்டா நல்லாருக்கும். வீ ஆர் கோயிங் டு கெட் மேரீட்” என்றான் எந்தவித முகாந்திரம் இல்லாமல் அதிரடியாய்.

“என்ன…?” குரல் சோர்வையும் மீறி துடிப்பாக வெளிவர மாறாக முகம், ‘நீ என்ன பைத்தியமா?’ என்ற பாவனையைத் தாங்கியிருந்தது.

“மறுபடியும் காதுகுளிர கேட்கணுமா? நாம…” என்று அவன் மீண்டும் தொடங்கவும் 

“நான்சென்ஸ்… என்ன உளறுற நீ?” என்றாள் சீறலாய்.

“உளறல் இல்லை பூங்குழலி… உன் வீட்டுக்கு வந்தது, தூக்கிட்டு போனது, இப்போ ஹாஸ்பிடல்ல தங்கியிருக்குறது எல்லாம் வெளிய தெரிஞ்சிருச்சி. ஒரு பெண்ணோட என் பேர் அடிப்படுறது இதான் முதல்முறை சோ உன்னை என் வுட் – பீ என்று சொல்லிட்டேன். தே ஆர் வெயிட்டிங் பார் அவர் லவ் ஸ்டோரி” என்றான் கிண்டலாய்.

“ஹொவ் டேர்? நானா உன்னை இதெல்லாம் பண்ண சொன்னேன்? எல்லாத்தையும் நீயே பண்ணிட்டு பேர் அடிப்பட்டா என்னை வுட் – பீன்னு சொல்லுவியா? என்ன என்னை பழிவாங்க பிளான் போடுறியோ?” என்று உக்கிரமாய் கொதித்தாள். அந்த உக்கிரத்தில் தலைபாரமாவது ஒன்றாவது! சொல்லாமல் கொள்ளாமல் எங்கோ கரைந்து காணாமல் சென்றிருந்தது.

“ஹாஹா… பழிவாங்க எனக்கு போட்டுத்தள்ளிதான் பழக்கம். இதை சொல்லலை என்றால் பொறுக்கி ரேஞ்சுக்கு கதைகட்டி இந்நேரம் என் பதவிக்கு உலை வச்சிருப்பாங்க. உனக்குதான் தெரியுமே எனக்கு என் பேர், பதவி எல்லாம் எவ்ளோ முக்கியம்ன்னு. பாரு எவ்ளோ அழகா ஒரு பிரச்சனைக்குரிய விஷயத்தை நல்ல விஷயமா மாத்திருக்கேன்” என்று தன்னைத்தானே பாராட்டினான் ஆரவ்.

பூங்குழலி, “யாருக்கு நல்ல விஷயம்… நான் லீவ் கேன்சல் பண்ணிட்டு வேலைக்கு போகப்போறேன். எப்படி வுட் – பீ என்று கதைகட்டுனியோ அதேமாதிரி பிரேக் அப்ன்னு கதை கட்டு” என

ஆரவ், “எதுக்கு? இதுவரை என்னைப்பத்தி பேசமுடியாதவன் எல்லாம் இதை வச்சி மேடை ஏறி என்ன குறையோ? குய்யோ முய்யோன்னு கூவுறதுக்கா? போறதுதான் போற கல்யாணம் பண்ணிட்டு போ… என் பொண்டாட்டிக்கு நாட்டுப்பற்று அதிகம் அதான் அதை காப்பாத்த போறான்னு சொல்லிக்குறேன்” என்றான் அலட்சியமாய்.

விரும்பியவளிடம் விருப்பத்தைக் கூறாமல் அவள் விருப்பமும் இல்லாமல் வலுக்கட்டாயமாய் திருமணம் செய்யும் நிலைவரும் என்று அவன் கனவிலும் நினைத்திருக்க மாட்டான். ஆனால் அதுதான் நிஜத்தில் நடந்துக்கொண்டிருந்தது.

அவன் பொண்டாட்டி என்று கூறியதிலேயே அசூயையாய் உணர்ந்தவளோ, “நான் ஏன் அதைப் பண்ணனும்? சொல்லப்போனா நான் வெளியே போய் ஏழு வருஷம் முன்னாடி நடந்ததுல இருந்து நேத்து நடந்தவரை ஒன்னுவிடாம சொல்றேன்… அதானே நம்ம லவ் ஸ்டோரி… ரொம்ப நல்லாருக்கும்ல?” என்றாள் நக்கலாய். 

அதற்கு ஆரவ், “அப்போ பூவேந்தன் பத்தின உண்மை அவனுக்கு தெரியப்போகுது ரைட்?” என்று கொக்கியுடன் நிறுத்தினான்.       

“என்னைக்கு என்றாலும் தெரியப்போறது தானே? இன்னைக்கே தெரியட்டும்… கூடவே உங்க லட்சணமும்” என்று கூறிவிட்டாலும் உண்மை அறிந்தால் குட்டா கஷ்டப்படுவானே என்றிருந்தது. அதற்காகப் பார்த்து இவனைத் திருமணம் செய்ய முடியுமா என்ன? என்று மனதை தேற்றினாள் பூங்குழலி.

“நல்லது… அதுக்கு முன்னாடி அவன் யாரு எப்படி தொலைந்து போனான் இதெல்லாம் கேட்டுட்டு போனாய் என்றால் அவன் குடும்பத்தோட சேர்த்து வைக்க சுலபமா இருக்கும் பாரு” என்றான் ஆரவ்.

“குடும்பமா? அப்போ நீ?” என்று கேள்வியாய் நிறுத்தியவளிடம்

“எனக்கு அவன் உடன்பிறப்புன்னு சொன்னேன்னே தவிர ஒரே தாய் வயிற்றில் பிறந்தோம்ன்னு சொல்லவேயில்லை” இதைக்கூறுகையில் குரல் இறுகியது ஆரவ்விற்கு.

கேட்ட பூங்குழலிக்கோ பகீரென்றிருந்தது. ‘மாற்றாந்தாய் பிள்ளைகளா இருவரும்? பின் எதற்காக அவனை இவனுடன் வைத்திருந்தான்? ஒருவேளை அவர்களைப் பழிவாங்க குட்டாவிடம் பாசமாய் இருப்பதுபோல் நடித்து தன்னுடனே வைத்திருக்கிறானோ?’ எண்ணங்கள் அடங்காமல் எட்டுத்திக்கும் பாய்ந்தது பூங்குழலிக்கு.

அவளின் முகமாற்றத்தில் இருந்து அதை படித்தவனோ, “ யெஸ்… யூ ஆர் ரைட் பூங்குழலி. அவங்களை பழிவாங்க இவனை என்கூட வச்சிருக்கேன். என் அம்மாவை விட்டுட்டு இன்னொருத்தியை கல்யாணம் பண்ணி அவர் குழந்தைகுட்டின்னு சந்தோசமாய் வாழ, நான் பார்த்துட்டு சும்மா இருக்கணுமா அப்படி விட்டா நானெல்லாம் என்ன மகன்?” என்றான் ரௌத்திரமாய்.

வேந்தன் மீதுதான் வைத்த பாசத்தை தானே பொய் என்று மறுத்த கோபமும் அடுத்து தந்தையென்ற பெயரில் ஒருவர் செய்த பச்சைத் துரோகமும் சேர்ந்து அவனை ரௌத்திரமாக்கியது.

அவன் சொன்னது மூளையை அடைந்தாலும் வேந்தன் இவனிடம் இருந்தால் ஆபத்து என்று மனம் அவளின் குட்டாவைப் பற்றி மட்டும் யோசிக்க தலையை இடவலமாய் ஆட்டி பிரமைபிடித்தாற்போல், “ஒஹ் மை காட்… நான் கண்டிப்பா இனி உன்கிட்ட குட்டாவ விடமாட்டேன். அவன் குடும்பத்தை கண்டுபிடிச்சு அவங்ககிட்ட குட்டாவை சேர்த்துட்டுதான் போவேன்” என்றாள் பூங்குழலி.

“உனக்கேன்மா அந்த சிரமம்… நானே சொல்றேன் போய் சேர்த்து வை. எக்ஸ் சீஃப் மினிஸ்டர் அருள்ஜோதி தெரியுமா? தெரிஞ்சிருக்கும்… அவர் தான் உன் தம்பிக்கு அப்பா” என்றான் வெற்றுக்குரலில்.

புரியாத பல புதிர்கள் இப்போது விடுபட்டது பூங்குழலிக்கு. ‘பதவி பதவி என்று அதன் மேல் இருந்த வெறியைவிட உரியவரிடம் இருந்து அதைப் பறிக்கவேண்டும் என்ற வெறியில்தான் போராடியிருக்கிறான் போலும். எதுவோ ஒன்று… இவனால் தான் பாதிக்கப்பட்டது பட்டதுதானே? மாறிவிடாதே?’ 

ஆனால் இதையெல்லாம் எதற்காகத் தன்னிடம் கூறுகிறான்? வேறு என்னவோ இருக்கிறது என்று எச்சரித்தது மனம்.

அதை ஒதுக்கி, “ரொம்ப நன்றி… எனக்கொரு வேலை மிச்சம் தேங்க்ஸ்…” என்றவளை இடைமறித்தவன்

“வெயிட்… நான் இன்னும் பேசி முடிக்கலை. அதுக்குள்ள அவசரப்பட்டா எப்படி? வேந்தனை தூக்கி குப்பைத்தொட்டியில் வீசிட்டு இன்னைக்கு வரைக்கும் அந்தாளுக்கிட்ட தேடுற மாதிரியே வேஷம் போட்டுட்டு இருக்காங்க அவரோட சொந்த தங்கச்சி புருஷன் மாண்புமிகு மிஸ்டர் புருஷோத்தமன்” பெருமையாய் வஞ்சப்புகழ்ச்சி அணியில் கூறினான் ஆரவ்.

பூங்குழலிக்கு நன்றாக அவர்கள் குடும்பத்தைப் பற்றித் தெரியும். உறவுக்குள் பெண் எடுத்து பெண் கொடுத்து ஒரே வீட்டில் வசிப்பது ஊரறிந்ததுதான்.

‘கடவுளே… இன்னும் எவ்வளவு அதிர்ச்சியைத்தான் தாங்குவது?’ என்றெண்ணி ஸ்தம்பித்தாள் பூங்குழலி. ‘குப்பைத்தொட்டியிலா வீசினர்? அதுவும் சொந்த தங்கை மகனை? எப்படி மனம் வந்தது? அப்போ அப்பா அதில் இருந்துதான் தூக்கிட்டு வந்திருப்பாரோ?’ தன்போக்கில் சிந்தித்துக்கொண்டிருந்தாள் பூங்குழலி.

ஆனாலும் இன்னொரு மனம் முரண்ட, “என்னைத் தடுக்கக்கூட நீ பொய் சொல்லலாமே… எப்படி நம்புறது?” என்றாள் சந்தேகமாய்.

“ஆதாரம் இருக்கு… ஆனா அதை கண்டிப்பா காமிக்க மாட்டேன். நீ என்னை நம்பித்தான் ஆகணும்” என்று அடமாய் சொன்னவன், “இன்னொரு முக்கியமான விஷயம் இங்க வருது பூங்குழலி” என்றான் கதையில் சஸ்பென்ஸ் வைக்கும் பாவனையில்.