alaikadal-22.2

alaikadal-22.2

அலைகடல் – 22.2

இருவரும் குளித்து முடித்து கீழிறங்கி வருகையில் சோபாவில் அவன் வாங்கி வைத்திருந்த ஆடையை அணிந்து அமர்ந்திருந்தாள் பூங்குழலி. அருகே தர்ஷனாவும் அமர்ந்திருக்க ஆரவ்வைக் கண்டதும் மரியாதை நிமித்தம் எழுந்தாள் அவள்.

“என்ன இங்க உட்கார்ந்திருக்கீங்க? சாப்பிட்டாச்சா” என்று பூங்குழலி குறித்து தர்ஷனாவிடமே வினவ

“எஸ் சார். சாப்பிட்டு மாத்திரையும் போட்டுட்டாங்க” என்று பதில் கூறினாள் தர்ஷனா.

“தட்ஸ் குட்… இன்னைக்கு ஒருநாள் ரெஸ்ட் எடுத்துக்கோங்க. நாளையில் இருந்து மேரேஜ்க்கு தேவையானதை போய் வாங்கிக்கலாம்” சொல்வது பூங்குழலிக்கு என்றாலும் அவன் வீடு வந்ததிலிருந்து நேரிடையாக அவளிடம் பேசவேயில்லை.

அப்படியே விடுகிறவளா அவள்?  “நாங்க எங்க வீட்டுக்குப் போகிறோம்” என்று ஆரம்பித்தாள் பூங்குழலி. 

அதில் தர்ஷனா இங்கிதம் கருதி அங்கிருந்து நழுவ, வேந்தனை சாப்பிடபோகுமாறு அனுப்பியவன் அவளருகே சிறிது இடம்விட்டு அமர்ந்தான். 

அதில் சட்டென்று எழுந்தவளை இயல்பாய்க் கைப்பிடித்து அமர்த்தியவாறு, “ஏன்? ஒருவாரத்துல இங்கதான் வரணும் அதற்கு இங்கேயே இருந்தால் என்ன?” என்று வினவினான் ஆரவ். 

“ஏன்னா… திருமணம் முடித்தபிறகு தான் ஒரே வீட்டுல இருக்க சொன்னதா எனக்கு நியாபகம்” என

“ம்கூம்… எனக்கு ஒரே ரூம்ல இருக்க சொன்னதாதான் நியாபகம்” என்று திருத்தினான்.

அதில் வழக்கம்போல் கோபம் ஏற, “என்னால முடியாது நாங்க… நான் கிளம்பனும். என் வீட்டுல கொஞ்ச நாளாச்சும் இருக்கணும். எல்லாத்தையும் உன் இஷ்டத்துக்கு என்னால செய்ய முடியாது. எனக்குன்னு தனி பீலிங்ஸ் உண்டு” என்று கடுப்பாகவே முடித்தாள் பூங்குழலி.

அவள் நாங்க என்று கூறி நான் என்று மாற்றியதை கவனித்துக்கொண்டுதான் இருந்தான் ஆரவ். வேந்தனை அழைத்துச் செல்ல நினைத்து பின் அவள் மட்டும் போவதாய் கூறுகிறாள் என்றறிய பெரிதாய் எதுவும் தேவையில்லையே!

‘பூவேந்தன் பிறப்பால் என் இரத்தமாய் இருந்தாலும் வளர்ப்பால் என்றும் உன் தம்பிதான்’ என்று கூறத் தோன்றினாலும் எதற்கு வம்பு மீண்டும் பிச்சை போடுகிறாயா? என்று ஆரம்பிப்பாள் தேவையா இது?’ என்றெண்ணி,

“ஓகே… காவலுக்கு ஆட்கள் ஏற்பாடு பண்ணி அனுப்பிவைக்கிறேன். ஒரு மணிநேரம் கழித்து தர்ஷனாகூட போய்க்கொள்” என்றான் ஆரவ். 

“தர்ஷனா எதுக்கு? நான் தனியா இருக்கணும்ன்னுதான் அங்கே போகணும் என்று சொல்றேன். காவல் கூட சரி நான் தப்பிச்சிருவேன்னு பயந்து வைக்குற… வச்சிக்கோ. அவங்கலாம் வெளியேதான் இருப்பாங்க. ஆனா இவ எதுக்கு?” எரிச்சலுடன் வினவினாள் பூங்குழலி. கூடவே ஒருத்தி உற்றுப்பார்த்துக்கொண்டு இருந்தால் நல்லாவா இருக்கும்?

“கமாண்டர் மேடம் உங்களை நம்பமுடியாது மேடம். குறைந்தபட்சம் கல்யாணம் முடியுறவரை தர்ஷனா உன்கூடதான் இருப்பா… நோ மோர் ஆர்க்யூமெண்ட்ஸ்” என்றதோடு பேச்சு முடிந்ததென உணவு உண்ணச் சென்றுவிட்டான். 

அவன் உண்டு முடித்து வரும்வரை இருந்த இடத்திலேயே அசையாமல் அமர்ந்திருந்தாள் பூங்குழலி. வேந்தன்தான் அவளிடம் வந்தான், “பூமா நாம நம்ம வீட்டுக்குப் போறோமா?” என்ற கேள்வியுடன்.

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஆரவ்வைப் பார்த்து தடுமாறியவள், பின் அவனே கேட்கும்பொழுது இவனென்ன மறுப்பது? தர்ஷனா வேற கூடவே வருவா… அப்போ குட்டா வந்தா என்ன? என்று தோன்ற, “ஆமா குட்டா… அப்புறமா வருவோம்” என்றாள். திருமணம் முடிந்துவருவோம் என்று அவனிடம் கூறவே ஒருமாதிரியாக இருந்தது.

ஆனால் வேந்தனோ, “இப்போதான் குட்டா சொல்லிருக்க பூமா… வந்ததில் இருந்து என்னை யாரோ மாதிரி நினைச்சு பேசவேயில்லை” என்றான் குறையுடன்.

அதில் திக்கென்று அதிர்ந்தாள் பூங்குழலி. உண்மைதானே? அவன் மீதான பாசம் அப்படியே இருந்தாலும் ஏதோ சொல்லத்தெரியாத ஒன்று வேந்தனை முன்போல் நெருங்கவிடாமல் தடுக்க, பூங்குழலியால் உரிமையோடு உரையாடமுடியவில்லை.

அதை இவளே உணராமல் இருக்க, துல்லியமாய் கவனித்து கேட்டிருந்தான் வேந்தன். அதில் அந்த தடை உடைய, “உடம்பு முடியலடா அதான் வேறொன்றுமில்லை” என்றாள் கரகரத்து கலங்கிப் போன குரலில். 

அவளின் தயக்கம் தகர்ந்ததை உணர்ந்த ஆரவ்வின் உதட்டிலோ புன்னகை ஒன்று ரகசியமாய் தேங்கியது. 

“அண்ணா… இல்ல இல்ல இனிமேல் அண்ணா சொல்லக்கூடாதுல மாமான்னு தானே கூப்பிடனும்? டக்ன்னு மாத்த முடியலை என்றாலும் கூப்பிட கூப்பிட பழகிருவேன்” எதுவோ சொல்லவந்து இதைக் கூறியவனை இப்பொழுது திக்கென்று பார்ப்பது ஆரவ் முறையானது. 

பூங்குழலிக்கோ சொல்லவே வேண்டாம். சகித்துக்கொள்ளவே முடியாததாக இருந்தது அந்த அழைப்பு. 

ஆரவ், “அதெல்லாம் ஒன்னும் வேணாம் வேந்தா… எதையும் மாற்ற வேண்டாம். வேணும்ன்னா உங்க அக்காவ” என்று கூறும்பொழுதே என்ன சொல்லப்போகிறானோ என பூங்குழலிக்கு இங்கே பதைபதைத்தது.

“உங்க அக்காவ பூமான்னு கூப்பிடுறல்ல அதையே இனி எப்போதும் கூப்பிடு… குழப்பம் வராது” என்றதும்தான் ஆசுவாசமாகியது அவளுக்கு. 

“ஓ ஓகே ஓகே. எனக்கும் இதேமாதிரி கூப்பிடதான் பிடிச்சிருக்கு. எங்கே நீங்க மாற்ற சொல்லுவீங்களோன்னுதான் இப்போவே கேட்டேன்” என்று இருவரின் வயிற்றிலும் ஒருசேர பாலை வார்த்தான் இளையவன். 

அதன் பின்னான நாட்களில் தன் வீட்டிற்கு வந்துவிட்டாலும் ஆரவ்வின் கண்காணிப்பில் இருந்த பூங்குழலியால் நினைத்ததை ஒரு சதவீதம் கூட செய்ய முடியவில்லை. 

வெளியே சென்றாலும் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது என்று தோன்ற, வீட்டிற்குள் முடங்க ஆரம்பித்தாள் அவள்.

சிறு சிறு வெளிவேலைகளை வேந்தன் தன்னால் முடிந்த அளவு பார்த்துக்கொள்ள, ஷாப்பிங் செய்யவும்கூட வெளியே வரமாட்டேன் என்று சாதித்துவிட்டாள் பெண். 

சரியென்று பத்திரிக்கை மற்றும் புடவை, நகை டிசைன்களை வீட்டிற்கே தேர்தெடுக்க ஆரவ் அனுப்பினாலும் வேண்டுமென்றே சுமாருக்கும் கீழானதை தேர்வு செய்து அனுப்பிவைத்தாள் பூங்குழலி.

இருபக்கமும் பெரியவர்கள் இல்லாததால் மொத்த பொறுப்பும் முழுமனதாக ஆரவ் ஏற்றுக்கொண்டான். பூங்குழலி தேர்ந்தெடுத்த டிசைன்னே அவளின் கோபத்தை அப்பட்டமாய் பறைசாற்ற, அதை தள்ளி வைத்து அவனே அவளுக்கு பொருத்தமானதாய் அனைத்தும் வாங்கிவிட்டான்.

வீட்டிலேயே இருக்கும் பூங்குழலியோ தன் அமைதியை மீட்டெடுக்க மீண்டும் யோகாவை தஞ்சமடைந்தாள். வேலைக்கு செல்கையில் எடை அதிகரித்திருக்கக் கூடாதே என்ற அக்கறையில் உடற்பயிற்சியையும் சீராக செய்ய ஆரம்பித்தாள். 

உணவு ஆரவ் வீட்டில் இருந்தே மூன்று நேரமும் வந்துவிட, சமையல் வேலையும் மிச்சமாகிற்று. வேந்தனுடன் முன்பைப் போல் பழக ஆரம்பித்துவிட்டாள் அவள். 

மொத்தத்தில் இயல்பாக இருப்பதுபோல் இருந்தாலும் எந்தப் பெண்ணும் திருமணத்திற்கு இப்படி தயாராகமாட்டாள் என்று அவள் நடவடிக்கை வைத்துக் கூறலாம். தர்ஷனாவுக்கு பூங்குழலி செய்வதையெல்லாம் பட்டியலிட்டு ஆரவ்விற்கு அனுப்பவே நேரம் சரியாக இருந்தது.

திருமணத்திற்கு இன்னமும் மூன்று நாட்கள் இருக்கையில் அவளின் வீட்டிற்கு வந்தான் ஆரவ். அவளை நேரில் காணவேண்டும் போல் இருக்க, அவனைத் தடுக்க முடியுமா என்ன? முதன் முறையாய் மாறுவேடமின்றி கிளம்பி வந்துவிட்டான்.

ஆனால் விரைந்து இங்கிருந்து சென்றுவிட வேண்டும் இல்லையேல் கூட்டம் கூடிவிடும் என்றெண்ணினான். இப்போதே ஆங்காங்கே எட்டிப்பார்க்க ஆரம்பித்திருந்தனர். 

உதவியாளர் ஒருவர் வந்து பெட்டி, பைகளை ஹாலில் வைத்துச் செல்ல, அவன் வந்தது தெரிந்தும் ‘ஏன் வந்தாய்?’ என்பதுபோல் வரவேற்பு கொடுத்தாள் பூங்குழலி.

அவளின் அந்த பார்வையே நன்கு தெளிந்துவிட்டாள் என்று ஆரவ்விற்கு கட்டியம்கட்டிக் கூறியது. ஏனெனில் கப்பலில் கம்பீரமாய் பார்த்த பூங்குழலியை நினைவுறுத்திக்கொண்டிருந்தாள் அவள். 

“உன் திங்ஸ் எல்லாம் வந்திருச்சு… பிடிச்சிருக்கான்னு பாரு, பிடிக்கலை இல்ல மாற்ற வேண்டியதுன்னு ஏதாவது இருந்தா அனுப்பிவிடு மாற்றிக்கலாம்” என்றவனிடம் 

‘மாப்பிள்ளையே பிடிக்கலை! மாற்ற முடியுமா என்ன?’ என்ற கேள்வியைத் தாங்கி கண்களால் துளைக்க, அதைச் சரியாகப் படித்த ஆரவ் அவளருகே நெருங்கி அவளுக்கு மட்டும் கேட்குமாறு, “என்னைத்தவிர எது பிடிக்கலை என்றாலும் என்னால உடனே மாற்றித் தர முடியும் குழலி” என்றான் கிசுகிசுப்பாய். 

தான் நினைப்பதை வாய்விட்டு சொல்லாமலே எப்படிப் புரிந்துக்கொண்டான் என்று திடுக்கிட்டவாறு வேந்தன் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்த பெட்டியின் பக்கம் பார்வையைத் திருப்பினாள் பூங்குழலி.

அன்று விடைபெறுகையில் ஆரவ், “பை குழலி… இனி கல்யாண மேடையில் மீட் பண்ணலாம்” என்றான் தன் மந்தகாசப் புன்னகையுடன். அதில் சிறிதே சிறிது காதல் வெளிப்பட, பூங்குழலிக்கு அது கிண்டலாகத்தான் தெரிந்தது.

‘ஆடிக்கோ… எவ்வளவு என்றாலும் ஆடிக்கோ. நான் அங்க இருக்கபோற ஒரு மாசமும் ஏண்டா இவளைக் கல்யாணம் பண்ணுனோம்ன்னு உன்னை கதற வைக்கிறேன்’ என்று மனதோடு புது சபதமெடுத்தாள் பூங்குழலி.

உள்ளேயும் வெளியேயும் இருக்கும் உச்சபட்ச காவலுக்கு மத்தியில் அவளின் தப்பிக்கும் மார்க்கமெல்லாம் சில்லுசில்லாக உடைய, இதோ பல்வேறு அலங்கார பூக்களாலும் மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட மணவறையை நோக்கி அடிமேல் அடிவைத்து தர்ஷனாவுடன் நடந்து வந்துக்கொண்டிருந்தாள் பூங்குழலி.

பட்டுவேட்டி சட்டையில் கனகம்பீரமாய் மேடையில் அமர்ந்து ஐயர் கூறிய மந்திரத்தைத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தான் ஆரவமுதன். நேரமோ முகூர்த்த நேரமான காலை ஆறரை மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.

பொன்மஞ்சள் நிறப்பட்டு பாந்தமாய் பெண்ணவளை தழுவியிருக்க, பச்சை நிற ரவிக்கையும் அதே நிற பார்டரும் தங்க இழையில் நெய்யப்பட்டு வரப்போகும் மங்களகரமான பசுமை சூழ்ந்த வாழ்க்கைக்கு மனமார வாழ்த்துக்கூறியது அது. என்ன புரிய வேண்டியவளுக்குதான் அது புரியவில்லை. 

புடவைக்கு பொருத்தமாய் இருக்கும் பச்சைக்கல் பதித்த பொன் ஆபரணங்களை மேனி சூடியிருக்க, மணப்பெண் உருமாற்றத்தில் பேரழகியாய் ஜொலித்தாள் பூங்குழலி. 

பூவேந்தனோ தன் நெருக்கத்திற்குரிய இருவரின் திருமணத்தை திருவிழாபோல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டாடிக்கொண்டிருந்தான் என்றே கூறலாம்.

அருகில் வந்து அமர்ந்தவளை பார்க்கச்சொல்லி மனம் கட்டளையிட்டாலும், இருக்கும் இடம் கருதி பார்த்தும் பாராமல் அவளை கொள்ளையடித்தான் ஆரவ். மனதில் நுழைந்தவள் மேலும் அழுத்தமாய் அங்கே சிம்மாசனமிட்டு அமர்ந்த அழகிய தருணம் அது.

ஆயிரம் பேர் அமரக்கூடிய மண்டபத்தில் பாதி இடம் கட்சி ஆட்களாலும் நெருங்கிய சினிமா பிரபலங்களாலும் ஆக்கிரமித்திருக்க, முக்கிய அரசியல் பிரமுகர்கள், அமைச்சர்கள் முதலானோர் காலை பத்து மணிக்கு நடைபெறும் வரவேற்புக்கு வருகை தர உள்ளனர். 

அவனிற்கு பிடித்த திருமணம் என்றாலும் இருவரின் மனமொன்றி நடக்காததால் பூங்குழலியின் பொறுமையை அதிகம் சோதிக்காமல் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அனைத்தையும் நடத்தி முடிக்கச் செய்த ஏற்பாடே இந்த காலை வரவேற்பு.

“கெட்டிமேளம் கெட்டிமேளம்…” ஐயரின் குரலுக்காகவே காத்திருந்த வாத்தியங்கள் படுஜோராய் அடிக்கப்பட்டு மேளச் சத்தத்தை தெறிக்கவிட, முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆசீர்வாதத்தோடு பூங்குழலியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன் சரிபாதியாக்கிக் கொண்டான் ஆரவமுதன்… பூங்குழலியின் அமுதன்!

உன்னோடு தான் என் ஜீவன்

ஒன்றாக்கினான் நம் தேவன்

நீதானம்மா என் தாரம்

மாறதம்மா எந்நாளும்…

அலைகடல் ஆர்ப்பரிக்கும்…

Leave a Reply

error: Content is protected !!