alaikadal-26.1
alaikadal-26.1
அலைகடல் – 26
காரின் பரிதாபநிலை ஆரவ்வின் கோபத்தை கிளறிவிட்டது அந்த காலை வேளையிலேயே!
அவனுக்கு இருக்கும் வசதிக்கு இதுபோல் பத்து காரை வாங்கமுடியும் என்றாலும் நாளைய சட்டமன்ற கூட்டம் தொடர்பான மீட்டிங் காலை பத்து மணிக்கு இருக்க அதற்குள் வாங்கி அதில் செல்வது எல்லாம் முடியாத காரியம். மீறி பதவியை பயன்படுத்தி வாங்கினாலும் கூட அதில் இதுபோல் குண்டு துளைக்காத கண்ணாடி, இன்னபிற பாதுகாப்பு கருவி போன்றவற்றை பொருத்த நேரமாகும்.
வெளியே மட்டும் சேதாரமாகியிருக்கும் இதை சரி செய்வதும் புது கார் வாங்குவதும் கிட்டதட்ட ஒன்றுதான்.
பஞ்சர் செய்தது மனைவிதான் என்று மனம் அடித்துக்கூறினாலும் நூற்றில் ஒரு பங்காய் அவள் இதை செய்யவில்லை என்றால்? அந்த எண்ணத்தில் வரிசையாய் நின்றிருந்த பாதுகாவலர்களிடம், “என்ன லட்சணத்துல காவல் காக்குறீங்க இத்தனை பேர்? ஒருத்தர் கூடவா இத்தனையும் பண்ணி முடிக்குற வரை பார்க்கலை” என்று சத்தமிட்டான்.
தலைமை பாதுகாப்புக்கென இருந்தவர் ஓரடி முன்னே வந்து, “சார் நேற்று ஒரு மணில இருந்து காலை நாலு முப்பத்தஞ்சு வரை புதுசா நாய்கள் குரைக்குற சத்தம். போய் பார்த்தா பக்கத்து தெரு நாய்கள் இங்கே வந்தது தெரிஞ்சது. ஆனாலும் நாங்க கவனமாக கண்காணிச்சிட்டுதான் இருந்தோம். கண்டிப்பா யாரும் வெளியே இருந்து வரல சார் இதை எங்களால உறுதியா கூறமுடியும். உங்க ஆபிஸ் ரூம்ல இருக்குற சிசிடிவி கேமரா பார்த்தா யாருன்னு தெரிஞ்சிரும் சார். ஷால் வீ…?” என பணிவாய் அழைத்தவரிடம்
“அதை நான் பார்த்துக்குறேன்… இந்த விஷயம் வெளியே போகக்கூடாது கால் மெக்கானிக்” என்று கட்டளையிட்டு வினோத்தை இங்கு வந்து போகும்படி கூறி பூங்குழலியிடம் விரைந்தான்.
சிசிடிவி பார்க்கவே அவசியமின்றி இதை பூங்குழலிதான் செய்திருப்பாள் என்பது திண்ணம். ஆனால் அது பாதுகாவலர்கள் என்றாலும் அவர்களுக்கு தெரியவருவதில் உடன்பாடில்லை. அதற்காக அவளை அப்படியே விடுவதா?
இரவு இரண்டு மணி நேரமாக யாருக்கும் தெரியாமல் பஞ்சராக்கும் வேலைகளைப் பார்த்து இன்னமும் அடித்து போட்டாற்போல் உறங்கிக்கொண்டிருந்தவளை, “போதும் நடிச்சது! எழுந்திருடி” என்றான் ஆவேசமாய்.
எப்பொழுதும் விழிப்பாய் இருப்பவள் என்பதால் சட்டென்று விழித்தவள், தன் எதிரில் நின்று உறுத்து விழித்துக்கொண்டிருந்தவனைக் கண்டு புருவம் சுருக்கினாள்.
“என்ன… என்னடி பிரச்சனை உனக்கு? நேத்து பண்ணுனதுக்கு எதுவும் பண்ணாம சும்மா விட்டதால இவன் ஒன்றும் பண்ண மாட்டான்னு நினைச்சிட்டியா? இனிமேல் உன் இஷ்டத்துக்கு விடமுடியாது. கல்யாணம் பண்ணும்போதே என்ன சொன்னேன்…” பொரிந்து கொண்டிருந்தவனை இடைநிறுத்தி
“என்ன சொன்ன?” என்றாள் பூங்குழலி சாவகாசமாய் எழுந்து சவுகாரியமாய் அமர்ந்தவாறு. முதன்முறையாய் அவன் டி போட்டு பேசுவதை அவனும் உணரவில்லை இவளும் கவனிக்கவில்லை.
“நீ ஒழுங்கா இருந்தா நானும் ஒழுங்கா இருப்பேன் என்று சொன்னேன்னா இல்லையா” பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்துத் துப்பினான். என்னமோ இன்றே இதற்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்று தோன்றியது அவனிற்கு. ஆனால் அவன் நினைப்பிற்கு நேராய் நடப்பவளா இவள்?
“ஆமா… இப்போ நான் என்ன பண்ணுனேன் ஒழுங்கா இல்லாம. உன்னை கொல்லப்பார்த்தேனா? இல்ல குட்டாவை பற்றி வெளியே சொன்னேனா?” என்றாள் கேள்வியாய்.
“அந்த ஆசை வேற இருக்கா உனக்கு. தொலைச்சிருவேன் பார்த்துக்கோ. அர்த்த ராத்திரில வண்டியை பஞ்சர் பண்ணிருக்க எங்கே இல்லைன்னு சொல்லு பார்ப்போம்?” என்றவனிடம்
“பஞ்சர் தானே பண்ணுனேன் என்னமோ பிரேக் அத்துவிட்ட மாதிரி ரியாக்ட் பண்ற? உண்மையா அதான் பண்ண நினைச்சேன் ஆனா என்னைமாதிரி இன்னொரு குடும்பம் கஷ்டப்பட்டுற கூடாதேன்னுதான் இத்தோட விட்டேன்” அவனுக்கு குறையாத ஆவேசம் இவளது குரலில்.
‘ஆத்தாடி!!!’ ஆடிப்போய்விட்டான் ஆரவ்.
“அப்போ நேத்து என்னை பூட்டிவச்சது?” முன்னே இருந்த ஆவேசம் எல்லாம் அவளின் ஆவேசம் முன் இருந்த இடம் தெரியாமல் மறைந்திருந்தது.
அவளோ, “எனக்கு பூட்டனும்ன்னு தோணிச்சு பூட்டினேன். உன்னை கொல்ல பார்த்தாலோ… உன்னைப்பற்றி இல்ல குட்டாவை பற்றி வெளியே சொன்னாலோ மட்டும்தான் என்னை நீ கேள்வி கேட்கமுடியும் மிஸ்டர் அமுதன். வீட்டுக்குள்ள என் விருப்பப்படிதான் நான் இருப்பேன். உன்னால முடியலைன்னா சொல்லு நான் என் வீட்டிற்கு போறேன்” சட்டமாய் அமர்ந்து சட்டம் பேசினாள் பெண்.
ஆக என்னை டார்ச்சர் செய்தால் அவளை எப்படியோ போ என்று விட்டுவிடுவேன் என்றெண்ணிக் கொண்டிருக்கிறாளா? அது எப்படி முடியும்?
அதையே அவளிடமும் சொன்னான், “இதெல்லாம் செய்தா நான் அனுப்பிவிடுவேன் என்று நினைக்காதே பூங்குழலி. அடுத்த முறை இதை செய்ய முடியாதபடி கிடுக்கிப்பிடி போட்டுட்டே வருவேனே தவிர வேறொன்றும் நடக்காது. அப்புறம் உனக்குதான் கஷ்டம்” என்றவனிடம்
“பக்கா அரசியல்வாதின்னு நிரூபிக்குற அமுதன். ஒரு காரியம் தடுக்கணும்ன்னா அது நடக்குறதுக்கு முன்னாடியே தடுக்கணும். நடந்து முடிஞ்ச பிறகு புத்தியுள்ளவங்க யாரும் அதையே செய்ய மாட்டாங்க… ஆல் தி பெஸ்ட்” என்றாள் திமிராய்.
‘என்ன சொல்ல வருகிறாள் இவள்? செய்ததையே மீண்டும் செய்ய மாட்டேன் என்கிறாளா? அந்த ஆல் தி பெஸ்ட்க்கு அர்த்தம் என்ன? நான் அடங்கமாட்டேன் என்றா இல்லை என்னை அடக்கமுடியாது என்றா?
எதுவோ ஒன்று ஆனால் இவள் செய்து வைக்கும் வேலைகளால் தினம் தினம் காலையில் டென்ஷன் ஏற அன்றைய நாளே முழுதாக கெட்டுவிடுகிறதே எனக்கு!’ மனதிற்குள் இத்தனை ஓட நெற்றியை தேய்த்தவன்,
“இதனால உனக்கு என்ன கிடைக்குது பூங்குழலி?” என்றான் ஆயாசமாய். திருமணம் முடிந்து மூன்று நாள்தான் ஆகியது என்று சத்தியம் செய்தால் அவனாலேயே அதை நம்பமுடியாது. ஏதோ ஜென்மம் ஜென்மமாய் அவளுடன் போராடிய உணர்வு. போன ஜென்மத்திலும் மனைவியாய் அமைந்திருப்பாளா இருக்கும்!
பட்டென்று, “சந்தோசம்” என்றாள் அவள்.
தன்னையே பார்த்துக்கொண்டிருந்தவனின் கண்களை நேர்க்கொண்டு பார்த்தவள், “நீ டென்ஷனாக ஆக எனக்கு ரொம்ப நல்ல பீல் கிடைக்குது… பார்க்கவும் நல்லாருக்கு” என்றாள் சுவாரசியமாய் கண்கள் மின்ன.
இதற்கு என்ன சொல்வான் அவன்? சத்தியமாய் உள்ளுக்குள் நொந்துவிட்டான். இனி அவளை திட்டினாலும் கத்தினாலும் பலன் இருக்காது என்று தெளிவாகிவிட்டதே! ‘இவளை வேறவிதமாதான் டீல் பண்ணனும்’ அவளை ஆழ்ந்து நோக்கியவன் அதன்பின் ஒருவார்த்தை பேசாமல் அலுவலகம் செல்ல ஆரம்பித்தான்.
அவன் மௌனத்தால் பாதிக்கப்படாதவளாக தோளைக் குலுக்கி வெளியேறினாள் பூங்குழலி. ஓரப்பார்வையில் அது விழுந்தாலும் கண்டுக்கொள்ளவில்லை இவன்.
கீழே வந்தவளிடம், “பூமா… எவனோ ஒருத்தன் நம்ம வீட்டுக்குள்ள வந்து மூணு கார் டையரையும் பஞ்சர் ஆக்கி கண்ணாடியையும் கீறி விட்டுட்டு போயிருக்கான் லூசு பையன். மெக்கானிக் வந்து சரி பண்ணிட்டு இருக்காங்க” என்றான் அதிர்ச்சி ஆதங்கம் மற்றும் கோபம் எல்லாம் கலந்த கலவையான குரலில்.
அவனை ஒரு பார்வை பார்த்தவள், பதிலின்றி அவள் பயன்படுத்திய பழைய அறைக்கு சென்று பிரெஷ் அப் ஆகி வர, “என்ன நீ… ஒண்ணுமே சொல்லாம அமைதியா இருக்குற?” என்று வினவினான் இளையவன்.
“ஹான்… யோசிச்சிட்டு இருக்கேன்டா. அதென்ன எவனோ ஒருத்தன்? எவளோ ஒருத்தியா இருக்கக்கூடாதா? பார்க்காமலே அது பையன்தான்னு எப்படி சொல்ற” என்றாள் தீவிரமாய் என்னமோ அதுதான் இப்போது முக்கியம் போல்.
“பூமா…” என்று பரிதாபமாய் விளித்தான் வேந்தன்.
அதில் சிரிப்பு வரவே, “ஹாஹா… சும்மாடா. கார் மேலேயே இவ்ளோ கோபமா இருக்குறவன் கார்க்கு சொந்தக்காரன் மேல எவ்ளோ கோபமா இருப்பான்னு நினைச்சேன்” என்றாள் புன்னகையுடன்.
“அதெல்லாம் இல்ல… முன்னாடி அடிக்க தைரியம் இல்லாதவங்க கோழை மாதிரி பின்னாடி குத்துற வேலை பூமா இது. அண்ணாவை தோற்கடிக்க முடியாத யாரோ இப்படி செஞ்சி மனசை தேத்திக்குறாங்க. ஆனா அவங்களை மட்டும் அண்ணா கண்டுபிடிச்சாங்க அவங்க கதி அதோகதிதான்” என்றான் சிரித்துக்கொண்டே.
அவனையே வெறித்துப் பார்த்தாள் பூங்குழலி. ஒரு நிமிடம் ஆரவ்வே நேரில் பேசுவதுபோல் இருந்தது. முன்பு வளர்ப்பாக தெரிந்தது இப்போது ஒரே இரத்தமாக தெரிந்தது.
தலையை குலுக்கி அந்த நினைப்பை உதறியவள், “அதைவிடு நீ எப்படி இன்னைக்கு கிளாஸ் போவ?” என்று பேச்சை மாற்றினாள்.
“அதெல்லாம் அண்ணா இந்நேரம் ஏதாவது ஏற்பாடு பண்ணிருப்பாங்க. இன்னக்கி ரிகர்சல் டான்ஸ் வேற… இல்லைனா லீவ் போட்ருப்பேன். அடுத்த மாசம் ஸ்டேட் லெவல் டான்ஸ் காம்படிஷன் வருது. போன வருஷம் செகண்ட் ஆனா இந்த வருஷம் விடக்கூடாதுன்னு செமையா சூடு பிடிக்குது ஆட்டம்” என்றான் உற்சாகமாய்.
“அடுத்த மாசமா? எப்போ?” என்று விசாரித்தவளிடம் தேதி சொல்ல, அதுவோ இவள் நேவிக்கு சென்ற பின் வர, ஏனோ துக்கம் பந்தாய் உருமாறி தொண்டையை அடைத்தது.
அதை விழுங்கி, “உன் டான்ஸ் நான் பார்த்ததே இல்லைல. எனக்கு ஆடி காமிக்குறியா?” கேட்கும் பொழுதே குரல் கரகரத்தது.
அதைக் கேட்டவாறு வந்த ஆர்வ்விற்கு, ‘ரூம்ல அந்த பேச்சு பேசியவளா இவள்’ என்றிருக்க வெளியே, “பார்த்து பார்த்து உங்க அக்கா தம்பி பாசத்துல வீடு வழுக்கி விட்டுற போகுது” என்றான் நக்கலாய்.
அதற்கு பூங்குழலி வெட்டும் பார்வை ஒன்றை பரிசாய் அளிக்க, வேந்தனோ, “ஹாஹா… பரவால்ல பரவால்ல கழுவி விட்டுக்கலாம் ண்ணா” என்றுவிட்டு தமக்கையை தோளோடு சேர்த்தணைத்தான்.
“இதுக்கு எதுக்கு பூமா பீல் பண்ற? நீ தான் லாஸ்ட் எக்ஸாம் அன்னைக்கு நான் ஸ்கூல் முன்னாடி ஆடினதை பார்த்திருக்கியே! அதேதான் கொஞ்சம் ஒழுங்கா ஆடுவோம். தனியா பார்த்தா நல்லாவே இருக்காது. நீ வேணா இன்னைக்கு என்னோட கிளாஸ்க்கு வரியா? மாஸ்டர் ஒன்னும் சொல்ல மாட்டாங்க” என்றான் பூவேந்தன். அவனுக்கும் தமக்கையிடம் ஆடிக்காண்பிக்க விருப்பமே.
“ஓகே… வீட்டுல இருக்கிறதுக்கு அங்க வரது பெட்டர். நான் ரெடியாகி வரேன்” என்றவாறு எழுந்தாள் பூங்குழலி.
தன்னை துரும்புக்கும் மதிக்காமல் இருவர் மட்டும் உரையாடி அவர்களுக்கான உலகில் இருப்பது ஒதுக்குவதுபோல் தோன்ற சுருக்கென்று நெஞ்சில் முள் தைத்து கடுகடுவென வந்தது. என்ன எதிர்பார்க்கிறோம் என்றே அவனுக்கு தெரியவில்லை!
“வேந்தா… உனக்கு கார் வரும் அண்ட் உங்க அக்கா முன்ன மாதிரி சகஜமா ஊர்சுத்த முடியாது அஸ் ஷி இஸ் எ செலிபிரிட்டி நௌவ். அதனால முகத்தை மறைத்து கூட்டிட்டுப் போ” என்றுவிட்டு அவன் பதிலை எதிர்பார்க்காமல் சென்றுவிட்டான்.
அவன் கூறியது புரிந்தது வேந்தனுக்கு. ஆரம்பத்தில் இவனிடமே ஆரவ் குறித்தும் அவன் எப்படி அவனிடம் வந்தான் என்பது குறித்தெல்லாம் கேள்வி கேட்டு நச்சரித்தவர்கள்தானே! மருண்டு விழித்தவனை வழிநடத்தியது எல்லாம் ஆரவ்தான்.
“அவன் சொல்லி நான் கேட்கணுமா… நான் இப்படிதான் வருவேன். என்ன ஆகிரும்” என்ற தமக்கையை சமாளித்து துப்பட்டாவால் முகமூடி அணிந்து நடனவகுப்பில் அமர வைப்பது சாதாரண காரியமாக இல்லை பூவேந்தனுக்கு.
“அப்போ யாராச்சும் பார்த்து போட்டோ புடிச்சி பேஸ்புக்ல போட்டாலோ இல்ல உன்னை சுத்தி கூட்டம் கூடினாலோ உனக்கு பரவால்ல தானே?” என்ற பிறகுதான் ஒருவாறு மறைந்து வர ஒத்துக்கொண்டாள்.
நடனம் ஆரம்பமாகியது. அதை பார்க்க பார்க்கதான் அவன் தனியே ஆடமுடியாது என்பதற்கான அர்த்தம் புரிந்தது. ஒருவன் தொடையில் வேந்தன் ஏறி ஆகாசத்தில் பறக்க, அடியில் இன்னொருவன் வழுக்கி சென்றான். ஒவ்வொரு அசைவும் இருவரோ மூவரோ சேர்ந்தே செய்ய கண்கள் வேந்தனை தவிர யாரையும் தீண்டவில்லை.
ஆடும் அவன் முகத்தில்தான் எவ்வளவு சந்தோசம்! அது அவனின் நடனத்திலும் தெரிய, ஏதோ ஆடுவது பிடிக்கும் என்பதால் வகுப்பிற்கு சென்று கற்றுக்கொள்கிறான் என்ற எண்ணம் பொய்த்துப் போனது. நாடி, நரம்பு, எலும்பெல்லாம் ஊடுருவி உயிரை தொட்டதை போல் ஆடித்தள்ளினான் வேந்தன்.
மற்றவர்களை காட்டிலும் அவன் தனித்தன்மையுடன் ஆடுவதாக தோன்ற, உண்மையில் அப்படியா இல்லை தன் கண்களில் பாசத்தை அணிந்து பார்த்ததால் அவ்வாறு தெரிகிறதா என்று பூங்குழலியே சந்தேகம் அடையும் அளவு இருந்தது ஆட்டம்.
அடுத்த நடனத்திற்கு போகும்முன் ஓய்வு கிடைக்க தமக்கை அருகில் வந்தவனை கட்டி அணைத்துக்கொண்டாள் பூங்குழலி. கூடவே தாய், தந்தை இதை பார்த்திருந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. இதுபோன்று சில நேரங்களில் அவன் ஆரவ்வின் உடன்பிறப்பு என்பதை மறந்துவிடுவாள் பின் காலையில் பேசியதை போல் அவன் செய்யும் செயல்களில் நியாபகம் வரும்.
இரண்டுங்கெட்டான் மனநிலையில் தவிப்பதை அவள் வெளிக்காண்பிக்கவே இல்லை. அடுத்த ஆட்டம் ஆரம்பித்ததும் ஆர்வத்துடன் கவனித்தவளின் மனம் சற்று நேரத்திற்கு எல்லாம் ஆர்வத்தை தொலைத்து விதிர்விதிர்த்து போனது கிட்டதட்ட அவன் வயதேயிருக்கும் பெண்ணுடன் நெருக்கமாக ஆடிக்கொண்டிருக்கும் வேந்தனைப் பார்த்து!