alaikadal-26.2

alaikadal-26.2

அலைகடல் – 26.2

மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை போல. கைதட்டி ஆடுபவர்களை உற்சாகப்படுத்த இவளால் அதில் ஒன்றவே முடியவில்லை. முள் மேல் அமர்ந்திருக்கும் உணர்வு.

அவளும்தான் என்ன செய்வாள்? வளர்ந்தது நடுத்தரவர்க்க தாயின் சிறகுகளுக்கடியில், அதுவும் ஏழு வருடங்கள் முன்பு. அதன்பின் வெளியுலக வாழ்க்கையை துண்டித்து ஒரு தவம் போல் வாழ்ந்து விட்டவளுக்கு மீண்டும் இங்கு வந்ததும் மாற்றங்கள் பிரமாண்டமாய்ப் பட்டதுதான் இருந்தாலும் நடனத்திற்காக அவளை தூக்கி சுற்றுவதோ இடுப்பை வளைப்பதோ சகஜமாய் ஏற்கும் அளவு மாற்றத்தை மனம் ஏற்கவில்லை. அதுவும் தாய் ஸ்தானத்தில் இருந்து பார்க்கையில் கலங்கிப்போனாள் பூங்குழலி.

ஆனால் வேந்தனையும் குற்றம் சொல்ல முடியாதே! அவன் விவரம் தெரிந்த வயதில் இருந்து மேல்தட்டு நாகரிகத்தையே பார்த்து வளர்ந்தவன். முக்கியமாக ஆரவ்வைப் பார்த்து வளர்ந்தவன். நடிப்பை எப்படி நடிப்பாக அவன் பார்ப்பானோ அதுபோலவே நடனத்தை நடனமாய்ப் பார்க்க வேந்தனுக்கு கற்றுக்கொடுத்திருந்தான். 

இரண்டுங்கெட்டான் இளவயது… கட்டுப்பாடு இல்லையென்றால் தடுமாறும் வாய்ப்பு அதிகமென்று அறியாதவனா ஆரவ். தன் செயல்கள் மூலமாகவே அவனிற்கு சரியென்று பட்டவரை ஒழுக்கமாகவே வளர்த்திருந்தான். 

அவன் தாய் எந்த தவறை வேண்டுமென்றாலும் மன்னிப்பார் ஒழுக்கம் தவறுதலைத் தவிர. “ஒருவனுக்கு ஒருத்தி” இது அடிக்கடி அவர் வாயிலிருந்து வரும் வார்த்தைகள். வலியோடு மகனுக்கு வாழ்க்கை என்றால் என்ன என்பதை வலியிறுத்தும் வாக்கியம். அதுவே இத்தனை வருட வாழ்வில் எந்த நியாயத்தை ஆரவ் செய்யத் தவறியிருந்தாலும் தாயிற்கு கொடுத்த வாக்குபடி ஒழுக்கம் மட்டும் எங்கும் தவறியதே இல்லை மனதாலும் கூட. முதல் முறையாக அவன் தவத்தைக் கலைத்தது பூங்குழலியே!

இது எதையும் தெரிந்துக்கொள்ளாமல் மௌனமாய் அமர்ந்து ஆட்டத்திலிருந்து கவனத்தை திருப்பிய பூங்குழலிக்கு ஒரு யோசனை தோன்ற, அங்கிருந்து நழுவி வெளியே நின்றிருந்த பாதுகாவலரின் கண்களில் படாமல் எங்கோ சென்று சிறிது நேரத்தில் எல்லாம் அதே இடத்தில் வந்தமர்ந்துவிட்டாள்.

அப்போதுதான் நடனம் முடிந்திருக்கும் போலும். “பூமா இந்த டான்ஸ் எப்படி இருந்துச்சு?” வியர்க்க விறுவிறுக்க முகமெல்லாம் பூரித்தவாறு வந்து நின்றவனிடம் இப்போதே கேள்வி கேட்டு நோகடிக்க விரும்பாமல் முதல் ஆட்டத்தையே கண்முன் கொண்டு வந்து பாராட்டினாள் இவள்.

அதன்பிறகு எல்லாம் முடிந்து வீடு வந்து சேர்ந்தாலும் பூங்குழலியின் சிந்தையெல்லாம் சிந்தனைகள். ‘இதை செய்யதான் வேண்டுமா? ஒருவேளை தான் எதிர்பார்ப்பது போல் எதுவும் கிடைக்கவில்லை என்றால்? அமுதனுக்கு தெரிந்தால்?’ இப்படி பல. அடுத்து செய்யவேண்டிய வேலைக்கான யோசனையே இது!

நினைத்ததை நடத்திவிடும் முடிவில் இருந்து பின்வாங்காமல் செய்ய வேண்டியதை செய்துமுடித்த திருப்தியில் இரவு உறங்காமல் காத்திருந்தாள் பூங்குழலி. எல்லாம் சரியாகப் போக, இரவு அறைக்குள் நுழைந்தவனிடம் தானாகவே பேச்சுக்கொடுத்தாள்.

“நாளைக்கு சட்டமன்ற கூட்டம்தானே?” தானாக பேச ஆரம்பித்தவளை கண்டு ஆச்சரியம் உண்டானாலும் ஆராய்ச்சியாகப் பார்த்தான் ஆரவ்.

அதை சலிக்காமல் தங்கியவளோ, “இல்ல… நாளைக்கும் நான் ஏதாவது செஞ்சி, உன்னால அதுல கலந்துக்க முடியாம போயிருச்சுன்னு வை… என்ன பண்ணுவ அமுதன்? அதான் மாற்று ஏற்பாடு ஏதாவது பண்ணிருக்கியா?” என்றாள் நக்கலாய். 

வேண்டுமென்றே வம்பிழுப்பவளிடம் உள்ளிருந்து பொங்கிய ஏதோ ஒன்று எகிற சொல்ல, காலையில் நடந்ததை நினைத்து, ‘பொறு மனமே பொறு’ என்றடக்கினான் அதை.

“நான் சொல்றதை சொல்லிட்டேன் முடிஞ்சா தடுத்துக்கோ… அப்புறம் நாளைக்கும் என்கிட்ட வந்து கத்தக்கூடாது” அவன் அமைதியை மதிக்காமல் மேலும் எச்சரித்தவளிடம்

“நாளைக்கு ஒருநாள் அமைதியா இரேன் பூங்குழலி” என்றான் பொறுமையாகவே. 

‘என்ன செய்யப்போகிறாள் என்று தெரியவில்லை. எதையோ முடிவெடுத்துவிட்டாள் என்று மட்டும் தெரிகிறது. சண்டையிட்டு அதை செய்ய தூண்டிவிடுவதைவிட இறங்கிப்போவது நல்லது என்றே தோன்றியது ஆரவ்விற்கு. அவள் என்ன யாரோவா? தன் மனைவி தானே’ என்றெண்ணினான் ஆரவ். 

‘காதலை அவள் உணர வேண்டும் என்றால் முதலில் அவன் காதலிப்பது தெரியவேண்டுமே! இன்றே… இதோ இப்பொழுதே கூறலாம்தான் ஆனால் அவளிடம் இருந்து தப்பிப்பதற்காகப் பொய் சொல்வதாகக்கூட எண்ணிவிடுவாள். இவளோட!  

நாளைய கூட்டம் முடிந்ததும் சிறிது நாட்கள் ஆபிஸ் செல்ல வேண்டியதுகூட இல்லை. அந்நாட்களில் வீட்டிலேயே இருக்கலாம் அல்லது எங்காவது ட்ரிப் போகலாம். அங்கு சென்று காதலைக் கூறலாம்’ என்று ஏதேதோ வண்ணக் கனவுகள் மனதினுள். ஆனால் அவன் நினைத்தால் மட்டும் போதுமா என்ன?

“ஹம்ம்… அது என் கையில் இல்லை அமுதன்” இரு கைகளையும் விரித்து காண்பித்தவள், “பார்ப்போம் நாளைக்கு என்ன நடக்குதுன்னு. குட் நைட்” அவனை முடிந்த மட்டும் சீண்டும் மனநிலையில் இருக்க, அவள் அவனிடம் சகஜமாக பேசியதை உணரவேயில்லை. 

ஆனால் அதை உணர்ந்த ஆரவ்வோ அவள் கூறிய செய்தியால் மகிழ முடியாமல், ‘என்ன செய்கிறாள் என்று பார்த்திருவோம்’ என்று கொட்ட கொட்ட முழித்திருக்க நள்ளிரவில் தாகமெடுத்து ஜக்கில் இருந்த தண்ணீரைப் பருகி படுத்ததுதான் தெரியும் அடுத்த அரைமணியில் ஆழ்ந்த உறக்கத்தை தழுவியிருந்தான் அதிலிருந்த தூக்க மாத்திரையின் உபயத்தில்!

சீராக ஏறி இறங்கிய மார்பு அவனின் ஆழ்ந்த உறக்கத்தினை பறைசாற்ற, அத்தனை நேரம் செய்துக்கொண்டிருந்த பாசாங்கான தூக்கத்தை விடுத்து கண்விழித்தாள் பூங்குழலி. 

இரவு விளக்கின் ஒளியில் மெதுவே எழுந்து அவன் புறம் சென்று செல்பேசியை எடுத்தவள் மெதுவாக அவன் கட்டை விரலை பிடித்து அதன்மேல் அழுத்த படக்கென்று திறந்து உள்நுழைய வழிவிட்டது அது.

அதுவரை எங்கே எழுந்துவிடுவானோ என்று உள்ளுக்குள் பதறியது அவளுக்குதான் தெரியும். எதற்கும் இருக்கட்டும் என்று அருகில் நெருங்கி அவன் முகத்தின் நேர் மேலே கையை அசைத்து சோதித்து பார்க்க, வேறொருத்தி என்றால் இருட்டில் கூட வசீகரிக்கும் அந்த ஆண்மையின் முகத்தில் மயங்கியிருப்பாள். பூங்குழலிக்கு அந்த மாதிரி மயங்கும் எண்ணம் இல்லைபோலும்.

நகர்ந்து சென்று சோபாவில் அமர்ந்து தன் ஃபேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த இன்று வாங்கிய புதிய செல்பேசியை எடுத்தாள்.

ஆம். இதை வாங்குவதற்குதான் அவள் வெளியே சென்றது. தன் செல்பேசியை வேவு பார்ப்பதாக கூறியது உள்ளுணர்வு. அது உண்மையும் கூட. 

தூக்க மாத்திரை அவள் உணர்ச்சிவசப்பட்டு மயங்கிய பின் இரவில் உறக்கம் வரவில்லை என்றால் மட்டும் பயன்படுத்தும்படி கூறி மருத்துவர் கொடுத்தது. அதில் பயன்படுத்தாமல் விட்டிருந்த இரண்டைதான் தண்ணீரில் கலந்திருந்தாள்.

தாகமெடுத்தால் அவன் இடையில் முழித்து தண்ணீர் அருந்துவதை இந்த மூன்று நாளாக அவனை கவனித்துக் கொண்டிருந்ததால் தெரியும். ஆனால் அவன் இன்று தண்ணீர் அருந்தாமல் போனால் திட்டம் தோல்விதானே? அதை எண்ணியே அது தன் கையில் இல்லை என்று ஆரவ்விடம் கூறினாள்.

நள்ளிரவு இரண்டை தாண்டி ஓடிக்கொண்டிருந்தது நேரம். செல்பேசியில் எதை திறந்தாலும் அது அவனின் கைரேகை கேட்க, அதனால் விளைந்த கடுப்பில் பேசாமல் அவன் விரலை வெட்டி வைத்துக்கொள்வோமா என்ற எண்ணம்தான். பின்னே எத்தனை முறை அவன் கையைப்பிடித்து அமுக்குவதாம்!

இருந்தும் வேறு வழியில்லாததால் அவனின் கையை தனக்கு சவுகாரியமாக இருக்கும் போசிஷனில் அவன் உறக்கம் கலையாமல் வைத்து அருகில் அமர்ந்தவாறு செல்பேசியை மென்மையாய் விரலில் அழுத்தி அழுத்தியே முழுதாக ஆராய்ந்தாள்.

அதில் ட்ரம்ப்கார்ட் என்று பெயரிட்டு இருந்த போல்டர் கண்ணோடு கருத்தையும் கவர உள்ளே சென்று பார்த்தவள் மூச்சுவிட மறந்தாள்.

கிட்டதட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போல்டர்கள்  நிரம்பியிருக்க ஒவ்வொன்றும் ஒவ்வொருவரின் பெயரோடு அவர்கள் ஜாதகமும் செய்த தவறுகளும் பதிவாகியிருந்தது.

அத்தனையும் ஏற்ற தன் செல்பேசியில் இடம் இருக்காதென்பதால் தேவையானவர்களான அர்ஜுன் மற்றும் அருள்ஜோதி வரிசைப்படி மேலேயே இருக்க எடுத்துக்கொண்டாள். கூடவே அந்த போல்டரின் பெயருக்கான அர்த்தம் புரிந்தது. துருப்புச்சீட்டு… எதிரிகளின் மொத்த துருப்புச்சீட்டு. பெரிய எமகாதகன் இவன் என்றெண்ணிக்கொண்டாள். பாராட்டா? திட்டா? அது அவளுக்கே வெளிச்சம்.

தனக்கும் ஏதாவது வைத்திருக்கிறானா என்று தேட அப்படி எதுவும் வரவில்லை. ஆனால் அன்று இவளுக்கு காண்பித்த பூவேந்தனின் ஜாதகம் இருந்தது. அழித்துவிடுவோமா என்று கை துறுதுறுக்க, ‘இதை அழித்துவிட்டால் மட்டும் அவன் உன் தம்பி ஆகிவிடுவானா? இது சாப்ட் காபி… இதோட ஹார்ட் காபி எங்கே வைத்திருக்கிறானோ?’ என்கையில் பளிச்சென்று நினைவு வந்தது அந்த திறக்க முடியாத அலமாரி.

ஆனால் இதற்கே காலை ஐந்து மணி ஆகியிருக்க, செல்பேசியின் கடைசிகட்ட சோதனையில் சிக்கியது தனியாக இவள் பெயர் பதித்த போல்டர். அது ட்ரம்ப்கார்டில் இல்லாமல் தனியாக இருந்ததால் இப்போதுதான் கண்ணில் சிக்கியது. அவசரமாய் அதையும் தன் செல்பேசிக்கு மாற்றியவள் அவன் வைத்திருந்த ஐந்தரை மணி அலாரத்தைக் கண்டு அதை சைலண்டில் போட்டாள். 

பின் அலமாரிகான ரிமோட்டை மும்முரமாய் மீண்டும் ஒருமுறை தேட ஆரம்பித்தாள். பதட்டமாக அவன் முழித்துவிடும் முன் கிடைக்க வேண்டுமே என்று தேடியதில் வியர்வை பயங்கரமாய் வெளியேறியிருக்க, நேரம் கடந்ததுதான் மிச்சம்.

ஆறு மணி தாண்டியும் கிடைக்காமல் போக, அலமாரியை நெருங்கி ஏமாற்றத்தோடு அதை முறைத்துப் பார்த்தவளின் விழிகள் விரிந்தது. கைப்பிடியில் சிறிதாக இருந்த ஒரு டிசைன் அவளின் மூளையை அடைந்து இதை எங்கோ பார்த்திருக்கிறேன் என்று நினைவுபடுத்த, சுறுசுறுப்பாய் ஆர்வ்வின் அலைபேசியை எடுத்து அவனின் கட்டை விரலில் அழுத்தி தான் கைப்பிடியில் பார்த்த டிசைன் உள்ள செயலியைத் திறந்தாள்.

இடையிடையே கண்கள் வேறு அடிக்கடி ஆரவ்வை கண்காணித்துக் கொண்டிருந்தது. அவள் நினைத்தது சரிதான். அலமாரிக்கான பட்டன் திரையில் தெரிய, ஓபன் என்றிருந்ததை அழுத்தி அவள் நிமிர்ந்து பார்க்கவும் கதவு விலகி எதிர்புற சுவரில் சென்று ஒளியவும் சரியாக இருந்தது.

நாலடுக்கு அலமாரி. தூய்மையோடு வாசமாகவும் அழகாகவும் அடுக்கியிருக்க முதல் அலமாரி முழுதும் புகைப்படங்கள், அடுத்து பத்திரங்கள், கீழே பேப்பர்கள், டைரிகள் மற்றும் கடைசியில் நான்கு பழைய சேலைகள் அவ்வளவுதான். அநேகமாய் அது அவன் தாயுடையதாக இருக்கும்.

புகைப்படங்களை நோக்கி தானாக உயர்ந்தது கைகள். முதல் படத்தில் தாயின் தோளை ஆதரவாய் அணைத்து புன்னகையுடன் போஸ் கொடுத்துக்கொண்டிருந்தான் ஆரவ். என்ன இருபதுகளின் தொடக்கத்தில் இருப்பானா என்று அவன் உருவத்தை எடைபோட்டது பூங்குழலியின் மூளை. 

கூடவே அதே புன்னகையுடன் கண்களில் அமைதியும் தீட்சண்யமும் கலந்து, இவன் என் மகன் என்ற பெருமையை தாங்கி, சற்று வயதான தோற்றத்தில் இருந்தாலும் கலையாய் இருந்தார் அவர். 

அடுத்தடுத்த சிறுவயது புகைப்படங்கள் அனைத்திலும் தாயும் மகனும்தான். பலவற்றில் ஓரங்கள் கிழித்தெறியப்பட்டிருந்தது. அது அருள்ஜோதியாக இருக்குமென்று ஊகிக்க பிரமாத மூளை தேவையில்லைதானே.

நேரம் ஏழு மணியை நெருங்க இதற்குமேல் எங்கே மற்றவற்றை பார்ப்பது? பார்க்காமல் விடவும் மனமில்லாததால் ஓடிச்சென்று தன் அலமாரியில் உள்ள பெட்டியை எடுத்து அங்கிருந்தவற்றை அள்ளிப் போட ஆரம்பித்தாள்.

எப்படியும் தான் இருக்கும் வரை இதை திறக்க மாட்டான், தானும் பூவேந்தனும் சென்ற பிறகு திறந்து பார்த்தாலும் என்ன செய்துவிட முடியும்? அந்த தைரியம்தான்.

தேவையானவற்றை அடுக்கி நிறைந்து போன பெட்டியை தன் அலமாரியில் தள்ளி பூட்டியவள் செல்பேசியில் அலமாரியை மூடும் கிளோஸ் பட்டனை தட்டி, சைலண்ட்டை மாற்றி வைத்து எடுத்த இடத்திலே வைத்துவிட்டாள்.

பின் தன் செல்பேசியையும் ஒளித்துவைத்து ஹப்பாடா என்ற உணர்வில் படுக்கையில் விழுந்தவளுக்கு சிறிதும் உறக்கமில்லாததால் கண்கள் தீயாய் எரிந்தது.

மூடினால் எரிச்சலில் கண்ணீர் உற்பத்தியாக முகத்தில் குளிர்ந்த நீர் அடித்தால் நன்றாக இருக்கும் என்றிருந்தாலும் செய்திருந்த வீரதீர (?) செயல்களால் உடம்பின் ஒவ்வொரு அணுவும் சோர்ந்து போய் உறக்கத்திற்கு கெஞ்ச, அவள் உறங்க ஆரம்பிக்கையில் நேரம் காலை ஏழு முப்பது!

அதன் பிறகு கடிகாரம் சடசடவென்று சுற்றியதோ ஆரவ்வின் அலைபேசி விடாமல் அழைத்ததோ இவர்கள் உறக்கத்தை கலைக்கவில்லை.

அழைத்து அழைத்து நொந்துபோன வினோத் பூவேந்தனிடம் விசாரிக்க, “இன்னும் அண்ணா எழுந்துக்கவே இல்லை” என்றதில் அதிர்ந்துதான் போனான். நிலைமையை கூறி அவசரமாய் அனுப்பி வைக்கக் கூறினான் வினோத். வேந்தனும் அதன்படி அறை வாசலில் இருந்து முதலில் விட்டு விட்டு தட்ட, கதவைத் திறக்கவில்லை என்றதும் விடாமல் இருவரையும் அழைத்தவாறு தட்ட ஆரம்பித்தான். அதற்கே பத்து நிமிடம் சென்றிருந்தது.

அதில் உறக்கம் கலைந்த பூங்குழலி தலைவலியோடு எழுந்தாள் என்றால் ஆரவ்விற்கோ கண்களில் இன்னமும் டன்டன்னாய் தூக்கம் மிச்சமிருக்க, கண்ணை சிமிட்டுவதற்காக மூடினால் கூட அப்படியொரு தூக்கம் சொக்கியது.

அவனைப் பார்த்தவாறு எழுந்து சென்று கதவைத் திறந்த பூங்குழலியிடம், “பூமா… அண்ணா எங்கே?” என்றான் பதட்டமாய்.

மௌனமாய் வழிவிட, உள்ளே வந்தவன் கண்டது படுக்கையில் அமர்ந்து கண்களின் மேல் பகுதியை புருவத்திற்கு ஏற்றியபடி குனிந்திருந்த ஆரவ்தான்.

“அண்ணா… என்னண்ணா இன்னைக்கு இம்பார்டன்ட் மீட்டிங் வச்சிட்டு இன்னும் கிளம்பாம இருக்கீங்க? வினோத் அண்ணா கால் பண்ணி சீக்கிரம் வர சொன்னாங்க… இப்போ கிளம்புனாலே அரைமணி நேரம் லேட் ஆகிரும்” என்றவாறு அவனை இழுத்து பாத்ரூம் தள்ளி தமக்கையிடமும் சிறிது பேசிவிட்டு வெளியேற, வேந்தன் சொன்னதை மூளையில் கிரகித்து, விரைவாய் முகத்தில் நீரை அடித்து தூக்கத்தை விரட்டினான் ஆரவ். 

இப்போது கொஞ்சம் தெளிவாய் சிந்திக்க முடிய, மனைவி சொன்னபடி செய்துவிட்டாள் என்று புரிந்தது.

குளியலறை கண்ணாடியில் முகம் பார்த்துக்கொண்டிருந்தவன், “ச்சை…” என்று அதிலேயே தன் முகத்தை குத்தினான். 

தன் மீதே கடுங்கோபம் உண்டாக அதற்கு காரணமானவளைத் தேடி வெளிவந்தவன், சோபாவில் அமர்ந்திருந்தவளை தூக்கி தரையில் நிற்கவைத்து தோளைப் பற்றி உலுக்கினான்.

“என்ன பண்ணி தொலைச்சிருக்க? அவ்ளோ சொல்லியும் கேட்காம சொன்னமாதிரி பண்ணிட்டல்ல? பைன்… கெட் ரெடி. இந்த ஆரவ்வோட இன்னொரு முகத்தை பார்க்க ரெடியா இரு” ஆவேசமாய் அவன் கர்ஜித்து முடித்த அடுத்த நொடி படாரென்று ஏதோ வெடித்து சிதறும் சத்தம் கேட்க, அதனால் உருவான பெரும் புகைமூட்டத்தினுள் மூழ்கத்தொடங்கியது ஆரவ்வின் குட்டி பங்களா.

இரண்டு மணி நேரங்கள் கடந்து…

ஹாலில் அதிதீவிர சிந்தனையுடன் அமர்ந்திருந்த ஆரவ்வையும் அவனுக்கு சளைக்காமல் அமைதியாய் யோசித்துக்கொண்டிருந்த பூங்குழலியையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தான் பூவேந்தன்.

வீட்டின் முன்னால் பெரும் கலவரமாய் இருக்க, உள்ளே நுழைந்து சல்யூட் அடித்த இன்ஸ்பெக்டரை ஒரு தலையசைப்பில் அங்கீகரித்து அவரை கேள்வியாய் நோக்கினான் ஆரவ்.

அவரோ, “உங்க கார்ல பாம் வைக்க சொன்னது உங்க மனைவி மிசஸ் பூங்குழலிதான்னு சொல்லி ரிப்பேர் பண்ணுன மெக்கானிக்கும் உங்க கார்ட்ஸ் ஒருத்தரும் சரண்டர் ஆகிருக்காங்க சார். அதுக்காக விசாரிக்க உங்க மனைவியை ஸ்டேஷன் கூப்பிட்டுப் போக வந்திருக்கேன்” என்றார் அமைதியாய்.

அவர் கூறியதில் யாருக்கு அதீத அதிர்ச்சி என்று ஊகிக்க முடியாதபடி மூவரும் அதிர, உயர் அழுத்த மின்சாரம் தாக்கிய உணர்வில் ஸ்தம்பித்து எழுந்தான் ஆரவ்.

அலைகடல் ஆர்ப்பரிக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!