வாணிக்கு ரங்கனின் எதிர்பாராத செயலால் உண்டான அதிர்ச்சி ஒருபுறம், தன் நிலையை எண்ணி கழிவிரக்கம் மறுபுறம்.
கண்ணீர் வற்றாமல் வழிந்தபடி இருந்தது, கோடையில் வற்றிய ஊற்றிலிருந்து வழியும் நீரைப்போல காட்சியளித்தது.
வீட்டிற்குள்ளேயே நடந்தபடியே நீண்ட நேரம் யோசித்தபடி இருந்தாள்.
வெளியில் செல்ல ஏதேனும் வழி இருக்கிறதா என்று பார்த்தாள். அனைத்து வழிகளிலும் வெளியில் பூட்டியிருந்தனர்.
மனதே சரியில்லை எழிலுக்கு.
‘மாறன் அத்தான் சரியான லூசு! இவங்க பண்றதுக்கு இப்ப நான் மாட்டிட்டு முழிக்க வேண்டியதா இருக்கு! எந்த நியாமும் இல்லாம இந்த மாமா வேற இப்டி இக்கட்டுல மாட்டி வைப்பாருனு தெரிஞ்சிருந்தா கல்யாணத்துக்கு வராமலேயே இருந்திருப்பேன்!’, என சிந்தனைகள் பல முட்டி மோதி மேலும் சிரமத்திற்குள்ளாக்கியது.
மதிய உணவு வந்தது. உண்ணப் பிடிக்காமல் தவிர்த்திருந்தாள்.
நீண்ட நேரம் மனம் பதற்றத்தில் இருந்தது.
அங்கிருந்த நீரை எடுத்துப் பருகிவிட்டு யோசித்தாள்.
அவளது அமைதியில் சந்தேகமுற்று அவ்வப்போது வந்து சாளரம் வழியே அவளை வெளியில் இருந்தவர்கள் வந்து எட்டிப் பார்த்தனர்.
சந்தேகம் வரும்படி எதுவும் இல்லாததால் சென்றிருந்தனர்.
நீண்ட நேரம் கழித்தே தனது கையில் உள்ள புதிய மொபைலின் நினைவு வாணிக்கு வந்தது.
புதியதை வாங்கியது முதல், பழைய போனை பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தி வந்தாள்.
அதனால் யாருடைய அலைபேசி எண்களும் தெரியவில்லை.
புதியதில் வாட்சப், மற்றும் நுண்கலை பயிற்சிக்கு தேவையான ஆப்கள் மட்டுமே இருந்தது.
மாலை துவங்கிய வேளையில் சாளரம் வழியே வெயில் அறைக்குள் விழ, அதை சாக்கிட்டு கதவை அடைத்தாள். கேட்டவர்களிடம் வெயில் உள்ளே வருவதையே காரணமாக்கிவிட்டு மொபைலை சைலண்ட் மோடில் வைத்தபடி டேட்டாவை ஆன் செய்து காத்திருந்தாள். நிறைய செய்திகள் வாணியின் பார்வைக்காக காத்திருந்தது.
வேந்தன் முந்தைய தினம் இரவு தனக்கு அனுப்பிய செய்தியும் இருந்தது.
உடனே அதை எடுத்துப் பார்த்தாள்.
சாதாரண விசாரிப்புகள். எப்போது சென்னை திரும்புவாய் என கேள்வி எழுப்பியிருந்தான்.
வேந்தன் தற்போது சென்னையில் இருந்தாலாவது எதாவது உதவி கேட்கலாம். அவனும் தற்போது ஊரில் இல்லை என்பது நினைவில் வர மேலும் சோர்ந்தாள்.
இந்துவிற்கு வாட்சப் கால் செய்தாள்.
அவள் ஆன்லைனில் இல்லாததால் அழைப்பு ஏற்கப்படவில்லை.
எடுத்தாலும் அவளால் தனக்கு எவ்வாறு உதவ முடியும் என மனம் சுணங்கிப் போனாள் வாணி.
அதுவரை மௌனமாக இருந்தது சற்றே மனக்குழப்பத்தை தணித்திருந்தது. மனக்கஷ்டம் அப்படியேதான் இருந்தது. தைரியத்தை மட்டும் இழந்துவிடக்கூடாது என தனக்குத்தானே தைரியம் சொல்லிக் கொண்டவள் உண்ணாத அசதியின் காரணமாக அங்கிருந்த ஒற்றைக் கட்டிலில் சென்று படுத்தாள்.
கல்லூரித் தோழிகள், அவர்களால் பெரியளவு உதவிகள் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் கம்மி என ஒதுக்கினாள்.
சத்தியேந்திரன், ரங்கனுக்கு நண்பன். அவரால் தனக்கு சாதகமாக விசயங்கள் நடக்க வாய்ப்புகள் குறைவு. அதனால் அவரையும் ஒதுக்கினாள்.
வேந்தனது எண்ணைப் பார்த்ததும், அவனைக் கண்டது முதல் தற்போது வரையிலான நிகழ்வுகளை யோசித்தாள். அவனைத் தவிர வேறு யாரும் நெருக்கமாக உணர இயலாத மனநிலை. அத்தோடு தனக்காக என்றால் உதவி செய்யக்கூடும் என உள்ளுணர்வு கூற, அவனிடமே உதவி கோரலாம் என்கிற முடிவுக்கு வந்தாள்.
துணிந்து மிகக் மெல்லிய குரலில் தன்னை இக்கட்டிலிருந்து காப்பாற்றும்படி வாய்ஸ் மெசேஜ் ஒன்றை வேந்தனுக்கு அனுப்பினாள்.
அதுமுதலே வேந்தன் எப்போது பார்ப்பான் என மொபைலைப் பார்ப்பதும், அதை ஒளித்து வைப்பதுமாய் நேரம் சென்றது.
இந்துவிடம் இருந்து அழைப்பு வர, “இன்னிக்கு வர முடியலைக்கா. இங்க கொஞ்சம் பிரச்சனை. நான் அப்புறம் பேசறேன்”, என வைத்திருந்தாள்.
இந்துவிடம் சொல்லலாம். ஆனால் அதனால் விசயம் தெரிய வருமே அன்றி, அவளால் உதவ இயலாது. இந்து தானுண்டு, தன் வேலையுண்டு என இருக்கும் ரகம். ஆகையினால் விசயத்தைக் கூறாமல், அவசியமெனில் நேரில் சொல்லிக் கொள்ளலாம் என மறைத்துவிட்டாள்.
இரவு வேலை துவங்கியிருந்தது.
ஏழரை மணிபோல இரவு உணவு வர அதையும் உட்கொள்ளாமல் வைத்துவிட்டு பதற்றத்தோடு வேந்தனது பதிலுக்காக காத்திருந்தாள் வாணி.
வேந்தனிடமிருந்து மெசேஜ் வந்திட, உடனே பதிலளிக்கத் துவங்கினாள் வாணி.
வேந்தன் நிச்சயமாக இப்படி ஒரு விசயத்தை எதிர்பார்த்திருக்கவில்லை.
நிதானமாக கேட்டறிந்து கொண்டான்.
“வாணி, தைரியமா இரு. உன்னை எப்டி ஒரு சூழல் வந்தாலும், அதிலிருந்து மீட்டு, நீ விரும்பின மாதிரி மாத்த வேண்டியது என்னோட பொறுப்பு. எம்மேல நம்பிக்கை இருக்குல்ல!”, என்ற வேந்தனது வார்த்தையில் இழந்த ஜீவனை மீண்டும் பெற்றாள் வாணி.
தட்டச்சு செய்து அனுப்ப தாமதமானதால் வாய்ஸ் மெசேஜ் அனுப்பத் தீர்மானித்தாள்.
விசயம் என்னவென்று கூறுவதற்குள் பெண்ணது பேச்சு சத்தத்தில் இரண்டு முறை வீட்டைத் திறந்து வந்து நேரில் பார்த்ததோடு அறைக்குள் வந்தும் சந்தேகமாக நோட்டமிட்டனர்.
கதவைத் திறக்கும்போது எழுந்த சத்தத்தில் லாங்க் வாலட்டிற்குள் மொபைலை வைத்து அதை மறைத்து வைப்பது வாணிக்கு எளிதாகவே இருந்தது.
கிராமம், வீட்டு முகவரி, ரங்கன் மாமாவைப் பற்றி, மாறனது செயலால் எழுந்த திடீர் திருமணம், மாமனோடு பேச்சு வார்த்தை நடத்தியும் தோல்வியைத் தழுவியது, தோட்ட வீட்டில் சிறை இருப்பது என வாணியைப் பற்றிய அனைத்தையும் வேந்தன் கேட்டு அறிந்து கொண்டான்.
“அதைப்பத்தி வர்ரி பண்ணாத வாணி. உனக்குப் பிடிக்காத எதுவும் நடக்காம பாத்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு. பழையபடி உன்னோட எஜுகேசன் கண்ட்டினியூ பண்ண என்ன செய்யணுமோ கண்டிப்பா செய்வேன்”, என நம்பிக்கை வார்த்தைகள் கூறினான் வேந்தன்.
தனது அலைபேசியின் சார்ஜ் நிலவரத்தையும் பெண் கூறிட, எதாவது விசயங்கள் வேண்டுமெனில் என்ன செய்வது என யோசித்து, இடையில் யாருக்கோ நீண்ட நேரம் அழைத்துப் பேசிவிட்டு, மீண்டும் வாணியை அழைத்து சில விசயங்களை கேட்டறிந்து கொண்டான்.
இறுதியாக, “மாமூ… ப்ளீஸ் சேவ் மீ”, என அடித்து அதனருகே அழும் இமோஜிகளைப் போட்டு வாணி செய்தியை அனுப்பியதும், வேந்தன் மிகவும் பதறிப் போனான்.
ஆறுதல் கூறும் வார்த்தைகளோடு, தைரியமூட்டும் வகையில் வேந்தன் பேசிய வாய்ஸ் மெசேஜைக் கேட்டதும் சற்றே தெம்பாக உணர்ந்தாள்.
மாமூ எனும் பெண்ணது அழைப்பிலேயே அவளது நிலை வேந்தனுக்கு புரிந்தது.
வேந்தன் கேட்ட அனைத்து விசயங்களையும் கூறிவிட்டு அமர்ந்தவளுக்கு சற்று நம்பிக்கை வந்தது.
இரவு பதினோரு மணிக்கு சார்ஜ் முடியும் நிலையில் மொபைல் இருந்தது.
அத்தோடு உண்ணாத அசதி வேறு, அதனால் படுத்துவிட்டாள். இரவு முழுவதும் அசதியிருந்தும் ஆழ்ந்த உறக்கமில்லை.
படுத்துக் கிடந்தவளுக்கு ஏதேதோ நினைவுகள். அது கனவா, இல்லை நனவா என்றே பிரித்து இனம் காண முடியாதளவிற்கு வாணிக்குள் குழப்பங்கள்.
அதில் தான் கையில் புத்தகங்களோடு கல்லூரிக்குச் செல்வதுபோலவும், அதே சமயத்தில் வேந்தனைப் போன்றதொரு நபரையும் காண்பதுபோலவும் இருந்தது.
ஆனால் கனவில் கண்ட வேந்தன் தற்போது போலில்லை.
மாறுபட்ட உடை அமைப்பு, சிகை அமைப்பு மட்டும் தற்போது போலிருக்க இளம்பருவ வயதினன்போல இருந்தான்.
தன் பின்னோடு அவன் வருவதைப்போல காட்சிகள் வந்தது.
வகுப்பறைக் காட்சிகள். நடப்பது. தொடர்ச்சியாக இதுபோன்ற நிகழ்வுகள் மட்டுமே.
ஆனால் அந்த இடங்களுக்குச் சென்று வந்த பரிச்சயம் வாணிக்கு இல்லாமல் இருந்தது.
ஆனாலும் கண்டது கனவா! என்ன! ஏது! என்று, ஒன்றும் புரியவில்லை வாணிக்கு.
விடியலில் பெண்ணை அழைத்துச் செல்ல இரண்டு பெண்மணிகள் அங்கு வந்தனர்.
கனவையே நினைத்தபடி அவர்களோடு கிளம்பினாள் வாணி. வேந்தனோடு முந்தைய தினம் பேசியதால் எழுந்த கனவு என அவளையே சமாதானம் செய்து கொண்டாலும், அதை நினைக்க, நினைக்க மனதிற்குள் பல கேள்விகள் முரண்டியது.
தனக்கு ஏதேனும் நேர்ந்து விட்டதா? அல்லது புத்தி பிசகோ? எதுவும் விளங்கவில்லை.
கனவுக் குழப்பத்தில், லாங்க் வாலட்டை அங்கேயே மறந்து விட்டிருந்தாள்.
வீட்டிற்கு அழைத்துச் சென்று குளிக்கச் செய்து வாணிக்கு அலங்காரம் செய்தனர்.
புடவையைக் கட்டி அமர வைத்திருக்க, மயக்கம் வரும்போல இருந்தது வாணிக்கு.
நடக்கும் நிகழ்வுகள் சில ஏற்கனவே தான் நேரில் பார்த்திருந்த உணர்வு வந்தது.
தனக்கு எதுவும் நேர்ந்துவிட்டதோ, அல்லது இனி நேரப் போகிறதோ என்கிற பதற்றம் காரணமாக மூச்சடைப்பதுபோல உணர்ந்தாள்.
அதாவது, திருமணத்திற்கான அலங்காரங்கள், புடவை கட்டுவது, பெண்ணை அதட்டுவது போன்றவற்றை அவ்வாறு உணர்ந்தாள்.
மாப்பிள்ளையைப் பற்றிப் பேசிக் கொண்டதும் காதில் விழுந்தது.
“எப்படி ராஜகுமாரி மாதிரி புள்ளைக்கு இப்படி மாப்பிள்ளை பாத்திருக்காங்க!”
“கிளியப் புடிச்சு குரங்கு கைலயா குடுக்கணும். இன்னும் பொறுத்து நல்லா மாப்பிள்ளையா பாத்திருக்கலாம்”
“அவ ஆத்தாவுக்கு வந்த விதியே, இவளுக்கும் போட்டுருக்கான் அந்த ஆண்டவன்”, ஒரு கிழவியின் அங்கலாய்ப்பான குரல்
“அவளுக்கும் இதே வயசுதான் அப்ப இருக்கும். ஆம்பிளைங்க ராஜ்ஜியம்தான் எப்போவும். பொம்பிளைக பேச்ச அப்பவும் யாருங் கேக்கலை. இப்பவும் கேக்கலை. ஆனா அந்த பகவதி தாயிதான் இந்தப் புள்ளையக் காவந்து பண்ணணும்!”
“அவ வாழாத வாழ்க்கையெல்லாம் இவ வாழுவான்னு பாத்தா, இவளுக்கும் அதே கதியா?”, என பொறுக்க இயலாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக நின்றபடியே தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
“யாரோ பண்ண தப்புக்கு இந்தப் புள்ளைக்கு இப்டி ஒரு தண்டனையா? இவ அத்தக்காரிக்கு மனசாட்சியே இல்லைங்கறது எல்லாத்துக்கும் தெரிஞ்சதுதான். ஆனா இவ்வளவு நாள் நல்லா பாத்துக்கிட்ட அவ மாமனுக்கு இப்டி திடீர்னு கிறுக்குப் புடிக்கும்னு யாரு கண்டா?”
“ஆமாவாம்! அவன் முதத்தாரம் பிரசவத்துல செத்துப் போச்சாம்!”
“என்னங்கடீ சொல்றீங்க?”, என ஆச்சர்யமான கேள்விகள்
“அவனப் பாத்தா அரைக் கிழவனாவுள்ள இருக்கான். இவ மாமன் வயசு இருக்கும்போலயே!”, என பேச்சுகள் கேட்டவண்ணம் இருக்க, வாணியின் தைரியம் சற்றே குறையத் துவங்கியது.
ரங்கனைப் பொறுத்தவரை தனது குடும்பத்தைக் காப்பது மட்டுமே தலையாய கடமையாகத் தோன்றியிருக்க, வாணிக்கு பார்த்த மாப்பிள்ளையை விசாரிக்கத் தோன்றாமல் திருமணத்திற்கான பரபரப்பில் இருந்தார்.
திருமாறன் மட்டும், “எப்டிப்பா? உங்களுக்கு இப்டி ஒரு மாப்பிள்ளைக்கு நம்ம எழிலைக் குடுக்க மனசு வந்துச்சு. பாவம்பா அது. சின்னப் பொண்ணுக்கு இப்ப கல்யாணத்துக்கு என்ன அவசரம்?”, என்றதைக் கூட
“ப்ச்சு… எல்லாம் எனக்குத் தெரியும்டா, போயி வேலையப் பாரு”, என்றிருந்தார் ரங்கன்.
மாறனின் மனைவி வீட்டாரும் அங்கிருக்க, அதற்குமேல் தங்களுக்குள் எதாவது கருத்து வேறுபாடு இருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டாம் என மகன்களை சுகுணாவும் அடக்கியிருந்தார்.
வேந்தனை மலைபோல மனம் இன்னும் நம்பியிருந்தாலும், உணவு உண்ணாததால் எழுந்த உடல் சோர்வு ஒரு புறம், நடந்த நிகழ்வுகள், கனவு, உள்ளுணர்வு, சுற்றிலும் கேட்ட பேச்சுகள் அனைத்தும் சேர்ந்து அமர்ந்த இடத்திலேயே மயங்கியிருந்தாள் வாணி.
சற்று நேரத்தில் முகத்தில் தண்ணீர் தெளித்து, கையில் தண்ணீரைத் தந்து வலுக்கட்டாயமாக குடிக்கச் செய்தனர். பத்து நிமிடங்கழித்து காஃபீ ஒன்றையும் குடிக்கச் செய்தனர்.
“தெம்பு வேணாமா! ஒழுங்கா மிச்சம் வைக்காம குடி!”
//////////////////
வீட்டு முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்திருந்தனர்.
ஐயர் மந்திரம் கூற, “மந்திரமெல்லாம் தாலியக் கட்டிட்டு மெதுவாச் சொல்லிக்கலாம். பொண்ணை வரச்சொல்லி முதல்ல தாலியக் கட்டச் சொல்லுங்க”, என ஒருவர் அவசரப்படுத்த
ஐயர் கோபமுற்று, “உண்மையிலேயே இது கல்யாணம்தான! இல்லை எதுவும் தப்பா பண்றேளா?”, என சந்தேகமாக வினவியதும்
சுற்றிலும் இருந்தவர்கள் மற்றவர்களை அமைதியாக இருக்கும்படி கூற, பெண்ணை அழைத்து வந்து அமரச் செய்தனர்.
வாணிக்கு அத்தனையையும் தான் முன்பே பார்த்ததுபோலத் தோன்ற, ‘இது என்னடா வேதனை!’, என கண்ணில் நீர் விட, வாணியின் கண்ணீரைக் கண்டு சந்தேகமுற்ற ஐயர், “என்ன இது. பொண்ணு எதுக்காக அழறது?”
“அது ஒரே புகையா இருக்குல்ல சாமி. அதான். நீங்க சீக்கிரமா அதை எல்லாம் முடிச்சு தாலியக் கட்டச் சொன்னா பொண்ணு கண்ணுல தண்ணி நின்னுரும்”, என சாமார்த்தியமாக பதில் வர
ஐயருக்கு மனதில் நெருடல். சுற்றிலும் பார்த்தபடியே மந்திரத்தை செபித்தாலும், ‘இறைவா! இது உண்மையில நல்ல ஒரு விசயத்துக்காகனு மந்திரம் சொல்லி தாலி எடுத்துக் குடுக்க வந்திருக்கேன். பொண்ணு அழறதைப் பாத்தா மனசுல என்னவோ தப்புன்னு தோண்றது. இதுல தப்பா எதாவது இருந்தா நீயே பாத்து அவளைக் காபந்து பண்ணிரு ஈஸ்வரா!’, என்கிற வேண்டுதலை மனதோடு வைத்தபடியே நேரத்தைக் கடத்த
மற்றவர்கள் தாலியைக் கட்ட வற்புறுத்த, மனதில்லாமல் மாப்பிள்ளையின் கையில் ஐயர் தாலியைத் தரவும், அதேநேரம் வெளியில் ஏதோ சலசலப்பு, சத்தம் வரவே அங்கிருந்தவர்கள் திரும்பி நோக்க, மாப்பிள்ளையின் கையில் தாலியைக் கண்ட அதிர்ச்சியில் வாணியும் அதேநேரம் அமர்ந்தபடியே மயங்கிச் சரிந்தாள்.
கையில் தாலியோடு மயங்கியவளின் கழுத்தில் கட்ட எத்தனித்த மாப்பிள்ளையை சட்டையைப் பிடித்து, அங்கிருந்து யாரோ இழுக்க காட்சிகள் அத்தனையும் நொடியில் மாறிப் போயிருந்தது.
காவல்துறை அதிகாரிகள் வந்து, நடந்ததைக் கண்ணுற்று விசாரிக்கத் துவங்கினர்.
அங்கிருந்தவர்கள் அனைவரும் கட்டாயத் திருமணமில்லை என மறுக்க, தங்களுக்கு வந்த புகாரின்பேரில் வந்திருப்பதால் வேண்டிய பதில்களைத் தரும்படி கேட்டனர்.
பெண்ணது மயக்கம் தீர தண்ணீர் தெளித்தும் எழவில்லை.
மயக்கம் நீடிக்க, அதை தடை செய்ய, மிளகாயை சுட்டு எடுத்து வந்து நாசியில் காண்பிக்குமாறு சில பெருசுகள் கூற, அதற்குள் வாணிக்கு உடம்பு வெட்டி, வெட்டி இழுக்க வாயிலிருந்து நுரையாய் வெளிவரத் துவங்கியது.
அனைவரும் பயந்து போய் சத்தமிட, காவல்துறை அதிகாரி உடன் அழைத்து வந்த பெண் போலீஸ் அதிகாரியைக் கொண்டு வாணியின் நிலையை அறிந்து கொண்டார்.
ஆம்புலன்ஸிற்கு அங்கிருந்தவர்களில் ஒருவர் அழைத்திருந்தார்.
பெண்ணது நிலையைக் கேட்ட காவல்துறை அதிகாரி, “ஆம்புலன்ஸ் வரவரை வயிட் பண்ண வேணாம். பக்கத்துல ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தா அங்க போயி ஃபர்ஸ் எய்ட் பண்ணட்டும். அப்புறம் சரியாகலைன்னா ஜிஹச்கு கொண்டு போயிரலாம், இப்ப நம்ம வண்டியிலேயே கூட்டிட்டுப் போங்க. லேட் பண்ணிறாதீங்க!”, என்க
வாணியோடு இரு உறவுப் பெண்கள், பெண் போலீஸோடு வண்டியில் கிளம்ப, அதேநேரம் அங்கு வந்த வேந்தனின் நண்பன் சித்திக் மற்றும் மீரா, மாதவி மூவரும் தாங்கள் வந்த கேபில் இருந்து இறங்கி விசாரித்தனர்.
மருத்துவமனைக்கு வாணியை அழைத்துச் செல்வதாகக் கூறிட, அவர்களும் முன்னே சென்ற வண்டியைப் பின்தொடர்ந்தனர்.