am20

asaimugam-6c55588f

am20

ஆசை முகம் 20

 

வெளியில் சென்ற சற்று நேரத்தில் தனக்குள் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவனாக வீடு திரும்பியிருந்தான் வேந்தன்.

ஏதோ அசௌகரியமாக எண்ணியதால் பெண் தன்னோடு வரத் தயங்கியிருக்கலாம். நிதானமாக அந்த விசயத்தைக் கையாண்டிருந்தால் என்னவென்றும் வாணியிடமே கேட்டு அறிந்து கொண்டிருக்கலாம் என்கிற முடிவுக்கு மனம் வந்ததால், வீடு திரும்பல் விரைவாக நடந்திருந்தது.

நம்பிக்கை இல்லாமலா இக்கட்டு நேரங்களில் எல்லாம் தன்னை உதவிக்கு நாடினாள் என மனம் கடிந்திருக்க, சட்டென்று மாறிய மனநிலையோடு வந்தாலும், பெண்ணிடம் முகத்தைத் திருப்பியபின், எதுவும் நடவாததுபோல உடனே சென்று வாணியின் முன் நிற்க பெருந்தயக்கம் வந்திருந்தது.

திரும்பி வந்தாலும், சத்தம் காட்டாமல் தனது தளத்தில் சென்று முடங்கியிருந்தான் வேந்தன்.

தொழில் முறை விசயங்களில் இருக்கும் நிதானம், எழில்வாணி விசயத்தில் தனக்கு இல்லாமல் இருப்பதும் புரிந்தது வேந்தனுக்கு.

உணர்ந்ததால் இனி இதுபோல நடக்காமல் விழிப்பாக இருக்க தனக்குத்தானே தீர்மானம் செய்து கொண்டிருந்தான்.

விடுதியில் வாணி இருக்கும்வரை தான் இருந்த மனநிலைக்கும், வீட்டோடு பெண் வந்தபிறகும் தனக்குள் வந்த மாற்றத்திற்குமான வித்தியாசம் புரிந்தது.

வெளியில் அவளை வேறு நல்ல மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கிறேன் என்று தான் கூறிக் கொண்டாலும், அவளை தான் யாருக்கும் விட்டுக் கொடுக்கும் நிலையில் இல்லை என்பதே அது.

அது இன்று அவனது செயலால் அவனுக்கே தெளிவாகி இருந்தது.

தன்னுடையவள் என்கிற உரிமையுணர்வு தந்த ஆழ்மன எண்ணத்தால்தான் வாணியைத் தான் அழைத்தது.  இதுவரை தனது தாயைத் தவிர வேறு யாரையும் அழைத்துச் செல்லத் தயங்கியவன், இன்று தானாக வலிய வந்து அழைத்ததே அதிசயம்தான்.   

அதற்கான தனது அவாவும் வேந்தனுக்குத் தெளிவாகப் புரிந்தது.

வாணி வராமல் மறுக்க, எழுந்த ஏமாற்றத்தை தாங்கா மனதை மறைக்க வெளியில் உடனே விரைந்ததையும் உணர்ந்து கொண்டான்.

திருமணம் என்கிற பந்தத்திற்குள் வருமுன்னேயே தனது ஆழ்மனம் அவளை எல்லாமுமாக ஏற்றுக் கொண்டிருப்பதையும் அறிந்து கொண்டவனுக்குள், இன்னும் திருமணத்தை நடத்தத் தாமதிப்பது தவறு என்றே தோன்றியது.

ஆனால், அவ்வளவு எளிதாக தானே சென்று திருமணத்திற்கு பெண்ணிடம் சம்மதம் கேட்டு, மேற்கொண்டு விசயங்களைப் பேசி அடுத்த கட்டத்திற்குச் செல்ல தயக்கமும் வந்தது.

தாயிடம் அனைத்திற்கும் மறுத்துவிட்டு, தற்போது என்னவென்று ஆரம்பிக்க என்ற யோசனைதான்.

வீராப்பாய் இருந்ததென்ன, தற்போது அதற்கு முற்றிலும் மாறுபட்டவனாகச் சென்று எப்படி இரு பெண்களிடமும் பேச என்கிற தயக்கம் ஆட்கொண்டது.

அத்தோடு, சமீபமாய் பெண் தன்னிடம் உரிமைப் போராட்டம் எதுவுமின்றி, ஒதுங்கி இருப்பது போன்ற எண்ணமும் தோன்றிட, எதனால் வாணியிடம் அந்த மாற்றம் என்பது புரியாமல் திருமணத்தைப் பற்றிப் பேச எண்ணியவனுக்கு துணிவும் எழவில்லை.

ஒரு வேளை தனது பிடிவாதம், பாராமுகம் இவற்றால், வாணியின் மனதை மாற்றிக் கொண்டு விட்டாளோ என்கிற எண்ணமும் எழுந்து வேந்தனுக்குள் வதைத்து, வலுத்தது.

அதாவது பாதகமான வாணியின் முடிவை ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் வேந்தன் தற்போது இல்லை.

வேந்தன் சற்று நேரத்தில் வீட்டிற்கு வந்ததை அறியாதவள், தனது மறுப்பால் அவனைக் காயப்படுத்தி விட்டோமே என்கிற அலைக்கழிப்போடு இருந்தாள்.

வேந்தனது தனிப்பட்ட விசயங்களை அறிந்து கொள்வது, உடைமைகளை உரிமையோடு பயன்படுத்துவது, தனி அறைக்குள் செல்வது, அனைத்துமே, திருமணத்திற்குப் பிறகே என்கிற எண்ணம் வாணிக்கு வந்ததால் தயங்கச் செய்திருந்தது.

மற்றபடி வேந்தனை நம்பாமல் வேறு யாரை நம்பப் போகிறாள்.

ஆனாலும் தனது எதிர்பார்ப்புகளை, எண்ணத்தைப் பகிர்ந்தால், வேந்தன் மீண்டும் தன்னிடம் எவ்வாறு நடந்து கொள்வானோ என்கிற பதைபதைப்பும் வாணிக்கு இருந்தது.

மாலையில் அனுசியா வந்ததும், வாணியின் வாடிய முகத்தைக் கண்டு, “என்னம்மா முகமெல்லாம் வாடி இருக்கு.  என்ன செய்யுது” என வினவ, ஏதோ கூறி சமாளித்தாள் வாணி.

அதன்பின் தனது பகுதியில் இருந்து வந்தவன், அதுவரை தங்களுக்குள் எந்த மனக்கசப்பும் இல்லை என்பதுபோல இயல்பாக வாணியிடம் பேச, ‘நாமதான் தப்பா நினைச்சிட்டு புலம்பிகிட்டு இருந்திருக்கோம்போல’ என புரியாமல் வேந்தனைப் பார்த்திருந்தாள் வாணி.

இருவருக்கும் சந்தர்ப்பங்கள் அதுவாகவே வாய்க்கும் என காத்திருந்து, சந்தோசங்களை விட்டுத் தூரமாக பயணிக்கத் துவங்கினர்.

இருவருக்குள்ளும் அவர்கள் அறியாமலேயே ஒதுக்கம் வந்திருந்தது.  அந்த ஒதுக்கத்தை ஓரளவு யூகித்தவர், இடையில் தான் எதுவும் பேசக்கூடாது என அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்தபடி இருந்தார் அனுசியா.

நாள்கள் நகர்ந்ததே அன்றி, தானாகவே பலமுறை தனிமையை ஏற்படுத்தித் தந்தாலும், கடுகளவு முன்னேற்றமும் இருவருக்குள்ளும் இல்லாதிருந்ததையும் அத்தாய் கண்டு கொண்டார்.

அனுசியாவிற்குள், ‘இதுகளா நல்ல முடிவுக்கு வரும்ங்கற நம்பிக்கை இன்னும் எனக்கில்லை.  பேசாம நாமளே ஆரம்பிச்சு அடுத்து ஆகவேண்டியதைப் பாக்கலாம்’, என்கிற தீர்மானத்திற்கு வந்திருந்தார்.

ஆனி இறுதி தேதியில் முடிவெடுத்து காலெண்டரைப் பார்க்க, தேய்பிறையோடு, நாள் கிழமை நன்றாக இல்லாது இருக்கவே, அடுத்து ஆடி என்பதால் ஆவணி பிறந்த பின் பேச்சை ஆரம்பித்து, உடனே திருமணத்தை வைக்க ஏற்பாடு செய்ய எண்ணியிருந்தார் அனுசியா.

ஆடி பிறக்கும்முன்னே வேந்தனிடம் கறாராக இதுபற்றி பேசி ஒரு முடிவுக்கு வந்திட, தக்க சமயம் பார்த்திருந்தார்.

வாணிக்கு, உரிமை, உறவு வேண்டுமென வேந்தனிடம் பழையபடி பேசப்போக, வெளியில் சென்று தங்கிக் கொள் என்று தன்னை அனுப்பிவிட்டால், இனி அதெல்லாம் சாத்தியப்படாது என்பதான முடிவுக்கு வீட்டிற்கு வந்ததும் எடுத்திருந்தாள். 

அதனால் வேந்தன் வீட்டிற்கு வந்தது முதலே வேந்தனுக்குப் பிடிக்காததைப் பேசிட வேண்டாம் என மிகவும் சிரத்தையோடு பேச்சைக் கட்டுப்படுத்தியபடி இருந்தாள்.

முதல் முறை வேந்தன் நடந்து கொண்ட முறைமை பெண்ணை அவ்வாறு யோசிக்கச் செய்திருந்தது.

வேந்தனோ, பெண்ணது ஒதுக்கத்தை, தனக்கு பாதகமாக எதுவும் நடந்து விடுமோ என்கிற பதைபதைப்பில் பேசத் துவங்கவே தயங்கியிருந்தான்.

மொத்தத்தில், இருவரும் சாதாரணமாகப் பேசிக் கொண்டாலும், இயல்பில் தங்களுக்குள் ஸ்வரம் தப்பியிருந்ததை உணர்ந்தே இருந்தனர்.

………………………

அன்று ஏதோ மன அலைக்கழிப்பிலும், மாதாந்திரத் தொந்திரவு காரணமாக, சோபாவில் படுத்தபடியே தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவள், அப்படியே உறங்கியிருந்தாள் வாணி.

அனுசியாவோ, தரைத்தளத்தில் வாணியும், அவரும் மட்டுமே என்பதால், பெண் அசந்து உறங்குவதைக் கண்டு, எழுப்ப மனதில்லாமல் ஒன்பதரை மணிக்கெல்லாம் அவரது அறைக்குள் சென்று படுத்திருந்தார்.

பத்து மணிக்கு சற்று முன்பே வீட்டிற்கு வந்த வேந்தன், தாய், அல்லது வாணி இருவரையும் எதிர்பார்த்து உள்ளே நுழைந்திட, உறங்கும் வாணியைத்தான் காண நேர்ந்தது.

நிசப்தம் நிறைந்திருந்த நேரத்தில், நின்றபடியே பெண்ணைப் பார்த்திருந்தவனுக்கு, உறக்கத்தில் பெண் திரும்ப எத்தனிக்க, சோபாவில் இருந்து விழும் நிலைக்கு வந்தவளை ஓடிச் சென்று தாங்கி, தள்ளிப் படுக்கச் செய்தான். ஆனாலும் இவளை இப்படியே விட்டுச் சென்றால் உறக்கத்தில் கீழே விழுந்து விடுவாளோ என்கிற எண்ணம் தோன்றிட, “வாணீஈஇஇஇ” என அழைத்தான்.

சத்தமாக அழைத்தால், தாய் எழுந்து விடுவார்.  அவள் இரவில் உறங்குவதே அபூர்வம்.  அதில் தன்னால் எதுக்கு கஷ்டம் என எண்ணியவன் மெதுவாகவே அழைத்தான்.

வேந்தனது அழைப்பைக் கேட்டவளுக்கு விழிப்பு வந்தாலும், அது கனவுபோலிருக்க, ம்ம் என்று மட்டும் வாணியிடமிருந்து சத்தம் வந்தது.

அடுத்து இரு முறை அழைத்துப் பார்த்தவனின் வார்த்தைக்குச் செவி சாய்த்து எழுந்து அமர்ந்தவள், பாதி கண்ணைத் திறந்தவாறே எதிரே தனக்கருகே நின்ற வேந்தனைப் பார்த்து, , “மாமூ”, என புன்னகையோடு அழைத்துவிட்டு, சிரித்தபடியே மீண்டும் பழையபடி படுத்துவிட்டாள்.

சிறுபிள்ளைபோலிருந்த வாணியின் செயலில், வேந்தனுக்குச் சிரிப்பு வந்தாலும் அப்படியே விட்டுச் செல்ல மனமில்லாமல், “வாணீம்மாஆஅஅ”, என மீண்டும் அழைக்க

கண்ணைத் திறக்காமலேயே ம்ஹ்ம் என்றாள்.

“எழுந்து ரூம்ல போயி பெட்ல படு.  சோஃபால இருந்து விழுந்துட்டா கஷ்டம்”

“ம்ஹ்ம்” மட்டுமே வந்தது.  ஆனால் எழவில்லை.

அதற்குமேல் நேரம் கடந்ததே அன்றி, பெண்ணிடம் ம்மைத் தவிர வேறு எந்த முன்னேற்றமும் இல்லை.

பொறுமை இழந்தவன், தனது வருங்கால மனைவி என்கிற அசைக்க முடியாத உறுதியான எண்ணத்தோடு, பெண்ணது நிலை உணர்ந்து, தப்பில்லை என தனக்குள் முடிவு செய்தவன், வாணியை தன் இரு கைகளாலும் அலேக்காகத் தூக்கியவாறு வாணியின் அறையை நோக்கி நடந்தான்.

அவனது உடலை ஒட்டினாற்போலிருந்த பெண்ணது தேக ஸ்பரிசத்தில் வேந்தனுக்குள்ளும் சிலிர்த்தது.

உணர்வு முழுக்க உல்லாச நிலைக்குச் சென்றிட, முகத்தில் தானாக அரும்பிய புன்னகையோடு பெண்ணை மிக அருகே பார்த்தபடியே, சுகமான சுமையை ஏந்தியபடி அறைக்குள் நுழைந்தான்.

வாணியும் உறக்கத்தினூடே சிரித்தாள். அந்த நேரத்திலும் பெண்ணது முகமெங்கும் நாணத்தால் சிவப்பேறியதைக் காண வேந்தனுக்குள்ளும் மாற்றங்கள்.

எத்தனை காலம் தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு வாழ்ந்தோம் என்பதும் வேந்தனுக்குள் தோன்றி கேலி செய்தது.

இன்ப அவஸ்தைகளோடு, தனது பேரின்பத்தை படுக்கையில் கிடத்தினான்.

படுக்கையில் இருந்தவளின் உடலின் கீழ்பகுதியில் மாட்டிக் கொண்டிருந்த விரலை உருவிக் கொண்டதும், பெண்ணும் வாகாக ஒருக்களித்து வேந்தனது பக்கமாகத் திரும்பிப் படுத்தாள்.

விழி இமைக்க மறந்து பளிங்கு போலிருந்த தனது பொக்கிசத்தை பார்த்தபடி நின்றிருந்தவன் கிளம்ப எத்தனிக்க, “மாமூ… என்னை விட்டுட்டு எங்க போறீங்க!”,

கனவென்று கருதினாலோ அல்லது வேறு எதையும் கனவில் கண்டு களித்தாலோ! வாணி கண்ணைத் திறக்கவே இல்லாமல் உறக்கத்திலேயே வினவ,

திரும்பியவன், பஞ்சுபோன்ற வாணியின் கரங்களைத் தொட்டு தனது கரங்களுக்குள் அழுத்திப் பிடித்தபடி தனது இதழொற்றியவன், “மாமூ எங்கேயும் போகல.  நீ தூங்கு”, என்றபடி தட்டிக் கொடுக்க அமைதியாய் உறங்கத்தைத் தொடர்ந்தாள் பெண்.

பெண்ணவளையே பார்த்திருந்தவனுக்குள், ‘இனியும் தாமதிக்காதே’, என்கிற எண்ணம்.

‘இவள் எனக்கானவள்.  எனக்கு மட்டுமே உரிமையானவள்.  இவள் மனதில் என்னைத் தவிர வேறு யாரும் இல்லை’, என்கிற இறுமாப்பும் வந்ததோ.

மறுநாள் குழப்பத்தோடு எழுந்தாள் பெண்.

வேந்தன் ஒருவேளை தன்னை நிஜத்தில் தூக்கியிருப்பானோ என்கிற எண்ணம் தோன்றிட, ‘சேச்சே.. இவங்களாது வந்து நம்மைத் தூக்கறதாவது!’ என்கிற எண்ணம்தான் பெண்ணுக்கு.

‘நாமளா போயி ஜிங்கலாலானு எதாவது பேசுனா, எங்கையாவது கொண்டு போயி கண்ணுக்குத் தெரியாம விட்டுட்டு எஸ்கேப்பாகி எட்டு ஊருக்கு அப்பால ஓடத்தான் தெரியும்’, என்றே வேந்தனைப் பற்றிய பெண்ணது நினைப்பு இருந்தது.

தான் டிவி பார்த்துக் கொண்டிருந்தது நினைவில் இருந்தது.  அறைக்குள் வந்து படுத்த உணர்வே இல்லை.  ஆனால் அறைக்குள் வந்து எப்படிப் படுத்தேன் என சிந்தித்து ஓய்ந்தாள்.

கனவில் தோன்றியது, கையில் இதழொற்றியது அனைத்தும் கனவுதான் என்கிற எண்ணம் வாணிக்கு. ஆனாலும் இதழொற்றலை நினைத்தாலே மனம் ஏதோ ஆனது.  அதில் வெட்கமும் அழையா விருந்தாளியாக வந்திட, தன்னைச் சமாளிக்க இயலாது வேந்தனை நேர்கொண்டு பார்ப்பதைத் தவிர்த்தாள்..

‘சாமியாடி இவுங்களாவே வந்தா எங்கையப் புடிச்சு உம்மாலாம் தரப் போறாங்க’

‘அப்டியே பாட்டீமா தயவுல கல்யாணம் நடந்தாலும், சாமியாரு மாமூவ, சம்சாரி மாமூவா மாத்த நாந்தான் அவங்களுக்கு டியூசன் எடுக்கணும்’, என்பதுதான் வேந்தனைப் பற்றிய வாணியின் எண்ணமாக இருந்தது.

ஆனாலும் என்ன நடந்திருக்கும், யாரிடம்போய் இதைப்பற்றிக் கேட்க?

ஆனால் முந்தைய நாளில் வந்த நிகழ்வுகள். கனவா அல்ல நனவா? கனவோ, நனவோ அதன் இனிமை இன்னும் மனப்பெட்டகத்தில் தித்திப்பாய்… தித்திப்பதாய்…

அது நிஜமென்று வந்து சொல்வார் யாரோ?

ஆனால் அடுத்து வந்த நாள்களில் எதிர்பாரா நிகழ்வுகள் அனைத்தையும் புரட்டி மாற்றியிருந்தது.

///////////

பித்து!

முகத்தை முகவரியாகக்

கொண்டு துவங்கிய

பயணத்தில்

அகம் வரை நீண்டு

நேசத்தை நீடித்து

துவங்கிய உறவு

தொடர்ந்திட்டால்…

மனம் பிசகாமல்

மணம் புரிந்து,

கைவளைவில்

காலமுள்ளவரை

கசங்காமல்

காபந்து செய்து,

கண் கலங்காமல்

வாழும் வழி செய்து,

பிறர் பேசப்

பொறுக்காமல்

இதயத்தில்

இனிமையாகச்

சிறை செய்து,

கூந்தலில்

இளைப்பாறி,

கூடலில் களைப்பாறி,

ஊடலில் கூடலின்

சுகம் கூட்டி,

உருவத்தை

உள்ளங்கையில் தாங்கி,

உணர்வுகளின் வழியே

உறவுகளை ஈந்து,

விழியசைவை

செல்லும் வழியாக்கி,

கனிவான பேச்சை

தேனாய்ப் பருகி,

கனல் மூச்சை

உயிர் மூச்சாக்கி

உயிர் வாழ்ந்திட்டாலும்,

வாழும் மூச்சு அடங்கும்வரை

தெளியேன்!

சித்தமெல்லாம்

சித்தினியின்

சிந்தனையாலே!

………………………

 

Leave a Reply

error: Content is protected !!