am25

am25

ஆசை முகம் 25

 

இரு விழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது

நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
…………………………….

வேந்தனுக்கு, வாணியிடம் அவளை மறுத்துக் கூறிய தருணங்களிலும், அதன்பின் அவளுக்கு திருவுடனான திருமணத்திற்கு தானாக முன்வந்து உதவுவதாகக் கூறியபோதும் தோன்றாதது அனைத்தும், பெண் தன்னை விட்டுச் சென்றதும் தோன்றத் துவங்கியிருந்தது.

நண்பனோடு மருத்துவ கலந்தாய்விற்குபின் வாணியை திருமணம் செய்ய முடிவெடுத்த நிலையிலும், தாய் தன்னிடம் வாணியுடனான திருமணத்திற்கு கேட்டு, சம்மதம் கூறியபிறகும், தனது வாயிலிருந்து அப்படி ஒரு வார்த்தை வந்திருக்கக்கூடாது என்பது காலங்கடந்து புரிய வருந்தினான் வேந்தன்.

சிங்கத்தைப்போல இருபக்கமும் யோசிக்கிறேன் என பெண்ணை கோட்டை விட்டு விழிப்பதுவும் புரிந்தது.

சில இடங்களில் சிங்கத்தைப் போலிருப்பது தனக்கு சகாயமாக இருக்காது, சங்கடமே எழும் என்பதை உணர்ந்தவன், தனது இன்றைய நிலையிலிருந்து தன்னை மீட்டெடுக்க வாணியைத் தவிர வேறு மருந்து இல்லை என்பதையும் தீர்க்கமாக அறிந்து, உணர்ந்து கொண்டான்.

விலகிச் சென்றவளைத் துரத்திச் சென்றன நினைவுகள்!

விழியை விட்டு தூரச் சென்றிருந்தது உறக்கம்!

தன்னால் வாணியில்லாமல் இனி வாழும் வாழ்வை யோசிக்கவே முடியாது எனும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தான்.

கடின அலைச்சலோடு, அமைதியில்லாத இதயத்தைத் தாங்கியவனது மனதை, முகமே சொல்லாமல் சொன்னது.

வேந்தனைக் கண்ட அனுசியாவிற்குமே வருத்தம்.

ஆனாலும் மகனிடம் எதுவும் காட்டிக் கொள்ள விரும்பாமல், அமைதியாகவே கடந்தார்.

வாணியின் வாட்சப் மெசேஜை கண்டதும், ‘இப்ப எங்க இருக்க வாணீ’ எனக்கேட்டு தான் அனுப்பிய பதில் செய்தி போகாமல் சதி செய்தது.

தன்னை அவள் பிளாக் செய்ததே செய்தி தேங்கலுக்கான காரணம் என்பதை அறிந்து, உயிரே போன உணர்வு வேந்தனுக்கு.

‘என்னையா? என்னை பிளாக் பண்ணற அளவுக்கு அப்டி என்ன நான் பண்ணிட்டேன்’, என்பதாகத்தான் மனம் ஓய்ந்து போனது வேந்தனுக்கு.

சற்று ஆழ்ந்து யோசித்தவனுக்குள், ‘இப்டித்தான் நான் பேசுனப்போ அவளுக்கும் இருந்திருக்குமோ!’ என்பதாக.

அதிகம் அவளைக் காயப்படுத்தியதால், தானும் இன்று காயத்தோடு இருக்கிறோமே என மனம் கேட்ட வினாவிற்கு, பதில் தெரிந்தும் சரி செய்திடும் வழி தெரியாமல் நொந்தான்.

சுணக்கமில்லாமல், அடுத்த கட்டமாக வாணியைத் தேடும் பணியை நோக்கி ஓடினான்.

கீழ்மட்ட அளவிலேயே சில காவல் துறை நண்பர்களின் உதவியோடு, பெண்ணது அழைப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்தைக் கொண்டு, சற்று சிரமப்பட்டு வாணியின் அழைப்புகளைக் கொண்டு ட்ரேஸ் செய்திருந்தனர்.

பள்ளி விடுதிக்கு நேரில் சென்று விசயத்தை அறிந்து கொண்டு வந்தான்.

பள்ளியிலும் வேந்தனிடம் வாணி சென்றிருக்கும் இடம் பற்றி உடனே விசயம் பகிர்ந்து கொள்ளவில்லை.  அதனால் சில மாதங்களுக்கு முன்பு அவளது பொறுப்பினை ஏற்றுக் கொண்டமைக்கான ஒப்பந்த நகலை எடுத்து நீட்டினான்.

அதன்பிறகே எழில்வாணியின் இருப்பிடத்தைப் பற்றிக் கூறினார்கள்.

“அங்க லேடீஸ் மட்டுந்தான் விசிட்டரா போயி பாக்கலாம்.  அதுவும் வாரந்தோறும் எல்லா நாள்கள்லாயும் போயிப் பாக்க முடியாது.  இரண்டு வாரத்துக்கு ஒரு முறை வரக்கூடிய சனிக்கிழமைல மட்டும்தான் விசிட்டர் அலௌவ் பண்ணுவாங்க! இல்லைனா அங்க தங்கியிருக்கறவங்க வெளிய வந்து நம்மை மீட் பண்ணலாம்!”

விசயம் அறிந்து இன்னும் சோர்ந்து போனான் வேந்தன்.

வாணி சென்றது முதல் தங்களது எண்களில் இருந்துபோன எந்த அழைப்பும் ஏற்கப்படவில்லை. அனைத்தையும் தடை செய்து வைத்திருந்தாள் வாணி. வெளியில் இருந்து காயின் போனில் இருந்த அழைப்பையும்கூட ஏற்காமல் சதி செய்தாள்.

…………….

மீராவின் வீட்டில்…

என்றுமே வேந்தனது தோற்றத்தை இப்படி ஓய்ந்த நிலையில் யாருமே கண்டதில்லை. அத்தனை சோர்வு. விழியில் உணர்வில்லை.  பேச்சில் சிரிப்பில்லை.

மனம் முழுக்க ஆசை முகமே வியாபித்திருந்தது!

வாணியின் தரிசனத்திற்குப் பிறகே மனம் சாந்தியும், சமாதானமும் அடையும் என்கிற நிலை.

“வேந்தா! நீயே நேருல போயி கூப்பிடு!  அதவிட்டுட்டு என்னைய போகச் சொல்றதெல்லாம சரியா வராது!” மீரா

“நானும் கூட வரேன்னுதான சொல்றேன்.  ஆனா நீ போயி முதல்ல பேசு!”

“அப்டி என்னதான் பண்ண!  இவ்ளோ யோசிச்சுப் பின்வாங்கற!”

“….!”

“உங்க ரெண்டு பேருக்கு இடையில, என்னைய வச்சு செய்யற பிளான் எதுவும் போட்டுருக்கியா?”

“…” இல்லையென மறுத்தவனிடம் எவ்வளவோ பேசியாயிற்று.

சித்திக் அமைதியாக பார்த்திருந்தான்.

“கல்யாணம் பண்றதுக்கு முன்னமே இப்டி அவளுக்குப் பயப்படற!  எங்க போயி ட்ரெயினிங் எடுத்தேன்னு, சித்திக்கிட்டயும் சொல்லலாம்ல!”, என கணவனையும் இடையில் இழுத்து விட்டு சிரிப்போடு வேடிக்கை பார்த்தாள் மீரா.

‘இப்ப எதுக்கு சும்மா இருக்கற என்னைய இழுக்கற!’, என்பதுபோல பார்த்த சித்திக், எழுந்து வெளியே சென்று விட்டான்.

“பேசாம.. நீ அனும்மாவ கூட்டிட்டுப் போ! கண்டிப்பா கூட வந்திருவா!” மீரா

“உனக்கு அவளப் பத்தித் தெரியலை!” என இளநகையோடு கூறியவனிடம், “அப்ப எல்லாந் தெரிஞ்சுதான் எந்தலைய உருட்டப் பிளான் பண்ற!” இடுப்பில் இரண்டு கையையும் வைத்தபடியே கேட்டாள் மீரா.

சிரித்தாலும் அதில் உயிர்ப்பில்லை வேந்தனிடம்.

முகத்தில் எந்த உணர்ச்சியும் இன்றி அமைதியாக இருந்த வேந்தனைப் பார்த்தபோது, மீராவிற்கு, ‘எப்டி இருந்த ஆளை, இப்டி மாத்தி வச்சிருக்காளே!’, என நினைக்காமல் இருக்க முடியவில்லை.

“இப்பவே இந்த பவ்யம், பயம் எல்லாம எப்டி வேந்தா!” நிமிர்ந்து மீராவைப் பார்த்துவிட்டு, அசட்டுச் சிரிப்போடு குனிந்து கொண்டான்.

அதில், நீ என்ன வேண்டுமானாலும் கூறிக்கொள்.  நான் இப்படித்தான் என்கிற உறுதி தெரிந்தது.

நேரம் போனதே அன்றி, மீரா சம்மதிக்குவரை அசையாமல் இருந்து காரியத்தைச் சாதித்திருந்தான் வேந்தன்.

……………………………..

பங்களூர்!

இதமான காலநிலை, இனிமையாக வரவேற்றது.

மீராவின் குடும்பத்தோடு, வேந்தன் மட்டும்.

மதம் சார்ந்த ஆதரவற்ற பெண்களுக்கான விடுதி அது!

நிறைய கட்டுப்பாடுகள்.  யாருக்கு அவையனைத்தும் உவப்பானதோ அவர்கள் மட்டுமே அங்கு நிலைப்பார்கள்.

மீரா தனது ஆங்கிலப் புலமையைப் பயன்படுத்தி, “இங்க எழில்வாணினு” எனத் துவங்கி வாணியைப் பற்றிய அறிமுகத்தோடு, “அவங்களைப் பார்க்க நான் சென்னையில் இருந்து வந்திருக்கிறேன்” என்றதுமே

ஒரு ரெஜிஸ்டரில் நேரம், என்ன காரணத்திற்காக காண வந்திருக்கிறீர்கள் என்பது போன்ற சில விசயங்கள் பதிந்து வாங்கிக் கொள்ளப்பட்ட பிறகு, ஐந்து நிமிடங்களில் எழில்வாணியைச் சந்தித்தாள் மீரா.

விசாலமாகவே இருந்தது அந்த பார்வையாளர்(விசிட்டர்) அறை.

சுத்தமாக பராமரிக்கப்பட்டு, அமைதியான சூழல் நிறைந்திருக்க, ஏதோ நறுமணத்தை உணர்ந்தாள்.

மயக்குவது போல இருந்தது அந்த நிலை.

வாணி மெலிந்து, கருவளையம் கண்களுக்கு கீழே வந்து, சற்று மாறத் துவங்கிய நிலையில், மீராவைக் கண்டதும், வருத்தி ஒட்ட வைத்த புன்னகையோடு வந்தாள்.

மீராவின் வாணியைப் பற்றிய கணிப்பு, ‘மீளத் துவங்கிவிட்டாள் பெண்!’

எழில்வாணியும் எதிர்பார்த்ததுதான்.

மீராவை இடையிடையே சந்தித்திருந்ததால், இணக்கமாகவே மிக அருகே வந்தமர்ந்து, “வாங்கக்கா!” எனும் மகிழ்ச்சி நிறைந்திட்ட மெல்லிய குரல், மீராவிற்குமே மகிழ்ச்சி தொற்றினார்போல இருந்தது.

குண்டூசி விழும் அமைதியை தக்கவைத்திருந்த அந்தக் கூடத்தில், வாணியின் பேச்சு எதிரொலித்தாற் போன்றிருந்தது.

முதல் முறை என்பதால், அந்த இடத்திற்கு வாணி இன்னும் பழகவில்லை என்பதும் புரிந்தது.  இங்கு வந்தபின் அவளைக் காண வந்த முதல் பார்வையாளரே தான்தான் என்பதையும் மீரா உணர்ந்தாள்.

முகமன் கூறி, இனிமையாகவே உபசரிப்புகள் துவங்கியது.

சுற்றி வளைக்காமல் நேரடியாக மீரா விசயத்திற்கு வந்தாள்.

“வாணி, அங்க என்ன நடந்ததுன்னு இப்டி இவ்ளோ தூரம் சொல்லிக்காம கிளம்பி தனியா வந்துட்ட!”

“நல்ல ஜாப் ஆப்பர்சூனிட்டிக்கா! எவ்வளவு நாள்தான் அங்க மத்தவங்களுக்கு பாரமா இருக்கறது. உடனே இங்க ஜாயின் பண்ணனும்னு சொன்னதும் கிளம்பி வந்துட்டேன். அப்புறம் அடுத்த நாள் மா..மாவுக்கு மெசேஜ் பண்ணேனே!”

மீராவிற்கு எல்லாமே தெரிந்திருந்தது.  சனிக்கிழமை வீட்டிலிருந்து கிளம்பி, பள்ளி விடுதிக்குச் சென்று கடிதம் வாங்கிக் கொண்டு, ஞாயிறன்றுதான் பங்களூர் வந்தாள் என்பது. ஆனாலும் தெரிந்தாற்போல காட்டிக் கொள்ளாமல், “பாரம்னு உன்னை, அங்க யாரு சொன்னா?”

“…” பதிலேதும் கூறாமல் தலை குனிந்தவாறு அமைதியாகி இருந்தாள் வாணி.

வாணியையே கூர்ந்து பார்த்தவள், “எல்லாமே எனக்குத் தெரியும் வாணி!”

விரக்தியாகச் சிரிப்பை உதிர்த்தவள், “அப்ப ரொம்ப சுலபம்கா! எனக்காக நீங்க மெனக்கெட்டு பாக்க வந்ததுக்கு நன்றி.  வேறு எதுவும் முக்கியமா பேசணுமாக்கா!”

வெட்டு ஒன்று, துண்டு ரெண்டு என்பது போலான வாணியின் பேச்சு, மீராவை நிதானிக்கத் தூண்டியது.

வாணியின் இந்த பரிணாமத்தில், “ஆமா வாணி! உனக்கும் வேந்தனுக்கும் மேரேஜ் பேசிட்டு இருந்தப்போ இப்டி நீ கிளம்பி வந்திட்ட!  அதான் உன்னைக் கூட்டிட்டுப் போகலாம்னு…!” இழுத்தவள் சற்றுத் தயங்கி, “…இல்ல நான் வந்ததுல உனக்கு வருத்தம்னா அவங்க வீட்ல இருந்து யாரைனாலும் வரச் சொல்லலாம்!”

“சாரிக்கா! இப்டியெல்லாம் பேசி என்னை தர்ம சங்கடத்துக்குள்ளாக்காதீங்க!”, என்றவள், “மேரேஜ் பண்ற ஐடியா அவங்களுக்கு இல்லனு எனக்கு கன்ஃபார்மா தெரியும்.  எதுக்கு நேரத்தை வேஸ்ட் பண்ணிட்டு! அவங்களையும் சங்கடப்படுத்தீட்டு! பாட்டீமாகூட இப்டிச் சொல்லித்தான் என்னை வீட்டோட கூப்பிட்டு வச்சிக்கிட்டாங்க!  ஆனா அது சும்மானு எனக்கே தெரியுங்கா!” என்றவள்,

“அவங்களுக்கு ஒன்னு நான் உறவுக்காரியா இருக்கணும்.  இல்லனா உடமைக்காரியா(மனைவி) இருக்கணும்.  இரண்டுமில்லாம இனி அங்க வந்து தங்கறது எல்லாம் சரியா வராதுக்கா!”, திடமாக உரைத்தாள்.

வாணியின் பேச்சில் வாயடைத்துப்போய் பார்த்திருந்தாள் மீரா.

“வேந்தனைனா வந்து பாக்கச் சொல்லவா!” என அதன் சூழல் மறந்து சொன்னவள், “மேரேஜ் விசயம் உண்மைதான்னு ப்ரூஃப் பண்ண என்ன செய்யணும்னு சொல்லு வாணி! இங்க… ஜென்ட்ஸ் அலௌவ் பண்ண மாட்டாங்கனு சொன்னதாலதான், வேந்தன் என்னை இங்க ட்ராப் பண்ணிட்டு வெளிய வயிட் பண்ணறான்.  உன்னால எங்கூட வெளிய வரமுடிஞ்சாலும் வா…! போயிப் பேசலாம்” மீரா

மீராவின் கேள்வியை காதில் வாங்கிக் கொண்டதுபோலவே காட்டிக் கொள்ளாமல், “சாரிக்கா.. எனக்கு நிறைய வேலை இருக்கு…!” வாணியின் பேச்சில் மீரா அதற்குமேல் என்ன பேசுவது என்பது புரியாமல், “அனும்மா சொன்னது உண்மைதான் வாணி!” மீண்டும் நப்பாசையில் துவங்கினாள் மீரா.

“இல்லைக்கா!” திடமாய் மறுத்தாள் வாணி.

“அப்போ எங்கூட கிளம்பி வர ஐடியா இல்லையா!”

“சாரிக்கா!  இனி அதுக்கு வாய்ப்பே இல்லைனு உங்களை அனுப்பினவங்கட்ட போயிச் சொல்லிருங்கக்கா!”

“யாரு வேந்தன்கிட்டயா! இல்லை அனும்மாட்டயா?”

“உங்கள அனுப்பினது யாரோ அவங்கட்ட!”

வாணியின் பேச்சு மீராவை ஆச்சர்யமாக்கியது.

“இதுதான் உம்முடிவா!”

“ஆமாக்கா!”

அதற்குமேல் அதே ரெஜிஸ்டரில் நேரத்தை எழுதி, கையொப்பம் இட்டு மீரா வருத்தத்தோடு வெளியேறியிருந்தாள்.

மீராவிற்கு வாணியது பேச்சு உண்மையில் மலைப்பாகத் தோன்றியது.

இவள் உண்மையில் பதினெட்டு வயது மட்டுமே நிரம்பிய இளம் யுவதிதானா என வாணியின் மீது மீராவிற்கு சந்தேகம் எழுந்தது.

‘நானெல்லாம் இவ வயசில சித்திக் சிரிச்சா, எல்லாம் மறந்து ஈஈஈனு கிறுக்கா அவம்பின்ன தெரிஞ்சேன்.  ஆனா இவ பெரிய ஆளாத்தான் இருப்பா போல’ என மனம் கூற, நண்பனுக்காக வந்ததில் சந்தோசமானாலும், பேச்சு வார்த்தை தோல்வியைத் தழுவியதை எண்ணி வருத்தம் வர, அதை முகம் பிரதிபலித்ததோ!

திடமாய் எப்படி, இப்படி பேச முடிகிறது இவளால்?

மீராவின் வருகையில் அவளது தோற்றத்தைக் கண்டே நிலைமையைக் கணித்திருந்தான் வேந்தன்.

தன்னைக் காண அழைத்து வரும்படி கூறினால்தான் அதிகம் வீம்பு செய்வாள் என நினைத்து, மீராவை அனுப்ப தோல்வியைத் தழுவியிருந்தது முதல் திட்டம்.

மீரா கூறியதைக் கேட்டவனுக்குள் சங்கடம்.

‘உறவுக்காரி, உடமைக்காரி எல்லாமே நீதானடி எனக்கு’ என கத்தத் தோன்றியது வேந்தனுக்கு. ஆனாலும் சூழல் கைதியாக இருந்தான்.

தனது பேச்சிற்காகவா இவ்வளவு தூரம் யோசிக்கிறாள் என்று தனக்குள் யோசனை.

அடுத்து, அங்கேயும் சில நண்பர்கள் உதவியோடு, வாணி எப்பொழுது, எந்த நேரத்தில் எங்கு வெளியே செல்கிறாள் என்பது பற்றி அறிந்து கொள்ள வேண்டி, ஒரு நிறுவனத்தை அணுகி புதிய ஒப்பந்தம் செய்து கொண்டு திரும்பியிருந்தான் வேந்தன்.

பணம் தண்ணீராய் செலவளிந்தது.  அது ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை வேந்தனுக்கு.  அவனது ஒரே குறிக்கோள் வாணியைத் தன் மனைவியாக்கிக் கொள்வது மட்டுமே!

———————————

காதல் உலா…

உல்லாச உலாவலுக்கு

கலாபக் காதலனின்

வரவை நோக்கி

பாவையின்

காத்திருப்பு நீடித்தாலும்

காணத் துடித்தாலும்

மனம் வாடிப்போனாலும்

நேரம் ஓடிப்போனாலும்

பிறர் சாடிப்போனாலும்

தேடிப்போகத் தோன்றாது…

வாஞ்சையோடு

அவன்

வசந்த வரவிற்காய்

காத்திருந்தாள்…!

……………..

இன்னும் சற்று நேரத்தில் இதன் தொடர்ச்சியைப் பதிவிடுகிறேன் தோழமைகளே….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!