am28

am28

ஆசை முகம் 28

 

வேந்தன், “முன்னல்லாம் அடிக்கடி வந்து என்னைக் கார்னர் பண்ணுவ.  வீட்டுக்கு வந்ததில இருந்து என்னைக் கண்டுக்கவே இல்லை.  அதான் அப்டி நினைக்கும்படி ஆகியிருச்சு!” குத்தலான விளக்கம்.

“முதல் தடவையிலே ஹாஸ்டல்ல கொண்டு போயி விட்ட மாதிரி, வீட்டை விட்டு திரும்பவும் ஹாஸ்டலுக்கு அனுப்பிட்டா!”

“…” வேந்தனுக்கு பீரிட்டு வந்தது சிரிப்பு.  ஆனாலும் அடக்கி வாசித்தான்.

“அந்தப் பயத்துல கொஞ்சம் அடக்கி வாசிச்சேன்” அதையே பெண்ணும் கூறினாள்.

“…”

“இனியெல்லாம் அப்டி இருக்க மாட்டேன்” தீர்க்கமாகக் கூறினாள்.

“யாரு உன்னை மாறச் சொன்னா! எப்பவும்போலவே எங்கிட்ட இரு வாணீம்மா!” இன்னும் வேந்தனது சிரிப்பு ஓயவில்லை.

“எல்லாம் உங்களுக்குச் சிரிப்பாத்தான் இருக்கும்.  ஏன் சிரிக்க மாட்டீங்க!” கழிவிரக்கத்தோடு கூறினாள்.

“…”

“எவனாவது ஈனாவானா கிடைச்சான்னா அவந்தலையில என்னைக் கட்டிட்டு கடமை முடிஞ்சதுனு கையக் கழுவுற ஐடியாலதான ஏதேதோ பேசினீங்க!”

“…” ‘இத விடவே மாட்டா போலயே’

“இப்டி பண்ணவருக்கும் எனக்கும் கல்யாணம்னு உங்க அம்மா என்ன? அந்த ஆண்டவனே வந்து சொன்னாலும் எப்டி நம்ப முடியும்! சொல்லுங்க!”

“ம்ஹ்ம். இப்பதான் நானே நேருல வந்து சொல்லிட்டேன்ல!”

“எப்டி எப்டி!”

“நம்ம மேரேஜ்கு எல்லா ஏற்பாடும் அம்மா பண்ணிட்டாங்க வாணீ!  நீ வந்தா, அடுத்து நல்ல நாள் பாத்து, கல்யாணம் பண்ணிரலாம். எப்ப கிளம்பறே எங்கூட!” மையலாய்க் கேட்டவனை, முறைத்துப் பார்த்தாள்.

“கிளம்பற ஐடியாவே இல்லை!” திண்ணக்கமாய் பெண்ணிடமிருந்து வந்தது பதில்.

“ஏன்?” அதிர்ந்துபோய் கேட்டான்.

“ஏன்னா?  உங்களுக்கா வேணுனு நினைச்சு என்னைக் கல்யாணம் பண்ணிக்கலை!  உங்க அம்மா கேட்டதுக்காகதான இப்பக் கல்யாணம் பண்ணிக்க முன் வந்திருக்கீங்க!”

“அப்டினு யாரு சொன்னா?”

“பின்ன!”

“வயசு வித்தியாசம் ரொம்ப இருந்ததால கொஞ்சம் தயக்கம் இருந்தது.  ஆனா இப்ப அப்டி எதுவும் இல்லை.  நானே அம்மாகிட்ட இது விசயமா பேச்சை எடுக்க நினைச்சப்போ, அம்மாவே வந்து கேட்டாங்க!  நானும் சரினு சொல்லிட்டேன்!”

“உங்களோட பழைய காரணம் எல்லாம் அப்டியேதான் இன்னமும் இருக்கு!”

“இன்னும் எதுக்குத் தயக்கம் வாணீ! அதெல்லாம் யோசிக்காத!”

“எப்பவும் விரைப்பா, வேலை செய்ய மட்டும் பிறந்தவங்க கணக்கா நீங்க உண்டு , உங்க வேலை உண்டுனு இருக்கறவங்களை நினைச்சு தயங்காம என்ன செய்வாங்கலாம்?”

“அதுக்கும், இதுக்கும் என்னம்மா… சம்பந்தம்!”

“ஏன் இல்லாம? உங்களுக்கு அப்டியொன்னும் எம்மேல வேற மாதிரி எண்ணம் இருக்கற மாதிரித் தெரியலையே!”

“நம்பிக்கை வர என்ன செய்யணும்”

“கொஞ்சமாவது என்னைக் கண்டுக்கிட்டு இருந்திருக்கனும்.  என்னை யாரோ கணக்காதான வீட்ல இருக்கும் போதெல்லாம் கடந்து போனீங்க!” குற்றச்சாட்டு

‘நல்லா வச்சுப் பண்றடீ’ “இவ்ளோதூரம் மெனக்கெட்டு உன்னைத் தேடி வந்து எதுக்காக பேசறேன்னு யோசி!”

“இன்னும் உங்க பேச்செல்லாம் உண்மைதானா-னே டவுட்டா இருக்கு!” என்றவள், சட்டென வேந்தனது கையில் கிள்ள

“ஆஹ்..” அலறியவன் திரும்பி வாணியை நோக்கி, “விட்டா அடிச்சிருவ போல! செம காண்டுல இருக்கியா எம்மேல”

“ச்சேச்சேய்.. டவுட்ட க்ளியர் பண்ணனும்ல!”

“டவுட் தான! அதுக்கு முதல்ல என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ!  அப்புறம் சொல்லு!”, மாயக் கண்ணனைப்போல வசியச் சிரிப்போடு சொன்னான் வேந்தன்.

“பொருளா நீங்க!  யூஸ் பண்ணிப் பாத்துட்டு சொல்றதுக்கு!”, என்றவள் “ஆனா…………..” எனத் தயங்க

“என்ன ஆனா…!”

“வேற வழியில்லாம இந்த ஐடியாவுக்கு வந்துட்டீங்களா?”

“ச்சேச்சே” ‘கடவுளே இன்னும் என்ன சொன்ன இவ நம்புவா’

“திடீர்னுதான மாறியிருக்கீங்க”

“அப்டி இல்ல வாணி!…… ‘பாக்குறதுக்கு முன்னயே பிடிச்சதுனு சொன்னா இன்னும் நிறைய சமாளிக்கனும்’ என தனக்குள் யோசித்தபடி நிதானித்தவன், “ஃபர்ஸ்ட் சைட்லயே புடிச்சது! ஆனா நீ காலேஜ் ஃபர்ஸ்ட் இயர்னதும், ஏஜ் டிஃப்ரன்ஸ் பாத்து வேணானு ஒதுங்கிப் போனேன். நீயா வந்து மேரேஜ் பத்தி பேசினதுல இருந்து மனசு ஆசிலேட் ஆகிட்டே இருந்தது.  ஒரே குழப்பம்.  அப்ப அம்மாவும் கூப்பிட்டுப் பேசுனாங்க.  உனக்கு ஓகேன்னா, நீ ஸ்டபானா இருக்கிறதால, ஒன்னும் பிராப்ளம் வராதுனு சொன்னாங்க.  அப்பவும் தயக்கமா இருந்தது. ரொம்ப யோசிச்சு, இனி உன்னை விட்டுட்டு இருக்க முடியாதுன்னு மனசு சொன்னதும், உன்னை மேரேஜ் பண்ணிக்கலாம்னு முடிவெடுத்து, அம்மாகிட்டயும் ஓகே சொன்னேன்.  அதுக்குள்ள என்ன நடந்துதுன்னு தெரியல! நீதான் இங்க கிளம்பி வந்திட்ட!”

வேந்தனது விளக்கம் ஓரளவிற்கு தெம்பையும், தைரியத்தையும், நம்பிக்கையும் வாணிக்குள் கொணர்ந்ததுபோல உணர்ந்தாள்.

ஆனாலும் விடாமல், “அப்டியெல்லாம் எந்த மாற்றமும் எனக்குத் தெரிஞ்சதில்லையே” மீண்டும் துவங்கினாள்.

“மாற்றம்னா எப்டி எதிர்பார்த்த!”

“………”

“பதினெட்டு வயசுப் பையன் மாதிரியெல்லாம் எதிர்பார்த்தா ஏமாற்றம்தான் வரும்.  இந்த ஏஜ்கே உரிய மெச்சூரிட்டி அது.  அதலாம் வெளிய எதிர்பார்க்காத!” சிரிப்போடு கூறினாலும், அதில் இருந்த திடத்தொனி நான் இப்படித்தான் என்றது.

“அப்ப நீங்க சாமியாரில்லையா?”

“ஏய்! எத வச்சுடீ சாமியாருங்கற?”

“என்னது, டீயா!”

“டீ, டா, ம்மா எல்லாந்தான். அது நீ என்னை டீல் பண்றதைப் பொருத்து மாறும்!” என்றவன், “சொல்லு, எதனால சாமியாருனு சொன்ன?”

“எல்லாம் சைகாலஜிகல் அனலைசிங்தான்!”

“சாமியாரா இல்லையான்னு, நம்ம கல்யாணத்துக்குப் பின்ன சொல்லு” கூறியபடி சிரித்தவனின் தோற்றமே பெண்ணுக்குள் ஏதோ உணர்வுக் கலவையை உண்டு செய்து, இனிமையைக் கொணர்ந்தது.

“ச்சீய்”, என்றவள் சற்றுநேரம் அமைதியாக இருந்தாள்.

பின் சுதாரித்துக் கொண்டு, “எனக்கே ஓரளவுக்கு தெரியும்.  நீங்க எப்டினு!”

“எப்டி! என்ன தெரியும்!”

“உங்க வீட்ல இருந்தா மட்டும் கனவுல வரீங்க!  உங்க வீட்டை விட்டு வெளியே போயிட்டா, எங்கனவுலகூட வர மாட்டீங்கறீங்க.  இதுலயே தெரியலையே உங்க தைரியம் என்னானு!” நக்கலாய்

“ஹா..ஹா” என சிரித்தவன், “அது ஏன்னு யோசீ!” என கள்ளச் சிரிப்பு சிரித்தவனைக் கண்டவளுக்கு, புரியாமல், “ஏன் இப்டி வித்தியாசமா சிரிக்கறீங்க!”

“மண்டூ…! அது கனவெல்லாம் இல்ல!”

“அப்ப…!” இப்போது அதிர்வது பெண்ணது முறையாயிருந்தது.

“நிஜம்!” என்றபடியே அவனது கையோடு கோர்த்திருந்த பெண்ணது புறங்கையை தூக்கி அதில் முத்தமிட, கனவுகளை நினைத்தும், அவனது தற்போதைய செயலிலும், செயல் ஒன்றுபட்டிருக்க வெட்கத்தில் சந்தனம் பூசினாற்போலிருந்த முகமெங்கும், குங்குமத்தை பாலில் கலந்து பூசியதுபோல மாறியிருந்தது.

பட்டென கையை உருவிக் கொண்டவளின் இதயம் தாறுமாறாகத் துடித்தது.

கனவின் நினைவில், தனது நிலையை எண்ணி ‘இதுகூடத் தெரியாம இவ்ளோ நாளு இருந்திருக்கேனே!’ என மனம் சஞ்சலப்பட்டிருந்தது.

சற்று நேரம் அமைதி.

அமைதியை கலைக்க எண்ணியவன், “சரி! இப்டியே சென்னைக்கு போயிருவோமா!”

பதறியவள், “மேரேஜ் ஓகே!  ஆனா இப்ப உங்ககூட யாரு சென்னை வரேன்னு சொன்னா!”

“அப்ப!” ‘இன்னும் என்னதான் பிரச்சனை இவளுக்கு’ நொந்திருந்தான்.

“நான் உங்ககூட எங்க வரதா இருந்தாலும், இனி உங்க மிசஸ்ஸா வருவேனே தவிர, மிஸ். எழில்வாணியா எங்கேயும் கூட வர்றதா ஐடியா இல்லை!” நிதானமாக, தீர்மானமாக உரைத்தாள்.

“கல்யாணம் பண்ணிக்கத்தானடீ சென்னைக்குக் கூப்பிடறேன்.  அப்புறமென்ன!  அம்மா வந்து கூப்பிட்டும், வரலைனுட்டு, இப்ப புதுசு புதுசா எதுக்கு இப்டிப் பண்ற?” கோபம் லேசாக எட்டிப் பார்த்தது.

“என்னோட முடிவு இதுதான். இதுக்குமேல நான் வேற எதுவும் செய்ய முடியாது. நீங்கதான் இனி நல்ல ஒரு முடிவா யோசிச்சுச் சொல்லணும்!”

“இங்க எல்லாரையும் கூட்டிட்டு வந்து கல்யாணம் பண்றது நடக்கிற காரியமாடீ?  அதுக்கு நீ மட்டும் அங்க கிளம்பி வந்துட்டா, எந்த பிராப்ளமும் இல்லைல!”

“அதுதான் எனக்குப் பிராப்ளம்.  என்னால இனி சென்னைக்கு, மிசஸ் வேந்தனா மட்டுமே உங்ககூட வர முடியும்.  அதுக்கு மேல உங்க இஷ்டம்!” கராறாகப் பேசிவிட்டு முகத்தை வெளியே திருப்பி, வேடிக்கை பார்ப்பதுபோல வந்தாள்.

“அப்ப நீ எடுத்த இந்த முடிவுக்கும், அன்னிக்கு நடந்த விசயத்துக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு! அப்டித்தான!”

இதுபோன்றதொரு கேள்வியை வேந்தனிடம் எதிர்பார்த்திராதவள் சட்டென வேந்தனை நோக்கித் திரும்பிப் பார்த்துவிட்டு, தலையைக் குனிந்தபடி அமைதியாகிவிட்டாள்.

அன்றைய தினத்தில் நிகழ்ந்த, முக்கிய, மனதை ரணமாக்கிய, இன்றுவரை தன்னை ஓயச் செய்திடும் பேச்சு, காதில் ஒலித்திட, தடுத்திட, அதன் தாக்கத்தில் இருந்து விடுபட இயலாத நிலையில் அமர்ந்திருந்தாள்.

‘காசுக்காகத்தான அவங்கூட ஒரே வீட்டில தங்கியிருக்க! ஒரு வீட்ல இருந்துகிட்டு, அப்டியெல்லாம் இல்லை, பத்தினிதான்னு நீ சொன்னா, யாரு நம்புனாலும், நான் நம்ப மாட்டேன். அதான் கேக்கறேன். ஒரே ஒரு நாள், எங்கூட வந்து இரு!  என்ன வேணுமோ சொல்லு!  நகையா, பணமா, பொருளா, வீடா எதுனாலும் கேளு, எவ்ளோனாலும் தரத் தயாரா இருக்கேன்.  இந்த ஒரே ஒரு தடவை மட்டும். மாட்டேன்னு மட்டும் சொல்லிறாத! யாருக்கும் இது தெரியாம நாம் பாத்துக்கறேன்! ஒன்னும் அவசரமில்லை.  இன்னைக்கேனாலும் எனக்கு ஓகேதான்!  இல்ல.. கொஞ்சம் நாளெடுக்கும்னாலும் நான் காத்திருக்கேன்! என்ன சொல்ற’ என்றவனது குரல் காதில் ஒலித்து, ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போலிருக்க, பெண் அறியாமலேயே அவளது கண்களில் இருந்து அருவியைப்போல நீர் வரத் துவங்கியிருந்தது.

வாணியின் தோற்றத்தைக் கண்டவன் பதறி, வண்டியை ஓரம் கட்டினான்.

“ஏய்! இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்டி அழற!”

“…”

“அழறதை நிறுத்து வாணீ!”

“…”

“அப்ப நான் கெஸ் பண்ண மாதிரிதான் ஏதோ அன்னிக்கு நடந்திருக்கு. உன்னை நான் ஃபோர்ஸ் பண்ணலை!  உனக்கு சொல்லணும்னா எங்கிட்ட ஷேர் பண்ணு!  இல்லனா ஒன்னும் பிராப்ளம் இல்ல! ஆனா அழாத!”

“…”

“அம்மாகிட்ட பேசிட்டு சொல்றேன்.  இப்ப நீ கண்ணத் தொட” என்று கூறியபோதும் அழுகை நின்றபாடில்லை.

“…”

“எதுக்கு அழறேன்னாவது, சொல்லிட்டு அழு வாணீ!” வேந்தன் எவ்வளவு கேட்டாலும், அழுதாலே தவிர, அவனிடம் மூச்சு விடவில்லை. 

இரவு கவிழத் துவங்கியிருக்க, “நான் சீக்கிரம் ஹாஸ்டல் போகணும்” எனத் தேம்பினாள்.

“அதுக்காகவா அழற!”

எதுவும் கூறாமல் அழுதவளை, அந்நிலையில் காணச் சகிக்காமல், தன் ஒருபக்கத் தோளோடு இழுத்தணைத்து அவளது தோளைத் தட்டி ஆறுதல் சொன்னபடியே, “மனசில இருக்கறதை பூட்டி வச்சிட்டு, ஓடி வந்து இப்டி ஒளிஞ்சிட்டா, எல்லாம் சரியாகிருமா!  எங்கிட்ட மட்டுந்தான் உன் தைரியமெல்லாம்போல!” கைவளைவில் வாணியை வைத்தபடியே, வண்டியை விடுதியை நோக்கித் திருப்பினான்.

விடுதி நெருங்கியதும், தன்னை சுதாரித்துக் கொண்டு, வேந்தனிடமிருந்து விலகியவள், தன்னை சரிசெய்து கொண்டாள்.

“அம்மாகிட்ட பேசிட்டு என்னானு சொல்றேன்.  இனியாது எனக்கு கால் பண்ணுவல்ல!”

“பாப்போம்!”

‘பார்றா’ “என்னா…து பாப்போமா.. அப்ப இவ்ளோ நேரம் பேசுனதெல்லாம் வேஸ்ட்டா!”

கையில் அலைபேசியை எடுத்தபடி, நாணத்தோடு இறங்கியவளையே இமைக்காது பார்த்திருந்தான்.

வாணியின் இந்தப் புதிய பரிமாணம், வேந்தனுக்குள் விட்டுச் செல்ல முடியாத ஏக்கத்தைத் தந்தது.

வேந்தனது அலைபேசி ஒலியெழுப்ப எடுத்தான்.

திறன்பேசித் திரையில் தெரிந்தவளை பார்த்ததுமே உல்லாச உணர்வு வேந்தனுக்குள் வியாபித்திட, அழைப்பை எடுக்க “மாமூ… பை” எனும் வாணீயின் குரலில் உற்சாகமும், உத்வேகமும் கூடியிருந்தது.

அதனை வேந்தனுக்குக் கடத்தியதோடு விடைபெற்றாள்.

……….

அனுசியாவிடம் மேலோட்டமாக விசயத்தைச் சொல்ல, “யாரோ, ஏதோ அவளைச் சொல்லியிருக்காங்க!  அதுதான் புள்ளை இவ்ளோ புடிவாதமா இருக்கா!” என்றவர், அடுத்து வாணியுடன் பேசும்போது, “அங்க ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு, இங்க வந்து ரிசப்சன் கிராண்டா வச்சிக்கலாமா வாணீ!”, எனக் கேட்க சரியென்றிருந்தாள்.

வேறு யாருக்கேனும் திருமண விசயத்தைப் பகிர வேண்டுமா எனக்கேட்டு, வாணியின் விருப்பத்தின்படி சிலருக்கு தகவல் பரிமாறப்பட்டது.

பங்களூரில் தங்கியவாறே, பதிவுத் திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தான் வேந்தன்.

தினந்தோறும் மாலை நேரம் வாணியை அழைத்துக் கொண்டு வெளியே சென்று வந்தான்.

வாங்கித் தருவதில் வள்ளலாக இருந்தவனை, வாணி தடுத்தாள்.

“எதுக்கு இப்படி பாக்கறதையெல்லாம் வாங்கிக் குமிக்கிறீங்க.  வேணுனா நானே கேக்கறேன்”

“ஆசையா வாங்கித் தரலைன்னுதான் பொண்ணுங்க சண்டை போடுவாங்கனு கேள்விப்பட்டிருக்கேன். நீ ஏன் வாணீமா இப்டி உல்டாவா இருக்க!”

“ஷ்.. இந்த மாதிரி சின்னதா வாங்கித்தந்து ஏமாத்தப் பாக்குறீங்களா! எங்கிட்ட பெரிய லிஸ்ட் இருக்கு மாமூ!” குண்டைத் தூக்கியெறிந்தாள்.

குணவான் கலங்காமல் வாணீயின் பேச்சோடு, “லிஸ்ட் எங்க?” என, அதனால் வாணிக்கு எழுந்த முகமலர்ச்சியை ரசனையோடு பார்த்திருந்தான்.

நிறையப் பேசினார்கள். காதலித்தார்கள். சிரித்தார்கள். வசந்தமான எதிர்காலத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள்.

திருமணத் தேதியும் நெருங்கியது.

காலாண்டு தேர்வுகள் துவங்கியிருக்க, அனுசியா, கலைவேந்தன், வெற்றிவேந்தன், வேந்தனது சிறிய சகோதரி, அலுவலக முக்கிய புள்ளிகள், வாணி தங்கியிருந்த விடுதியில் உள்ளவர்கள் மட்டுமே பங்களூரில் நடந்த பதிவுத் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் காவல் துறை மூத்த அதிகாரியாக இருந்தவரும், பதிவுத் திருமணத்திற்கு நேரில் வந்திருந்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

‘நினைச்ச மாதிரியே பண்ணிட்ட!  அடுத்து என்ன?’ என கேட்டவரிடம் ‘மொத்தமா லிஸ்ட்ல இருக்கறதைச் சொன்னா பயந்துக்குவாங்க சார்.  ஒவ்வொன்னா இனி நான் அதை அச்சீவ் பண்ணும்போது தெரிஞ்சுக்கட்டும்’ என சிரித்தவளை மனதார வாழ்த்தி விடைபெற்றிருந்தார்.

திருமதி. எழில்வேந்தன் எனும் மாற்றத்திற்குப் பிறகே சென்னையை நோக்கி வேந்தனோடு பயணம் மேற்கொண்டாள் வாணி.

இனி யாரையும் எதிர்கொள்வதில் பெண்ணிற்கு தடையோ, தயக்கமோ இல்லை.

நிமிர்வோடு வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தாள்.

வீட்டில், இரண்டாம் முறையாக வரவேற்பு! மேலும் விமரிசையாக இருந்தது.

பார்த்துப் புழங்கிய வீடுதான்.  ஆனாலும் புதிதாய், நிறைவாய் இருந்தது வாணிக்கு.

வேந்தனுக்கும் இதுவரையில் இருந்த அபஸ்வர உணர்வு நீங்கி, நிறைவாய், எதிர்பார்ப்போடு இருந்தான்.

வியாபாரத்தில் வெற்றி கிட்டியபோது உணர்ந்ததைக் காட்டிலும், அதற்கும் மேலாய் எதையோ சாதித்த உணர்வு!

அனுசியாவிற்கு கால் வலியெல்லாம் மறைந்தாற் போலிருந்தது. மகிழ்ச்சியோடு வலம் வந்தார்.

மீனாட்சிக்கு வர மனதில்லாதபோதும், வரவேற்பில் வந்து தலையைக் காட்டிவிட்டுக் கிளம்பும் எண்ணத்தில் இருந்தார்.

அன்று மாலையில் நடைபெற இருந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு தம்பதியர் மட்டுமன்றி, நண்பர்கள் குடும்பமும், அலுவலக அன்பர்கள் மற்றும் தொழில்முறையினர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கத் தயாரானார்கள்.

…………

ஆசை முகம்….!

குணமென்ன!

குலமென்ன!

குறைவென்ன!

குற்றமென்ன!

நிறைவென்ன!

வயதென்ன!

வளர்ப்பென்ன!

வளமென்ன!

வசதியென்ன!

வாய்ப்பென்ன!

வார்ப்பென்ன!

நிர்பந்தமென்ன!

நிராகரிப்பென்ன

நிஜமென்ன

நிழலென்ன

நினைவென்ன

எந்த

எதிர்பார்ப்புமில்லா

ஏகமனதுடன்

சரிபாதியாய்

ஏற்றுக் கொள்ளல்!

சங்கடங்களை

சகித்துக் கொள்ளல்!

காதலின் பூரணத்துவம்!

——————————-

Leave a Reply

error: Content is protected !!