அத்தியாயம் 5
அதிகாலைப் பொழுது.. தன் கதிர் கரங்களால் சூரியன் நிலமகளை வருட ஆரம்பித்திருந்தது.
ஸ்போர்ட்ஸ் ஷுவின் லேசைக் கட்டியபடியே இரண்டு வீடு தள்ளியிருந்த அந்த வீட்டைப் பார்த்தவன் நூறாவது முறையாக அதிசயப்பட்டான்.. எல்லா நாளும் போல எப்படி இவர்களால் இன்றும் இருக்க முடிகிறது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள்.. சாரி.. ஒரு வருடம் ஒன்பது மாதம் மூன்று நாட்கள் கழித்து கண்மணியைப் பார்க்கப் போகிறோம் என்று ஒரு பரபரப்பு இருக்க வேண்டாம்?
மூளை, ‘அவர்கள் மாதம் ஒரு முறை டர்ன் வச்சி போய் பார்த்துகிட்டு தானேடா இருக்காங்க’ என்று போட்டுக் கொடுத்தது.
“நான் பாக்கலயே’
அதுக்கு அவங்க ஏன் பரபரப்பா இருக்கனும். லாஜிக் பேசிய மூளையை முறைத்து விட்டு ஓட்டத்தை தொடங்கினான்.
மனம் எதை எதையோ யோசிக்க நோ நோ, இன்று எதையும் யோசிக்காதே.. என்று மனதிடம் சொல்லி கால்களின் வேகத்தைக் கூட்டினான். பசித்தவனுக்கு பண்டம்தானே பெரிது. ஆக்ஸிஜனுக்கு ஏங்கிய மூளை மற்றதை மறந்து மூச்சு விடுவதையே முழு மூச்சாய் செய்ய, வியர்வை வழிய வீடு திரும்பினான். வழியில் கண்மணி வீட்டின் கார் பார்க்கிங்கில் சேர் போட்டு தினத்தந்தி படித்துக் கொண்டிருந்த அருணைப் பார்க்க பொறாமையாக இருந்தது.
சோம்பேறி அரவிந்த் காலையிலேயே கிரிக்கெட் விளையாட கிளம்பியிருந்தான்.
ஹாய் மனோ.. குட் மார்னிங்..
கேட் வாசலில் நின்றான். “குட் மார்னிங் அருண்..”
“என்ன.. இன்னைக்கு ஜாகிங் லேட் ஆயிடுச்சி..”
“நைட் தூங்க லேட் ஆயிடுச்சி..நீ ஆஃபிஸ் கிளம்பலை?”
“இதோ கிளம்பிகிட்டே இருக்கேன். “
இப்போவாவது சொல்றானா பாரேன் கண்மணி வருவதைப் பத்தி.. சரியான அமுக்குனி.. நல்ல ஆடிட்டர் ஆவதற்கு சரியான தகுதிதான். அதுதான் ஆரம்பித்த இரண்டு வருடங்களில் மனோ கம்பெனி போக நிறைய கிளையன்ட்ஸ் சேர்த்திருக்கிறானே. மனோவின் மைன்ட் வாய்ஸ்.
“ஹப்பா.. இவ்ளோ வேர்க்க ஓடுவியா நீ.. அதான் இப்படி கிண்ணுனு இருக்க.. “தன் குட்டித் தொப்பையை ஏக்கமாய் பார்த்துக் கொண்டான்.
புன்னகைத்து “அறிவை வளர்த்தால் மட்டும் போதாது. உடம்பையும் வளர்க்கணும்.”
“அதுதான் நன்றாக வளர்கிறதே..”
“வெர்டிகலா வளர்க்கனும் சார்.. ஹாரிசான்டலா இல்லை.”
“அது அதுக்கு பிடிச்ச மாதிரிதான் வளரும்.”
ஒரு நொடி முறைத்தான்.
“இரு.. நாளையிலிருந்து சௌமியோடு ஜாகிங் வருகிறேன். அப்புறம் எல்லாம் எப்படி வருதுன்னு பார்க்கலாம்.”
ஷாக் அடித்தது போல் நிமிர்ந்த அருண் பேப்பரை போட்டுவிட்டு ஓட்டமும் நடையுமாய் வாசலுக்கு வந்தான். சுற்றியும் முற்றிலும் பார்த்தவன்,
“என்ன மனோ.. என்னவோ பேசுற”
“நான் ஒன்னும் பேசலையே..”
சந்தேகமாய் பார்த்து, “அப்புறம் ஏன் அப்படி சொன்ன?”
நான் ஒன்னும் தப்பா சொல்லலையே.. “சௌமியை ஜாகிங்கிற்கு துணைக்கு கூப்பிட்டுட்டு வரணும்னு சொன்னேன். அவ்ளோதான்..”
இன்னும் சந்தேகம் தெளியாமல் பார்த்தவனைப் பார்த்து பெரிதாய் புன்னகைத்து
“அப்போ நான் வர்றேன். பை அருண்..” என்று கையாட்டியபடியே நடந்தான்.
தலையை லேசாக சொறிந்தபடி பேப்பரை எடுத்தவனைப் பார்க்க சிரிப்பு வந்தது.
நான் மட்டும் டென்ஷனாக இருக்கணுமா.. குட்டு உடைந்ததோ என்று தலையை இன்று ஃபுல்லா உடைக்கப் போகிறான். நம்பியார் ஸ்டைலில் கையைப் பிசைந்து மனதுக்குள் சிரித்துக் கொண்டான். ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்”
கதிரவன் நிலமகளை வருடி அடுத்த கட்டமாய் தழுவியிருந்த போது கையில் இருந்த பத்திரிக்கையை மூன்றாவது முறையாக படித்து முடித்திருந்தான்.
கலாவதிக்கு ஆச்சர்யம் தான். தினமும் எட்டு முப்பதுக்கு காலில் சுடு தண்ணி ஊத்தியது போல ஓடுபவன், ஒரு வாரமாக ஏழு மணிக்கே பறந்தவன் இன்னைக்கென்னவோ கீழே வந்ததே லேட்தான். ஜாகிங் முடித்து வந்ததும் லேட். வந்தவன் நேரே பேப்பரை கையிலே எடுத்துக்கொண்டு பரிட்சைக்கு படிப்பது போல் படித்துக் கொண்டிருக்கிறான். ஒரு வேளை?!!
தம்பி.. உடம்புக்கு எதுவும் பண்ணுதா..
இல்லையே, ஏன்மா..
இல்லை, ஆபிசுக்கு இன்னும் கிளம்பலையேன்னு பாத்தேன்.
12 மணிக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. அதற்கு கொஞ்சம் ரெடியாகனும். அதுதான் நேரே இங்கேயிருந்து போகப்போகிறேன்.
இது அடிக்கடி நடப்பது போல சட்டமாய் லேப்டாப் போடு ஹாலில் உட்கார்ந்தவனைப் பார்க்க அந்த தாய்க்கு ஒன்றும் தவறாக இல்லை தான்.
அப்பா, சௌமி இருவரும் சென்றதும் பார்க்கிங்கிலேயே சேர் போட்டான்.
“வேர்க்குமே பா?”
“சிக்னல் இல்லைமா.. ஃபேன் இருக்கிறதே.. அட்ஜஸ்ட் செய்துக்கிறேன்.”
ஐந்து நிமிட இடைவெளியில் அருண், அரவிந்த் அவரவர் பைக்கில் கிளம்ப, அருணாச்சலம் அங்கிள் தன் காரில் கிளம்பினார். எப்பொழுதும் அவருடனே கிளம்பும் பாரதி ஆன்ட்டி மட்டும் லீவ் போட்டு விட்டார் போல மகளை வரவேற்க.
பக்கத்தில் இருந்த செல்போன் கூப்பிட எடுத்தான்.
“ஹலோ.. சொல்லு மேக்னா..”
“மனோ.. ஒரு பிரச்சனை..” குரலில் நிறைந்த பதற்றத்தைக் கவனித்தவன், “சொல்லும்மா.. என்னாச்சி”என்றான்.
“அந்த தாமஸ் வெளியே வந்திருக்கிறானாம். மாமா போன் செய்தார்.”
“அதெப்படி..”
“ம்ம்..யாரோ ஒரு உள்ளூர் அரசியல்வாதியின் சிபாரிசில் வெளியே வந்து விட்டான்.”
“ம்ம்..”
“பயமாயிருக்குது மனோ..”
“பயப்படாதே மேக்னா.. நீ இன்று ஆஃபிஸ் வரவேண்டாம். நான் கொஞ்ச நேரத்தில் அங்கே வருகிறேன்.”
“ம்ம்.. ஓகே..”
ஃபோனை வைத்தவன், நெற்றியைத் தடவியபடி கொஞ்சம் யோசித்தான்.
இன்னும் இரண்டு ஃபோன் கால்களுக்குப்பின் கார் சாவியை எடுக்க வீட்டினுள்ளே போனான்.
“என்னப்பா.. லேட்டா போறேன்னு சொன்ன..?”
“இல்லைமா.. ஒரு அவசர வேலை..” ஃபோன், பர்ஸ் எல்லாம்அதனதன் பாக்கெட்டிற்குள் போய்க் கொண்டிருந்தது.
“இந்தாப்பா.. வெயில்லேயே உட்கார்ந்து வேலை பாக்கிறியேன்னு உனக்காகத்தான் ஜுஸ் போட்டேன்.”
“ஓகே.. ஓகே.. சீக்கிரம் குடுங்க.. பட் பாதி எனக்கு.. பாதி உங்களுக்கு.. ஓகேவா..”
“எனக்கு எதுக்குபா..”
“அப்போ எனக்கும் வேண்டாம்.”
கீழே வைக்கப் போனவனை தடுத்து, “சரி, சரி.. நீ குடி..”
“ம்.. குட்..”
பாதிக்கும் கொஞ்சம் மேலேயே குடித்து, இல்லையென்றால் கலாவதிக்கு மனம் தாங்காது, அவரிடம் கொடுத்து விட்டு “பைமா..”வுடன் வீட்டிலிருந்து வெளியேறினான்.
காருக்குள் ஏற முனைந்தவன், மனோ நீயும் உன் பிளானும் என்று மனதிற்குள்ளேயே நொந்தபடி கார் கதவைத் திறந்தவன்,, ஒரு அடி தாமதித்து, கார்கதவை மூடிவிட்டு, நிமிர்ந்தான்.
இன்னும் ஒரு முறை பார்த்து விட்டு கிளம்பலாமே.. கேட்டைத் திறந்து வெளியே பார்த்தவன் உடலில் பாதத்திலிருந்து உச்சந்தலை வரை மின்சாரம் ஒரு கோடாய் பாய்ந்தது.
பாரதி ஆன்ட்டி ஒரு பையைத் தூக்க இன்னொரு பையை இறக்கிக் கொண்டிருந்தது கண்மணி.
அவசரமாய் இருந்த வேலைகளெல்லாம் வழி விட்டு நிற்க மந்திரித்து விட்ட கோழி போல நேரே கால் கண்மணி வீட்டை நோக்கி இழுத்து செல்ல, மூளை மட்டும் மனோ.. கன்ட்ரோல், கன்ட்ரோல் என்று ஓதிக் கொண்டிருந்தது. ஆனால் உடலின் எந்த உறுப்புமே அப்பொழுது மூளையின் சொல் கேட்கும் நிலையில் இல்லை.
“ஹாய் கண்மணி..”
ஷாக் அடித்தது போல் அதிர்ந்து திரும்பினாள் கண்மணி.
அவளுடைய அந்த ரியாக்சனில் தலைக்கு ஏறிய மின்சாரம் எல்லாம் ஷார்ட் சர்க்யூட் ஆகி தாறுமாறாய் தடம் தேட கண்கள் இடுங்க அவளைப் பார்த்தான்.. அவன் என்ன அவளைப் போல ஊரை விட்டா ஓடினான். இங்கே தானே இருக்கிறான். பார்க்க வருவான் என்று தெரியாதா? எதுக்கு இத்தனை அதிர்ச்சி?
இருக்காதா.. அவளுக்கு.. முடிந்த அளவு தயார் செய்திருந்தாலும் அவன் ஆஃபிஸ் கிளம்பியதற்குப் பின் போனால் என்ன என்று தோன்றியது. பன்னிரண்டு மணி நேரம் தள்ளிப் போட முடியும் போது அதை ஏன் விட வேண்டும் என்று பிளான் போட்டு, பஸ்ஸிலிருந்து இறங்கி ஒரு மணி நேரம் அங்கேயே சுற்றி, அங்கிருந்த கடைக்காரர்கள் சந்தேகமாகப் பார்த்தபோதுதான் கேப் புக் பண்ணி வீட்டிற்கு கிளம்பினாள்.
தன் ராஜதந்திரங்கள் எல்லாம் வீணாக, காரிலிருந்து பெட்டி படுக்கை இறக்குவதற்கு முன்னே, பின்னே இருந்து கண்மணி என்று இவன் நின்றால் அதிர்ச்சியாகத் தானே இருக்கும்.
இதயம் இவ்வளவு வேகமாக துடித்தால் ஒன்றும் ஆகாதா.. அவனுக்குக் கேட்குமா.. கையை மெதுவாய் உயர்த்தி துடிக்கும் இதயத்தின் மேல் வைத்துக் கொண்டாள்.
“ஹாய் மனோ.. எப்படி இருக்கீங்க..”
“ம்ம்.. நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க..”
“ம்ம்.. ஃபைன்.”
“என்ன திடீர் விஜயம்.. லீவா.. “(உனக்குத் தெரியாதா)
“ம்ம். ஆமா.. நீங்க ஆஃபிஸ் கிளம்பலை.”
“இதோ கிளம்பனும்.. “
கண்கள் நீங்க என்னமோ பேசிக்கோங்க பா.. நான் என் வேலையைப் பார்க்கிறேன் என்று அதன் பணியில் இறங்கியது.
ரப்பர் ஸ்லிப்பர், பிங்க் நிறத்தில் தொள தொள பேண்ட்(நம்ம பட்டியாலா தான்), முழங்கால் வரை பச்சை நிறத்தில் பிங்க் கலரில் சிறு சிறு பூக்களை ஆங்காங்கே இறைத்தாற் போன்ற டிசைனில் டாப்ஸ், என்னால் இவ்வளவுதான்பா முடியும் என்று ஹேர்பேண்ட் தன்னாலான முடியை சிறையில் வைத்திருக்க, சொல் பேச்சு கேளாமல் ஆங்கொன்றும் இங்கொன்றுமாய் சிலுப்பிக் கொண்டிருந்த முடிகள் சிறிதும் ஒப்பனையில்லாத முகத்தை சுற்றியிருந்தது.. அவள் முகம் அவன் மூளையின் ஒவ்வொரு நியூரானிலும் உறைந்திருக்கும் ஓவியம். அவள் முகம் பற்றி சொல்வதென்றால், அவனால் முடியாது. அவள் முகத்தை, கண்களை, இதழ்களை இது போல் அழகு என்றெல்லாம் அவனால் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. வேண்டுமென்றால் ஏதாவது ஒன்று மனங்கவர்வதாய் இருந்தால் அவளோடு ஒப்பிடுவான். ஏதாவது தொடுவதற்கு மென்மையாக இருந்தால் மனோவின் மனதிற்குள் கண்மணியின் விரல்களின் நினைவு வரும்.
அந்த விரல்கள்… மனோ… கன்ட்ரோல், கன்ட்ரோல்.. நீ ஏதாவது உணர்ச்சி வசப்பட்டால் அப்படியே பெட்டி, படுக்கையோடு பெங்களூர் கிளம்பி விடுவாள்.. ஜாக்கிரதை…
“அந்த இரண்டு பேக் எடுத்து வர உனக்கு இவ்வளவு நேரமா.. “என்றபடி பாரதி வந்தார்.
“வாப்பா மனோ.. உள்ளே வா..”
“இருக்கட்டும் ஆன்ட்டி.. வேலை இருக்கு.. நான் கிளம்புகிறேன். வர்றேன் ஆன்ட்டி.. பை கண்மணி. “
அங்கிருந்து கிளம்பியவன் நேரே போய் வண்டியை நிறுத்தியது ஒரு பெரிய வீட்டு கேட்டின் முன். வெளியே காம்பவுண்ட் சுவரில் தாமிர எழுத்துகளில் எஸ். கேசவன் என்று மட்டும் போட்டிருந்தது.
திரு.கேசவன் உயர்நிலை போலிஸ் அதிகாரி. அவர் மகன் கிஷோர் தன் தந்தை காட்டிய வழியில் ஐ.பி.எஸ் முடித்து பயிற்சி காவலராக இருக்கிறான். மனோவோடு பள்ளியில் ஒன்றாக படித்தவன்.
கார் வந்து நின்ற சத்தத்தைக் கேட்டு கிஷோர் வெளியே வந்தான்.
“ஹாய் மனோ.. எப்படி இருக்கீங்க..”
“ஃபைன் கிஷோர். “
“உள்ளே வாங்க.. அப்பா உங்களுக்காக காத்துகிட்டுருக்காங்க..”
“இதோ..”
உள்ளே வந்தவன்.. கேசவனைப் பார்த்ததும் கை கூப்பி சொன்னான்
“வணக்கம் ஸார்..”
“வணக்கம் மனோ.. உட்கார் பா.. “
பைக்கை வீட்டு பார்க்கிங்கில் நிறுத்திய அரவிந்த் காலடிச் சத்தங்களுடன் உள்ளே வந்தான்.
“வா அரவிந்த்.. உட்காரு..” கிஷோர் வரவேற்றான்.
நேரடியாக கேசவன் விசயத்திற்கு வந்தார், “நான் விசாரிச்சிப் பார்த்தேன் தம்பி. இவ்வளோ நாள் அந்த தாமசை வெளியே வராமல் வைத்ததே பெரிய விசயம்தான். இன்னும் ஆறு மாதத்தில் ஹைகோர்ட்டில் தீர்ப்பு கிடைத்து விடும். ஒரு ஐந்து வருடமாவது உள்ளே தள்ள வாய்ப்பிருக்கு. அதுக்குள்ள இப்போ அரசியல்வாதி ஒருவர் உதவியோடு வெளியே வந்து விட்டான்.”
“இப்போ என்ன சார் பண்றது..”
“பயப்படாதே அரவிந்த்.. அவன் வந்திருப்பது ஜாமினில் தான். டெய்லி கொடூர் போலிஸ் ஸ்டேஷன்ல அவன் சைன் பண்ணனும்”
“அது ஒரு பெரிய விஷயமா சார். ஒன்பது மணிக்கு சைன் பண்ணிட்டு பத்துக்கு ஹைதராபாத்திலிருந்து ஃப்ளைட் பிடிச்சா, சென்னைக்கு பன்னிரண்டுக்கு வந்துடலாம். அப்புறம் அடுத்த நாள் காலைல ஃப்ளைட் பிடிச்சி சைன் பண்ண போயிடலாம். நடுவில் என்ன வேணும்னா பண்ணலாமே..”
“இது நல்ல பாயிண்டா இருக்கே.. பேசாம அரவிந்தையே வக்கீலா போட்டிருந்தா, இந்த பெயிலைத் தடுத்திருப்பான்.. “லேசாய் புன்னகைத்து கிஷோர் சொன்னான்.
சிறிதாய் தொண்டையைக் கனைத்துக் கொண்டு கேசவன் பேச ஆரம்பித்தார், ”தப்பு செய்பவனுக்கு ஆயிரம் வழியிருந்தா அதைத் தடுக்கிறவனுக்கு ஆயிரத்தொரு வழி உண்டுனு சொல்லுவாங்க.. ஸோ.. டென்சனாகாதீங்க.. மேக்னாவை எங்கேயும் வெளியே போக வேண்டாம்னு சொல்லுங்க. அவங்க அம்மாவையும் தான். முடிந்தால் உங்கள் பக்கத்திலேயே வைத்துக் கொள்ளுங்க. பார்ப்போம்.. என்ன பண்றான்னு..”
“ம்.. ஓகே சார். நீங்களும் உங்களால் முடிந்த வரையில் ஹெல்ப் பண்ணுங்க சார்..”
“கண்டிப்பா மனோ.. போலிஸ் ஸ்டேசன், செக் போஸ்ட் எல்லோரையும் கொஞ்சம் அலர்ட் பண்ணி வைக்கிறேன். அந்த பொண்ணை எங்கே தங்க வைக்கிறீங்கனு சொல்லுங்க, அந்த ஏரியா போலிஸ் ஸ்டேசன்லயும் சொல்லி ஒரு பார்வை பார்த்துக்க சொல்றேன்.”
“ரொம்ப தேங்க்ஸ் சார். ஆபிஸ் நேரத்தில் உங்களை தொல்லை பண்ணிட்டோம்.”
“இது என்ன தொல்லைபா.. எங்க வேலைதானே.. “
“ஓகே சார். வர்றோம். பை கிஷோர்” என்றபடி எழுந்தார்கள்.
வெளியே வந்ததும் அவரவர் வண்டியில் கிளம்பி பக்கத்திலிருக்கிற காபி ஷாப்பில் மீண்டும் சந்தித்தார்கள்..
ஏதோ வாய்க்கு வந்ததை இரண்டு பேருமே சொல்லிவிட்டு வெயிட்டர் அந்த பக்கம் போனதும் அரவிந்த் தான் முதலில் பேசினான்.
“இப்போ.. என்ன பண்ண போற மனோ?..”
என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தவன்தான், ஆனாலும் அவன் கேள்வி உசுப்பேற்ற,
“என்ன?.. நான் என்ன செய்யப் போறேனா?.. நான் ஏன் அரவிந்த் எதையும் செய்யனும்?”
“என்ன மனோ.. இப்படி சொல்ற?..”
“ பின்னே? நீ லவ் பண்ற பொண்ணுக்கு பிரச்சனைனா நீதான் கஷ்டப்படனும்.. நான் ஏன் கஷ்டப்படனும்?..”
இந்த பிள்ளையும் பால் குடிக்குமா என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு குனிந்து கொண்டான் நம்ம அரவிந்த்.
( அரவிந்த்- மேக்னா ஸ்டோரி அடுத்த அத்தியாயத்தில்)