Konjam vanjam kondenadi – 29
Konjam vanjam kondenadi – 29
ஊடல்
கணவனின் கோபத்தையும் நிராகரிப்பையும் பார்த்த ஷிவானியின் முகம் வாடி வதங்கி போனது. அவள் கண்களில் நீர் தளும்பி நிற்க, சபரியின் முகத்தில் கோபம் கொப்பளித்தது.
“இப்ப என்ன தப்பா சொல்லிட்டேன்னு இப்படி மூஞ்சி தூக்கி வைச்சிக்கிட்டு போறாப்ல” என்றவர் சினத்தோடு சொல்ல,
வேதாவிற்கு கணவனின் செய்கையை எண்ணி எரிச்சல் மூண்டது.
சபரி தன் ஆத்திரம் தீராமல் குருவை கடிந்து கொண்டிருக்க, ஷிவானி இன்னும் வேதனையுற்றாள்!
அவள் தந்தை குருவை பற்றி
குறைவாய் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அவளின் இதயத்தில் ஈட்டியாய் பாய்ந்தது.
பெண்களுக்கே உரித்தான குணமது. கணவன் என்றான மறுநிமிடமே அவனை பற்றி யார் தாழ்த்தி பேசினாலும் பெண்ணவளால் தாங்க இயலாது. ஷிவானி மட்டும் விதிவிலக்கா என்ன?
அவளுக்கும் அப்படிதான் இருந்தது. ஆனால் அவ்விதம் பேசுவது அவள் நேசத்திற்குரிய தந்தையாயிற்றே. கையறுநிலையில் ஊமையாய் நின்ற தன் மகளை பார்த்து வேதா பரிதவித்தார்.
ஆனாலும் இப்போதைக்கு அவரும் எதுவும் பேசுவதற்கில்லை. பின்னர் சபரி இதையே பெரிய பிரச்சனையாக மாற்றி ஊதி பெரிசாக்கிவிட்டால்!
மௌனமாய் அடுக்களைக்குள் ஈடுபாடே இல்லாமல் மேம்போக்காய் வேலை செய்து கொண்டிருந்த வேதாவின் அருகாமையில் வந்த தங்கம்,
“சொல்றனேன்னு தப்பா நினைச்சுக்காதே… உன் வீட்டுக்காருக்கு இருந்தாலும் கொஞ்சங் கூட விவஸ்த்தையே இல்லவே… சின்னஞ்சிறுசுங்க… ஆசையா வெளியே கிளம்பிச்சுங்க… இந்த மனுஷன் உள்ளபுகுந்து எல்லாத்தையும் கெடுத்துப்புட்டாக… பாவம் ஷிவானி புள்ள… அவக முகம் அப்படியே உள்ர போயிடுச்சு” என்றவர் வருத்தபட,
“எனக்கும் அப்படியே பத்திக்கிட்டு வருது… அந்த மனுஷன் செஞ்ச காரியத்தை நினைச்சா” என்று ஆவேசமாய் பொங்கினார் வேதா.
“ஏன் வேதா? நீயாச்சும் உன் புருஷனுக்கு எடுத்து சொல்லியிருக்கலாம் இல்ல”
“அடப்போம்மா… அந்த மனுஷன் அப்படியே நான் சொல்றதை கேட்டுட்டாலும்… அவர் செய்றதுதான் சரி… இதுல நான் எதாவது பேச போய் அப்புறம் அப்பாவும் பொண்ணும் என் மேல ஏறுவாங்க” என்று கடுப்பாகி வேதா உரைக்க,
“இந்த குருவுக்கும் இம்புட்டு வீம்பாகாது… கொஞ்சங் விட்டுகொடுத்து போனாதா என்ன? அப்படியே பிடிச்ச பிடியில நிக்கான்.. பிடிவாதக்காரன்… எனக்கு ஷிவானி புள்ளய நினைச்சாதான் சங்கடமா இருக்கு… நீ போய் அவளை சமாதானப்படுத்து” என்று பொறுமியவர் வேதா செய்து கொண்டிருக்கும் வேலைகளை பறித்து கொண்டு,
“இந்த ஆக்கிறது அரிக்கிறதெல்லாம் நான் பார்த்துக்கிடுதேன்… நீ போய் புள்ளயே சமாதானப்படுத்துடி” என்றார்.
“நான் எதுக்கு சமாதானப்படுத்தனும்… அதெல்லாம் ஒண்ணும் அவசியமில்ல. கஷ்டமோ நஷ்டமோ… எல்லாத்தையும் தனியே நின்னு அவளே சமாளிக்கட்டும்… இனி அவ அப்பாவையும் வீட்டுக்காரையும் எப்படியாச்சும் அவளே சரி பண்ணட்டும்…. நான் தம்பிக்காக பேசினாலும் சரி… அவ அப்பாவுக்காக பேசினாலும் சரி… இரண்டுமே தப்பாதான் முடியும்” என்று வேதா தீர்க்கமாய் உரைத்துவிட்டு தன் வேலையை தொடர தங்கத்தின் மனம் தாங்கவில்லை.
பேத்தியை சமாதானப்படுத்துகிறேன் என அவர் புறப்பட ஏதேதோ பேசி வேதா அவரையும் தடுத்துவிட்டார்.
அறிவுரையை விட அனுபவம் சிறந்த பாடம் அல்லவா!
ஷிவானிக்கு அத்தகைய அனுபவங்கள் தேவையென்று வேதா எண்ணினார். அவள் தன் சிறுபிள்ளைத்தனத்தை விட்டு முதிர்ச்சி பெற வேண்டுமெனில் அவளே தனியாய் அவள் பிரச்சனைக்கான தீர்வை கண்டறியவேண்டும்.
ஆனால் அது முதல் அடியிலேயே நிகழ்ந்துவிடுமா என்ன? அவளுக்கு வலியும் ஏமாற்றுமே அதிகமாயிருக்க தலையணையில் முகம் புதைத்து கொண்டு அழுது கொண்டிருந்தாள்.
குருவுக்கோ மெஸ்ஸில் வேலையே ஓடவில்லை. அர்த்தமற்ற கோபத்தையும் வெறுப்பையும் அவன் எல்லோர் மீதும் காட்டி கொண்டிருந்தான். நெருங்கிய நண்பன் சுப்புவிடம் கூட தன் மனவேதனையை பகிர்ந்து கொள்ள அவனால் முடியவில்லை.
இவையெல்லாம் ஷிவானியின் மீதான கோபமென்று அவனுக்கு அவனாகவே தீர்மானித்து கொண்டாலும் அது காரணமல்ல. அவள் மீது கொண்ட தீராத தாபம். அவளை பிரிந்து வந்த சஷணத்தில் இருந்து பூதாகரமாய் அவள் நினைப்பு பெருகி கொண்டே போனது அவனுக்கு.
ஊடல் ஏற்படும் போதுதான் காதல் அபரிமிதமாய் பெருகும். குரு முடிந்தளவு வேலையை விரைவாய் முடித்து கொண்டு வீடு வந்து சேர்ந்திருந்தான்.
வீட்டிற்குள் நுழைந்தவனுக்கு தன் மாமன் முகத்தை பார்த்ததுமே அத்தனை கடுப்பாய் இருந்தது. ஆசையாய் மனைவியோடு கழிக்க வேண்டிய பொழுதெல்லாம் மண்ணோடு மண்ணாக்கிவிட்டாரே என்று!
கிட்டதட்ட சபரி குரு இருவருமே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து வெறுப்பை உமிழ்ந்து கொண்டனர். எல்லாமே ஷிவானிக்காகவும் அவள் மீது கொண்டிருக்கும் உரிமையை நிலைநாட்டி கொள்வதற்காகவும்தான்.
அந்த எண்ணம் வந்த போதே ஷிவானியின் மீது கோபத்தை காட்ட கூடாதென்று முடிவு செய்திருந்தான் குரு. ஆனால் வந்ததில் இருந்து ஒருவர் விடாமல் அவனுக்கு அறிவுரை வழங்குகிறேன் பேர்வழி என்று அவனை கடுப்பேற்றினர்.
முதலில் வள்ளியம்மை அவனிடம், “ஏம்ல புள்ள முகம் வாடிகிடக்கு… என்னல சொன்ன புள்ளய?!” என்றவர் படுக்கை நிலையிலும் தன் கோபத்தை பேரன் மீது தீவிரமாய் காட்ட,
அடுத்ததாய் முருகுவேல் அவனிடம், “புள்ளயே வெளியே கூட்டிட்டு போறேன்னு சொல்லி ஏமாத்திபுட்டியாம்… என்னல அப்படி கிழிக்கிற வேலை உனக்கு” என்று அவர் காரணம் தெரியாமலே கடிந்து கொண்டார்.
“ஆசைப்பட்டு கன்னாலம் கட்டினா மட்டும் போதாது… அவக மனசு அறிஞ்சி நடந்துக்கிடனும்” சாக்ஷாத் இந்த அறிவுரையை வழங்கியது அவனின் தெய்வ தாய் தங்கம்தான்.
நல்லவேளையாக வேதா மட்டும் அவனை எதுவும் சொல்லவில்லை.
இத்தனைக்கு பிறகும் குருவின் மனநிலை பொறுமையை கடைபிடிப்பது சாத்தியம்தானா?!
வீட்டை சுற்றிலும் ஷிவானியை தேடியவன் அவள் சோகமே உருவமாய் கிணற்றுக்கு அருகில் அமர்ந்திருப்பதை பார்த்தான்.
விறுவிறுவென அவள் அருகில் வந்து நின்றவன், “ஏ ஷிவானி” என்று உயர்த்தலாய் அழைக்க,
அவளோ அவனை பார்த்ததும் முகத்தை திருப்பி கொண்டு எழுந்து செல்ல பார்க்க அவளின் கரத்தை அழுத்தி பிடித்து கொண்டான்.
“கையை விடுங்க மாம்ஸ்” என்றவள் கோபமாய் முறைக்க,
“நான்தானாம்ல உன் மேல கோபப்படனும்… நீ எதுக்குல கோபப்படிற… போதாக்குறைக்கு எல்லோர்கிட்டயும் சோகமா இருக்க மாறி சீனை போட்டு வைச்சிருக்க… எல்லா என்னையே போட்டு சாடிறாக” என்றான் சீற்றத்தோடு !
“நான் ஒண்ணும் சீனெல்லாம் போடல… அன் அவங்க பேசினதுக்கு எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல… கையை விடுங்க நான் போகனும்” என்று பல்லைகடித்து கொண்டு உரைத்தவள் தன் கரத்தை மீட்க போராட,
“விட முடியாதுடி” என்றான் குரு.
அந்த சமயம் பார்த்து சபரி பேசியில் ஏதோ அளவளாவி கொண்டு அங்கே வர அவரின் பார்வை அவர்கள் இருவரையும் கவனிக்கலானாது.
” மாம்ஸ்… டேட் வர்றாரு.. கையை விடுங்க” என்று பதட்டப்பட்டவள் குரலையை தாழ்த்தி உறைக்க,
குருவும் சபரியை பார்த்த நொடி அவள் கரத்தை விட்டுவிட்டான்.
அவள் முன்னேறி செல்ல,
“என்னாச்சு வாணிம்மா? ஏதாச்சும் பிரச்சனையா?” என்றவர் மகளிடம் வினவ, குருவிற்கு கோபமேறியது.
ஷிவானி சட்டென்று தன் முகத்தை இயல்பு நிலைக்கு மாற்றி கொண்டவள்,
“ஒண்ணுமில்ல… ஜஸ்ட் பேசிட்டிருந்தோம்!” என்றவள் சமாளிக்க அவர் பார்வை இருவரையும் மாறிமாறி அளவெடுத்தது.
சபரி ஷிவானியிடம் தலையசைத்து அவளை உள்ளே போக சொல்ல குருவும் அவள் பின்னோடு செல்ல பார்க்க,
“குரு நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்… நில்லு” என்றார்.
குருவின் முகத்தில் அத்தனை எரிச்சல். மூச்சை இழுத்துவிட்டு கொண்டு கடுப்பாய் அவர் புறம் அவன் திரும்ப,
“என்ன பேசனும்?” என்று கேட்டபடி அவன் நின்றான்.
“காலையில நடந்த விஷயத்தை மனசில வைச்சுக்கிட்டு வாணிம்மாகிட்ட சண்டை கிண்டை போடிற வேலை வைச்சுக்காதே” என்று எச்சரிக்க அவன் முகம் கடுகடுவென மாற,
‘அவக என் பெண்ஜாதி… நான் அவ கூட சண்டை போடுவேன்… சமாதானம் ஆவேன்… இவருக்கு என்னவாம்?!’ என்று மனதிற்குள் எண்ணி கொண்டவன்
அவரிடம் தன் மனவுணர்வுகளை காட்டி கொள்ளாமல் அங்கிருந்து அகன்றான்.
அங்கிருந்து சென்ற ஷிவானியோ அறைக்குள் சென்று படுக்கையில் தன் இருகால்களை தூக்கி வைத்து கொண்டு தலைகவிழ்ந்தபடி அமர்ந்திருந்தாள்.
அவளின் குழந்தைதனமான மனது இன்னும் அந்த சின்ன ஏமாற்றத்தை ஏற்க முடியாமல் தவித்து கொண்டிருந்தது.
இதுவரை பெரிதளவில் ஏமாற்றங்களை கண்டிராதவள். கணவனுடன் செல்ல போகும் அந்த முதல் பயணத்தை குறித்து
வண்ணமயமாய் கனவொன்றை தீட்டி வைத்திருக்க அதனை அசாதாரணமாய் கலைத்துவிட்டு சென்றவன் மீது கோபம் எழாமல் என்ன செய்யும்.?
அதற்கு ஒருவிதத்தில் அவள் தந்தையும் காரணம் எனினும் அதை அவள் ஆழ்மனம் ஏற்காது. ஏற்கவே ஏற்காது. அவர் எது செய்தாலும் சரியென்று நம்பும் பிள்ளை மனம் கொண்டவளாயிற்றே!
ஷிவானியின் இத்தகைய மனநிலையை குருவால் உடனே புரிந்து கொள்ள முடியவில்லை. ஆதலாலயே அவளிடம் சற்று காரசாரமாய் பேசிவிட்டான். ஆனால் இந்த கோபமெல்லாம் அவள் அறைக்குள் தனிமையில் உட்கார்ந்திருக்கும் தோரணையை பார்த்ததும் தள்ளாட்டம் கண்டது.
உள்ளே வந்ததும் கதவை மூடி அவன் தாளிட அந்த சத்தம் கேட்டு நிமிர்ந்தவள்
“எதுக்கு இப்போ கதவை மூடினிங்க?” என்று கோபமாய்தான் கேட்டாள். ஆனால் குரல் லேசாய் நடுங்கி அவள் பதட்டத்தையும் அவனுக்கு காட்டி கொடுத்துவிட்டதே!
“எதுக்கு மூடுவாங்க… அதுக்குதான்” என்றவன் விஷமமாய் சிரித்து கொண்டே முன்னேறி வர அவள் விழிகளை சுருக்கி கோபமாய் முறைக்க அவன் புன்னகையோடு அவளை நெருங்கி கொண்டிருந்தான்.
“மாம்ஸ் வேண்டாம்… கதவை திறங்க” என்றவள் வேகமாய் கதவுபுறம் போக யத்தனிக்க,
அவளுக்கு வழிவிடாமல் பின்னே அவளை தள்ளி கொண்டு வந்தான் அவன்.
அவனை எரிப்பது போல் அத்தனை சீற்றமாய் அவள் பார்க்க,
“இப்ப எதுக்குல என்னை முறைக்க… நீதானம்ல பைக்ல வந்தா வசதிபடாதுன்னு உங்க அப்பாருகிட்ட சொன்ன… அதான் நான் உன்னைய கூட்டிட்டு போகல” என்றவன் வெகுஇயல்பாய் சொல்ல அவளின் கோபம் எல்லையை மீறியது.
“நான் ஒண்ணும் அப்படி சொல்லல… கார் பெட்டரா பைக் பெட்டரான்னு டேட் கேட்டாரு… கார் பெட்டர்னு சொன்னேன்…
ஆனா அதுக்காக… நான் உங்க கூட பைக்ல வரமாட்டேன்னு சொன்னேனா… அதுக்குள்ள நீங்களே ஒரூ முடிவு எடுத்துக்கிட்டு என் விருப்பத்தை பத்தி கூட கேட்காம போயிட்டீங்க இல்ல” என்றவள் கோபத்தோடு கேட்க, அவன் மனம் அப்போதே அவன் செய்த தவறை உணர்ந்தது.
‘அவள் விருப்பத்தை பத்தி கேட்டிருக்கலாமோ?” என்றவன் மனமும் கேள்வி எழுப்ப குற்றவுணர்வில் ஆழ்ந்தவன்,
தானும் கோபத்தில் அவசரபட்டுவிட்டோம் என்று எண்ணி வருத்தமுற்றான்.
அவளை தயக்கமாய் பார்த்தவன்,
“தப்புதேன் ஷிவானி… நான் உன்னைய ஒருவாரத்தை கேட்டிருக்கனும்… கோவத்தில மூளை வேலை செய்யல” என்று அவள் கன்னங்களை தாங்கி கொண்டு பொறுமையாக அவன் எடுத்துரைக்க,
அவளோ அவன் கரத்தை வலுகட்டாயாமாக பிரித்துவிட்டு,
“இந்த சமாளிக்கிற வேலையெல்லாம் வேண்டாம்” என்றாள்.
“மன்னிச்சிக்கிடுடி … இனிமே இப்படி நடக்காது” என்றவன் இறங்கி வர,
“மாட்டேன்” என்று முகத்தை திருப்பி கொண்டாள்.
“ஷிவானி” என்றவன் மெலிதாய் அழைக்க,
“போங்க… நான் எவ்வளவு டிஸ்ஸப்பாயின்ட் ஆயிட்டேன்னு தெரியுமா?!” என்றவள் செல்லமாய் கோபித்து கொள்ள,
“நான்தேன் மன்னிப்பு கேட்டேன் இல்ல” என்று சொல்லியபடி அவளை நெருங்கி அணைக்க,
“எனக்கு உங்க மன்னிப்பும் வேண்டாம்… ஒரு மண்ணும் வேண்டாம்” என்றவள்அவனை தள்ளிவிட்டுட்டு முதுகை காட்டி அவனை பாராமல் திரும்பி நின்று கொண்டாள்.
அதற்கு மேல் அவன் பொறுமையெல்லாம் கறைந்து போக தன் கரங்களால் அவள் இடையை வளைத்து பிடிக்க,
“மாம்ஸ் நான் கோபமா இருக்கேன்… என்னை விடுங்க” என்றவள் தவிப்புற்று
அவள் இடையை பூட்டியிருந்த கரத்தை பிரிக்க முயன்று கொண்டிருந்தாள்.
அவனோ அவளின் உறுதியை சோதிக்கும் விதமாய் அவள் முதுகுபுறம் சரிந்திருந்த கூந்தலை விலக்கிவிட்டு தன் இதழ்களால் உரச கூச்சத்தில் நெளிந்தவள்,
மெல்ல மெல்ல தன்வசம் இழுக்க
அவளால் அவள் கோபத்தை நிறுத்தி பிடிக்க முடியவில்லை. அவளை மீறி கொண்டு அவன் தொடுகையில் அவள் கோபமெல்லாம் கரைந்து போய்கொண்டிருக்க,
‘ஷிவானி ஸ்டெடியா இரு’ என்றவள் உள்ளூர அழுத்தமாய் சொன்னாலும் அவள் அவனின் தீண்டலில் மெல்ல கிறங்கி கொண்டேயிருந்தாள்.
“மாம்ஸ் என்னை விடுங்க” என்றவள் ஒருவித மயக்கமாய் சொல்ல,
“என்னடி… காத்து போன பலூன் மாறி பூஸ்ஸுனு இறங்கிப்புட்ட… உன் கோபமெல்லாம் அம்புட்டுதானா?!” என்றவன் அவள் காதுமடலை உரசியபடி கேட்டான்.
அவளுக்கு அப்போதே தான் என்ன செய்கிறோம் என்று விளங்கியது. அந்த நொடி அவன் கரங்கள் அவளின் தோள்களில் இளைப்பாற, அவன் ஒன்றும் அவளை அணைத்து கொண்டிருக்கவில்லை.
எனினும் தான் ஏன் அவனை ஓட்டி கொண்டு நிற்கிறோம் என்று கேள்வி பிறக்க முகத்தை கோபநிலையை ஏற்றி கொண்டு அவள் விலக பார்க்க
அவனோ அவளை போகவிடமால் முன்புறம் திருப்பி அவள் முகபாவத்தை பார்த்தவன்,
“பார்றா… திரும்பியும் கோபமாயிட்டாவ…. அதெப்படிறி வராத கோபத்தை வாவான்னு இழூத்து வைச்சுக்கிடுத” என்றவன் எள்ளலாய் கேட்டு புன்னகையித்தான்.
“நான் கோபமாதான் இருக்கேன்” என்றவள் சொல்லி வெட்டும் பார்வை பார்க்க அவனுக்கு சிரிப்பு பொங்கி கொண்டு வந்தது.
“அப்போ இப்போதைக்கு சமாதானம் ஆகமாட்டீங்க?!” என்றவன் முறுவலித்து கேட்க,
“மாட்டேன் மாட்டேன் மாட்டேன்” என்றவள் குரல் அத்தனை தீர்க்கமாகவும் அழுத்தமாகவும் வெளிப்பட்டது.
அவன் மூச்சை இழுத்துவிட்டு கொண்டு படுக்கையின் மீது ஏமாற்றமாய் அமர்ந்தவன், “அப்போ நான் வாங்கிட்டு வந்த அல்வாவை என்னல செய்றது… பேசாம ஐஸ்ஸுக்கும் முருகாவுக்கும் கொடுத்த அனுப்பிட வேண்டியதுதானா?!” என்றவன் ஷிவானியை பார்த்தும் பார்க்காததும் போல சொல்ல அவள் முகம் பதட்டமானது.
“ஏன் கொடுத்து அனுப்பனும்… நான் சாப்பிடுவேன்” என்று சொல்லி தன் கரத்தை அவள் நீட்ட,
“நீங்கதான் கோபமா இருக்கீகளே? அப்புறம் எப்படி நான் வாங்கிட்டு வந்த அல்வாவை சாப்பிடுவீக?!” என்று சொல்லியவன் தன் சிரிப்பை கட்டுபடுத்தி கொண்டு இறுக்கமாய் இருக்க முயன்றான்.
“எல்லா சாப்பிடுவேன் ? கொடுங்க”
“அப்போ கோபம் போயிடுச்சு… சாமதானம் ஆயிட்டீங்கன்னு வைச்சுக்கிடலாமா?!”
“அப்படி நான் சொல்லவே இல்லயே”
“நீங்க சமாதானமானதான்… அல்வா இல்லன்னா கிடையாதாக்கும்” என்றவன் கள்ளபுன்னகை வழிந்தோட சொல்ல,
“அப்படின்னா எனக்கு ஒண்ணும் வேண்டாம்… நீங்களே அந்த அல்வாவை சாப்பிடுங்க… இல்ல ஐஸ்ஸுக்கு கொடுங்க” என்றவள் நொடித்து கொண்டு செல்ல
அவன் உடனடியாய் எட்டி அவள் கரத்தை பிடித்து தன் மடியில் அமர்த்தி கொண்டான்.
“மாம்ஸ்” என்றவள் சுதாரித்து எழுந்து கொள்ள பார்க்க அவளை கெட்டியாய் பிடித்து கொண்டவன்,
“சும்மா சலம்பாதல… இந்தா… சாப்பிடு” என்றவன் எடுத்து நீட்ட அவள் உதட்டில் புன்னகை எட்டிபார்த்தது.
அதனை வாங்கி கொண்டவள் எழுந்து கொள்ள பார்க்க அவளை அவன் விடுவதாக இல்லை.
“மாமன் உனக்காக ஆசையா வாங்கிட்டு வந்திருக்கேன்… இன்னும் என்னடி கோபம்?” என்றவன் கிறக்கமாய் சொல்ல அவள் அவனை கவனியாமல் அல்லவாவை சாப்பிடுவதில் ஆர்வமாய் இருந்தாளே! என்ன செய்வது? அதுதான் ஷிவானி!
“அல்வா நல்லா இருக்கா? என்றவன் கேட்க,
“சூப்பர் மாம்ஸ்… செம டேஸ்ட்… ஆனா கம்மியா இருக்கு… பத்தல” என்றவள் வருத்தப்பட்டு சொல்லும் போதே கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் அல்வாவை மொத்தமாய் அவளே காலி செய்திருந்தாள்.
“ஏம்ல… மாமனுக்கு ஒரு வாய் ஊட்டிவிட்டிருக்கலாம் இல்ல” பரிதாபமாய் அவன் கேட்கவும் முகத்தை சுருக்கியவள்,
“ஸ்ஸ்ஸ்ஸ்… சாரி மாம்ஸ்… நல்லா இருந்துச்சா… அதான்” என்றவள் நெற்றியை தேய்த்து கொண்டாள்.
“அதெல்லாம் தெரியாது…. எனக்கு இப்போ வேணும்டி” என்றவன் இறுகிய பார்வை பார்க்க,
“காலியாயிடுச்சே” என்றவள் அந்த பார்ஸ்ஸலை திருப்பி திருப்பி காண்பித்தாள்.
“எனக்கு வேணும்” என்று கேட்டவனின் பார்வை இறங்கி அவள் உதட்டில் நிலைகொண்டுவிட
அவள் அவன் எண்ணம் புரியாதவளாய், “எப்ப்ப்படி மாம்ஸ்?” என்று சலிப்பாய் கேட்டாள்.
“இப்படி” என்று சொல்லி அந்த நொடியே அவள் முகவாயை இழுத்து அவள் இதழ்களை தன் இதழ்களோடு ஓட்ட வைத்து கொண்டான்.
அவள் உதட்டின் இனிப்பை சீராய் ருசித்தவனுக்கு போதையேற அவள் இதழை விட்டு விலகவே முடியவில்லை. அவளுக்குமே அவனாய் விடாமல் அவன் இதழை விட்டு பிரியவே மனம்வரவில்லை.
அந்த நீண்ட நெடிய முத்தத்தில் அவனூடே மொத்தமாய் அவள் கிறங்கி மருகி கொண்டிருக்க,
அவர்களின் ஊடல் கூடலாய் மாறிபோனது. அவர்களின் காதலும் தாபமும் அந்த இரவை மொத்தமாய் தின்றுவிட்டிருக்க, அவர்களின் உறவு இன்னும் அழுத்தமாய் இன்னும் இன்னும் நெருக்கமானது.
இதில் பெரும் சங்கடத்துக்குரிய விஷயம் என்னவெனில் உள்ளே இருக்கும் ஷிவானியும் குருவும் சண்டை போடுகிறார்களா அல்லது சமாதானம் ஆகியிருப்பார்களா என்பது தெரியாமல் வெளியே இருப்பவர்கள் குழம்பிய அதே சமயம் அறைகதவை தட்டவும் முடியாமல் சஞ்சலப்பட்டதுதான்.