Anal aval 4

தண்ணீர் குடுத்து நண்பனை சாந்தப்படுத்திய பிறகு,

டீக்கடை பெஞ்சில் இருவரும் அமர்ந்தனர்.

மித்ரன் தோள் மீது கை போட்டு கொண்டு வாகுவாக அமர்ந்துகொண்ட விவேகன்,

“மித்ரா டார்லிங் க்கு ஃபோன் பண்ணு” என கூற

“ஏன்டா” என கேட்டவாறே அவர்களின் தேவகி டார்லிங்கிற்கு டையல் செய்தான் மித்ரன்.

“நீ போடுடா மீதி எல்லாம் அப்பறம் சொல்றேன்.” என கூறிய விவேகன் இருவருக்கும் பால் வாங்கி வர டீ மாஸ்டரிடம் சென்றான்.

மித்ரன் டயல் செய்யவும் எதிர்ப்புறம் அழைப்பு ஏற்கப்பட்டது.

அழைப்பு ஏற்கப்பட்டதும் “ஹாய் டார்லிங்” என கூற வந்த மித்ரனை  இடைமறித்தது அக்ஷாவின் குரல்.

“ஏண்டா தடிமாட்டு பயலே, உனக்கு எல்லாம் ஃபோன் பண்ண ஒரு நேரங்காலமே இல்லையா? நானே இப்பதான் இந்த தேவகி கையில,கால்ல விழுந்து அழுது புரண்டு ஆர்ப்பாட்டம் பண்ணி குழிப்பணியாரம் செய்ய கிச்சன் பக்கம் அனுப்பிவச்சேன். பணியாரம் செய்றதுக்கு முன்னாடியே  மூக்கு வேர்த்துடுச்சா உனக்கு அதுக்குள்ளே ஃபோன் பண்ணி என் பணியாரத்துக்கு ஆப்பு வைக்க வந்துட்ட,” என அக்ஷா கூப்பாடு போட்டுக் கொண்டிருக்க.

மித்ரன் என்ன கூறுவது என தெரியாமல் பேந்த பேந்த முழித்துக் கொண்டிருந்தான்.

இருவருக்கும் பால் வாங்கிக் கொண்டு வந்த விவேகன் மித்ரனின் முழியை வைத்து நடப்பவற்றை ஓரளவுக்கு யூகித்தவன் அவனிடம் ஒரு பால் கிளாசை கொடுத்து விட்டு ஃபோனை வாங்கி பேசினான்.

“அக்ஷா குட்டி” என இவன் அழைக்கவும் எதிர்ப்புறம் வெடித்துக் கொண்டிருந்த சரவெடி சற்று அமைதியானது.

“விவேக் அண்ணா முதல்லயே நீ பேசி இருக்க வேண்டியதுதானே எதுக்கு அந்த பன்னிக்கிட்ட எல்லாம் ஃபோன் பண்ண சொல்ற+ என சலித்துக் கொண்டாள்.

“சரிடா குட்டிமா இனி நானே பண்ணுறேன். டார்லிங் கிட்ட ஃபோனை குடு இப்போ கொஞ்சம் அவசரம்” என கூறி முடிக்கும் முன்பே எதிர்ப்புறமிருந்து தேவகியின் குரல் “சொல்லு டார்லிங்” என ஒலித்தது.

அக்ஷாவை மனதில் ஸ்மார்ட் என நினைத்தவன்.

“டார்லிங் இப்போ நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ இப்போ நான் ஃபோன வச்ச பத்துநொடில வீட்ல தென்றல் புயலா வீச போற நீ என்னவோ ஏதோன்னு பயப்படாத அவ சாப்பிடவும் மாட்டா நைட்கும் சேர்த்து மித்ரன் வீட்டுல நல்லா சாப்டா சோ நீ அத நெனச்சி கவலைப்படாத. நான் காலையில வரேன்  பாய் டார்லிங்” என்று அழைப்பை துண்டித்தான்.

தேவகியும் அக்ஹாவும் எதுவும் புரியாமல் தலையை பிய்த்துக் கொண்டு இருக்க.

ஒரு தென்றல் புயலாகி வருதே…

என்னும் பாடல் வரியை நினைவு கூறும் வகையில் தென்றல் புயலென வீட்டினுள் நுழைந்தவள் அவள் கைப் பையை தூக்கி எறிந்து விட்டு அவளின் அறைக்கு சென்று கதவை தாழிடாமல் மூடிக் கொண்டாள்.

நீண்ட பெருமூச்சு ஒன்றை இழுத்துவிட்ட தேவகி ‘புயல் கரையைக் கடந்து அதன் எல்லையை அடைந்தது’ என மித்ரன் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியவர் இளைய மகளுக்காக பணியாரம் செய்ய துவங்கினார்.

மித்ரனின் அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்த விவேகன் தேவகி அனுப்பிய குறுஞ்செய்தியை பார்த்தவுடன் இதழில் இளநகை படர்ந்தது.

அவன் நகைப்பை கண்ட மித்ரன்  என்ன என ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க விவேகன் குறுஞ்செய்தியை காட்டினான். அதை பார்த்த மித்ரனும் சிரித்துவிட இருவரும் சேர்ந்து காலி கிளாசை டீ கடையில் வைத்து விட்டு வீடு நோக்கி புறப்பட்டனர்.

மித்ரனின் வீடு வந்து சேர்ந்தவர்கள் சிறிது நேரம் உரையாடிவிட்டு இரவு உணவை முடித்துக் கொண்டு படுக்கை அறைக்கு சென்றனர்.

படுக்கையில் படுத்தவாறு விவேகன் புறம் புரண்டு படுத்த மித்ரன்,

“டேய் இப்போ ஆச்சும் சொல்லுடா அவளை அழ வெச்சி தனியா அனுப்பிட்டு அப்புறம் அவளுக்கே தெரியாம அவளை ஏன்டா ஃபாலோ பண்ண ப்ளீஸ் இப்போ சொல்லு இல்லன்னா எனக்கு மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு” என புலம்பித் தள்ளிய தன் நண்பனை கண்டு விவேகன் தலையில் அடித்துக் கொண்டான்.

“இது கூடவா டா உனக்கு புரியாது மரமண்டை” என அவனின் தலையில் கொட்டியவன்.

“எப்போதுமே நாம நம்ம குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை கத்துக் கொடுக்கிறதோட மட்டும் விட்டுவிடக் கூடாது. நம்ம சொன்னது அவங்களுக்கு எவ்ளோ புரிஞ்சி இருக்கு, அதுல அவங்க கற்றுக்கொண்ட நல்லது என்ன கெட்டது என்னன்னு நாம தான் அவங்களுக்கு சோதனை வச்சு சோதிச்சு பாக்கணும்”.

“இன்னிக்கி தென்றலுக்கு நான் பண்ணது அதுமாதிரி ஒரு சின்ன டெஸ்ட் தான்” என கூறியவனை கண்ட மித்ரனின் மூளையில் பல்பு எரிய “அவ பாஸ் ஆகிட்டாளா” என குழந்தையாய் கேட்ட நண்பனை  அணைத்து கொண்ட விவேகன்.

“ஜஸ்ட் பாஸ்டா பார்டரில் பாஸ் பண்ணி இருக்கா இன்னும் நிறைய கத்துக்கணும் அவ” என கூறியவனை,

“போடா” என தள்ளி விட்டு “அவ எவ்வளவு கோபப்பட்டா எப்படி அடிச்சா நான் அவளுக்கு இரு நூறு மார்க் கொடுப்பேன். நீ என்னடான்னா ஜஸ்ட் பாஸுன்கிற” என விவேகனிடம் கோபித்துக் கொண்டான் மித்ரன்.

“நான் ஏன் அவளை அப்படி சொன்னேன்னு நாளைக்கு காலையில பாரு தெரியும்” எனக் கூறியவன் இழுத்துப் போர்த்திகொண்டு‌ படுத்து விட்டான்.

பிறகு அனைவரும் நித்ரா தேவியின் ஆளுகைக்கு உட்பட்டு உறங்கிப் போயினர்.

மறுநாள் காலை தென்றலின் வீட்டு அழைப்பு மணி ஒலிக்க கதவை திறந்த அக்க்ஷா மித்ரனையும் விவேகனையும் கண்டு சிரித்தவள், அவர்களுடன் வந்த மூன்றாம் அவனை புரியாத பார்வை பார்க்க.

“இது தமிழ் எங்க புது ஃப்ரண்டு குட்டிமா உள்ள கூட்டிட்டு வா” என கூறிய விவேகன் வீட்டினுள் செல்ல அக்ஷா தமிழை மட்டும் பார்த்து சிரித்து “உள்ள வாங்க” என அழைத்து விட்டு மித்ரனை பார்த்து ஒழுங்கு காட்டி விட்டு சென்று விட்டாள்.

தமிழும் விவேகனும் தேவகியிடம் பேசியவாறு வீட்டின் வரவேற்பறையில் அமர மித்ரனையும் அக்ஷாவையும் தென்றலை எழுப்பி கூட்டி வருமாறு பணித்தான் விவேகன்.

அவன் கூறிய வேலையை செய்யவே மாட்டேன் என அடம் பிடித்த மித்ரனை அதட்டி உருட்டி அழைத்து சென்றாள் அக்ஷா.

பிறகு விவேகன் தமிழை தேவகியிடம் அறிமுகப்படுத்தி வைத்தான்.

தென்றலின் படுக்கை அறைக்கு சென்ற மித்ரன் அவள் காதின் அருகே குனிந்து காட்டுக்கத்தல் கத்தியும் சிறு அசைவு கூட இல்லை தென்றலிடம்.

‘ஒருவேளை செத்துடளா’ என பயந்தவன் மூச்சிருக்கா என பரிசோதிக்க,

மூச்சு சீராக வந்து கொண்டிருந்தது பிறகு அவளின் முகத்தில் தண்ணீர் தெளித்தால் அக்ஷா.

போர்வையை கொண்டு முகத்தை துடைத்தவள் புரண்டு வேறு பக்கம் படுத்து கொண்டாள்.

‘இவ என்ன சரியான கும்பகர்ணியா இருப்பா போல’ என நினைத்த மித்ரனின் மூளையில் ஒரு யோசனை பொறி தட்ட உடனே அதனை செயல்படுத்த துவங்கினான்.

தென்றலின் படுக்கை அறைக்கும் சமையல் அறைக்கும் நடுவில் நின்றவன், ‘டார்லிங் அவ எழுந்துகிற மாதிரி தெரியல அவ பங்கு டீயும் பட்டர் பிஸ்கட்டையும் எனக்கு கொடுத்துடு’ என பொறுமையாக கூற,

போர்வையை வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தவள், படுக்கை அறையில் இருந்து ஓடி வந்தாள். இடையில் நின்று கொண்டிருந்த மித்ரனையும் கவனியாது இடித்து தள்ளியவள், கிச்சன் செல்ஃபில் இருந்த பட்டர் பிஸ்கெட் டப்பாவை அவளுடன் எடுத்துக்கொண்டு வரவேற்பறை வந்தவள் விவேகனை பார்த்து முகத்தைத் திருப்பிக்கொண்டு தேவகியின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.

‘சரியான பட்டர் பிஸ்கெட் பைத்தியம்’ என மனதில் நினைத்த விவேகன் அவளின் செய்கையை கண்டு  உள்ளார சிரித்துக் கொண்டான்.

தென்றல் மின்னலென ஓடி வந்த வேகத்தில் இடித்துத் தள்ளவும் கீழே விழுந்த மித்ரன் ஒரு கையால் இடுப்பை பிடித்துக்கொண்டு காலை தாங்கி தாங்கி நடந்துவர அவ்வளவு நேரம் சிரிப்பை கட்டுப் படுத்திக் கொண்டிருந்த தமிழ் மித்ரனை கண்டதும் இதற்குமேல் முடியாது என சத்தமாக சிரித்து விட.

அப்போதுதான் தென்றல் அவனை கவனித்தாள் ‘யார் இந்த புது வரவு’ என மனதில் நினைத்தவள். அவன் அருகில் வந்து அமர்ந்த மித்ரனை நோக்க அவன் தமிழை கைகாட்டி “இவன் தான் தமிழ்” என அவளிடமும் )அவள் தென்றலென” அவனிடமும் இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தான்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சினேகமாக புன்னகைத்துக் கொண்டனர்.ஆனால் ஏனோ தென்றலுக்கு அவனை முதல் முறைப்‌ பார்ப்பது போல் தோன்றவில்லை,பிறகு விவேகன் சொன்னது நினைவு வந்தது அவனும் அதே கல்லூரி என்பது அதனால் அவளின் உள்ளுணர்வை அடக்கி வைத்து விட்டாள்.

பிறகு அனைவரும் சேர்ந்து தேனீர் அருந்திக் கொண்டிருக்க விவேகன் தென்றலை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன் பார்வையின் தாக்கம் பொறுக்காமல் அவனை நிமிர்ந்து பார்த்தாள் தென்றல்.

சில நொடிகள் இருவர் பார்வையும் வழக்கம்போல் மௌனராகம் பேச,

பிறகு இருவர் இதழும் சேர்ந்து உச்சரித்தது

“ஆர் யூ ஓகே பேபி”

என,

பிறகு இருவரும் சிரித்து விட தென்றல் எழுந்து சென்று விவேகன் தோள் சாய்ந்தவாறு அமர்ந்து கொண்டாள்.

மித்ரன், “உன்ன தனியா விட்டதுக்கு அவன் உன்ன ஓகே வா ன்னு கேட்டான் அது சரி. நீ ஏன் லாஜிக்கே இல்லாம அவனை ஓகே வா ன்னு கேட்கிற ஒண்ணுமே புரியலையே” என அவன் சந்தேகத்தை கேட்க.

அவன் கேள்வியை கேட்டு சிரித்த தென்றல் பதில் கூறுமுன் விவேகன் அவன் வாய்மொழி கொண்டே தென்றலின் மனதில் உள்ளதை வார்த்தைகளில் திரையிட.

தென்றல் விவேகனை தவிர்த்து அங்கிருந்த மற்ற நால்வரும் இவர்களின் உறவின் ஆழத்தையும் ஆத்மார்த்தத்தையும் எண்ணி பெருமிதம் கொண்டனர்.

(தொடரும்)….

error: Content is protected !!