Anal aval 6

Anal aval 6

இரவு முழுவதும் தன் காதலனான ஆதவனை தேடி அலைந்த முழுமதி தேடித் தேடி ஓய்ந்து போய் மறைய தன் காதலியைத் தேடி தன் பயணத்தை கிழக்கில் தொடர்ந்தான் ஆதவன்.

விடிந்து மணி காலை பத்தை தாண்டி இருக்கவும் தெருவில் தண்ணீர் லாரி வந்து நின்றதற்கான அறிகுறியாய் லாரி டிரைவர் அதன் ஹாரனை ஓயாமல் அடித்துக் கொண்டே இருக்க அதன் இரைச்சல் தந்த எரிச்சலில் எழுந்தான் விவேகன்.

அவன் அருகில் இவ்வளவு இரைச்சலிலும் குப்புற படுத்துக் கொண்டு தூங்கும் மித்ரனை கண்டவன், ‘இவன் கும்பகர்ணன் மாதிரி தூங்குறான் இவன்  தென்றல கும்பகரணினு சொல்கிறான் எல்லாம் நேரம்’ என நினைத்து அவன் முதுகில் இரண்டு போடு போட்டவன் அறையை விட்டு வெளியே வந்து பார்க்க.

மித்துமா தண்ணீர் பிடிப்பதற்காக பித்தளைக் குடம் மற்றும் தவளைகளை காலி செய்து சுத்தப் படுத்திக் கொண்டிருந்தார்.

சுமை மிகுந்த பாத்திரங்களை அவர் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டிருக்க அவரிடம் சென்றவன்.

அவர் கையில் இருந்த பாத்திரங்களை வாங்கிக் கொண்டு,”உங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டீங்களா மித்துமா வெயிட் இல்லாத பிளாஸ்டிக் குடம் வாங்கி வச்சுக்கிட்டா இவ்வளவு சிரமம் இருக்காதுல  என்னை எழுப்பி விட்டு இருந்தா நானும் வந்திருப்பேன்ல” என பேசியவாறே அவருடன் தண்ணீர் பிடிக்க சென்றான்.

“பிளாஸ்டிக் சாமான் எல்லாம் உடம்புக்கு நல்லதில்லை கண்ணா அதுல தண்ணி புடிச்சி வச்சு குடிக்க சொல்றியா அதெல்லாம் எனக்கு பழகிடுச்சி நீ போ நான் பார்த்துக்கிறேன்” எனக் கூறியவரிடம் மறுத்து தலையசைத்துவிட்டு அவருடன் தண்ணீர்ப் பிடிக்குமிடம் சென்றடைந்தான்.

மித்துமா லாரியில் தண்ணீர் விடுபவரிடம் நின்று கொண்டு தண்ணீர் பிடித்து பிடித்து கொடுக்க அவர் கொடுக்கும் குடங்களை தோளில் ஒன்றும் கையில் ஒன்றுமாய் சுமந்து கொண்டு சென்று வீட்டிலுள்ள பாத்திரங்களை நிரப்பிக் கொண்டு இருந்தான் விவேகன்.

பாவாடை தாவணி அணிந்த குமரி முதல் பக்கத்து வீட்டு பங்கஜம் மாமி வரை குழாயடி சண்டையை நிறுத்திவிட்டு இவனை பார்வையால் பிய்த்து தின்று கொண்டிருந்தனர்.

தூங்கி எழுந்ததில் கலைந்த கேசம் காற்றில் அலை அலையாய் அசைந்தாட சட்டை அணியாது பனியன் மட்டுமே அணிந்திருந்த தெரிந்தும் தெரியாமலும் இருந்த அவன் தேகத்தில் மார்கழி மாத பனியில் நினைந்த ரோஜா போல் வியர்வை துளிகள் பூத்திருக்க.

பாகுபலி பிரபாஸ் போல ஒரு தோள்பட்டையில் பித்தளை குடத்தையும் மற்றொரு கையில் ஸ்டில் குடத்தையும் சுமந்து கொண்டு எந்த கன்னிகையின் கள்ள பார்வைக்கும் அசராத ஆறடி ஆண்மகனாய் நிமிர்ந்து நடக்கும் அவனை  காண கண் கோடி வேண்டும் தான்.

தெருவில் உள்ள அனைவரும் தன் மகனைப் பார்த்த பார்வையைக் கண்டு கொதித்துப் போன தாய் அவனுக்கு சுற்றி போடலாம் என நினைத்துக்கொண்டிருக்கையில் மின்னலென வந்து நின்றாள் தென்றல் மித்துமா அவளைக் கண்டு மிரண்டு நிற்க அங்கு நிற்கும் பெண்களின் நிலை என்னவோ என விவேகன் சிரித்துக் கொண்டான்.

வேகமாக பெண்கள் நிற்கும் வரிசைக்கு சென்றவள்.

“நீங்க எல்லாம் முன்னபின்ன ஆம்பளைங்கள பார்த்ததே இல்லையா, இப்படி வெட்கமே இல்லாமல் வைச்ச கண்ணை எடுக்காம பாக்குறீங்க வயசு பசங்க தான் அப்படின்னா வயசானது எல்லாம் இப்படித்தான் இருக்குது என்ன கருமமோ இங்க பாருங்க உங்க கண்ணு யாரை வேணும்னாலும் பார்க்கலாம்,

அத கேட்க எனக்கு உரிமை இல்லை தான் ஆனால் என் விவுவ பார்த்தீங்க கண்ண நோண்டி நானே கண்ணு தெரியாத பிள்ளைகளுக்கு டொனேட் பண்ணிடுவேன் ஜாக்கிரதை. இப்போ நீங்க என் விவு மேல வெச்ச கண்ணுக்கு அவனுக்கு மட்டும்  எதுவும் ஆச்சு யாரையும் சும்மா விடமாட்டேன் சொல்லிட்டேன்” என அங்கு இருந்த அனைவரையும் தெறிக்கவிட்டவள்.

அங்கு இருந்த காலடி பட்ட உடைந்த தார் கற்களை இரண்டு கையிலும் அள்ளிக் கொண்டு வந்து அவளின் விவுவிற்கு சுற்றி எடுத்தவள் அவனை துப்ப  சொல்லிவிட்டு அவளும் மூன்று முறை “துதுது” என  துப்பியவள்.

அதனை தூக்கி எறிந்துவிட்டு கை கால்களை அலம்பியவள் விவுவை இழுத்துக் கொண்டு அவனறை சென்றாள்.
அங்கு தூங்கும் பச்சை பிள்ளையைப் போட்டு அடித்து துவைத்து எடுத்து விட்டாள்.

வலி தாங்காமல் “ஐயோ அம்மா ஆஆஆ பேய் பேய்”என அலறி அடித்துக் கொண்டு எழுந்தவன், முன் ஷாட்சாத் நம்ம தென்றலே பேய் அவதாரம் எடுத்து நின்று கொண்டிருக்க என்றும் நேர்த்தியான முறையில் அடக்கி ஆளப்பட்டு இருக்கும் அவளின் தலைமுடி இன்று பிய்த்துப் போட்ட துடப்பம் போல் இருப்பதை கண்டவன் வலியையும் மறந்து சிரித்து விட்டான்.

“தங்களின் இந்த நிலைக்கு காரணம் யாரோ அமைச்சரே” என இவன் சுத்த தமிழில் வினவ.

அவள் இட்ட குழாயடி சண்டையை விவேகன் கூறவும் கட்டிலில் உருண்டு புரண்டு சிரிக்க துவங்கிவிட்டான் மித்ரன்.

அவனை உருட்டி கீழே தள்ளிய தென்றல் அவனை மிதி மிதி என மிதித்து சோர்ந்துபோய் கட்டிலில் கவுந்து விட்டாள்.

பிறகு விவேகன் தூக்கி விட அவன் கையைப் பற்றிக் கொண்டு எழுந்த மித்ரன்.

“அவனை யாரும் சைட் அடிச்சா நான் என்ன பண்ணுவேன் என்னை ஏன் பன்னி அடிச்சா” என ஆக்ரோஷமாக கேட்க.

“நீ எழுந்து தண்ணி பிடிக்க வேண்டியது தானடா காட்டு பன்னி, நீ போய் தண்ணி பிடிச்சிருந்தா அவனை யாரு சைட் அடிக்கப் போறாங்க” என அவளும் அதே ஆக்ரோஷத்துடன் பதில் சொல்ல,

“அப்போ என்னை யாரும் சைட் அடிக்க மாட்டாங்களா எனக்கு எதுனா ஆனாலும் பரவால்லையா” என மித்ரன் கேட்க.

“காட்டு பன்னிய எல்லாம் ஆயா கூட பார்க்காது” என தென்றல் கூறவும் மீண்டும் அங்கு கைகலப்பு நடந்தேறியது.

இவர்களின் சேட்டைகளை ரசித்துக் கொண்டே சமைத்து முடித்த மித்துமா,

“விவேக் சாப்பிட வா என அவனை தனியாக அழைத்தவர், மற்ற இருவரையும் பார்த்து பன்னிங்களா சாப்பிட வாங்க” என அவர் சிரிக்காமல் சொல்லிவிட்டு சென்று விட்டார்.

அதனைக் கேட்ட விவேகன் வாயை பொத்திக் கொண்டு சிரிக்க, மற்ற இரண்டும் மித்துமா வை முறைத்து கொண்டு நின்றிருந்தனர்.

பிறகு, மித்ரனும் விவேகனும் சென்று குளித்து முடித்து வந்தவர்கள் சாப்பிட அமர, தென்றல் அவள் வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டதாக கூறி சாப்பிட மறுக்க அவளை கையை பிடித்து இழுத்து அவன் அருகில் அமர்த்திக் கொண்ட விவேகன்,

“இப்போ என் மேல இருக்க கோவத்தை எதுக்கு சாப்பாடு மேல காட்டுற ஒழுங்கா சாப்பிடு” என கூறி அவளுக்கு ஊட்டி விட உணவை வாய் அருகே கொண்டு சென்றான் அதை வாங்க மறுத்தவள்.

மித்ரன் இடம் திரும்பி, “நான் யார் மேலயும் கோபமா இல்லை நான் வீட்டிலேயே சாப்பிட்டேன்”. என எழப் போனவளை மீண்டும் இழுத்து தன் அருகே அமர வைத்துக் கொண்டவன்.

அவள் இரு கைகளையும் அவன் ஒரு கையில் பற்றி கொண்டு,

“நேத்து காலையில ரெடியா இருனு சொல்லிட்டு டைம் சொல்லாம வந்தது தப்பு தான் நீ ஃபோன் பண்ணும் போது நான் வீட்ல இல்ல மித்ரன் கிட்டயும் சொல்லாம போயிட்டேன் அதான் அவனும் தெரியலன்னு சொல்லி இருப்பான் இதுக்காக ஏன் இவ்வளவு கோவம் இப்படி காலையிலருந்து ஒரு வார்த்தை கூட பேசாம முறைச்சிக்கிட்டே திரியிற” என  அவளை செல்லமாக கண்டித்தவன் “ஏதோ ஒரு முறை தப்பு பண்ணிட்டேன் மன்னிச்சிடு” என,

அவள் கண்ணோடு கண் நோக்கி கெஞ்ச கல்லையும் கரைத்து தூளாக்கி கூழாக்கும் ஆணவனின் பாச பார்வைக்கு மத்தியில் இவளின் கோபம் எம்மாதிறம். ஒரு கோபம் தணிய மற்றொரு கோபம் தலைதூக்கியது.

“இன்னொருமுறை சட்டை போடாமல் நீ வெளிய போன உன்னை கொன்றுவிடுவேன்” என்று மிரட்டியவள் வாயை திறக்க அவளுக்கு ஊட்டிக்கொண்டே அவனும் சாப்பிட,

“வீட்டிலேயே சாப்பிட்டேன்னு சொன்ன இப்ப சாப்பிடுற” என மித்துமா கிண்டலாக வினவ.

“என்ன மித்துமா இவனுங்க இல்லாம நான் சாப்பிட மாட்டேன் தெரியாதா” என கேட்டுக்கொண்டே அவள் சினுங்க.

“ஆமா நாங்க இல்லாமல் சாப்பிட மாட்டா ஆன ஒரு பட்டர் பிஸ்கெட் கேலு இப்பவே நட்பு ரத்து பண்ணிட்டு போய்டுவ” என மித்ரன் கூற அங்கு சிரிப்பொலி நிறைந்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு மூவர் படை வழுக்குமரம் வெங்கடேசன் சார் வீடு நோக்கி புறப்பட்டது. அவர் வீட்டிற்கு செல்லும் பேருந்தில் ஏறியவர்கள் மித்ரனும் தென்றலும் ஒரு இருக்கையில் அமர்ந்துகொள்ள விவேகன் இவர்களுக்கு அருகில் நின்று கொண்டான்.

“தனியாவா வந்த காலைல வீட்டுக்கு” என மித்ரன் தென்றலிடம்   வினவ.

“இல்ல அப்பா கூட்டிட்டு வந்தாங்க வேலை இருக்குன்னு தெரு முக்குல விட்டுட்டு போய்ட்டாங்க இன்னொரு நாள் வீட்டுக்கு வர்றேன்னு சொல்ல சொன்னாங்க” என இவள் பேசிக்கொண்டிருக்க.

மித்ரனின் அலைபேசி சிணுங்கியது அதை எடுத்து பேசியவன் வைத்தவுடன் யாரென விவேகன் வினவ.

“தமிழ் தாண்டா இன்னைக்கு சொல்லிக்கொடுக்க எப்போ வரணும்ன்னு கேட்கிறான் இவன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லாம போயிட்டு இருக்கு” என கூற மூவரும் சிரித்துக் கொண்டனர்.

பிறகு தென்றல் , “அவ்வளவு நல்லா படிக்கிற பையன் ஏன் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் படிக்கணும் டாக்டர் இன்ஜினியர் படிக்கலாமே” என அவள் மனதில் நேற்று அவன் மதிப்பெண்ணை கேட்டதிலிருந்து உறுத்திக்கொண்டிருந்த சந்தேகத்தை கேட்க.

“அவன் +2 படிக்கும்போது எக்ஸாம் டைம் ல அப்பாக்கு உடம்பு முடியாமல் போய் இறந்துட்டாராம் அதுல அவன் மார்க் குறைஞ்சு போச்சு அறிவு இருந்தாலும் காலேஜுக்கு தேவ மார்க் தான அதான் இப்படி”  என விவேகன் கூற தென்றல் “ஓஓஓஓ” என மித்ரனைப் பார்த்து கொண்டே ராகம்  வாசிக்க,

அவள் விட்ட ராகத்தில் இருந்து அவன் சந்தேகத்தைக் கேட்டான் மித்ரன்.

“உனக்கு நீயே படித்துகிற அளவுக்கு உனக்கு அறிவு இருக்குநா நீயே எங்களுக்கு சொல்லிக் கொடுக்கலாம்ல ஏன்டா அவனை வர வெச்ச” என மித்ரன் கேட்க.

“தென்றல் நல்லா படிக்கணும் நல்ல மார்க் எடுக்கணும்னு அவ அப்பாவோட கனவு. நீ நல்லா படிக்கணும் அம்மாவ பாத்துக்கணும்னு அப்படிங்கிறது உன்னோட கனவு அதனால நீங்க நல்லா மார்க் ஸ்கோர் பண்ணனும்டா ஆனா எனக்கு அப்படி இல்லைல” எனக் கூறி அவன் ஒரு கசந்த புன்னகையை உதிர்க்க.

தென்றல் மித்ரனின் தொடையில் கிள்ளி வைத்தாள்.

“ஸ்ஸ்ஸ்ஆஆஆ” என கத்தி கொண்டே அவன் தொடையை தேய்த்த மித்ரன், “எதுக்கு‌ எருமை கிள்ளுன” என தென்றலின் காதில் கிசுகிசுக்க,

“உனக்கு என்ன அறிவுஜீவி னு நினைப்பா ஏன் இது எனக்கு தெரியாதா கேட்கணும்னு கேட்டா இந்த மாதிரி தான் பதில் சொல்வானு தெரிஞ்சு தானே நான் வாய மூடிட்டு இருந்தேன். நீயும் வாய மூடிட்டு இருக்க வேண்டி தானே இப்ப பார் அவன் எவ்வளவு கஷ்டப்படுறானு இது உனக்கு இப்போ ரொம்ப தேவையான கேள்வியா எரும மாடு” என அவனை கரித்துக் கொட்டியவள் முகத்தை ஜன்னலின் புறம் திருப்பி கொண்டாள்.

‘எதையாச்சும் வாயைத் தொறந்து சொன்னா தானே எனக்கு தெரியும் இதுங்க ரெண்டும் மைண்ட் வாய்ஸ்ல கண்ணாலேயே பேசிட்டு இருந்தா எனக்கு என்ன மந்திரம் மாயாஜாலமா தெரியும் இதுங்க மைண்ட் வாய்ஸ படிக்க’ என மனதில் நினைத்த அவன் அதன் பிறகு பேசவில்லை.

பிறகு அவர்களின் பயணம் அமைதியாகவே சென்றது.

பேருந்து நிறுத்தம் வரவும் இறங்கியவர்கள் வெங்கடேசன் சார் வீட்டிற்கு சென்று அவர் வீட்டின் அழைப்புமணியை அதிர விட கதவைத் திறந்தவர் விவேகனை கண்டதும் நடுங்கியவர் அவனுக்குப்பின் நின்றிருந்த இருவரை கண்டு தன்னை திடப்படுத்திக் கொண்டு  வரவழைக்கப் பட்ட புன்னகையுடன் அவர்களை வரவேற்றார்.

அவர் விவேகனைக் கண்டு முதலில் பயந்து பிறகு தன்னை நிதானப்படுத்திக் கொண்டதை விவுவின் முதுகுக்குப் பின் நின்றதால் தென்றல் கவனிக்க வில்லை ஆனால் அவன் தோள் வரை வளர்ந்த மித்ரன் அதை கவனித்துவிட்டான்.

பிறகு தென்றலிடம் வந்தவர்,

அவளிடம் “நீ என் பொண்ணு மாதிரியே இருந்தமா அதான் நான் உன்ன பார்த்தேன் அதுல வேற எந்த தப்பான நோக்கமும் இல்லை ஆனா அது உன்னை இவ்வளவு பாதிக்கும் என்று தெரியாமல் போச்சு மன்னிச்சிடும்மா” என மன்னிப்பு கூற,

அவரின் கையைப் பற்றி ஆறுதல் கூற சென்ற தென்றலை தடுத்து நிறுத்திய விவேகன்.

“அதனால என்ன சார் அவ உங்களை மன்னிச்சிட்ட நாங்க கெளம்புறோம்” என கூறி அவளை இழுத்துக்கொண்டு முன் நடக்க அவன் சென்றதும் நிம்மதி பெருமூச்சு விட்ட வெங்கடேசனை புரியாத  பார்வை பார்த்தவரே வெளியேறினான் மித்ரன்.

பிறகு பேருந்தில் ஏறி தென்றல் வீட்டிற்கு பயணமாகினர்.

தென்றலின் காதில் இயர் ஃபோனை மாட்டிவிட்டு சத்தமாக பாடலை ஓட விட்ட மித்ரன் அவள் கையில் மொபைலை கொடுத்துவிட்டு அவள் கவனம் முழுவதும் பேருந்து ஜன்னலின் வெளியே இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு.

விவேகன் இடம் திரும்பி, “அவர என்ன பண்ண” என்று மித்ரன் கட்டுப்படுத்தப்பட்ட கோபத்துடன் பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்துத் துப்ப.

அவன் கோபத்தைக் கண்டு சிரித்தவன். “அந்த ஆள் கிட்ட தென்றலை பார்க்காதயானு பொறுமையா சொன்னா கேட்கல அதான் அவரு பொண்ண தூக்கிட்டேன்” என இவன் கூலாக கூறவும் மித்ரன் அரண்டுதான் போனான்.

இவர்களின் செல்ல ராட்சசியை அருகில் வைத்துக்கொண்டு எதுவும் பேச முடியாது என்று நினைத்தவன் அதன் பிறகு எதுவும் பேசவில்லை.

பிறகு தென்றலிடம் வீடு போய் சேர்ந்தவர்கள் அங்கு இருந்த நபரை கண்டு அதிர்ந்து நின்றனர்.

தொடரும்…

error: Content is protected !!