KarisalKattuPenne8

கரிசல் காட்டுப் பெண்ணே 8

 

விடியற்காலையின் சுபவேலையில் புது வீட்டின் வாசற்கால் நடும் விழா இனிதாக நடைப்பெற்று முடிந்திருந்தது.

பரமேஸ்வரன், கௌதமி, மரகதம், சங்கரன் மற்றும் அவ்வூரில் நெருங்கிய சொந்தங்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

உயர்தர தேக்கில், நுணுக்க வேலைப்பாடுகளோடு நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தது வாசற்நிலைகால். அதன் வடிவமைப்பை அத்தனை கவனமாக தேர்ந்தெடுத்து கிட்டத்தட்ட ஒருமாத காலம் அங்கிருந்த தச்சர்களை ஒருவழி செய்து, தன் விருப்பப்படியே அதற்கு உயிரூட்டி இருந்தான் ஸ்ரீராம்.

மயில், கிளி, திராட்சை, மாங்கனி, கொடி போன்ற பல வடிவங்கள் செதுக்கப்பட்டு பழமையிலும் புதுவித நேர்த்தியில் அமைந்திருந்த வாசற்நிலையைப் பார்த்தவர்களின் கண்கள் பூத்துவிட்டன.

உயரத்தோடும் அகலத்தோடும் நுணுக்க மரவேலைப்பாடுகளுடனும் இருந்த வாசற்நிலைக்கால் திடமான உறுதியுடன் பார்வைக்கு பிரமிப்பையும் அழகையும் கொண்டிருந்தது.

விழாவிற்கு வந்திருந்த பெண்களுக்கு மங்கள பொருட்களை கௌதமி,‌ மரகதம் வழங்க, எளிமையான காலை விருந்துடன் விழா முடிவுற்றது.

ஸ்ரீராம், கௌதமியிடம் ஒவ்வொரு இடத்தையும் காட்டி, இங்கிங்கு இந்திந்த அறை வரும் என்று விளக்கம் தர, அவர் சொல்லும் மாற்றங்களையும் குறித்துக் கொண்டான். இதில் பரமேஸ்வரன் அதிகமாக கவனமெடுத்துக் கொள்ளவில்லை. வீடு நிறைவாய் வந்தால் போதும் என்று விட்டார்.

“ஏன் ம்மா, ஜெய் அண்ணா வரல? என்மேல கோபமா?” ஸ்ரீராம் சங்கடமாக கேட்க,

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல ஸ்ரீ. அப்பா சொன்னதுல இருந்து அவனும் வேலை வேலைன்னு அலைஞ்சுட்டு இருக்கான். உன் அண்ணி கூட ஆஃபிஸ் போய் பொறுப்பா பார்த்துக்கிறா,
நீங்க ரெண்டு பேரும் உங்களுக்கான முன்னேற்றத்தை நீங்களே கையில எடுத்து செய்யறதுல அப்பாவுக்கு சந்தோசம் டா” என்று நிறைவாக சொல்லிவிட்டு நகர்ந்தார்.

அடுத்த நாளில் இருந்து புது வீட்டின் சுவர்கள் மேல் எழும்ப தொடங்கின. பெண் சித்தாட்கள் வரிசையாக நின்று ஒவ்வொரு செங்கலாய் கைமாற்றிட,
மறுபுறம், ஆண் சித்தாட்கள் மணல், சிமெண்ட், தண்ணீர் அளவாக சேர்த்து மின்னல் வேகத்தில் கலவையைக் கலந்து அதற்குரிய தாலாவில் இட்டு வைக்க, வரிசையாக நின்ற கையாட்கள் கலவை தாலாவை ஒவ்வொருவராய் கை மாற்றி மேஸ்திரிகளிடம் சேர்க்க, அவர்கள் செங்கற்களை வரிசையாக லாவகமாக அடுக்கி அதன்மேல் கலவை கொட்டி பூசினர்.

ஒரே தாளலயத்துடன் இவர்கள் வேலைகள் சங்கிலி தொடர் போல நடைப்பெற்றுக் கொண்டிருக்க, சிமெண்ட் கலவை அளவையும் மேஸ்திரிகளின் கைவேகத்தையும் லாவகத்தையும் கவனித்தப்படி ஸ்ரீராம் அடுத்தகட்ட வேலைகளை யோசித்திருந்தான்.

மாலை மூன்று மணி அளவில் தேநீர் இடைவேளை கிடைக்க, நிழல் கண்ட இடத்தில் ஆங்காங்கே வேலையாட்கள் ஆசுவாசமாக அமர்ந்துவிட, வையாபுரி அனைவருக்கும் தேநீர் எடுத்து வந்து கொடுத்தார். காலை, மாலை இருவேளையும் இவர் கடை தேநீர் தான் அவர்களுக்கு.

பெரிய வீட்டுவேலை ஆரம்பித்ததில் இவருக்கு தான் இரட்டிப்பு மகிழ்ச்சி. அவரின் டீக்கடை வருமானம் கூடியிருக்கிறது அல்லவா.

தம்பட்டம் அடிக்கும் ஓசையில் அனைவரின் கவனமும் சாலைப்பக்கம் திரும்பியது.

‘தம்பப்ப தப்பர தப்பர தப்பர
தம்பப்ப தப்பர தப்பர தப்பர
தம் தம் தம்’

“இதனால நம்மூரு ஜனங்களுக்கு சொல்லிக்கிறது என்னன்னா…

நம்மூரு எல்லையம்மன் கோயிலுக்கு…
வரும் வெள்ளிக்கிழமை திருவிழா வச்சிருக்காங்க…

புதன்கிழமை ஊருக்கு காப்பு கட்ட அறிவிச்சு இருக்காங்க…

ஊர்மக்கள் எல்லாரும் தவறாம திருவிழாவுல கலந்துட்டு அம்மன் அருள் பெற்றிட கேட்டுக் கொள்ளப்படுறாங்க…”

தம்பப்ப தப்பர தப்பர தப்பர
தம்பப்ப தப்பர தப்பர தப்பர
தம் தம் தம்…

கிராமத்தின் ஒவ்வொரு தெருவிலும் நின்று தம்பட்டம் அடித்து திருவிழா செய்தி அறிவிக்கப்பட, வெளி வாசல் வந்து அம்மனுக்கு திருவிழா எடுக்கும் செய்தி கேட்ட மக்களின் முகங்கள் யாவும் மகிழ்ச்சியில் விகசரித்தன. திருவிழா என்றாலே சந்தோசம் தானே. அதுவும் கிராமத்து ஊர் திருவிழா என்றால் அங்கே கொண்டாட்டங்களுக்கு பஞ்சம் இருக்காது அல்லவா.

புதன்கிழமை பூஜை தொடங்கி திருவிழா காப்பு கட்டப்பட, அதுவரை மெத்தனமாக இருந்த ஊர் மக்கள் புது உற்சாகம் ஊற்றெடுத்ததைப் போல பரபரப்பாய் செயல்பட்டனர்.

தெருக்கள் எல்லாம் தூய்மைப்படுத்தப்பட்டு எங்கும் தோரணங்களும் சீரியல் வண்ண விளக்குகளும் அலங்கரிக்கப்பட்டன.

சங்கரன் வீட்டிலும் சுத்தப்படுத்தும் வேலைகள் மும்முறமாக நடந்துக் கொண்டிருந்தன.

வீடு முழுவதும் ஒட்டடை அடித்து, எல்லா பொருட்களையும் எடுத்து துடைத்து ஏறகட்டி வைத்து, மூலைமுடுக்கெல்லாம் சுத்தம் செய்து என தங்கள் மனக்கவலையை சற்று தள்ளி வைத்திருந்தனர் அவர்கள்.

சீதாவின் நிச்சயம் பேசப்பட்ட மறுவாரம், ராமகிருஷ்ணன் குடும்பத்தில் வெகு நாளாய் நோய்வாய்ப்பட்டு கிடந்த பெரியதலைக்கட்டு முதியவர் ஒருவர் தவறிவிட, நிச்சய தேதி குடும்பத்தின் சாவுதீட்டு காரணமாக மூன்று மாதம் தள்ளி வைக்கப்பட்டது.

மகளுக்கு முதன் முதலாக தொடங்கிய சுபகாரிய பேச்சு தள்ளிப் போனதில், சங்கரனும் மரகதமும் மனம் கனத்து இருந்தனர். மகளின் திருமணம் எவ்வித சிக்கலும் இன்றி நன்முறையில் நடைப்பெற வேண்டுமே என்ற கவலை அவர்களுக்கு.

கோதாவரி, குலோத்துங்கன் தம்பதிகளுக்கும் மகனின் திருமணப் பேச்சு தள்ளி சென்றதில் வருத்தம் தான் என்றாலும், இதுவரை வருட கணக்கில் காத்திருந்தவர்களுக்கு இன்னும் சில மாதங்கள் பொறுத்திருப்பது பெரிதல்ல என மனதை அமைதிப்படுத்திக் கொண்டனர்.

வெறும் நிச்சயதார்த்தம் தள்ளி போனதற்காக அவர்கள் படும் மனவேதனை ஸ்ரீராமிற்கு வித்தியாசமாக இருந்தது. தனக்கு தோன்றியதை அம்மாவிடமும் கேட்டு விட்டான்.

“டேட் ஃபிக்ஸ் பண்ணி, இன்விடேஷன் கொடுத்ததுக்கு அப்புறம் என்கேஜ்மென்ட் தடைப்பட்டு இருந்தா இவங்க கவலைபடுறது ஓகே, பட், இங்க ஜஸ்ட் டேட் ஃபிக்ஸ் பண்ணலாம்னு பேசினாங்க அவ்ளோ தான்… கோதாவரி பெரிம்மா வீட்டு சொந்தகாரங்க யாரோ இறந்திட்டதால த்ரீ மன்த்ஸ் தள்ளி வச்சுக்கலாம்னு சொன்னாங்க… இதுக்கு போய் சங்கரன் மாமாவும் அத்தையும் ரொம்ப கவலை படுறாங்க… நான் என்ன சொல்லியும் கேட்கல” ஸ்ரீராம் குரலில் அலுப்பு தெரிந்தது.

“கிராமத்துல கல்யாணம்னா அது ரொம்ப பெரிய விசயமா நினைப்பாங்க ஸ்ரீ. சிட்டில மாதிரி பிடிச்சிருக்கா, பேசி முடிச்சோமா, மண்டபம் ஃபிக்ஸ் பண்ணி மேரேஜ் முடிச்சோமான்னு பிராக்டிகல் மைண்ட் செட் அவங்களுக்கு இருக்காது,

அவங்களை பொறுத்தவரைக்கும், ஒரு கன்னிப் பொண்ணை, தகுதியான ஒருத்தன்கிட்ட ஒப்படைக்கிற புனிதமான சடங்கு தான் கல்யாணம். ஒரு பொண்ணும் ஆணும் திருமண பந்தத்தில இணையறத்துக்கு தெய்வ சங்கல்பம் ரொம்ப முக்கியம்னு இப்பவும் அவங்க நம்புறாங்க, அதனால தான் சின்ன தடங்கல் ஏற்பட்டாலும் அதை தெய்வகுத்தமா நினைச்சு பதறுறாங்க” கௌதமி பொறுமையாக மகனுக்கு விளக்க,

“என்னவோ போங்க ம்மா, அத்தையும் மாமாவும் ஒண்ணுமே இல்லாத விசயத்துக்கு ஓவரா ரியாக்ட் பண்ற மாதிரி தான் எனக்கு தோணுது” என்று சலித்து கொண்டான்.

மென்மையாக சிரித்தவர், “திருமண பந்தத்தை தெய்வீக பந்தமா நினைக்கிறதால தான், கிராமங்கள்ல விவாகரத்துன்ற வார்த்தை கூட இன்னும் தள்ளி நிக்குது, சீதாவோட கல்யாணம் நல்லபடியா நடக்கணும்ற வருத்தம் தான் அண்ணாவுக்கும் மரகதத்துக்கும். நீ அவங்களுக்கு எப்பவும் சப்போட்டா இரு ஸ்ரீ” என்று கௌதமி சொல்ல, ஸ்ரீராம் ஆமோதித்துக் கொண்டான்.

“சரி மா, ஊர் திருவிழாவுக்கு வரீங்க தானே” என்று கேட்க,

“வரணும் தான், ஆனா… நம்மூரு எல்லையம்மன் ரெண்டு ஊருக்கும் பொதுவான காவல் தெய்வம். அதனால திருவிழா எடுக்குற ஒவ்வொரு வருஷமும் நம்மூருக்கும் பக்கத்தூருக்கும் பிரச்சனை வரும். அடிதடி வரைக்கும் போய் நாலு வருஷத்துக்கு மேல திருவிழா நின்னு இருந்துச்சு. அப்ப தான் கலெக்டர் ரெண்டு ஊருக்கும் சமாதானம் பேசி, நம்மூருக்கு எல்லைம்மன் கோயிலையும், பக்கத்து ஊருக்கு புதுசா ஒரு எல்லையம்மன் கோயில் கட்ட நிலம் ஒதுக்கி, நிதி திரட்டி கட்டி கொடுத்தாங்க… அதுக்கப்புறம் ரெண்டு வருஷமும் கொஞ்சம் பிரச்சனை குறைஞ்சு தான் இருக்கு. ஆனாலும் திருவிழா வரும்போது யாராவது பிரச்சனையை கிளப்பி விட்டுடுவாங்க, இந்த வருசம் கூட அதால தான் ரெண்டு மாசம் முன்ன நடந்திருக்க வேண்டிய திருவிழா தாமதமா இப்ப அறிவிச்சு இருக்காங்க போல” கௌதமி கவலையாக சொல்ல, திருவிழாவில் ஏதோ பிரச்சனை, சண்டை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை தாண்டி ஸ்ரீராம் பெரிதாக எதையும் யோசிக்கவில்லை.

“கோயில்ல முதல் பூஜை நம்ம குடும்பத்தோடது தான் ஸ்ரீ, கண்டிப்பா அப்பாவும் நானும் வந்திடுவோம், நீ எதுக்கும் ஜாக்கிரதையா இருந்துக்க டா” என்று அழைப்பை வைத்தார்.

ஊர் திருவிழாவைப் பொருட்டு இந்த வாரம் வீடு கட்டும் வேலைக்கு விடுமுறை விட்டிருந்தான் ஸ்ரீராம். ஆறு அடிகளுக்கு மேல் பாதியளவு உயர்ந்து நின்றிருந்தது கட்டிடம். கட்டப்பட்ட சுவர்களுக்கு வலு சேர்க்க, பைப்பின் வழி தண்ணீரை பீய்ச்சி அடித்து கொண்டிருந்தான். தினமும் காலையில் மாரியும் உடன் சேர்ந்து தண்ணீர் ஊற்றுவான். இன்று ஓய்வு நாள் என்பதால் இவனே செய்து கொண்டிருந்தான். முன்பக்க சுவர்கள் முடிந்து பின்பக்க சுவர்களுக்கு தண்ணீர் அடிக்க, “அய்யோ போதும் நிறுத்து சின்னா…” என்ற கத்தலில் அவன் எட்டி பார்க்க, தோட்டத்தில் பாதி நனைந்தபடி சீதாமஹாலட்சுமி இவனை முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.

“அதிசயமா இருக்கு, எங்க தோட்டத்தில மேடம் என்ன பண்றீங்க?” என்று கேட்டபடி தண்ணீரை நிறுத்திவிட்டு அவளிடம் வந்தான்.

“பார்த்தா தெரியல, மாச கணக்கா நான் வராததால களையெல்லாம் மண்டி கிடக்கு, அதான் களை பறிச்சிட்டு இருக்கேன்” என்றவள் செடிகளுக்கு ஊடே முளைத்திருந்த களையை கைகளால் பிடுங்கத் தொடங்கினாள்.

“ஊரே நாளைக்கு திருவிழா வேலையை பார்த்திட்டு இருக்கு, நீ இங்க தோட்டத்து வேலை பார்க்க வந்திருக்க” என்று அவனும் அவளுக்கு உதவியாக களையைப் பிடுங்கலானான்.

“வீடு கட்ட ஆளுங்க யாரும் வரல இல்ல, அதான் இப்ப தோட்டத்து வேலைய பார்க்கலாம்னு வந்தேன், இதோ கொஞ்ச நேரம், தோட்டத்தை சுத்தப்படுத்திட்டு போயிடுவேன்” என்று காரணம் சொல்லியவாறு கைவேலையைத் தொடர்ந்தவளின் முகத்தில் இருந்த தெளிவை கவனித்தவனுக்கு, ராமகிருஷ்ணன் இவள் மீது அடுக்கிய குறைகள் நினைவு வந்தன.

“எப்படி இருந்தாலும் நீ சென்னைல போய் தான வாழ போற, அதுக்கேத்த‌ மாதிரி இப்ப இருந்தே உன் லைஃப் ஸ்டைல் மாத்திக்க ட்ரை பண்ணு சீதா” ஸ்ரீராம் பொதுவாக எடுத்து சொல்ல,

அவனை விளங்காத பார்வை பார்த்தவள், “புரியல சின்னா, நான் என்ன மாத்திக்கணும்?” சற்றே ஏற்றி சொறுகிய பாவாடையும் தூக்கி கொண்டையிட்ட தலையும் இருகைகளிலும் சேறு படிந்திருக்க, அவனைப் பார்த்து புரியாமல் கேட்டாள்.

“டவுனு புள்ளங்க மாதிரி ஸ்டைலா ட்ரஸ் பண்ணிட்டு, நுனி நாக்குல இங்கிலிஷ் பேசிட்டு, ஹைஹீல்ஸ் செருப்ப போட்டு சோக்கா நடந்துட்டு… அப்படி இருக்கணும் க்கா, நீ சரியான பட்டிகாடு மாதிரி நின்னா, மாமாக்கு கோவந்தான் வரும்” அங்கு வந்த சக்திவேலும் அக்காவிடம் அதையே வற்புறுத்த, சீதாவின் முகம் யோசனை காட்டியது.

“கல்யாணம் முடியறவரைக்கும் தான என்னால, தோட்டந்துரவு, மாடு, கன்னெல்லாம் பார்த்துக்க முடியும், அம்மாவுக்கு வீட்டு வேலையிலும், அப்பாவுக்கு கழனி வேலையிலும் உதவியா இருக்க முடியும்… கல்யாணத்துக்கு அப்புறம் இந்த ஊரு, ஜனங்க எல்லாரையும் விட்டு எங்கேயோ தூர போக போறேன்…

மாமா ஃபிளாட்ல கோலம் போட கூட முறை வாசல் இல்ல, பின்கட்டுல தோட்டம் என்ன ரெண்டு ரோஜா செடி வைக்கக்கூட இடமில்லை. அக்கம் பக்கம் பேச ஆளுங்களும் இல்ல, இங்க இருக்கும் போதே கிடைக்கிறதை அனுபவிச்சுக்கிறேன் அது தப்பா?” சீதா ஏக்கத்தோடு நீளமாக பேச, ஸ்ரீராம், சக்திவேல் இருவரும் வாயடைத்து நின்றனர்.

ஒரு பெண்ணாய் இதுவரையில் அவள் வாழ்ந்த மனிதர்களை, சூழலை பிரிந்து போவது அவளுக்கும் கடினம் தானே!

கிராமத்து வானம்பாடியை கூண்டுகிளியாய் சிறை பிடிக்க நினைப்பதும் நியாயம் இல்லையே!

“நீ சொல்றதும் சரிதான் க்கா, ஆனா, மாமா எப்படி டிப்டாப்பா இருக்காரு, அவருக்கு ஏத்தமாதிரி நீயும் அம்சமா இருக்கணும் இல்ல…” சக்திவேல் விடாமல் கேட்க,

“அட போடா, இறுக்கமா டிரஸ்ஸும், மேக்கப்பும், ஹைஹீல்ஸ் போட்டுட்டு என்னால இங்க ஒத்த வேலை செய்ய முடியுமா?” அவள் சலிப்பாக கேட்க, அப்படி செய்தால் எப்படி இருக்கும் என யோசித்த இரு ஆண்களும் வாய்மூடி சிரித்து விட்டனர்.

“நினைச்சு பார்த்த உங்களுக்கே இப்படி சிரிப்பு வருதே, நான் போட்டுட்டு வர்றத பார்த்தா இந்த ஊரே சிரிச்சு வைக்கும், தேவையா எனக்கு” என்று வாய் கோணிக் காட்டினாள் இவள்.

ஸ்ரீராம் சிரித்தபடி, “இல்ல பாப்பு, நம்ம நாகரிகமா இருக்க, டைட்டா டிரஸ் போட்டுக்கணும், ஃபுல் மேக்கப் பண்ணிக்கணும், ஹைஹீல்ஸ் போடணும்னு அவசியம் இல்ல. மத்தவங்க பார்வைக்கு அழகா, பேச்சுக்கு இனிமையா, கூனிக்குறுகி நடக்காம நிமிர்ந்து நடந்தாலே அந்த… மிடுக்கு வந்திடும்” எளிமையாக அவன் கருத்தைச் சொன்னான்.

“அச்சோ ஸ்ரீராம், இங்கிலீஸ் பேசணும்ல அதை விட்டுட்டியே?” சக்திவேல் குதிக்க,

“இங்கிலீஷ் ஜஸ்ட் லேங்குவேஜ் மட்டும் தான் டா, காலேஜ்ல படிக்கிறவளுக்கு இங்கிலீஷ் பேசறது கஷ்டமா என்ன? சும்மா பேசி பழகினாலே தானா வந்திடும்” ஸ்ரீராம் திருத்திச் சொல்ல, அக்காவும் தம்பியும் அவனை புன்னகை விரிய பார்த்து நின்றனர். ஏனோ அவன் பேச்சு இருவரின் மனதிற்கும் இதமாக இருந்தது.

அவர்களிடம் பதில் புன்னகையை தந்து விட்டு தோட்டத்தை பார்த்தவன் புருவங்கள் நெற்றி மேடேறின. பேச்சோடு பேச்சாக தோட்டம் முழுவதையும் சுத்தம் செய்திருந்தனர் இருவரும். இவன் மட்டும் பேச்சு சுவாரஸ்யத்தில் கைவேலையை மறந்திருக்க, ஸ்ரீராம் முகத்தில் அசடு வழிய நின்றான்.

“இப்ப தான் தோட்டம் பார்க்க நல்லா இருக்குல்ல” என்று அங்கிருந்த செடி, மரங்களை பார்வையால் வருடி விட்டு, “நான் கிளம்புறேன்‌ சின்னா, அம்மா காத்துட்டு இருக்கும்” என்று பின்பக்கம் வழி விரைந்து சென்று மறைந்தாள் அவள்.

அதுவரை கலகலவென இருந்த தோட்டம் இப்போது களைமங்கி போனது போன்ற தோற்றம் அங்கே!

“உன் அக்கா இல்லைனா இந்த செடி, மரமெல்லாம் வாடி போயிடும் போல தோணுது சக்தி” தன் மனதில் பட்டதை அவன் கேட்க,

“நீ இருக்கறதால தான் அக்கா வேலையை முடிச்சிட்டு போயிடுச்சு, இல்லனன்னா, ஒவ்வொரு செடி, மரங்கிட்டையும் பேச்சு வார்த்தை நடத்திட்டு தான் போயிருக்கும்” என்று சொல்லி சிரித்தவன், “கல்யாணத்துக்கு அப்புறம் அக்கா இல்லாம, வீடு, தோட்டம், ஊரு எல்லாமே வெறிச்சோனு போயிடும் ஸ்ரீராம்” என்று தோய்வாக சொன்னான்.

சின்னவன் தலையை அழுத்தி பிடித்துக் கலைத்து விட்டவன், “கல்யாணத்துக்கு இன்னும் நாள் இருக்குடா, உன் குட்டி மூளையை வச்சு பெருசா எல்லாம் யோசிக்காம வா” என்று அவனை பிடித்து இழுத்து கொண்டு வெளியே சென்றான்.

நாளைய திருவிழாவிற்கு இன்றே ஊரெல்லாம் களைக்கட்டி இருந்தது. நான்கு பக்கங்களிலும் கட்டப்பட்ட ஸ்பீக்கரில் ஒலித்த சாமி பாட்டுக்கள் தெருக்களை எல்லாம் அதிர செய்து கொண்டிருந்தன.

பல வருடங்களுக்கு பிறகு தான் கலந்து கொள்ளும் திருவிழாவை புதுவித ஆர்வத்தோடு எதிர் நோக்கி இருந்தான் ஸ்ரீராம்.

அதேநேரம் பக்கத்து ஊரில் வீம்புகென்றே அலையும் சிலர்,

“நம்மூருக்கு சேர வேண்டிய ஆத்தா கோயிலை, அவனுங்க தட்டி பறிச்சிகிட்டு, இப்ப கொண்டாட்டமா திருவிழா எடுப்பாங்களாமா?”

“அதையும் நாம வேடிக்கை பாத்துட்டு கிடக்கணுமா?”

“குறைஞ்சது நாலு தலையாவது ஆத்தாவுக்கு காவு கொடுக்கணும்டா நாம… இதை நாம தான் செஞ்சோம்னு யாருக்கும் சந்தேகம் வர‌ கூடாது”

“தெய்வ குத்தம் தான் காரணம்னு திருவிழா பாதியில நிக்கணும், நாம பதவிசா வேடிக்கை பாக்கணும்”

“அதுகாக தான் வார கணக்கா நம்ம செவலய தயார் பண்ணி வச்சிருக்கேன் அண்ணே, நாளைக்கு பாருங்க அவனோட ஆட்டத்தை…”

என்று திட்டமிட்டவர்கள் நாளை நடக்க போவதை தங்களுக்குள் கற்பனை செய்து கொண்டு இப்போதே கொக்கரித்து சிரித்து கொண்டனர்.

# # #

வருவாள்…