Anbin mo(vi)zhiyil 13
Anbin mo(vi)zhiyil 13
அன்பின் மொ(வி)ழியில் – 13.
ரம்யாவின் வார்த்தைகளை கேட்ட ராமின் உள்ளம் துடிக்க ஒரு நொடி கூட அவனால் அங்கு இருக்க முடியவில்லை.
பிள்ளைகளை கண்ட பிறகு கூட அவன் எண்ணம் முழுவதிலும் அவனவள் மட்டுமே நிரம்பி இருந்தாள்.
வீட்டில் இருந்த யாரையும் கண்டுகொள்ளாமல் ராமின் கால்கள் இரண்டும் அவன் அனுமதியின்றி கயலை நோக்கி சென்றது.
பூம்பொழில் கிராமத்தின் குளிர்ச்சியான அந்த அழகிய ரம்யமான காலை பொழுது ராமினை எந்த விதத்திலும் இப்போது கவரவில்லை, அவனின் நினைவு எல்லாம் கயலின் காண வேண்டும் என்பதில் மட்டுமே இருந்தது.
தன்னவளுக்கு உடல் நிலை சரியில்லை என்பதை அறிந்தவன், அவனின் வீட்டிலிருந்து காற்றை விட வேகமாக அவள் வீட்டிற்க்கு வந்தவன், அறையினுள் படுத்திருந்த கயலை கண்டவுடன் அதிர்ந்து விட்டான்.
‘ஒரு பெண்ணால் ஒரே நாளில் இவ்வளவு ஓய்ந்து போக முடியுமா?’ என்று சந்தேகப்படும் அளவுக்கு அன்னிசை மலரை போன்ற மென்மையான மங்கையவள், வாடி வதங்கி போய் கட்டிலில் படுத்துக் கொண்டு இருந்தாள்.
ராம் அவளை தன்னுடைய கற்பனை என்று நினைத்த போதே, அள்ளும் பகலும் அவள் ஞாபகத்தில் இருப்பவன் உள்ளம், இப்போது உண்மையை அறிந்த பின் அவளை விட்டு விலகி இருக்குமா!.
தன்னவளில் அருகில் வந்தவன் மெதுவாக கயலின் நெற்றியில் தொட்டு பார்த்த போது அவளின் உடல் அனல் என கொதித்தது.
கயல்விழி அழுததற்கு அடையாளமாக அழகிய கன்னத்தில் கண்ணீர் கறை படிந்து இருந்தது.
அவளின் முகத்தினை மென்மையாக வருடிய ராமின் “விழி” என்ற அழைப்புக்கு எந்த வித எதிர் வினையும் செய்யாதவளை கண்டவன் உள்ளத்தில் முழுதும் சொல்ல முடியாத அளவிற்கு வேதனை ஏற்பட்டது.
அவளின் இந்த நிலைக்கு முழுமையான காரணம் அவன் அல்லவா!.
அவளின் அருகில் அமர்ந்து கொண்டு மென்மையான அவளின் கரத்தினை தன் கரங்களில் புதைத்து கொண்டவன் கண்களில் இருந்து வந்த ஒரு துளி நீர் கயலின் கைகளில் விழுந்தது.
காய்ச்சலின் வேகமா!, மன்னவன் விழிநீர் செய்த மாயமோ! …
மெல்ல தன் விழிகளை திறந்தவள், அருகில் இருந்த ராமின் கலங்கிய கண்களை கண்டு தன் மெல்லிய குரலில் முதல் முதலாக அவளவனை அழைத்தாள்.
கயலின், “ஆதிப்பா” என்ற குரல் ராமின் செவி வழி சென்று அவன், உயிர் வரை தித்தித்தது.
மனைவியின் மூலம் கணவனுக்கு கிடைக்கும் மிகபெரிய பரிசு தானே இந்த வார்த்தை.
அவனிற்கான அங்கீகாரம் அல்லவா அந்த அழைப்பு, தன்னவள் தன்னை விரும்பாவிட்டாலும் தான் அவள் மனதில் பதிந்துள்ள விதத்தை அந்த அழைப்பு உறுதி செய்வதை கண்டு நிம்மதியாக உணர்ந்தது ராமின் மனது.
ராம்- “விழி… விழி… என்ன புள்ள பண்ணுது… செத்த நேரத்துல என்னைய கலங்க விட்டுட்டே” என்றவன் வார்த்தைகள் எதுவும் கயலை சென்றடையவில்லை.
அவளின் குரல் எதையும் உணராமல் தன்னியல்பாய் தொடர்ந்தது காய்ச்சல் மயக்கத்தில்.
“ஆதிப்பா … நான் தப்பான பொண்ணு இல்லை, உங்க பணத்துக்காக ஏதும் செய்யல நான்… அன்னைக்கு உங்களை காப்பார்த்த தான் வந்தேன் ஆனா” என்றவள் குரல் கதறலாக வெளிவந்தது.
அவனின் நிலை கண்டு பயம் கலந்த வேதனை கொண்டவன் கரங்கள் எதிலிருந்தோ, அவனவளை காப்பது போல், அவளை ஏந்தி தன்னுள் அடக்கி கொண்டது.
“கண்ணம்மா நான் போய் உன்னை தப்பா நினைப்பேனா ?” என்றவனின் வார்த்தைகளை புரிந்து கொள்ள முடியாதவள்.
அழுகை குரலில் , “எனக்குன்னு இருக்கது ஆதி, ரவி மட்டும் தான். நீங்க அவுங்களை என்னை விட்டு கூட்டி போகாதிங்க ஆதிப்பா” என்றாள் கண்களில் வழியும் நீருடன் ராமின் விழிகளை பார்த்து.
ராமினால் அவளின் வார்த்தைகளை தங்கி கொள்ளவே முடியவில்லை.
“விழி நான் சொல்லறது நம்ப முடியாத ஒரு சேதியா கூட தோணலாம் அம்மு, ஆனா அதுதான் சத்தியம்”.
“உன்னை நான் ஆறு வருஷம் முன்னால் பார்த்தது, நாம கூடின அந்த நாள் எதுவும் எனக்கு நினைவுல இல்லமா, ஆனால் இதனை காலமா கனவுல, கற்பனைல எல்லா நேரமும் உன் கூட தான் வாழ்ந்துட்டு இருக்கேன், நான் கற்பனையா நினைச்ச எல்லாம் உண்மைய நடந்து, இரண்டு பெரிய புதையல கைல கொடுத்த உன்னை விட்டு என்னால எப்படி இருக்க முடியும்”.
“இதோ , இப்போ என் கைக்குள்ள இருக்க உன்னோட ஸ்பரிசத்தை நான் ஒவ்வொரு நாளும் உணர்ந்திருக்கேன் சொன்னா உன்னால நம்ப முடியுமா, ஆனா அதுதான் உண்மை , நீ எதுவும் என்கிட்ட சொல்லலைனா கூட உன்னை என்னோட ஒவ்வொரு அணுவும் நம்பும் புள்ள, நீ எனக்கு வேணும் எனக்கே எனக்காக”.
“என் மக்க (பிள்ளைகள்) எனக்கு முக்கியம் தான்லே அதைவிட நீ எனக்கு முக்கியம் கண்ணம்மா” என்றவன்.
தன்னவள் இறுக அணைத்து, அவள் நீர் நிறைந்த விழிகளில் இதழ்களை பதித்தான்.
அவளின் காய்ச்சலுக்கு காரணத்தை அறிந்து கொண்டவன் மனதில் அடுத்து செய்ய வேண்டிய விஷயம் என்னவென்று முடிவு எடுத்து , பேதையவள் முகத்தினை கண்ட போது.
அவன் பேசிய எதையும் அவள் உணரவில்லை என்பது போல, கயலின் விழிகள் இரண்டும் கலக்கத்துடனே இருந்தன.
ராம் மெல்லிய பெரு மூச்சுடன் அவளில் முகத்தை தன்னை நோக்கி திரும்பி, தன் அழுத்தமான குரலில், “விழி, நீ எப்பவும் உன் பையனுங்க கூடவே இருக்கலாம், நானே என் மக்களை, அவிங்க அம்மா கிட்டேருந்து பிரிப்பேனா, எதையும் மண்டையில் போட்டு வெசன படாம தூங்குமா” என்றவன் கரங்கள் ஆதரவாக அவளின் முதுகை வருடியது.
ராமின் வார்த்தைகளோ இல்லை, அவனுடைய மென்மையான அந்த அனைப்போ, ஏதோ ஒன்று பேதையவளை நிம்மதியடைய செய்து அவளை ஆழ்ந்த உறக்கத்தில் தள்ளியது.
தன் நெஞ்சத்தை மஞ்சமாக்கி சிறு பிள்ளை போல உறங்கியவளை கண்டவன் உள்ளம் மருகியது.
அவள் ஜுர வேகத்தில் உளறிய வார்த்தைகள் எல்லாம், தன்னை காக்க வந்து அவள் சிக்கலில் மாட்டியது போல் இருக்க அவனுள் குற்ற உணர்வு ஏற்பட்டது.
தான் அறியா விட்டாலும் தன் மூலம் அவள் அடைந்த வேதனைகளை உணர்ந்தவன் கண்களில் ஒரு தெளிவு பிறந்தது.
இனி ஒரு போதும் அவள் இன்றி தன்னால் வாழ முடியாது என்பதை அறிந்து கொண்டவன், விரைவில் தன்னவளை தன் வாழ்வுடன் இணைத்து கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்தான்.
கயலின் பயம் அனைத்தும் அதன்பிறகே தீரும் என்று எண்ணியவன், தன்னிடம் உள்ள உயர்ந்த பொக்கிஷத்தை பார்ப்பது போல கைவளைவில் தூங்கி கொண்டிருந்த கயலை பார்த்திருந்தவன், அவளின் கூந்தலில் முகம் புதைத்து அவள் அருகிலேயே கிடந்தான்.
ராமின் அருகாமையில், அன்னையின் அரவணைப்பில் தூங்கும் பிள்ளையை போல் கயலின் முகம் கலக்கம் நீங்கி மெல்ல தெளிந்திருந்தது.
*************************
கயலின் நிலையை கேட்டவுடன் யாரையும் பொருட்படுத்தாமல் செல்லும் ராமின் வேகம் கண்டு புன்னகைத்த ராஜ் “வாங்க மாம், நாம எல்லாரும் போய் சாப்பிடலாம்” என்றவன். தன் அன்னை பிள்ளைகளை அழைத்து சென்ற பின் தன் அருகில் இருந்த செல்வத்தின் முகத்தை கண்டு, “ என்ன செல்ல குட்டி தனியா நிக்கிற?, உன் கூட சுத்த இனி புதுசா ஆள ரெடி பண்ணு, ராம் இனி என் செல்லத்து கூட சுத்த முடியாது, இதுக்கு அப்புறம் அவன் சுத்த வேண்டிய ஆளே வேற” என்றான் கண்களை சிமிட்டி கிண்டலாக.
ரம்யா தன் தோழியின் வாழ்க்கை மலர்ந்ததை எண்ணி மகிழ்ச்சியுடன் இருந்தாள், இதனை நாட்களாக மனதில் இருந்த கலக்கம் நீங்கி தெளிந்திருந்தவள், ராஜின் கிண்டலை கண்டு சப்தமாக சிரித்து விட்டாள்.
செல்வன் – ரமியின் சிரிப்பை ஒரு நொடி அழுத்தமாக பார்த்தவன், பின் தன் மாமன் மகன் முகத்தை கண்டு பல்லை கடித்து, ‘பயபுள்ள நக்கலை பாரு, பொட்ட புள்ள முன்னாடி என் மானத்தை வாங்குது’ என்று எண்ணியவன்.
“அதுகென்ன மச்சான் நான் என்ன சாமியாராவாலே போகப் போறேன்… நானும் சீக்கிரம் புள்ள குட்டி பெத்துப்பேன்” என்றவனிடம்.
ராஜ்- “அதுக்கு ஒரு பெண்ணு வேணுமே முருகேசா?” என்றான் கவுண்டமணி குரலில்.
அவர்களின் பேச்சை கேட்ட ரம்யாவால் தன் சிரிப்பை அடக்க முடியவில்லை.
செல்வத்தின் கண்கள் மீண்டும் புன்னகையுடன் இருந்த ரமியின் முகத்தில் படிந்து மீண்டது.
“ஏன் மச்சான் இது உனக்கே சரியா தெரியுதாலே?” என்றவன்.
“இந்தா நிக்கிற உன் தொங்கச்சிய எனக்கு கட்டிவைலே, மத்ததை எல்லாம் நான் பாத்துக்குறேன்” என்றான் நக்கலாக.
செல்வத்தின் குரல் மட்டுமே கேலியாக வெளிவந்தது ஆனால், அவன் முகத்தில் இருந்த தீவிரத்தை கண்ட ராஜிற்கு அத்தனை நிம்மதியாக இருந்தது.
இவ்வளவு நாட்களாக ரமியின் வாழ்வை எண்ணி வருத்தப்பட்டு கொண்டிருந்தவன் மனதில் செல்வத்தின் வார்த்தைகள் மிக பெரிய மகிழ்வை அளித்தது.
செல்வத்தின் வார்த்தைகளை கேட்ட ரம்யா அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டாள், ஏதோ சிந்தனையில் அவள் முகம் கறுத்து, தன் உடல் நடுங்க , கண்கள் கலங்கி விட்டன அவளுக்கு.
ராஜிற்கு தன் அத்தை மகனை பற்றி நன்கு தெரியும், செல்வம் எதையும் ஆராயாமல் பேசி விடமாட்டான், அதே நேரத்தில் மனதில் உறுதியாக பட்டதை எந்த வித பயமும் இன்றி வெளிப்படுத்தும் தன்மையுடையவன்.
நிச்சயம் விளையாட்டாக இப்படி ஒரு விஷயத்தை சொல்ல கூடியவன் அல்ல.
செல்வத்தின் முகத்தை பார்த்து இணக்கமாக சிரித்தவன், ரம்யாவை கண்ட போது அவளில் அதிர்ந்த நிலை கண்டு மனம் வருந்தி ரமியின் அருகில் சென்றவன்.
“ஹை ரமி குட்டி அவன் சும்மா விளையாடுறான், குரங்கு குட்டி மாதிரி இருக்க உன்னை போய் பார்த்த உடனே யாருக்காவது பிடிக்குமா” என்றான் சீரியாசான குரலில்.
அவன் பேசியது கேட்டு மெல்ல தெளிந்து தலை அசைத்தவள், பின்பே அதன் அர்த்தத்தை உணர்த்தவள். பல்லை கடித்து “ராஜ் அண்ணா யாரை பார்த்து குரங்குன்னு சொல்லுறீங்க, உங்களை என்ன பன்றேன் பாருங்க” என்று அவன் அருகில் செல்வதற்குள் “உன்னைத்தான் ரமி குட்டி, நான் இதுவரைக்கும் பொய்யே சொன்னதில்லை” என்றவன் அங்கிருந்து அவள் கைகளில் சிக்காமல் ஓடிவிட்டான்.
ராஜை துரத்திக் கொண்டு ஓடியவளை கண்டு புன்னகைத்த செல்வம் அவர்களின் பின் தொடர்ந்து சென்றான்.
டைனிங் டேபிளில் இரட்டையர்கள் இருவரும் ஜாஸ்ஸின் இரு புறமும் அமர்ந்திருந்தனர்.
தன் பேரப்பிள்ளைகள் பிறந்த போது முதல் உணவை ஊட்ட முடியாத ஜாஸ், இப்போது தன் கண்களின் சந்தோஷம் மின்ன ஆதி, ரவி இருவருக்கும் உணவு ஊட்டி கொண்டிருந்தாள்.
விஷ்ணுவுக்கு இன்னமும் வியப்பு தான் குழந்தைகளை கண்டு.
ராஜ் , அப்போது மாடியில் இருந்து இறங்கி வந்த நிலாவின் அருகில் சென்று, “ பட்டு உனக்கு குட்டி பசங்கன்னா எவ்வளவு புடிக்கும்” என்றான் கேள்வியாக.
நிலா- “எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா” என்று மகிழ்ச்சியாக கூறியவள், “எனக்கு அண்ணிங்க வந்த அப்புறம், நம்ம வீட்டிலையும் நெறைய பிள்ளைகள் வருமில்ல?” என்றவள் குரலில் சிறு ஏக்கம் வெளிப்பட்டது.
அவளின் முகத்தினை கண்டு புன்னகைத்தவன், “அப்போ, டைனிங் ரூம் போ பட்டு… உனக்கான சர்பிரைஸ் அங்க இருக்கு” என்றான் விளையாட்டாக.
அண்ணனின் வார்த்தைகளை கேட்டு குழம்பியவள், சாப்பாட்டு அறைக்கு வந்த போது அங்கு இருந்த குழந்தைகளை பார்த்து இன்பமாக அதிர்ந்து தான் போனாள்.
அழகிய குண்டு கண்ணத்துடன், நீல விழிகள் அசைந்தாட தன் அன்னையுடன் கதை பேசி கொண்டு சாப்பிட்ட அந்த இரட்டையரை கண்டு.
ராஜின் புறம் திரும்பிய நிலாவின் “அண்ணா” என்ற அழைப்பில் உள்ள கேள்வியை உணர்ந்தவன்.
நிலாவின் விழிகளை கூர்ந்து நோக்கியவன் பின்னர், “ உன் ராம் அண்ணாவின் பசங்க” என்றான் ஒரு வரி பதிலாக.
அதை கேட்டவள் கண்கள் அதில் உள்ள உண்மையை நம்ப முடியாமல் பெரிதாக விரிந்தன.
அவளின் குழப்பத்தை புரிந்து கொண்டவன், “மத்ததை அப்புறம் பேசலாம் பட்டு, உனக்கு அவுங்களை பிடிக்கலையா?” என்றவன் குரலில் சிறு தவிப்பு இருந்தது.
‘சிறு பெண் அல்லவா, இதை அத்தனை எளிதில் அவளால் இவற்றை எல்லாம் புரிந்து, ஏற்றுக்கொள்ள முடியுமா?’ என்று எண்ணியவன் கண்களில் உள்ள கவலையை கண்டவள்.
“என் அண்ணன் பிள்ளைகளை எனக்கு பிடிக்காம போகுமா? ராஜ் அண்ணா” என்றவள் குதூகலமாக துள்ளி குதித்து “நான் அத்தை ஆகிட்டேன்” என்று சொல்லி பிள்ளைகளிடம் விரைந்து விட்டாள்.
ரவியின் அருகில் வந்து உக்கார்ந்தவள், குழந்தைகளை பார்த்து “செல்ல குட்டிங்களா… உங்க பேரு என்ன?” என்றவளை பார்த்த சிறுவர்கள் இருவருக்கும் அந்த அழகிய பெண்ணை ஏனோ கண்டதும் பிடித்து விட்டது.
ஆதி- “நான் அதித்யன்” என்று பெரிய மனிதனை போல் அவளிடம் கூறியவன், தன் தம்பியை கட்டி “இவன் ரவிவர்மன்” என்றான் தோரணையாக.
அவனின் அந்த நிமிர்வான அறிமுகத்தில் வியந்தவள், மெல்லிய புன்னகையுடன் ரவியின் கன்னத்தை வருடிய படி ஆதியை போலவே “நான் வெண்ணிலா” என்று அவர்களிடம் சொல்லி புன்னகைத்தாள்.
ஆதி- “நைஸ் நேம் வனி பேபி” என்றான் கண்களை சிமிட்டி குறும்பாக.
அவனின் குறும்பில் வியந்தவள் பார்வை ஒரு வித புரிதலுடன் ராஜை நோக்கியது.
நிலா தன்னை பார்ப்பதை உணர்ந்து கண்களை சிமிட்டியவன் அவர்களின் அருகில் வந்தான்.
ஆதியை போல வெளிப்படடையாக பேசாமல் இருந்தாலும், ரவிக்கு அங்கு இருந்த அனைவரையும் பிடித்து தான் இருந்தது.
இயல்பிலேயே அமைதியான ரவி , நிலாவின் முகத்தை புன்னகையுடன் பார்த்து கொண்டு இருந்தான்.
அவர்களின் அருகில் வந்த ராஜ், அவனின் அன்னை தன் அண்ணன் மைந்தர்களுக்கு ஊட்டி விடுவதை கண்டு புன்னகைத்தவன், ஆதியின் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.
ரமியும் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தாலும் ராஜை முறைக்க மறக்கவில்லை.
ரம்யாவின் முறைப்பை கண்டவன் சிரிப்புடன் செல்வத்தை பார்த்த போது, அவனின் கவனம் எல்லாம் ரமியின் மீது இருக்க ராஜ் அமைதியாக தன் கவனத்தை பிள்ளைகளிடம் திருப்பினான்.
ஆதி, ரவி இருவரும் ஜாஸ்ஸிடமும், நிலாவிடமும் விரைவிலேயே ஒட்டிக்கொண்டனர், இரத்த பந்தம் என்பது இதுதானோ!.
வேந்தனின் மரணத்திற்கு பிறகு அந்த வீட்டில் இப்போது தான் இவ்வளவு காலத்திற்கு பின் இன்பம் என்பது எல்லா இடத்திலும் நிறைந்திருந்தது.
இவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்த அதே நேரத்தில், அங்கு ஒருவன் கைகளில் உள்ள புகைப்படத்தை வன்மையாக பார்த்து கொண்டிருந்தான்.
அவன் கண்கள் இரண்டும் வஞ்சம் நிறைந்து ராஜின் உருவத்தை வெறித்து கொண்டிருந்தது.