manam5

மகிழம்பூ மனம்

மனம்-5

ஒரு மாதங்கடந்தும் தேவேந்திரனைப் பற்றிய செய்திகளைச் சேகரிக்க இயலாமல் குடும்பமே தடுமாறியிருந்தது.

மனதிற்குள் மூத்த மகனைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கப்பெறாத நிலையில், மனம் சோர்ந்து வருத்தம் மேலிட்டாலும், யாழினியின் நிலையைக் கண்டு, எதையும் தாமதிக்காமல் உடனே முடிவெடுக்க வேண்டிய நிலையில், தாங்கள் இருப்பதை எண்ணி, முருகானந்தம், அம்பிகா இருவரும் அதற்கென மெனக்கெட்டனர்.

இரண்டு நாட்களுக்கொரு முறை ஊருக்கு சென்று வந்த சரிதா பெரும்பாலும், யாழினியுடன் பொழுதைக் கழித்தார்.

அவள் எதையும் நினைத்து அமராதவாறு, அவளோடு அம்பிகாவும், சரிதாவும் நேரத்தைச் செலவிட்டனர்.

சமையல் முழுமையும் அம்பிகாவே பார்த்துக் கொண்டார்.  இடையில் வேலை செய்ய வரும் மருமகளை, சிறு சிறு வேளைகளைப் பார்க்க பணித்ததோடு, பேச்சுக் கொடுத்தபடியே அவளின் மனநிலையிலிருந்து வெளிக்கொண்டு வர தன்னால் இயன்றவரை முனைந்தார்.

சிலநாட்களில் இரவு வேளைகளில் உறக்கம் வரவில்லை என எழுந்து அமர்ந்து கொள்ளும் மகள், சரிதாவிற்கு புதியவள். 

அதுபோல் தன்னந்தனியாக எதையோ யோசித்தபடி அமர்ந்திருக்கும் மகளைப் பார்த்த சரிதா, “அம்மாவும், அப்பாவும் கட்டாயப்படுத்தி இப்டி ஒரு நிலைக்குத் தள்ளிட்டோமுன்னு நினைக்கிறியா தங்கம்”, என்ற தாயின் குரலுக்கு, எதிர்பாராத நிலையில் வந்த குரலைக் கேட்டு அதிர்ந்தாலும், தாயின் குரல் என்பதை உணர்ந்து, இல்லையென்று தலையசைத்தாள் யாழினி.

“முன்னமாதிரி கலகலன்னு இல்லைனாலும், சாதாரணமாவாவது ரெண்டு வார்த்தை பேசு!  எதையோ மனசுக்குள்ள போட்டு உன்னையே நீ வருத்திக்காத…! எங்களோட பேசு…! தயங்காம எதுனாலும் கேளு! எதாவது புக்கு வேணானாலும் சொல்லு, அப்பாகிட்ட சொல்லி வாங்கிட்டு வரச் சொல்றேன்”, என்று சரிதா கூறவே

“ஒன்னுமில்லம்மா…!”, என்று சிரிக்க முயன்று தோற்றாள் யாழினி.

தனது படுக்கையில் இருந்து எழுந்து, மகளின் அருகில் வந்தவர், “என்னம்மா… ஏன் தூக்கம் வரலயா? இல்லை… உடம்புக்கு எதுனா செய்யுதா?”, என்று கேட்க

மறுத்துத் தலையசைத்தவளை, தனது மடியில் படுக்க வைத்தார், சரிதா.

மடியில் இதமாக தலைசாய்த்துக் கொண்டவள், அவளையறியாமல் கண்ணீர் சிந்தவே, அது சரிதாவின் தேகம் தொட்டது. மகளின் கண்ணீர், தேள் கொட்டியது போன்ற உணர்வைத் தந்தது சரிதாவிற்கு.

மனம் ஓய்ந்து போனாலும், மகளிடம் எதையும் காட்டாமல், “எதுக்கும் பயப்படாத, எல்லாம் நாங்க பாத்துக்குவோம்.  நடந்ததை நினைச்சு வருத்தப்படாத…! இனி உனக்கு எல்லாம் நல்லதாவே நடக்கும்!”, என்று தலையைத் தடவிக் கொடுத்து தூங்கச் செய்தார்.

அறையில் கேட்ட பேச்சு சத்தத்தில், அங்கு எழுந்து வந்த அம்பிகா, அனைத்தையும் வெளியில் நின்று கேட்டபடியே நின்றிருந்தார். மருமகளின் நிலையை எண்ணி, எழுந்த அழுகையை சேலைத் தலைப்பால் வெளிவராமல் அடக்கி, சற்றுநேரம் நின்றுவிட்டு… அவரது படுக்கையில் வந்து அமர்ந்து கொண்டார்.

அம்பிகாவும் யாழினியை தனித்து விடாமல் பார்த்துக் கொண்டார்.

இயன்றவரை அவளுக்கு தெம்பூட்டும் வகையில் பேசினார்.

கலகலவென இருந்தவளின் கலகலப்பை மீட்டுத்தர, விரைவில் தங்களால் ஆனதைச் செய்ய கணவரை துரிதப்படுத்தியவாறே இருந்தார், அம்பிகா.

“அந்தப்புள்ளை விடற கண்ணீரை முதல்ல நிப்பாட்ட என்ன செய்யனுமோ அதைச் செய்யுங்க… அப்பத்தான் நம்ம குலம் விளங்கும்.  ரொம்ப நாள் தள்ளிப்போடாதீங்க”, என்ற மனைவியின் உந்துதலில் விரைவாகவே செயல்பட்டார் முருகானந்தம்.

யாழினியின் தந்தை, மகளிடம் மிகவும் நெருக்கம் என்றில்லாதபோதும், “ஆத்தா… நீ எதுக்கும் பயப்படாத… இந்த அப்பா இருக்கற வரை… எந்தக் குறையும் உன்னை நெருங்க விடமாட்டேன்டா…! இப்ப நடந்தது… நம்ம எதிர்பாக்காதது.  அதையும் உங்க மாமாவே முன்ன நின்னு சரிசெய்யுற முனைப்போட இருக்காங்க…! அதனால எதையும் நினைச்சு கலங்காதேம்மா!”, என்று துவண்டுபோன மகளை, தோள் தொட்டு ஆறுதல்படுத்த இயலாதபோதும், வார்த்தைகள் மூலம் வாடியிருந்த மகளின் வதனத்தை சரிசெய்ய முனைந்தார்.

————–

இருகிராம பஞ்சாயத்துப் பெரியவர்களும், பேசி ஒரு முடிவுக்கு வந்திருந்தனர்.

கிராமங்களில், கலாச்சார சீர்கேட்டைக் கண்டிக்கும் வகையிலும், அதைத் தடுக்கும் வகையிலும், சில வழிமுறைகளும், தண்டனைகளும் பின்பற்றப்பட்டு வரும் நிலையில், தேவேந்திரனின் பொறுப்பற்ற செயலைக் கண்டிக்கும் விதமாக அபராதத் தொகையினை விதித்திருந்தது. அதனை முருகானந்தம் செலுத்தியிருந்தார்.

தேவேந்திரனின் செயலுக்கு, பிராயச்சித்தம் செய்யும் விதமாக பஞ்சாயத்து என்ன கூறினாலும், அதனை சிரமேற்றுச் செய்வதாக உறுதி கூறியிருந்தார் முருகானந்தம்.

இரு குடும்பத்து பெற்றோர்களுடன், முக்கிய உறவினர்களும், இரு கிராமத்து முக்கிய பஞ்சயாத்து உறுப்பினர்களும் கலந்து கொண்ட கூட்டத்தில், “அந்தப் புள்ளைக்கு உரிய நியாயம் செய்யனும்னு முருகானந்தம் நினைக்கிறதால… ரெண்டு கிராம பஞ்சயாத்தும் பேசி எடுத்த முடிவை இப்ப இங்க சொல்லுவோம்.

ரெண்டு குடும்பத்து மக்களுக்கோ, இல்லை உறவுக்காரங்களுக்கோ நாங்க எடுத்திருக்கிற இந்த முடிவுல… எதாவது கருத்தோ, மறுப்போ, சொல்லறதா இருந்தா… தாராளமா சொல்லலாம்.  அது நியாயமா இருந்தா ஏத்துக்கிட்டு, அதுக்கு தகுந்தமாதிரி மாற்று யோசனை செய்துக்கலாம்”, என்று தனது உரையைத் துவங்கியிருந்தார் பஞ்சாயத்து.

அனைவரும் அதை ஏற்றுக்கொள்ளும் விதமாக அமைதியாக இருக்கவே, மேற்கொண்டு பேசத்துவங்கினார்.

“கல்யாணம் பண்ணிட்டாலே, ஒரு பொண்ணோ, மாப்பிள்ளையோ எதிர்பாரா விதமா தவறிட்டா(மரணித்து விட்டால்), அடுத்து இருக்கறவங்களை அப்டியே நிர்க்கதியா விட்டுற முடியாது.

ஏன்னா… அவங்க இன்னும் வாழவே ஆரம்பிக்கலங்கறதாலயும், அவங்களோட நியாயமான உணர்வுகளை மதிச்சு, இளவயசுப் புள்ளைங்களோட வாழ்க்கைய மீட்டுக் கொடுக்க…, அவங்களுக்கு இருக்கிற ஆசா பாசங்களை. முறைய அவங்க அனுபவிக்க வேண்டி, நம்ம கிராமத்து வழக்கப்படி, ஆறு மாசங்கழிச்சு இரண்டாவதா கல்யாணம் செய்து வைக்கிறது வழக்கம். 

இதெல்லாம், அவங்க முறைதவறிப் போயிறக் கூடாதுங்கறதுக்காக செய்து வைக்கிறது.  இது உங்களுக்கு எல்லாம் தெரிஞ்ச சேதிதான்.

இங்க… பையன் பொண்ணை விட்டுட்டுப் போன காரணத்தால, பொண்ணுக்கு ஏத்தமாதிரி மாப்பிள்ளை நம்ம உறவுக்காரங்ககிட்டயோ, இல்ல தெரிஞ்ச இடங்கள்ளயோ இருந்தா வந்திருக்கிறவங்க சொல்லலாம்”, பஞ்சாயத்து.

பஞ்சாயத்து தலைவரின் பேச்சைக் கேட்டு சற்றுநேரம் சலசலப்பாக அந்த இடம் இருந்தது.

அருகில் உள்ளவர்களோடு கலந்துரையாடி ஒருவழியாக பேசத் துவங்கியிருந்தனர்.

“இப்ப அந்தப் பொண்ணுக்கு… வெளியே போயி மாப்பிள்ளை பாத்து வைக்கிறதுல கொஞ்சம் சிக்கல் வரும்.  அதனால வேற எதாவது முடிவெடுங்க தலைவரே!”, கலந்து கொண்டவர்.

“ஏன்னா? பையன் எதனால விட்டுட்டுட்டுப் போனான்னு தெரியாதவங்க, இந்தப் பொண்ணை வெளிகிராமத்து ஆளுங்க எடுக்க யோசிப்பாங்க…!,

அதுதவிர அந்தப் பையனோட இரண்டு மாசங்கிட்ட வாழ்ந்திருக்குங்கறப்போ… யாரும் அவங்க வீட்டுப் பசங்களுக்கு முதல் தாரமா எடுக்கவும், நம்ம ஊரு ஆளுங்க யோசிப்பாங்கள்ல…”, உறுப்பினர் 7

“இரண்டாந்தாரமென்பது, மனைவியை இழந்தவர்களாக இருக்கிறவங்களை மட்டும் கேக்கச் சொல்லனும், மனைவி இருக்கும்போது ரெண்டாந்தாரம் பண்ண முன்வரவங்களை அனுமதிக்க முடியாது”, என்று பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் கூற, அங்கு சிரிப்பலை உருவானது.

“நம்ம ஆளுங்களைப் பத்தி நல்லா கணிச்சு வச்சிருக்காரு போல!”, என்று தங்களுக்குள்ளாகவே பேசிச் சிரித்துக் கொண்டனர்.

“ரொம்ப வருசம் குழந்தையில்லாம இருக்கறவங்களா இருந்து, முதல் மனைவி சம்மதிச்சா… ரெண்டாந்தர கல்யாணம் பண்ண விரும்புறவங்களும் இருந்தா சொல்லலாம்”, என்று பஞ்சாயத்து கூற.

“இரண்டாந்தாரமான்னா… பொண்ணு எடுத்துக்க யோசிக்க மாட்டாங்க… முதல் தாரமா எடுக்கதான் யாருக்கும் மனசு வராது”, உறுப்பினர் 2

“இரண்டாந்தாரமான்னாலும் சரி… மாப்பிள்ளை எங்கயும் இப்ப இருந்தா சொல்லுங்க, போயி பேசுவோம்”, பஞ்சயாத்து.

“இப்ப சுத்தியுள்ள ஊருகள்ள யாரும் இரண்டாந்தரமாக கல்யாணம் செய்துக்கற மாதிரி மாப்பிள்ளை எனக்குத் தெரிஞ்சு இல்லை”, உறுப்பினர் 5

“யாரும் இருந்தா சொல்லுங்க…”, பஞ்சயாத்து

“நம்மை சுத்தி இருக்கிற எல்லா கிராமத்து சார்பாவும் ஒரு முக்கிய ஆளு இந்த கூட்டத்துக்கு வந்திருக்கீங்க…! அதனால உங்களுக்கு தெரிஞ்ச இடத்துல, இல்லனா பக்கத்துல வேற கிராமங்கள்ல மாப்பிள்ளை இருந்தாலும் சொல்லுங்க…! நேரமாகுதுல்ல…! மாப்பிள்ளை இப்ப சுத்துவட்டார கிராமத்துல எடுக்கறமாதிரி இல்லைனா, அடுத்த முடிவை எடுக்கலாம்”,  நடுநாயகம். (கலந்து கொண்ட இருகிராமத்து உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுவான நபர்)

நீண்டநேர அமைதியை உள்வாங்கிய நடுநாயகம் பேச ஆரம்பித்தார்.

“அப்ப மாப்பிள்ளை கைவசம் இப்போ எங்கேயும் இல்லைனு அடுத்த முடிவெடுத்திரலாமா?”, நடுநாயகம்

அனைவரும் நடுநாயத்திற்கு, இல்லை எனும் முடிவெடுக்க அனுமதி வழங்கி, அடுத்த முடிவினை எடுக்க கூற, பஞ்சயாத்து மேற்கொண்டு பேசத் துவங்கினார்.

“இரண்டாந்திர கல்யாணத்திற்குரிய மாப்பிள்ளைங்க யாரும் நம்ம சுத்துப்பட்டி கிராமத்துல தற்போதைக்கு இல்லைங்கறதாலயும், இன்னும் அப்டியே நாளைக் கடத்துறது நல்லது இல்லைங்கறதாலயும், முருகானந்தம் வீட்டுல அவரோட இளைய மகனுக்கே இந்தப் பொண்ணை நடுவீட்டுக்(நடுமுற்றத்து) கல்யாணமா செஞ்சு வைக்கலாம்னு முடிவெடுக்கிறோம். இதுக்கு இரண்டு பக்கக் குடும்பத்துக்கும் சம்மதமா?

மாப்பிள்ளை, பொண்ணுக்கு சம்மதாமானு கேட்டுட்டுச் சொன்னா மேற்கொண்டு நடக்க வேண்டியதைப் பேசலாம்”, என்று கூறி நிறுத்த,

கூட்டத்தில் அமர்ந்திருந்த யுகேந்திரனுக்கு ஒரு நிமிடம் இதயம் நிறுத்தம் செய்திருந்தது.

யுகேந்திரன் சற்று மனதளவில் பேரதிர்ச்சியை உள்வாங்கியிருக்க, மற்றவர்கள் அவரவர் கருத்தைக் கூறத் துவங்கியிருந்தனர்.

“நடுவீட்டுக் கல்யாணம் அப்படிங்கறதால கொஞ்சம் யோசனையா இருக்கு”, உறுப்பினர் 3

“ஏன்னா, முதல்ல கல்யாணம் பண்ண வரன், இப்ப என்ன நிலையில இருக்காருன்னு தெரியாம, அந்தப் புள்ளைக்கு எந்த அமங்கல காரியமும் செய்ய முடியாது.  ஆனா அந்தக் கல்யாணத்தை தீத்து விட்டுட்டு, இளைய மகனுக்கு எடுத்துக்கச் சம்மதம்னா மேற்கொண்டு ஆகவேண்டியதைப் பாக்கலாம்.

எல்லாரும் என்ன சொல்றீங்க?”, என்று வினாவோடு தனது பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்து, அமைதி காத்தார் பஞ்சாயத்து.

அங்கு இருந்தவர்களுக்கிடையே இருந்த சலசலப்பு, அவர்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்வதைக் கூறியது.

பதினைந்து நிமிடங்களுக்கும் குறைவான நேர விவாதத்திற்குப் பிறகு, யாழினியின் தாய்மாமா தனது பக்கக் கேள்வியாக, “எங்களுக்குச் சம்மதம்.  எங்க புள்ளைய சம்மதிக்க வைக்கிறது, எங்க பொறுப்பு.  ஆனா… அவரு மொத மகன் கணக்கா… இவரும் வேற பொம்பிளைப் புள்ளைய நினைச்சிட்டு இருந்து, அவரு பண்ணதையே கல்யாணத்துக்குப் பிறகு இவரும் செய்ய மாட்டாருங்கற உறுதிய எங்களுக்கு கொடுக்கச் சொல்லுங்க அந்தப் பையனை.

அவரு உறுதி கொடுத்தா எங்க பக்க மக்களுக்குச் சம்மதம்தான்”, என்று ஒரு வழியா தங்களது சார்பான சந்தேகத்தை முன்வைத்திருந்தனர்.

“என்ன முருகானந்தம்? பையன் இங்க கூட்டத்துக்கு வந்திருந்தா… கூப்பிடுங்க”, பஞ்சாயத்து

“யுகேந்திரா, இங்க முன்ன எந்திரிச்சு வாப்பா”, என்று தந்தை அழைக்கவே, எழுந்து முன்வந்தான்.

யுகேந்திரன் இந்த மாதிரியான ஒரு முடிவை எதிர்பார்க்கவில்லை என்பதை அவனின் அதிர்ந்த முகம் கூறியது.

ஆனாலும் பதற்றமில்லாமல், “ஐயா வணக்கம், என்னைய கூப்பிட்டு என்னோட ஒப்பீனியன் கேக்கறதுக்கு ரொம்ப நன்றி.

என் மனசுல தோணறத நான் சொல்றேன்.  இதை யாரும் நான் மறுக்கறதா நினைக்க வேணாம்.

எனக்கு அவங்க அண்ணியா வந்தவங்க… அவங்களை எப்டி… நான் என் வயிஃப்பா… ஏத்துக்கறது?  அதுதான் எம்மனசு ஏத்துக்க மாட்டிங்குது”, என்று தன்மையாகவே கூறினான், தனது எண்ணக் கருத்தை.

அதைக் கேட்டு சிரித்தவர், “தம்பி, மனசு குரங்கு மாதிரி.  இன்னிக்கு வேணானு சொல்றதை… நாளைக்கு வேணுனு சொல்லும்.  அதனால… உங்களுக்கு வேற எதுவும் ஆசை இல்லாத நிலையில இந்தப் பொண்ணையே ஏன் ஏத்துக்கக் கூடாது?”, பஞ்சயாத்து

“எனக்கு வேற எதுவும் ஆசைல்லாம் இல்லைங்க… இன்னும் ரெண்டு வருசம் போகவிட்டு கல்யாணம் பண்ணலாம்னு நினைச்சிருந்தேன். மத்தபடி அண்ணிய… எப்டினு… தான்.. குழப்பமா இருக்கு”, யுகேந்திரன்

“உங்களுக்கு வேற பொண்ணை பாத்து முடிக்கறதுல இருக்கிய அசௌகரியத்தையெல்லாம் நீங்க யோசிக்காம சொல்றீங்க தம்பி.

நாங்க இப்ப உங்களுக்கு பொண்ணு பாக்க கிளம்பினா… உங்க அண்ணன் செஞ்சு வச்ச காரியத்துக்கு… விசயம் தெரிஞ்சவங்கெல்லாம்… ‘எந்த நம்பிக்கையில அந்த வீட்டுப் பயலுக்கு பொண்ணு கேட்டு வந்தீங்கனு’, எங்க மூஞ்சிலேயே காரித் துப்பிருவாங்க…!

ஏன்னா தேவா பண்ண காரியம் அப்டி… அதனால மேற்கொண்டு எவரும் உங்க வீட்ல பொண்ணு குடுக்கவே யோசிப்பாங்க…!

இல்ல…! தேவா விசயம் தெரியாத ஊருல போயி… ஒரு பொண்ணு பாத்து உங்களுக்கு கல்யாணம் பேசி முடிவு பண்ணாலும்…

நாலு இடத்துல பொண்ணைப் பெத்தவங்க விசாரிக்கும்போது, உங்க அண்ணன் விசயம் தெரிய வந்திரும்.  அப்டி தெரிய வரும்போது துணிஞ்சு உங்களுக்கு பொண்ணு குடுக்க யோசிப்பாங்க…

அதுக்கு… நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கறதுதான் உங்களுக்கும், அந்தப் பொண்ணுக்கும் உசிதம்னு நான் நினைக்கிறேன்”, என்று முடித்தார் பஞ்சாயத்து.

“நீங்க சொல்றது சரிதான். ஆனா முறையா… எதுவும் பண்ணாம எப்டி நம்ப சின்ன தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியும்?”, இது யாழினியின் தந்தை ராஜேஷ்.

“நல்லா கேட்டிங்க… போங்க…! உங்க மக ரொம்பச் சின்னப் புள்ளை.  மேலும், தேவா வீட்ல புள்ளையக் காணோம்னு இன்னும் தேடிட்டு இருக்கிற… இந்த நேரத்துல… பொட்டைப்புள்ள கழுத்தில கெடக்கிற தாலிய எடுக்கச் சொல்லி… அமங்கலமா எதாவது பண்ணா அவங்களுக்கும் வருத்தம் வரும்ல.  அதனால நடுவீட்டுக் கல்யாணமா முடிவு பண்ணி, பெரியவங்க முன்னிலையில மாலைய மட்டும் மாத்திக்கிட்டு, மேற்கொண்டு நடக்க வேண்டியதைப் பாக்க வேண்டியதுதான்.    வேற இதுக்கு வழி இல்ல!”, என்று முடிவாகக் கூறியிருந்தார் பஞ்சயாத்து.

சரியென்று உடனே யாரும் கூறாமல், அங்கு கூடியிருந்த அனைவரும் பஞ்சயாத்தாரின் கருத்தை ஏற்கவா, மறுக்கவா? என்ற மனநிலையோடு கலந்து கொண்டவர்கள் இருந்தனர்.

நீண்ட நேரத்திற்குப் பின் பேசிய முருகானாந்தம்,

“ரெண்டு ஊரு பெரிய ஆளுக, ரொம்ப நெருங்குன சொந்தத்த வச்சுத்தான் இந்த முடிவெடுக்கிறோம்.  அப்றம் ஒரு நல்ல நாளுப் பாத்து ஊருல… எங்க வீட்லயே கல்யாணத்த வச்சிக்கலாம்…!,  அதுக்கு முன்ன கட்டிக்க போறவங்க ரெண்டுபேரையும் இதுக்கு சம்மதிக்க வைப்போம்”, என்று கூறினார்.

யாழினியின் தந்தைக்கு, தங்களின் இன்றைய நிலைக்கு, முருகானந்தம் ஏற்றுப் பேசியது சற்றே தெம்பைத் தந்திருக்க, அமைதியாக இருந்தார்.

“சரி, கூட்டத்தை இன்னைக்கு ஒத்தி வச்சிருவோம்.  வீட்டுப் பெரியவங்க பொண்ணையும், மாப்பிள்ளையும் சம்மதிக்க வச்சிட்டா, மேற்கொண்டு கல்யாணத்தைப் பத்திப் பேசலாம்”, என பஞ்சாயத்து அன்றைய கூட்டத்தை ஒத்தி வைத்திருந்தது.

///////////////

யாழினிக்கும், யுகேந்திரனுக்கும் மனம் ஒப்பாததால் இருவரும் நீண்ட விவாதத்தை, தங்களின் மனதிற்கு நெருங்கிய உறவுகளிடம் பேசி, தங்களது மறுப்பை தெரிவித்தபடியே இருந்தனர்.

யாழினியின் தந்தை, “அம்மாடி… அப்பா நடந்த எல்லா விசயத்துக்காகவும் ரொம்ப வருத்தப்படறேன்.  இப்ப எதிரபாராம நடந்ததையே நினைச்சு இனி ஒன்னும் ஆகப்போறதில்லை.

அதனால… பஞ்சாயத்துல சொன்னமாதிரி, சின்னத்தம்பியவே நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட… அவங்க எல்லாரும் உனக்கு தெரிஞ்ச மனுசங்க… இதுவரை உன்னை நல்லாதான் பாத்துக்கிறாங்க… இனியும் நல்லாப் பாத்துப்பாங்க… அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கு.

சமைக்க முத முதல்ல ஆரம்பிக்கும்போது கைல, காலுல தெரியாம சுட்டிக்கிறது உண்டு. அதுக்கு அடுப்படிப் பக்கமே போகாமயா இருக்கோம்.

கல்யாணம் அப்டிங்கறதுல எதிர்பாராம நடந்து போனதை நினைச்சு பயந்தா… மிச்ச வாழ்க்கையும் வீணாப் போயிரும்.

நல்லா யோசிச்சு முடிவு சொல்லு.  உனக்கு வேணான்னு பிடிவாதமா இருந்தாலும், உன்னை இங்க விடாம நம்ம வீட்டில கொண்டு போயி வச்சு, எங்க காலம் உள்ள வரை உன்னைய நாங்க பாத்துக்குவோம்.

உங்கூடப் பிறந்தவங்களும் பொட்டைப் புள்ளைங்க.  எங்க காலத்துக்குபின்ன யாரையும் சார்ந்து நீ வாழ முடியாது.  தனியா… மானமரியாதையோட வாழ இந்தச் சமுதாயம் நம்மை விடாது.

வரப்போற அடுத்த ரெண்டு மாப்பிள்ளைகளையெல்லாம் நாம நம்பவும் முடியாது.  நம்பவும் கூடாது.

ஆனா இந்த மாதிரி வாய்ப்பு இனி நமக்கு கிடைக்காது.

அதனால காத்தடிக்குறப்போ தூத்தினா நமக்கு நல்லது.  இனி நீ முடிவெடு”, என்று தனது மனதினைக் கூறிவிட்டு அங்கிருந்து அகன்றிருந்தார், ராஜேஸ்.

சரிதாவும் தன்பங்கிற்கு மகளிடம் பேசினார்.

—————————————-

யாழினி, தேவாவின் கடிதம் கண்டவுடனே, தனது பெற்றோருடன் ஊருக்குச் செல்ல முடிவெடுத்திருந்தாள்.  ஆனால் தேவா சென்ற புதிதில், தனது மாமனாரின் பேச்சிற்கு பிறகு தனது தங்கைகளின் எதிர்காலத்தை எண்ணி, அவர்களுடன் செல்லத் தயங்கினாள்.

யுகேந்திரன் இது வரை அண்ணியாக எண்ணிய யாழினியை மனைவியாக ஏற்க முதலில் தயங்கினான்.

பிறகு தனது திருமணத்தில் இருக்கும் பாதகங்களை பஞ்சாயத்தில் கூறக் கேட்டவன் மனதால் தொய்ந்திருந்தான்.

ஆனால், அம்பிகாவும் மகனை அழைத்துப் பேசியிருந்தார்.

“ஏன் யோசிக்கிற யுகி…!  ஏற்கனவே கல்யாணம் ஆனவள எப்டி கட்டிக்கறதுனு யோசிக்கிறியா?”, அம்பிகா.

“…”, என்ன தன் மனதின் எண்ணம் என்பதை இலகுவாக எடுத்தியம்ப இயலாமல் அமைதியாக இருந்தான், யுகேந்திரன்.

“அப்டி யோசிக்காதயா… காலத்துக்கும் நம்ப வம்சம் நல்லாயிருக்கணும்.  அதுக்கு… அந்த பொண்ணுக்கு நாம நல்லது செய்யணும்”, அம்பிகா.

“…”, யுகேந்திரன்.

“போனவன பத்தி இனி நாங்க யோசிக்க முடியாது”

“…”, யுகேந்திரன்.

“இருக்கிற நீ வம்ச விருத்தியோட, சந்தோசமா இருக்கணும்”

“…”, யுகேந்திரன்.

“அதுக்குத்தான் உன்னைய ஏத்துக்க சொல்றோம்

இத ஏத்துக்க முடியலனாலும் சொல்லிரு…!  இல்ல உனக்கும் ஏதும் வேறு ஆசை இருந்தாலும் சொல்லு… அதுக்கு யோசிச்சு என்ன செய்யணுமோ அத செய்யலாம்”, என்று பெருமூச்சு ஒன்றுடன் தனது பேச்சை முடித்திருந்தார், அம்பிகா. 

“…”, யுகேந்திரன்.

சற்று நேரம் அமைதியாக இருந்தவர், “ஆனா, அப்டி எதுவும் உன் மனசுல இல்லனா… நீ யாழினியவே கல்யாணம் பண்ணிக்கயா”, என மகனிடம் இரந்து பேசினார், அம்பிகா.

“அண்ணினு சொல்லிட்டு… அவங்கள எப்டிமா வேற மாதிரி யோசிக்க முடியும்.  அதுதான் தயக்கம்!  மத்தபடி நான் வேற எதுவும் யோசிக்கல”, என இறுதியாக தன் மனதை உரைத்திருந்தான், யுகேந்திரன்,

‘அண்ணன் பொண்டாட்டி அரைப் பொண்டாட்டி, தம்பி பொண்டாட்டி தாம் பொண்டாட்டினு நினைக்குறவங்க மத்தியில இப்டி ஒரு புள்ளையா எனக்கு’, என எண்ணி மனம் குளிர்ந்திருந்தார் அம்பிகா.

ஏறத்தாழ ஒரு மாதத்திற்குபின் கரைப்பார் கரைத்து கல்லும் கரையும் என்ற நிலையில், இருவரின் மனதை இருபக்க பெரியவர்களும் ஒருவாறாகக் கரைத்திருந்தனர்.

பெரியவர்களின் இடைவிடாத முயற்சியால், இருவரும் முடிவில் நடுவீட்டுக் கல்யாணத்திற்கு சம்மதித்திருந்தனர்.

—————–

அதன்பிறகு இரு ஊரிலுள்ள ஊர்த் தலைவர்களை, இரு குடும்பத்துப் பெரியவர்களும்  தனித்தனியே சந்தித்து பேசியிருந்தார்கள்.

அனைவரும், பெண்ணிற்கு வாழ்க்கை சிறக்கவேண்டும் என்ற நிலையில் துரிதமாகச் செயல்பட்டு, ஒரு நல்ல நாளில், கூடுவாஞ்சேரியில் இருக்கும் முருகானந்தம் அவர்களின் வீட்டில் நிகழ்ச்சியை செய்வதாக முடிவு செய்தனர்.

மிகவும் நெருங்கிய சொந்தங்களை மட்டும் நேரில் அழைத்திருந்தனர். இரு ஊரில் உள்ள பெரியோர்கள் முன்னிலையில், வீட்டில் வைத்து, யுகேந்திரன், யாழினிக்கு நடுவீட்டுத் திருமணமாக நடந்தி வைத்தனர்.

யாழினிக்கு, தேவேந்திரனுடன் தற்போதுதான் அம்மி மிதித்து, அருந்ததி பார்த்ததுபோல இருந்தது.  அதற்குள் தனக்கும் யுகேந்திரனுக்குமான நிகழ்வை எண்ணி முதலில் பெருந்தயக்கம் உண்டாகியிருந்தது.

ஆனால் அவள் வருந்தாத வகையில் மிகவும் எளிமையாக, மாலையை மட்டும் மாற்றச் செய்திருந்தனர்.

யுகேந்திரனைக் காணவே அவளுக்கு கூசியது.

யுகேந்திரனும், தயக்கமான மனநிலையோடே இருந்தான்.  அண்ணனின் மனைவியாக வந்தவர், இனித் தனக்கு மனைவி என்பதை அவனால் ஏற்றுக்கொள்ளவே திகைப்பாக உணர்ந்தான்.

தாய் மற்றும் தந்தை இருவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, யாழினியை தன் மனைவியாக ஏற்றுக் கொள்வதற்கான, ஆரம்ப கட்ட பணிகளில் ஈடுபாடு இல்லாதபோதும், தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.

திருமணம் முடிந்த கையோடு, மணமக்களை சென்னைக்கு அழைத்து வந்திருந்தார், அம்பிகா.

யாழினி வழமைபோல அடுக்களைப் பணிகளில் ஈடுபட்டாலும், எதற்கும் தனது மாமியாரிடமே போய் நின்றாள்.

“அத்தை இந்தாங்க டீ”, என்ற தனது மாமியாரிடமும், மாமனாரிடமும் தேநீரைக் கொடுப்பவள், யுகேந்திரனைக் கவனிக்கத் தயங்கினாள்.

யுகேந்திரனும், உண்ணுவது முதல், வெளியே செல்வது வரை அனைத்திற்கும் அம்மா, அம்மா என்றிருக்க, இரண்டொரு நாட்கள் இருவரின் பேச்சுவார்த்தை மற்றும் செயல்பாடுகளை கண்டு யோசித்த அம்பிகா, கணவருடன் கிராமத்திற்கு கிளம்பியிருந்தார்.

யுகேந்திரன், யாழினி இருவரும் தடுக்கவே, “வீடு அங்க அப்டியே போட்டது போட்டபடி வந்திட்டேன் யுகி…  இன்னும் இப்டியே கிடந்தா வீடு என்னத்துக்கு ஆகும்”, என்று அம்பிகா முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கூற

“போம்மா… இதுக்கு முன்ன வந்து மாசக்கணக்குல இங்க இருக்கும்போது வீட்டை என்ன காக்காவா தூக்கிட்டுப் போச்சு… நீ என்ன நினைச்சு இதெல்லாம் பண்றேனு தெரியாத சின்னப் புள்ளையில்ல நானு. வர.. வர.. நீ ரொம்பத்தான் பண்ற…”, என்று அலுப்பான யுகேந்திரன் முனகியிருந்தான்.

“தெரியுதில்ல… அப்புறமென்ன… நீங்க ரெண்டு பேரும் சீக்கிரமா ஒரு பேரனோ, பேத்தியோ பெத்துக் குடுங்க… அதுக்கப்புறம் நீங்களே போகச் சொன்னாக்கூட நாம்போக மாட்டேன்”, என்றபடி கிளம்புவதில் குறியாக நின்றார்.

யாழினியும், “அத்தை… போகப் போக நாங்க கொஞ்சம் கொஞ்சமா பேசிருவோம்.  அதுக்காக எங்களை விட்டுட்டு ஊருக்கெல்லாம் போக வேணாம்”, என்று கூற,

“ஆமா… நீங்க கொஞ்சம் கொஞ்சமா பேச ஆரம்பிச்சி… நாங்கொஞ்ச பேரம் பேத்தி பெத்துக் கொடுப்பீங்கங்கற நம்பிக்கை வந்திருந்தா நானேன் கிளம்பியிருக்க  போறேன்? 

நீங்க ரெண்டுபேரும் ஆளுக்கொரு திசையில நின்னுகிட்டு, ஒருத்தன் விடிஞ்சா அடைஞ்சா அம்மாங்கிறான்… நீ என்னடான்னா “அத்தை… அத்தைங்கற…” நான் சொத்தையாவே இருக்கலாம்னு கிளம்பிட்டேன்.  இனி நல்ல செய்தியைக் கேட்டாத்தான் இந்தப் பக்கம் வருவேன்”, என்று உறுதியாகக் கூறிச் சென்றுவிட்டார்.

“எல்லாம் மாறும். கொஞ்சம் டைம் குடும்மா… அவசரப்பட்டா என்ன பண்ண முடியும். பத்து நாளு முன்னை வர அண்ணினு சொன்னவங்களை உடனே மாத்திக்கற மனசு வரமாட்டுது.  எல்லாம் உடனே… உடனேன்னா நான் என்ன பண்ணுவேன்”, என்று பாவமாக கூறிய, வண்டி ஏற்றிவிட வந்திருந்த தங்களது இளைய மகனைப் பற்றி யோசித்தபடியே ஊருக்கு வந்திருந்தார்கள்.

 

யாழினி, யுகேந்திரன்… வாழ்வு மலர்ந்ததா?

அடுத்த அத்தியாயத்தில்….