Anbin mozhi- 10

அன்பின் மொ(வி)ழியில்- 10

பால் வண்ணத்தில் தன்னுடைய தந்தையின் வம்சா வழி மூலம் தனக்கு கிடைத்த கொடையை போலவே, எதிரில் நீல நிற அகன்ற விழிகளை கொண்டு தங்களை நோக்கிய, அந்த குட்டி கண்ணனின் மேல் இருந்து தன் விழிகளை எடுக்க முடியவில்லை ஜாஸ்ஸினால்.

ராஜூம் அப்போது தான் அந்த மழலையினை பார்த்தான், மெல்லிய சிரிப்புடன் மண்டியிட்டு அந்த பிஞ்சின் அருகில் கைகளை நீட்டிய போது, வெளிவந்த அந்த இரட்டையரை கண்டு அதிசயித்து அவர்களை உற்று நோக்கிய போது திகைத்து தான் போய் விட்டான்.

அவனின் விழிகள் தங்களின் பின்னே வந்துகொண்டிருந்த ராம் மீது ஒரு வித அழுத்தத்துடன் படிந்து மீண்டது .

அதற்குள் ராமும், ராஜின் அருகில் வந்து நின்றிருந்தான், அவனின் கவனம் அது வரை தன் சிந்தனையிலே தான் இருந்தது.

பிள்ளைகள் இருவரும் தங்களுடைய ரமி, உரிமையுடன் பேசும் அவர்களை கண்டு தெளிந்தனர்.

புதியவர்களை பார்த்ததால் ஏற்படும் தன் பயத்தினை துரத்தி, ரம்யாவின் பின்னிருந்து வெளிவந்த ஆதி தன் தம்பியுடன் கைகளை பிணைத்தவாறு, எதிரில் நின்ற இருவரையும் கண்டு அவனுக்கே உரிய துடுக்குடன், “வாவ்! நீங்களும் எங்க மாதிரி ட்வின்ஸ் ஆஹ்?” என்றான் தன்னுடைய அழகிய மழலை குரலில்.

அந்த இனிமையான ஒலியில் எங்கோ இருந்த, ராமின் கவனம் பிள்ளைகளின் மீது விழுந்தது.

எந்த ஒரு சூழ்நிலையிலும் எதையும் கண்டு அதிர்ச்சி அடையாத ராமின் உள்ளம், இங்கு வந்து கயலை கண்டதால் முதலில் அதிர்ந்தது என்றால், இப்போது தானும் ராஜும் சிறு வயதில் எப்படி இருந்தார்களோ, அதே போல் தோன்றும் இவ்விருவரை கண்டு, அவனின் உள்ளம் தன்னிலை இழந்து தான் போனது.

ராமினை நிலைப்படுத்த வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து அவன் அருகில் சென்றான் ராஜ் வில்லியம்ஸ்.

ரம்யாவுக்கு அவர்கள் மூவரின் திகைப்பை கண்டு மனம் திருப்தியாய் இருந்தது.

அவர்கள் சிறியவர்களை பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொண்டதில் மகிழ்வு தான், விளக்கி எதையும் நிரூபிக்கும் நிலை தங்களுக்கு இல்லை என்பது அவளுக்கு நிம்மதியை அளித்தது.

எதிரில் நின்ற மூவரின் கவனத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தை உணர்ந்தவள்.

ராமின் அசைவற்ற நிலையை உணராதது போல் “ ராஜ் அண்ணா நான் சென்னை வந்தப்ப சொன்னேன் இல்ல, என் சந்தோஷத்துக்கான காரணத்தை சொல்ல மாட்டேன் காட்டுறேன், அப்ப நீங்க திகைச்சு போவீங்கன்னு, நான் சொன்னப்ப நீங்க நம்பல பட் இப்ப பாத்தீங்களா?” என்றவள்.

பிள்ளைகளின் நடுவில் மண்டியிட்டு தன் இரு கைகளில் அம்மலர்களை தன்னுடன் சேர்த்து அணைத்தவாறு, “இவுங்க அதித்யன், ரவிவர்மன், கயலோட பசங்க” என்றாள் மனம் நிறைந்த புன்னகையுடன்.

ஜாஸ் பெரும் தவிப்புடன் அந்த குழந்தைகளை அழைத்து தன் அருகில் வர சொன்னார்.

ரவியிடம் சிறு தயக்கம் வெளிப்பட்டது அவன் ரமியின் காதில், “நேத்து நீ சொன்ன சர்ப்ரைஸ் இதுவா பேபி?” என்றான்.

ரம்யாவின் சம்மதமான தலை அசைவில் மெல்ல சிரித்து, ஜாஸ்ஸின் அருகில் வந்தான், ஆனால், ஆதிக்கோ எந்த வித பயமும் இல்லை, அவனும் அவர் அருகில் சென்றான், இருந்தாலும் அவனின் பார்வை தங்களின் அருகில் இருந்த, ராஜ், ராமின் மீது தான் இருந்தது.

ராஜிற்கு ஆதியின் அந்த பார்வையினை கண்டு, அவ்வளவு இறுக்கமாய் இருந்த அத்தகைய சூழ்நிலையிலும் சிரிப்பு வந்தது.

அவனின் குறும்பு மின்னும் கண்கள் தன்னைப் போல் உள்ளதை எண்ணி மகிழ்ந்தவன் உள்ளத்தில், அண்ணன் மைந்தர்கள் இருவரையும் அள்ளி அணைக்க அவ்வளவு ஆசையாக இருந்தது.

ராமிற்கு ரம்யாவின் வார்த்தைகளை ஜீரணிக்க அவகாசம் தேவைப் பட்டது.

அவனின் கற்பனை காதலி உண்மையில் வந்துவிட்டாள், அதோடு தன் உருவை உரித்து வைத்து , தங்களை போலவே இரட்டை குழந்தைகள் அவளிடம்.

அவனின் மூளை தன் செயல் பாட்டை நிறுத்தி விடுமோ! என அஞ்சினான்.

பெரும் தவிப்புடன் அன்னையையும், தம்பியையும் நோக்கியவன், மனது கடுகு அளவிற்கு கூட ராஜையும், கயலையும் இணைத்து யோசிக்கவில்லை.

ராஜின் விழிகள் அவ்வளவு நேரமும் ராமின் மீது தான் இருந்தது.

மலைகுடில் வந்த பிறகு ராமிடம் ஏற்பட்ட குழப்பமும் , சிந்தனையும் அவனின் மனக்கண்ணில் தோன்றியது.

இவ்வளவு நேரம் விசித்திரமான தோன்றிய அண்ணனின் அமைதிக்கு தற்போது அர்த்தம் இருப்பதாக உணர்ந்தான்.

அதே நேரம் தன்னிடம் இயல்பாக பேசிய கயல்விழி, அப்போது தான் வந்து இறங்கிய ராமினை கண்ட மறு நொடி மயங்கி விழுந்தது என அனைத்தும், அவன் இப்போது ஊகித்து இருப்பது 100 சதம் உண்மை என அறுதியிட்டு கூறியது ராஜிற்கு.

அதே நேரத்தில் தமையனை எந்த வித தவறுடன் இணைத்தும் அவனால் பார்க்க முடியாது.

மெல்ல ராமின் அருகில் வந்தவன் அண்ணனின் தவிப்பை உணர்ந்து அவனை ஆறுதலாக தோளோடு அணைக்க,

அவனின் அணைப்பு தந்த பலத்தின் உதவி கொண்டு, தன் துணிவை எல்லாம் சேர்த்து அருகில் இருந்தவனிடம், “எனக்கு என்ன நடக்குதுனே புரியல ராஜ்… நியாபக மறதி நோய் ஏதாவது வந்து இருக்கா எனக்கு?” என்றவனின் குரலில் மலை அளவு கலக்கம் நிறைந்திருந்தது.

ராமின் நியாபக மறதி என்ற ஒற்றை வார்த்தையில், விஜயின் முகம் ராஜின் மனதில் தோன்றி மறைந்தது, ‘உன்னை முழு போதையில் வந்திருந்தவன் டா நான்’ என்ற அவனின் வார்த்தைகள் ராஜின் காதுகளில் மீண்டும் ஒலித்தது.

தன் மேல் ஒருவன் வைத்திருந்த வன்மம் ஏதும் அறியா இருவர் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றத்தினை எண்ணி வருந்தியவன், மனதில் யாருடைய உதவியும் இல்லாமல் பிள்ளைகளை தனியாக பெற்று வளர்த்த கயலின் மன வேதனைகளுக்கு தன்னை காரணமாக எண்ணிய, ராஜின் கண்களில் எல்லையற்ற குற்றவுணர்வு இருந்தது.

ராஜ்- “பாத்துக்கலாம் ராம், உனக்கு கடவுள் மூலம் கிடைத்த பரிசு ரொம்பவும் விலைமதிக்க முடியாதது. இப்பொழுது கூட இவுங்களை பத்தி தெரிஞ்சது நம்ம அதிஷ்டம் தான்”. என்றான் ராமின் தோள்களினை தட்டி.

ஜாஸ்ஸின் சிந்தனை யார் மீதும் இல்லை, 25 வருடங்களுக்கு முன்பு தன் கண்முன் ஓடி விளையாடிய தன் மைந்தார்களை உரித்து வைத்திருக்கும் அந்த பிஞ்சுகள் மீது தான் இருந்தது.

அவர்களின் கேசத்தை கலைத்து, கண்களில் மழலையின் வடிவழகை சிறைசெய்து, பிள்ளைகளின் உடல் முழுவதும் தடவி தன் கண்முன் இருப்பவர்களை உண்மையென உணர முயன்று கொண்டிருந்தார்.

ராமிற்கு தன் அன்னையை பார்த்ததும் அவரின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தது.

ஆதி, ரவி இருவருக்கும் மென்மையாய் பேசி அணைத்துக் கொண்டு இருக்கும் ஜாஸ்ஸினை மிகவும் பிடித்திருந்தது.

பெரியவர்கள் யாரும் இல்லாமல் கயல் மற்றும் ரம்யாவின் சிறகுகளின் கீழ் பாதுகாப்பாக வளர்ந்தவர்களுக்கு, ஜாஸ்ஸுடன் பேசி அவரின் அன்பினை அனுபவிப்பது வித்தியாசமாக அதேசமயம் பிடித்தமானதாக இருந்தது.

“ரமி குட்டி திருதிருன்னு முழுச்சு வேடிக்கை பாக்காம, இவுங்களை நாங்க எப்படி கூப்புடுறதுன்னு சொல்லு?” என்றான் ஆதி நக்கலாக.

அதைக் கேட்ட ராம் திடுக்கிட்டு, ராஜை பார்க்க அவன் அந்த குட்டியின் வார்த்தைகளில் தன்னை மறந்து சத்தமாக சிரித்து விட்டான்.

அவனின் சிரிப்பு அந்த இடத்தில் அதுவரை இருந்த இறுக்கத்தை முற்றலும் அகற்றியது.

ராஜ்ஜின் தோளில் தட்டிய ராம், “உன்னை மாதிரியே இருக்கான் இல்ல” என்றான் மகிழ்விடன்.

அவனுக்கு பதிலாக தலை அசைத்தவனின் உள்ளம் முழுவதும் பூரித்து போய் இருந்தது, தன் அண்ணனின் பிள்ளைகளை நினைத்து.

ஆதியின் கேள்விக்கு, பிள்ளைகளிடம் “பாட்டி சொல்லுங்க பட்டூஸ்” என்றாள் ரம்யா அர்த்தத்துடன்.

ராம், ரம்யாவின் புறம் திரும்பி “கயல்?” என்றான் கேள்வியாக அந்த ஒற்றை வார்த்தையில் அவன் கொடுத்த அழுத்தம், ‘தனக்கு இப்போது இதுவரை நடந்த அனைத்தும் தெரிய வேண்டும்’ என பறைசாட்டியது .

அவன் கேட்க வருவது புரிந்தவள் ஒரு நிம்மதி பெருமூச்சுடன்.

பிள்ளைகளின் புறம் திரும்பி “ஆதி, ரவி இங்க பாருங்க, உங்க அம்மு காலைலேந்து சாப்பிடல, நீங்க சொன்னா கேட்பா, போய் அவள பாத்துக்கோங்க” என்றவளிடம்.

ரவி பொறுப்பாக “நான் சாப்புட வச்சு பாத்துக்குறேன் பேபி, ஓகே” என்றவன், “வா ஆதி” என அண்ணனையும் அழைத்துக் கொண்டு ராஜ், ராம் புறம் திரும்பி மெல்லிய புன்னகையுடன் விடைகொடுத்தவன் ஜாஸ்ஸிடன் “வரேன் பாட்டி” என்றான் மென்மையாக.

அவனின் வார்த்தைகள் சிறு வயது ராமை நினைவுட்டியது அவருக்கு.

பிள்ளைகள் வீட்டினுள் சென்ற பிறகு அவர்கள் மூவரின் விழிகளும் பெரும் தவிப்புடன் ரம்யாவினை நோக்கியது.

தோட்டத்தில் நடுவில் நன்கு வளர்ந்து அழகாக தன் கிளைகளை பரப்பி இருந்த வேப்பமரத்தின் அடியில் அமைத்திருந்த மேடையில அனைவரும் அமர்ந்து கொண்டனர்.

ரம்யா- அன்னையின் முகத்தினை பார்த்தவள் அவரின் கைகளினை பற்றி கொண்டு மெல்ல, “கயல் 6 வருஷத்துக்கு முன்னாடி இங்க வந்தா , சாதாரண வேலை தான், கொஞ்ச நாள்ல இவுங்க உருவானது தெரிஞ்சுதுமா, எல்லார்கிட்டையும் அன்பா, அதே நேரம் நிமிர்வா இருப்பா, அது அவளோட நேர்மையை காட்டினனால யாரலையும் அவள தவறா பாக்க முடியல, அவள் சொந்த வாழ்க்கையை பத்தி இங்க உள்ள யாருக்கும் எதுவும் தெரியாது”.

சிறு அமைதிக்கு பின் “அவளின் வாழ்க்கையின் நடந்த மத்த எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிருக்கா, சின்ன வயசுல எந்த சொந்தமும் இல்லாம, அநாதை இல்லத்தில் தான் வளர்ந்தா” என்றவள் வார்த்தைளில் .

யாரும் இல்லாத அப்பாவி பெண் தன் முலம் பாதிக்கப் பட்டிருப்பதை நினைத்து ராமின் மனது வலித்தது.

ராமிடம், “உங்கல பத்தி இதுவரை எதையும் என் கிட்ட கூட சொன்னது இல்ல, இவுங்களை( ஆதி, ரவி) முதல்ல கைல வாங்கினப்போ, அவர்களில் முகம் ரொம்பவும் பரிச்சயமா இருந்தது அப்போ எனக்கு தெரியல, ஆனா லாஸ்ட் டயம் நான் சென்னை வந்து உங்களை எல்லாம் பாத்த அப்புறம் நல்லா உணர முடிந்தது” என்றவள் கேள்வியாக ராமை பார்க்க

ராம் எதுவும் சொல்லவில்லை, அவனுக்கே தெரியாத ஒன்றினை எப்படி கூற முடியும்.

தலையை கைகளில் தங்கியவாறு கண்களில் மெல்லிய நீருடன் குனிந்து அமர்ந்திருந்தான்.

பிள்ளையின் கலக்கத்தை உணர்ந்த ஜாஸ், தன்னுடைய கம்பீரத்தை மீட்டெடுத்து.

“பழசு எல்லாம் போகட்டும் ரம்யா நாளைக்கு காலை உங்க எல்லாருக்கும் நம்ம பெரிய வீட்டுல விருந்து, கயல் கிட்ட சொல்லு” என்றவர் ஒரு முடிவுடன் தன் பிள்ளைகளை பார்த்தார்.

அவர்களின் சம்மதமான தலை அசைவில் திருப்தியுடன் மெல்ல எழுந்து வீட்டினுள் சென்றவர் மிகவும் களைப்பாக உணர்ந்தார், மனதில் இவ்வளவு நேரம் எதிர் பாராத நிகழ்வுகள் மூலம் ஏற்பட்ட சோர்வின் காரணமாக அறைக்கு சென்று அமைதியாக படுத்துவிட்டார்.

ராஜ், ரம்யா இருவரும் ராமிற்கு தற்போது அவசியமான தனிமையை அளித்து சப்தமில்லாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

கயலை பற்றி ரம்யா கூறியதை கேட்ட ராமுக்கு வருத்தமாக இருந்தது.

உடனே சென்று தன்னவளையும், தன்னுடைய அழகிய இரு பொக்கிஷத்தையும் தன்னுள் புதைக்க நினைத்த ராமின் செயலை, அவனை பார்த்த உடன் அதிர்ந்து மயங்கி, பின் தன்னை பார்க்கும் போது எல்லாம் அச்சமுடன் நோக்கும் அந்த மருண்ட நயனங்கள் தான் நிறுத்தி வைத்தன.

வீட்டினுள் ரம்யா வரும்போது கயலை பிள்ளைகள் இருவரும் சாப்பிட வைத்து இருந்தனர்.

கயலும் மைந்தார்களுக்காக சிறிதளவு உண்டு, இயல்பாக இருப்பது போல் காட்டி கொண்டிருந்தாள்.

கயலின் அருகில் வந்தவள், “இப்ப உடம்புக்கு எப்படி இருக்கு , காலைலேந்தே ஏன் ஒரு மாதிரி இருக்க ?” என்றாள் ஏதும் அறியாதவள் போல.

ரம்யாவை புரியாமல் பார்த்தவள் பின்பு மெல்ல தலை அசைத்து “ஒன்னும் இல்லை ரமி, இப்ப வந்தவுங்க எல்லாம் எவ்வளவு நாள் இருப்பாங்க” என்றாள்.

இப்போது கூட தன்னிடம் எதையும் பகிர்ந்து கொள்ளாமலிருக்கும், அதே நேரத்தில் மீண்டும் தன் கூட்டுக்குள் ஒழிந்து கொள்ள முயற்சிக்கும் கயலை கண்டு ஆற்றாமையாய் இருந்தது ரம்யாவுக்கு.

அதற்குள் ஆதி, ரவி இருவரும் ரமிக்கும், அவர்களின் அம்முவிற்கும் இடையில் வந்து அமர்ந்து கொண்டனர்.

ஆதி அன்னையிடம், “அம்மு நாங்க தோட்டத்துல விளையாடியப்போ எங்கல மாதியே இருக்க ட்வின்ஸ் பாத்தோம்,அங்க ஒரு பாட்டி கூட பாக்க குயூட்டா இருந்தங்க” என்றான் சந்தோஷமாய்.

இதை கேட்டவள் முகம் பயத்தில் வெளுத்து விட்டது.

அதற்கு பதில் சொல்லாமல் இருந்த அன்னையை புரியாமல் பார்த்தவனிடம், ரம்யா -“ நாளைக்கு அந்த உன்னோட குயூட் பாட்டி நம்மல மோர்னிங் பிரேக் ஃபிரஸ்ட்க்கு அந்த வீட்டுக்கு வர சொல்லிருக்காங்க” என்றாள் கயலை ஓர கண்ணால் பார்த்துக்கொண்டு.

ரம்யா ‘உன்னோட குயூட் பாட்டி’ என்ற வார்த்தையில் கொடுத்த அழுத்தம் ‘அனைத்தும் நான் அறிவேன்’ என்று தன்னிடம் கூறியதை போல் உணர்ந்தாள் கயல்விழி.

கயலுக்கு காலையில் வந்தது போலவே தற்போது மீண்டும் மயக்கம் வருவது போல் இருந்தது.

அவளில் மனம் அனைத்தும் கைமீறி போகும் நிலையினை கண்டு அஞ்சியது.

அவளை சிந்திக்க விட்டுவிட்டு ரம்யா பிள்ளைகளை கூட்டி கொண்டு நிம்மதியாக படுக்க போய் விட்டாள்.

பின்னே இருக்காத இத்தனை நாள் மண்டைக்குள் ஓடிய நண்டு, நத்தை, அனகொண்டா எல்லாத்தையும் அடித்து துவைத்து அனுப்பியது போல் அல்லவா உணர்கிறாள்.

தனித்து அமர்ந்திருந்த கயல் மெல்ல எழுந்து நடந்து தோட்டத்துக்கு வந்தாள்.அவளின் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது.

அந்த குளிர்ச்சியான இரவிலே எதையும் உணராமல் புல் தரையில் அமர்ந்தவள் விழிகள் அவளின் அன்னையாம் நிலவை வெறித்தது.

வார்த்தைகள் இல்லாமல் மௌனமாய் நிலஒளியில் வெள்ளியில் வார்த்த சிலைபோல் அமர்ந்திருந்த கயலை.

அதேநேரத்தில் வீட்டின் மடியில் இருந்து காதலுடன் நோக்கிய இரு விழிகளில் கண்ணீர் துளிகள் வடிந்தன.