Nan Un Adimaiyadi

Nan Un Adimaiyadi

அத்தியாயம் 9

பலமுறை நீயும் பாக்காம போன
இரும்புக்கு மேல துரும்பென ஆனேன்
உசுர உனக்கே நேந்து விட்டேன்
இருந்தும் நெருங்க பயந்துக்கிட்டேன் (முத்துக்காளை)

 

காலையில் அலாரம் ஒலி மண்டையில் மணி அடித்து எழுப்பாமல் ஆழ்ந்து தூங்கி எழுவது என்பது ஒரு வரமாகும். எல்லோருக்கும் அந்த வரம் கிடைத்து விடுவது இல்லை. அன்று அந்த வரம் அமையப் பெற காலை ஒன்பது மணிக்கு மெல்ல துயில் கலைந்து எழுந்தாள் தவமங்கை.

இங்கு வந்ததில் இருந்து சனிக்கிழமை காலையில் கூட அரக்கப் பறக்க கிளம்பி பள்ளிக்குப் போவாள் இவள். புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பள்ளியாதலால், எதாவது ஒரு டியூட்டி இருந்துக் கொண்டு தான் இருந்தது எல்லா ஆசிரியர்களுக்கும்.

இப்பொழுது பள்ளி தங்குத் தடையின்றி ஓரளவு நல்ல முறையில் இயங்க ஆரம்பிக்க சனிக்கிழமை விடுப்பு கிடைத்தது. கண்ணைத் திறந்தவள் உடனே எழுந்து விடவில்லை. சுற்றிலும் கேட்ட கிராமத்துக்கே உரிய ஒலிகளை உள்வாங்கிக் கொண்டே அப்படியே சோம்பலாகப் படுத்திருந்தாள். மாடுகளின் ம்மா எனும் அழைப்பு, மரங்களில் வந்து அமர்ந்திருக்கும் குருவிகளின் கீச் கீச், கோழியின் கொக்கரொக்கோ என பல விதமான ஒலிகள் செவியை நிறைத்தன. வீட்டை சுற்றி காமாட்சி போட்டிருந்த சாம்பிராணி வாசம் வேறு மோன நிலையைக் கொடுக்க, மறுபடி கண் மூடியவள் அப்படியே அயர்ந்து தூங்கி விட்டாள்.

“ஏத்தா!” எனும் குரலும் டொக் டொக்கென கதவு தட்டப்படும் சத்தமும் அவள் தூக்கத்தைக் கலைத்தது. கண்களைத் தேய்த்தவாறே படக்கென எழுந்தவள், தூக்கக்கலக்கத்தோடு போய் கதவைத் திறந்தாள்.

“என்னத்தா?”

“இன்னும் எழுந்துக்கக் காணோமேன்னு வந்தேன். மணி பாருத்தா பத்துக்கும் மேல ஆக போகுது! நேத்து ராத்திரி எட்டுக்கு சாப்புட்ட ரெண்டு தோசை. இவ்வளவு நேரமா வெறும் வயித்தோட இருப்ப! போத்தா, ஓடிப் போய் குளிச்சுட்டு வா! சாப்புடலாம்” என அக்கறையாக கடிந்துக் கொண்டார் காமாட்சி. மங்கை திரும்ப இங்கே வந்ததில் இருந்து அவள் மேல் இன்னும் இன்னும் அன்பை அள்ளித் தெளிக்கிறார் அவர்.

சரியென தலையாட்டியவள், அவளது குட்டி வாளியை எடுத்துக் கொண்டு பாத்ரூம் நோக்கிப் போனாள். அங்கே கிணற்றின் அருகே மணக்கட்டையில் காளை அமர்ந்திருந்தான். மேல் சட்டை எதுவும் இல்லாமல், வேட்டியை மட்டும் மடித்துக் கட்டிக் கொண்டு உடம்பெல்லாம் எண்ணெய் வழிய கண்ணை மூடிக் கொண்டிருந்தான் அவன். மச்சக்காளையோ அவன் தலையில் இன்னும் எண்ணெயைக் கொட்டி பட்டு பட்டு என தட்டிக் கொண்டிருந்தார்.

“உச்சந்தலை உச்சியில

உள்ளிருக்கும் புத்தியில பாட்டு!” என பாடிக் கொண்டே மகனின் தலையில் தாளம் போட்டுக் கொண்டிருந்தார்.

“வலிக்குது தகப்பா! என் தலை என்னா தபலாவா இந்த தட்டு தட்ட!” என கத்திக் கொண்டிருந்தான் காளை.

“அட இருடா! உடம்புல அம்புட்டும் சூடு! இப்போ நான் தட்டுற தட்டுல சூடெல்லாம் சூடமா கரைஞ்சுப் போயிடும் பாரேன்” எண்ணெய் கண் உள்ளே வரைக்கும் போயிருந்ததால் அவனால் கண்ணைத் திறக்க முடியவில்லை.

கடுமையான உடல் உழைப்பால் முறுக்கேறி இருந்த மகனின் புஜங்களையும், வலுவேறிக் கிடந்த பரந்த தோள்களையும் அழுத்தி தேய்த்து விட்டார் மச்சக்காளை. எண்ணெயின் வளவளப்பில் சூரிய ஒளிப்பட்டு மினுமினுக்க, பளபளவென கருத்த தங்கமாய் மின்னியவனை சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டு நின்றவள் சட்டென முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டாள். ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்த எண்ணேய் தேய்க்கும் வைபவம்(இது வைபவமான்னு கேக்கக் கூடாது) நடந்தேறினாலும், இன்றுதான் நேரில் பார்க்கிறாள் தவமங்கை.

அவள் வந்ததைப் பார்த்த மச்சக்காளை,

“வாங்க டீச்சரம்மா!” என புன்னகைத்தார்.

தவமங்கை அருகில் தான் நிற்கிறாள் என தகப்பனின் வாய் வழியாக அறிந்துக் கொண்டவனுக்கு கூச்சம் எட்டிப் பார்த்தது. சனிக்கிழமைகளில் அவன் தோப்பை ஒரு சுற்று சுற்றிவிட்டு வருவதற்குள் அவள் பள்ளிக்குக் கிளம்பி இருப்பாள். இன்றும் அப்படித்தான் என நினைத்து சுதந்திரமாக மாம் பாடியை (ஜிம்முக்கு போனா ஜிம் பாடி, மாங்கா மரம் வளத்தா மாம் பாடி) காட்டிக் கொண்டு அமர்ந்திருந்தவனுக்கு ஒரே வெட்கமாகிப் போனது. எண்ணேய் ஊறி இருந்ததால், கண்ணைத் திறக்க முடியாமல் போக அரக்க பறக்க பக்கத்தில் தூக்கிப் போட்டிருந்த துண்டை கையால் துளாவினான் காளை. கையில் துணி அம்புடவும் சடக்கென அதை இழுத்து தன் உடம்பை மூடிக் கொண்டான் முத்துக்காளை.

“அடேய் சண்டாளா! என் வேட்டிய எதுக்குடா உருவுன!!! உன்னைப் புள்ளயா பெத்ததுக்கு அது ஒன்னுதான் உருப்புடியா இருந்துச்சு. அதையும் உருவிட்டியா!!!” என மச்சக்காளை கத்த, தவமங்கைக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள் அவள். நல்ல வேளையாக அன்று மச்சக்காளை பட்டாப்பட்டி அண்ட்ராயர் அணிந்திருந்தார். இல்லையேல் மகன் பண்ணிய வேலைக்கு அவரின் மானம் ராக்கேட் இல்லாமல் பிளானேட் மார்ஸ்க்கு பறந்திருக்கும்.

கண்ணை தகப்பனின் வேட்டியால் துடைத்துக் கொண்டவன், கூச்சப் புன்னகையுடன் மெல்ல மங்கையை நிமிர்ந்துப் பார்த்தான். அவளும் பதிலுக்குப் புன்னகைத்தவள் பாத்ரூமுக்குள் புகுந்துக் கொண்டாள். ஆத்தாவிடம் சொல்லி இருந்தது போல, இப்பொழுதெல்லாம் மங்கை இருக்கும் திசைக்கே அவன் வருவது இல்லை. அவளையே நோட்டமிடும் கண்களுக்கும் அணைப்போட்டிருந்தான் அவன். மாடசாமி வீட்டில் இருந்து அவள் இங்கு வந்ததில் இருந்து பொட்டிக் கடை சைட்டைக் கூட விட்டிருந்தவன், இன்றுதான் நேருக்கு நேர் பார்க்கிறான் அவளை. ஏங்கிப் போய் கிடந்தவனுக்கு அவள் கொடுத்தப் புன்னகை புத்துணர்ச்சியைக் கொடுத்தது.

“அச்சச்சோ புன்னகை

ஆள் தின்னும் புன்னகை” மெல்ல முனகலாகப் பாடியபடி நிமிர்ந்தவன் முன்னே நின்றிருந்தார் காமாட்சி.

சிரிப்பு அப்படியே மறைந்துப் போக தலையைக் குனிந்துக் கொண்டான் காளை. சுடுதண்ணீர் மொண்டு மகனின் தலைக்கு காமாட்சி ஊற்றி விட மச்சக்காளை டாவு சவர்க்காரம் போட்டுத் தேய்த்து அவ்வைபவத்தை முடித்து வைத்தார்.

மங்கை குளித்து விட்டு வருவதற்குள் இவன் துவட்டியபடி உள்ளேப் போய்விட்டான். குளித்து விட்டு வந்தவளுக்கு சுட சுட இட்லியை தட்டில் இட்டுக் கொடுத்தார் காமாட்சி. ருசித்து சாப்பிட்டவள்,

“உங்க சமையலே தனி ருசி ஆத்தா! இப்படிலாம் நான் ரசிச்சு சாப்பிட்டதே இல்ல” என சொன்னவளுக்கு இன்னொரு இட்லியை சிரித்த முகமாக வைத்தார் காமாட்சி.

“என்னமோ என்னோட கிராமத்து சமையலை இந்தப் புகழு புகழுறேயேம்மா! உங்கம்மாலாம் இன்னும் நல்லா சமைப்பாங்க இல்லியா கண்ணு!”

“ஹ்ம்ம்! சமைப்பாங்க, சமைப்பாங்க!” குரல் கொஞ்சம் பிசிர் தட்டியதோ!

“என்னமோ கம்யூட்டர் பொட்டியைப் பார்த்துலாம் சமைக்கலாமாமே! ராஜேஸ்வரி சொல்லுவா! ஒரு தடவ, அது பேரு என்னா, ஹாங், கோழிபாப்பூ சிக்கன்… ஆமா, அது தான் செஞ்சுக் குடுத்தாப் பாரு! அம்புட்டு ருசி!” என சிலாகித்து சொன்னார் அவர்.

“கோழிபாப்பா!! ஓ லாலிபாப் சிக்கனா?”

“ஆமா, அதுவேதான்”

“ஆத்தாவுக்கு லாலிபாப் சிக்கன் ரொம்ப பிடிக்குமோ?”

“ஆமாத்தா, சொல்லும் போதே வாய் ஊறுது பாரேன்”

“நான் செஞ்சுக் குடுத்தா சாப்புடுவீங்களா?” என கேட்டாள் சின்னவள்.

“உனக்கு சமைக்கத் தெரியுமாத்தா?”

மெல்ல புன்னகைத்தவள்,

“நல்லாவே தெரியும்! எங்க வீட்டுல என்னோட சமையல்தான்! இன்னிக்கு ஆத்தாவுக்கு என் கையால பாலிபாப் சிக்கன் செஞ்சித் தரேன். சாப்பிட்டுப் பார்த்து சொல்லுங்க” என சொன்னவள் சாப்பிட்டு முடித்து கையைக் கழுவிக் கொண்டு வந்தாள்.

தேவையான பொருட்களை இவள் சொல்ல, எல்லாவற்றையும் எடுத்துக் கொடுத்தார் காமாட்சி. இஞ்சி பூண்டு அம்மியில் அரைக்க இவள் கஸ்டப்பட அதை மட்டும் காமாட்சி செய்துக் கொடுத்தார். இவள் மும்முரமாக சமையலில் இருக்க,

“ஆத்தா” என குரல் கொடுத்தான் காளை.

“நீ பார்த்துக்கோம்மா! நான் இதோ வந்துடறேன்” என முற்றத்துக்கு வந்தார் காமாட்சி.

“என்னத்தா டீச்சர போய் சமைக்க சொல்லுற! உன்னால முடியலனா என் கிட்ட சொல்ல வேண்டியது தானே! நானே சமைச்சிருப்பேன்ல! கையக் கால சுட்டுக்கப் போறாங்கத்தா அவங்க”

அவன் சொல்லி வாய் மூடுவதற்குள் ஆவ்வ்வ் எனும் சத்தம் சமையல் கட்டில் இருந்து வர, பாய்ந்து ஓடினான் காளை. அங்கே கையை உதறியபடி நின்றிருந்தாள் தவமங்கை. கோழியைப் பொறிக்க ஆரம்பித்த போது நன்றாக காய்ந்திருந்த எண்ணேய் லேசாக தெறித்து விட்டது அவள் விரல்களில். வலியில் தன்னிச்சையாக கத்தி இருந்தவள், பின் வலியை ஒதுக்கி விட்டு சமையலைத் தொடர ஆரம்பித்தாள்.

அவள் கையை ஒரு முரட்டுக் கரம் பிடித்துக் கொள்ளவும், அதிர்ச்சியில் திரும்பிப் பார்த்தாள் மங்கை. காளைதான் அவள் கையைப் பற்றி முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தான். லேசாக சிவந்திருந்த விரல்களைப் பார்த்ததும் அவனுக்கு கோபம் வந்து விட்டது. அவள் விரல்களை ஊதி விட்டுக் கொண்டே,

“நீங்க ஏன் டீச்சர் இந்த வேலையெல்லாம் செய்யறீங்க! பாருங்க கை எப்படி சிவந்துப் போச்சு!” என குரலை உயர்த்தியவன், மங்கை அவன் கண்களை ஆழ்ந்துப் பார்க்கவும் மெல்ல குரலைத் தாழ்த்தினான்.

“இல்ல டீச்சர்! கை சுட்டுக்கிச்சுல்ல! எதுக்கு இந்த வேலைலாம் செய்யனும்! உங்க வேலை படிச்சுக் குடுக்கறது மட்டும்தான்! இதெல்லாம் வேணாமே”

காளையின் பதட்டத்தைக் கண்டும் காணாதது போல அவன் கையில் இருந்து தன் கரத்தை உறுவிக் கொண்டவள்,

“டீச்சரா இருந்தா அவங்களுக்கு வயிறுன்னு ஒன்னு இருக்காதா மிஸ்டர் காளை? எங்களுக்கும் பசிக்கும்ல! நாங்களும் சாப்பிடனும்ல!” என கிண்டலாகக் கேட்டவள் மீண்டும் விட்ட வேலையைத் தொடரப் போனாள்.

அதற்கு மேல் அழுத்தி அவளிடம் பேச முடியுமா அவனால்!

“விரலு செவந்துப் போச்சு டீச்சர்!” அவளைப் பார்க்காமல் வேறு புறம் பார்த்துக் கொண்டே கெஞ்சுவது போல சொன்னான்.

“தெரியும்”

“களிம்பு போட்டுக்குங்க டீச்சர்!”

“சரி”

“இப்ப எடுத்துட்டு வரவா டீச்சர்?”

“ம்ப்ச்!”

“இல்ல, எரியும் டீச்சர்! அதான் கேட்டேன்”

“எப்படியும் ஒரு நாள் முழுசா எரிஞ்சுப் போக போற உடம்புதானே. இப்ப லேசா எரிஞ்சா பரவாயில்ல”

“ஏன் டீச்சர் இப்படி” என குரலை உயர்த்தியவன், அவள் திரும்பி நேராக அவன் முகத்தைப் பார்க்கவும் சுதியை இறக்கி,

“இப்படி அபசகுணமா பேசாதீங்க டீச்சர்!” என மெல்லிய கரகரத்த குரலில் சொல்லி விட்டு திரும்பிப் பார்க்காமல் வெளியே போய் விட்டான்.

சமையல் அறை வாயிலில் இருந்து இவர்களை கவனித்துக் கொண்டிருந்த காமாட்சிக்கு மகனின் தவிப்பும் புரிந்தது டீச்சரின் மறுப்பும் புரிந்தது. பெருமூச்சொன்றை விட்டவர்,

‘ஆத்தா குழந்தையம்மா! இனிமே என்னால இவன் கூட மாரடிக்க முடியாதும்மா! நீ விதிச்சப்படியே எல்லாம் நடக்கட்டும்! மனசு நொந்து தேவதாசா வாழனும்னுதான் அவனுக்கு விதிச்சிருந்தா, அத மாத்த நான் யாரு தாயி! உன் மேல பாரத்தைப் போடறேன் இனி! ரெண்டு புள்ளைங்களையும் நல்லா வச்சிக்கம்மா’ என அம்மனின் மேல் தனது பாரத்தை இறக்கி வைத்தவர் மங்கைக்கு கூடமாட ஒத்தாசை செய்தார். அவள் சமைத்து முடிக்க, விரலுக்கு களிம்பு பூசி விட மறக்கவில்லை அந்தத் தாய்.

அன்று நேரம் கடந்து வந்து சாப்பிட அமர்ந்த மகனுக்கு உணவைப் பரிமாறினார் காமாட்சி. தட்டில் மங்கை சமைத்த லாலிபாப் சிக்கனை வைக்க வந்தவரை தடுத்து விட்டான் அவன்.

“ஏன்டா வேணா? நல்லா ருசியா வந்துருக்குடா கோழி! டீச்சருக்கு நல்ல கைமணம்டா காளை”

“இதைப் பார்க்கறப்ப அவங்க கைய சுட்டுக்கிட்டதுதான் ஞாபகம் வருதுத்தா! அப்புறம் எப்படி என்னால இதை சாப்பிட முடியும்?” என கேட்டவன் வெறும் தயிர் ஊற்றி சோற்றைப் பிசைந்து நான்கு வாயில் கப்பு கப்பென வயிற்றுக்குள் தள்ளி விட்டு எழுந்து விட்டான்.

“அட! அவன் சாப்பிடாட்டி போறான் கிறுக்குப் பையன்! எனக்குப் போடு காமு அந்தக் கோழிய”

கை கழுவி விட்டு வந்தவன்,

“தகப்பா!” என அழைத்தான்.

“சொல்லுடா மவனே” என சொல்லியபடியே லாலிபாப்பை வாயில் வைத்துக் கடித்தார் மச்சக்காளை.

“டீவீல என்னமோ கொரானோவோ கோரோனாவோ, அப்பிடின்னு என்னமோ கிருமி சுத்துதுன்னு சொல்லுறாங்களே தெரியுமா தகப்பா?”

“எனக்கு கொரானாலாம் தெரியாதுப்பூ! இந்தியன் படத்துல வந்த கொய்ராலாவா தான் தெரியும்”

“மம்மி, தகப்பனுக்கு லொல்ல பார்த்தியா?”

“பல்லு போனாலும் உங்கப்பனுக்கு லொல்லு போகலடா!” என முறைத்தப்படியே சொன்னார் காமாட்சி.

“அந்தக் கொலைக்கார கொரோனா கிருமி கோழி சாப்டறவங்கள தான் தாக்குமாம்” என போகிற போக்கில் பொய்யாய் கொளுத்திப் போட்டுவிட்டுப் போனான் மகன்.

வாயில் இருந்த கோழி நழுவி தட்டில் விழ,

“காலையில வேட்டிய உருவுனான்! இப்ப கோழிய உருவிட்டான்!” என முனகியபடியே கைக் கழுவி விட்டு எழுந்தார் பாவப்பட்ட மச்சக்காளை.

கராத்தே கிளாஸ் முடிந்து கோயிலுக்கு அழைத்துப் போக முடியுமா என காமாட்சியைக் கேட்க வந்த மங்கை, தான் சமைத்ததை சாப்பிடாமல் போன காளையையே சில நிமிடங்கள் பார்த்தப்படி நின்றிருந்தாள். பின் தன்னையே உலுக்கிக் கொண்டவள், வந்த வழி திரும்பித் தன் ரூமுக்குள் போய் விட்டாள்.

மறுநாள் காளை மட்டனோடு கோலாகலமாக ஆரம்பிக்க, மதிய உணவு வேளையில் அவர்கள் வீட்டு முன்னே ஒரு டாக்சி வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய ஓர் ஆண்,

“தவா!!! தவமங்கை” என குரல் கொடுக்க, வெளியே வந்துப் பார்த்தான் காளை.

“வணக்கம், நான் அஜய்குமார்! மங்கை இருக்காளா? ஐ மிஸ்ட் ஹேர் சோ மச்!”

 

(அடி பணிவான்…)

 

(நாளைக்கு கொஞ்சம் பிசி. அதான் இன்னிக்கே போட்டுட்டேன். படிச்சுட்டு நாலு வார்த்தை சொல்லிட்டுப் போங்க)

error: Content is protected !!