Anbin mozhi 15

அன்பின் மொ(வி)ழியில் – 15.

தோட்டத்தில் இருந்த மருதாணி இலையை பறித்து அம்மியில் வந்து பட்டு போல அரைத்து கொண்டிருந்தார் செல்வத்தின் அன்னை சுசிலா.

வேந்தனின் தங்கைகள் இருவருக்கும் ஜாஸ், நடந்ததை சுருங்க கூறி திருமணம் பற்றி சொல்ல அவனின் அத்தைகள் உடனே தன் குடும்பத்துடன் அன்றைய இரவே கிளம்பி பூம்பொழில் வந்து விட்டனர்.

வந்தவர்களுக்கு கயல், மற்றும் பேரப் பிள்ளைகளை கண்டு அவ்வளவு சந்தோஷம், எந்த விதத்திலும் கயல் மனம் புண்படும் படி சிறிய அளவிலான பார்வையை கூட அவர்கள் வெளிப்படுத்த வில்லை.

விஷ்ணுவின் அன்னை வள்ளி வந்தவுடன் , ஆதி, ரவி இருவரை கண்டு, “ ஆத்தி இந்த புள்ளைக இரண்டும் மணியாட்டம், அப்படியே என் மருமகனை கொண்டு இல்ல இருக்குதுக, ஏலே பொன்னி, போய் கடுகு, உப்பு, மிளகாயை எடுத்துவா ஆத்தா, என் கண்ணே பட்டுடும் போல இருக்கு” என்று கண் கலங்கியவர்.

பொன்னி எடுத்து வந்ததை பிள்ளைகளுக்கு இடவலமாக சுற்றி வெளியில் சென்று எரித்து விட்டு வந்த பிறகே அமர்ந்தார்.

செல்வத்தின் அன்னை சுசிலா, புள்ளைகளை கையில் ஏந்தி முத்தமிட்டு இறக்கியவரின் கண்களில் அன்பு மட்டுமே நிறைந்து இருந்தது.

வேந்தனின் தங்கைகள் பிறகு எப்படி இருப்பார்கள்.

மனது முழுவதும் அன்பு நிறைந்திருக்கும் வெள்ளந்தியான கிராமத்து மக்கள் அல்லவா அவர்கள்.

பொன்னிக்கு தான் காண்பதை நம்பமுடியாத அளவுக்கு வியப்பாக இருந்தது, குழந்தைகளை கண்ட போது.

தன்னவனின் உருவத்தை கொண்டிருப்பவர்களை அவளுக்கு பிடிக்காமல் போக்குமா என்ன?..

வேந்தனின் மச்சான்கள் (தங்கை கணவர்) முத்து, வேலு எந்த வித கள்ளமும் இல்லாத நல்ல மனம் கொண்டவர்களாக திருமண வேலைகளில் தங்களை புகுத்தி கொண்டனர்.

ஜாஸ், ராம் சொன்னது போல திருமணத்தை பூம்பொழில் கிராமத்தில் உள்ள கோவிலில் வைத்து விட்டார்.

கயலின் மனதில் எந்த வித உறுத்தலும் இல்லாமல் தங்கள் சொந்த ஊருக்கு தன்னுடன் பிள்ளைகளையயும் அழைத்து வர வேண்டும் என்றால், தன்னவளுக்கு உண்டான முறையான அங்கீகாரம் இங்கேயே கொடுத்து விட வேண்டியது அவசியம் என்பது அவனின் எண்ணமாக இருந்தது.

கயலின் மனதில் உள்ள பயம் நீங்க, இதுவே முடிவு என்று புரிந்து கொண்டவன், ஜாஸ்ஸிடம் சொல்லி அனைத்தையும் நல்ல விதமாக முடிந்து கொண்டான் அந்த மாயவன்.

ஆதி, ரவி இருவரும் புதிதாக வந்தவர்களை கண்டு சிறிது பயந்து ஜாஸ்ஸின் பின் சென்று மறைந்து கொண்டாலும், அவர்களில் பாசம் காரணமாகவே, அல்லது இரத்த பந்தமோ, விரைவிலேயே அனைவரிடமும் ஒட்டிக் கொண்டனர்.

தனித்து இருந்த பிள்ளைகளுக்கு, கூட்டமாக இருக்கும் இந்த சூழல் விருப்பமானதாகவே அமைந்தது.

அன்றைய தினம் பெண்ணு, மாப்பிள்ளை இருவருக்கும் மருதாணி தொட்டு வைக்கும் சடங்கு.

அதற்கு தான் ராமின் அத்தைகள் இருவரும் பம்பரமாக சுற்றி வேலை செய்து கொண்டிருந்தனர்.
சமையல் வேலைக்கு ஆள்களுக்கு சொல்லியிருக்க மற்ற வேலைகளை வீட்டு பெண்களே பார்த்துக் கொண்டனர்.

ஒருவர் மருதாணி அரைக்க, மற்றோருவர் பூக்களை தொடுத்து கொண்டிருந்தார்கள்.

அங்கு வந்த ராஜ் தன் அத்தைகளை கண்டு “ஹாய் பியூட்டிஸ், இதெல்லாம் நீங்க ஏன் செய்றிங்க ?, கடையில ரெடிமேட் கோன் வாங்கி மெகந்தி போட்டுடலாம், பூ கட்டுனது ஈசியா வாங்கிக்கலாம்” என்றான் சுலபமாக.

சுசிலா – “ஏன்னப்பு இப்படி சட்டுன்னு சொல்லிட்டீங்க, அந்த அரைச்ச கோனு, எங்க இலை மாதிரி செவக்குமா?, இல்ல மணக்குமா?, இரண்டு நாளு கழிச்சு பார்த்தா கறுத்து போவும், காண சகிக்கது” என்றவர்.

பின் சிறிதாக முகம் சிவக்க “பெண்ணுக்கு அவ கணவனை எவ்வளவு புடிக்குமுன்னு மருதாணி செவக்குறத வச்சு சொல்லிப்புடலாம் தங்கம்” என்றதை கேட்டவன் வியப்பாக
“ வெக்கத்தை பாரு, மாமன் நினைப்பு போல” என்று குறும்பாக கண்களை சிமிட்டி சிரித்தவாறு கூறியவன் பின்னர் “எப்படி அத்தை?”என்றவனிடம், அவனின் கிண்டலில் இன்னும் முகம் சிவந்தவர், அதை மறைக்க முயன்ற படி…

“எவ்வளவு நல்லா செவக்குதோ, அவ்வளவு ஆசை ஒருத்தருக்கு இன்னொருத்தர் மேல இருக்கிறதா சொல்லுவாங்க,அதே போல பூவும் நம்ம மாதிரி நெருக்க கட்ட மாட்டாக மருமகனே” என்றவர் வாய் ராஜிடம் பேசிக் கொண்டிருந்தாலும், கை அது பாட்டுக்கு மருதாணியை அரைத்து கொண்டிருந்தது சுசிலாவிற்கு.

கயலை எதையும் யோசிக்க விடாமல் அவளை கண்டு கொண்ட நான்காம் நாளே திருமணத்தை வைத்து விட்டான் ராம்.

கயலின் எந்த வித மறுப்பும் ராம் ஏற்கவில்லை, தவிப்புடன் நின்றவளின் அழகிய முகத்தினை கைகளில் ஏந்தி கொண்டவன்.

“ பிள்ளைகள் எதிர்காலம் ரொம்ப முக்கியம் விழி, அதுல எந்த வித பாதிப்பும் நம்மால வரக் கூடாது அம்மு, தந்தையை அறியாமல் வாழும் நிலை அவர்களுக்கு உன்னால் கிடைக்க வேண்டுமா?”, என்றவன், அவளில் கலங்கிய விழியை நோக்கி தனது விழிகளை அதனுடன் உறவாட விட்டு “என் மீது உனக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லையா புள்ள” என்றவனின் வருத்தம் நிறைந்த குரலில், அதில் என்ன உணர்ந்து கொண்டாளோ, அதன் பிறகு எந்த வித மறுப்பும் சொல்லவில்லை.

அதோடு தன்னை பார்த்த நிமிடம் முதல் வாஞ்சையுடனும், உடல் நலம் இல்லாத நிலையில் தன்னை ஒரு அன்னையை போல் மடி தாங்கி, உணவு ஊட்டி, அவள் இதுவரை அனுபவிக்காத அன்பினை கொடுத்தவனை விரும்புகிறாளோ இல்லையோ, மலையளவு தன் பிள்ளைகளின் தந்தை மீது நம்பிக்கை கொண்டிருந்தாள்.

ஆம்! காதலனாக அவளின் மனதில் கோலோச்சவில்லை என்றாலும், பிள்ளைகளின் தந்தையாக, மனிதாபிமானம் மிகுந்த மனிதனாக சிம்மாசனம் இட்டு அவன், அவளின் உள்ளத்தில் அமர்ந்து விட்டது கயலால் கூட மறுக்க முடியாத உண்மை.

அதன் பின் ராம், கயல் திருமண வேலைகள் மின்னல் வேகத்தில் தொடங்கின.

கயலை மஞ்சள், சந்தனம், ஜவ்வாது கலந்த நீரினை கொண்டு அவர்கள் முறைப்படி நலங்குக்கு முன் குளிக்க வைத்தனர் ராமின் அத்தைகள் இருவரும்

வள்ளி – “ஆத்தா கயலு, நகைய எல்லாம் கழட்டி, புடவைய மட்டும் கட்டிக் கிட்டு வாமா, இன்னைக்கே ஜோடிச்சா கண்ணு பட்டுப் போவும் புள்ள, வெரச வா கண்ணு நலங்குக்கு நேரமாச்சு” என்றவரிடம்.

அவரின் அன்பில் நெகிழ்ந்து கண்கள் பனிக்க, கயல்விழி “சரி அம்மா” என்றாள் பாசமாக.

பின் அவர்கள் வந்த நிமிடம் முதல் அவளிடம் தாயின் வாஞ்சையுடன் நடந்து கொள்பவர்களிடம் கயல் போன்ற மென்மையான பெண்ணிற்கு பாசம் இயல்பாகவே வந்தது.

சொல்வது அனைத்தையும் கேட்டு நடக்கும் பொறுமையும், அடக்கமும் நிறைந்த அவளை , சுசீலா, வள்ளி இருவரும் தன் மகளை போலவே நடத்தினர்.

அதே சமயம் வள்ளி ஊரில் இருந்து வந்த சிறிது நேரத்தில் அனைவரின் நடவடிக்கைகளை கண்டவர்.

உடனே ஆதி, ரவி இருவரிடமிம் “உங்க அப்பாவை பாட்டிங்க கூப்பிட்டேன்னு வர சொல்லு கண்ணுங்களா” என்றார் பூடகமாக.

“அப்பாவா” என திகைத்த பிள்ளைகளை, கண்டும் காணாமல் “ராமு தானே உங்க அப்பா, இத்தனை நாளு வெளியூருக்கு போயிருந்தவுக இப்ப உங்களை பாத்து, ஒண்ணா இருக்க வந்துருக்காங்க, நீ என்ன அப்பாவான்னு கேக்குற செல்லம்”என்றார் வியப்பாக,

வீட்டில் உள்ளவர்கள் குழந்தைகளை கண்டது முதல் எப்படி சொல்வது என திகைத்திருந்த ஒரு விடயத்தை எளிதாக, விளையாட்டு போலவே கூறி அனைவரின் கவலையையும் இனிதாக ஒரு முடிவுக்கு கொண்டு வந்தவர்.

“உங்க அப்பா என்னன்னா இங்க கிளம்பும் போதே, என்னைய பார்த்தா, உடனே என் புள்ளைக அப்பான்னு என் கைகளுக்குள்ள வந்துடுன்னு ஜாம்பமா சொன்னான்” என்று ஏத்தி விட்டவரின் மறு வார்த்தைகளினை கேட்க அந்த பிஞ்சுகள் இரண்டும் அங்கு இல்லை.

அந்த சின்ன சிட்டுக்கள் இரண்டும் ஓடும் வேகத்தை கண்டு மர்மமாக புன்னகைத்தவர் மனம் நிறைந்து விட்டது.

தனது அறையில் இருந்த ராமினை நோக்கி ஓடி வந்தவர்கள் “அப்பா” என்று கூறி கொண்டு அவனின் மீது ராமின் அத்தை கூறியது போல் தாவினார்.

பிள்ளைகளின் இனிமையான குரலில் இவ்வளவு நாள் கேட்க விரும்பிய ‘அப்பா’ என்ற வார்த்தைகளை கேட்டு இன்பமாக அதிர்ந்தவன் தன் மீது தாவிய அந்த இளம் மொட்டுக்களை தன்னுள் இறுக்கி கொண்டவனின் வாயில் இருந்து வார்த்தைகள் வர மறுத்தன, தொண்டை அடைக்க, அவனின் அழகிய அந்த நீல நிற விழிகளில் நீர் ததும்ப உணர்வின் பிடியில் சிக்கி தவித்தவன் இதழ்கள் தன் மைந்தர்களின் முகம் முழுவதும் புதைந்து மீண்டது.

எத்தனை நேரம் அப்படி இருந்தானோ, அவனை போல் பொறுமை அந்த இளம் குருத்துகளுக்கு இல்லையே தந்தையின் நெஞ்சில் புதைந்திருந்த தங்கள் முகத்தினை நிமிர்த்தி ராமின் முகத்தினை நோக்கினர்.

ஆதியின் முகம் சிறு சிணுங்களுடன் நீங்க சொல்லல என்றான் நேரடியாக.

“நீங்க கண்டுப்பிடிக்க காத்திட்டு இருந்தேன் கண்ணுங்களா, நீங்க தான் லேட்டா வரிங்க அப்பாட்ட” என்று போலியாக வருந்தியவனை கண்ட ராமின் இளைய மகன் தந்தையின் கன்னத்தை மென்மையாக வருடினான்.

அந்த மயில் இறகு போன்ற வருடலில் ராமின் உடலில் ஏற்பட்ட சிலிர்ப்பை வார்த்தைகளை கொண்டு வருணிக்க முடியாது.

உலகில் உள்ள இன்பங்கள் அனைத்தையும் கண்டு உணர்ந்தது போல் மகிழ்ந்தவன்.

ஆதி, ரவி இருவரையும் அந்த அறையில் இருந்த நிலை கண்ணாடியின் அருகில் தூக்கி சென்றவன், தன் முகத்தை அருகே அந்த அழகிய மொட்டுக்களின் முகம் கொண்டு வந்தவன்

“கண்ணாடியை பாருங்க குட்டிகளா, நீங்க யாரு மாதிரி இருக்கீங்க?” என்றான் கேள்வியாக.

சிறிய இரட்டையர்கள் இருவரும் ஒரே நேரத்தில் தங்கள் அழகிய நீல நிற விழிகளை விரித்து, தந்தை சொன்னது போல் கண்ணாடியை பார்த்தவர்கள்.

அடுத்த நொடி “அப்பா மாதிரி” என்று கூறி ராமின் கழுத்தை கட்டி கொண்டார்கள் குதூகலமாக.

ராம் தன் பிள்ளைகளை ஏந்தி மகிழ்வுடன் அவர்கள் நின்ற அந்த நிலை அழகிய ஓவியம் போல அந்த கண்ணாடி பிரதிபலித்தது.

அதன் பின்னர் பிள்ளைகள் இருவரும் பூனை குட்டி போல தந்தையை உரசிக் கொண்டும் அவனின் பலம் வாய்ந்த தேக்கை ஒத்த தோள்களில் தொங்கி கொண்டும் அலைந்தனர்.

அதன் காரணமாக ராமின் முகம் வெளிப்படுத்திய பூரிப்பை கண்டவர்களுக்கு அத்தனை நிறைவாக இருந்தது .

***********************

மணமக்கள் இருவரையும் மனையில் அமர்த்தினார் சுசிலாவும், வள்ளியும்.

பின் ராம், கயல் இருவருக்கும் வீட்டில் இருந்தவர்கள் முறையே நலங்கு வைத்து, மருதாணி தொட்டு வைத்து அனைத்து சடங்கையும் முறையாக செய்தவர்கள், இறுதியாக விளக்குகளை தரையில் படாமல் உக்கார்ந்து இருந்த அவர்களின் முன்னும் , பின்னும் மூன்று முறை ஏற்றி இறக்கி அன்றைய சடங்கினை அழகாக முடித்தனர்.

ராமிற்கு தன்னுடைய ஊரின் வழக்கம் தெரியும் என்பதால் அமைதியாக பார்த்து கொண்டிருந்தான். தன்னவளின் மீது இருந்து வரும் சந்தன, ஜவ்வாது மனம் அவனை மயக்கியது.

முதல் முறை மங்கையவளின் மெல்லிய இதழ்களை தன் இதழ் கொண்டு தீண்டிய நினைவு வந்து அவனின் தவிப்பினை தீவிரமடைய செய்தது.

அந்த நேரத்தில் கண்கள் முழுதும் தன்னவள் அழகிய வதனத்தை நிரப்பியவாறு , சுகமாக அந்த தருணத்தை அனுபவித்து கொண்டிருந்தான் ராம் வில்லியம்ஸ்.

கயலுக்கு தான் அனைத்தும் வியப்பாக இருந்தது.

ஜாஸ் உள்ளம் முழுவதும் பூரிப்புடன் நடப்பது அத்தனையையும் கண்களில் நீர் நிறைய, மகிழ்வுடன் பார்த்து கொண்டு இருந்தார்.

பொன்னியின் கைகளில் இருந்த ஆதி, தன் பாட்டிகள் செய்யும் ஒவ்வொன்றிற்கும் கேள்வி கேட்டு அவளை படுத்தி எடுத்துவிட்டான்.

ஆதியின் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொன்னவளின் கன்னத்தில் முத்தமிட்டு “ யூ ஆர் சோ ஸ்வீட் பேபி, லவ் யூ சோ மச்” என்றவனின் வார்த்தைகளையும், செயலையும் கண்ட அவனின் சித்தப்பாவின் காதுகளில் புகை வராதது ஒன்று தான் குறை.

ராஜின் விழிகள் பொன்னியின் கைகளில் இருந்த ஆதியின் மீது பொறாமையாக படிந்தது.

ராஜின் பார்வையினை புரிந்து கொண்ட செல்வன் அவனின் முதுகில் தட்டி “என்னலே என் மருமகன முறைக்குற?” என்றான் கிண்டலாக.

அவனின் வார்த்தைகளால் உருவன சூட்டுடன் செல்வத்தை நோக்கியவன் பின்னர் நமட்டு சிரிப்புடன், “என்னையே பார்க்காம உன் பின்னால திரும்பி பாரு செல்ல குட்டி” என்றான் நக்கலாக.

அவனின் பேச்சில் புரியாமல் திரும்பி பார்த்தவனின் காதில் இப்போது புகை வந்தது.

அவனின் பின்னால் தள்ளி அமர்ந்திருந்த ரமியின் மடியில் அமர்ந்து அவளின் நெஞ்சில் உரிமையாக சாய்ந்திருந்த ரவியை கண்டு.

ரம்யாவை கண்டது முதல் அவளின் மீது தோன்றிய ஈர்ப்பு, அன்றைய அவளின் மலர்ந்த புன்னகையை கண்டு, இவள் உன்னுடையவை என்று கூறிய மனதினை உணர்ந்து திகைத்தவன்.

ராஜின் முன்பே அதை மறைமுகமாக வெளிப்படுத்திய பின்னரும் கூட அவனை ஒரு பொருட்டாக கூட பார்க்காத அவளை கண்டு தன் பற்களை கடித்து கொண்டு இருக்க மட்டும் தான் முடிந்து செல்வத்தால்.

செல்வத்தின் முகத்தில் இருந்த கடுப்பை கண்டு திருப்தி அடைந்து, தன் பழைய வேலையை தொடர்ந்து செய்தான், அதான் பொன்னியை கண்களால் தீண்டும் வேலையை…

தமது இணைகள் இருவரையும் தவிக்க விடுவது தெரியாமல் நடக்கும் விழாவில் லயித்திருந்தனர் பொன்னியும், ரமியும்.

********************

வேந்தனின் பூம்பொழில் இல்லம் அன்று மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.

கணவனின் படத்தின் முன்பு நின்று பூக்களை வைத்த ஜாஸ்ஸின் முகம் முழுவதும் மகிழ்வுடன், கண்கள் நிறைந்த ஆனந்த கண்ணீருடன் வேந்தனின் முகத்தினை பார்த்துக் கொண்டிருந்தார்.

அளவு கடந்த ஆனந்தம் அவர் முகத்தில் இருந்ததில், பார்க்க தேவதை போல் இருந்தவர் உள்ளம் நீண்ட நெடிய ஆண்டுகளுக்கு பிறகு நடக்க போக்கும் தன் இல்லத்தின் திருமணத்தை எண்ணி எண்ணி சந்தோஷம் கொண்டிருந்தது.

பூஜை அறையில் இருந்து ஜாஸ் வெளியில் வந்த போது,

குட்டி இளவரசர்கள் இருவரும் அழகாக பட்டு வேட்டி சட்டை அணிந்து பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் ரமி, நிலா இருவரின் கைகளை பிடித்து மாடியில் இருந்து இறங்கி வந்தனர்.

அழகிய ஓவியம் போல இருந்த அந்த காட்சியை தன் மன பெட்டகத்திற்குள் சேர்த்து வைத்தவர். தங்கள் குலம், ஆலமரம் போல் தழைக்க வந்த தன் குடும்பத்தின் அந்த சிறிய பிஞ்சுகளை நோக்கி வந்தார்.

தங்கள் பாட்டியை கண்டதும் ஓடி வந்து அவரின் இடுப்பை கட்டி கொண்டன அந்த அழகிய முயல்க் குட்டி இரண்டும்.

“குட் மோர்னிங் பாட்டி” ஒருசேர கூறிய பிள்ளைகள் நெற்றியில் முத்தமிட்டவர், “குட் மோர்னிங் குட்டிஸ்” என்றவர்.

தன் கரத்தில் இருந்த தட்டில் இருந்து, திருநீறை எடுத்து பிள்ளைகளுக்கு வைத்து விட்டவர்.

“ரவி, ஆதி சாமி ரூம்ல போய் உங்க தாத்தாவ பார்த்துட்டு வாங்க” என்றவர் வார்த்தைகளை கேட்ட இருவரும் “சரி பாட்டி” என்றவாறு வேந்தன் புகைப்படத்திற்கு அருகில் வந்தவர்கள் அங்கு இருந்த பூக் கூடையில் இருந்த மலர்களை சுவாமி படங்களுக்கு வைத்தவர்கள், ஜிசஸ் படத்திற்கும் வைத்து கண்களை மூடிக்கொண்டு நின்றனர்.

பிள்ளைகளின் செயலை கண்டு பூரித்தவர் உள்ளம் பின்னோக்கி சென்றது ,

அவர்களின் அன்னையை தன் தோளில் சாய்த்த வண்ணம் அழைத்து வந்த ராமின் முகம் தோன்றியது.

கயல் முடியாத அன்று அவளை அத்துணை அன்பாய் பார்த்துக் கொண்ட ராம், மாலையே தன்னவளை அழைத்து கொண்டு பெரிய வீட்டிற்கு வந்து விட்டான்.

வந்தவன் அவளை மாலை உறக்கத்தில் பிடியில் இருந்த பிள்ளைகள் உள்ள அறையில் விட்டவன் நேராக வந்தது அன்னையிடம் தான்.

ஜாஸ்ஸிடம் வந்தவன் எதையும் பேசாமல் தன் அன்னையின் மடியில் தலை வைத்து கண்களை மூடி படுத்து விட்டான்.

மகனின் மனதை உணர்ந்தவர் எதையும் கேட்காமல் அவனின் முடியை மென்மையாக வருடி கொடுத்தார்.

ராஜ் – அன்னையின் மடியில் தளர்ந்து விழிமூடி கிடந்த ராமின் வாடிய முகத்தினை கண்டவன் தன்னுடைய இரட்டையின் அருகில் வந்து அமர்ந்தவனிடமும் மௌனமே குடிகொண்டு இருந்தது.

தன் விழிகளை மெல்ல திறந்தவன் தன் அன்னையை ஏக்கமாக பார்த்து, “அம்மா எனக்கு கயலும், பிள்ளைகளும் எப்பவும் என் கூடவே வேணும்” என்றான் குழந்தையை போல் தவிப்பாக.

ஜாஸ்ஸிற்கு உள்ளமே நடுங்கி விட்டது எப்போதும் கம்பீரமாக அனைவரையும் எதிர்கொள்ளும் தன் தலை மகன் தற்போது யாரும் அற்ற பிள்ளை போல் தவிப்பாக கூறியதை கண்டு.

“கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணு ராஜ்” என்று தன் மற்றோரு மகனிடம் கூறியவரின் வார்த்தைகளை கேட்ட ராம்.

“கல்யாணம் இங்கேயே இருக்கட்டும்மா” என்றான் முடிவாக.

ராஜிற்கு தன் தமையனின் மனம் தெளிவாக புரிந்திருந்தது, கயலுக்கு கிடைக்க வேண்டிய மரியாதையின் நிமர்த்தமே! அவனின் இந்த முடிவுக்கு காரணம் என்று உணர்ந்து கொண்டவன், தன் அருகில் இருந்த ராமின் தோள்களில் மென்மையாக தட்டியவன்.

“உன் மனசு போல எல்லாம் நடக்கும் ராம், நான் நடத்தி வைப்பேன்” என்று உறுதியாக கூறியவன்.

அடுத்து செய்ய வேண்டியதை மனதில் கணக்கிட்டு முக்கியமானவர்களை மட்டும் ஊரில் இருந்து அன்னையை அழைக்க சொன்னவன்.

செல்வம், விஷ்ணுவின் துணை கொண்டு அடுத்த மூன்று நாட்களில் நடைபெறும் திருமணத்திற்கு தேவையான அனைத்து விதமான ஏற்பாடுகளையும் செய்தான் ராஜ் வில்லியம்ஸ்.

அனைத்து விடையங்களை விரைவாக வீட்டிலேயே முடிவு செய்து நடந்ததால், அங்கு ராஜின் கதையை முடித்து கயலை கவர்ந்து செல்ல நினைக்கும் விஜய் எதையும் அறிய முடியவில்லை.

தன் நினைவில் இருந்து வெளி வந்த ஜாஸ் அருகில் இருந்த ரமி, நிலா இருவருக்கும் குங்குமம் இட்டு விட்டு “கோவிலுக்கு போகணும் ரமி, கயல் ரெடியா நிலா?” என்றார் கேள்வியாக.

ரமி – அவரின் கேள்வியின் திருதிரு என முழித்த நிலாவின் தலையில் தட்டி விட்டு, “இவளே இப்ப தான் தூங்கி எழுந்து வராம்மா, அவள் கிட்ட போய் கேக்குறீங்க” என்று கூறி சிரித்தவள்.

“கயலை, நான் கொஞ்சம் நேரம் முன்னாடி பார்த்தேன், அத்தைங்க கூட அவளோட தான் இருக்காங்க , ரெடி ஆகிட்டு இருக்கா, ஆனா…” என்று தயக்கமாக கூறியவாறு அன்னையின் முகத்தினை கலக்கமாக நோக்கியவளின் மனதில் உள்ளதை உள்ளபடி சரியாக புரிந்து கொண்டவர்.

மெல்லிய புன்னகையுடன், “எதையும் உடனே ஏத்துக்க, எல்லாரையும் முடியாது ரம்யா, அதுலயும் யாரும் இல்லாத நிலையில் இருந்த ஒரு சிறிய பெண் அடைந்த வேதனை அவளை அவ்வளவு சீக்கிரம் எதையும் எத்துக்காது, அதனால் உண்டான குழப்பமும், தவிப்பும் கயலுக்கு இருக்குறது சகஜம் தான், எல்லாம் சரி ஆகிடும்” என்று தோழிக்கான ரமியின் கவலையை புரிந்து கொண்டவர் மென்மையாக எடுத்து கூறினார்.

தனது அறையில் திருமணத்திற்கான அலங்காரத்துடன் அதே சமயம், கண்களில் தவிப்புடன் நிலை கண்ணாடியை பார்த்தவாறு அமர்ந்திருந்த கயலின் மனம் நடப்பதை தடுக்கவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல் திண்டாடியது.