LogicillaMagic20

LogicillaMagic20

மேஜிக் 20

 

நந்தனாவும் அவள் நண்பர்களும், தேயிலைத் தோட்டத்தின் வெளியே காவலாளியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர்.

காவலாளியோ முன் அனுமதி இல்லாமல் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார். எஸ்டேட் முதலாளியின் தொலைப்பேசி என்னையும் கொடுக்க மறுத்துவிட்டார்.

நண்பர்கள் சோகமாகத் தங்கள் காரை நோக்கி நடக்க அவர்கள் குறுக்கே வேகமாக வந்த நிரஞ்சனின் கார் பலத்த சத்தத்துடன் நின்றது.

புயலென இறங்கியவன் “சொல்லிட்டு கிளம்பனும்னு பேசிக் சென்ஸ் இல்லை?” படபடவெனப் பொரிந்தவன், நந்தனாவை முறைக்க, குறுக்கிட்ட சித்தார்த்,

“நந்து மேல தப்பில்லை சார். சாரி நான் தான் நேரம் மிச்சம்பிடிக்க எல்லாரையும் கூட்டிகிட்டு வந்தேன்.”

அவனை முறைத்தவனோ “யாருக்கானாலும் இது பொருந்தும். இனி சொல்லிட்டு கிளம்புங்க. ஆமா ஏன் திரும்பறீங்க, ஷூட்டிங் இல்லையா?” என்று கேட்க, நடந்தவற்றை அனைவரும் தெரிவிக்க.

“பெர்மிசன் வாங்கிட்டு வரணும்னு கூடத் தெரியாதா?” கடுகடுத்தவன், நந்தனாவின் வாடிய முகத்தைக் காண முடியாமல் யாருக்கோ கைப்பேசியில் அழைத்தான்.

“வாங்க பெர்மிசன் கிடைச்சாச்சு” என்றபடி முன்னே நடக்க

முகம் மலர்ந்த நந்தனா “உங்களுக்கு எப்படி?” ஓட்டமும் நடையுமாக அவனைத் தொடர்ந்தாள்.

“தெரிஞ்சவங்க எஸ்டேட் தான்” சொல்லியபடி அவன் வாயிற்கதவை நெருங்க

“வாங்க சார்!” வணக்கம் சொல்லிப் புன்னகையுடன் காவலாளி கதவைத் திறக்க அனைவரும் ஒருவரை ஒருவர் வியப்புடன் பார்த்துக்கொண்டபடி உள்ளே சென்றனர்.

தேயிலைத் தோட்டத்தைச சுத்தி பார்த்தவர்கள், சில இடங்களைத் தேர்ந்தெடுத்துப் படப்பிடிப்பைத் துவங்கினர்.

‘படிக்கிறேன்னு பேரவச்சுக்கிட்டு அடிக்கிற லூட்டியை பார்’

ஒரு ஓரமாய் அமர்ந்து கொண்டு அவர்கள் படப்பிடிப்பென்ற பெயரில் செய்யும் ரகளைகளைக் கண்டு ரசித்துச் சிரித்துக்கொண்டிருந்தான் நிரஞ்சன்.

ஒருவர் சொல்லுவதை மற்றொருவர் கேட்காமல் ஒரே காட்சியை மாறி மாறி எடுப்பது, சித்தார்த் வசனத்தை மறந்து திரு திருவென விழிப்பது, ஆர்வக்கோளாறில் அவ்வப்போது மயூரா பிரேமிற்குள் நுழைந்து,

“டேய் இப்படி நில்லு”

“அப்படி பாரு”

“உன் கண்ணுல காதலே தெரியலைடா தடியா ! கண்றாவியா பாக்குறே”

“உன்னை எல்லாம் ஹீரோவா போட்ட நந்துவை மொத்தமும்”

“அடேய் ஏண்டா சோதிக்கிறே?” என்று சித்தார்த்தை வதைக்க

“போடி லூசு. நீயே ஆம்பளை வேஷம் போட்டு ஹீரோவா நடிச்சுக்கோ” என்று சித்தார்த் கோவமாகப் போவதும், யாராவது ஒருவர் அவனைச் சமாதானம் செய்து அழைத்து வருவதுமெனப் பாதிநேரம் சண்டையும் குழப்பமும் சமாதானமுமென விரயமானது.

“அட போங்கடா கேனைகளா! பிரேக்!” அலுப்புடன் வந்த நந்தனா, நிரஞ்சனின் அருகில் வந்து உட்கார பார்க்க

“நந்து அங்க வந்து பாரேன்!” என்றபடி வந்த விக்னேஷ், அவள் கையைப் பிடித்து இழுத்துச் சென்றான்.

ஆண் பெண் நட்புடன் பழகுவதை தவறாக நினைக்கும் குறுகிய மனப்பான்மை இல்லாதவன் நிரஞ்சன் என்றாலும், தன் கண்முன்னே விக்னேஷ் உரிமையாய் நந்தனாவின் கையைப் பிடித்ததில் கோபம் தலைக்கேற முகத்தைத் திரும்பிக்கொண்டான்.

சில நிமிடங்கள் கழிந்தும் அவர்கள் வராததால் பொறுமை இழந்தவன் மயூராவை அழைத்து, “அவங்க எங்க போயிருக்காங்க?”

“அந்தப்பக்கம் வியூ நல்லா இருக்காம் அதான் அடுத்த லொகேஷன் பார்க்க.” அவனைப் பார்த்துச் சிரிப்பை அடக்கிக்கொண்டு “ஏன் அண்ணா நந்து இல்லாம போர் அடிக்குதா?”

“அதெல்லாம் இல்லை போய் ரொம்ப நேரம் ஆன மாதிரி இருந்தது. தேங்க்ஸ் !” என்றவன் கோவத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு கைப்பேசியை நோண்டத் துவங்கினான்.

‘டேய் நீ எத்தனை வாட்டி வைஷு, வீனா கையைப் பிடிச்சுருக்கே? நந்து அவ பிரெண்ட்ஸ் கிட்ட எதார்த்தமா பழகினா அது உனக்குத் தப்பா படுதா?’ மனம் அவனைக் குற்றம் சாட்ட, தன்னை கட்டு படுத்திக்கொண்டவன், அதன் பிறகு அவர்களாய் வரும்வரை எதுவும் கேட்கக்கூடாதென்று அமைதியானான்.

ஆனால் அவனால் சிறிதுநேரம் கூடத் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

மிகவும் அமைதியற்ற மனநிலையில் நிலைகொள்ளாது தவித்தவன், நந்தனா எங்கே சென்றிருக்கிறாள் என்று அவள் நண்பர்களிடம் கேட்டுக்கொண்டு , அந்த இடத்தை நோக்கி நடக்க, எதிரே கைப்பேசியில் பேசிக்கொண்டே வந்த விக்னேஷிடம்

“நந்தனா எங்க?” எனக் கேட்க, அவனோ நந்தனா சிறிதுநேரம் முன்பே திரும்பிவிட்டதாகச் சொல்ல,

“அவ இங்க வரலையே! நீ தானே கூட்டிகிட்டு போனே ? அவளை இப்படித் தெரியாத இடத்தில தனியாவா விடுவே ?”

“அவ என்ன குழந்தையா சார்? வந்திடுவா. எதுக்கு நீங்க இதுக்கு இவ்வளவு கவலைப்படறீங்க ?” விக்னேஷ் கேலியாய் கேட்க,

நிரஞ்சன் கோவமாக “நான் அவளை கல்யாணம் பண்ணிக்க போறவன், நான் கவலை படாம? உனக்கு அவ கிளாஸ்மேட் தான். ஆன எனக்கு அவ லைஃப் மேட் (கிளாஸ் மேட் = வகுப்புத் தோழி, லைஃப் மேட் = வாழ்க்கைத்துணை)” என்று கடிந்து கொண்டவன், அவன் பதிலுக்குக் காத்திராமல் விறுவிறுவென நந்தனாவை தேடிச் சென்றுவிட்டான்.

நண்பர்கள் கூட்டத்தை அடைந்த விக்னேஷ், இதை சொல்லிச் சிரிக்க, சித்தார்த்தோ “டேய் கேனை! அவளை ஏண்டா தனியா விட்டே? அவர் உன்னை அடிக்காம விட்டதே பெரிசு. வா அவளைத் தேடுவோம்”

அவனையும் அழைத்துக்கொண்டு கிளம்பிய சித்தார்த், சுகன்யாவையும் மயூராவையும் அங்கேயே இருக்கும்படி சொல்லிவிட்டுச் சென்றான்.

நந்தனாவை தேடி தேயிலைத் தோட்டம் முழுவதும் சுற்றித் திரிந்தான் நிரஞ்சன. அவள் கைப்பேசி தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாய் மீண்டும் மீண்டும் சொல்ல,

“எங்கடி போய்த் தொலஞ்சே?”, கோவமாகப் புலம்பியபடியே நடக்க, சற்று தொலைவில் பள்ளத்தாக்கு போல் தோன்ற வேகமாய் அதை நோக்கி ஓடினான்.

‘போட்டோ எடுக்கறேன் பேர்வழின்னு அங்க எங்கயானா போய்…’ மனத்தி ஓரத்தில் பயம் தோன்ற, ஊட்டிக் குளிரையும் மீறி உடல் வேர்க்க வேகமாக ஓடினான்.

“நந்தனா!” அவன் கத்தியதில், பாறையின் மீது ஏறி நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த நந்தனா, நிலை தடுமாறி கீழே விழ, இன்னும் வேகமாக அவளை நோக்கி ஓடினான் நிரஞ்சன்.

“ஹேய்!” அவளைக் கைதாங்கலாக எழுப்பி உட்கார வைத்தவன், கைக்கால் மூட்டுகளில் சிராய்ப்பு ஏற்பட்டு, கண்கள் கலங்க அவனையே பயத்துடன் பார்த்திருந்தவளை, கடிந்து கொள்ள முடியாமல்,

கவலை தோய்ந்த குரலில் “என்ன பேபி நீ ? சொல்லிட்டு வர மாட்டியா? ஏகெல்லாம் தேடினேன் தெரியுமா” அவள் சிராய்ப்புகளில் ஒட்டி இருந்த சேற்றை நாசுக்காகத் தட்டிவிட, அவளோ ‘ஸ்ஸ் ‘ என்று வலியில் முகம் சுருக்க,

“கொஞ்சம் பொறுத்துக்கோ கார்ல ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் (முதலுதவி பெட்டி) இருக்கு. மெதுவா போகலாம் வா” அவளைக் கைதாங்கலாய் நிற்க வைத்தான்.

“தேவையா இது உனக்கு? இப்படித் தெரியாத ஊருல தனியா வரலாமா? இதுக்கு தான் கண்டவன் கையைப் பிடிச்சுக்கிட்டு போகக் கூடாதுன்னு சொல்றது. இனி அவன் உன் கையைப் பிடிக்கட்டும் அவன் கையை உடைச்சுடறேன் பாரு.” ஆதங்கத்துடன் ஆரம்பித்தவன் ஆத்திரத்துடன் முடித்தான்.

“சாரி வழி தெரியாம இந்த பக்கமா வந்தேனா…அப்படியே இடம் நல்லா இருக்கேன்னு போட்டோ எடுக்க…” அவள் தயக்கத்துடன் அவன் முகம் பார்க்க

“வேணாம் ஏதாவது வாயில கண்டபடி வந்துடும். பேசாம வா!” அவன் கடுகடுக்க, மௌனமாகிவிட்டாள்.

‘பார்க்க எவ்வளவு அழகா இருக்கே, பேச்சும் அப்படியே இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்?’ அவன் பக்கவாட்டு தோற்றத்தை ரசித்தவாறே முதலடி எடுத்துவைக்க முயற்சித்தவள், வலியில் துடித்து நிற்க முடியாமல் அவள்மேல் சாய்ந்து.

“ப்ளீஸ் ரஞ்சன் ! என்னால சுத்தமா நடக்க முடியலை. சுளுக்கி இருக்குன்னு நெனைக்கிறேன். சராய்ச்சித்து வேற எரிச்சலா இருக்கு.” அவள் கண்கள் கலங்க.

“இரு…” அவன் துவங்கும்பொழுது, சித்தார்த், விக்னேஷ் இருவரும் வந்துவிட அவர்களும் தங்கள் பங்கிற்கு நந்தனாவிற்கு அர்ச்சனை செய்தனர்.

“அப்பா சாமிகளா நான் எங்கேயுமே போகலை. ஆளாளுக்கு கறிச்சு கொட்டாதீங்க!” கத்தியவள் கோவமாக நடக்க முயன்று மீண்டும் வலியில் துடிக்க,

“இரு டா நான் தூக்கிக்கிறேன்” விக்னேஷ் அவளைத் தூக்கிக்கொள்ள ஆயத்தமாக

“நான் தூக்கிக்கிறேன் வா பேபி” வேகமாக, அவள் எதிர்பாரா நொடி லாவகமாக அவளைக் கைகளில் ஏந்தி கொண்டான் நிரஞ்சன்.

நந்தனா அதிர்ச்சியாய் “உங்களுக்கு எதுக்கு சிரமம்? விக்னேஷ் ஜிம் பாடி தங்குவான். நீங்க…” அவள் முடிக்கும் முன்னே,

“என்ன சொன்னே?” அவன் உருமியதில் வாயைப் பொத்திக்கொண்டாள்.

கோவம் தலைக்கேறியவனோ “வாயை மூடிட்டு வா அரிசி மூட்டை உனக்கென்ன என்னைப் பார்த்தா வீக் பாடி மாதிரியா இருக்கு?” அவன் முறைக்க, பதிலுக்கு அவளும் முறைக்க,

“முழிக்காதே அப்படியே கீழே போட்டுட்டு போயிட்டே இருப்பேன்” அவன் விடாது கோவமாய் சொல்லவும்

“நான் ஒன்னும் அரிசி மூட்டை இல்லை…” அவள் உதட்டைப் பிதுக்க

“ஆகா… அப்படியே உனக்குக் கொடி இடை பாரு” அவன் அவளைப் பழித்தபடி நடக்க, அவன் கைகளில் சவாரி செய்தவள்,

“கொஞ்சம் பூசினாப்ல இருக்கேன் அதுக்குன்னு…”

உடனே அவளை மெல்ல கிழ இறக்கி விட்டவனோ “போடி! தூக்கவே முடியலை. குண்டுபுஸ்கா” வேண்டுமென்றே அவளை வம்பிழுக்க

“ஐயோ என்னால நடக்க முடியாது ப்ளீஸ்” குழந்தைபோல கைகளை மேலே உயர்த்தி தன்னை மீண்டும் தூக்கிக்கொள்ள அவள் கெஞ்ச, நிரஞ்சனோ விஷம புன்னகையுடன் “முடியாது போடி” என்று திரும்பி நடக்கத் துவங்கினான்.

இவர்கள் நாடகத்தைப் பார்த்துத் தங்களுக்குள் சிரித்தபடி வந்த சித்தார்த் விக்னேஷ் இருவரும் இப்பொழுது உரக்கச் சிரிக்க, நந்தனாவிற்கு கோவம் தலைக்கேற

“டேய் விக்னேஷ் வந்து மரியாதையா என்னை தூக்கிக்கோடா! மூன்றாம் பிறைல கமல் ஸ்ரீதேவிய தூக்குறாப்ல என்னை உப்புமூட்டை துக்கு. வா…” அவள் கத்தியது தான் தாமதம்

“அதுனால என்ன வா” என்று விக்னேஷ் அவளை நெருங்க, அதுவரை புன்னகையுடன் இருந்த நிரஞ்சனின் முகம் இறுகியது.

‘அடேய் எனக்குன்னு எங்கிருந்து டா வருவீங்க? உப்புமூட்டையாம் உப்புமூட்டை. உனக்கு அறிவே இல்லையா பேபி! விடு நீயும் லூசுதானே அதான் சொல்றே போல, ஆனா இவன் கமலா? நான் இருக்கும்போது எவனையோ தூக்க சொல்றே?லூசு லூசு! ’

“உன் தொல்லைக்கு அளவே இல்லையா? வா ஏறித்தொலை” அவள் முன் திரும்பி ஒற்றைக் காலில் மண்டியிட்டு அமர்ந்தான் நிரஞ்சன்.

“நீ வேணாம் போ! சும்மா சும்மா என்னைக் குண்டுன்னு பழிக்கிறே” என்று முகம் திரும்பியவள்

“நீ வாடா விக்கி” அவனை மறுத்து விக்னேஷை அன்பாய் விக்கி என்றழைக்க, ஏனோ விக்னேஷ் கையில் கிடைத்தால் கிழித்தே விடும் வெறி தலைக்கேறியது நிரஞ்சனுக்கு.

“சரி சரி நீ அரிசி மூட்டை இல்லை வா” கோவத்தை மறைத்துப் புன்னகையுடன் அவன் அழைக்க, அவள் முறுக்கிக்கொண்டு மீண்டும் விக்கியை அழைத்தாள்.

திரும்பித் தன்னை முறைத்த நிரஞ்சனின் முகத்திலிருந்த ரௌத்திரத்தைக் கண்ட விக்கி,

‘இவர் கிட்ட சிக்கினா என்னைக் கொன்று இங்கயே பொதச்சுடுவார் போல இருக்கே. ஆஹா’ பதறிய விக்னேஷ்,

“நீ சார் கூட வா டா. நாங்க முன்னாடி போய் எல்லாத்தையும் பேக் பண்றோம்.” என்றபடி சித்தார்த்தை இழுத்துக்கொண்டு ஓடியே விட்டான்.

“போடா டேய்!” கடிந்துகொண்டவள் வேறுவழியின்றி நிரஞ்சனின் முதுகில் உப்புமூட்டை ஏறிக்கொண்டாள்,

அவனோ முகமெங்கும் புன்னகையுடன் “உனக்கு ஓகேவா பேபி, சௌரியமா இருக்கா?” என்று கேட்டபடி அவன் மெல்ல நடக்க,

“ஜாலியா இருக்கு” என்றபடி அவன் தோளில் நாடியை வைத்துக்கொண்டு வெட்கமேயின்றி குழந்தைபோல் சிரித்தவளை ஓரக்கண்ணில் பார்த்தவன்

“ஏன் இருக்காது இப்படி மூட்டைக் கணக்கா இருக்க உன்னைத் தூக்கிட்டு போற எனக்குத்தான் வலிக்குது” வேண்டுமென்றே அவன் வம்பிழுக்க

“விடு ! நான் வரமாட்டேன் உன்கூட” அவள் முறுக்கிக் கொள்ள

“சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன் பேபி. நீ பஞ்சுப் பொதி மாதிரிதான் இருக்கே போதுமா”

“வேணாம் பொய் சொல்றே!”

“நோ நோ நெஜம்மா எனக்குப் பாரமாவே இல்லை.”

“நெஜம்மா?”

‘ அதெப்படி நேருக்கு நேரா இல்லைனு உண்மையை சொல்றது?’

“நெஜம்மா!” சமாளித்தவன் மெல்ல அவளைத் தன் கார்வரை சுமந்துகொண்டு சென்றான்.

முதலுதவி பெட்டியை எடுத்து அவள் காயத்திற்கு மருந்திட்டவன், விருந்தினர் மாளிகையிற்கு வண்டியைக் கிளப்பினான்.

நண்பர்கள் அருகிலிருப்பதாய் கெஞ்சியும் அவர்களைச் சமாளித்துத் துரத்தி விட்டவன், நந்தனாவின் அருகிலேயே இருந்து அன்பாய் பார்த்துக்கொண்டான்.

சமையல்காரர் மலை வாழ் பெண்ணொருவரை அழைத்து வந்து நந்தனாவின் காலில் சுளுக்கெடுத்து விட, அதன் பின் நிரஞ்சன் கொடுத்த மருந்தின் வீரியத்தில் உறங்கிப் போனாள்.

தன் அறைக்குத் திரும்பி மடிக்கணினியில் ட்ரஸ்டின் வேலைகளைப் பார்த்திருந்தவன் மனம் அன்றைய நிகழ்வுகளை எண்ணி குழப்பத்தில் ஆழ்ந்தது.

நந்தனாவுடன் இருக்கும் நேரம் தனக்குள் நேரும் மாற்றங்களும், அவளைப் பிரிந்து இரவு தனிமையில் இருக்கும் நேரம் மனதில் எழும் குழப்பமும், தடுமாற்றமும் அவன் நிம்மதியைக் குலைத்தது.

மடிக்கணினியை அனைத்தவன், நந்தனாவின் அறைக்குச் சென்று அவள் அருகில் அமர்ந்து கொண்டான்.

ஓடும் வடிவில் குழந்தைபோலத் தூங்கிக் கொண்டிருந்தவளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டான்.

“ஒரு பொண்ணு இப்படியா குழந்தை மாதிரி தூங்குவா?”

அவள் தலையை மெல்ல வருடியவன் “என்னை என்ன பண்றே பேபி நீ ? ஏன் என்னை இப்படி பைத்தியமா சுத்த விடறே? என்னைக் கொல்றியே டி ! எனக்குத் திரும்ப வேணும் என் தனிமை, என் உலகம், என் வேலை, என் கவனம், என் தூக்கம், என் மனசு !”

தானே அறியாமல் தன் மனதை உறங்கிக்கொண்டிருக்கும் அவளிடம் வெளிச்சம் போட்டுக் காட்டியவன் அவள் அருகில் அமர்ந்து அப்படியே உறங்கியும்விட்டான்.

காலை இளம் வெளிச்சம் கண்களைத் தீண்ட, உறக்கம் தெளிந்தவன் தான் அங்கேயே உறங்கியதை உணர்ந்து நந்தனா எழும் முன்னே தன் அறைக்கு விரைந்து தாளிட்டு கொண்டான்.

“என்ன நடக்குது எனக்குள்ள? சே நானும் சராசரி மனுஷனா நடக்குறேனே! இல்லை நான் எப்படி சுயநலமா சிந்திக்கத் தொடங்கினேன்? டிரஸ்ட் மட்டுமே என் வாழக்கை. இவளைக் கொண்டுபோய் பத்திரமா வீட்ல விட்டுட்டு, எப்படியான இந்த கல்யாணத்தை உடனே நிருத்தனும்!’ மனதில் பிரமாணம் செய்துகொண்டான். அவன் அறியவில்லை, அழையா விருந்தாளியாய் மனதில் புகுந்த காதல் இனி பிடித்துத் தள்ளினாலும் தன்னை விட்டுப் போகாதென்று.

காலை உணவிற்குப் பின், கொஞ்சம் ஊட்டியைச் சுற்றிப் பார்த்துவிட்டுப் பின்பு அன்றைய படப்பிடிப்பைத் துவங்கலாம் என்று திட்டமிட்டுக் கொண்ட நண்பர்கள், நிரஞ்சனை அழைக்க அவனோ வேலை இருப்பதால் அவர்களைச் சென்று வரும்படி அனுப்பிவைத்தான்.

எங்கே அவளைப் பார்த்தால் தன் வசம் இழந்துவிடுவானோ என்ற பயத்தில் நந்தனாவை பார்ப்பதைத் தவிர்த்தான்.

காலைமுதல் மதியம் வரை ஊட்டி பொட்டானிக்கல் தோட்டத்தைச் சுற்றிப் பார்த்தவர்கள் மதியம் முதல் இரவுவரை தேயிலைத் தோட்டத்தில் படப்பிடிப்பை நடத்தினர்.

இரவு குளிருகிதமாய் விருந்தினர் மாளிகை முன்னால் இருந்த திறந்த வெளியில் கேம்ப் ஃபயர் மூட்டி, நெருப்பில் குளிர்காய்ந்து கொண்டே அரட்டை அடித்துக்கொண்டிருந்தனர்.

அன்று முழுவதும் நந்தனாவை தவிர்த்தவன், தன் அறையிலிருந்த ஜன்னல் வழியே நெருப்பில் குளிர் காய்ந்தபடி சிரித்து மகிழ்ந்து பேசிக்கொண்டிருந்த நந்தனாவை கண்கொட்டாது ஆசையாய் பார்த்திருந்தான்.

ஒருபக்கம் மனம் அவளை நெருங்க, அவளைத் தன்னவளாய் மாற்றிக்கொள்ள ஏங்கியது, மறுபக்கம் அவளை மணந்து, குடும்பம் குழந்தை என்றானால் தன்னால் அறக்கட்டளை வேலைகளை ஒழுங்காகச் செய்யமுடியாமல் போகுமோ என்ற கவலை அவனைத் தடுத்தது.

நண்பர்கள் ஒவ்வொருவராய் உறங்கச் சென்றுவிடத் தனியாய் நெருப்பை வெறித்தவாறு அமர்ந்திருந்தாள்.

தன் மனதைத் திசைதிருப்ப மடிக்கணினியில் வேலை செய்து கொண்டிருந்தவன், நந்தனாவை காண மீண்டும் ஜன்னல் பக்கம் நின்று பார்க்க, அவள் தனியாய் இருப்பதைப் பார்த்துக் கடகடவென கீழே இறங்கிச் சென்றான்.

“என்ன தனியா உட்கார்ந்துகிட்டு?”

“தூக்கம் வரலை” மன இறுக்கம் கண்கள் வழியே நீர்த்துளியாய் வெளிவர, நெருப்பின் ஒளியில் நந்தனாவின் கலங்கிய கண்கள் மின்னப் பதறி மண்டியிட்டு அவள் எதிரில் அமர்ந்தவன்

“ஹே என்னாச்சு?” அவள் கண்களை மென்மையாய் துடைத்து விட்டு,

“என்னமா? யாரவது எதானா சொன்னாங்களா?” அவன் பரிவுடன் கேட்ட நொடி, மடைதிறந்த வெள்ளம் போல் பொங்கி அழத் துவங்கிவிட்டாள்.

“ஹே பேபி என்னமா ?” அவள் நாடி பிடித்து உயர்த்தினான்.

“என்னை ஏன் நீங்க ஒதுக்குறீங்க?” அழுகையும் கேவலுமாய் அவள் கேட்க, முகத்திற்கு நேராய் அவள் கேட்டுவிட என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் விழித்தவன்,

“அப்படி எல்லாம் இல்லடா கொஞ்சம் வேலை அதான்…”

“இல்லை கார்த்தால சாப்பிடும் போதும் என்னை பார்க்கக் கூட இல்லை. இன்னிக்கி கால் எப்படி இருக்குன்னு ஒரு வார்த்தை கேட்டீங்களா?” அவள் குற்றம் சட்ட

“சாரி மா கொஞ்சம் வேலை. இப்போ கால் எப்படி இருக்கு?”

“இன்னும் கொஞ்சம் வலி இருக்கு. விக்கி, சித்து தான் மாத்தி மாத்தி கைதாங்கலா கூட்டிட்டு போனாங்க” அவள் சொல்லவும் நிரஞ்சன் முகம் வெளிறிப்போனது.

மயூரா அவனிடம் தானும் சுகன்யாவும் நந்தனா நடக்க உதவுவதாகச் சொல்லி இருக்க, நந்தனா சொன்னதைக் கேட்டதும்

“அப்போ மயூரா, சுகன்யா உன்னை பிடிச்சுக்கலயா? அவங்கதான் உன்னை பிடிச்சுகிட்டதா சொன்னா?” அவன் கோவத்தில் வார்த்தையைவிட

அதுவரை அழுதுகொண்டிருந்தவள், அழுகையை நிறுத்தி “யார் சொன்னா?” கண்களைத் துடைத்துக்கொண்டே கோவமாய் கேட்கக் கோபத்திலிருந்து நிரஞ்சனோ அன்று முழுவதும் அவள் நண்பர்களிடம் நந்தனாவை பற்றியும், அவர்கள் எங்கெங்கு இருக்கிறார்கள் என்பதையும் அவ்வப்போது கேட்டுக்கொண்டே இருந்ததை உளறிவிட, அதைப் பிடித்துக் கொண்டாள்.

“யார் யாருக்கோ ஃபோன் பண்ணி கேட்பீங்க ஆனா எனக்கு ஒரு ஃபோன் செஞ்சா என்ன?”

“இல்லமா, நீ பிசியா இருப்பே. நீ தானே கேமரா பின்னாடி நிக்குறே அதான்…”என்று சமாளிக்க முயன்றான்

“வேண்டாம் நீங்க என்னை ஒதுக்குறீங்கன்னு எனக்கு அப்பட்டமா தெரியுது.” கோவமும் அழுகையும் தொண்டையை அடைக்க

எனோ அவள் முகம் வாடியதில், தன் மனம் சுக்குநூறாகச் சிதறுவதைப்போல் உணர்ந்தவன்

“நீ மட்டும் என்னைத் தப்பா நெனைச்சுடாதே. சில பேஷண்ட்ஸ்க்கான டாகுமெண்ட்ஸ் ரெடி பண்ணவேண்டி இருந்தது. நான் இங்க வந்ததால தடைப்பட கூடாதுல்ல அதான் இங்கிருந்தே ஆன்லைன்ல அதுக்கான வேலைகளைப் பார்த்துட்டு இருந்தேன்”

அழுகையை நிறுத்திவிட்டு மெல்லிய கேவலுடன் “கேக்கறேன்னு தப்பா நினைக்காதீங்க. உங்ககிட்ட பணம் இல்லையா என்ன? இலவசமா நீங்களே ட்ரீட்மெண்ட் கொடுக்கலாமே?”

சிரித்தபடி அவள் தலையைப் பிடித்து ஆடியவன்,

“நீ குழந்தைன்னு நிரூபிக்கிற பேபி. சொத்தே கரையும் வரை தானம் பண்ணாலும், ஃப்ரீயா ட்ரீட்மெண்ட் கொடுத்தாலும் எல்லாரையும் கவர் பண்ண முடியுமா சொல்லு?” அவளைக் கேட்டவன் தானே தொடர்ந்தான்.

“இதுவே எங்ககூட சேர்ந்து மத்த ஹாஸ்பிடல்சும் ட்ரஸ்ட்ல இணைஞ்சா எங்கெங்கோ மூலை முடுக்கெல்லாம் இருக்க நோயாளிகள் பயனடைவாங்கல?” அவன் கேட்க

“ம்ம்” தலையை ஆட்டியவள் மௌனமாய் இருக்க, மீண்டும் தொடர்ந்தான் நிரஞ்சன்

“என் காலம் இருக்கிறவரை மட்டுமே இதெல்லாம் நடக்கவா நான் பாடுபடறேன்? என் வாழ்க்கை முடிஞ்சாலும் இந்த ட்ரஸ்ட் தொடரனும். இன்னும் இந்த ட்றாஸ்ட் வளர்ந்து இந்தியா உலகம்னு விரிவடையனும். இதான் என் ஆசை, கனவு எல்லாம்.”

ஆகாயத்தைப் பார்த்தபடி கண்கள் விரிய தன் லட்சியத்தை நந்தனாவிடம் பகிர்ந்து கொண்டான்.

அவனையே கண்கொட்டாது பார்த்திருந்த நந்தனா,

“எனக்கு இருக்கிறதே ஒரே ஒரு இதயம், அதையும் எத்தனை தரம்தான் கொள்ளையடிப்பே? திருடா!” அவள் முணுமுணுக்க

“ஏதாவது சொன்னியா?” அவன் புருவம் சுருக்க

“ம்ம் ஒண்ணுமில்லயே”

“இதயம்? இல்லை ஏதோ நீ சொன்ன மாதிரி இருந்தது…புரியலை” அவன் விடாப்பிடியாய் கேட்க

மலங்க மலங்க விழித்தவள் “அது…நாளைக்கு, சீன் யோசிச்சுட்டு இருந்தேன்” சமாளித்தாள்.

“இவளோ நேரம் தொண்டை தண்ணி வத்த சொல்லிக்கிட்டு இருக்கேன்… விடு எனக்கு என் கனவுன்னா உனக்கு உன் கனவு. சரி நாளைக்கு என்ன பிளான்?”

“கொஞ்சம் ஷூட்டிங் கொஞ்சம் ஊர் சுத்தல். ஆமா நாளைக்கு நீங்களும் எங்ககூட வருவீங்க தானே? வேலை இருந்தா வேண்டாம்” அவனுடன் சேர்ந்திருக்க ஆசை ஒருபுறம் இருக்க, தன்னால் அவன் வேலை பாதிக்கக் கூடாதென்ற எண்ணமும் சேர்ந்துகொள்ள அவனையே ஏக்கமாய் பார்த்தாள்.

‘நீ இப்படி பார்த்தா உன்னைவிட்டு இம்மி அளவு நகரவும் மனசு வராதே பேபி!’ அவளைக் காணும் வரை மட்டுமே இருக்கும் வைராக்கியம் அவளைக் கண்ட மறுநொடியே காற்றோடு மென்துகளாய் மறைந்து போனது.

error: Content is protected !!