Kaathal Dairy – 11 & 12

images

செழியனின் விருப்பம்

செமஸ்டர் எக்ஸாம் முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பிய தென்றல் பஸ் ஸ்டாப் நோக்கி செல்ல சஞ்சீவ் தன் பைக்குடன் வந்து நிற்க, “என்னங்க இந்த நேரத்தில் இங்கே வந்திருக்கீங்க” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.

“இன்னைக்கு உன்னோட வெளியே போலன்னு வந்தேன்” என்றதும்,“சரி வாங்க போலாம்” என்ற தென்றல் அவனோடு பைக்கில் ஏறிட பைக் வேகமெடுத்தது.

ஒரு பிரபலமான ஹோட்டல் முன்னாடி பைக்கை நிறுத்திவிட்டு தென்றலோடு உள்ளே நுழைந்தான். அங்கே ஒரு டேபிளில் அமர்ந்த சஞ்சீவ் பேரரை அழைத்து ஆர்டர் கொடுத்துவிட்டு, “உங்க அண்ணா அநியாயத்திற்கும் நல்லவராக இருப்பாருன்னு நினைக்கல தென்றல்” என்றவனை அவள் முறைத்தாள்.

“ஏன் எங்க அண்ணா இப்போ என்ன பண்ணிட்டாருன்னு இப்படி அவரைக் கேலி பேசறீங்க” அவள் கோபத்துடன் சண்டைக்கு வந்தாள்.

“தென்றல் ரிலாக்ஸ். நான் உங்க அண்ணனைக் கேலி பண்ணல. எந்தவொரு அண்ணனும் ஆசரமத்தில் அப்பா, அம்மா இல்லாமல் வளர்ந்த பையனுக்கு கல்யாணம் பண்ணித்தர சம்மதிக்க மாட்டான். அதே மாதிரிதான் பொண்ணோட அப்பா, அம்மாவும் நினைப்பாங்க. ஆன உங்க வீட்டில் எல்லோருமே வித்தியாசமாக இருக்கீங்க” என்றவன்  சேரில் சாய்ந்து அமர்ந்தான்.

சிலநொடி அவனை இமைக்காமல் நோக்கிய தென்றலோ, “எங்க வீட்டில் எல்லோருக்கும் நல்ல மனசுன்னு சொல்லலாம். எங்க அப்பா அவரோட உயிர் நண்பன் இறப்புக்கு போயிட்டு வரும்போது இனியாவுடன் வந்தார். ஒரு பொண்ணை பாரமான நினைக்கிற இந்த காலத்தில், கணவனோட முடிவை மனதார ஏத்துகிட்டாங்க எங்க அம்மா” என்ற இனியா அடுத்து சொன்ன விஷயம் கேட்டு சஞ்சீவ் கண்கள் கூட கலங்கியது.

“நிஜமான காதல் இருந்தா மட்டும்தான் இந்த புரிதல் வரும். எங்கப்பாவிற்கு எங்கே தேடியும் பொண்ணு அமையாமல் கோவிலுக்கு போயிட்டு வரும் வழியில் ஒரு விபத்தில் தன்னோட மொத்த குடும்பத்தை இழந்து நின்ற அம்மாவை கையோடு வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க” என்றவள் பாதியில் நிறுத்தினாள்.

அவர்கள் ஆர்டர் கொடுத்த உணவுகள் வந்துவிட, “அப்புறம் என்னாச்சு சொல்லு தென்றல்” என்றான் சஞ்சீவ்.

“அவங்க அந்த விபத்தை மறக்காமல் பயத்துடன் நைட் கத்துவாங்கலாம் சஞ்சீவ். அப்போ எல்லாம் அப்பாதான் பக்கத்தில் இருந்து அம்மாவைப் பார்த்துகொள்வாராம். பின்நாளில் அப்பாவை கல்யாணம் பண்ணிக்க சொன்னதுக்கு எனக்கு மனைவியாக வரும் பெண் சுப்புவாக இருந்தா கல்யாணம் பண்ணிகிறேன்னு சொன்னதும் தாத்தா பாட்டியும் சரின்னு சொல்லிட்டாங்க” என்றவள் சொல்லி முடிக்கும்போது சஞ்சீவ் தன்னை சமாளிக்க வெகுவாக போராடினான்.

ஒரு விபத்து என்பது அங்கிருப்பவர்களுக்கு ஒரு அன்றாட நிகழ்வு. பேப்பரில் படிப்பவர்களுக்கு ஒரு நியூஸ். அந்த விபத்தால் இறந்தவரைப் பற்றி கவலைபடுவதில்லை. அவர்களின் குடும்பத்தின் இழப்பு பற்றி யோசிப்பதுமில்லை. அந்த விபத்தில் உயிர் தப்பியவர்களுக்கு மட்டுமே தெரியும் வாழ்க்கை முழுக்க நரகம் என்று!

அந்த நிலையை தானும் கடந்து வந்திருக்கிறோம் என்ற நினைவுடன் அவன் உணவை சாப்பிடாமல் வெறிக்க, “இந்த இழப்பை நேர் செய்யும் நேரத்தில் இனியா எங்க வீட்டுக்கு வந்தா சஞ்சீவ். யாருக்கும் தன்னால் எந்த துன்பமும் வரக்கூடாதுன்னு நினைக்கிறவ” என்றவளின் குரல்கேட்டு சஞ்சீவ் நடப்பிற்கு வந்தான்.

“யாருக்கோ வந்த இழப்புன்னு கடந்து போற மனுஷங்க நடுவே இப்படியும் சிலர் இல்ல தென்றல்” என்றவன் புன்னகைக்க முயன்று தோற்றான்.

அவனின் கரம்பிடித்து அழுத்தம் கொடுத்த தென்றல், “அப்படிபட்ட வயிற்றில் வந்து பிறந்த எங்கண்ணா மட்டும் கெடுதல் நினைப்பானா? அவனுக்கு எப்போதும் அடுத்தவங்க சந்தோஷம் தான் முக்கியம். நம்ம விஷயம் தெரிஞ்சி அண்ணா என்ன பண்ண போறனோ என்ற பயம் இருந்துச்சு” என்றாள்.

“ம்ம் நீ சொல்வது நிஜம்தான்” என்றவனுக்கு அப்போது தான் கதிர் தன்னை அறிமுகபடுத்தியது நினைவுவர, “உங்க அண்ணா போன் பண்ணி கூப்பிட்ட பயத்தில் உங்க வீட்டுக்கு வந்து பார்த்தா. அவரு கொடுத்தாரு பாரு ஒரு ஷாக்” என்றவனுக்கு இன்று நினைத்தாலும் உடல் சிலிர்த்தது.

“எங்க அண்ணா என்ன சொல்லி அறிமுகப்படுத்துச்சு” முகத்தைப் பாவமாக வைத்துகொண்டு தென்றல் கேட்க அவளிடம் விளையாட நினைத்தவன்,

“ம்ம் இது தென்றலோட அண்ணான்னு என்னை அறிமுகப்படுத்தினாரு” அவன் சிரிக்காமல் சொல்ல, “என்னது” என்று அதிர்ந்தவளைப் பார்த்து வாய்விட்டு சிரித்தான் சஞ்சீவ்.

அவன் தன்னிடம் விளையாடுவதை உணர்ந்து, “ஏன்டா பொய் சொல்ல ஒரு லிமிட் வேண்டாம்” என்றவள் அவனின் கையைபிடித்து நறுக்கென்று கிள்ளிவைத்தாள்.

“ஆஆ” என்று அலறியவனோ, “ஏண்டி கிள்ளி வைக்க ஒரு இடம், பொருள், ஏவல் இல்லையா? தனியாக இருக்கும்போது செய்வதை எல்லாம் ஹோட்டலில் உட்கார்ந்துட்டு பண்ணுது பாரு பிசாசு” என்று திட்டியவன் தன் கைகளை ஆராய்ந்தான்.

அவள் கிள்ளி வைத்திருந்த இடம் சிவந்திருப்பது பார்த்து, “நல்லா  நல்லிஎலும்பு மாதிரி இருந்துட்டு எப்படி கிள்ளி வெச்சிருக்கு பாரு” என்றவன் கோபத்தில் அவளை முறைத்தான்.

அதெல்லாம் கண்டு கொள்ளாத தென்றலோ, “சஞ்சீவ் இந்த இடம், பொருள், ஏவல் என்றால் என்ன?” என்று கண்களை சிமிட்டி குறும்புடன் விளக்கம் கேட்டவளை கொலைவெறியுடன் பார்த்தான் சஞ்சீவ்.

“இப்போ இது ரொம்ப முக்கியமா” என்றான் கடுப்புடன்.

“எனக்கு ரொம்ப முக்கியம்” என்றாள் தென்றல் வேண்டுமென்றே.

“ஒருநாள் தனியா தமிழ் கிளாஸ் எடுக்கிறேன். இப்போ சாப்பிடும் வேலையைப் பாரு” என்றவன் சாப்பிடுவதில் கவனம் செலுத்த தென்றலும் அவனோடு சேர்ந்து சாப்பிட்டுவிட்டு எழுந்தாள்.

இருவரும் சாப்பிட்டு முடித்து பில் கொடுத்துவிட்டு பேரருக்கு டிப்ஸ் என்று தனியாக நூறு ரூபாய் வைப்பதைக் கவனித்த தென்றல், “இந்த பணத்தை எதுக்கு வைக்கிற சஞ்சீவ்” என்றாள்.

“டிப்ஸ்” என்றான் அவன் சாதாரணமாகவே.

“அதெல்லாம் வேண்டாம். அதுக்கு பதிலாக ஒரு பார்சல் சாப்பாடு வாங்கு” என்றவளை விநோதமாக பார்த்தாலும் அவள் சொன்ன விஷயத்தை செய்ய அவன் மறுக்கவில்லை.

அந்த ஹோட்டல் விட்டு வெளியே வந்ததும் சுற்றிலும் பார்வையை சுழற்றிய தென்றல் அங்கிருந்த ஒரு கை இல்லாத பிச்சைக்காரனிடம், “ஐயா இந்தாங்க சாப்பாடு” என்று கொடுப்பதை தூரத்தில் நின்று பார்த்த சஞ்சீவ், ‘இதுக்கு தான் அங்கே டிப்ஸ் கொடுக்க வேண்டான்னு சொன்னாளா’ என்றவன் தீவிரமான சிந்தனையுடன் நின்றிருந்தான்

அந்த பெரியவர் அவளை கையெடுத்து கும்பிட, “வயிறார சாப்பிடுங்க” என்று சொல்லிவிட்டு அவனை நோக்கி வந்தவள், “போலாமா” என்றாள் புன்னகையுடன்.

“ஆமா இந்த பணத்தை டிப்ஸ் கொடுத்த அவனோட குடும்பம் நல்ல இருந்திருக்கும் இல்ல. இப்போ இவருக்கு கொண்டு வந்து கொடுப்பதால் உனக்கு என்ன லாபம் சொல்லு. உனக்கு செய்யணும் என்ற எண்ணமிருந்த பெரிய ஆசரமங்கள் இருக்கு அதுக்கு கூட டொனேஷன் பண்ணலாமே” என்ற ரீதியில் கேட்டவனை ஏறயிறங்க பார்த்தாள்.

“ஏன் அப்படி பார்க்கிற” அவன் சந்தேகமாக இழுக்க, “கண்ணுக்கு முன்னாடி ஒருத்தர் பட்டினியாக இருப்பவனுக்கு சாப்பாடு இல்ல. பசியில்லாத ஒருவனுக்குப் போய் சாப்பாடு போட சொல்ற” என்றவளை அவன் புரியாத பார்வை பார்த்தான்.

அவனின் பார்வையின் பொருள் உணர்ந்து, “எனக்கு பசிக்குதுன்னு நான் ஹோட்டலுக்கு வயிறார வந்து சாப்பிட்டேன். எனக்கு தேவைன்னு ருசியா சாப்பிட்ட மாதிரி இன்னைக்கு ஒருநாள் அந்த பெரியவரும் சாப்பிடட்டும் என்று நினைச்சு வாங்கி கொடுத்தேன்” என்றவள் தொடர்ந்து

“இப்போ என்னால் அந்த மனுஷன் ஒரு நேரம் வயிறார சாப்பிடுவது ஒரு  நல்லதுதானே.  எனக்கும் இனியாவிற்கும் எங்க அண்ணா சொல்லிகொடுத்த பாடம் ஒண்ணுதான். உனக்கு நீ என்ன செய்ய நினைக்கிறீயோ அதை மற்றவர்களுக்கும் செய்.” என்றவளின் விளக்கத்தில் சஞ்சீவ் நிதர்சனத்தை உணர்ந்தான்.

பிறந்து வளர்ந்து எல்லாமே ஆசிரமத்தில் என்பதால் அங்கே டொனேஷன் கொடுப்பது தவறில்லை என்ற எண்ணம் அவனின் நெஞ்சில் ஆழமாக பதிந்திருந்தது. தென்றலின் இந்த செயலில் அவனின் கருத்தை மாற்றிக்கொண்டான்.

“ஸாரி தென்றல் இனிமேல் டிப்ஸ் என்ற பெயரில் பணத்தை வீணாக செலவு செய்ய மாட்டேன்” என்ற சஞ்சீவ் தவறை உணர்ந்து கூறவே அவளும் சரியென்று தலையசைக்க, “உங்க அண்ணாவின் குணம் அப்படியே உனக்கும், இனியாவிற்கு வந்திருக்கு..” என்றவன் மனதை மறைக்காமல் கூறினான்.

அவள் புன்னகைக்க, “அப்புறம் எதுக்கு தென்றல் இனியாவை வெளிநாடு அனுப்பினீங்க” என்று சந்தேகமாக கேட்க, “என் அண்ணாவுக்கு நானும், இனியாவும் தான் உலகம். அவன் எவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சான்னு எங்க இருவருக்கும் தெரியும். அப்படி இருக்கும்போது அவனோட கனவே வெளிநாடு சென்று படிக்கணும் என்பது தான். அந்த கனவே இல்லன்னு ஆனதை எங்களை படிக்க வைத்து சந்தோசப்படுகிறான்” என்றவளை அவன் இமைக்க மறந்து பார்த்தான்.

இத்தனை நாளும் தென்றலிடம் இருக்கும் குணங்கள் மட்டுமே அவனுக்கு பிடித்திருந்தது. இன்றோ அவளின் குடும்ப பின்னணி, செழியனின் காதல், சுப்புவின் புரிதல், கதிரின் தியாகம், இனியாவின் கனவு, தென்றலின் செயல்கள் என்று அனைத்தும் பிடித்திருந்தது.

யாரோ எப்படியோ போன நமக்கு என்ன என்று செல்லும் இந்த காலத்தில் இவர்களோ ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுக்காமல், பிறரின் இழப்பை ஈடு செய்வது போல தங்களின் பாதையை மாற்றிக்கொண்டு மனம் நோகாமல் நடந்துகொள்ளும் அவர்களின் எதார்த்தமான வாழ்க்கையில் நாமும் இனிய போகிறோம் என்ற எண்ணமே தித்திப்பாக இருந்தது.

“நீ எனக்கு கிடைச்சதை நினைச்சு சந்தோசமாக இருந்தேன் தென்றல். உங்க குடும்பத்தில் நானும் ஒருவன்னு நினைக்கும்போது மனசுக்கு நிறைவாக இருக்குடி” என்றான் தென்றலின் கரம்பிடித்தபடி.

அதன்பிறகு இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.

மாலைநேரம் இரைதேடி சென்ற பறவைகள் கூட்டை நோக்கி பறந்து சென்றது. வானம் செந்நிற ஆடையை அணிந்துகொண்டு நிலவின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தது.

வேலையெல்லாம் முடிந்து கடையை மூடிவிட்டு மனைவியுடன் வீட்டிற்கு கிளம்பிய செழியனுக்கு மனம் ஏனோ பாரமாக இருக்க, “சுப்பு போகிற வழியில் கோவிலுக்கு போயிட்டு போலாமா” என்று கேட்ட கணவனை வினோதமாக பார்த்த சுப்பு சரியென்று தலையசைத்தார்.

கணவனும், மனைவியும் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு அங்கிருந்த பிரகாரத்தில் அமைதியாக அமர, “என்னங்க திடீர்ன்னு கோவிலுக்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க” என்று மெல்ல கேட்டார் சுப்பு.

கலக்கமான முகத்துடன் தன் பதிலை எதிர்பார்த்து அமர்ந்திருந்த மனைவியிடம், “எல்லாம் நம்ம இனியா பற்றிய கவலைதான் சுப்பு” என்றார்.

“அவளுக்கு என்னங்க” என்றார் சாதாரணமாகவே.

“இன்னைக்கு ஒரு பணக்கார வீட்டிலிருந்து நம்ம இனியாவை பெண்கேட்டு நம்ம டீகடைக்கு வந்திருந்தாங்க சுப்பு” என்றவர் முகத்தை கூர்ந்து கவனித்த சுப்புவிற்கு கணவனின் மனம் நொடியில் புரிந்துபோனது.

“என்ன சொன்னாங்க?” என்றார் எதிர்ப்பார்ப்பை விழிகளில் தேக்கி.

“அவங்க பையன் வெளிநாட்டில் பிஸ்னஸ் பண்றானாம். அவனுக்கே பெண்ணைக் கட்டிகொடுத்தா இருவரும் அமெரிக்காவில் இருப்பாங்களாம்..” என்ற கணவனின் வார்த்தைகளில் ஒருப்பக்கம் மனம் மகிழ்ந்தபோதும் இனியாவை யாரோ விட்டுக்கு மருமகளாக அனுப்புவதை நினைத்து வருந்தவே செய்தது.

“நீங்க என்ன பதில் சொல்லியிருக்கீங்க. நம்ம பொண்ணுக்கு நல்ல பொருத்தமான இடமென்றால் அவளோட விருப்பத்தைக் கேட்டுட்டு கல்யாணம் பண்ணி வைங்க” என்ற மனைவியை நிமிர்ந்து பார்த்து முறைத்தார் செழியன்.

“நம்ம கதிரை அவனோட விருப்பபடி படிக்க வெச்சிருந்தா அவனும் இப்போ வெளிநாடு வேலைக்கு போயிருப்பான் இல்ல” என்றவரின் குரலில் இருந்த ஏதோவொன்று மனைவியையும் தாக்கியது.

தென்றல், இனியாவின் எதிர்காலத்தை நினைத்து மகனைப் படிக்க வைக்க முடியாது என்று சொன்னவர் அதற்காக வருத்தபடாத நாளே இல்லை. கணவன் வேண்டுமென்றே மகனின் படிப்பிற்கு தடை சொல்லவில்லை என்ற உண்மையை உணர்ந்தே இருந்தார்.

“நீங்க சொல்வதும் ஒருப்பக்கம் உண்மைனாலும், இன்னொரு பக்கம் உங்க மகள்கள் இருவரையும் நல்லாத்தான் படிக்க வெச்சிருக்கீங்க. நீங்க வருத்தபடுவது அவசியமே இல்லங்க” என்று கணவனுக்கு ஆறுதல் சொல்ல,

“ஏன் சுப்பு நம்ம கதிர் வெளிநாடு போய் படிச்சிருந்தா இனியாவை அவனுக்கே கல்யாணம் பண்ணி நம்ம வீட்டோடு கடைசி வரை வெச்சிருந்திருக்கலாம் இல்ல” என்றவர் எதையோ நினைத்து கூறவே சுப்புவும் புன்னகையுடன் தலையசைத்தார்.

சிலநேரங்களில் நாம் எடுக்கும் முடிவுகள் மற்றவர்களுக்கு கசப்பாக தோன்றலாம். அதே அந்த முடிவினால் பெற்ற பிள்ளைகள் தங்களின் கண்முன்னே சந்தோசமாக இருப்பதை காணும் நேரத்தில் அப்போது எடுத்த முடிவு தவறில்லை என்ற நிதர்சனம் புரியும்.

“நம்ம கதிர் வெளிநாடு போய் படிக்கலன்னா என்னங்க? இனியாவிற்கு கதிர் என்று இருந்தா அதை மாற்ற நம்மளால் முடியாது” என்ற மனைவியை நிஜமாகவே முறைத்தவர், “நீ புரிஞ்சிதான் பேசுகிறாயா சுப்பு” என்றார் கோபத்துடன்.

“ஏன் நான் என்ன இப்போ தப்பா சொல்லிட்டேன்” என்றார்.

“ஒரு விஷயத்தை தெளிவாக புரிஞ்சிக்கோ. ஒரே வீட்டில் வளர்ந்ததால் இருவரும் காதலிப்பாங்கன்னு சொல்ல முடியாது” என்ற கணவனை முறைப்பது இப்போது சுப்புவின் முறையானது.

“நான் காதலிக்கறாங்கன்னு சொல்லல. நம்ம கதிருக்கு இனியான்னு இருந்தா அதை மாற்ற முடியாதுன்னு சொல்றேன். எனக்கு நம்ம பிள்ளைகள் பற்றி நல்லாவே தெரியும்..” என்றவர் கணவர் தடுக்க இடம் கொடுக்காமல் தானே தொடர்ந்தார்.

“நம்ம கதிர் காலேஜ் படிக்கிறேன்னு வெளியூர் போன நாளிலிருந்து வீட்டுக்கு வந்த இனியாவை அவளோட ரூமிற்கு போய் பார்த்துட்டு வராமல் தூங்கியதே இல்ல. நட்ட நடு ராத்திரியில் வீடு வந்தாலும் அவளோட வம்பு பண்ணாமல் தூங்க மாட்டான். இனியா மட்டும் சும்மாவா இருப்பா. அவன் ஊரிலிருந்து வந்துட்டா கதிர் மாமான்னு அவன் கழுத்தை பிடிச்சு தொங்கிட்டே இருப்பா..” என்றவர் இருவரின் உண்மைகளையும் கணவனின் முன்னே கடைபரப்ப செழியனும் அதை நினைத்து சிரித்தார்.

அவர் சிரிப்பதைக் கண்டு, “அவங்க இருவருக்கும் இடையே இருப்பதை இன்னும் அவங்களே என்னன்னு புரிஞ்சிக்காமல் இருக்காங்க. அது சாதரணமான அன்புன்னா நம்ம இனியாவிற்கு நல்ல இடத்தில் மாப்பிள்ளை பார்ப்பது தப்பில்ல” என்றவர் நிறுத்திவிட, “அதை மட்டும் ஏன் முழுங்கற சுப்பு. அதையும் சொல்லிடு” மனைவியை வம்பிற்கு இழுத்தார்.

“நான் என்ன சொல்ல வரேன்னு தெரிஞ்சும் என்னை வம்பிற்கு இழுக்கிறீங்க..” என்றவர், “அவங்க முதலில் மனசில் இருப்பதை சொல்லட்டும். அப்புறம் நம்ம ஆசைபட்டது நடக்குமா நடக்காதான்னு யோசிக்கலாம்” என்றார் சுப்பு முடிவாக.

“ம்ம் பார்க்கலாம் சுப்பு. நம்ம இனியாவோட முடிவைப் பொறுத்து தான் நான் முடிவெடுப்பேன். தாய், தகப்பன் இல்லாத பிள்ளையை வளர்த்தி யாரோ கையில் கொடுக்க போறோமே என்ற வருத்தம் இருந்தாலும், அவளுக்கு விருப்பமான வாழ்க்கையை அவளுக்கு அமைத்து கொடுக்கணும் என்ற எண்ணமும் இருக்கு” என்றவர் நிதர்சனம் உணர்ந்து கூற சுப்புவிற்கும் அதுவே சரியென்று தோன்றியது.

 “உனக்கு நான் எனக்கு நீ

என்ற எண்ணத்தில்

மனதில் காதல் வந்தது..

ஆஸ்திக்கு ஒரு ஆண் குழந்தை

ஆசைக்கு ஒரு பெண் குழந்தை

என்ற எண்ணத்தில் வந்து

மழழை செல்வங்கள்..

நமக்கு நாம் என்ற எண்ணத்தை

மாற்ற வந்தாள் கண்ணுக்கினியாள்..

கதிரின் கனவு தியாகத்தில்

மற்ற பிள்ளைகள் வாழ்க்கையில்

வெளிச்சம் வருவதைப் பார்த்து

உள்ளம் பூரித்தேன்..

நமக்கு பிறகும் நம் பிள்ளைகள்

நல்வழியில் செல்வார்கள் என்ற

எண்ணம் ஒன்றே போதுமடி..

நிஜத்தில் நான் ஏழை இருந்தாலும்

எண்ணத்தில் நான் செல்வந்தனடி..” மாலை வீட்டிற்கு வந்த செழியன் தன் அன்றாட குறிப்புகள் பக்கத்தில் எழுதினார்..

நேஹாவின் திருமணம் பேச்சு

காலையில் பனி படர்ந்த செடிகளில் ரோஜாவைப் பார்த்து ரசித்த மஞ்சரியின் முகம் பூவாக மலர்ந்தது. இதுநாள் வரை பார்த்த பொருட்கள் அனைத்தும் அவளுக்கு வெறுப்பை கொடுத்திருந்தது. இனிமேல் வாழவே கூடாது என்ற எண்ணத்தில் தற்கொலை வரை சென்றவள் இப்போது கொஞ்சம் இயல்பாக சிரிப்பதே பெரிய விஷயம் தான்.

“என்ன மஞ்சரி இந்த குளிரில் இங்கே வந்து நின்னுட்ட” என்று அவளின் பின்னோடு கேட்ட குரலில் சட்டென்று திரும்பினாள்.

நேஹா அவளை நோக்கி வருவதைக் கண்டு, “இல்லக்கா செடியில் ரோஜாபூ பூத்திருப்பதைப் பார்க்க மனசுக்கு நிறைவாக இருக்கு” என்றாள் புன்னகையுடன்.

கதிர் சொன்னது போலவே தன் தங்கைக்கு தேவையான கவுன்சில் கொடுக்க வேறொரு ஊருக்கு அழைத்துச் சென்றாள் நேகா. ஆரம்பத்தில் வாழவே விருப்பமில்லை என்று கூறி தற்கொலை வரை சென்றவளை பெரும்பாடுபட்டு மீட்டேடுத்தாள்.

நீலகிரியில் தனக்கு சொந்தமான வீட்டில் வைத்து அவளுக்கு தேவையான அணைத்து உதவிகளையும் செய்து மெல்ல மெல்ல அவளின் மனதை திசை திருப்பினாள். மஞ்சரிக்கு கொடுக்கப்பட்ட கவுன்சில் மூலம் அவள் மனம் இயல்புக்கு திரும்பி இருந்தது.

அவளின் உதட்டில் படர்ந்திருந்த புன்னகை மனதிற்கு நிறைவைக் கொடுக்க, “எனக்கும் உன்னை இப்படி பார்க்க சந்தோசமாக இருக்குடா” என்றாள்.

அப்போது அவளின் செல்போன் அடிக்கும் சத்தம்கேட்டு, “ஒரு நிமிஷம் மஞ்சரி யாருன்னு பார்த்துட்டு வரேன்” என்றவள் வீட்டிற்குள் செல்ல சிறியவள் சுற்றி இருந்த பூக்களை பார்த்தபடி பனியில் நின்றிருந்தாள்.

அவள் சென்று போனை எடுத்து, “ஹலோ பாட்டி” என்றாள்.

“என்னடா எப்படி இருக்கிற” என்றார் பாசம் மாறாத குரலில்

“நான் நல்லா இருக்கேன்…” என்றதும், “மஞ்சரி என்ன பண்ற” என்று அவளையும் விசாரித்தார்.

“அவ தோட்டத்தில்  பூக்களை ரசிச்சிட்டு நின்னுட்டு இருக்கிற பாட்டி” என்றதும் பெரியவரின் மனம் கொஞ்சம் நிம்மதியடைந்தது.

“என்ன பாட்டி திடீரென்று கூப்பிட்டு இருக்கீங்க” அவள் தானே முன்வந்து விசாரிக்க, “பாப்பா உனக்கு நல்ல வரன் வந்திருக்கு. மாப்பிள்ளை கனடா நீ சரின்னு சொன்னா பாட்டி மற்ற வேலைகளைக் கவனிப்பேன்” என்றார்.

அவரின் பேச்சில் நேஹாவின் முகம் மெல்ல மாறும் நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்தாள் மஞ்சரி. தன் தமக்கை யாருடன் பேசுகிறாள் என்ற கேள்வியுடன் அவள் அருகே வர பெரியவள் மெளனமாக கற்சிலைபோல நின்றிருந்தாள்.

“என்னம்மா அமைதியாக இருக்கிற” என்று மெல்ல பேச்சு கொடுத்தார் அவளின் பாட்டி மோகனாம்பாள்.

“பாட்டி உண்மையை சொல்லுங்க எனக்கு யார் மாப்பிள்ளை பார்த்து அப்பாவா?” என்று கோபத்தை அடக்கிய குரலில் சீறினாள் பேத்தி.

அவர் பதில் சொல்ல தடுமாற, “இல்ல அவர் பெத்து வெச்சிருக்கும் என்னோட தங்க கம்பியா? யாருன்னு சொல்லுங்க என்னோட பதிலை நான் சம்மதப்பட்டவங்ககிட்ட நேரடியாக பேசிக்கிறேன்” என்றாள் முடிவாக.

தன்னிடம் அன்பை மட்டும் பொழியும் தமக்கை முகத்தில் ரௌத்திரத்தை கண்டதும், ‘என்னாச்சு இந்த அக்காவுக்கு’ என்ற சிந்தனையுடன் அவளையே இமைக்க மறந்து பார்த்தாள் மஞ்சரி.

சிறிதுநேரம் அமைதி நிலவிட, “ஸ்ரீதர் தான் பாப்பா போட்டோ அனுப்பியிருக்கான்” என்றார் மெல்லிய குரலில்.

“உன்னோட மகனுக்கு முதலில் ஒரு பொண்ணாட்டி கூட வாழ்ந்தது நான் பலியாடு. இன்னொரு பெண்ணை கல்யாணம் பண்ணி சந்தோசமாக இருக்க ஸ்ரீதர் பலியாடு. ச்சே இதெல்லாம் என்ன வாழ்க்கையோ? இப்படி நேரத்திற்கு நேரம் நிறம் மாறும் ஆம்பளங்கள பார்க்கவே அருவருப்பாக இருக்கு” என்றவளின் மனம் கோபத்தில் கொதித்தது.

தன் பேத்தி பேசுவதில் உண்மை இருந்தபோதும் அனைத்து ஆண்களையும் அவள் கூறியதில், “ஏன் கதிர் ரொம்ப நல்லவனோ” என்றார் கோபத்துடன்.

“அவனைப்பற்றி நீங்க பேசாதீங்க. அவன் ஒன்றும் நேரத்திற்கு ஒருத்தியை தேடும் ரகமில்லை” சட்டென்று வந்து விழுந்தது வார்த்தைகள்.

“கதிரை சொல்லிவிட்டால் உனக்கு வந்துவிடுமே மூக்குக்கு மேல கோபம்” என்றவர் கோபத்துடன் போனை கீழே வைத்துவிட எரிச்சலோடு நின்றிருந்த நேஹாவிற்கு கத்தவேண்டும் போல இருந்தது.

எந்தொரு தருணத்தில் அவளின் வாழ்க்கை திசைமாறியது என்று புரியாமல் பித்து பிடித்தவள் போல நின்றிருந்தாள். அவளின் செயலைக் கவனித்த மஞ்சரி எதுவும் சொல்லாமல் அகிருந்து நகர்ந்துவிட்டாள். அதுவரை இருந்த கோபம் முழுவதும் ஸ்ரீதரின் மீது திரும்பிட உடனே அவனுக்கு போன் அடித்தாள். 

காலை நேரத்தில் யுனிவர்சிட்டிக்குள் நுழைந்த ஸ்ரீதரைப் பார்த்ததும், “என்னடா இன்னைக்கு சீக்கிரம் வந்துட்ட” என்று இனியா வந்தும் அவளைக் கலாய்க்க, “எல்லாம் உன்னால தான்..” என்றான் எரிச்சலோடு.

இன்னைக்கு அவர்களுக்கு ஒரு செமினார் இருப்பதால் அவனை தொல்லை செய்து யுனிவர்சிட்டிக்கு வரவழைத்து இருந்தாள். அதே கோபத்துடன் வந்தவனைக் கண்டு, “இந்த தொல்லையைத் தாங்க முடியல இல்ல” என்றவள் எதையோ நினைத்து விழுந்து விழுந்து சிரித்தாள்.

அவளை அவன் வினோத மிருகத்தைப் பார்ப்பது போலவே பார்க்க, “இதே இந்நேரம் இனியா கதிரை லவ் பண்ணாமல் இருந்து நீ என்னிடம் காதலை சொல்லி இருந்தா உன்னோட நிலைமை” என்றவள் கேள்வியாக நிறுத்த அவள் சொன்னதை சிந்தித்துப் பார்த்த ஸ்ரீதர் கையெடுத்து கும்பிட்டான்.

“உன்னை சமாளிக்க கதிரால் மட்டும் தான் முடியும். என்னால முடியாது சாமி. நல்லவேளை இது காதல் இல்ல நட்பு என்று தெளிவாக புரிஞ்சிபோச்சு” என்றவன் பெருமூச்சு வெளியிட்ட அதற்கும் அவள் சிரித்தாள்.

அவனின் செல்போன் சிணுங்கிட திரையைப் பார்த்தும் அவன் உதட்டில் புன்னகை மறந்துவிட மெளனமாக நின்றிருந்தான். அவனின் செயலைக் கவனித்த இனியா அவனிடமிருந்து போனை பறித்தாள்.

அதன் திரையில் தெரிந்த அபிநேஹாவின் புகைப்படம் பார்த்தும் அவளின் புருவங்கள் சிந்தனையில் சுருங்கியது. அன்று ஸ்ரீதர் செயலுக்கு கதிர் கொடுத்த விளக்கத்திற்கு பிறகு அமைதியாக இருந்தவளின் உள்ளத்தில் மீண்டும் ஒரு சலனம். அபிநேஹா பற்றி இனியாவிற்கு அவ்வளவு தெரியாது.

கதிருடன் ஒரு முறை சேலம் வந்திருக்கிறாள். இவள் சென்னை சென்ற போது கதிர் தங்கியிருக்கும் பிளாட்டில் ஒரு முறை சந்தித்து இருக்கிறாள். ஆனால் அப்போது எல்லாமே கதிரின் காதலி என்ற எண்ணத்தில் அவளை பார்த்த இனியாவிற்கு இன்று ஏதோ குழப்பமாக இருந்தது.

ஸ்ரீதர் – அபிநேகா இருவருக்கும் இடையே இருக்கும் உறவை தெரிந்து கொள்ள இவளின் உள்ளம் பரபரத்தது.

“யாருடா இது நேஹான்னு வருது உன்னோட அத்தை பொண்ணா” என்றவள் குறும்புடன் கண்சிமிட்டிட மறுப்பாக தலையசைத்தவன், “என்னோட அக்கா” என்றான் அழுத்தமாக.

அவன் அக்கா என்று சொன்னதும் திடுக்கிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.  இறுகிய முகத்துடன் அவன் நின்றிருப்பது கண்டு, “அக்கான்னு சொல்லிட்டு இப்படி மரம் மாதிரி நின்னா என்னடா அர்த்தம் போன் எடுத்து பேசு. உன்னிடம் ஏதாவது முக்கியமான விஷயம் சொல்ல கூப்பிட்டு இருக்கலாம் இல்ல” என்றாள் அவனை திசைதிருப்ப முயற்சித்தபடி.

எப்போதும் அவள் விளையாட்டாக கூறினால் சிரித்தபடியே அதற்கு வேறு விளக்கம் கொடுக்கும் ஸ்ரீதர், “உனக்கு கொஞ்சமாவது அறிவு இருந்தா அமைதியா இரு. லூசு மாதிரி எந்த நேரமும் விளையாட்டு தனமாக இருக்கிற? அப்புறம் எப்படி கதிர் அண்ணாவுக்கு உன்னைப் பிடிக்கும். பைத்தியம் மாதிரி எந்த நேரமும் படபடன்னு ஏதோ சொல்லி உளறிட்டு இருக்கிற” என்று அவன் எரிந்து விழுந்தான்.

அவன் வேறு என்ன சொல்லி இருந்தாலும் அவள் விளையாட்டாக அங்கிருந்து சென்றிருப்பாள்.

ஆனால் அவன் பைத்தியம் என்ற வார்த்தை சொன்னதும், “இங்கே பாரு உனக்காக ஒண்ணும் நான் அமெரிக்கா வரல. யாருக்காகவும் நிறம் மாறனும் என்ற அவசியம் எனக்கு இல்ல. நான் இப்படித்தான் இருப்பேன் உன்னால என்னை  மாற்றவே முடியாது. இனியா என்னைக்கும் அவளோட குணங்களை மாற்றிக்க மாட்டா” என்று விரல்நீட்டி அவனை எச்சரித்துவிட்டு அவள் நகர நினைக்கும்போது மீண்டும் அவனின் செல்போன் அடித்தது.

“நீயெல்லாம் ஒரு மனுஷன்தானே? போனை எடுத்து பேசு அந்தப்பக்கம் யாருக்கு என்ன ஆபத்தோ” என்றவள் எரிந்து விழுக, “இனியா ஜெஸ்ட் ஸ்டாப் இட். நீ நினைக்கிற மாதிரி நேஹாவுக்கு ஒரு ஆபத்தும் வராது. அவளோட குணத்துக்கு அவ நல்லாத்தான் இருப்பா. இது எனக்கும் என் அக்காவுக்கும் இடையே இருக்கும் பிரச்சனை நீ தலையிடாதே” என்று பொறுமை இழைந்து கத்தியவன் கையிலிருந்த போனை கீழே போட்டு உடைத்தான்.

அவனிடமிருந்து இப்படியொரு கோபத்தை எதிர்பார்க்காத இனியா அதிர்ந்து நின்றது எல்லாமே சிலநொடிகள் தான். பிறகு அவனை நிதானமாக பார்த்தவள், “உறவுகள் எவ்வளவு முக்கியம் என்று தெரியாத உன்னிடம் பேசுவது வேஸ்ட்” என்றவள் அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.

அவள் சென்றதும் முக்கியமான செமினாருக்கு செல்லாமல் அங்கேயே அமர்ந்திருந்தான். இத்தனை நாள்  தன்னைப் பற்றி நினைக்காதவள் இன்று அழைத்த காரணத்தை உணர்ந்தவனுக்கு மனம் வலித்தது.

நேஹாவும் அவனும் ஒரு தந்தைக்கு பிறந்தவர்கள். தாய் மட்டும் வேறு வேறு.  வருடத்தில் ஒரு வாரம் மட்டும் அப்பாவைப் பார்க்க வரும் தமக்கை மீது அவனுக்கு எப்போதுமே பாசம் அதிகம்.

தன்னைப் பற்றி அக்கறை இல்லாமல் பணத்தின் பின்னாடி ஓடும் தந்தைக்கும், தாய்க்கும் வந்து பிறந்ததை நினைத்து அவன் வருந்தாத நாள் இல்லை என்று சொல்லலாம்.

அவள் வீட்டில் இருக்கும் ஒரு வாரம் முழுவதும் ஸ்ரீதருக்கு உடை செலக்ட் செய்வதில் இருந்து அவனுக்கு விருப்பமான அனைத்தையும் வாங்கி கொடுப்பவள் அவனின் தமக்கை அபிநேஹா தான்.

அப்படி பாசமாக இருப்பவளின் திருமணத்திற்கு செல்ல முடியாது நிலையில் இருந்தான் ஸ்ரீதர். அவன் அந்த எக்ஸாம் எழுது முடித்துவிட்டு அவன் இந்தியா சென்றபோது அபிநேஹா முற்றிலும் மாறி இருந்தாள்.

இனிமேல் தனக்கு வாழ்க்கை வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு விரக்தியுடன் இருந்தவளை அவன் உடன் அழைத்தும் அவள் வர மறுத்துவிட்டாள். அவளின் வாழ்க்கை இப்படி ஆனதை நினைத்து மனம் வருந்திய ஸ்ரீதர் அவளை இயல்புக்கு கொண்டு வர நினைத்து அதில் தோல்வியைத் தழுவினான்.

ஒரு பக்கம் தமக்கையின் பாசம், இன்னொரு புறம் அவனின் படிப்பு இரண்டுமே அவனுக்கு எரிச்சலைக் கொடுத்தது.

அவன் அன்று ஊருக்கு கிளம்பும் நாள், “ஸ்ரீ நீ ரொம்ப நல்லா படிக்கணும். உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையனும்” என்று புன்னகைத்தவளின் முகத்தில் பழைய பிரகாசம் இல்லை என்பதைக் கவனித்தான்.

“நீ உன்னோட வாழ்க்கையை எப்போ அமைச்சுக்க போற” என்றவன் கேட்கும்போது, “நான் இனிமேல் இப்படியேதான்” என்றாள் பிடிவாதமாக.

“அதெல்லாம் முடியாது” என்றதும், “நான் இப்படித்தான் இருப்பேன். நீ என்னை கல்யாணம் செய்ய கட்டாயப்படுத்தினால் இனிமேல் நான் கனடா வரல. இதுதான் நம்ம லாஸ்ட் மீட் பண்றது” என்றாள் அழுத்தம் திருத்தமாக.

சிறிதுநேரம் அங்கே அமைதி நிலவியது.

அவனால் அவளின் இந்த முடிவை ஏற்றுகொள்ள முடியாமல், “அக்கா நீ இப்படியே இருப்பது சரியில்ல” என்றாள்.

“எனக்கு இது தான் பிடிச்சிருக்கு” என்றாள் கோபத்துடன்.

“உன்னோட முடிவை மாற்றிக்க மாட்ட இல்ல” என்றான் எரிச்சலோடு.

“முடியாது” என்றாள் அழுத்தமாக.

“அப்போ சரி நான்தான் உனக்கு மாப்பிள்ளை பார்ப்பேன். ஸ்ரீசாந்த் விட அழகா, அறிவா, சூப்பரா ஒருத்தரைப் பார்ப்பேன்” என்றான் அவனும் அதே அழுத்தத்துடன்.

அதற்குமேல் அவளின் மறுப்பைக் கேட்க அவன் அங்கில்லை. அதன்பிறகு நேஹா இன்றுவரை ஸ்ரீதரை சந்திக்க செல்லவும் இல்லை. அவனும் தம்பி என்று இவளை சந்திக்க இந்தியா வரவில்லை. அக்கறை இல்லாத பெற்றோரை அவன் வெறுத்தான்.

படிப்பு என்ற பெயரில் அமெரிக்கா வந்தவன் அங்கேதான் இனியாவை சந்தித்தான். அவளிடம் இருந்த கதிரின் போட்டோ, நேஹாவின் போட்டோவை எல்லாம் பார்த்து தான் இவர்களின் மூலமாக நேஹாவை மீண்டும் சந்திக்க வேண்டுமென்று முடிவிற்கு வந்தான்.

அந்த நேரத்தில் அவன் விளையாட்டாக செய்த காரியத்தில் இனியா அவனை வெறுக்க தன்னுடைய தவறை புரிந்து மன்னிப்பு கேட்டான். எல்லாம் சரியாக சென்ற நேரத்தில் தன் அக்காவிற்கு என்று ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து நன்றாக விசாரித்து போட்டோவை மோகனாம்பாள் பாட்டிக்கு அனுப்பி வைத்தான்.

அந்த விஷயம் தெரிந்தும் தன்னிடம் சண்டைபோட அவள் அழைக்கிறாள் என்ற உண்மையறிந்து கோபத்துடன் அமர்ந்திருந்தான்.

ஸ்ரீதர் மீதிருந்த கோபத்தில் அவனைவிட்டு விலகி நடந்த இனியாவின் மனம் முழுவதும் அபிநேஹாவைச் சுற்றி வந்தது. கதிர் தன்னிடம் சில விஷயங்கள் மறைத்திருப்பது போல ஒரு எண்ணம் வரவே உடனே அவனுக்கு அழைத்தாள்.

அவளின் போன் வரும்போது ஸ்டாப் ரூமில் இருந்த கதிர் உடனே அவளின் அழைப்பை எடுத்தான்.

“சாக்லேட் பேபிக்கு செமினார் முடிந்துவிட்டதா?” என்றவன் புன்னகையுடன் கேட்டான்.

“கதிர் மாமா அபிநேஹா உனக்கு யாரு” என்றாள் பட்டென்று.

அவள் எதற்கு கேட்கிறாள் என்று புரியாதபோதும், “அவ என்னோட பிரெண்ட்” என்றான்.

“அப்போ ஸ்ரீதரை உனக்கு முன்னாடியே தெரியுமா” என்றதும் நெற்றியை மெல்ல வருடிய கதிர் சிந்தனையுடன், “இப்போ என்ன பிரச்சனை” என்றான் சாதாரணமாக.

“அபிநேஹா ஸ்ரீதருக்கு கால் பண்ணிருக்காங்க மாமா..” என்றவள் சற்றுமுன் நடந்த விஷயத்தை அவனிடம் சொல்லிவிட்டு, “எனக்கு எதுவும் புரியல மாமா. பிளீஸ் உண்மையை கொஞ்சம் புரியம்படி சொல்லுங்க” என்றாள்.

அவள் சொன்னதை மௌனமாகக் கேட்ட கதிர், “இப்போ உன்னோட சந்தேகம் ஸ்ரீதரை எனக்கு முன்னாடியே தெரியமா என்பது தானே” என்றான் நேரடியாக.

“ம்ம்” என்றதும், “அபிநேஹா மேரேஜ் நின்ற அன்றைக்கு ஒரு முறை அவனை மண்டபத்தில் பார்த்தேன். அப்புறம் கொஞ்சநாள் சென்றபிறகு ஸ்ரீதரைப் பற்றி கேட்டபோது அவளோட தம்பின்னு சொன்னா” என்றவன் நடந்த அனைத்தையும் இனியாவிடம் கூறினான்.

“மாமா இப்போ நான் ஒன்னு சொல்றேன் கேளு மாமா” என்றதும் அவன் மெளனமாக இருக்க, “பிளீஸ் மாமா நேஹா அக்கா பாவம் இல்ல. அவங்க இப்போ ரொம்ப டென்ஷனாக இருப்பாங்க. ஸ்ரீதர் ஒரு வரமாகவே அவங்களுக்கு ஒரு மாப்பிள்ளையைத் தேடி செலக்ட் பண்ணி இருந்தான். நான் விளையாட்ட பேசியபோது அக்காவிற்கு பார்க்கும் மாப்பிள்ளைன்னு சொன்னான்” என்று அவனிடம் கூறியவள் அவனை இடையே பேசவிடாமல் தொடர்ந்தாள்.

“இப்போ அந்த அக்காவே அபிநேஹா என்று தெரிஞ்சதும் மனசு கேட்கல மாமா” என்றவள் வருத்தத்துடன் கூறவே, “சரி நான் அவளுடன் பேசி திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கிறேன்” என்றதும் சந்தோஷத்தில் துள்ளி குதித்த இனியா, “லவ் யூ மாமா” என்று போனை வைத்துவிட்டு செமினாருக்கு சென்றாள்.

தன் காதலியின் மனம் குழந்தைத்தனம் மாறாமல் இருந்தாலும் மற்றவரின் நலனை கருத்தில் கொள்ளும் அவளின் செயல் அவனின் மனதிற்கு சந்தோசத்தை மட்டுமே கொடுத்தது.

“தென்றல் தீண்டி செல்லும்

நேரத்தில் மனதில் தோன்றும்

மெல்லிய உணர்வு அவள்.

மலர்கள் மலரும் நேரத்தில்

பூவிலிருந்து வரும் வாசம்

பெண்ணே உன் மனம்.

மனதை விட்டு நீங்காத

மண் வாசனை போல

உன் நினைவுகளும்

என் சுவாசத்தில் கலந்து

போகிறதே பெண்ணே..”