அன்பின் மொ(வி)ழியில் – 24.
விஜய்க்கு நெருப்பின் மேல் நிற்பது போல் இருந்தது.
அவனுக்கு கிடைக்காத ஒன்று தொழிலிலும் சரி, சொந்த வாழ்விலும் சரி, வெகு சுலபமாக கிடைக்கப் பெற்ற ஜாஸ்ஸின் மைந்தர்களை நினைத்து, அத்தனை வெறுப்பாக வந்தது.
இயல்பான மனிதனின் குணம் பொறாமை, விஜய்யின் வாழ்வு அவனின் சொந்த கிராமத்தை பொறுத்தவரை ஊரில் பெரிய மனிதரின் மகன் தான்… கரை காணா சொத்துக்களில் உடையவன் தான்… இருப்பினும் இப்படி ஒரு நிறைவான வாழ்க்கை அவன் வாழவில்லையே..!
சிறுவயதில் பெரியவர்களின் கண்காணிப்பு இன்றி கிடைக்கப் பெற்ற அளவில்லாத பணம், அவனை நல்ல வழியில் செலுத்தவில்லை, திமிர், அகங்காரம், தவறனாலும் தான் நினைத்ததை செய்யவேண்டும் என்ற ஆணவமும் நிறைந்து இருந்தவனுக்கு தெரியவில்லை, இவை எதுவுமே உள்ளார்ந்த மகிழ்வை கொடுக்கப் போவதில்லை என்று…
பணத்தின் மூலம் எதையும் சாதித்து விடலாம் என்று என்னும் மேல்தட்டு மக்களுடன் மட்டுமே பழகியவனுக்கு… பணத்திற்காக தன்னை வட்டமிடும் பெண்களையே அறிந்தவனுக்கு…
முதல்முதலாக மனதில் சொல்ல முடியாத ஒரு அசாதாரண ஈர்ப்பு தோன்றியது கயலின் மீதுதான், உண்மையான நேசம், காதல் பற்றி அறியாதவன், அதை நல்ல வழியில் உணராமல் தவறான முறையில் அவளை அடைய எண்ணி விஜய் தொடங்கிய விளையாட்டை, விதி அழகாக முடித்து வைக்க, அவனின் அந்த தோல்வி முரடனை மேலும் மூர்கனாக தான் ஆக்கியது.
தனக்கு கிடைக்காத ஒன்று தன் எதிரிகளுக்கு வரமாக அமைந்தது மனதிலுள்ள கோபத் தீயில் எண்ணெய் விட்டது போல் தூண்டி விட, இதற்கு மேலும் அவர்களின் கொண்டாட்டத்தை காண விரும்பாமல் வெறுப்புடன் அங்கிருந்து சென்று விட்டான்.
அவனின் வெறுப்பு வேந்தனின் வம்சத்தை அழிக்குமா…?
அல்லது அவனின் கண்களில் தோன்றிய சிறு பிள்ளையின் ஏக்கம் சிறந்த ஒரு மனிதனை சமூகத்திற்கு பிரசவிக்குமா…?
**************************
ஆதி, ரவி இருவரும் கொண்டாட்டமாக திருவிழாவை அனுபவித்து கொண்டு, அங்கும் இங்கும் ஓடி விளையாடி கொண்டிருக்க…
விஷ்ணு, செல்வம் இருவருக்கும் அவர்களை சமாளிக்கவே நேரம் சரியாக இருந்தது…
காணும் பொருட்களை எல்லாம் கேட்டு தன் மாமன் இருவரையும் மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் அளவிற்கு கொண்டு வந்தவர்கள்,
இறுதியாக கைகள் இரண்டிலும் பலூன்கள் மொத்தமாக கட்டிய கயிற்றை வைத்து விளையாடிக் கொண்டே இருந்தவர்கள் சிறிது களைப்படைய “போதும் மாமா… அம்மு கிட்ட போகணும் வி ஆர் சோ டயட்” என்றனர் ஒரே குரலில்…
“ஏன்டா இவ்வளவு நேரம் நாங்க என்னமோ உங்களை புடிச்சுகிட்டு இருந்த மாதிரி அலுத்துக்குறிங்க… எங்களை இந்த பாடு படுத்திட்டு… முதல்ல உங்கள ஆத்தா, அப்பன் கிட்ட குடுத்துட்டு தான் மறுவேலை…” என்று சிரித்தவாறு பிள்ளைகளை தூக்கிக்கொண்டு சந்நிதானத்திற்க்கு வர…
அங்கு மொத்த குடும்பமும் இறைவன் முன் இருந்தது.
கோவில் மரியாதை குடும்பத்தின் தலைமகனாய் ராம் ஏற்றுக்கொள்ள… அவனைச் சுற்றி காரியம் யாவிற்கும் துணை நிற்கும் சிறந்த குடும்பம் சூழ்ந்திருக்க… இனிமையான ஒரு வாழ்க்கையை தனக்கு பரிசாக தந்த இறைவனிடம் தன் நன்றியை மனதார செலுத்தினான் ராம் வில்லியம்ஸ்.
இறை இல்லத்தில் படைத்தவன் முன்பு நின்று மனமுருக அவரவர்களுக்கான வேண்டுதல்களை அந்த பரம்பொருளின் பாதத்தில் இறக்கி வைத்தவர்கள், மனம் நிம்மதியும் அமைதியும் நிறைந்த இருந்தது.
செல்வத்தின் விழிகளின் மட்டும் சிறு கோபம் மின்னிக் கொண்டிருந்தது… தான் இவ்வளவு சொல்லியும் கூட ரம்யா நெற்றியில் குங்குமம் இல்லாமல் இருந்தது தான், அந்த கோபத்திற்கு முக்கியமான காரணம்…
தனது நிறத்திற்கு ஏற்ற வகையில் அடர் பச்சை வண்ண புடவையில், சிவப்பு கற்கள் மின்ன, அவளிடம் இருந்த, சிறிய நகைகளை, நேர்த்தியாக அணிந்து, புடவைக்கு பொருத்தமாக நெற்றியில் பச்சை வண்ண பொட்டிட்டு மேலே திருநீர் மட்டும் பூசி, முகம் முழுவதும் புன்னகையுடன் நிலாவின் அருகில் நின்று இருந்தவளை கண்டு மனதிற்குள் புகைந்தவன்,
கண்களை மூடி இறைவனை அவள் வேண்டிய, சிறு நொடியில் யாரும் அறியா வண்ணம் அவளின் பிறை நெற்றியில் அழகாக சிறிய குங்குமப் பொட்டினை அழுத்தமாக வைத்து விட்டான் அவளவன்.
குங்குமத்தின் குளிர்ச்சியையும், அதை வைத்து விட்ட கைகளின் அழுத்தத்திலும், விதிர் விதிர்த்து போய் கண்களைத் திறந்தவள், கண்டது விழிகள் முழுவதிலும் அன்பினை மட்டுமே நிறைத்து, அவளை பார்த்து புன்னகைத்த செல்வத்தின் முகத்தை தான்.
முதலில் திகைத்து விழித்தவள் பின்பு தன் கண்களை சுழல விட சுற்றியிருந்த அனைவரும் கண்களை மூடி அந்த பேரின்ப ஒளியில் தங்களை நிரப்பிக் கொண்டிருந்ததை பார்த்தவள், மனம் தளர… சிறு நிம்மதி பெருமூச்சுடன் கண்களில் கனல் தெறிக்க, தன் பதட்டத்திற்கு காரணமானவனை பார்த்தாள்
அவனோ… ‘நான் ஏற்கனவே சொன்னேன் உன்கிட்ட… நெத்தில குங்குமம் இல்லாம பார்த்தா, நான் வச்சு விட வேண்டியது தான்னு… நீ… நான் சொன்னத கேட்கல… பொறவு அதுக்கு என் கிட்ட கோவப்பட்டா… அதை பத்தி எனக்கு எந்த கவலை இல்லை’ என்பது போல் தன் தோளை குலுக்கயவன், அமைதியாக கண்களை மூடி நின்று விட, செய்வது அறியாது கைகளை பிசைந்த வண்ணம் நின்றிருந்தாள் பெண்ணவள்.
எந்தவித அசம்பாவிதங்களும் நேராமல் திருவிழா அதற்கே உரிய ஆர்ப்பாட்டத்துடன் அழகிய முறையில் முடிந்திருக்க…
இதற்கு மேலும் ரம்யாவின் சம்மதம் வேண்டி நிற்பது வீண் வேலை என உணர்ந்து கொண்டவன், தன் வாழ்வை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிவெடுத்து தன் நண்பனை அணுகினான்.
ராமிடம் பேச வேண்டியதை யோசித்துக் கொண்டே படுத்தவனுக்கு ராத் தூக்கம் தூரமாகி விட, விடிந்தும் விடியாத அந்த இனிமையான காலை வேளையில் வயலை நோக்கி நடந்து வந்தவன் கண்கள் வியப்பாய் விரிந்தது.
“என்ன ராம்… காலையிலேயே வந்து இவ்வளவு வேலையும் ஒத்த ஆளா பார்த்துட்டு இருக்கலே… புது மாப்பிள்ளை குனிஞ்சு நிமிர்ந்து வேலை பார்க்க வேண்டிய இடத்தில, காட்ட வேண்டிய வீரத்தை எல்லாம் மம்பட்டி எடுத்து வரப்பு மேல காட்டி கிட்டு இருக்க போல, “ என்று கேலி செய்தவன்…
“என்கிட்ட ஒத்த வார்த்தை சொல்லிருந்தா… இதெல்லாம் நான் பார்க்க மாட்டேனா?” என்றான் அதிகப்படியான அக்கறையுடன்…
செல்வத்தை மேலிருந்து கீழாக ஒரு மார்க்கமாக பார்த்த ராம் “ஆஹா! என் அத்தை மகனுக்கு என்மேல இருக்க அளவுகடந்த அன்பு, இவ்வளவு நாள் தெரியாமல் போச்சே…” என்று போலியாக வருந்தியவன் “ரொம்ப கரிசனமாக பேசுற என்னலே… எலி எதுக்கு அம்மணமா. ஓடுதுன்னு தெரியலையே…”
“எலி எப்போலே ஜீன்சும் டீ ஷர்ட்டும் போட்டு ஆட்டுச்சு…
ஆனாலும் ஒரு சிங்கத்தை பார்த்து நீ இப்படி சொல்லி இருக்க கூடாது…”
“நிமிஷத்துல இந்த சிங்கத்தை அசிங்கப்படுத்திடுவேன்… கவனமா இருக்க பாருலே.” என்றவனின் கிண்டல் வார்த்தைகள் நண்பனை நோக்கி இருந்தாலும் கைவேலை கவனமாய் வரப்பின் மீது தான் இருந்தது.
“அத விடு மச்சான் ஒரு முக்கியமான விஷயம் பேசனும்…” என்றான் இத்தனை நேரம் இருந்த இலகுத் தன்மையைப் பறிகொடுத்தவனாய் ஒரு வித தயக்கத்துடன் பேச…
வேலையை நிறுத்திவிட்டு நண்பனின் முகம் பார்த்தவன், கைகளைக் கழுவி சுத்தப்படுத்தி, செல்வத்தின் அருகில் அமர்ந்த ராம்…
“என்னடா வழி தப்பி வந்த ஆடு மாதிரி தடுமாறுற…? சொல்ல வந்த விஷயத்தை பட்டுனு போட்டு உடை…”
வரப்பின் மீது அமர்ந்து தலையை கைகளில் தாங்கிய வண்ணம் சோர்வுடன் அமர்ந்திருந்தவன், ஒரு முடிவுடன் தன் மாமன் மகனிடம் மனதில் உள்ள அனைத்தையும் மடை திறந்த வெள்ளமென கொட்டி விட்டான்
.
“ரம்யா கிட்ட நான் அவளை விரும்புறத, நேரடியா… மறைமுகமா… எல்லா விதத்திலும் சொல்லிட்டேன், அவ சம்மதிக்கிற பாட காணாம்…
இதுக்கு மேலயும் அவ கிட்ட காதலை சொல்லி… கல்யாணம் பண்றது எல்லாம் நடக்கிற காரியம் கிடையாது… நேரடியாக வீட்டு பெரியவங்க கிட்ட பேசிட வேண்டியது தான்… திருவிழா முடிந்த கையோடு ஊருக்கு போகணும் அப்படி என்ற எண்ணத்தில் இருக்கிறா அவ… என்னால ரம்யாவை விட்டுட்டு இனியும் இருக்க முடியாது… எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கல்யாணத்த முடிக்கணும். அதுவும் இன்னும் ஒரு வாரத்துக்குள்ள… இப்ப விட்டுட்டா அவளை எப்பவும் பிடிக்க முடியாது…
எனக்கு தெரிந்த வரை அத்தை மேல ரொம்ப மரியாதை வச்சிருக்கா, அவங்க சொன்னா மட்டும்தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்குவா” என்றான் தன்னவளை பற்றி நன்கு அறிந்தவனாய்…!
ராம் – “அறிவோடு தான் பேசுறியா? ரமியோட சம்மதத்தை கூட கேட்காமல் அவசர அவசரமாக ஒரு வாரத்துக்குள்ள கல்யாணத்த பண்ண நினைக்கிறது சரியா வருமுன்னு தோணுதா உனக்கு…?” என்றான் யோசனையாக.
“ஆமா..! அப்படியே உன் தங்கச்சி நான் விரும்பினேன் சொன்னா… கழுத்தை நீட்டி தாலி வாங்கிட்டு தான் மறுவேலை பார்ப்பா…
நீ வேற ஏன்லே கடுப்ப கிளப்புற… நான் சும்மா பார்த்தா கூட கண்ணுல நெருப்ப எரிய விட்டு, பயம் காட்டுவா கொள்ளிவாய் பிசாசு மாதிரி… இதுல அவ ஓகே சொல்லித்தான் கல்யாணம் நடக்கணும்னு இருந்தா… என் வாழ்க்கைல அது நடந்த மாதிரி தான்” என்று பெருமூச்சு விட்டவன் ராமின் முகம் பார்க்க…
தனது தோழனின் தவிப்பை உணர்ந்து கொண்டவன், “சரி விடு பாத்துக்கலாம்லே, நான் என்ன பண்ணனும் அதை மட்டும் சொல்லு ஆனாலும் காதலிக்கிற புள்ளய யாரும் கொள்ளிவாய் பிசாசுகள் சொல்ல மாட்டாங்கடா…”
“அவ படுத்துற பாட்டுக்கு என்ன வேணும்னாலும் சொல்லலாம்” என்றான் சிறு புன்னகையுடன்.
நண்பனின் மொழிகள் மலை அளவு தைரியம் பெற்றவன், “இந்த விஷயத்துல நான் தான் பேசணும்… என் கூட தோள் கொடுத்து துணைக்கு மட்டும் இரு… எனக்கு அதுவே தனி தைரியத்தை தரும்.” என்றவன் முகத்தில் அப்போதே கல்யாணக் கலை சிறிதளவு தோன்றியது.
*****************************
செல்வம் மனதில் நினைத்தபடி, கல்யாணத்துக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டான், ஆனால் அதற்கு அவன் பட்ட பாடு மலையை புரட்டும் வேலையை கூட சுலபமாக செய்து விடலாம் என்று எண்ணும் அளவுக்கு இருந்தது.
ரம்யா தனக்கு யாருமில்லை என்று நினைத்திருக்க, செல்வம் எண்ணியதை சொல்லும் போது ஒட்டுமொத்த குடும்பமும் ரம்யா உணர்வுகளுக்கு ஆதரவாக அவனை கேள்வி கேட்டே கொன்று விட்டனர்.
இது செல்வத்தின் அன்னை சுசீலாவும் அடக்கம்.
வேந்தனின் இல்லத்தில் பெரியவர்கள் அனைவரையும் ராம் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று வரவழைத்திருக்க…
பேச அழைத்தவன் அமைதியாக இருக்க… அவன் அருகில் இருந்த செல்வம் ஒரு நொடி தயங்கி பின் ஆளுமையான குரலில்
“நான் ரம்யாவை விரும்புகிறேன், என்னால மட்டும் தான் அவளை சந்தோஷமா வச்சுக்க முடியும். எனக்கு அவளை கல்யாணம் பண்ணி வைங்க” என்றான் அனைவரின் முன்பு உறுதியாக.
தன் மனதில் உள்ள ஆசையை நிறைவேற்றிக் கொள்ள நண்பனின் துணையுடன் ஒட்டுமொத்த குடும்பத்தின் மத்தியில் நின்றவனின் இதயம் வாழ்வில் இதுவரை என்றுமில்லாத அளவிற்கு படபடப்பாக துடித்தது
ராம் செல்வத்திற்கு ஆதரவாக அவனின் கரம் பற்றி நிற்க, தன் அத்தை மகனின் உள்ளம் தனை ஏற்கனவே உணர்ந்திருந்த ராஜ், தன்னுடைய மகிழ்ச்சியை அவன் தோள் தட்டி அணைத்து தெரிவித்துவிட தற்போது செல்வத்தின் கண்கள் தவிப்புடன் மற்றவர்களை நோக்கியது.
அனைவருக்கும் அவன் கூறியதை கேட்டு அதிர்ச்சியாக இருந்தாலும் யாரின் முகத்திலும் பெரிய அளவு மறுப்பு தோன்றவில்லை…
செல்வத்தின் தந்தையை பொருத்தவரை தன்மகன் செய்வது அது, எதுவாயினும் அவருக்கு சம்மதம்தான். பெரிய அளவு எதிர்பார்ப்பு இல்லாத மனிதர், தனது எண்ணத்தை சிறு புன்னகையுடன் தன் மகனுக்கு கடத்த… அதில் செல்வத்தின் விழிகள் மின்னின.
ஜாஸ்ஸிற்கு தன் மருமகன் கூறியதைக் கேட்டு சந்தோஷமாக இருந்த போதும் எதுவும் சொல்லாமல் அவனை கூர்மையாக பார்த்தவாறு அமைதியாக இருந்தார், தாய் தந்தை இருவரும் இருக்கும் போது, அவர்களின் விருப்பம் அறியாமல் பேச செல்வத்தின் மாமன் மனைவிக்கு எண்ணம் இல்லை…
ஆனால் அவனின் விருப்பத்தை நிறைவேற்ற மலையளவு ஆர்வமும், ஆசையும் இருந்தது.
“செல்வம் நீ எந்த பொண்ணு சொல்லி இருந்தாலும் நான் அதைப் பற்றி யோசிக்க மாட்டேன் கண்ணா ஆனா… ரம்யான்னு வரும் போது அந்த புள்ள பாவம் ஏற்கனவே ரொம்ப வாழ்க்கைல அடிபட்ட புள்ள அது விருப்பமில்லாமல் நீ நினைக்கிற மாதிரி உடனே கல்யாணம் பண்ண நான் சம்மதிக்க மாட்டேன்…
அந்த புள்ளயோட சம்மதத்தை மட்டும் வாங்க பாரு கண்ணா… அதுக்கப்புறம் எல்லாத்தையும் நல்லவிதமா சிறப்பா செஞ்சு முடிச்சிடலாம்” என்று உறுதியுடன் ஒலித்தது செல்வத்தின் அன்னை சுசிலாவின் குரல்
“ரம்யாவை இந்த திருமணத்திற்கு நான் சம்மதிக்க வைக்கிறேன்” என்ற ஜாஸ்ஸின் குரல் அத்தனை கம்பீரமாக வெளியே வந்தது…
அந்த வார்த்தைகள் அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுத்தது என்றால் செல்வத்திற்கு அப்படி ஒரு நிம்மதியை கொடுத்தது…
என்னவோ திருமணம் முடிந்து விட்டது போல்…
ஜாஸ் – “ஆனா எனக்கு ஒரு உறுதி மட்டும் வேணும்… இன்னைக்கு நீங்க ஆசைப்படுறீங்க… இப்போ அவளுடைய பழைய வாழ்க்கை ஒரு பொருட்டா தெரியல… இதே இது நாளைக்கு அது சம்பந்தமா குத்திக் காட்டுற மாதிரியோ, குறைவாகவோ, ஒத்த சொல்லு ரம்யா கிட்ட வந்துட கூடாது” என்று செல்வத்தின் முகத்தை பார்க்க…
அதில் அடிப்பட்ட வேதனை தெரிந்தது….
“பிறந்த நிமிஷத்துல இருந்து இந்த நிமிஷம் வரைக்கும் என்னைய பாக்குற உங்களுக்கு என்மேல இவ்வளவுதான் நம்பிக்கையா…?” என்றான் வருத்தமாக.
அவன் முகத்தில் தோன்றிய வலி வேதனையைப் பார்த்த ஜாஸ், வேறு எதையும் பேசாமல் சிறு புன்னகையுடன் அவனின் தலையை மென்மையாக தடவி விட்டவர் “இன்னும் ஒரு வாரத்துல கல்யாணத்தை நல்லவிதமா முடிச்சிடலாம்… அதுக்கான ஏற்பாட்டை எல்லாரும் கவனிங்க… ரம்யாவோட சம்மதம் வாங்க வேண்டியது என்னுடைய பொறுப்பு” என்றார் மீண்டுமொருமுறை…
வள்ளிக்கும் அவள் கணவருக்கும் கூட திருமணத்தில் பூரண சம்மதம் தான்…
பேச்சுவார்த்தை பெரியவர்கள் அனைவருக்கும் திருப்தியையும், மகிழ்ச்சியும் தர… வேந்தன் இல்லம் திருமணக் கோலம் பூண்டு அழகாக மாறியது.
தன் வாழ்க்கையையே மாற்றப் போகும் முடிவுகள் எடுக்கப்பட்டு கொண்டிருப்பதை அறியாமல் கயல், நிலா இருவருடனும் தோட்டத்தில் ரம்யா கதையளந்து கொண்டிருக்க… குழந்தைகளோ முயல் குட்டியின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தனர்…
*************************
அழகிய அரக்கு வண்ணப் பட்டு புடவையில், இதமான நகைகள் அணிந்து, நீண்ட நெடிய காலத்திற்குப் பிறகு மலர் சூட்டி, நெற்றியில் குங்குமம் தரித்து பெண்மையே வடிவாய் மனையில் அமர்ந்திருந்தவளின் உள்ளம் கடல் அலை என ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.
இது நாள் வரை அவள் யோசிக்காத ஒன்று, இத்தனை ஆர்ப்பாட்டமாய் சுற்றம் சூழ, தான் அன்னையாக நினைக்கும் ஜாஸ்ஸின் எதிரில், திருமணக்கோலத்தில் செல்வத்தின் அருகே அமர்ந்திருப்பவள் மனதில் சேதுவின் கைகளினால் மாங்கல்யம் ஏற்றுக் கொண்ட சூழ்நிலையும், தன் வாழ்வில் நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளும் தோன்றி மறைந்தன.
கண்களை இறுக மூடிக் கொண்டு…
‘மாமா எனக்கு நல்ல தெரியும்… இப்ப நடக்குற எல்லாமே உங்களுக்கு சந்தோஷத்தை மட்டும் கொடுக்குமுன்னு… உங்களோட அன்பு என்னைக்குமே என்னோட வாழ்க்கைக்கு தளையா அமைவது நீங்கள் விரும்ப மாட்டீங்க… ஆனா… இது எதுவுமே, என்னால அவ்வளவு சீக்கிரம் ஏத்துக்க முடியல… என் மனசுக்கு இது எல்லாத்தையும் ஏத்துக்க கூடிய தைரியத்தை கொடுங்க…’ என்று தன்மீது அன்பைப் பொழிந்த அந்த நல்ல இதயத்திடம் மானசீகமாக வேண்டியவள் முயன்று புன்னகையை வரவழைத்துக் கொண்டு தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்.
பதுமை என நடந்து வந்த தன் மனதிற்கினியவளை ரசித்துக் கொண்டிருந்தவன் அவளின் முகத்தில் வந்து போன உணர்வுகளை கண்டு தன்னவளின் தவிப்பை உணர்ந்து மாலையின் மறைவில் அவள் கரங்களைப் பற்றி மென்மையாக அழுத்த, அதில் தன் உணர்வு வர பெற்றவள், சிறிது நேரத்தில் தன்னை முழுவதும் அவனுடையவளாக மாற்றப் போகும் செல்வத்தைக் கண்டு முறைக்க…
“அட செல்லகுட்டி, அத்தான் எங்க போய்ட போறேன்…? பொறுமையா ஆற அமர என்னய ரசிச்சும்…” என்றவன் மேலும் குரலை குழைவாக மாற்றி “ருசிச்சும் பாத்துக்கலாம் புள்ள, மனையில இருக்கும் போது இப்படி ரொமான்டிக்கா பார்த்தா… ஊருக்குள்ள இருக்க எந்த வீணாபோன கண்ணாவது நம்ம மேல கண்ணு போட்டுடும்” என்றான் அவளின் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொள்ளாதவன் போல…
அவன் கூறியதில் மேலும் கடுப்பானவள், எதைப் பற்றியும் கவலைப்படாமல் நன்றாக செல்வத்தை முறைத்து விட்டு அமைதியாக இருக்க.
இவ்வளவு பேச்சுக்களிலும் ரம்யாவை பற்றிய செல்வத்தின் கரங்கள் அவளை விட்டு விலகவில்லை… அவளும் விலக்கவில்லை…
நல்லதொரு ஆரம்பத்திற்கு இச்சிறு செயல் கூட தொடக்கமோ?