கௌதமின் ரூம் கதவை மெதுவாகத் தட்டினாள் தன்வி. இப்போது போய் பேசலாமா வேண்டாமா என்ற பலத்த பட்டிமன்றத்திற்குப் பிறகே கதவைத் தட்டினாள்.
இன்று கௌதமோடு பேசி ஒரு முடிவிற்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில்தான் கிளம்பி வந்திருந்தாள். கௌதம் வீடு வரும் நேரம் அவளுக்கு அத்துப்படி என்பதால் சற்று முன்பாகவே வந்து கௌதமின் பெற்றோரோடு பேசிக் கொண்டிருந்தாள். ஆனால், அதன்பிறகு யாரும் எதிர்பாராத வண்ணம் ஏதேதோ நடந்துவிட்டது.
கௌதம் சட்டென்று கதவைத் திறக்க எதிரே தன்வி நின்றிருந்தாள். முகத்தில் சிறிதாகக் கலக்கம் தெரிந்தது.
“ஹேய் தனு! வா வா.”
“கௌதம்…” அவள் குரலின் தயக்கம் பார்த்து கௌதமின் நெற்றி சுருங்கியது.
“நான்… நான் உங்கக் கூடப் பேசலாமா?”
“தனு… என்ன இது? எதுக்கு இப்பிடியெல்லாம் பேசுறே?”
“இல்லை…”
“முதல்ல உள்ள வா நீ.” அவள் கையைப் பிடித்து உள்ளே அழைத்துக்கொண்டு போனான் கௌதம். அந்த உரிமையில் தன்வியின் உடலில் ஒரு சிலிர்ப்பு ஓடியது. கௌதமும் அதை உணர்ந்தான்.
“எங்கிட்டப் பேசுறதுக்கு நீ பர்மிஷன் கேப்பியா… ம்?”
“இல்லை கௌதம்…” அதற்குமேல் வெளியே நடந்த நிகழ்வுகளை மீண்டுமொருமுறை அவனுக்கு ஞாபகப்படுத்த தன்வி விரும்பவில்லை. இப்போது கௌதம் புன்னகைத்தான்.
“நானே உங்கூடப் பேசணும்னு நினைச்சேன். நீயே வந்துட்டே. சொல்லு… எதுக்கு இன்னைக்கு என்னைப் பார்க்க வந்தே?” அவன் குரலில் தெறித்த சரசத்தில் தன்வி திடுக்கிட்டுப் போனாள்.
‘கௌதமா? அதுவும் தன்னிடமா?’ பெண்ணின் மனதிற்குள் மத்தாப்பு சிதறியது.
“கௌதம்… அது வந்து… ஒரு வாரம்…” அவள் முடிக்க முடியாமல் திணற வாய்விட்டுச் சிரித்த கௌதம் அவள் அருகில் வந்து அவள் கைகளைப் பற்றிக் கொண்டான்.
“தன்வி ரொம்ப போல்டான பொண்ணுன்னுதான் இதுநாள் வரை நினைச்சேன். ஆனா… அப்பிடி இல்லையோ?” அவன் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தன்விக்கும் புரியவில்லை. ஏனென்றால் அவளுக்கே அதற்கு விடைத் தெரியாதே.
வசதியான வீட்டுப் பெண். நாகரிகமானவளும் கூட. பார்ட்டி, பப் என்று வாழ்க்கையை ரசித்து வாழ்பவள்தான். ஆனால் இப்போது இந்த நிமிடம் அவள் உணர்வது என்ன? இதற்கு முன்னால் அவள் இப்படியெல்லாம் உணர்ந்ததில்லையே!
நிறைய நண்பர்கள் உண்டு. அதில் ஆண் நண்பர்களும் அடக்கம். ஆனால் எப்போதுமே அவளுக்கு கௌதம் என்றால் கொஞ்சம் விசேஷம்தான்.
ஆனால் இத்தனைத் தூரம் இவன் தன்னுள் பதிந்து போயிருக்கிறானா? இவன் ஒற்றை ஸ்பரிசம் கூட என்னை இப்படிப் பேரானந்தப் படுத்துமா?
“தனு…” கௌதமின் குரல் தன்வியைக் கலைத்தது. அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“ஒரு வாரம் டைம் கேட்டிருந்தேன் இல்லை?” அவன் கேட்க அவள் ஆமென்பது போலத் தலையை ஆட்டினாள்.
“நான் கேட்ட ஒரு வாரமும் முடிஞ்சு போச்சு.” அவன் நிதானமாகச் சொல்ல தன்வி படபடப்போடு அவனை அண்ணார்ந்து பார்த்தாள்.
‘என்ன சொல்லப் போகிறான்? எப்போதும் போல இன்னும் எனக்குக் கொஞ்சம் கால அவகாசம் கொடு என்று கேட்கப் போகிறானா? இல்லை… ஒட்டுமொத்தமாக மறுக்கப் போகிறானா?’ தன்வியின் நெஞ்சுக்குள் ரயில் தடதடத்தது.
தவித்துப் போன அவள் முகத்தைப் பார்த்த கௌதமின் கண்கள் கனிந்து போனது.
அந்த முகத்தை அவனிரு கைகளாலும் பற்றி குனிந்து அவள் இதழ்களில் மென்மையாக முத்தமிட்டான் கௌதம். தன்வி ஆச்சரியத்தின் உச்சத்திற்கே போனாள். நடப்பது எதையும் அவளால் நம்பவே முடியவில்லை.
“உங்கப்பாக்கிட்ட பேசு தனு. மேற்கொண்டு ஆகவேண்டியதைப் பார்க்கலாம்.”
“கௌதம்!”
“ஏய்! என்னாச்சு?”
“நிஜமாத்தான் சொல்றீங்களா?!”
“ஹலோ! எவ்வளவு ரொமாண்டிக்கா கிஸ்ஸெல்லாம் பண்ணி அப்பாக்கிட்டப் பேசுன்னு சொல்றேன். நிஜமாத்தானான்னு கேக்குறே? ஒருவேளை ரொமான்ஸ் பத்தலையோ!” கேட்டபடி அவன் இன்னும் அவளை நெருங்க அவன் நெஞ்சில் கையை வைத்துத் தள்ளிவிட்டாள் தன்வி. முகம் முழுக்க சந்தோஷம் பூத்திருந்தது.
“தனு…” இப்போது கௌதமின் முகத்தில் இதுவரை இருந்த குறும்பு மறைந்து நிதானம் வந்திருந்தது.
“சொல்லுங்க கௌதம்.”
“தனு நாம கொஞ்சம் பேசணும். உனக்கும் எனக்கும் இடையில எந்த ஒளிவு மறைவும் இருக்கப்படாதுன்னு நான் நினைக்கிறேன்.”
வரப்போவது என்னவென்று தன்விக்கும் புரிந்தது. இவ்வளவு காலமும் பிடிக்காமல் இருந்த விஷயந்தான், இருந்தாலும் ஏற்றுக் கொண்டாள். ஆனால் இப்போது அதை கௌதம் வாயாலேயே கேட்க இன்னுமே பிடிக்கவில்லை. வேறு வழியிருக்கவில்லை. அவன் மனதில் இருக்கும் அழுக்கு அத்தனையும் வெளியே வரட்டும் என்று பொறுமையாக நின்றிருந்தாள்.
ஒளிவு மறைவு ஏதும் இல்லாமல் அவன் அவளிடம் அனைத்தையும் பேச நினைப்பதே அவளுக்குப் பெரும் வெற்றியாகத் தெரிந்தது.
“தனு… உனக்கு பல்லவி பத்தித் தெரியுமில்லை?” அவன் கேட்ட மாத்திரத்தில் பெண்ணின் முகம் அவள் அனுமதி இன்றியே வாடியது.
எந்தப் பெண்ணிற்கும் இப்படியொரு நிலை வரக்கூடாது. தனது மனதிற்குப் பிடித்தவன் வாயாலேயே அவன் பழைய காதலியைப் பற்றிப் பேசக் கேட்கும் துர்ப்பாக்கியம், வேறு யாருக்குமே வரக்கூடாது. தன்வி மௌனமாக நின்றிருந்தாள்.
“பல்லவியை இன்டர்வியூ பண்ணும் போது நானும் அங்கதான் இருந்தேன். என்னோட டீம்லதான் இருந்தா. ஆரம்பத்துல பெருசா ஒன்னும் தெரியலை. ஆனா… போகப் போக ஏதோ ஒன்னு எனக்குப் பிடிச்சிருந்தது.” கௌதம் கனவில் பேசுபவன் போல பேசிக் கொண்டிருந்தான்.
“நல்லாப் படிச்சிருக்கா. நல்ல ஜாப்ல இருக்கா. ஆனாலும் கன்ஸர்வேடிவ். லேசா ஒரு பயந்த சுபாவம். மாடர்ன் ட்ரெஸ்ஸுன்னா என்னன்னே அவளுக்குத் தெரியாது. புடவை, சுடிதார். இது ரெண்டுந்தான். ஆனா அதுலயும் ஒரு அழகு, நளினம் இருக்கும்.” இப்போது தன்வியின் முகம் சுருங்கியது. தன் எதிரில் இருப்பவளைக் காயப்படுத்துகிறோம் என்று புரியாமலேயே பேசிக்கொண்டிருந்தான் கௌதம்.
“நான்தான் ப்ரபோஸ் பண்ணினேன். முதல்ல பயந்தா, அதுக்கப்புறம்… எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு. திடீர்னு என்னைத் தூக்கித் தூரப் போட்டுட்டா. கேட்டதுக்கு என்னெல்லாமோ காரணம் சொன்னா. புல்ஷிட், ப்ளடி மிடில் க்ளாஸ் கேர்ள்!” ஓங்கி சுவரில் ஒரு குத்துக் குத்தினான் கௌதம்.
“சரி விட்டுப் பிடிக்கலாம்னுதான் கனடா போனேன். திரும்பி வந்தா இங்க கல்யாணமே முடிஞ்சு போச்சு. அப்பக்கூட அவமேல பரிதாபம்தான் வந்துச்சு. ஏதோ ஒரு சூழ்நிலையில மாட்டிக்கிட்டா, அவளை அதுல இருந்து கண்டிப்பா வெளியே கொண்டு வரணும்னு.” பேசிக்கொண்டிருந்த கௌதமின் முகம் இப்போது பாறைப் போல இறுகியது.
“ஆனா கதை அப்பிடி இருக்கலை தனு. அந்தப் பட்டிக்காட்டான்கிட்ட நான் தோத்துப் போயிட்டேன் தனு. என்னால அதைத் தாங்க முடியலை. என்னால அதை ஜீரணிக்கவே முடியலை தனு. அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கவே கூடாது. நோகணும், வலின்னா என்னன்னு புரியணும். நிராகரிப்பு எவ்வளவு வேதனையான விஷயம்னு அவங்களுக்குப் புரியணும்.”
தன்வி இப்போது சட்டென்று கௌதமின் கரத்தைப் பிடித்துக் கொண்டாள். அவன் பேச்சிலேயே அவனது ஆவேசம் புரிந்தது. கௌதம் இப்போது தன்வியை நன்றாக இறுக்கிக் கட்டிக் கொண்டான். பெண்ணின் கை அவனை ஆதரவாகத் தடவிக் கொடுத்தது.
‘நீ காதலித்த பெண்ணை உன்னால் தண்டிக்க முடிகிறது என்றால், காயப்படுத்த முடிகிறது என்றால் அது நிஜமான காதல் இல்லை என்று இவனுக்குப் புரிகிறதா இல்லையா?’ பெண்ணின் மனதுக்குள் இப்படித்தான் சிந்தனை ஓடியது. ஆனால் இதை இவனிடம் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டான்.
தன்வியின் எண்ணங்கள் இப்போது வேறு பாதையில் சஞ்சரிக்க ஆரம்பித்தன. கௌதமின் மனநிலை அவளுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெளிவாகப் புரிந்தது. அவனைத் தன்வசம் ஈர்ப்பது அவ்வளவு பெரிய சிரமமான காரியம் இல்லை என்று நினைத்த மாத்திரத்தில் அவளது முகத்தில் இளநகை ஒன்று தோன்றியது.
***
“இன்னும் எவ்வளவு நேரம் எடுப்பியள் பல்லவி? சீக்கிரமா வாங்கோ, எனக்கு இதுக்கு மேலப் பொறுமை இல்லை சொல்லிப் போட்டன்.”
“இதோ வந்துட்டேன் கவிதா.” ரூமிலிருந்து குரல் கொடுத்த படி வெளியே வந்தாள் பல்லவி.
“வாவ்!” கவிதாவின் கண்கள் விரிந்து போனது. உண்மையிலேயே பல்லவியின் தோற்றம் பார்க்க அப்படித்தான் இருந்தது.
“பல்லவி! சூப்பரா இருக்கிறியள். உங்களுக்காக ஒரு கிழமை லீவெல்லாம் போட்டுட்டு ஹெல்ப் பண்ணுறன்தானே? இந்த அழகுல கொஞ்சத்தை எனக்குக் குடுத்தா குறைஞ்சா போயிடுவியள்?” கவிதா பொய்க்கோபம் காட்ட பல்லவி அழகாகச் சிரித்தாள்.
“உண்மையைச் சொல்லுங்க கவிதா, நல்லா இருக்கா? அந்த ஆன்ட்டி சொல்லித் தந்த மாதிரி உடுத்தி இருக்கேனா?”
“சூப்பர்! பின்னிட்டியள்.”
நடந்தது வேறு ஒன்றுமல்ல. நேற்று ஷாப்பிங் போன போது பல்லவி கைத்தறி சேலைகள் வாங்கினாளல்லவா? அதற்கு ப்ளவுஸ் தைக்க இரு பெண்களும் போயிருந்தார்கள்.
கண்டி மாநகரில் உலவிய பல சிங்களப் பெண்கள் புடவையை வித்தியாசமாக உடுத்தி இருந்ததைப் பார்த்த பல்லவி அதைப்பற்றி கவிதாவிடம் விசாரித்தாள்.
‘அதுவோ… அதை ‘ஒசரி‘ என்று சொல்லுவினம். சிங்கள ஆக்கள் அப்பிடித்தான் சாரி உடுத்துவினம். அது அவியளின்ட ட்ரெடிஷனல் ட்ரெஸ்.‘
கவிதா விளக்கிச் சொல்ல, நன்கு கவிதாவிற்குப் பழக்கமான அந்த டெய்லர் பெண்மணி ஒசரி உடுத்தும் முறையை பல்லவிக்குக் கற்றுக் கொடுத்திருந்தார். அதைத்தான் இப்போது பல்லவி உடுத்தி இருந்தாள்.
“அப்பிடியே நில்லுங்கோ பல்லவி. ரெண்டு ஃபோட்டோ எடுக்கிறன்.” கவிதா பல்லவியைப் பல கோணங்களில் வைத்து ஃபோட்டோ எடுக்க பல்லவியின் மனதோ மாதவனிடம் தாவியிருந்தது.
கண்ணாடியில் பார்த்த போது அந்த உடை அவ்வளவு அழகாக அவளுக்குப் பொருந்தி இருந்தது. அதை பல்லவியும் கவனித்திருந்தாள். இது போல அவள் விதவிதமாக உடுத்தினால் மாதவன் பார்வை மாறிப் போகும். இந்த அழகுப் பொக்கிஷம் அவன் சொந்தம் என்பதை அவன் பாணியில் நிரூபிப்பான்.
பல்லவியின் கண்கள் சட்டென்று கலங்கிப் போக கவிதாவிற்குச் சங்கடமாகிப் போனது. தன் தோழியின் கையை மெதுவாகத் தட்டிக் கொடுத்தவள் அவளுக்குத் தனிமைக் கொடுத்துவிட்டு அகன்றுவிட்டாள்.
அதேவேளை…
கௌதமைப் புரட்டி எடுத்துக் கொண்டிருந்தான் மாதவன். அவன் ஷேர்ட் காலரைக் கொத்தாகப் பிடித்து முகத்தில் ஒரு குத்து விட கௌதம் நிலைதடுமாறி பக்கத்திலிருந்த காரின் மேல் வீழ்ந்தான்.
நேற்றைய நிகழ்விற்குப் பிறகு மாதவன் கூண்டுப்புலி போல மாறி இருந்தான். அவன் வீடு வரைச் சென்றும் கௌதமின் வாயிலிருந்து எதையும் பெறமுடியாமல் போனது அவன் சினத்தை இன்னும் அதிகரித்திருந்தது.
அவனைக் கண்காணித்த படியே இருந்தான். ஊருக்கும் கிளம்பிப் போகவில்லை. பல்லவி வீட்டிலேயே தங்கிவிட்டான். துளசியின் பார்வை இளைய அத்தானைக் கவலையோடு பார்க்க அதை ஒரு புன்னகையோடு கடந்துவிட்டான் மாதவன்.
இன்று கௌதமின் காரைப் பின் தொடர்ந்த போது அவன் பப்பிற்குச் செல்வது புரிந்தது. நுழைவாயிலை அடைந்து விட்டால் காவலர்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும் என்பதால் கார் பார்க்கிங்கில் கௌதமைச் சந்தித்தான் மாதவன். அங்கு அவனைத் தடுப்பார் யாருமில்லை.
“பல்லவி எங்கடா?” கோபத்தின் உச்சத்தில் கத்திய மாதவனைப் பார்த்தபோது கௌதம் கொஞ்சம் ஆடித்தான் போனான். அதனால் அன்றைக்குப் போல இன்றைக்கு அவன் பதிலில் நையாண்டி இருக்கவில்லை.
“இங்கப்பாரு ஸ்கோடா, எனக்கு உம் பொண்டாட்டி எங்க இருக்கான்னு தெரியாது.” கௌதம் சொல்லி முடிக்க மாதவனின் முஷ்டி மீண்டும் கௌதமின் மூக்கில் இறங்கியது.
“டேய்! சத்தியமா எனக்குத் தெரியாதுடா.” மூக்கில் ரத்தம் வழியக் கத்தினான் கௌதம்.
“இதை என்னை நம்பச் சொல்றியா?” கேட்டபடியே மாதவன் மீண்டும் அவனைக் காலால் உதைக்க கௌதம் நிலைதடுமாறி நிலத்தில் வீழ்ந்தான்.
“ஸ்கோடா… இங்கப்பாரு… இதுதான் உண்மை.” அவனைப் பேசவிடாமல் மீண்டும் ஒரு உதை விழ கௌதம் நிலத்தில் சுருண்டான். அவனைக் கொத்தாகப் பற்றிய மாதவன்,
“ப்ளாக் ஆடி வெச்சிருக்கிறவன்தான் ஹீரோன்னு யாருடா சொன்னது? அப்ப ஸ்கோடா வெச்சிருக்கிற நாங்கெல்லாம் யாருடா?” வார்த்தைளைத் துப்பியவன் மேலும் மேலும் அவனைத் தாக்கினான்.
“நீ பல்லவி எங்கேன்னு சொல்ற வரைக்கும் எங்கிட்ட அடிதான் வாங்குவே.”
“எனக்குத் தெரியாதுடா.” மீண்டும் மீண்டும் அதே பதிலை கௌதம் சொல்ல மாதவனுக்கு கோபம் எல்லை மீறிப் போய்க் கொண்டிருந்தது. கௌதம் மூர்ச்சை ஆகும் வரை அவன் தாக்குதல் நிற்கவுமில்லை.
சாவகாசமாக ஒரு ஆம்பியூலன்ஸை வரவழைத்தவன் அதில் கௌதமை அள்ளிப் போட்டுவிட்டு தன் காரில் வாகனத்தைப் பின்தொடர்ந்தான். அந்த ப்ளாக் ஆடி அனாதையாக அந்த பப்பில் நின்றிருந்தது.
தனியார் மருத்துவமனை ஒன்றில் கௌதமைச் சேர்த்த மாதவன் அவன் உடமைகள் அனைத்தும் தன்னிடம் ஒப்புவிக்கப் படவும் ஒரு எரிச்சலுடன் அவற்றை வாங்கிக் கொண்டான்.
ரிசப்ஷனில் கேட்ட கேள்விக்கு கௌதமைத் தன் நண்பன் என்று அறிமுகப் படுத்தியவன் நடந்தது ஆக்சிடன்ட் என்று சாதிக்கவும் கௌதமைப் பரிசோதித்த டாக்டர் மாதவனை ஒரு தினுசாகப் பார்த்தார். ஆனால் மாதவன் எதைப்பற்றியும் அலட்டிக் கொள்ளவில்லை. அவனுக்கு பல்லவி எங்கே இருக்கிறாள் என்று தெரிய வேண்டும், அவ்வளவுதான்.
கௌதமின் பொருட்களோடு அவன் ஃபோனும் இருக்கவும் அதை உயிர்ப்பித்தவன் கடைசியாக அவன் யாரோடு பேசி இருக்கிறான் என்பதை ஆராய்ந்தான். யாரோ ‘தனு‘ என்ற பெயரில் அந்த இலக்கம் பதிவு செய்யப்பட்டிருக்க அந்த எண்ணை அழைத்தான் மாதவன்.
“கௌதம்.” முதலாவது ரிங்கிலேயே அழைப்பு ஏற்கப்பட்டது.
“ஹலோ… நீங்க கௌதமுக்கு சொந்தக்காரங்களா?” மாதவனின் குரல் கௌதமின் ஃபோனில் கேட்கவும் எதிர்முனையில் பதட்டம் தெரிந்தது.
“ஹலோ, நீங்க யாருங்க? இது கௌதம் நம்பர். உங்களுக்கு எப்பிடிக் கிடைச்சுது இந்த ஃபோன்?”
“இங்கப்பாருங்க, கௌதமுக்கு ஒரு சின்ன ஆக்சிடன்ட்.”
“ஐயையோ! என்னங்க சொல்றீங்க?”
“இங்கப்பாருங்க மேடம், பெருசா ஒன்னுமில்லை. நீங்க நான் சொல்ற ஹாஸ்பிடலுக்கு வந்து சேருங்க.” என்றவன் ஹாஸ்பிடல் பெயரைச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
சற்று நேரத்திலெல்லாம் ஒரு பெண் கௌதம் இருந்த ரூமை நோக்கி ஓடி வர மாதவன் அமைதியாக நின்றிருந்தான். வந்த வேகத்தில் இவனை ரூம் வாசலில் காணவும் அந்தப் பெண் திகைத்தாற்போல நின்று விட்டாள்.
“நீங்க?” அவள் குரலில் பெரிய குழப்பம் இருந்தது.
“கௌதம் எங்க? கௌதமுக்கு என்னாச்சு?” இவன் யாரென்பதையும் தாண்டி இப்போது அவளுக்கு கௌதம்தான் முக்கியமாகத் தோன்றியது. ரூமை நோக்கி மாதவன் கைக் காட்ட உள்ளே விரைந்தாள் பெண்.
“கௌதம்! கௌதம்…” அவள் அழைப்பில் லேசாக அசைந்தான் கௌதம்.
“என்னாச்சு? நீங்களாவது ஏதாவது சொல்லுங்களேன்.” அந்தப் பெண் கௌதமைத் தடவியபடியே மாதவனைக் கேட்க அசையாமல் கல்லுப் பிள்ளையார் போல நின்றிருந்தான் மாதவன்.
“கௌதம்! என்னாச்சு கௌதம்? என்னைப் பாருங்க கௌதம்.” அந்தப் பெண்ணின் கண்களில் நீர் வழிய கௌதம் லேசாகக் கண்களைத் திறந்தான். அதற்காகவே காத்திருந்தவன் போல கௌதமை நெருங்கினான் மாதவன்.
“கௌதம்! எங் கையால அடிபட்டே சாகதே. சொல்லிடு, பல்லவி எங்கேன்னு நீயா சொல்லிடு.” மாதவன் குரலை உயர்த்தாமல் அதட்ட கௌதமின் முகத்தில் இப்போது ஒரு சலிப்புத் தெரிந்தது.
“டேய் ஸ்கோடா! உனக்கு… சொன்னாப் புரியாதா? அவ எங்க இருக்கான்னு எனக்குத்… தெரியாதுடா.”
“பொய்!” மாதவன் சீறினான்.
“தனு… இவனுக்குப் பைத்தியம் புடிச்சிருக்கு. இவனை இங்க இருந்து போகச் சொல்லு.”
“கௌதம்… இவரு? பல்லவியோட ஹஸ்பென்ட்டா?” தயங்கியபடி அந்தப் பெண் கேட்க மாதவன் பல்லைக் கடித்துக் கொண்டான்.
“இங்கப் பாரும்மா… நீ யாருன்னு எனக்குத் தெரியாது. இவனை முழுசா உசிரோட பார்க்கணும்னா இவனை வாயைத் தொறக்கச் சொல்லு. இல்லைன்னா இவனை நான் அடிச்சே சாக வைப்பேன்.” கை நீட்டி மாதவன் எச்சரிக்க அந்தப் பெண் மாதவனை நோக்கி வந்தது.
“கொஞ்சம் வெளியே வர்றீங்களா?”
“எதுக்கு?”
“ப்ளீஸ்… வாங்க நான் சொல்லுறேன்.” அந்தப் பெண் தயவாகச் சொல்லவும் எதுவும் புரியாமல் அந்தப் பெண்ணைத் தொடர்ந்தான் மாதவன்.
“எம் பெயர் தன்வி, கௌதமை நான்தான் கட்டிக்கப் போறேன்.”
“நீ என்னமோ பண்ணும்மா, எனக்கு அதைப்பத்திக் கவலை இல்லை. பல்லவி எங்க இருக்கான்னு மட்டும் அவனைக் கேட்டுச் சொல்லு. இல்லைன்னா நீ கட்டிக்க அவன் உசிரோட இருக்க மாட்டான்.”
“நீங்க எவ்வளவுதான் அடிச்சாலும் அந்தக் கேள்விக்கு கௌதம் பதில் சொல்ல மாட்டார்.”
“ஏன்?!”
“ஏன்னா அதுக்கு கௌதமுக்கு பதில் தெரியாது.”
“நீயும் அவனுக்குக் கூட்டா?” மாதவனின் முகத்தில் இப்போது ரௌத்திரம் தெரிந்தது.
“இல்லை… நான் உண்மையைத்தான் சொல்றேன். கௌதமுக்கு எதுவும் தெரியாது.”
“அது எப்பிடி உனக்குத் தெரியும்?”
“ஏன்னா பல்லவி எங்க இருக்காங்கன்னு எனக்குத் தெரியும்.” தன்வியின் வாயிலிருந்து உதிர்ந்த அந்த ஒரு சில வார்த்தைகளில் மாதவன் ஸ்தம்பித்து நின்றான். அவன் உலகம் ஒரு சில நொடிகள் வேலை நிறுத்தம் செய்தது.