anbin mozhi 7
anbin mozhi 7
அன்பின் மொ(வி)ழியில் – 7
பூப்போன்ற வெண்மையான சிறிய பாதங்களை புல் தரையில் ஊன்றி கொண்டு கைகளை இருபக்கமும் வீசியவாறு மற்றவர்களை தேடிக்கொண்டு இருந்த அந்த சிறிய முயலைப் போன்றவனின் கண்கள் கட்டப்பட்டு இருந்தன.
மழலையின் அழகிய புன்னகை அவன் இதழ்களில் உறைந்திருந்தது. கண்ணாமூச்சி ஆட்டத்தில் தன்னோடு விளையாடிய மற்றவர்களைத் தேடித் தூழாவிக் கொண்டிருக்கும் சின்ன சிட்டின், பிஞ்சு கைகளில் வெகுளியாய் அகப்பட்டுக் கொண்டாள் கயல்.
கண்கட்டி ஆட்டத்தில் வெற்றிபெற்ற மகிழ்வுடன், கண்களில் இருந்த துணியினை அவிழ்த்து கொண்ட ரவி, எதிரில் இருந்த அன்னையை ஆனந்த கூச்சலுடன் தாவி அணைத்துக் கொண்டான். தன் மேல் விழுந்த மகனின் அழகிய கண்களில் முத்தமிட்டவள்,
“என் செல்லம்! அருமையா ஜெயிச்சிட்டாங்களே!” என்று கொஞ்ச,
“அம்மு! எப்பவும் எங்கையில நீங்கதான் அர்ரெஸ்ட் ஆகுறீங்க! இந்த ஆதியும், பேபியும் எங்க போறங்க தெரியல?” என்று பெரியமனித தோரணையில் யோசிக்க, அவனின் கன்னத்தில் முத்தமிட்டு
“வா ரவி! நாம அந்த இரண்டு பூனையும் என்ன செய்யுதுன்னு பாக்கலாம்… என் பின்னாடி, அமைதியா சத்தம் பண்ணாம வரணும்” என்றே, சின்னவனை அழைத்துக்கொண்டு பின்னால் உள்ள தோட்டத்திற்கு சென்றாள். அவர்கள் தேடிய ஆதி, ரம்யா எங்கும் கிடைக்கவில்லை.
“ஆதி! உங்க அம்மு கீழேதான், என் பட்டு குட்டியோட நிக்கிறா! இப்ப என்ன பண்ண? நாம மரத்து மேல இருக்குறத பார்த்தா… உனக்கும் சேர்த்து நான்தான் திட்டு வாங்கணும்!” என்று நொடித்துக் கொண்டே,
“சும்மா இருந்தவள கொய்யா பழத்த காட்டி மரத்தை ஏறவிட்டு, நீ பயமில்லாம இருக்க” என ரம்யா புலம்பினாள்.
“சும்மா இரு ரமி! சின்ன புள்ள மாதிரி புலம்பாத! பழத்தை பாத்து தாவி ஏறிட்ட… சரி விடு! எவ்வளவோ பண்ணிட்டோம்! இத பண்ண மாட்டோமா?” என்றவன் பேசிக்கொண்டே, அருகில் இருந்த கிளையில் எட்டி சிறிய பழம் ஒன்றை பறித்தான்.
ஆதியின் மழலை பேச்சில் மகிழ்ந்தவள், அவன் செய்வதைப் பார்த்து,
“என்னடா பண்ண போற?” என்றவளிடம்
“ஹ்ம்ம்… கண்ணாபூச்சி விளாட போறேன் ரமிகுட்டி!” என்றான் நக்கலாக.
அவன் பேசிய தொனி, அவளுக்கு வேறு ஒருவரை ஞாபகப்படுத்தியது.
அவள் திகைத்து போய் இருந்தபோது, அதை பயன்படுத்திக் கொண்டு அவனின் செல்ல அம்முவின் மீது பழத்தை போட்டுவிட்டு கிளைகளுக்குள் தன்னை முழுதும் மறைத்துக்கொண்டான் ஆதி.
கயல் அவர்கள் இருவரும் எங்கே என்று பார்த்து கொண்டு இருந்தபோது அவள் மீது சிறு கொய்யாப்பழம் விழ, மேலே நிமிர்ந்து பார்த்தவள் கண்களுக்கு கிளைகளின் ஊடே ரம்யாவின் கால் தெரிந்தது. சட்டென அவளுக்குள் ஒரு கோபம் வந்தது.
“ரம்யா! கீழ கவனமா இறங்கி வா!” என்ற கயலின் குரல் அழுத்தமாக வெளிவந்தது.
அந்த குரலினை கேட்டவள் திரும்பி பார்க்க, ஆதி அமர்ந்திருந்த கிளை காலியாக இருந்தது.
‘சரிதான்… இந்த குட்டி ராஸ்கல், நம்மல நல்லா மாட்டி விட்டிடுச்சி’ என்ற தன் மனசாட்சியை தலையில் தட்டி துரத்தி விட்டவள், மரத்தில் இருந்து மெல்ல கீழிறங்கி வந்தாள்.
“இன்னும் சின்ன குழந்தைன்னு நினைப்பா உனக்கு? கீழ விழுந்து படக்கூடாத இடத்தில் அடிபட்டா என்ன செய்ய? பிள்ளைங்களுக்கு எப்படி இருக்கணும்னு சொல்லித் தர வேண்டியவ நீயே! இது போல செய்யலாமா?” என காய்ச்சி எடுத்துவிட்டாள் கயல்.
அவள் சொல்வதை அமைதியாக கேட்டுக்கொண்டவள், ‘எல்லாம் அந்த குட்டினால’ என மனதோடு எண்ணியபடியே, பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு, “இனி ஏறலை” என்றாள்.
கயலும் நேற்றிலிருந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாள் ரம்யாவின் உற்சாகத்தை! காரணம் தெரியாவிட்டாலும், அவளின் மாற்றம் கயலுக்கு மகிழ்ச்சியை தந்தது.
ரம்யா சென்னையில் அன்னையை பார்த்து பேசியதை மட்டும் தான் கயலிடம் சொல்லிருந்தாள். மற்ற எதை பற்றியும் மூச்சுகூட விடவில்லை.
“ஊர்ல இருந்து வந்த பிறகு ரொம்ப சந்தோஷமா இருக்க மாதிரி தெரியுது?” என்று கயல் கேட்க,
பதில் சொல்ல தெரியாமல் திருதிருவென முழித்தவள்,
“அப்படியா? இல்ல… இல்லையே? நீ… ஹ்ம்ஹ்… நான்! எப்பவும் போலத்தான் இருக்கேன்” என உளறிக் கொட்டி, கிளறி மூடி, “ஆதி…” என குரல் கொடுத்தவாறு, அங்கிருந்து நழுவி ஓடிவிட்டாள்.
அவளது ஓட்டத்தை கண்டவள், மலர் இதழ்கள் விரியா மெல்லிய சிரிப்புடன் ரம்யாவை தொடர்ந்து வீட்டின் உள்ளே வந்தபோது, ஏதும் அறியாதவன் போல, அன்றைய வீட்டு பாடத்தை செய்து கொண்டிருந்தான் சேட்டைகளின் மொத்த உருவமாய் இருக்கும் ஆதித்யன்.
அவன் அருகில் வந்தவள், “எல்லாரும் வெளியில விளையாடும் போது, நீயேன் ஆதி வந்துட்ட? ரவி எவ்வளவு நேரம் தனியா கண்ணை கட்டி நின்னுட்டு இருந்தான்… பாவம் தானே! நீ இங்கே வர்றேன்னு அவன்கிட்ட சொல்லி, கூட்டி வந்திருக்கலாம் இல்ல!” என்றவள் வார்த்தையில், தான் செய்த தவறை உணர்ந்த அந்த பிஞ்சு தலை குனிந்து அமைதியாக இருந்தது.
தமயனின் முகத்தினை கண்ட ரவி, “என்ட்ட சொல்லிருப்பான் அம்மு… அங்க எனக்கு கேட்ருக்காது” என்றான் சமாளிப்பாக.
இரட்டையர்கள் இருவரின் ஒற்றுமையை கண்டு கயலுக்கு எப்போதும் ஏற்படும் பெருமை இப்போதும் தோன்றியது.
ரம்யாவுக்குதான் தலை வேதனையாக இருந்தது. ஆதியுடன் மரத்தில் பேசிய போது தன் மனகேள்விகளுக்கு விடை கிடைத்த மகிழ்வில் இருந்தவள், இப்போது பொறுப்பான ரவியின் வார்த்தைகள் மூலம், வெளிப்பட்ட பக்குவம் அவளுக்கு வேறு ஒருவரை நினைவு படுத்த, தனக்கு ஏற்பட்ட குழப்பத்தில் கன்னத்தில் கைவைத்து அமர்ந்துவிட்டாள்.
அவளுக்கு, அப்படித்தான் என்று ஏற்பட்ட தெளிவு! இப்படியும் இருக்குமோ?! என்ற குழப்பம்! இந்த சிறிய இரட்டையர்களின் நடவடிக்கையில் தன் இரட்டை சகோதரர்களில் யார் என்று எப்படி முடிவெடுப்பது என யோசித்தாள்.
அதுவரை அவள் யோசனையை அமைதியாய் கவனித்த அவளின் மனசாட்சி ‘நீ இப்படி யோசிச்சுகிட்டே இருந்த… அப்புறம் எஸ்ஜே சூர்யா மாதிரி, ஊர்வசி மேடம்கிட்ட போகவேண்டியது வரும்’ என்றது அக்கறையாக.
அதன் அறிவுரையை கேட்டவள், “இப்ப உன்னை கூப்பிட்டு கருத்து சொல்ல சொன்னேனா? ஒழுங்கா ஓடிடு! இல்ல… இருக்குற கடுப்புல உன்னை கொன்னுடுவேன்’ என்றவள் குரலில், உடனே அது தன்வாலை சுருட்டிக் கொண்டு அமைதியாகிவிட்டது.
கயல், ரம்யாவிடம் “அங்க தான் யாருமே இல்லை, இனியாவது எங்க கூட இருக்கலாமே! நானும் எவ்வளவு நாளா சொல்றேன்!” என்றவளின் வார்த்தைகளை மற்ற நேரங்களில் போல மறுக்கவில்லை அவள்.
இன்னும் சில நாட்களில் இவர்களைப் பிரிய வேண்டியது வரும் என்று உணர்ந்தவள் அவர்களுடன் சேர்ந்து ஒன்றாக சிலகாலங்கள் இருக்க நினைத்தாள்.
அவளின் அமைதியான சம்மதம் கயலுக்கு வியப்பைக் கொடுத்தாலும், அவளிடம் ஒன்றும் கேட்கவில்லை. ரம்யா இங்கு இருக்க ஒத்துக்கொண்டதே கயலுக்கு போதுமானதாக இருந்தது.
பின் கயல் பிள்ளைகள் வெளியில் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து விட்டு, பாதியில் நின்று போன அடுப்படி வேலைகளை தொடரச் சென்றாள்.
****************************** ********
“மாம்! நாங்களும் உங்க கூடவே ஊருக்கு வந்திடுறோம்! பட் நீங்க யார்கிட்டயும் சொல்லாதீங்க! ஒரு சின்ன சஸ்பென்ஸ்…” என்று ராஜ் தன் அன்னை ஜாஸ்ஸிடம் சொல்ல,
“இன்னும் சின்ன பையன் போல விளையாட்டு!” என்றவாறே பயணத்திற்கு தேவையானதை எடுத்து வைத்தார் ஜாஸ்.
“வினி குட்டி நீயும் சும்மா இருக்கணும்! உன் பாசமலர் கிட்ட சொல்லிடாத!” – ராஜ்,
“நான் வாயே தொறக்கல” என்று அலுப்பாக சொன்னான் விஷ்ணு.
இருக்காதா பின்னே? பொன்னியிடம் வருவதை முன்பே சொன்னால், போய் இறங்குவதற்குள் சுடச்சுட இட்லி அவித்து, விலைமீன் வாங்கி ஆனம் வைத்து, வெள்ளைக் கிளங்கன் வறுத்து வைத்திருப்பாள், அது பறிபோன கடுப்பு அவனுக்கு.
என்னதான் வகைவகையாக இங்கு உண்டாலும் தங்கையின் கை மணம் தனி அல்லவா!
மூவரும் கிளம்பி அன்றைய இரவில் காரிலேயே தஞ்சை புறப்பட்டனர். விமான பயணம் அவர்களுக்கு எளிதுதான் என்றாலும், தனது ஊருக்கு காரில் செல்லவே விரும்புவான் ராஜ். இளையராஜாவின் மெல்லிசையுடன் அந்த இரவு பயணம் மிகவும் இனிமையாக அமைந்தது அவர்களுக்கு.
“நிலா” என்ற மெல்லிய அழைப்புடன், தன் மாமனின் வீட்டிற்குள் வந்தாள் பொன்னி.
“வா பொன்னி! இப்பதான் இங்குனகுள்ள வர வழி தெரிஞ்சதாலே?” அவளை கண்ட வெண்ணிலா மகிழ்ச்சியுடன் வரவேற்றாள்.
“வா நிலா! இங்கன தோட்டத்துல சந்தனமுல்லை நெறைய பூத்திருக்கு போல… உங்க அத்தை அதை பறிச்சுட்டு வர சொன்னாக” – பொன்னி.
“இதோ செத்த இரு பொன்னி! வரேன்” என்றவள், நிமிடத்தில் கைகளில் பூக்கூடையுடன் வந்தவள் “வாலே போவோம்” என்று பொன்னியுடன் பேசிக்கொண்டு, வீட்டின் முன்புற முலையில் இருந்த சந்தன முல்லை பந்தலுக்கு வந்தாள்.
இருவரும் மெல்லிய குரலில் பேசி கொண்டே பூக்களை கிள்ளினர், அப்பொழுது கிளியின் சப்தம் வித்தியாசமாக கேட்டது. அதை கேட்கவும்,
“நீ பூவை பறி பொன்னி! நான் கூண்டுகிட்ட போய் பாத்துட்டு வரேன்” என நிலா அங்கிருந்து சென்றாள்.
பொன்னி பூவில் கைவைத்த போது அணில்குட்டிகள் இரண்டு பந்தலின் மேல் விளையாடி கொண்டிருந்தன. அழகிய அந்த நேரத்தை ரசித்து கொண்டு அமைதியாய் நின்றிருந்தாள் பொன்னி.
ராஜ் வீட்டினுள் வந்து வண்டியை நிறுத்தும் போதே, பொன்னியை பார்த்துவிட்டான், அவளை கண்ட அவன் உள்ளம் இன்பமாய் துள்ளி குதித்தது.
பொன்னியை விஷ்ணு, ஜாஸ் இருவரும் பார்க்கும் முன்,
“மாம்! நீங்க இரண்டு பேரும் உள்ள போங்க… நான் காரை நிறுத்திட்டு வரேன்” என்றவன், அவர்கள் சென்ற அடுத்த நொடி வண்டியில் இருந்து இறங்கி ஓசையில்லாமல் பொன்னியின் அருகில் சென்றான்.
அணிலின் விளையாட்டில் லயித்து இருந்தவள், தன் பக்கத்தில் வந்து நின்றவனை கவனிக்கவில்லை.
மாம்பழ வண்ண பாவாடை, பச்சை நிற தாவணி அணிந்து குவளை மலர்போன்ற காதுகளில் குடை ஜிமிக்கி அசைந்தாட, தன் நீண்ட பின்னலை முன்புறம் போட்டு கொண்டு, தன்னுடைய அழகிய கை வளையல் சிணுங்க, தன் சங்கு போன்ற கழுத்தில் உறவாடி சிறை செய்திருந்த மெல்லிய சங்கிலியை கடித்து கொண்டிருந்தவளை கண்ட ராஜீன் விழிகள் இமைக்கவும் மறந்து ரசிக்க ஆரம்பித்திருந்தது.
அப்போதுதான் மலர்ந்த சந்தன முல்லையின் வாசனையுடன், தன்னவளின் அழகும் அவனை மயக்குவதை உணர்ந்தவன், அதற்கு காரணமானவளின் மெல்லிய இடையில், தன் வலிமையான கைகளை பதித்து பின்னிருந்தவாறு தன்னுடன் சேர்த்து அணைத்தான்.
இவை அனைத்தும் வினாடிக்கு குறைவான நேரத்தில் செய்திருந்தான் ராஜ். தன்னை யாரோ இழுத்ததை உணர்ந்து பதறி விலகும் முன்னமே, அணைத்து கொண்ட கைகள் யாருடையது என புரிந்த அவளின் மெல்லுடல், ஒரு நொடி இளகிப் பின் அது பொய்யோ என்னும் வகையில் விறைத்தது.
அவளின் வினாடிக்கும் குறைவான நேரத்தில் ஏற்பட்ட குழைவை உணர்ந்தவன் இதழ்களில் புன்னகை வந்தது. தன்னிடம் இருந்து விடுபட அவள் செய்த போராட்டத்தை நொடியில் தகர்த்தவன், தன் கைகள் உணர்ந்த குளிர்ச்சியில் கரைந்தவாறு,
“முயற்சி பண்ணாத பொன்னி! நான் நினைச்சா மட்டுந்தான் நீ என்னை விட்டுப் போக முடியும்” என்று கள்ளத்தனமாய் சிரித்தவன், பின் பூடகமாக “நான் ஒரு நாளும் அப்படி நினைக்க மாட்டேன்” என கூறிகொண்டே, தன்னுடைய முத்திரையை அவளின் பின் கழுத்தில் உள்ள மச்சத்தில் அழுந்த பதித்த பிறகே அவளை விடுவித்தான்.
அவன் கைகளை விலக்கிய அடுத்த வினாடி துள்ளி குதித்து, அவனை விட்டு நான்கடி தள்ளி நின்றவளின் கண்கள் கோபத்தில் சிவந்திருந்தது. அவளின் தடுமாற்றத்தை ரசித்திருந்தவன் கண்களில் தன்னவள் மீதான அன்பு நிறைந்திருந்தது.
அவன் மனதினை பற்றி அறியாதவள், “இத பாருங்க! இப்படி கட்டிக்கிட்டு, கண்டபடி பேசுறதெல்லாம் பட்டணத்து புள்ளககிட்ட வச்சுக்கோங்க… என்கிட்ட இதெல்லாம் வேணாம்!” மனதில் உள்ள காதலை மறைத்து எரிச்சலாகச் சொல்லிவிட்டாள்.
அவளின் வார்த்தைகளில் ராஜீன் குறும்பு மறைந்து, கோபம் வந்தது.
“உன்ன நான் கட்டிக்காம வேற யாருக்கு அந்த உரிமை இருக்கு? எப்ப இருந்தாலும் நீ எனக்குதான்!” என்றவன், இதற்குமேல் இங்கு இருந்தால், தன்னவளை காயப்படுத்தி விடுவோம் என்று உணர்ந்து வீட்டினுள் சென்றான்.
அவன் சென்றவுடன் பந்தலின் கீழ் அப்படியே அமர்ந்துவிட்டாள் பொன்னி.
அவள் மேனி அவளவனின் தீண்டலில் ஏற்பட குறுகுறுப்பிலிருந்து வெளிவரவில்லை. அவளின் மனதிலோ ராஜ்-ன் வார்த்தைகள் எதிரொலித்த அதேநேரத்தில் செல்வி சொல்லியதும் நினைவில் வந்தது.
ஒரு முறை ராஜ், பொன்னியுடன் பேசிக்கொண்டு இருந்ததை கவனித்த செல்வி பொன்னியிடம்,
“ஹ்ம்ம்… நம்ம மச்சான் இருக்கற அழகுக்கு, நாம அவிங்க கண்ணுக்கு தெரிவோமா?” என பெரு மூச்சுவிட்டவள் தொடர்ந்து,
“அத்தை மாதிரி இருக்க புள்ள தான் அவுங்களுக்கு பொருத்தமா இருக்கும். சும்மா நேரத்தை செலவிட மட்டுந்தான் நம்மகிட்ட சிரிக்க பேசுறது, கேலி கிண்டல் எல்லாம்… இதை உண்மையா நினைச்சா அதையும் விளையாட்டா எடுத்துக்கிட்டு சிரிப்பாங்க… நான் ஒரு லூசு! எனக்கு நானே சொல்லிக்கிறதா நினச்சு, உன்கிட்ட சொல்லுறேன்! நீ வாலே! நாம குளத்து வரை போய்ட்டு வரலாம்” என அவளை இழுத்து கொண்டு சென்றாள்.
பொன்னியின் மனதில் சிறு வயதில் இருந்தே அவன் மீது இருந்த அன்பு காதலாய் மலரும் நேரத்தில் செல்வி சொல்லிச் சென்ற வார்த்தைகள் மனதில் பதிந்து தாளமுடியாத வலியை ஏற்படுத்தியது.
அதன் பிறகு சமயம் அமையும் போதெல்லாம், பொன்னியின் மனதில் தாழ்வு மனப்பான்மை உருவாக்கும் வகையில், அதே நேரத்தில் ராஜினை நம்ப முடியாத அளவிற்கு பொன்னி அறியாத வண்ணம், செல்வி தன் வார்த்தைகளைக் கொண்டு பொன்னியை வதைத்தாள்.
சூதுவாது அறியாத பொன்னியும், வஞ்சகம் மட்டுமே நிறைந்த செல்வியின் வார்த்தைகளில் உள்ள வன்மத்தை அறியவில்லை. பொன்னியின் மனதில் ராஜீன் மீது அளவிட முடியாத காதல் இருந்தது.
அதே நேரத்தில் அவனுக்குதான் இணையில்லை, சும்மா விளையாட்டாய் மட்டுமே அவளை பிடித்து இருப்பது போல நடந்து கொள்கிறான் என பதிந்துவிட்டது.
சில மாதங்களாக அவனிடம் வெளிப்படும் உரிமையில் மகிழ்ந்தாலும், அவை பொய்யாக மாறிவிடுமோ என பயந்து அவனை தவிர்க்கிறாள்.
ராஜின் கடுப்புக்கு காரணம் பொன்னியின் விலகல்தான்.
வீட்டினுள் நுழைத்த ராஜின் மனம் சற்றுமுன் ஏற்பட்ட அழகிய உணர்வினாலும், பொன்னியின் வார்தைகளினாலும் குமுறிக்கொண்டு இருந்தாலும், நிலாவின் “அண்ணா” என்ற தங்கையின் அழைப்பில், புன்னகையில் மலர்ந்தான்.
வெண்ணிலாவின் அருகில் வந்து “பட்டு! எப்படி இருக்க? காலேஜ் எல்லாம் நல்ல போகுதா?” என்றவன் கைகள், தங்கையின் கன்னத்தை அன்புடன் தட்டியது.
“டேய் நல்லவனே! கார விட்டு வரதுக்கு இவ்ளோ நேரமா?” என்ற விஷ்ணு “நான் வீட்டுக்கு கிளம்புறேன் அத்தை! வயலுக்கு போயிருக்க ராம் வந்தா சொல்லுங்க… நான் மதியத்துக்கு மேல வரேன்னு” என சொல்லும் போதுதான் நிலாவுக்கு பொன்னியை தோட்டத்தில் விட்டு வந்தது ஞாபகம் வந்தது.
“அய்யோ!” என்ற நிலாவின் குரலில் “என்ன” என்று கேட்டவர்களிடம், “பொன்னி பூப்பந்தல் கிட்ட இருக்கா, நான் அவள விட்டு இங்கனகுள்ள வரும்போது உங்களை பாத்துட்டு உள்ளே வந்துட்டேன்! செத்த இருங்க… நான்போய் கூட்டி வரேன்” என்று வெளியில் ஓடினாள்.
“விஷ்ணு! நீயும் பொன்னியும் ஒண்ணா போகலாம் இரு” என்ற ஜாஸ், சமையல் செய்பவரிடம், காலை உணவை சாப்பிட எடுத்து வைக்க சொல்லிவிட்டு அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார்.
ராஜின் கவனம் அன்னையின் பேச்சில் இல்லை, ‘இவள எல்லாம் லவ் பண்ணி கல்யாணம் பண்ண முடியாது. தாலிய முதல்ல கட்டிட்டு மெதுவா லவ் பண்ண வேண்டியதுதான். என்ன பேச்சு பேசுறா! ஒருநாள் என் கையில மாட்டுவா! அப்ப இருக்கு அவளுக்கு…’ என்று மனதிற்குள் பொன்னியை வறுத்து எடுத்து கொண்டிருந்தான்.
நிலா தோட்டத்திற்கு சென்ற போது, பூக்கூடையை அருகில் வைத்து அப்போது தான் கொடியில் இருந்து உதிர்ந்த மென்மலரைப் போல தனியாக அமர்ந்திருந்தாள் பொன்னி.
“பொன்னி! வாலே… உள்ளே போலாம், ராஜ் அண்ணா, அம்மா, உன்னோட அண்ணா எல்லாம் வந்திருக்காங்க!” என்று தோழியை பார்த்து நிலா சொல்ல, விஷ்ணு வந்ததை கேட்டவுடன் அவளுடன் விரைவாக சென்றாள்.
தமையனை கண்ட பொன்னியின் கண்கள் காரணமே இல்லாமல் பாசத்தின் வெளிப்பாடாய் கலங்கியது… மெல்ல அண்ணனின் அருகில் சென்று அமர்ந்தாள். அவளின் கண்களில் கண்ணீர் கண்டவுடன் எதுவும் பேசாமல் அமைதியாய் தோளில் சாய்த்து கொண்டான் விஷ்ணு.
அவர்களிடம் வெளிப்பட்ட அந்த மௌனம் கூட அதனை அழகாய் இருந்தது. இதெல்லாம் பார்த்த ராஜின் நீலநிற விழிகள் அவளை வெறுமையாய் சிலநொடி நோக்கியது.
‘எப்போழுது என்னை உணர போகிறாய் பெண்ணே?’ என அவன் உள்ளம் உருகியதை, பாவம் பேதையவள் அறியவில்லை.
இருவர் உள்ளமும் காதலில் இணைந்திருந்தாலும் அதனை புரிந்து கொள்ள முடியாமல் தனித்தனியே தவித்தது. இருவரின் அன்பின் மொழிகளை விழிகள் கண்டுகொள்வது எப்பொழுதோ?