உயிர் தேடல் நீயடி 28(3)
கூடல் தீர்ந்த பின்னும், கிறக்கத்தின் மிச்சங்களை அவன் பார்வை தாங்கி நிற்க, வெட்கத்தின் மிச்சங்களை இவள் முகம் ஏந்தி நின்றது.
அங்கே, மஞ்சம் தாண்டியும் காதல் நீள, அவளின் உலகமெங்கும் அவனேயாகி நின்றான்.
காதல் அதிசயம் செய்திருந்தது இருவரின் எண்ணங்களையும் ஒரே நேர்கோட்டில் இணைத்திருந்தது.
காதல் என்ற வார்த்தை, வார்த்தையல்ல வாழ்க்கை வாழ தொடங்கி இருந்தனர் இருவரும் ஒருவராய்.
இன்பம் சொட்டும் நாட்களை திகட்ட திகட்ட அனுபவித்து கழித்தவன், அன்றைய விடுமுறை நாளை கொண்டாடவென தூர பயணத்திற்கு அவளை இழுத்து வந்திருந்தான்.
“போ விபு, எனக்கு தூக்கம் தூக்கமா வருது, நான் இப்படியே தூங்கறேன்” காவ்யா சோர்ந்து அவன் தோள் சரிந்து கொண்டாள்.
“ஏய் தூங்கு மூஞ்சி, ஒழுங்கா இந்த டிரிப் என்ஜாய் பண்ணற” என்று மிரட்டலாக தன் தோளை சிலிப்பி விட்டபடி காரை செலுத்தினான்.
“நான் தூங்கு மூஞ்சியா? நைட் என்னை எத்தனை மணிக்கு தூங்க விட்டீங்க ஞாபகம் இருக்கா?” அவள் சண்டைக்கு நிற்க,
“பேபி, நானும் தானே விழிச்சிருந்தேன். இப்ப ஃபிரஷ்ஷா இல்ல, நீ மட்டும் ஏன் இப்படி தூங்கி வழியிற, சோ பேட்” வம்பு வளர்க்க, இவள் ஏகத்திற்கும் அவனை முறைத்து வைத்தாள்.
அவள் கண் கண்ணாடி வழி அவளின் முறைப்பு இவனுள் காதல் கூட்டியது. அவள் கன்னத்தில் அழுத்த முத்தமிட்டு, காரை முழு வேகத்தில் செலுத்தி, “ஹுர்ர்ரே… லவ் யூ பேபீ…” என்று உற்சாகம் பொங்க கத்தினான்.
அவன் ஆசைக்காக இவள் வீட்டிலும் கண்கண்ணாடி அணிந்து கொண்டாள். அவளுக்காக இவனும் தினமும் மதிய வேளையில் வீட்டிற்கு வந்து உண்பதை பழக்கப்படுத்திக் கொண்டான்.
சீண்டல், காதல், செல்ஃபி வம்புகள், அங்கங்கே இளைப்பாறல், என இனிமையாக நீண்டது அவர்கள் பயணம்… மாலையில் அந்த மோட்டலில் இருவரும் இறங்கும் வரை!
நாள் முழுவதுமான பயணத்தில் சோர்வாக நடந்து வந்தவளின் சோர்வையும் தாண்டிய பூரிப்பும் புன்னகையும் விபீஸ்வர் ஈந்தது என்று காவ்யா நிமிர, ஈந்தவனே அதை பரித்துக் கொண்டான்.
அங்கே விபீஸ்வர் வேறொரு நாகரீக பெண்ணின் அணைப்பில் இருந்தான்.
“மிஸ் யூ பேட்லி விபி…” அவளோ உருக, “மீ டூ பேப்!” இவன் பதில் இயல்பாக வந்து விழ, காவ்யாவிற்குள் புகை கிளம்பியது.
“ஓஹ் சோ ஸ்வீட் விபி” என்று அவள் மேலும் அவன் இதழ் நெருங்க, இவன் சட்டென திரும்பி அவளின் உதட்டு சாய முத்திரையை தன் கன்னத்தில் இட்டுக் கொண்டான்.
கண்களில் கனல் தெறிக்கவிட்டு வேகமாக திரும்பி செல்லும் காவ்யாவை கவனித்தும், இவளிடம் நிதானமாக அளாவிவிட்டு, கைகளில் சில திண்பண்டகள், பழச்சாறுகளோடு வந்து காரை உயர்பித்தான் விபீஸ்வர்.
வெடிக்க இருக்கும் எரிமலை போல பக்கத்தில் அமர்ந்திருந்தவளை அவன் சிறிதும் கண்டு கொள்ளாமல் காரை இயக்க, இவள் வெடித்து விட்டாள்.
“யார் அது?” குரல் சீறியது.
“எது?”
“யாரு அவ ன்னு கேட்டேன்?”
“யாருக்கு தெரியும்! மே பி அவளுக்கு என்னை தெரிஞ்சு இருக்கலாம்” என்றவனை அடிக்கவா கொல்லவா என்று பார்த்து வைத்தாள்.
“தெரியாதவ கூடவா கட்டிபுடிச்சு, முத்தம் வாங்கிட்டு வந்தீங்க?”
“ஈஸியா கிடைச்சது அக்ஸப்ட் பண்ணிட்டேன்” அவன் சுலபமாக சொல்ல, “காரை நிறுத்துங்க” என்றவள், “நான் அவ அளவு ஈஸி இல்ல, அவகூடவே போங்க” என்று இறங்கி சாலையில் வேகமாக நடந்து சென்றாள்.
அவளுக்கு உள்ளும் புறமும் கொதித்து பொங்கியது.
“ஹே சோடாபுட்டி, ரொம்ப கொதிக்காத வாடி” கேலி இழையோட அவள் வேகத்திற்கு காரை இயக்கியபடி விபீஸ்வர் அழைக்க,
“போடா நெட்ட குரங்கு, உனக்கு ஏத்த மொட்ட மரம் அவ தான் அங்கேயே போய் தொத்திக்க” காவ்யா கோபப் பேச்சில் இவன் வாய் பிளந்தது.
சில நாட்களாக அவனிடம் கூடியிருந்த நெருக்கம், உரிமையின் காரணமாக தடையற்று கணவனை வசைமழை பொழிந்து வைத்தாள்.
“நான்… குரங்கா!” என்று அவனும் இறங்கி வந்து முறைத்து நிற்க,
“இல்ல… நெட்ட குரங்கு! வெள்ளை குரங்கு! ஒருத்தி வந்து இளிச்ச உடனே வழிஞ்சிட்டு நிக்கிற, அதுவும் நான் பக்கத்தில இருக்கும் போதே…” அவளின் கோபம் எல்லைக் கடந்திருப்பதை உணர்ந்து கொண்டவன் தன் சீண்டலை கைவிட்டான்.
“நீ பக்கத்தில இருக்க தைரியத்தில தாண்டி கேர்லஸா இருந்தேன், இப்ப காட்ற கோபத்தை நீ அங்க காட்டி இருக்கணும், அவ முன்னாடி உரிமையா
என் பக்கத்துல வந்து நின்னிருந்தா, அவ விலகி போயிருப்பால்ல…” என்று விளக்கம் தந்தவன்,
“ப்ச் நீ இதான் சாக்குனு என்னை அம்போன்னு விட்டு வருவேன்னு நான் நினைக்கில பேபி, மாமன் பாவம்னு தோணலையா உனக்கு” என்று வம்பையும் சேர்த்து வளர்த்தான்.
இவள் தவறு புரிய சாந்தமானவள், “யாரு பாவம்? நீங்க!” என்று கண்களில் சிரித்து பார்வையில் மிரட்ட, இவன் கிறங்கி போனான்.
“பார்த்தே கொல்றடீ…” என்று அவளிடை அணைத்தவனை, “நடுரோட்டில போய்… கையெடு விபு” என்று தள்ளிவிட்டாள்.
சிரிப்பு பொங்க பின்னால் இரண்டடி நகர்ந்து சாலையில் நின்றபடி, “ஹே கட்டுபெட்டி, கடுப்படிக்காதடீ…” என்று குழைந்தவன் பார்வையில் இவளும் குழைந்த நொடியில் தான்… தவறான பாதையில் விபீஸ்வரை நோக்கி சீறிவரும் காரை பார்த்தவள் பயத்தின் விளிம்பு செயலாக, “விபூ…” அவன் கைப் பிடித்து இழுத்து விட்டாள்.
ஆனாலும் தாமதமாகி இருந்தது!
அவனை இழுத்த வேகத்தின் எதிர்வினையாக அவள் சாலைக்கு வந்திருக்க, காவ்யாவின் செயலை உணரும் முன்னே வீபீஸ்வர் தூக்கி எரியப்பட்டிருந்தான்!
வெற்று சாலையின் ஓரம் அவர்கள் பயணித்த கார் மட்டும் தனித்து நின்றிருக்க, இரத்த காயங்களின் வலியில், முணங்களோடு விபீஸ்வர் கண்திறந்தான்.
சற்று பொறுத்து எழுந்து அமர்ந்தவனுக்கு காவ்யா நினைவில் வர பதறியடித்து சுற்றும் தேட, சாலையின் எதிர்முனையில் இரத்த வெள்ளத்தில் பிடுங்கி எறிந்த கொடியாக அசைவற்று கிடந்தாள்.
இவனுக்கு குரல் எழும்பவில்லை. தடுமாறி எழுந்து நடக்க முயல, அவன் வலது கால் ஒத்துழைக்க மறுத்தது. வலியோடு ஒரு காலை ஊன்றி மறுகாலை இழுத்துக்கொண்டு அவளிடம் சென்று, தூக்கி கன்னம் தட்டி எழுப்ப முயன்றான். அவள் அசைவற்றிருக்க அவசரமாக உயிர் மூச்சை சோதிக்க, இவனுக்கு உயிர் மீண்டது. அவளுக்குள் உயிரோட்டம் மிச்சமிருந்தது.
அங்கே உதவிக்கு கூட வாகனமோ மனிதனோ கண்ணில் படவில்லை. தட்டு தடுமாறி தன் காரை இயக்கியவன், காவ்யாவை தூக்கி கிடத்திக் கொண்டு, அருகிருக்கும் மருத்துவமனை நோக்கி முழு வேகத்தில் செலுத்தினான். தன் வலியையும் பொருட்படுத்தாது.
வானில் சூரியன் அஸ்தமிக்கும் நேரம், அவர்கள் இன்ப வாழ்வும் அஸ்தமனமாகி கொண்டிருந்தது!
# # #
உயிர் தேடல் நீளும்…