Kadhal 15
Kadhal 15
யசோதா தன் கையில் இருந்த புகைப்படத்தையே வெறித்துப் பார்த்து கொண்டிருக்க அவரருகில் சித்தார்த், கண்ணன் மற்றும் கார்த்திக் கவலையுடன் முகம் வாட நின்று கொண்டிருந்தனர்.
“அண்ணா! அம்மா கிட்ட பேசுண்ணா!” கார்த்திக் சித்தார்த்தின் காதில் மெல்லிய குரலில் கூற தன் தம்பிகள் இருவரையும் ஒரு முறை திரும்பி பார்த்தவன் பின் யசோதாவின் அருகில் அமர்ந்து கொண்டு அவர் தோளில் தன் கையை வைத்தான்.
“அம்மா! என்னம்மா ஆச்சு?” சித்தார்த்தின் கேள்விக்கு யசோதாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை மாறாக அவர் கண்களில் இருந்து கண்ணீர் துளிகளே வந்து விழுந்தது.
“அம்மா!” யசோதாவின் கண்ணீரை தாளாமல் அவரது மூன்று புதல்வர்களும் பதட்டத்துடன் அவர் முன்னால் மண்டியிட்டு அமர்ந்து கொள்ள
அந்த புகைப்படத்தை சித்தார்த்தின் புறம் காட்டியவர்
“இ…இது உனக்கு எ…எப்படி சித்…சித்தார்த் கிடைத்தது?” கண்ணீரின் ஊடாக தடுமாற்றத்துடன் அவனைப் பார்த்து வினவினர்.
அவரது கையில் இருந்த புகைப்படத்தை வாங்கி பார்த்தவன்
‘இது நேற்று ராத்திரி ஸ்டேஷனில் பார்த்த போட்டோ தானே?’ என தன் மனதிற்குள் எண்ணிக் கொண்டே
“இது நேற்று ஸ்டேஷனில் என் மேஜையில் கிடந்த போட்டோ ம்மா யாரு? எப்போ? வைத்தாங்கன்னு தெரியல இன்னைக்கு தான் ஸ்டேஷனுக்கு போய் கேட்கலாம்னு இருந்தேன்” என்று கூற அவரோ அப்போதும் அந்த புகைப்படத்தையே பார்த்து கொண்டு இருந்தார்.
“ஏன் ம்மா? அந்த போட்டோவில் என்ன இருக்கு?” கண்ணன் கேள்வியாக தன் அன்னையை நோக்க
சித்தார்த்திடம் இருந்து அந்த புகைப்படத்தை வாங்கி அவர்கள் மூவரும் பார்க்கும் வகையில் காட்டியவர்
“இவங்க தான் உங்க அப்பாவோட தங்கச்சி சுந்தரி இது அவளோட வீட்டுக்காரர், இது அவ பொண்ணு” என்று சுட்டிக் காட்ட
“என்ன? அப்பாவோட தங்கச்சியா?”
“அப்பாவுக்கு தங்கச்சி இருக்கா?”
“எங்களுக்கு அத்தை வேற இருக்காங்களா?” சித்தார்த், கண்ணன் மற்றும் கார்த்திக் வெவ்வேறு விதமான கேள்விகளோடு தங்கள் அன்னையை நோக்கினர்.
“ஆமா உங்க அப்பாவுக்கு ஒரே ஒரு தங்கச்சி இருந்தா பேரு சுந்தரி நான் கல்யாணம் ஆகி வந்த புதிதில் அப்போ தான் சுந்தரி காலேஜ் போக ஆரம்பித்து இருந்தா அங்கே தான் உங்க மாமாவை பார்த்து பழகி ஒரு நாள் திடீர்னு இவரைத் தான் நான் காதலிக்கிறேன் கல்யாணம் பண்ணி வைங்கன்னு வந்து நின்னா உங்க அப்பாவுக்கு அது பிடிக்கல இத்தனை நாள் அப்பாவுக்கு அப்பாவாக, அம்மாவுக்கு அம்மாவாக இருந்து வளர்த்த அவர் பேச்சை கேட்கலன்னு அவர் அந்த காதலை ஏற்றுக்கல அதோடு விட்டு இருந்தாலும் பரவாயில்லை ஆனா உங்க அப்பா அவசர அவசரமாக சுந்தரிக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தாரு அதை பார்த்து சுந்தரி வீட்டை விட்டு அந்த பையனோட போயிட்டா உங்க அப்பாவுக்கு அதிலிருந்து சுந்தரி பற்றி பேச ஆரம்பித்தாலே கோபம் வரும் நானும் பல தடவை பேசி பார்த்தேன் அவர் காது கொடுக்கவே இல்லை அதற்கு அப்புறம் சித்தார்த், ஸ்ருதின்னு உங்க மேல என் கவனம் போயிடுச்சு
அப்படி இருக்கும் போது தான் ஒரு நாள் சுந்தரி கிட்ட இருந்து லெட்டர் வந்தது அவளுக்கு ஒரு பொண்ணு பிறந்து இருக்குன்னு சொல்லி உங்க அப்பா கிட்ட அந்த லெட்டரை காட்ட கிழித்து போட்டுட்டாரு அதற்கு அப்புறம் ஒவ்வொரு வருடமும் அவ விடாமல் அவ பொண்ணு பிறந்த நாளைக்கு அவங்க மூணு பேரும் சேர்ந்து எடுத்த போட்டோவை அனுப்பிட்டே இருப்பா நானும் அதை எல்லாம் பத்திரமாக எடுத்து வைத்துட்டே இருப்பேன் ஒரு நாள் உங்க அப்பா மனசு மாறும், சுந்தரி பண்ண தப்பை மறந்து ஏற்றுக் கொள்ளுவாருன்னு காத்துட்டே இருந்தேன் அந்த லெட்டர் வர ஆரம்பித்து எட்டு வருஷம் உங்க அப்பா மனசு மாறவே இல்லை”
“அதற்கு அப்புறம் அப்பா மாறுனாங்களா?” கண்ணன் ஆர்வத்துடன் யசோதாவைப் பார்த்து வினவ
அவனைப் பார்த்து மறுப்பாக தலை அசைத்தவர்
“சுந்தரியோட பொண்ணோட ஒன்பதாவது வருஷப் பிறந்த நாள் முடிந்து அவ கிட்ட இருந்து லெட்டர் வரும்னு காத்துட்டு இருந்தேன் எந்த தகவலும் வரல அதற்கு அப்புறம் தொடர்ந்து இரண்டு, மூணு வருஷம் அவ கிட்ட இருந்து எந்த தொடர்பும் வரல அவளே மனசு வெறுத்துப் போய் லெட்டர் போடுறதை விட்டுட்டான்னு நினைத்து நானும் அதற்கு அப்புறம் எதுவும் யோசிக்கல இப்போ இன்னைக்கு சித்தார்த் பாக்கெட்டில் இருந்து இந்த போட்டோவை பார்த்ததுமே பழசெல்லாம் ஞாபகம் வந்துடுச்சு” தன் கண்களை துடைத்து விட்டபடியே கூற
அவரது தோளில் கை போட்டு அவரை ஆதரவாக அணைத்து கொண்ட சித்தார்த்
“நீங்க கவலை பட வேண்டாம் ம்மா அவங்க இப்போதும்,எப்போதும் சந்தோசமாக தான் இருப்பாங்க அது சரி நீங்க ஏன் அவங்களுக்கு பதில் லெட்டர் போடல?” தன் மனதிற்குள் வெகு நேரமாக அரித்துக் கொண்டிருந்த கேள்வியைக் கேட்டான்.
“உங்க அப்பாவால் தான்!”
“அப்பாவா? அவர் என்ன பண்ணாரு?”
“லெட்டர் எல்லாம் வீட்டு அட்ரஸுக்கு தான் வரும் நான் காலையில் வேலைக்கு போனால் எல்லா லெட்டரும் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் அவரோட கடையில் தான் கொடுப்பாங்க நான் வேலை முடிந்து வந்து எல்லா லெட்டரையும் படித்து பார்க்கும் போது அவரும் வந்து இருப்பாரு நான் எல்லாம் படித்து முடிந்தற்கு அப்புறமாக அந்த லெட்டரை மட்டும் எடுத்துட்டு போய் குப்பையில் போட்டுடுவாரு”
“அப்பாவுக்கு அவ்வளவு கோபமா?”
“அது என்னவோ தெரியல சுந்தரி விஷயத்தில் மட்டும் அவ்வளவு கோபம்” தன் மனதிற்குள் வெகு நாட்களாக பூட்டி வைத்திருந்த விடயத்தை தன் பிள்ளைகளிடம் பகிர்ந்து கொண்டதால் என்னவோ யசோதா சற்று இயல்பாக பேச ஆரம்பித்து இருந்தார்.
“நீங்க எதற்கும் கவலை பட வேண்டாம் ம்மா இந்த போட்டோவை பற்றி எல்லாம் விசாரித்து இன்னைக்கு ராத்திரியே அத்தையை பற்றி முழு தகவலும் உங்க கிட்ட சொல்லுறேன் அப்படியே அவங்களை கூட்டிட்டு வந்து அப்பாவையும், அத்தையையும் பேச வைக்குறோம் சரியா?” யசோதாவின் கன்னத்தை பிடித்து ஆட்டிய படியே சித்தார்த் கேட்கவும்
அவன் கரத்தில் தன் கரத்தை வைத்து அழுத்தி கொடுத்தவர்
“அப்படி மட்டும் நடந்தால் எனக்கு வேற எதுவும் அவ்வளவு சந்தோசத்தை தராது” என்று கூற
கார்த்திக்கோ
“அப்போ அண்ணாவுக்கு கல்யாணம் நடந்தா அது சந்தோசம் இல்லையா ம்மா?” தன் அதி முக்கியமான சந்தேகத்தை கேட்க மறுபுறம் சித்தார்த் அவனை கொலைவெறியுடன் முறைத்து பார்த்து கொண்டு நின்றான்.
“என் பையன் கல்யாணம் பண்ணா எனக்கு சந்தோசம் இல்லாமல் இருக்குமா? ஆனா நம்ம குடும்பம் ஒண்ணு சேர்ந்தா இன்னும் சந்தோசமாக இருக்கும் அந்த இரண்டு நல்ல விஷயங்களும் ஒரே நேரத்தில் நடந்தால் எனக்கு அதை விட வேறு என்ன வேணும்?”
“சரி சரி! கார்த்திக் நீ காலேஜ் போக ரெடி ஆகு கண்ணா நீயும் போய் ஸ்கூலுக்கு ரெடி ஆகு அம்மா நான் போய் ரெடி ஆகிட்டு வர்றேன் சாப்பாட்டை எடுத்து வைங்க” பேச்சு தன் புறமாக திசை மாறுவதைப் பார்த்து சித்தார்த் அவசர அவசரமாக அங்கிருந்து விலகிச் செல்ல
அவனையே கவலையுடன் பார்த்து கொண்டிருந்த யசோதா
‘இந்தப் பையன் எப்போ தான் கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க போறானோ? கடவுளே! சீக்கிரம் அவன் மனசை மாற்றுப்பா’ ஏக்கம் நிறைந்த மனதுடன் கடவுளிடம் முறையிட்டு விட்டு தனது வேலைகளை கவனிக்கத் தொடங்கினார்.
வேகமாக குளித்து உடை மாற்றி விட்டு தயாராகி வந்த சித்தார்த் யசோதா தன் முகத்தையே ஏக்கமாக பார்த்து கொண்டிருப்பதை பார்த்தும், பார்க்காதது போல அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு தான் நேற்று ஸ்டேஷனில் இருந்து எடுத்து வந்த புகைப்படத்தையும் எடுத்துக்கொண்டு ஸ்டேஷனை நோக்கி புறப்பட்டான்.
தன் திருமணம் பற்றிய தன் அன்னையின் ஆசையை தான் தன்னால் நிறைவேற்ற முடியவில்லை குறைந்தபட்சம் அவரது இந்த ஆசையையாவது நிறைவேற்றி வைக்கலாம் என்ற எண்ணத்தோடு தன் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தவன் அங்கே வேலை பார்க்கும் சப் இன்ஸ்பெக்டர் கோபலனை தன் அறைக்கு வரும் படி உத்தரவிட்டு விட்டு தன்னறைக்குள் நுழைந்து கொண்டான்.
“குட் மார்னிங் ஸார்!” கோபலன் சித்தார்த்தைப் பார்த்து சல்யூட் வைக்க
“குட் மார்னிங்!” பதிலுக்கு அவரைப் பார்த்து புன்னகைத்து கொண்டவன்
தன் கையில் இருந்த புகைப்படத்தை அவரின் புறம் திருப்பி
“கோபாலன் இந்த போட்டோவை நேற்று நைட் தான் நான் என் டேபிளில் பார்த்தேன் இது யாரோடது?” என்று கேள்வியாக அவரை நோக்கினான்.
“போட்டோவா?” யோசனையோடு அந்த புகைப்படத்தை வாங்கி பார்த்தவர்
“நேற்று யாரும் இந்த போட்டோவை கொண்டு வரல ஸார் இன்பாக்ட் ஒரு இரண்டு, மூணு வாரமாக நம்ம ஸ்டேஷனுக்கு மிஸ்ஸிங் கேஸ் எதுவும் வரவும் இல்லை இது வேறு எங்கேயும் இருந்து தவறுதலாக உங்க மேஜைக்கு வந்ததோ தெரியல அதோடு இதை பார்த்தால் ஒரு பத்து, பதினைந்து வருடங்களுக்கு முதல் எடுத்த போட்டோ மாதிரி தான் இருக்கு” என்று கூற அவனும் சிறிது நேரம் யோசனையோடு அந்த புகைப்படத்தையே பார்த்து கொண்டு நின்றான்.
“சரி கோபாலன் நீங்க போங்க நான் பார்க்கிறேன்”
“ஓகே ஸார்!” மறுபடியும் அவனுக்கு சல்யூட் வைத்து விட்டு கோபாலன் சென்று விட அந்தப் புகைப்படத்தையே சிறு நேரம் முன்னும், பின்னும் புரட்டிப் பார்த்தவன் அதில் இருந்த சிறு பெண்ணை உற்றுப் பார்க்கலானான்.
‘இந்த முகம் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?’ சிறிது நேரம் தன்னறைக்குள் நடந்து கொண்டே யோசித்தவன்
‘ஒரு வேளை இது மேக்னா டைரியில் இருந்து விழுந்து இருக்குமோ?’ என்று எண்ணம் தோன்ற அந்த புகைப்படத்தை நன்றாக உற்றுப் பார்த்தான்.
அந்த சிறு பெண் சிறிது மேக்னாவின் சாயலில் இருப்பதை போல இருக்கவே அவசரமாக தனது கப்போர்டில் இருந்து அவள் கொடுத்த பெட்டியை திறந்தவன் அவளது டைரி ஒவ்வொன்றாக பிரித்து பார்க்க அதில் அந்த புகைப்படம் ஒட்டி இருந்ததைப் போன்றோ, இணைத்து வைக்கப்பட்டிருந்ததைப் போன்றோ எந்த தடயமும் இருக்கவில்லை.
‘எங்கே இருந்து இந்த போட்டோ வந்தது?’ சலிப்போடு தன் கையில் இருந்த புகைப்படத்தை மேஜை மீது போட்டவன் அதன் பிறகு தன் வேலைகளில் மூழ்கி போனான்.
இரவு ஒன்பது மணி அளவில் தன் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு வீட்டுக்கு செல்லலாம் என்று எண்ணி எழுந்து கொண்டவன் கண்களில் மேக்னா கொடுத்த டைரிகள் தென்படவே
‘அய்யோ! இதை மறக்க பார்த்தேனே!’ சிறிது தன்னை கடிந்து கொண்டவாறே அந்த டைரிகளை எல்லாம் தன் கையில் எடுத்துக் கொண்டு தன் வீட்டை நோக்கி புறப்பட்டான்.
வீட்டிற்கு வந்து அவசர அவசரமாக தன் வேலைகளை எல்லாம் முடித்தவன் தன்னறைக்குள் வந்து சாவகாசமாக அமர்ந்து கொண்டு தான் முதல் நாள் படித்து விட்டு பாதியில் வைத்த மேக்னாவின் டைரியை மீண்டும் தொடர்ந்து வாசிப்பதற்காக தன் கையில் எடுத்தான்.
**********************************************
மேக்னா தன் முன்னால் நின்ற நபரை பார்த்து அதிர்ச்சியாகி நிற்க அவளைப் பார்த்து அதிர்ச்சியாகி நின்ற தனபாலன் உடனே தன் முகத்தை சரி செய்து கொண்டு
“நீயா என் தம்பியையும், அவன் பிரண்ட்ஸையும் அடிச்ச?” அவள் முன்னால் வந்து நின்றவாறே கேட்கவும்
அவரது குரல் கேட்டு உடனே தன் முகத்தை சரி செய்து கொண்டவள்
“ஆமா ஆனா நான் அதை வேணும்னே ஒண்ணும் பண்ணல அந்த பசங்க ஒரு சின்ன பொண்ணு கிட்ட வம்பு பண்ண பார்த்தாங்க ஆரம்பித்தில் அது சரி இல்லைன்னு சொன்னேன் அவங்க கேட்கல என் மேலயே கை வைக்க வந்தாங்க அது தான் அடித்தேன் மற்றபடி எனக்கு அவங்களை அடிக்கணும்னு ஒண்ணும் ஆசை இல்லை நான் இங்கே வந்ததே நடந்ததை சொல்லி என் மேல நீங்க கொடுத்த கம்ப்ளெயிண்டை வாபஸ் வாங்க சொல்ல தான்” என்று கூற தனபாலனோ அவளை பார்த்து சத்தமிட்டு சிரிக்க தொடங்கினார்.
“எதற்கு இப்போ சிரிக்குறீங்க?” சற்று அதட்டலான தொனியில் மேக்னா கேட்கவும்
சட்டென்று தன் சிரிப்பை நிறுத்தி விட்டு முகம் இறுக அவளைப் பார்த்த தனபாலன்
“நீ வந்து ஒரு கதையை சொன்னதும் நான் கேஸை உடனே வாபஸ் வாங்கிடணுமா? சாதாரண பொம்பள நீ ஐந்து பசங்களைப் போட்டு அந்த அடி அடித்து எந்த வேலையும் செய்ய முடியாம ஹாஸ்பிடலில் படுக்க வைச்சுட்டு இங்கே வந்து கம்ப்ளெயிண்டை வாபஸ் வாங்க சொல்றியா? அந்த ராணி சொல்லாமல் கொள்ளாமல் தலை மறைவானதற்கும் சேர்த்து உன் மேல இன்னும் இரண்டு, மூணு கேஸ் போட்டாலும் என் ஆத்திரம் தீராது” என்று கூற அவளோ கண்கள் இரண்டும் சிவக்க அவரை முறைத்து பார்த்து கொண்டு நின்றாள்.
“பண்ணுறதையும் பண்ணிட்டு முறைக்குற நீ? அடிச்சேன்னா முகம் எல்லாம் நொறுங்கிடும்” அவளை நோக்கி தன் கையை ஓங்கிய படி தனபாலன் செல்ல போக
அத்தனை நேரமும் அமைதியாக அவர்கள் இருவரையும் பார்த்து கொண்டு நின்றவர்
“வேண்டாம் தனபாலன்” என்றவாறே அவரது கையை பிடித்து தடுத்து முன்னேறி செல்ல விடாமல் பிடித்துக் கொண்டார்.
“விடு சுதர்சன் இவளை சும்மா விடக்கூடாது பார்க்க அப்பாவி மாதிரி இருந்துட்டு என்ன வேலை பார்த்து இருக்கா இவ? என் தம்பி அங்கே ஹாஸ்பிடலில் உடம்பெல்லாம் கட்டு கட்டாக கட்டி படுத்து கிடக்குறான் அவனை நான் கூட அடித்தது இல்லை இவ எப்படி அடிக்கலாம்?”
“வேண்டாம் தனபாலன் விடு!” மேக்னாவைப் பார்த்து கொண்டே சுதர்சன் தனபாலனிடம் கூற அவளோ அவர்கள் இருவரையும் வெறித்துப் பார்த்து கொண்டு நின்றாள்.
“நான் இவ்வளவு சொல்லியும் அவ எப்படி முறைத்து பார்க்குறான்னு பாரு? இவளை!”
“தனபாலன் வேண்டாம்!”
“சுதர்சன் நீ ஏன் இவளுக்கு இவ்வளவு ஆதரவு கொடுக்குற? இவ அடித்தது நம்ம பசங்களை இவளை இப்படியே விட சொல்லுறியா?”
“ஆமா விடு அவ்வளவு தான்!”
“என்னடா சுதர்சன் இப்படி சொல்லிட்ட?” தனபாலன் அதிர்ச்சியாக சுதர்சனைப் பார்க்க அவரது காதில் மெல்லிய குரலில் ஏதோ கூறியவர் அவரிடம் மேக்னாவை ஜாடையாக காட்ட அவர் கூறியதைக் கேட்டு தனபாலனோ அதிர்ச்சியில் பேச வார்த்தைகளின்றி உறைந்து போய் நின்றார்.
சுதர்சன் தனபாலனிடம் என்ன கூறி இருக்க கூடும் என்று யூகித்துக் கொண்ட மேக்னா இதழில் உருவான ஒரு குறு நகையோடு அவர்கள் இருவரையும் பார்க்க அவர்கள் இருவரும் அடுத்து என்ன பேசுவது என்று புரியாமல் விழித்து கொண்டு நின்றனர்.
“என்ன கம்ப்ளெயிண்ட் வாபஸ் வாங்க முடியாதா? கம்ப்ளெயிண்டை அப்படியே வைத்து இருக்க போறீங்களா?” மேக்னா நக்கல் கலந்த தொனியில் தனபாலனைப் பார்த்து கேட்க அவரோ அவரையும் அறியாமல் இல்லை என்று தலை அசைத்தார்.
“ரொம்ப நன்றி!” புன்னகையுடன் அவர்கள் இருவரையும் பார்த்து கை கூப்பி வணங்கி விட்டு செல்ல போனவள்
“ஒரு நிமிஷம் நில்லும்மா!” என்ற தனபாலனின் குரலில் கேள்வியாக அவரைத் திரும்பி நோக்கினாள்.
“நான் கம்ப்ளெயிண்டை இப்போவே வாபஸ் வாங்குறேன் ஆனா அதற்கு முன்னாடி நீ ஒரு வேலை பண்ணணும்”
“எனக்கு அதற்கு எல்லாம் நேரம் இல்லை” முகத்தில் அடித்தாற் போல அவள் பதில் கூற
புன்னகையுடன் அவள் முன்னால் வந்து நின்றவர்
“இங்கே பாரு ம்மா..?”
“மேக்னா!”
“ஹான்! மேக்னா! சுதர்சனை எனக்கு ரொம்ப நாளாகவே தெரியும் அவனோட பழக்க வழக்கங்கள், குணம் எல்லாம் எனக்கு அத்துப்பிடி நான் கூட அவனை பல தடவை அவனோட ஒரு குணத்தை மாற்ற சொல்லி கேட்டேன் அவன் மாறல ஆனா இப்போ கொஞ்ச நாளா இது சுதர்சன் தானானு? நினைக்கிற அளவுக்கு ஆளு மாறிட்டான் என்ன விஷயம்னு கேட்ட நேரம் அவன் சொல்லல இன்னைக்கு என் தம்பியை ஒரு பொண்ணு அடிச்சுட்டான்னு பேசும் போது தான் அவன் அவனுக்கு நடந்ததை எல்லாம் சொன்னான் இப்படி ஒரு பொண்ணா? என்று நான் கூட ஆச்சரியப் பட்டேன் ஆனா அந்த பொண்ணு நீ தான்னு தெரிந்ததும் எனக்கு அவ்வளவு அதிர்ச்சி உன்னை மாதிரி ஒரு பொண்ணு என் தொழிலுக்கு எல்லாம் பக்க பலமாக இருந்தா எப்படி இருக்கும்?”
“அதற்கு?” மேக்னா அவர் கூறியதைக் கேட்டு பாதி புரிந்தும், புரியாமலும் அவரைப் பார்க்க
புன்னகையுடன் அவளருகில் வந்தவர்
“உன் கிட்ட நல்ல படிப்பு இருக்கு, திறமை இருக்கு அது எல்லாவற்றையும் விட தைரியம் கொட்டிக் கிடக்கு உனக்கு இப்போ வேலையும் இல்லை அதனால நான் உனக்கு வேலை தரலாம்னு இருக்கேன்” என்று கூற
அவளோ
“வேலையா?” என அதிர்ச்சியாக அவரை திரும்பி பார்த்தாள்.
“என்னடா தம்பியை அடிச்சேன்னு சொல்லி இவ்வளவு நேரமும் கத்திட்டு இருந்தவன் இப்போ வேலை தர்றேன்னு சொல்லுறான்னு ஆச்சரியமாக இருக்கா?”
“………..”
“ஒரு தனியாளாக நின்னு இவ்வளவு வேலை நீ பார்த்து இருக்க அப்படி இருக்கும் போது நான் உன் மேல இன்னும் கோபம் காட்டுனா சுதர்சனுக்கும், என் தம்பிக்கும் நடந்த அதே நிலை எனக்கும் வராதுன்னு என்ன நிச்சயம்?”
“ஓஹ்! அப்போ உங்களை காப்பாற்ற லஞ்சம் இந்த வேலையா?”
“இருக்கலாம்”
“எனக்கு வேலை எல்லாம் வேண்டாம் அதுவும் உங்களுக்கு கீழே வேலை எனக்கு வேண்டவே வேண்டாம்”
“உனக்கு இந்த இடத்தை விட்டால் வேறு எங்கேயும் வேலை கிடைக்காது அது உனக்கு தெரியுமா?”
“என்ன உளறல் இது?”
“உளறல் இல்லை ம்மா இது தான் நிஜம் இங்கே பணம் இல்லாமல் எதுவும் நடக்காது ஆகக் குறைந்தது ஒரு கிளார்க் வேலைக்கு நீ போறதுனாலும் குறைந்தது ஐம்பதாயிரம் பணம் கொடுக்கணும் உன்னால அது முடியுமா? பணத்தை விடு அரசியல் சப்போர்ட் ரொம்ப முக்கியம் என்னை, சுதர்சனைப் பகைத்துக் கொண்ட மாதிரி எல்லோரையும் உன்னால சமாளிக்க முடியுமா?”
“………….”
“அப்படியே உனக்கு பத்து பைசா செலவில்லாமல் வேலை கிடைத்தாலும் உன்னை பற்றி ஒரு விஷயம் நீ இதற்கு முதல் செய்த வேலை எல்லாம் தவறுதலாக உன் முதலாளிக்கு தெரிந்தால் உனக்கு வேலை இருக்குமா? வேறு யாரும் சொல்லாவிட்டாலும் உன் கோபமே உன் வேலையை உன் கிட்ட இருந்து பறிச்சுடுமே!” தனபாலன் கூறியதை எல்லாம் கேட்டு மேக்னாவின் மனதோ சிந்தனையில் ஆழ்ந்தது.
‘இவர் சொல்வது உண்மை தானே? படிப்பு இருந்தும், நல்ல திறமை இருந்தும் எனக்கு இது நாள் வரை வேலை கிடைக்காமல் போக காரணம் பணம் தானே?’
‘அது மட்டுமா ஒரு சில இடங்களில் நான் கோபத்தை காட்டியதால் தானே என்னை அந்த இடங்களில் இருந்து விரட்டி விட்டார்கள்? ஆனால் அதற்காக இவன் கீழ் வேலை செய்வதா? இவனை கொன்றால் கூட பரவாயில்லை என்று நினைத்து விட்டு இப்போது வேலை என்றதும் அதை மறந்து விடுவதா?’ மனதிற்குள் தனக்குத்தானே மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டவள் ஒரு சரியான முடிவுக்கு வர முடியாமல் குழப்பத்துடன் நின்று கொண்டிருந்தாள்.
‘இவனை விட்டு விலகி இருந்து இவனை பழி வாங்குவதை விட இவனோடு கூட்டணியாக இருந்து கொண்டே ஒரு நாள் மொத்தமாக இவனது சாம்ராஜ்யத்தை அழித்தால்?’ மனதிற்குள் ஒரு ஓரத்தில் பதிந்து இருந்த வன்மம் அவளை தூண்ட இத்தனை நாட்களாக அவள் மனதில் இருந்த நல் எண்ணங்களும், நற்சிந்தனைகளும் பின்னோக்கி தள்ளப்பட்டது.
‘வாழ்க்கை என்னும் பகடை ஆட்டத்தில் நான் வைத்த முதல் அடி தனபாலனின் கீழ் வேலை செய்ய சம்மதம் சொன்னது!’ மேக்னாவின் கையெழுத்தில் இருந்த அந்த வசனத்தை படித்து பார்த்த சித்தார்த்தின் கண்களோ அச்சத்துடன் சுருங்க
மனமோ
‘வாழ்க்கை என்னும் பகடை ஆட்டத்தில் சிக்கியது மேக்னா அல்ல! நீ தான் சித்தார்த்!’ என அவனைப் பார்த்து கை கொட்டி சிரித்தது……..