anegan 3

கனவு – 3

‘அய்யய்யோ.. அம்மாவுக்கு தெரிஞ்சவருனு தானே இவர தேடி வந்தோம்.. இவரு என்னனா வேற யாருக்கிட்டயோ.. வேற யாரா இருந்தா கூட பரவாயில்லை.. இந்த ஆடம்பர ஆசாமிகிட்ட மாட்டி விட்டுட்டு போய்டாரே..’ என தனக்குள் தயங்கிக் கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா.

அந்த நேரத்திற்குள் கையில் வைத்திருந்த கோப்பினை முழுவதுமாக படித்து முடித்துவிட்ட அனேகன் ஆஷ்ரிதாவை நோக்கி, “லுக் மிஸ். ஆஷ்ரிதா.. எனக்கு பண்ட்சுவாலிட்டி ரொம்ப முக்கியம்.. உங்களுக்காக என் நேரத்தை என்னால வேஸ்ட் பண்ண முடியாது.. சோ இனி எப்போ மீட் பண்ணுறதா இருந்தாலும் இத நியாபகம் வச்சிக்கோங்க..” என்றான் ஆடம்பர அனேகன்.

“சரிங்க சார்.. என் தங்கச்சி-ய குணப்படுத்திடலாம்-ல..?” – அவ்வளவு நேரம் வளர்த்த வம்பை மறந்து தங்கையின் மேல் அவளுக்கிருந்த பாசம் முன் நின்று கேட்டது.

“ஐ அம் ஹியர் ஃபார் ஹெர்..” என்றான் மிகவும் தீர்க்கமாக.

“தேங்க் யூ சார்.. அவள நீங்க சரி பண்ணீட்டீங்கனா நீங்க என்ன கேட்டாலும் நான் செய்யுறேன்..” என்றவளை காட்டமான ஒரு பார்வை பார்த்தவன் “இட்ஸ் மை டியூடி.. தட்ஸ் ஆல்.. அளவுக்கு அதிகமா பேச வேணாம்..” என்று கூறியவனின் வார்த்தைகளின் வேகம் அவளை அடுத்து பேச வைக்கவில்லை.

‘இப்ப நான் என்ன சொன்னேன் –னு இப்படி பச்ச மிளகாவ தின்ன மாதிரி பேசிக்கிட்டு இருக்கான்..?’ என்று நினைக்க மட்டுமே வைத்தது.

எழுந்து தனது முழு உயரத்திற்கும் நின்றவன்,  அவனது கூலிங் கிளாலை எடுத்து சட்டையில் மாட்டிக் கொண்டு, பேண்ட் பாக்கெட்டினில் இருந்த கார் சாவியை கையில் எடுத்தவாறு வாசலை நோக்கி கம்பீரமாய் நடந்தான். அந்த வாசல் கதவை அனேகன் அடைவதற்கும் க்ளீனிக்கின் கம்பவுண்டர் அந்த கதவை திறப்பதற்கும் சரியாக இருந்தது.

“சார்.. டாக்டர் பிரபாகரன் அனுப்பிச்சாங்க..” என்ற அந்த கம்பவுண்டரிடம் கார் சாவியை பொருத்தியிருந்த தனது வலது கையின் ஆள்காட்டி விரலால் பின்னால் இருந்த மேஜையை திரும்பாமலேயே சுட்டிக்காட்டி விட்டு வெளியேறினான் அனேகன்.

அந்த கம்பவுண்டர் மேஜை மேல் அடுக்கப்பட்டிருந்த அனைத்து கோப்புகளையும் எடுத்துக் கொண்டு அவன் பின்னே ஓடிச் சென்றான்.

இவை அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆஷ்ரிதா “இவனுக்கும் நமக்கும் செட் ஆகுமா..? நார்மலாவே இல்லையே இவன்.. இவன் எப்படி அப்னார்மல் பேஷண்ட் எல்லாம் பார்ப்பான்.. ?” என யோசித்தவள் ‘சரி வீட்டுக்கு கிளம்புவோம் முதல்ல..’ என க்ளீனிக்கை விட்டு வெளியேறி வீட்டை வந்தடைந்தாள்.

வீட்டில் மயக்கத்தில் இருந்த அம்மு எழுந்து “பொன்னம்மா….” என்றாள்.

அம்ரிதா தற்பொழுது என்ன நிலையில் இருக்கிறாள் என்பது அறியாது சிறிது பதட்டத்துடன் அந்த அறைக்கு சென்றார் பொன்னம்மா.

“என்ன பொன்னம்மா.. இவ்வளவு நேரமாச்சு.. என்ன எழுப்பியிருக்கலாம்ல.. இப்படி என்ன தூங்க விட்டுட்டியே..” என்றாள்.

“இல்லமா.. நேத்து உங்களுக்கு ஆபீஸ் வேலை அதிகமா இருந்துதுல.. இன்னைக்கு அசந்து தூங்கிட்டு இருந்தீங்க.. அதான் எழுப்ப வேணாமேனு விட்டுட்டேன்..” என்றாள் பொன்னம்மா.

“இப்ப எல்லாம் எப்ப பார்த்தாலும் தூங்கிக்கிட்டே இருக்கேன் பொன்னம்மா.. என் நேரம் எல்லாம் தூக்கத்துல தான் போகுது.. ஒரு நாள் முழுக்க என்ன செஞ்சனு யோசிச்சா ஒன்னும் இல்லை.. தூங்கினது மட்டும் தான் நியாபகத்துல இருக்கு..” என்று பாவமாய் கூறிய அம்முவிடம் என்ன கூறுவதென்று தெரியாமல் நின்றுக்கொண்டிருந்தாள் பொன்னம்மா.

அந்த சமயம் உள்ளே நுழைந்த அச்சு, “என்ன டி மகாராணி.. எழுந்தாச்சா..” என்றபடி கையில் இருந்த பைகளை டயனிங் டேபிள் மேல் வைத்துவிட்டு அமர்ந்தாள்.

“மேடம் எங்க போய்ட்டு வர்றீங்க என்ன விட்டுட்டு..?” என்று கேட்டபடி அச்சுவின் அருகில் வந்தாள் அம்மு.

“அம்மாவோட போட்டோ பழசாகிடுச்சுனு புது போட்டோக்கு ஆர்டர் கொடுத்திருந்தோம்-ல.. அத போய் வாங்கிட்டு வந்தேன்.. பாரு நல்லா இருக்கானு..” என அம்முவிடம் கொடுத்தாள் அச்சு.

“ரொம்ப அழகா இருக்கு அச்சு.. அம்மா முகத்துல இருக்குற சிரிப்ப பாரேன்.. நான் கடைசியா அம்மா முகத்தை இந்த சிரிப்புல தான் பார்த்தேன்.. இந்த சிரிப்ப நான் பார்த்துட்டு இருக்கும்போதே கார் லைட் எல்லாம் ஆஃப் ஆகிடுச்சு.. கூடவே அம்மாவும்….” என்றவள் அதற்கு மேல் பேச முடியாள் அழுகையை தொண்டைக்குள் அடக்கினாள். கண்களில் வடிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு வலிகள் சுமந்த சிரிப்பு ஒன்றை தன் முகத்தில் அப்பியவள்

“ஆனா அம்மா கிரேட்ல அச்சு மா.. அந்த விஷ்வனாதன் ஏமாத்திட்டான்னு தெரிஞ்ச அப்புறமா உடைஞ்சு ஒரு மூலையில முடங்கிடாம, அவன நம்ம வாழ்க்கையில இருந்து அடிச்சு தொரத்திட்டு தைரியமா இந்த உலகத்தை ஃபேஸ் பண்ணாங்க.. யசோதாவோட இரத்தம் நம்ம உடம்புல ஓடுது.. அவ வருத்தப்படுற மாதிரி நாம என்னைக்கும் நடந்துக்கக் கூடாது டா அச்சு..” என்றாள் வீர மங்கை யசோதாவின் விராங்கனை மகளான அம்ரிதா.

அம்ரிதா பேசிக்கொண்டிருப்பதை அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்த ஆஷ்ரிதா மற்றும் பொன்னம்மா கண்களில் கண்ணீர் தாரை தாரையாய் கொட்டிக்கொண்டிருந்தது. அதற்கு காரணம் யசோதாவின் முந்தைய நினைவுகளா இல்லை அம்ரிதாவின் தற்போதைய நிலையா என அவர்களாலேயே கண்டுக்கொள்ள இயலவில்லை. ஆனால் ஏதோ ஒருவித கனம் அவ்விருவர் மனதையும் பிசைந்தெடுக்க, டையனிங் டேபிள் மேல் இருந்த அம்ரிதாவின் கைப்பேசி அலறியது. அதனை எடுத்த அம்ரிதா திரையில் வரும் ‘காண்டாமிருகம் காலிங்’ எனும் வாசகத்தை பார்த்ததும் “மூக்கு வேர்த்துடுச்சா இவனுக்கு” என கூறிவிட்டு கைபேசியில் பேசத் தொடங்கினாள்.

“குட் மார்னிங் சார்..” (மைண்டு வாய்ஸ்: சொல்லி தொல டா)

“இட்ஸ் குட் ஆஃப்டர்னூன் ஆம்ரிதா” – குரலில் காரம் கொஞ்சம் தூக்கலாகத்தான் இருந்தது.

“ஓ.. சாரி சார்..” (மைண்டு வாய்ஸ்: இத சொல்லவாடா கால் பண்ண..)

“வாட் சாரி..? நான் கேட்ட டீடெயில்ஸ் என்ன ஆச்சு..? இன்னைக்கு கண்டிப்பா சப்மிட் பண்ணிடுவேன்னு சொல்லி நேத்து லீவ் எல்லாம் எடுத்துக்கிட்டு போன..? வீட்டுல உட்கார்ந்து வேலை செய்யாம ஊரு சுத்த போயிட்டியா என்ன..?”

கடுப்பில் தன் பற்களைக் கடித்துக் கொண்ட அம்ரிதா “கம்மிங் சார்.. இன்னும் ஹாஃப் அன் அவர்ல உங்க முன்னாடி ஃபைல் இருக்கும்..” என்று அழுத்தம் திருத்தமாக கூறினாள்.

“இட்ஸ் குட் ஃபார் யூ..” என்றவன் அழைப்பை துண்டித்தான்.

“ஏன் டி.. இப்படி ஒரு வேலை வேணுமா உனக்கு..? நம்ம எஸ்டேட்ல எத்தனையோ ஆட்களுக்கு நாம வேலை கொடுத்துக்கிட்டு இருக்கோம்.. அம்மா பேருல ஆரம்பிச்சிருக்கற ஸ்கூல் இருக்கு.. இங்க வந்து ராணி மாதிரி உட்காராம எவன்கிட்டயோ போய் இப்படி கைக்கட்டி அடிபட்டு ஒரு வேலை பார்க்கனுமா அம்மு..?” – தங்கை படும் கஷ்டம் காண முடியாமல் ஆதங்கத்தில் கூச்சலிட்டாள் ஆஷ்ரிதா.

“அச்சு.. நான் ஏன் இந்த வேலை-ல ஜாயிண்ட் செஞ்சேன்னு உனக்கு தெரியாதா..?” என்ற அம்ரிதாவின் ஒற்றை கேள்வி அச்சுவை வாயடைக்க வைத்தது.

“எப்பவும் இதையே சொல்லு.. என் பேச்சை எங்க கேட்கப்போற..” என்றவள் தங்கள் அறைக்குள் தஞ்சமானாள்.

“பொன்னம்மா.. எனக்கு சாப்பாட மட்டும் கட்டி வை.. நான் போயிட்டு வந்திடுறேன்..” என்றவள் தான் சொன்னபடியே அரைமணி நேரத்தில் ஆஃபீஸை அடைந்தாள். மேனேஜர் சொன்ன ஃபைலுடன் அவரது அறையை அடைந்தவள் கதவினை காற்று செல்லும் அளவு திறந்துக்கொண்டு

“எக்ஸ்க்யூஸ் மீ சார்” என்றாள்.

“கம் இன்..” என்றார் மேனேஜர் மோகன்.

“ஹீயர் இஸ் யுவர் ஃபைல் சார்..” என கோப்பினை அவனது மேஜையில் வைத்தாள் அம்ரிதா.

மோகன் தனது கைக்கடிகாரத்தையும் அவளையும் ஒருமுறை பார்த்துவிட்டு “குட்” என்றான். “அதை நீயே வச்சிக்கோ..” என்று தன் மனதினுள் எண்ணியவள் “அடுத்த ஸ்டெப் என்ன சார்..?” என கேட்டாள்.

“லெக்சர்..” என்றான் கேலி புன்னகையுடன்.

“வாட் சார்..?” என்றாள் அம்ரிதா.

“டியூட்டிக்கு ஒழுங்கா எப்படி வரனும், வேலை எப்படி ஒழுங்கா செய்யனும், லீவ் போடாம எப்படி இருக்கனும்.. இதை எல்லாம் உனக்கு லெக்சர் கொடுக்க ஏற்பாடு பண்ணியிருக்கேன்..” – மீண்டும் ஒரு நக்கல் சிரிப்புடன் கூறினான் மோகன்.

‘இவன் மூஞ்ச நார்மலாவே பார்க்க்க முடியாது..இதுல இந்த சிரிப்பு… யப்பாஆஆஆ… சகிக்கல இறைவா..’ என்று மனதினுள் எண்ணியவள் அவனை ஒருவித அங்கலாய்ப்புடன் பார்த்தாள்.

“என்ன முழிக்கற..? அதுக்கு தான் எனக்கு நேரம்னு நினைச்சியா..? உன்ன தூக்கிட்டு வேற ஆள போட எனக்கு ரொம்ப நேரம் ஆகாது.. மைண்ட் இட்.. இதோ இதுதான் அடுத்த ப்ளான்..” என்றவன் வேறொரு கோப்பினை எடுத்து மேஜையில் வைத்தான். அதன் நீல நிற அட்டையை பார்த்தவளுக்கு சிந்தையில் என்ன தோன்றியதோ தெரியவில்லை அவ்வளவு நேரம் இருந்த அங்கலாய்ப்பான முக பாவணை மாறி புதியதோர் முகவரிக்கண்டது.

“ஹலோ.. என்ன இளிச்சிக்கிட்டு நிக்குற..? ஒரு வேலையை செய்து முடிக்க எக்ஸ்ட்ரா லீவ் வேற கேக்குது..கெட் அவுட் நான்சென்ஸ்..” என்ற மோகனின் அதிரும் பேச்சில் எரிச்சல் மூண்டவள் விரைந்து தனது கேபினுக்குள் நுழைந்தாள்.

“அய்யோ கடவுளே.. ஏன் தான் நேத்து லீவ் போட்டேனோ.. இந்த மேனேஜர் தொல்லை தாங்க முடியலை..” என்று முணுங்கியபடி தனது இருக்கையில் வந்து அமர்ந்தாள் அம்ரிதா.

அமர்ந்த இரண்டாம் நிமிடம் அத்தனை புத்துணர்வான வாசம் அவள் மனதினை தொட்டது. அவளுக்கு நிச்சயமாக தெரியும் அந்த வாசம் அவளது நாசியின் வழியே உணரப்படவில்லை. ஆனால் மூச்சுக்குழலெங்கும் பரவி தன்னை மூர்ச்சையாக்கும் அந்த புதுவித புத்துணர்வை அவள் ரசித்த வண்ணமே தனக்குள் ஆராய்ந்துக் கொண்டிருந்தாள்.

அந்த நேரம் படாரென திறக்கப்பட்ட அவளது கேபின் கதவின் சத்தம் அவள் நிலைக்கொண்டிருந்த பரவச சுகத்தை கலைத்திட, கடும் கோபம் கொண்டவளாய் எழுந்து நின்று

“அறிவு இருக்கா ப்ளெடி ஃபூல்..” என்று கத்தி முடித்த பின்பு தான் கவனித்தாள் அங்கு நின்றுக்கொண்டிருந்தது சாட்சாத் அவளது மேனேஜர் மோகன் தான்.

“வாட் ..? யஸ்.. ஐ அம் அ ஃபூல்.. உன்ன போய் இங்க வேலைக்கு வச்சேன் –ல.. நான் ஃபூல் தான்..” – கொந்தளிப்புடன் மேனேஜர் கேட்க

“அ.. ஆ.. ஐ அம் சாரி சார்.. ஆக்ட்சுவலி..” – திக்கித்திணறிக் கொண்டிருந்தாள் அம்ரிதா.

“இந்த ஃபைல் –அ எடுத்துக்கிட்டு போ –னு அவ்வளவு நேரம் லெக்சர் கொடுத்துருக்கேன்.. எடுக்காம இங்க வந்து நின்னு கனவு கண்டுக்கிட்டு இருக்கியா..? வேலை செய்ய இஷ்டம் இருந்தா இருக்கலாம்.. அதர்வைஸ் லீவ் திஸ் ஆஃபீஸ் ரைட் நவ்..” என்றபடி கோப்பினை அம்ரிதாவின் முன் வீசிவிட்டு சென்றார் மோகன்.

“ஓ.. ஷிட்.. வாட் தி ஹெல் ஹப்பனிங் ஹியர்..?! கம் ஆன் அம்மு.. ச்சில்..” என தன்னை தானே சமாதானப்படுத்தியவளை விட்டு அப்போதும் நீங்காது நிறைந்திருந்தது அந்த ஆத்மார்த்தமான வாசம்.

வேலையை கவனிப்பதா இல்லையேல் இந்த வாசத்துடன் பயணிப்பதா என அவள் மனம் சிதறிக்கொண்டிருந்த நேரம் மீண்டும் கேட்டது கதவு தட்டப்படும் சத்தம்.

‘போன காண்டாமிருகம் திரும்ப வந்திருச்சோ..?!’ என்ற பயத்துடன் “யஸ் கம் இன்..” என்றவளது பார்வையில் பிரம்மிப்பு ஆட்சி செய்யும் வண்ணம் பிரகாசமான உருவமாய் தேஜஸ் கலந்த சிரிப்புடன் வந்து நின்றான் அனேகன். ஆம்.. அவளது அனேகன். அவளுக்கு வேண்டுமானால் அவனை தெரியாதிருக்கலாம். ஆனால் தன்னவளுக்காகவே தவம் செய்து சர்வ வல்லமைகளையும் பெற்று வந்த அவன் அறியமாட்டானா அவளை..?

அவனது முகம் வெளிக்கொணரும் ஈர்ப்பில் இருந்து தன் பார்வையை மிகவும் கஷ்டப்பட்டு விடுவித்தாள் அம்ரிதா. ஆனால் அதனை மீண்டும் தன் வசமாக்க ஒரு சிறு புன்னகை போதுமானதாய் இருந்தது அனேகனுக்கு.

“ஹலோ பேபி..” என்றவன் தன் கைகளில் வைத்திருந்த பூங்கொத்தினை அவளிடம் நீட்டினான். அவளது கைகள் தன்னை அறியாமலேயே அதனை வாங்கிக்கொண்டது.

தற்பொழுது தன் கைகள் வெற்று மனையாக இருப்பதை விரும்பாத அனேகன் அம்ரிதாவின் அருகில் வந்தான். தன் கரங்கள் கொண்டு தன்னவளின் மெல்லிடையை சுற்றி அணைத்தான். தன்னோடு மேலும் இறுக்கினான்.

ஆனால் அவளோ அவனை கண்ட முதல் பார்வையின் பிரம்மிப்பு மாறாமல், நடப்பது என்னவென்றே உணராமல் சிலையாய் அவனது விழிகளை மட்டுமே நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள்.

அவள் உடம்பின் உறுப்புகள் அனைத்தும் அவனது அணைப்பினால் அசையாதிருந்தது. அசைவு பெற அனுமதி வாங்கியிருந்தது அவளது கருவிழிகள் மட்டுமே. அதுவும் தன்னவன் விழிகள் செல்லும் இடத்திற்கெல்லாம் அவன் பின்னே மட்டுமே செல்வேன் என அடம் பிடித்திருந்தது.

அது சரி.. அவன்தான் வந்த நொடிப் பொழுதினிலேயே சிறிதும் தாமதிக்காமல் அவள் பார்வையை சிறை வைத்து விட்டானே..! பிறகு எங்கணம் கன்னியவள் தன் கட்டளையை கட்டவிழ்க்க முடியும்..?

கட்டழகியின் கர்வம் தன்னை கண்டுக்கொள்ளும் முன் தேனிதழ் வண்ணமாய் பூவிதழ் சின்னமாய் விளங்கிய அவளது சிற்றிதழுக்கு கச்சிதமான இதழ் முத்தம் ஒன்றை பரிசளித்து தன் காதலின் ஆழம் அதனை அவள் அடிமனதினுள் பதியும் வண்ணம் அழுத்தமான முத்திரையாக்கினான்.

அவனது இதழ் சூட்டினால் சற்றே சிலிர்த்துக் கொண்டவள் திடுமென தன்னிலைத் திரும்பினாள். நின்ற இடத்தில் இருந்தே ஒரு வித படபடப்புடன் தன் அறையை கண்களால் அங்கும் இங்கும் அளந்துப்பார்த்தாள்.

“ச்சீசீ.. என்ன ஆச்சு இப்ப எனக்கு..? மேனேஜர் தானே உள்ள வந்தான்..? இல்லை வேற யாரும் வந்தாங்களா..? இதோ ஃபைல் கிடக்குதே.. அவன்தான வந்து வீசிட்டு போனான்.. அப்புறம் என்ன கருமம் டா இந்த யோசனை..” என்று தன் தலையில் அடித்துக் கொண்டவள் மேனேஜரால் தரையில் வீசி எறியப்பட்ட கோப்பினை எடுக்க முனைந்தாள். அப்போதுதான் தன் கையில் தான் பிடித்திருக்கும் பூங்கொத்தினை உணர்ந்தாள்.

“வாட்..? சீரியஸ்லீ..? இந்த பொக்கே எப்படி நம்ம கையில..? அப்படீன்னா….” என்று யோசித்தவள் சற்றுமுன் என்ன நடந்ததென்று தன் மனதிற்குள் ரீவைண்ட் செய்து பார்த்து பதில் ஏதும் கிடைக்கப்பெறாமல் தோற்றாள்.

“கடவுளே.. என்ன இது.. ஏன் எனக்கு எதுவும் நியாபகத்துக்கு வர மாட்டேங்குது..? இப்ப என்ன நடந்துது..? எப்படி இந்த பொக்கே என் கையில..? எனக்கு ஏன் ஏதோ வித்யாசமான உணர்வு ஒன்னு வந்துது..? இதுவரை இப்படி இருந்ததில்லையே..” என சிந்தனை குதிரையை ஓடவிட்டவள் மனது கேட்காமல் அச்சுவிற்கு கால் செய்வதற்காக தனது கைபேசியை எடுக்க அச்சுவே அழைப்பில் வந்தாள்.

“ஹலோ.. இப்ப தான் டி உனக்கு கால் பண்ண வந்தேன்..” – அம்மு தொடங்க

“தெரியும்.. தெரியும்.. என்கிட்ட சொல்லாம மேடம் புறப்பட்டு போயாச்சு.. நான் கோபமா இருப்பேன்னு சமாதானப்படுத்த நீ கால் பண்ணுவனு தெரியும்.. அதான் நானே கால் பண்ணேன்..” என்ற அச்சுவிடம் தற்பொழுது நடந்த எதையும் சொல்ல வேண்டாமென உள்மனது கூற அதற்கு ஆமோதித்தவள்

“ஆமா டி அச்சு.. அதுக்குதான் கால் பண்ண வந்தேன்..” என்று முதல்முறையாக தன் சரிபாதியிடம் பொய் கூறினாள் அம்ரிதா.

“ஒன்னுமில்லை.. டென்ஷன் இல்லாம வேலைய பாரு.. சாப்பிட மறந்திடாத.. அப்படியே உன் போன்ல காண்டாமிருகம்-னு இருக்குறத மாத்தி அந்த சிடிமூஞ்சியோட பேர போட்டு பதிஞ்சி வை.. என்னைக்காவது பார்த்துத்தொலஞ்சிட்ட அதுக்கு வேற வசைப் பாடப்போறான்..” என்ற ஆஷ்ரிதா தொலைபேசி அழைப்பைத் துண்டிக்க, சற்று நேரத்திற்கு முன் தனக்கு என்ன நடந்தது என்று ஆராயத்துணிந்த அம்ரிதா பூச்செண்டுக்காரனை பற்றி யோசிக்களானாள்; தன் தங்கையை எவ்வாறு மீட்டெடுத்து இன்பம் காணுவேன் என்ற எண்ணத்தில் ஆஷ்ரிதா ஆடம்பரக்காரனை பற்றி யோசிக்களானாள். இருவர் சிந்தையிலும் வெவ்வேறு சித்திரமாய் உயிர்த்தெழுந்த அனேகனோ ‘மை கேம் ஸ்டாட்ஸ்’ என மந்திர புன்னகையுடன் அம்ரிதாவை அவள் அறையின் ஜன்னல் வழியே நோட்டமிட்டுக் கொண்டிருந்தான்.

(களவாடுவான்)