MT 13

                         மாடிவீடு – 13

“அப்பா நான் வயலுக்கு போயிட்டு வாறேன்” 

காலையில் எழுந்து வேகமாக கிளம்பிய அமுதன் தன் தந்தை முன் வந்து நின்றான்.

அவனை ஏற இறங்க பார்த்தார் ராஜபாண்டி. பல வருடங்களுக்கு முன் ஊரில் நடந்த தகராறில் ஊரை விட்டு சென்ற ராஜபாண்டி.

‘கிராமம் அந்தளவுக்கா மகனை கவர்ந்து விட்டது’ கேலியாக அவனைப் பார்த்தார்.

எல்லாம் அந்த கிராமத்து கிளி கவர்ந்தது. எண்ணி சிரித்துக் கொண்டார்.

‘இந்த விடுமுறைக்கு வீட்டுக்கு வர முடியாது’ என்றவனிடம் அதட்டி உருட்டி காரணத்தை கேட்டறிந்தவர்.

அன்பை பற்றி கேட்டறிந்தவரால் அங்கு இருக்க முடியாமல், அவனை உடனே சென்னைக்கு அழைத்து அடுத்த நிமிடமே இருவரும் ஊருக்கு கிளம்பி வந்துவிட்டிருந்தனர்.

“சீக்கிரம் போயிட்டு வாடா, நீ வந்த பிறகுத்தேன் ஆலரமரத்தானை பாக்க போகோணும்?”

“சரிப்பா… சாப்பாடு புது கடையில் சொல்லிருக்கேன் சாப்ட்டு கொஞ்சம் நேரம் படுத்திருங்க நான் சீக்கிரம் வாறேன்” அவர் பதிலையும் எதிர் பார்க்காமல் வேகமாக வெளியில் வந்தான்.

கையில் அன்புக்கு பட்டணத்தில் இருந்து வாங்கி வந்த பொருள்.

மெல்லமாய் சிரித்துக் கொண்டார் ராஜபாண்டி.

வந்தவேகத்தில் வயலுக்கு வந்து சேர்ந்திருந்தான்.

இன்றுஆலமரத்தான் வயலில் அறுவடை. அதுக்காகவே காலமே வரக் கூறியிருந்தாள் அன்பு.

#####

லிங்கம் கடை காலமே களைக் கட்டியிருந்தது.

நாலு பக்கமும் தட்டி வைத்து தான் கட்டியிருந்தான் லிங்கம்.

வெளியில் வரிசையாக நான்கு சைக்கிள்.

பள்ளி பிள்ளைகளுக்காக எல்லா பொருட்களும் வைத்திருந்தான். கோவிலில் பூ விற்கும் பாட்டியை கடை வாசலில் அமர வைத்து விட்டான்.

கடை திறக்கப் போகிறேன் எனவும் கையில் பணம் கொடுத்து விட்டிருந்தார் ஆலமரத்தான்.

நல்ல படியாக கடையை திறந்து வைத்தவர், அறுப்பு வேலை நடப்பதால் வயலை நோக்கி சென்றார்.

தமிழை அதிகமாய் தேடின அழகு கண்கள், ஏனோ அவளை அழைத்து வரவில்லை ஆலமரத்தான்.

யோசனையாக கடையில் வேலைகளை செய்தபடி நின்றிருந்தான் அழகு.

முத்தாரை ஐயா வயலில்இனி வேலை செய்ய வேண்டாம் என்று கூறியிருந்தான் லிங்கம்.

அந்த ரோட்டின் ஓரத்தில் தன் கடையை ஒட்டி முத்தார்க்கு இட்லி கடையும் ஆரம்பித்தான். எதற்கும், யாருக்காகவும் வெளியில் செல்ல வேண்டாம் என்று தன்னுடனே வைத்துக் கொள்ள எண்ணினான் லிங்கம்.

அந்த கடையை “பாசம்” என்னும்கூட்டைக் கொண்டு ஆரம்பித்தான் லிங்கம். அவனுக்கு இருபக்க துணையாய் அன்பும், அழகுவும்.

மணி எட்டு ஆகவே அழகும், அன்பும் வயலை நோக்கி கிளம்பினர்.

அன்புவை தேடியபடியே அந்த வரப்புகளில் மெதுவாக நடந்து வந்தான் அமுதன்.

வயல்களில் ஆணும், பெண்ணும் கலந்து கதிர் அறுத்துக் கொண்டிருந்தனர். அவனின் கண்களோ ஆசையாக அவனின் தாவணிப் பெண்ணை தேடியது.

அவள் வயலுக்கு வந்திருக்கிறாளோ இல்லையோ? அது அவனுக்கு தெரியாது. ‘அண்ணன் கடை திறப்பான் லேட்டா வருவேன்’ என்று தான் கூறியிருந்தாள்.

ஆனாலும்‘அவள் நேரமே வந்திருக்க வேண்டும்’ என அவன் மனம் ஆசை பட ‘கண்டிப்பாக வந்திருக்க வேண்டும்’ என நம்பவைத்தது.

அந்த நேரத்தில் கதிர் அறுப்போர் பாடிய பாடல் அவன் காதில் தேனாய் பாய்ந்தது.

‘இவங்க எது பண்ணினாலும் நல்லா தான் இருக்கு’ மனம் எண்ணிக் கொண்டது.

அங்கிருந்த ஒரு ஆண் பாடினான்.

“நெத்தியில குங்கும பொட்டு,

கண்டாங்கி புடவையில கதிர் அறுக்கும் பெண் மயிலே!

குங்குமம் சிந்துதடி! மச்சான் இங்க சொக்குறேண்டி

கதிர் அறுப்பு பிந்துதடி!

இவன் இங்கு பாட, எட்ட நின்று கதிர் அறுத்த மாமன் மகள் எதிர் பதில் கொடுத்தாள்.

“குங்குமத்தை பார்த்த மச்சான்,

கதிரை கொஞ்சம் பாத்து கட்டு

தொலை தூரம் போகும் கட்டு

நழுவாம தூக்கிக் கட்டு!” இவள் பாட,

அங்கிருந்து இவன் பதில் பாடினான்.

“நெற் கட்டு கொண்டு போகும் மயிலே!

மச்சானைக் கொஞ்சம் பாத்துபுட்டா,

நழுவிப் போற கட்ட கொஞ்சம் தூக்கி பிடிப்பேனே!”

மெய் மறந்து நின்று ரசித்தான் அமுதன்.

எத்தனை அழகாக தன் காதலை உணர்த்துக்கிறார்கள். கண்கள் ஆவலாக எங்கும் சுற்ற, தூரத்தில் அன்பு!

பார்த்துவிட்டன அவன் கண்கள்…

“ஏ புள்ள” எங்கோ குரல் கேட்க, டக்கென்று தலையை உயர்த்திய அன்பு அவனை பார்த்து விட்டாள்.

அவளை பார்த்த நொடியில் கண்களில் ஒரு மாயக்காட்சி!

அவர்கள் இருவரும் வயலில் கதிர் அறுக்க, இப்பொழுது கேட்ட பாட்டை அவர்கள் இருவரும் பாட,

அன்பு கண்களில் காதல் வழிகிறது!

அதை கண்டவன் அப்படியே சொக்கி நிற்கிறான்!

“என்ன வாத்தியாரய்யா? நின்னுட்டே தூங்குறீக?” அங்கிருந்தார்கள் கேட்க,

படக்கென கண் திறக்கிறான் அத்தனையும் கனவு!

சிரித்தப்படியே தலையை கோதியவன் தூரமாய் விலகி நின்றான். கண்களோ அன்பையே சுற்றி வந்தன.

அநேகமாக அறுவடை முடிந்து விட்டது.

அழகு, மூட்டைகளை கணக்கிட்டுக் கொண்டிருந்தான்.

வேலை முடியவே தன் அண்ணனுடன் கூறிக் கொண்டு, அன்பு செல்ல, அவளைப் பார்த்தபடி நின்றான் அமுதன்.

“அமுதா, உன் அப்பாரு வந்துட்டானா?”

“ஆமா அங்கிள்”

“வீட்டுக்கு வரவே இல்லையே” யோசனையாக கேட்டார்.

“அப்பா உங்களை பார்க்கணும்னு தான் வந்திருக்காக அங்கிள். உங்க கிட்ட முக்கியமா பேசணுமாம்?”

“நானும் அவன்கிட்ட பேசோணும்? அவனைத் தேடிட்டு இருக்கேன்னு சொல்லு” மீசையை நீவிக் கொண்டார்.

“சரிங்க அங்கிள். நான்அப்படியே தோட்டத்தை ஒருமுறை சுத்திட்டு வாறேன்”

“தினமுந்தேன் சுத்துறீக? இன்னும் ஆசை முடியலியோ?”

“அங்கிள்”

“இல்ல அமுதா, தினமுந்தேன் வயலை சுத்துற அப்படியா வயல் பிடிச்சிருக்கு?”

“ஆமா அங்கிள்… ரொம்ப அழகா இருக்கு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அழகுல இருக்கு” கண்களில் மயக்கத்துடன் அன்புவை எண்ணியபடியே கூறினான்.

“நால்லாதேன் ரசிக்குறீக”

“ஆமா, அங்கிள்”

“சரிய்யா… சரிய்யா… சீக்கிரம் போங்க வயல் அங்கிட்டு காத்திருக்கும்”அவனையே பார்த்தபடி கூறினார் ஆலமரத்தான்.

அவர் கூறியதை கவனிக்காமல் வேகமாக அங்கிருந்து நகர்ந்திருந்தான் அமுதன்.

எப்பொழுதும் போல் இன்று வாழை தோப்பில் அவனுக்காக காத்திருந்தாள் அன்பு.

அவளை நோக்கி வேகமாக வந்தவன் அவளைப் பார்த்து மெலிதாக சிரித்துக் கொண்டான்.

“எப்போ பட்டணத்தில இருந்து வந்தீக?”

“நேத்து தான் வந்தேன். ஆனா எத்தனையோ காலம் ஆகின போல இருக்கு”

“ஏனாம்”

“உன்னை பாக்காமல் தான். இங்க கையை பாரேன். உன்னை இரண்டு நாள் பார்க்காமல் துரும்பாக இழைத்துவிட்டேன்?”

“அதேன் உங்களுக்காக சாப்பாடு கொண்டு வந்திருக்கேன்”

“கொடு… கொடு உன் கையால் சாப்பிட நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்”

நேற்று வைத்திருந்த மீன் குழம்புடன் கஞ்சி கொண்டு வந்திருந்தாள். பிசைந்து அவனுக்கு கொடுக்க ஆசையாக வாங்கி உண்டான். சில நேரம் ஐயா வீட்டு சாப்பாட்டுக்கு பதிலாக இவள் வீட்டு சாப்பாடு யாருக்கும் தெரியாமல் கொடுப்பாள் அன்பு.

“உன் கை பல மாயம் செய்யுது அன்பு”

வெட்க புன்னகை புரிந்தாள்அன்பு.

“உனக்கு இன்னொன்னு தெரியுமா?”

“என்ன?” கைகளை கழுவியபடியே கேட்டாள்.

“உனக்காக பட்டணத்தில் இருந்து நான் வளையல் வாங்கிட்டு வந்தேன்”

“எனக்கா!” திகைப்புடன் கூடிய தித்திப்பு அவளிடம்!

“உனக்கு தான் வேற யாருக்கு உன் அண்ணனுக்காக வாங்கிட்டு வரமுடியும்?”

“சும்ம்மா” கண்களை சிமிட்டினாள் அன்பு.

“அப்பா ஒரே கிண்டல் தெரியுமா?”

“அச்சோ… உங்கப்பாவா?” தவிப்பாக கேட்டாள்.

“அதென்ன உங்கப்பாவா? உன் மாமா… மாமா சொல்லணும்”

“மாமா என்ன சொன்னாக?” வெட்க சந்தோசம் அவளிடம்.

“அப்பாகிட்ட எல்லாம் சொல்லிட்டேன். உன்னை பார்க்க இங்க வந்திருக்காங்க?” சந்தோசம் அவனிடம்.

சந்தோசமாக இருந்தது. அதே சமயம் பயமாகவும் இருந்தது.

“போகலாமா?”

“அதற்குள்ளவா” அவன் கிளம்ப தயாராக இல்லை.

“நேரம் ஆகிட்டில்ல… வயலுக்கு போகோணும்?”

“எத்தனை நாளுக்கு பிறகு உன்னை பார்கிறேன்?”

“ஒரு நாள் தானே? அதேன் பார்த்தாச்சே?”

“ஒரு பத்து நிமிடம் பார்த்தால், ஆசை போகுமா?”

“ஆசையா?” காதல்தவிப்பு அவளிடம்!

“ஆசை என்றால் உன்னை பார்க்க வேண்டும் என்ற ஆசை!” காதல் குழைவு அவனிடம்.

“வாருங்க கிளம்பலாம்?” அவள் எழ, அவள் கைகளை பிடித்துக் கொண்டான்.

அவனைப் பார்க்க,

சட்டை பையில் இருந்து தான் வாங்கி வந்த வளையலை எடுத்து அவளுக்கு அணிவித்தான்.

“கோவில் திருவிழாக்கு எதுவும் நான் வாங்கி தரலல்ல… அது தான்” என்றபடி கையில் ஒரு தங்க இலை கம்மலை எடுத்து அவள் முன் நீட்டினான்.

அவள் வாங்காமல் தலையை குனிந்துக் கொண்டாள்.

அவன், அவள் நாடியை பிடித்து அவளை நிமிர்த்தினான்.

“அன்பு”

“ம்ம்”

“வாங்கிக்கோ அன்பு. இது என்னோட அன்புக்கு நான் ஆசையாக வாங்கிய அன்பு பரிசு”

“எனக்கு உங்க அன்பு மட்டும் போதும் வாத்தியாரய்யா?”

புதிதான அழைப்பு ‘வாத்தியாரய்யா’ அழகு அவளைப் போலவே!

“இந்த வாத்தியாரய்யா அன்பா குடுப்பதை வாங்க மாட்டியா? இந்த வாத்தியார் உனக்கு வேண்டாமா?”

அவன் கைகளுக்குள் முகம் புதைத்தாள். அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

“உனக்கு இதை போட்டு விட தான் ஆசை அன்பு. ஆனா உன் அண்ணனுக்கு தெரிஞ்சா உனக்கு தான் கஷ்டம் அது தான்” மெதுவாக கூறினான்.

‘அண்ணன்’ இந்த வார்த்தை அவளை பலமாக தாக்கியது.

‘அண்ணன்! ஒ அண்ணன்’ இவனை எப்படி மறந்தேன்.

அவனை தள்ளி விட்டு எழுந்தவள் வேகமாக ஓடினாள். ஓடி யாரோ மேல் மோதி நிற்க,

தடுமாறி பார்க்க. அவளின் எதிரே செல்வி!

கண்களில் உக்ரத்துடன் அவளை முறைத்து நின்றாள்.

பயந்து… தடுமாறி நின்றவள் கையை வளையல் உடைய இழுத்து சென்றாள்.

“அன்பு” ஏக்கமாக செல்லும் அவளையே பார்த்திருந்தான் அமுதன்.

அவன் வாங்கி கொடுத்த வளையல் அவள் மனதைப் போலவே அங்கு சிதறிக் கிடந்தது!

##############

“அப்பா நான் கோவிலுக்கு போகோணும்?”

“என்ன அடிக்கடி கோவிலுக்கு போறவ?” தமிழை கூர்மையாக பார்த்தபடி கேட்டார் ஆலமரத்தான்.

“ஏன்பா கோவிலுக்கு போவாண்டமா?”

“இந்தா தமிழ்… இதை அப்படியே சிலுக்கு கையில குடு” ஒரு டிபன் பாக்ஸை தமிழ் கையில் கொடுத்தார் அமுதா.

சிலுக்கு பெயர் கேட்டதும். அப்படியே அமைதியாகிப் போனார் ஆலமரத்தான்.

“அழகை அழைச்சிட்டு போ… சீக்கிரமா வந்திரோணும்” கூறியபடியே அறைக்குள் சென்று மறைந்தார். 

கோவிலில் கூட்டம் என்பது இல்லை. இரண்டு மூன்று பேர் தான் இருந்தனர்.

அவர்களும் சாமியை வணங்கி செல்ல, தமிழ் கல் அடுக்கி வேண்டிக் கொண்டிருந்தாள்.

தமிழையே பார்த்தபடி, அவள் கொடுத்ததை உண்டுக் கொண்டிருந்தாள் சிலுக்கு.

அங்கிருந்த பாறையில் அழகு அமர்ந்திருந்தான். சாமிக் கும்பிட்டு அவன்‌ அருகில் அமர்ந்துக் கொண்டாள்.

“என்ன வேண்டிகிட்ட தமிழ்”

“அப்பனே பிள்ளையாரப்பா… நீதேன் உனக்கு ஆரும் வேண்டாம்னு இப்படி இருக்க. ஆனா நான் ஆசை பட்ட அழகை எனக்கு தான்னு வேண்டிகிட்டேன்” சிரித்தபடியே கூறினாள்.

“இப்படி எல்லாமா வேண்டுவ?” சிரித்தபடியே கேட்டான் அழகு.

“நீ சிரிக்க எல்லாம் செய்வியா அழகு”

“ஏன் நான் சிரிக்க கூடாதா? என்ன?”

“என்கிட்ட நீ சிரிச்சி இன்னைக்குத்தேன் பாக்குறேன்?”

இப்பொழுது சிரிக்கும் அவளையே பார்த்திருந்தான் அழகு.

“என்ன அழகு அப்படி பாக்குற?”

“ஒன்னு சொல்லணும்?”

சொல்லு அழகு?”

சொன்னால் கேலி பண்ணக் கூடாது?”

அப்படி என்னத்தேன் சொல்ல போறீக?”

உன்னை?”

என்னை…”

ஒரே ஒருக்கா தொட்டுப் பாக்கவா?”

அவளுக்குப் புரியவில்லை. என்ன சொல்கிறான் இவன். குழப்பமாகப் பார்த்தாள்.

ஆனால், “தொட்டுப் பார்க்கஎன்றால் என்ன என்று அவளுக்கு புரியவில்லை.

அதற்குள் அவனேதொட்டுப் பார்க்கவா?” என்று கையை நீட்டியிருந்தான்.

பெண்மை வேடிக்கையானது. அது இனிக்கவும் செய்யும், அதே நேரம் இனிமை காணவும் செய்யும். அது பெற்றுக் கொள்பவர்களுக்கு மட்டுமல்ல,  கொடுப்பவனுக்கும் இன்பம் தரக்கூடியது.

இது தான் காதலா?’ அவளை ஆசையாகப் பார்த்தான் அழகு.

எதுக்கு இப்படி பாக்குறீக?”

ஏன்? நான் பார்க்க கூடாதா?

என்ன சொல்லதலையை குனிந்துக் கொண்டாள் தமிழ். அவன் கைகளோ அவள் கன்னத்தை ஒரு முறை வருடி சிலிர்த்துக் கொண்டன அவன் விரல்கள்!

அவர்கள் பழக ஆரம்பித்து எத்தனையோ நாட்கள் கடந்து விட்டன. ஆனால் இவ்வளவு நெருக்கம் இருந்ததில்லை.

இன்று நெருக்கம் மட்டும் தானா! நெகிழ்ச்சிக் கூடத்தான்! எப்படி பேசுகிறான்! எப்பொழுதும் இனிமையானவன். இன்று மிகவும் இனிமையாக தெரிந்தான்.

காதல் சுகமானது. அதே சமயம் சம்மந்தபட்டவர்களின் அதீத காதலால் மட்டுமே அக்காதல் சுகமானதாய் இருக்கும். இக்காதல் மிகவும் சுகமானதாய் இருந்தது!

இருவரின் அளவுக்கதிகமான காதல், அவர்களுக்கு சுகத்தை அளித்தது! காதல் சுகத்தை இருவரும் ஆழ்ந்து அனுபவித்து கொண்டிருந்தனர்.

இருவரையும் பார்த்தபடி பின்னால் வந்து நின்றாள் சிலுக்கு.

இத்தனை வருடம் தேக்கி வைத்திருந்த பழி வெறி அவள் கண்களில் தாண்டவமாடியது.

அவள் காத்திருந்த நாள் இன்று அவள் கண் முன்னே!

ஆலமரத்தானே பழி வாங்க காத்திருந்த நாள்.

காதலை அவருக்கு புரிய வைக்க காத்திருந்த வருடத்தின் கடைசி நாள்.

அவளின் பைத்தியக்கார வேஷத்தை கலைக்கும் கடைசி நாள்.

தன் காதலுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் நாள்!