Ani Shiva’s Agalya 11

Ani Shiva’s Agalya 11

11

அகல்யா சூர்யாவின் பயண நாள் நெருங்கியது, தன் மச்சானின் திருமணம் முடிந்ததும் தாங்கள் இருவரும் கிளம்புகிற படி ஏற்பாடு செய்திருந்தான் சூர்யா. அவனின் பிராஜக்ட் பணியுடன், அகல்யாவுக்கும் ஜப்பானை சுற்றி காட்டலாம் என்றும் இரண்டு வேலைகளை ஒன்றாகச் செயல்படுத்த எண்ணினான்.

திருநெல்வேலியிலிருந்து திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து சிங்கப்பூர் வழியாக ஜப்பான் செல்வது தான் திட்டம்.

எல்லாமே அவன் எண்ணப்படி நடந்தது!

வீட்டை விட்டு இறங்கியதிலிருந்து ஒரே உற்சாகம் தான் அகல்யாவுக்கு.

டோக்கியோவின் நரிட்டா விமான நிலையத்தில் அவர்கள் வந்திறங்கிய சமயம் ஜப்பானில் மாலை ஆறு மணி… அப்படியொரு குளிரை இதுவரை தன் வாழ்நாளில் அனுபவித்ததில்லை அகல்யா… நடுநடுங்கிக் கொண்டிருந்தாள்…

மொத்தமான ஒரு ஜாக்கெட், கை கிளவுஸ் எல்லாம் அணிந்திருந்தும் அதைத் தாண்டிக் குளிர தான் செய்தது.

ஜப்பான் எவ்வளவு அழகான ஊர்.

எல்லாமே புதிதாய்த் தெரிந்தது அகல்யாவுக்கு… பேருந்து சாலை கார் என அனைத்துமே அவள் கண்ணைப் பறித்தன.

“என்னம்மா பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பார்த்த மாதிரி பார்க்கற?”என்று சூர்யாவே நக்கல் அடிக்கும் அளவிற்கு இருந்தது அவள் செய்கையெல்லாம்!

“எவ்ளோ அழகாயிருக்கு இந்த ஊர்? ஏன் இதை விட்டு வந்தீர்கள்?” என்று சிணுங்கியவளை பார்த்துக் குறும்பாகப் புன்னகைத்து,

“எல்லாம் உன்னைக் கல்யாணம் பண்ணத் தான்…” என்று சிரித்தபடி பதிலளித்தான்…

ஏர்போர்டிலிருந்து ‘ஏர்போர்ட் லிமோஸைன்’ என்ற சொகுசு பஸ்ஸில் ஏறித் தங்கள் இருப்பிடத்தை அடைந்தனர்…

அவர்கள் தங்கப்போவதாக அவன் காட்டிய இடம் ஒரு ‘சர்வீஸ் அபார்ட்மெண்ட்’

அபார்ட்மெண்ட் வாசலிலிருந்து உள்ளே பார்த்தவள், இது தான் ஹால் போல என்று அந்த நீளமான அறையைப் பார்த்துக்கொண்டிருந்தாள்…

சூர்யா வந்து சொல்லவும் தான் மொத்தமே இவ்வளவுதான் என்ற உண்மை புரிந்தது…

“என்ன இவ்ளோ சின்ன அபார்ட்மெண்ட்டா?” என அவள் ஆச்சிரியப்பட,

“ஆமா இந்த ஊரில் எல்லாமே இப்படித் தான்…” என்றான்.

அந்தப் பெரிய ஹாலில், ஒரு ஓரமாகக் கிட்சன் போல் செட் செய்திருந்தனர், அதன் எதிர்பக்கம் டீவி, சோபா இருந்தது.

ஒரு கண்ணாடி கதவுபோல் இருந்ததைத் திறந்தால், அது குளியலறை! கட்டுசெட்டாக, படு சுத்தமாக இருந்தது.

அந்தத் தொலைக்காட்சி பக்கம் ஒரு பெரிய மர கதவுபோல் இருந்ததைத் திறந்தால், அது ‘பன்க் பெட்’.

மெத்தைகள் விரிக்கப்பட்டுப் படு சுத்தமாக இருந்தது!

இந்தக் குட்டி வீட்டுக்கு, அதைவிடக் குட்டியாக ஒரு பால்கனி… தான் ஒரு மாதம் தங்க போகும் இந்த வசந்த மாளிகை அவளை மிகவும் கவர்ந்தது.

சூர்யா அவளுக்குப் பால் வாங்கி வந்து காபி, பிரெட் எல்லாம் சாப்பிட தந்தான்…

அவளுக்கு இருந்த பசியில் அவை அறுசுவை உணவு போலிருந்தது…

“எனக்கு இதைத் தவிர எதுவும் செய்யத் தெரியாது அகல்யா, ஒரு மாசம் தானே, கொஞ்சம் சமாளிச்சிக்கோ, என்ன?” என்று கூறியவனிடம் சரியெனத் தலையாட்டி வைத்தாள்.

அடுத்த நாள் அவன் தன் பணி விஷயமாய் வெளியே செல்ல, தூங்கியபடியே இருந்தாள் அகல்யா… இந்தியாவை விட மூன்றரை மணிநேரம் முந்தையது ஜப்பான் நேரம். அதுவும் இப்போது உள்ள குளிரில் அவளுக்கு இப்படித் தூங்குவது வெகுசுகம்!

அடுத்து இரண்டு நாளில் ஹிரோஷிமா அழைத்துச் சென்றான்…

குண்டுவெடிப்பில் பாதி உடைந்த கட்டிடத்தை, நினைவுச்சின்னமாய் வைத்து அதைச் சுற்றி ஒரு அருங்காட்சியத்தை வடிவமைத்திருந்தனர்… அருங்காட்சியத்திலிருந்த புகைப்படங்களையும் காணொளிகளையும் பார்த்து அகல்யாவின் மனசு கனத்துத்தான் போனது… கஷ்டத்தை யாரால், எவரால் தாங்கிக் கொண்டு, அதிலிருந்த மீள முடியுமோ அவர்களை மட்டுமே அது தேடி வரும் போல!

ஹிரோஷிமாவை பார்த்ததும் அகல்யாவுக்கும் இது தான் தோன்றியது…

அந்தச் சம்பவத்தைப் பற்றி அவள் அங்குப் படித்து அறிந்தவை,

ஆகஸ்ட் 6, 1945

ஹிரோஷிமாவில் கோடைக் காலம்.

மேகக் கூட்டங்கள் குறைவான இந்த மாதம் தான் அணுகுண்டின் தாக்கத்தைப் பல மடங்கு அதிகரிக்க உதவும் என்ற முடிவெடுத்த அமெரிக்கர்கள்… அன்று தான் லிட்டில் பாய் அணுகுண்டை, எனோலா கே விமானத்திலிருந்து வீசினர். முப்பத்து ஓராயிரம் அடி உயரத்திலிருந்து, கீழே ஏதும் அறியாத பச்சிளம் குழந்தைகள், முதியோர், பள்ளிச் சிறார்கள் எனப் பல தரப்பட்ட மக்களும் வசிக்கும் ஹிரோஷிமாவில் வீசினர்.

குண்டு விழுந்ததும் இதுவரை கேட்டிராத ஒரு மாபெரும் ஒலி. அந்தக் குண்டு வெடித்த மையப் பகுதியிலிருந்து சுமார் ஐந்து கி. மீ. சுற்றளவில் இருந்த மனிதர்கள், விலங்குகள் அனைத்தும் பஸ்பமாகிவிட, கட்டிடங்கள் சிதறி விட ஒன்றுமே மிச்சமில்லை.

படிக்கவே பதறுகிறதே, அனுபவித்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்?

ஹிரோஷிமாவில் எல்லா வருடமும் ஹிரோஷிமா பீஸ் மெமோரியல் என்ற அந்த இடத்தில் அஞ்சலி நிகழ்ச்சி நடக்கும். உலகிலேயே அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான ஒரே நாடு ஜப்பான் தான்.

மேலும் ஹிரோஷிமாவில் சில இடங்கள் சுற்றி பார்த்துவிட்டு, அடுத்த நாள் டோக்கியோ திரும்பியாயிற்று.

சூர்யாவின் வேலைகளுக்கு நடுநடுவே தான் இந்தப் பயணங்கள் எல்லாம், ஆதலால் அந்த இடைவெளிகளின்போது அகல்யா அவர்கள் தங்கியிருந்த நகானோவை வலம் வருவாள்… ‘டோக்கியோ மெட்ரோ’என்னும் ரயில்களில் பயணித்தால் எல்லா இடங்களையும் சுற்றி பார்க்கச் சுலபமாகச் செல்லலாம் தான், போய்ப் பாரேன் என்றான் சூர்யா… ஆனால் ஏனோ தனியே செல்ல ஒரு யோசனை. பாஷை தெரியாத ஊரில் எதற்கு வம்பு என்று விட்டுவிட்டாள்…

அகல்யா ஜப்பான் சென்றதும் மஹா தான் மகளை ரொம்பத் தேடினாள்…

அது ஆறாயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள அகல்யாவுக்கும் தோன்றியதோ என்னவோ, அடிக்கடி போன் செய்தாள்… அன்னையிடமும், பூவிழியிடமும் ஊர் நியாயம் எல்லாம் பேசினால் தான் அவளுக்கும் நிம்மதி…

பூவிழியின் கதை அப்படியே தான் இருந்துகொண்டிருக்கிறது.

அகிலன் ஏதேதோ முயற்சி (முயற்சி என்றால் இந்தச் சினிமாவுக்கு அழைத்துப் போவது, கோவில், அவள் அம்மா வீடு என்று சுற்றுவது, அவ்வளவே) செய்து ஓய்ந்து போனது தான் மிச்சம்…

வற்புறுத்தி ஒரு காரியத்தைச் சாதிக்க அவன் மனம் இடம் தரவில்லை.

ஆசையாக நெருங்கினாலே அவள் மிரண்டு போவதை பார்க்க, அவனுக்கு இஷ்டமுமில்லை… திருமண நாளின் இரவில் மயங்கிச் சரிந்தவள், அதன் பின்னரும் ஒரு நாள் அதே போல் அவன் நெருங்க, இவளும் அதே போலவே இம்மி பிசகாமல் கீழே விழுந்தாள்…

அகிலனுக்கு தான் திருமண விஷயத்தில் ஏதும் தப்பு செய்து விட்டோமோ என்று சிறு கலக்கம் கூடத் தோன்றியது எனலாம்… யாரிடமும் இதை விளக்க முடியாமல் தவித்தபடியிருந்தான்.

புது மனைவியைப் பக்கத்திலேயே வைத்துக் கொண்டு பார்த்துக்கொண்டு மட்டும் இருக்க வேண்டிய கொடுமை அவனுக்கு…

இதை எல்லாம் சிந்தித்தபடி இருந்தவனின், போன் அடித்தது…

அகல்யா தான்!

“ஹேய் அகல்விளக்கு, நல்லாயிருக்கியா? நீ இல்லாமல் இங்க ரொம்பப் போர்… சூர்யா நல்லாயிருக்காரா? உன்னை நல்லா பார்த்துக்குறாரா? என்ன டீ எனக்கெல்லாம் போன் பண்றே? அதிசயமா!”

எவர் சொன்னது ஆண் பிள்ளைகள் பாசத்தை வெளிக்காட்டமாட்டார்கள் என்று?

“நல்லா இருக்கேன் அண்ணா, பூவிழி கிட்டத் தான் அடிக்கடி பேசுறேனே, அவ உனக்குச் சொல்லியிருப்பான்னு விட்டுவிட்டேன்…”என்றவள் சிரித்துக்கொண்டே, “அப்புறம் கல்யாண வாழ்க்கை எல்லாம் எப்படிப் போகுது ப்ரோ?” என்று ஆரம்பித்தாள்… அவள் அப்படி ஆரம்பித்தது தான்…

அகிலன் தன் பிரச்சனையைக் கொட்டுவதற்கு இடம் தேடிக்கொண்டிருந்தவன், தங்கை அப்படிக் கேட்டதும், நாசுக்காக என்று இல்லாமல் அப்பட்டமாகச் சொல்லியே விட்டான்… பெண்பிள்ளை என்ற சிந்தனை எல்லாம் இல்லை அந்த நொடியில்…

அவன் இருந்த நிலையில் அவன் அண்ணன், அகல்யா தங்கை என்பதை எல்லாம் மறந்தவன், யாரிடமும் சொல்ல முடியாததை எல்லாம் அகல்யாவிடம் சொன்னான்…

பொறுமையாகக் கேட்டவளுக்கு என்ன பதில் சொல்ல என்று தான் தெரியவில்லை…

“அண்ணா எனக்கு டைம் குடு, இந்த விஷயத்தில் என்ன செய்யலாமென்று தெளிவா சொல்றேன், ஆனால் நீ பூவிழிய கல்யாணம் பண்ணது தப்புனு மட்டும் யோசிக்காதே, அவ உனக்கானவ… கொஞ்சம்… இல்ல ரொம்பவே பயந்தவத் தான், அந்தப் பயம் தான் எல்லாப் பிரச்சனைக்கும் காரணமா அமைஞ்சி போச்சு…”

மேலும் சில நேரம் பேசிவிட்டு வைத்துவிட்டாள்…

அகிலனுக்கு அவளிடம் பேசியது ஒரு மாறுதலாகவே இருந்தது…

தனக்கு அவள்மூலம் ஏதும் விடிவு அமையும் என்ற எண்ணிவிட்டு அவன் தோட்ட பணிகளைத் தொடர்ந்தான்…

மாலை வீட்டுக்குக் கிளம்பலாம் என்று காரில் ஏறியவனின் போனில் வாட்ஸ் அப் மெசேஜ், அகல்யா தான்…

“அண்ணா பூ வாங்கிட்டு போ, கையில் கொடுக்காதே, நீயே வச்சி விடு அவளுக்கு, நல்லா ஞாபகம் வச்சிக்கோ, அவ ஆமை, வெரி ஸ்லோ…” என்று முடித்திருந்தாள்…

அகிலன் சிரித்துக் கொண்டான்…

அகல்யா கூறியது போலவே வாங்கிக் கொண்டு போனவன், மிகவும் குஷியாக இருந்தான்…

மனுஷன் சந்தோஷமா இருந்தா இயற்கைக்குப் பிடிக்காதே, அவன் போனபோது பூவிழி வீட்டில் இல்லை!

மஹாவிடம் கேட்டதற்கு, அவளது சித்தி பெண்ணுடன் டவுன் வரை சென்றிருக்கிறாள் என்றாள்…

நமக்கென்று இந்தச் சித்தி பெண்ணெல்லாம் எங்க இருந்து தான் வருதோ என்று அகிலனுக்கு பொறுமையே இல்லை…

மஹாவிடம் இதற்கு மேல் கேள்வி கேட்கவும் முடியாது என்று டிவி பார்க்க ஆரம்பித்துவிட்டான்…

பூவிழி அன்று மிகவும் தாமதமாக வந்தாள் வீட்டுக்கு… அகிலன் வந்திருப்பானே என்று பதட்டமாகத் தான் இருந்தது…

அவனிடம் சொல்லிவிட்டுப் போகலாம் என்று யோசிக்கும் போதே மஹா தான், “அகிலன் கிட்ட நான் சொல்லிக்கிறேன், நீ பத்திரமா போயிட்டு வா மா” என்று அனுப்பிவைத்தாள்…

என்ன சொல்லுவானோ என்று பயந்தபடி அவர்கள் அறைக்குச் சென்றவளை முறைத்தான் அவள் கணவன்…

சும்மாவே பயப்படுவாள், இந்த அகிலனுக்கு இது தேவையா?

“என்ன இவ்ளோ நேரம்?” சாதாரணக் குரலில் கேட்கவில்லை அவன்…

“சாரி லேட் ஆயிடிச்சு…” மென்று விழுங்கினாள் பூவிழி…

“இனிமே லேட்டா வராதே என்ன?” இதற்கு நீ அவகிட்ட கேட்காமலே இருந்திருக்கலாம் டா என்று சிரிப்பாய்ச் சிரித்தது அவன் மனசாட்சி…

“ம்ம்… சரி…” என்று தலையாட்டியவளை, நெருங்கியவன், அவள் பின்பக்கம் சென்று தான் வைத்திருந்த பூவை அவள் தலையில் சூட்டினான்…

பூவிழி எதுவும் செய்யாமல், அவனுக்குத் தலையைக் காட்டியபடி சிலைபோல் இருந்தாள்…

அதையே ஏதோ சம்மதம் போல் எடுத்தவன், சட்டென்று அவள் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டான்… சூடு பட்டவள் போல் பதறிய பூவிழி, “அத்தை கூப்பிட்டாங்க…” என்று கீழே ஓடிவிட்டாள்.

அகிலனுக்கு அப்பாடா சக்ஸஸ் என்றிருந்தது… டேய் இது அகல்யா சொன்ன சிலபஸ்லயே இல்லையே டா என்று உள்ளுக்குள் கேட்ட குரலை அவன் கண்டுகொள்ளவில்லை.

அடுத்த நாள் அவனுக்குப் போன் செய்த அகல்யா,

“அண்ணா பூ மாட்டர் என்ன ஆச்சு?”

“சக்ஸஸ்” என்றான்

“நான் சொன்னதைத் தவிர எக்ஸ்ட்ரா ஏதும் பண்ணியா? உண்மையைச் சொல்லிடு!” என்று மிரட்டினாள்!

‘அடிப்பாவி! ஐயோ ரூம்ல காமெரா வைத்திருப்பாளோ…’ என்று சந்தேகப் பட்டவன்… அவளிடம்,

“இப்படி எல்லாம் அண்ணன் கிட்ட பேசுவியா நீ, உன்கிட்ட ஐடியா கேட்டேன்ல என்னைச் சொல்லணும்… வை போனை…”என்று கோபப்பட்டதைப் போல் அப்போதைக்குத் தப்பித்தவிட்டான்…

அகல்யா அதன் பிறகு அவனுக்கு எந்த ஒரு மெசேஜையும் அனுப்பவில்லை…

அகிலனுக்கோ, தேவை இல்லாமல் பேசிவிட்டேனோ என்றிருந்தது… ஆனாலும் அவனே அகல்யாவுக்கு,

“இன்றைக்கு என்ன பாஸ் செய்ய வேண்டும்?”என்று மெசேஜ் அனுப்பிவைத்தான்…

பதிலே இல்லை… ஒரு மணி நேரம் கழித்து அவளிடமிருந்து வந்த பதிலில் நொந்தான்…

“ஹூ ஆர் யூ?”

போச்சு!

“அகல்விளக்கு கோபப்படாதே செல்லம், அண்ணன் ஏதோ உளறிட்டேன், நெக்ஸ்ட் டிப்ஸ ப்ளீஸ்”என்று சரண்டர் ஆக,

அவளோ, “பீ கேர்ஃபுல் வித் மீ!, ஃபாலோ தி சேம் டிப் பார் ஒன் மோர் வீக்…” என்று முடித்தாள் அகல்யா.

தன் நிலை இவ்வளவு குறைவாகி, டம்மியாகப் போனதே என்று எண்ணும் எண்ணமெல்லாம் அகிலனுக்கு இல்லை.

தனக்குக் கிடைத்த ஐடியாவை பின்பற்ற ஆரம்பித்துவிட்டான்!

ஜப்பானில், இந்தக் கூத்தை எல்லாம் சூர்யாவிடம் சொல்லிச் சொல்லிச் சிரித்தாள் அகல்யா…

“உனக்கு இப்படியொரு பிரண்டா!”எனக் கேட்ட சூர்யாவிடம், “என்ன பாராட்டுறீங்களா? இல்லை?”என்று அகல்யா இழுக்க…

“வஞ்சப்புகழ்ச்சி அணி…” என்று கூறித் தப்பித்துக்கொண்டான்!

“நீங்க நடிகர் மாதவன் மாதிரி அழகா இருக்கீங்க! இது என்ன அணி?”என்று அவள் கேட்க…

“மேடமுக்கு மாதவனைத் தான் பிடிக்குமோ? வச்சிக்குறேன் உன்னை! நீயே சொல்லு என்ன அணி?” என்று சிரிக்க,

“இந்த வாக்கியத்தை உங்க கிட்ட சொன்னா அது புகழ்ச்சி அணி… இதையே நடிகர் மாதவன் கிட்ட சொன்னா அது இகழ்ச்சி அணி!” என்று கூறி விட்டு அந்த இடத்தை விட்டு ஓடப் பார்த்தவளை வளைத்துக்கொண்டான்.

“பேச விட்டா ஓவரா பேசுறியா” என்று அவள் வாயை அடைத்தான், கைகளால் இல்லை!

அடுத்த நாள் அவர்கள் சென்றது, டோக்கியோ டிஸ்னி லாண்ட்!

எல்லா ரைடிலும் அவளை அழைத்துக் கொண்டு போனவன், ஒரு பேய் ரைடுக்கு மட்டும் வரமாட்டேன் என்று அடம்பிடித்தான்…

விடுவாளா அகல்யா!

அதில் தான் கட்டாயம் போக வேண்டும் என்று இழுத்துச் சென்றாள் அவனை…

“பெரிய மீசை எல்லாம் வச்சிருக்கீங்க? இப்படியா பச்ச புள்ள மாதிரி பயப்படுவிங்க” என்று சீண்டியபடி இருந்தாள்.

அந்த ‘ரைட்’ உண்மையாகவே பயமாகத் தான் இருந்தது…

தைரியசாலி மாதிரி வந்தாயிற்று என்ன செய்ய என்று அகல்யா அமைதி காக்க, சூர்யா சரியாக அதைக் கண்டுகொண்டான்…

“பூலான் தேவி, என் கையை நீங்கப் பயத்தில் ரொம்ப அழுத்திட்டீங்க, கொஞ்சம் விட்டா நல்லாயிருக்கும்…”

அகல்யாவா… குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்லும் ரகம் ஆயிற்றே?

“ஓ ஐயம் சாரி” என்று அவனது கையை விட்டவள் கந்த சஷ்டியை கூறிக் கொண்டாள்.

ஜப்பானிய பெண்கள் மிக அழகு தான். சாப்பிடுகிறார்களோ இல்லையோ என்பது போல் இருந்தார்கள்.

பொய்யோ என்னும் இடையாள் என்பது அவர்களுக்கு நன்றாகவே பொருந்தும். சில பெண்களைச் சூர்யா பார்த்த பார்வை அவளுக்குப் பற்றிக்கொண்டு வந்தது.

“என்ன பாஸ்? உங்க குல வேலையை ஆரம்பிச்சிடீங்க போல? வேற ஏதாவது பொண்ண பார்த்ததை நான் பார்த்தேன் கொன்னுடுவேன்!” என்று மிரட்ட, சூர்யா இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

ஷாக் அடித்த மாதிரி இருந்தான்!

எப்பா, மிரட்டுகிறாளே… அருவா மட்டும் தான் கையில் மிஸ்ஸிங்… என்று நினைத்தவன்… ஏன் வம்பு என்று சும்மா இருந்துவிட்டான்…

டிஸ்னி லாண்டில் கடைசி வரை இருந்து வானவேடிக்கை எல்லாம் பார்த்துவிட்டே தான் வீடு போய்ச் சேர்ந்தனர்.

அகிலனுக்கு சொல்ல வேண்டிய அடுத்த வேலையை யோசித்து விட்டாள்…

2 thoughts on “Ani Shiva’s Agalya 11

Leave a Reply

error: Content is protected !!